என் மலர்tooltip icon

    ஆந்திர பிரதேசம்

    • விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாணவிகள் கழிவறையில் வேறு கேமரா பொருத்தி இருக்கிறார்களோ என்பதால் கழிவறைக்கு செல்ல பயமாக உள்ளதாக தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டினம் மண்டலம், குட்ல வல்லேருவில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர மந்திரி கொள்ளு ரவீந்திரன், கலெக்டர் பாலாஜி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கங்காதரராவ் ஆகியோர் கல்லூரிக்கு சென்று மாணவிகளிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    கல்லூரி மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக ரகசிய வீடியோ கேமரா பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ரகசிய கேமரா பொருத்தியதாக பிரகாசம் மாவட்டம், புல்லல செருவு, அடுத்த கனிகரியை சேர்ந்த பி.டெக் இறுதி ஆண்டு மாணவரும் அவருக்கு உதவி செய்ததாக 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.


    அவர்களிடம் இருந்த லேப்டாப்பை பறிமுதல் செய்து சோதனை செய்தபோது அதில் 300-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றபோது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் நீங்களா கேமராக்களை பொருத்தினீர்கள் என கிண்டல் அடித்து கோஷமிட்டனர்.

    இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கழிவறையில் வேறு கேமரா பொருத்தி இருக்கிறார்களோ என்பதால் கழிவறைக்கு செல்ல பயமாக உள்ளதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் மாணவிகளின் பெற்றோர்களுடன் கல்லூரி முழுவதும் அதே நவீன கேமராக்களை கொண்டு பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் எந்த கேமராக்களும் பொருத்தப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு நிம்மதி பெருமூச்சுடன் விடுதிக்கு சென்றனர்.

    • கல்லூரியில் நடந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • நேற்றிரவு முதல் இன்று காலை வரை போராட்டம் நீடித்தது.

    ஆந்திர பிரதேசத்தில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவிகள் விடுதி கழிவறையில் (Washroom) ரகசிய கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த கேமராவில் மாணவிகள் வீடியோக்கள் ரகசியமாக பதிவாகி இருந்ததாகவும், பின்னர் அவை கசிந்து சில மாணவர்களுக்கு விற்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடா மண்டலம் குட்லவல்லேரு பொறியியல் கல்லூரியில் நடந்த இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விடுதி கழிவறையில் (Washroom) இருந்த கேமராவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள், இதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றிரவு முதல் இன்று காலை வரை போராட்டம் நீடித்தது. தங்களுக்கு நீதி வேண்டும் என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக, பிடெக் இறுதியாண்டு படிக்கும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மூத்த மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரது லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

    பெண்கள் விடுதி கழிவறையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்ததாகவும், சில மாணவர்கள் இந்த வீடியோக்களை கைதான மாணவனிடம் இருந்து வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    இச்சம்பவத்தை தொடர்ந்து பெண்கள் கழிவறைக்கு செல்லவே பயப்படுகின்றன. அங்கே செல்வதையே தவிர்த்து விடுகின்றன. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்பது யார்? என்பதுதான் மாணவிகளின் கேள்வியாக உள்ளது.

    • தெலுங்கானாவில் தனியார் வசம் உள்ள மதுபான கடைகள் மூலம் அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைப்பது தெரியவந்தது.
    • செப்டம்பர் மாத இறுதியில் ஆன்லைன் மூலம் மதுபான கடைகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

    திருப்பதி:

    ஆந்திராவில் கடந்த 2017-ம் ஆண்டில் சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது மதுபான கடைகள் தனியார் வசம் இருந்தது.

    அதன் பிறகு ஆட்சிக்கு வந்த முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மதுபான கடைகளை அரசு மதுகடைகளாக மாற்றினார்.

    சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு புதிய மதுபான கொள்கைகளை அமல்படுத்த முடிவு செய்தார்.

    அதன்படி கலால் துறை அதிகாரிகள் தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்களில் மதுபான கொள்கை குறித்து ஆய்வு செய்து அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.

    அதில் தெலுங்கானாவில் தனியார் வசம் உள்ள மதுபான கடைகள் மூலம் அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைப்பது தெரியவந்தது.

    இதனால் தெலுங்கானா மதுபான கொள்கையை பின்பற்ற முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

    அதன்படி செப்டம்பர் மாத இறுதியில் ஆன்லைன் மூலம் மதுபான கடைகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன.

    மதுபான கடைக்கு விண்ணப்பம் செய்ய ரூ.2 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் 40 விண்ணப்பங்கள் வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2000 கோடி வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கடந்த ஆட்சியில் அரசு மதுபான கடை என்பதால் அருகில் பார் வைக்க அனுமதி கொடுக்கவில்லை. இதனால் மது குடிப்பவர்கள் சாலைகளில் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

    தற்போது மதுக்கடைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளதால் மது கடையுடன் கூடிய பார் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளதாக ஆந்திர மாநில கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • பொதுப் பக்தர்களின் பெரிய நலன்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • லட்டு வளாகத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருமலை:

    திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை பார்க்கும் சில ஊழியர்கள் (தலாரிகள்) தங்களுக்குரிய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வெளிமார்க்கெட்டில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதங்களை விற்பனை செய்வதை நாங்கள் கண்காணித்துள்ளோம். இதைத் தடுக்க தரிசன டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் இனிமேல் லட்டு கவுண்ட்டர்களில் ஆதார் அட்டையைப் பதிவு செய்து 2 லட்டுகளை பெறலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

    மேலும் இடைத்தரகர்கள், தலாரிகளின் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பக்தர்களுக்கு விற்கப்படும் லட்டு பிரசாதங்களை வெளிப்படைத் தன்மையுடன் வழங்கவும், டோக்கன் இல்லாத பக்தர்களுக்கு ஆதார் சரிபார்ப்பை அமல்படுத்தவும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுப் பக்தர்களின் பெரிய நலன்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்காக, லட்டு வளாகத்தில் சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த லட்டுகளை 48 முதல் 62 வரை உள்ள கவுண்ட்டர்களில் பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

    நாங்கள் வேறு எதையும் கட்டுப்படுத்தவில்லை. தரிசன டோக்கன்கள் அல்லது டிக்கெட்டுகள் உள்ள பக்தர்கள் ஒரு இலவச லட்டு பெறுவதைத் தவிர, முன்பு போலவே கூடுதல் லட்டுகளையும் வாங்கலாம்.

    மேலும் இந்த நடவடிக்கை லட்டு வினியோக அமைப்பில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய கடற்படையில் தற்போது 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன.
    • இதில் 16 நீர்மூழ்கி கப்பல்கள் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடியது.

    விசாகப்பட்டினம்:

    இந்திய கடற்படையில் தற்போது 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 16 நீர்மூழ்கி கப்பல்கள் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக் கூடியது. இவற்றில் 6 ரஷியாவின் கிலோ வகையைச் சேர்ந்தது. 4 ஜெர்மனியின் எச்.டி.டபிள் ரகத்தை கொண்டது. 6 பிரான்ஸ் நாட்டின் ஸ்கார் பீன் ரகத்தைச் சேர்ந்தவை.

    கடந்த 2018-ம் ஆண்டு கடற்படையில் சேர்க்கப்பட்ட ஐ.என்.எஸ். அரிஹந்த் என்ற நீர்மூழ்கி கப்பல் மட்டும் அணுசக்தியில் இயங்கக் கூடியது. இதில் 83 மெகா வாட் திறனுள்ள அணு உலை உள்ளது. இது அணு ஏவுகணைகளை ஏவும் திறனுடையது. இவை எஸ். எஸ்.பி.என். என அழைக்கப்படுகிறது.

    இதேபோன்ற, இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் 6,000 டன் எடையில் ஐ.என்.எஸ். அரிகாட் என்ற பெயரில் விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்டது. 750 கிலோமீட்டர் தூரம் தாக்கும் கே-15 ஏவுகணையை கொண்டது. இதன் பரிசோதனைகள் அனைத்தும் முடிவடைந்தது.

    இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, கடற்படை அதிகாரி சூரஜ் பெர்ரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    சீனா மற்றும் பாகிஸ்தான் அச்சுறுத்தலை சமாளிக்க இந்திய கடற்படைக்கு இன்னும் 18 டீசல்-எலெக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள், 4 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள், 6 எஸ்.எஸ்.என். ரக நீர்மூழ்கி கப்பல்கள் தேவை. இவற்றில் ரூ. 40,000 கோடி மதிப்பிலான 2 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டில் தயாரிக்கும் திட்டம் மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இதேபோல் 6 ஆயிரம் டன் எடையில் எஸ். எஸ்.என். எனப்படும் 'ஹன்டர் கில்லர்' நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    • விஜயவாடா போலீசில் பொய் புகார் கொடுத்தார்.
    • 3 நாட்கள் சித்ரவதை செய்தனர்.

    திருப்பதி:

    மும்பையை சேர்ந்த பிரபல நடிகை காதம்பரி ஜெத்வாணி. இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,:-

    கடந்த ஆண்டு மும்பையை சேர்ந்த தொழிலதிபருக்கு எதிராக போலீசில் புகார் செய்தோம்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது நெருங்கிய நண்பரான ஆந்திர ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குக்கல வித்யாசாகரை தொடர்பு கொண்டு எங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து குக்கல வித்தியா சாகர் காதம்பரி ஜெத்வாணியின் செல்போனுக்கு வீடியோ காலில் ஆபாசமாக நின்று தொல்லை கொடுத்தார். பின்னர் விஜயவாடா போலீசில் பொய் புகார் கொடுத்தார்.

    போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 3-ந் தேதி மும்பைக்கு வந்தனர். எனது குடும்பத்தினரை சர்வதேச குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளை போல் விமானத்தில் விஜயவாடாவிற்கு அழைத்து வந்தனர்.

    இப்ராகிம் பட்டினத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தடுப்பு காவலில் வைத்து 3 நாட்கள் சித்ரவதை செய்தனர்.

    எனது பெயரில் உள்ள சொத்து மற்றும் 18 வங்கி கணக்கில் இருந்த ரூ. 80 லட்சம் என ரூ. 6 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறித்துக் கொண்டனர்.

    பின்னர் எங்களை ஜெயிலில் அடைத்தனர். 48 நாட்களுக்கு பிறகு நாங்கள் ஜெயிலில் இருந்து வெளியே வந்தோம்.

    கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.

    தற்போது முதல் மந்திரியாக உள்ள சந்திரபாபு நாயுடு எங்களுக்கு உதவி செய்து எங்களை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரூ. 530 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
    • விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    திருமலை:

    திருப்பதி தேவஸ்தானத்தில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டில் ரூ.500 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்ததாக விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

    இந்த அறக்கட்டளை மூலம் வரும் பணம், மீனவர்கள், எஸ்.சி, எஸ்.டி.க்கள் வசிக்கும் பகுதிகளில் ஏழுமலையான் கோவில்களை கட்டவும், நலிந்த கோவில்களை மராமத்து செய்யவும், தீப, தூப நைவேத்தியங்களுக்கு உதவவும் மட்டுமே பயன்படுத்துவதாக தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

    ஆனால், இதுவரை எத்தனை கோவில்கள் கட்டப்பட்டது? எவ்வளவு செலவு செய்தனர் என்பது குறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதில் ரூ. 530 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கட்டிட காண்டிராக்ட் வழங்கியதிலும் கோடிக் கணக்கில் முறை கேடுகள் நடந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    ஆதலால், அப்போதைய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் திருப்பதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அப்போதைய அறங்காவலர் குழு தலைவருமான கருணாகர் ரெட்டியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    ஆண்டுக்கு ரூ. 300 கோடி வரை மட்டுமே கான்டிராக்ட் பணிகள் நடத்தப்படும். ஆனால் இவர்களது நிர்வாகத்தில் மட்டும், சிம்ஸ் தேவஸ்தான மருத்துவ மனைக்கு ரூ. 77 கோடி, கோவிந்தராஜ சத்திரம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் காம்ப்ளக்ஸ் கட்ட ரூ. 420 கோடி ஒதுக்கப்பட்டன.

    மேலும் இதுபோல் பல சிவில் பணிகளுக்கும் கோடி கணக்கில் நிதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் கமிஷன் பல கோடி பெற்றுள்ளதாக வந்த புகார்களின் பேரில் தர்மாரெட்டி மற்றும் கருணாகர் ரெட்டிக்கும், தேவஸ்தான ஆடிட்டர் பாலாஜி, முன்னாள் அறங்காவலரான ஒய்.வி. சுப்பாரெட்டி மற்றும் நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடப்பாவில் வரி கட்டாதவர்கள் வீட்டில் குப்பைகள் எடுக்க முடியாது என்று மேயர் தெரிவித்திருந்தார்.
    • மக்கள் வரி செலுத்த வேண்டாம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ. மாதவி ரெட்டி வலியுறுத்தினார்.

    ஆந்திர மாநிலம் கடப்பாவில் வரி கட்டாதவர்கள் வீட்டில் குப்பைகள் எடுக்க முடியாது எனக் கூறிய மேயரைக் கண்டித்து, அவரது வீட்டின் உள்ளே குப்பைகளை வீசி பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

    மேயர் வீட்டின் முன் பொதுமக்கள் குப்பைகளை வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆனால், மேயரின் உத்தரவிற்கு மாறாக பொதுமக்கள் வரி செலுத்த வேண்டாம் என்று தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ. மாதவி ரெட்டி வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • மருத்துவர்கள் பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நோயாளி மருத்துவரை தாக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.

    ஆந்திரா மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் கழகத்தில் கடந்த 24-ந்தேதி பெண் மருத்துவர் ஒருவரை நோயாளி ஒருவர் சரமாரி தாக்கி உள்ளார். இதன் சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வீடியோவில் நோயாளி ஒருவர் டாக்டரை துரத்தி சென்று அவரது தலைமுடியை பிடித்து இழுத்து தலையை ஒரு உலோக படுக்கையில் வைத்து இடித்து சரமாரி தாக்குகிறார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றுவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    இந்த தாக்குதலை நடத்திய நோயாளி வீசியங்கரம் மாவட்டம் பொப்பிலியை சேர்ந்த பங்கரா ராஜூ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் வலிப்பு நோய்க்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை.

    இந்த தாக்குதலை தொடர்ந்து பல இளநிலை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பணியிடத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட டாக்டர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ அறிவியல் கழக துணைவேந்தர் டாக்டர் ரவிக்குமாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோக்கை விடுத்துள்ளார்.


    • நீர்மூழ்கி கப்பலுக்கு ஐ.என்.எஸ் அரிஹந்த் என பெயரிட்டுள்ளனர்.
    • பிரதமர் மோடி அடுத்த மாதம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    திருப்பதி:

    இந்திய கடற்படைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் அதிநவீன அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தயார் செய்யப்பட்டுள்ளது.

    இது இந்தியாவில் தயாரான முதல் முழுமையான அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகள் தாங்கிய நீர்மூழ்கி கப்பலாக உருவாகியுள்ளது. இந்த கப்பலுக்கு ஐ.என்.எஸ் அரிஹந்த் இன் என பெயரிட்டுள்ளனர்.

    இதன் உத்வேகம் வடிவமைப்பு மற்றும் அனுபவத்துடன் இந்திய கடற்படை மற்றொரு மைல் கல்லை எட்டி உள்ளது.

    கிழக்கு கடற்கரை தளமான விசாகப்பட்டினத்தில் கடந்த 2011-ம் ஆண்டு இந்த கப்பலை கட்டுமானம் செய்ய திட்டமிடப்பட்டது. முதல் கட்டுமானத்திற்கு பிறகு 2017-ம் ஆண்டு இதன் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது.

    உள்துறை உபகரணங்களை சரி செய்தல், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரேடார் அமைப்பு, ஆயுதம் வழங்குதல் என அனைத்து முக்கிய பணிகளையும் செய்து முடித்துள்ளனர். செயல்முறைகள் மூலம் பல்வேறு சோதனைகளும் செய்யப்பட்டது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்த மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் விசாகப்பட்டினம் படைத்தளத்திற்கு சென்று ஐ.என்.எஸ். அரிஹந்த் பற்றிய தகவல்களை கேட்டு அறிந்தார்.

    அதிநவீன சக்தி அணுசக்தி ஏவுகணைகளை தாங்கி செல்லும் நீர் மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். அரிஹந்த் கப்பலை பிரதமர் மோடி அடுத்த மாதம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

    இதன் முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகிறது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக வருகிற 29-ந் தேதி மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் விசாகப்பட்டினம் கடற்படை தளத்திற்கு வருகை தர உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடப்பாவை சேர்ந்த 6 பேர் நேற்று மாலை அன்னமய்யா மாவட்டம், ராய்சோட்டிக்கு காரில் சென்றனர்.
    • எதிரே வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கடப்பாவை சேர்ந்த 6 பேர் நேற்று மாலை அன்னமய்யா மாவட்டம், ராய்சோட்டிக்கு காரில் சென்றனர். அவர்கள் சென்ற கார் ராய் சோட்டி குவ்வள செருவு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிரே வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. லாரி மோதியதில் 50 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து கார் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறித்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரமோற்சவம் அக்டோபர் 4-ந் தேதி முதல் 12 வரை நடக்கிறது.
    • திருமலை மலை சாலைகள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ந் தேதி முதல் 12 வரை நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஜே.ஷ்யாமளா ராவ் கூறியதாவது:-

    திருப்பதி பிரமோற்சவ விழாவின் போது தினமும் காலை 8 முதல் 10 மணி வரையிலும் இரவு 7 முதல் 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடைபெறும். கருட வாகன சேவை மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகும்.

    அக்டோபர் 4-ந்தேதி மாலை, மாநில அரசு சார்பில் வெங்கடேசப் பெருமானுக்கு முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்கிறார். அவர் சேஷ வாகன சேவையிலும் பங்கேற்பார்.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பல ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சுமார் 7 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் வைக்கப்படும். கருட வாகன சேவைக்காக மாவட்ட காவல்துறையின் ஒருங்கிணைப்புடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். கருட வாகன சேவை நாளில் திருமலை மலை சாலைகள் 24 மணி நேரமும் திறந்து வைக்கப்படும்.

    அனைத்து கல்யாண கட்டாக்களிலும் இடைவிடாமல் 24 மணி நேரமும் பக்தர்கள் மொட்டை அடிக்க வசதியாக கூடுதல் முடிதிருத்தும் பணியாளர்களை நியமிக்கப்படுவார்கள்.

    அன்னதான கூடம் மட்டுமின்றி பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகள் உள்பட பல்வேறு இடங்களில் அன்னதானம், பால் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×