என் மலர்
டெல்லி
- டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 1960-களில் கட்டப்பட்டது.
- உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் 220 கோடிக்கு அதிகமான டோஸ் வழங்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
டெல்லி மற்றும் தலைநகர் பிராந்தியத்தில் பணியாற்றி வரும் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநில டாக்டர்களின் அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இரு மாநிலங்களின் புதிய எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி தொடர்பாக பேசினார். அப்போது, இந்த மருத்துவக்கல்லூரிகளின் தரத்தை குறைக்கமாட்டோம் என உறுதிபட தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி 1960-களில் கட்டப்பட்டது. ஆனால் 1980-களில்தான் அரு ஒரு பிராண்டாக உருவெடுத்தது. அந்தவகையில் எந்தொரு நிறுவனமும் முழு அளவில் வளர்ச்சியடையவும், இயங்கவும் 20 ஆண்டுகள் எடுக்கும்.
அதேநேரம் எய்ம்ஸ் தரத்தை குறைக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். அந்த பிராண்ட் பெயரை பாதுகாப்போம். மேலும் ஆசிரியர் தேர்வில் எந்தவித சமரசமும் செய்யமாட்டோம்.
பீகாரின் தர்பங்காவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரிக்கான பூமி பூஜை விரைவில் நடைபெறும். ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி ஊழியர் தேர்வுடன் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் நடந்து வருகிறது.
மருத்துவக்கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான கொள்கை மாற்றங்கள் நடந்துள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை மையங்கள் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திராக மாற்றப்பட்டு உள்ளன. தற்போது 1.73 லட்சம் மந்திர்கள் உள்ளன. டிஜிட்டல் முறையில் அவற்றின் தர மதிப்பீடு நடைபெறுகிறது.
பிரதம மந்திரி தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் இலவசமாக டயாலிசிஸ் செய்யப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் 220 கோடிக்கு அதிகமான டோஸ் வழங்கப்பட்டு உள்ளது.
387 ஆக இருந்த நாட்டின் மருத்துவக்கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 786 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 156 மாவட்ட மருத்துவமனைகள் மருத்துவக்கல்லூரிகளாக மாற்றப்பட்டு உள்ளன.
இதைப்போல எம்.பி.பி.எஸ் மற்றும் முதுகலை மருத்துவப்படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கையை 75 ஆயிரத்துக்கு மேல் உயர்த்தவும் திட்டம் உள்ளது.
இவ்வாறு ஜே.பி.நட்டா கூறினார்.
- சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு.
- 6 பேர் உயிரிழந்த நிலையில், ஒரு டாக்டரும் கொல்லப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தில் நேற்றிரவு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் ஒரு மருத்துவர் மற்றும் ஆறு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
அப்பாவி பொதுமக்களை கொலை செய்வது, பொதுமக்கள் இடையே வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை பரப்புவது போன்ற செயல்கள் மனித குலத்திற்கு எதிரானது. இந்த செயலுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றிணைந்து நிற்கிறது. உயிரிழந்தவர்களில் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடை வேண்டுகிறேன்.
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் எனும் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமானம் நடைபெற்று வருகிறது. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். டாக்டர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கொடூரமானது மற்றும் கோழைத்தனமானது என தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 674 ரன்கள் குவித்தது.
- 3ம் நாள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெடுக்கு 264 ரன்கள் எடுத்தது.
புதுடெல்லி:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
குரூப் டி பிரிவில் டெல்லியில் நடந்து வரும் லீக் ஆட்டத்தில் தமிழகம், டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 674 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சாய் சுதர்சன் 213 ரன், வாஷிங்டன் சுந்தர் 152 ரன், பிரதோஷ் ரஞ்சன் பால் 117 ரன் எடுத்தனர். ஜெகதீசன் அரைசதம் அடித்து 65 ரன்னில் அவுட் ஆனார்.
தொடர்ந்து ஆடிய டெல்லி அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அந்த அணியின் யாஷ் துல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். பிரணவ் ராஜவன்ஷி 40 ரன்னும், சங்க்வான் 36 ரன்னும், தியாகி 35 ர்ன்னும் எடுத்தனர்.
இறுதியில் மூன்றாம் நாள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது, யாஷ் துல் 103 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- முதல் லீக் ஆட்டத்தில் பெங்காலை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி பெற்றது.
- 2வது போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி பெங்களூரு அணியை வீழ்த்தியது.
புதுடெல்லி:
11-வது புரோ கபடி லீக் போட்டி சமீபத்தில் தொடங்கியது. தொடக்க ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ், தபாங் டெல்லி, தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
இந்நிலையில் , இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன.
இறுதியில் இந்த ஆட்டத்தில் 39-34 என்ற புள்ளிக்கணக்கில் பெங்காலை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி பெற்றது.
மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 36-32 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
- விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உள்பட 12 விமானங்களக்கு வெடிகுண்டு மிரட்டல்.
- நேற்று மட்டும் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
நாடு முழுவதும் விஸ்தாரா நிறுவனத்தின் 6 விமானங்கள் உள்பட 12 விமானங்களக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டெல்லி- பிராங்பேர்ட், சிங்கப்பூர்- மும்பை, பாலி- டெல்லி, சிங்கப்பூர்- புனே உள்ளிட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், இண்டிகோ நிறுவனத்தின் புனே- ஜோத்பூர், கோவா- அகமதாபாத், கோழிக்கோடு- சவுதி உள்ளிட்ட விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் புரளிகளால் சுமார் ரூ.80 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
நேற்று மட்டும் 32 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடுக்கு வரியை நீக்குவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.
- ஆடம்பர பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
புதுடெல்லி:
மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு மற்றும் டேர்ம் இன்சூரன்ஸ் ஆகியவற்றில் ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க மாநில நிதி அமைச்சர்கள் குழு முடிவு செய்துள்ளது.
மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடுக்கு வரியை நீக்குவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. இந்த வருவாயை ஈடு செய்ய ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் விலையுள்ள கடிகாரங்கள் மற்றும் ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் விலையுள்ள காலணிகள் போன்ற ஆடம்பர பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதம் உயர்த்தப்படுகிறது.
- குண்டுவெடிப்புக்கான காரணத்தை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
- அருகாமையில் உள்ள கடைகளின் பெயர் பலகையும் சேதமடைந்துள்ளது.
டெல்லி ரோகினியில் உள்ள சிஆர்பிஎஃப் பள்ளியில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது, ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
வெடிவிபத்தைத் தொடர்ந்து தடயவியல் குழுக்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை சரியாக 7.47 மணிக்கு சிஆர்பிஎப் பள்ளி அருகே பிரஷாந்த் விகாரில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மூத்த காவல் துறை அதிகாரி அமித் கோயல் வெடிகுண்டு நிபுணர்களை அழைத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்தில் நடத்திய சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இந்த வெடிவிபத்து காரணமாக அருகில் நிறுத்தப்பட்டு இருந்த கார் கண்ணாடிகள் சேதமடைந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அருகாமையில் உள்ள கடைகளின் பெயர் பலகையும் சேதமடைந்துள்ளது.
- கடந்த 13-ம் தேதி அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகர் சென்றடைந்தார் ஜனாதிபதி முர்மு.
- ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சுற்றுப்பயணத்தின் நிறைவு பகுதியாக மலாவி நாட்டிற்கு சென்றார்.
புதுடெல்லி:
ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு முதல் முறையாக அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன்படி அல்ஜீரியா, மொரிடேனியா மற்றும் மலாவி ஆகிய 3 நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தின் முதல் பகுதியாக கடந்த 13-ம் தேதி அல்ஜீரியா நாட்டின் அல்ஜீர்ஸ் நகர் சென்றடைந்த ஜனாதிபதி முர்முவை அந்நாட்டு ஜனாதிபதி அப்தில் மஜித் திபவுன் மற்றும் அவருடைய மந்திரி சபை உறுப்பினர்கள் வரவேற்றனர். அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ஜனாதிபதி என்னும் பெருமையை முர்மு பெற்றார்.
இதையடுத்து, தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது பகுதியாக மொரிடேனியா நாட்டிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சென்றார். அவரை அந்நாட்டின் ஜனாதிபதி முகமது ஆல்ட் கசோனி வரவேற்றார். தலைநகர் நாக்சாட்டில் இந்திய சமூகத்தினருடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திரவுபதி முர்மு கலந்துகொண்டார்.
தொடர்ந்து, தனது சுற்றுப்பயணத்தின் நிறைவு பகுதியாக மலாவி நாட்டிற்கு சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை, அந்நாட்டின் துணை ஜனாதிபதி மைக்கேல் யூசி நேரில் சென்று வரவேற்றார். அதன்பின் மலாவி ஜனாதிபதி லாசரஸ் சக்வேராவை சந்தித்து திரவுபதி முர்மு பேச்சுவார்த்தை நடத்தினார். மலாவி நாட்டிற்கு மனிதாபிமான உதவியாக 1,000 மெட்ரிக் டன் அரிசி, சுகாதார ஒத்துழைப்பின் அடையாளமாக புற்றுநோய் சிகிச்சை இயந்திரம் ஆகியவற்றை திரவுபதி முர்மு வழங்கினார்.
இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை டெல்லி திரும்பினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
- தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 674 ரன்கள் குவித்தது.
- சாய் சுதர்சன் 213 ரன்னும், வாஷிங்டன் 156 ரன்னும் எடுத்தனர்.
புதுடெல்லி:
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடந்து வருகிறது.
குரூப் டி பிரிவில் டெல்லியில் நடந்து வரும் லீக் ஆட்டத்தில் தமிழகம், டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பீல்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன், ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினர். ஜெகதீசன் அரைசதம் அடித்து 65 ரன்னில் அவுட் ஆனார்.
அடுத்து இறங்கிய வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சனுடன் இணைந்து நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் டெல்லி வீரர்கள் திணறினர்.
நிலைத்து நின்று ஆடிய சாய் சுதர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். முதல் நாள் முடிவில் தமிழகம் 1 விக்கெட்டுக்கு 379 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 202 ரன்னும், வாஷிங்டன் சுந்தர் 96 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், தொடர்ந்து பேட்டிங் செய்த தமிழகம் தனது முதல் இன்னிங்சில் 158.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 674 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சாய் சுதர்சன் 213 ரன், வாஷிங்டன் சுந்தர் 152 ரன், பிரதோஷ் ரஞ்சன் பால் 117 ரன் எடுத்தனர்.
இதையடுத்து டெல்லி அணி தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது. இரண்டாம் நாள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது.
- வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கு நவம்பர் 13-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது
- இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்த வயநாடு பாராளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியையும் அறிவித்தது. அதன்படி அங்கு நவம்பர் 13-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன.
இதையடுத்து வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான சத்யன் மோகேரி போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பினோய் விஸ்வம் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை பா.ஜ.க. இன்று அறிவித்துள்ளது. அதன்படி, நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என தெரிவித்துள்ளது.
- மத்திய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
- வங்கக்கடலில் வரும் 22ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என முன்னதாக அறிவிப்பு.
வங்கக்கடலில் ஒருநாள் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 21ம் தேதி மத்திய கிழக்கு வங்க கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்மான் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வங்கக்கடலில் வரும் 22ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று அக்டோபர் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, வரும் 21-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள்; நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 22, 23-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 24-ந்தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டில் 72,292 பேர் சாலை விபத்தில் காயம் அடைந்துள்ளனர்.
- 70 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை.
புதுடெல்லி:
கடந்த ஆண்டு (2023) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த சாலை விபத்து தொடர்பான ஆய்வுகள் வெளியாகி உள்ளது.
சாலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையில் உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.
சாலை விபத்தில் காயம் அடைந்தவர்களில் தமிழ் நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் 72,292 பேர் சாலை விபத்தில் காயம் அடைந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் 55,769 பேரும், கேரளாவில் 54,320 பேரும் காயம் அடைந்து 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளன.
மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தான் அதிக அளவில் சாலை விபத்துகளில் பலியானதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு விபத்தில் இறந்தவர்களில் 44 சதவீதம் பேர் (கிட்டத்தட்ட 76 ஆயிரம் பேர்) மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆவார்கள். இதில் 70 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியவில்லை.
இரு சக்கர வாகன ஓட்டிகளின் உயிரிழப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சாலை பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.






