என் மலர்
ஆந்திர பிரதேசம்
- பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது.
- இறுதி கட்டப் பணியான 25 மணி நேர கவுண்டவுன் நாளை காலை தொடங்குகிறது
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜனவரி 1-ந்தேதி காலை 9.10 மணி அளவில் பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட்டில் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள் விண்வெளியில் உள்ள தூசுகள் மற்றும் கருந்துளை மேக கூட்டங்களை ஆய்வு செய்ய இருக்கிறது.
அத்துடன் திருவனந்தபுரம் லால் பகதூர் சாஸ்திரி பல்கலைக்கழக மாணவிகள், பூமியின் மேல் பரப்பில் உள்ள புற ஊதா கதிர்கள் மற்றும் கேரள மாநிலத்தின் தட்பவெப்ப நிலை அறிந்து கொள்வதற்காக வெசாட் என்ற செயற்கைகோளை வடிவமைத்திருந்தனர்.
இந்த செயற்கைகோளுடன், வெளிநாட்டு செயற்கைகோள்கள் சிலவற்றையும் இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதற்கான இறுதி கட்டப் பணியான 25 மணி நேர கவுண்டவுன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.10 மணிக்கு தொடங்குகிறது. ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், செயற்கைகோள் செயல்பாடு மற்றும் ராக்கெட் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ மூத்த விஞ்ஞானிகள் கூறினர்.
- மார்கழி மாதத்தில் 21 நாட்கள் ஆத்யாயன உற்சவம் நடக்கும்.
- இந்த ஆண்டும் ஆத்யாயன உற்சவம் நடந்து வருகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணய கலகோற்சவம் நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உற்சவத்தை கண்டுகளித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் 21 நாட்கள் ஆத்யாயன உற்சவம் நடக்கும். அதன்படி இந்த ஆண்டும் ஆத்யாயன உற்சவம் நடந்து வருகிறது. அதன் 17-வது நாளிலும் மற்றும் வைகுண்ட ஏகாதசியில் இருந்து 6-வது நாளிலும் பிரணய கலகோற்சவம் (ஊடல் உற்சவம்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரணய கலகோற்சவம் நேற்று நடந்தது. அதற்காக நேற்று மாலை உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தனித் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளினார்.
அதேபோல் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் மற்றொரு தனித் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளினர். சாமியும், தாயார்களும் எதிர் எதிர் திசைகளில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து ஸ்ரீவாரி புஷ்கரணியை அடுத்த வராகசாமி கோவில் அருகில் வந்து எதிர் எதிரே நின்றனர்.

பக்தர்களின் குறைகள், கோரிக்கைகள், நோய்களை போக்குவதில் முன்நிற்கும் ஏழுமலையான், தனது துணைவியார்களான ஸ்ரீதேவி, பூதேவியர்களை கண்டு கொள்வதில்லை, எனக் குற்றம் சாட்டி அவர்கள் சார்பாக அர்ச்சகர் ஒருவர் மலையப்பசாமி மீது முதலில் 3 முறை பூப்பந்துகளை எறிந்து தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர்.
அப்போது நம்மாழ்வார் அருளிய பாசுரங்களை வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் 'கேலி' செய்யும் விதத்தில் பாராயணம் செய்ய, உற்சவர் மலையப்பசாமி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை மிரட்டும் தோரணையில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை, என்று கூறி பயப்படுவதுபோல் நடித்து மன்னிப்பு கேட்டார்.
அதன்பிறகு கோபம் தணிந்து அமைதியாகி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் இருவரும் மலையப்பசாமியின் இருபுறமும் சேர்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியை அடுத்து அவர்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து ஆஸ்தானம் நடத்தினர். பின்னர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த உற்சவத்தில் திருமலை ஜீயர்சுவாமிகள், தேவஸ்தான அதிகாரிகள், வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் சுற்றி நின்றவாறு உற்சவத்தை கண்டு களித்தனர்.
- ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் தகவல்.
- ஜென் மோகன் ரெட்டி அவருக்கு கட்சி துண்டை அணிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு ஆந்திர பிரதேச மாநிலத்தில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்-இல் தன்னை இணைத்து கொண்டார்.
ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, துணை முதலமைச்சர் கே. நாராயணசாமி மற்றும் ராஜம்பேட்ட மக்களவை உறுப்பினர் பி. மிதுன் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் அம்பதி ராயுடு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இது தொடர்பான அறிவிப்பை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கட்சியில் இணைந்த அம்பதி ராயுடுவை வரவேற்கும் விதமாக ஜென் மோகன் ரெட்டி அவருக்கு கட்சி துண்டை அணிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி மட்டுமின்றி ஐ.பி.எல். தொடரில் அம்பதி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், பல்வேறு மாநிலங்களில் கிரிக்கெட் சங்கங்களிலும் விளையாடி இருக்கிறார்.
- எம்.எல்.ஏ. உறவினர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அமெரிக்கா சென்றனர்.
- அட்லாண்டாவில் இருந்து டெக்சாஸ் திரும்பிய போது கார் விபத்தில் சிக்கியுள்ளது.
ஆந்திரா மாநிலம் அமலாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வர ராவ். இவர் தனது குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அமெரிக்கா சென்றார்.
அங்கு அவர்கள் உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்கள். மறுநாள் அங்குள்ள மிருககாட்சி சாலைக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். பின்னர் உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்று விட்டு மினி வேனில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். டெச்சாஸ் மாகாணம் ஜான்சன் கவுன்ட்டி பகுதியில் வந்தபோது சரக்கு வாகனம் ஒன்று மினி வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் வேனில் பயணம் சென்ற நாகேஸ்வர ராவ், மற்றும் சீதா மகாலட்சுமி, நவீனா, கிருத்திக், இளம் பெண் நிஷிதா உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். லோகேஷ் என்பவர் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
விபத்து பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம்அடைந்த லோகேஷ் மற்றும் சரக்கு வாகனத்தில் வந்த 2 வாலிபர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சரக்கு வாகனம் தவறான பாதையில் வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.
பலியான 6 பேரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பொன்னாட வெங்கட சதீஷ்குமார் என்பவரின் உறவினர்கள் ஆவார்கள். இது தொடர்பாக அவர் கூறும்போது 6 பேர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.
- ரோஜாவுக்கு கிரிக்கெட் பேட் பிடிப்பது குறித்து முதலமைச்சர் ஜெகன்மோகன் கற்றுக்கொடுத்தார்.
- இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
அமராவதி:
ஆந்திரா அரசின் சார்பில் ஆடுவோம் ஆந்திரா என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 5 கட்டங்களாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதன் தொடக்க நிகழ்ச்சி குண்டூரில் உள்ள பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் மற்றும் அமைச்சர் ரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இருவரும் கிரிக்கெட் விளையாட வந்தனர். அப்போது கிரிக்கெட் பேட்டை எப்படி பிடிப்பது என தெரியாமல் ரோஜா தடுமாறினார். இதைக் கண்ட முதல் மந்திரி ஜெகன்மோகன் அவருக்கு சொல்லிக் கொடுத்தார்.
இதையடுத்து, கிரிக்கெட் பந்தை அடித்து ஆடினார் ரோஜா. தொடர்ந்து முதலமைச்சர் ஜெகன் மோகனிடம் வலுக்கட்டாயமாக கிரிக்கெட் பேட்டைக் கொடுத்த ரோஜா அவரையும் விளையாடச் செய்தார்.
இந்தப் போட்டிகள் பிப்ரவரி மாதம் 10-ம் தேதி வரை ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- கூட்டத்தில் இருந்த ஒரு ஆண் யானை வழி தவறி ஒடிசா வன பகுதிக்குள் சென்றுவிட்டது.
- ராயக்கடா இடையே வந்த ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ராயக்கடா இடையே உள்ள அர்த்தம் வலசா என்ற இடத்தில் தண்டவாளத்தில் 7 காட்டு யானைகள் நின்று அட்டகாசம் செய்தன.
இந்த கூட்டத்தில் இருந்த ஒரு ஆண் யானை வழி தவறி ஒடிசா வன பகுதிக்குள் சென்றுவிட்டது.
அந்த யானையை காணாமல் மற்ற யானைகள் ஆவேசமாக சுற்றி திரிந்தன. 7 யானைகளும் தண்டவாள பகுதிகளிலேயே நின்றன. இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விசாகப்பட்டினம் ராயக்கடா இடையே வந்த ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை பட்டாசு வெடித்து வனப்ப குதிக்குள் விரட்டினர்.
இதனை தொடர்ந்து ரெயில் போக்குவரத்து சீரானது.
- இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
- அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் ரெட்டி தலைமையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று நடந்தது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று தங்க கருட வாகன சேவை நடந்து வருகிறது.
தற்போது ஆதித்தியாயன உற்சவம் நடைபெறுவதால் இன்று நடைபெற இருந்த கருட சேவை ரத்து செய்யப்பட்டது. இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கருணாகரன் ரெட்டி தலைமையில் ஆட்சி மன்ற குழு கூட்டம் இன்று நடந்தது.
கூட்டத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி மற்றும் அதிகாரிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ரெயில் நிலையம் அருகே உள்ள மண்டபத்தை எடுத்துவிட்டு புதியதாக ரூ.600 கோடியில் கட்டிடங்கள் கட்டுவது வளர்ச்சி பணிகள் மற்றும் தேவஸ்தானத்திற்கு தேவையான பொருட்கள் கொள்முதல் செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மகளிர் அணி சார்பில் விசாகப்பட்டினம் காந்தி சிலை முன்பு கண்டன போராட்டம் செய்தனர்.
- பவன் கல்யாண் பஞ்சர் செய்யப்பட்ட சைக்கிள். அந்த சைக்கிளை தான் அவர் வைத்திருக்கிறார் என்பது உண்மை.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வியூகம் என்ற தெலுங்கு சினிமா பட விழா நடந்தது.
இதில் கலந்துகொண்ட ஆந்திர மந்திரி ரோஜா பேசுகையில் :-
பவன் கல்யாண் ரசிகர்களும் கபு ஜாதியினரும் பவன் கல்யாண் முதல் மந்திரியாக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் பவன் கல்யாண் பஞ்சர் செய்யப்பட்ட சைக்கிள். அந்த சைக்கிளை தான் அவர் வைத்திருக்கிறார் என்பது உண்மை எனக் கிண்டலாக பேசினார்.
மேலும் மந்திரி ராம்பாபு பேசுகையில்:-
ராஜமுந்திரி ஜெயிலில் சந்திரபாபு நாயுடுவிடம் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் சரண் அடைந்தார் என்றார்.
பட விழாவில் ரோஜா மற்றும் ராம் பாபு பேசியது பவன் கல்யாண் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இதனை கண்டித்து பவன் கல்யாண் கட்சியைச் சேர்ந்த மகளிர் அணி சார்பில் விசாகப்பட்டினம் காந்தி சிலை முன்பு கண்டன போராட்டம் செய்தனர்.
அப்போது மந்திரி ரோஜா மற்றும் ராம் பாபு ஆகியோரின் படங்களை செருப்பால் அடித்து கோஷம் எழுப்பினர்.
இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஏழு சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருமலை:
திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் கோலாகலமாகத் தொடங்கி நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்று மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மின் விளக்குகள், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காமாட்சி, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியர் எழுந்தருளி ஏழு சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கபிலத்தீர்த்தம் புஷ்கரணியின் கரைகளில் அமர்ந்திருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் முப்பெரும் தேவியரை தரிசனம் செய்தனர்.
தெப்போற்சவத்தில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி சுப்புராஜு, கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர்கள் ரவிக்குமார், பாலகிருஷ்ணா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்கள் பக்தி பாடல்களை பாடினர்.
அதைத்தொடர்ந்து தெப்போற்சவத்தின் 5-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) சண்டிகேஸ்வரர், சந்திரசேகரர் தெப்பத்தில் எழுந்தருளி 9 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
- பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன.
- திருப்பதியில் நேற்று 63, 519 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசியொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டன.
இதேபோல் கடந்த 23-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட வாசல் வழியாக பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் இரவு 4 லட்சம் தரிசன டிக்கெட்டுகள் 9 இடங்களில் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.
இலவச தரிசன டிக்கெட் பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். 4 லட்சம் இலவச தரிசன டிக்கெட் இன்று அதிகாலையுடன் தீர்ந்தது.
இதையடுத்து இலவச தரிசனம் டிக்கெட் வழங்கும் கவுண்டர்கள் மூடப்பட்டன. ரூ 300 ஆன்லைன் சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் திருப்பதி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
திருப்பதி மலைக்கு செல்லும் பக்தர்கள் பஸ்சில் ஏறும்போது தரிசன டிக்கெட் உள்ளவர்கள் மட்டும் பஸ்சில் அனுமதிக்கப்படுகின்றனர்.
மற்ற பக்தர்கள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி விடப்படுகின்றனர். இதேபோல் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடியில் டிக்கெட் உள்ளதா என பரிசோதித்து திருப்பதி மலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
மற்ற பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
கோவிலில் நேரடி இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வருகிற ஜனவரி 1-ந் தேதி வரை தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்த தகவல் தெரியாமல் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் தரிசன டிக்கெட் இல்லாமல் திரும்பி வருகின்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில் வைகுண்ட வாசல் தரிசன டிக்கெட்டு களை பக்தர்களுக்கு தேவஸ்தானம் தினமும் விநியோகித்து இருக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக விநியோகம் செய்ததால் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அவதி அடையாமல் இருக்க தேவஸ்தான அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்என வலியுறுத்தினர்.
திருப்பதியில் நேற்று 63, 519 பேர் தரிசனம் செய்தனர். 26,424 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.5.5 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- பக்தர்கள் ஸ்ரீவாரி புஷ்கரணியில் 3 முறை மூழ்கி புனித நீராடினர்.
- பல உள்ளூர் கோவில்களில் சக்கர ஸ்நானம் நடந்தது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவாதசி விழா நேற்று நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை கோவிலில் இருந்து உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஊழியர்கள் ஊர்வலமாக பூவராகசாமி கோவில் அருகில் ஸ்ரீவாரி புஷ்கரணியின் கரைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்து, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஸ்ரீவாரி புஷ்கரணி புனிதநீரில் அர்ச்சகர்கள் 3 முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்தனர்.

அப்போது புஷ்கரணியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவாரி புஷ்கரணியில் 3 முறை மூழ்கி புனித நீராடினர். தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்ததும், சுதர்சன சக்கரத்தாழ்வாரை மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண. கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

வைகுண்ட துவாதசியையொட்டி திருப்பதியில் உள்ள பல உள்ளூர் கோவில்களில் சக்கர ஸ்நானம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில், திருப்பதி கோதண்டராமசாமி கோவில், கோவிந்தராஜசாமி கோவில், நாராயணவனம், நாகலாபுரம், தொண்டமநாடு ஆகிய பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் ஸ்நாபன திருமஞ்சனம், சக்கர ஸ்நானம் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனிதநீராடினர்.
- ஜனவரி 1-ந்தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நேற்று காலை பரமபத வாசல் எனும் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது.
இதன் வழியாக ஜனவரி 1-ந்தேதி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் சிரமம் இன்றி ஏழுமலையானை தரிசிப்பதற்காக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு உள்ளன. 9 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கபடுகிறது.
இந்த நிலையில் வைகுண்ட வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்தனர். திருப்பதி மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. திருப்பதியில் தற்போது அதிக அளவில் பனிப்பொழிவு உள்ளதால் பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வைகுண்ட வாசல் திறப்பையொட்டி நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமயதராய் ஏழுமலையான் தங்க தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.






