என் மலர்
ஆந்திர பிரதேசம்
+2
- தன்னுடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்த இளைஞர்களுடன் பிரதமர் மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார்.
- 11-வது யோகா தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
விசாகப்பட்டினம்:
பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் யோகா கலையை உலக அளவில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். இதற்காக இந்தியா சார்பில் ஐ.நா. சபையிடம் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று ஐ.நா. சபை அறிவித்தது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளாக ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் 11-வது சர்வதேச யோகா தினம் இன்று (சனிக்கிழமை) காலை கொண்டாடப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு இந்த தினத்தை கொண்டாடும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 191 நாடுகளில் 1,300 இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்த இந்திய கலாச்சார தொடர்பு மையத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
யோகா கலை தோன்றிய இந்தியாவில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் யோகா நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இன்று நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.
பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் ஏதாவது ஒரு நகரில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பதை வழக்கத்தில் வைத்துள்ளார். அதன்படி இன்று அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்காக அவர் நேற்று பீகார், ஒடிசா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இரவே விசாகப்பட்டினத்துக்கு வந்து தங்கி இருந்தார்.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு அவர் விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரைக்கு வந்தார். அங்கு அவர் யோகா பயிற்சி செய்வதற்கு சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யோகா பயிற்சி செய்ய தயார் நிலையில் இருந்தனர்.
காலை 6 மணிக்கு யோகா பயிற்சி தொடங்கியது. இளைஞர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி யோகா பயிற்சி செய்தார். பல்வேறு வகையான யோகாசனங்களை அவர்கள் ஒருங்கிணைந்து செய்தனர். ஒவ்வொரு யோகாசனத்தின் போதும் பிரதமர் மோடி அமைதியான முறையில் செய்தார்.
அவரை சுற்றி இருந்த இளைஞர்களும் யோகா பயிற்சியை நேர்த்தியுடன் செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் யோகா பயிற்சி நடைபெற்றது. பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
யோகா பயிற்சி முடிந்ததும் பிரதமர் மோடி உரையாற்றினார். பிறகு அவர் தன்னுடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்த இளைஞர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். முன்னதாக 11-வது யோகா தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மிக பிரமாண்டமான யோகா நிகழ்ச்சியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இது உலக சாதனை புத்தகமான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என்று தெரிகிறது. அதற்கு ஏற்ற வகையில் விசாகப்பட்டினத்தில் இன்று மிக விரிவான அளவுக்கு யோகா பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
யோகா நிகழ்ச்சி நடைபெற்ற ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகாபுரம் என்ற பகுதி வரை சுமார் 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் மற்றும் சாலையையொட்டிய பகுதிகளில் யோகா பயிற்சிகள் செய்ய அரங்குகளும், சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. இந்த பகுதிகளில் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்து யோகா செய்ததாக கணிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியுடன் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 லட்சத்து 20 ஆயிரம் பேரும் எளிதாக வந்து செல்வதற்கு விசாகப்பட்டினம் நகருக்குள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அந்த பஸ்கள் மூலம் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், பணிபுரிபவர்கள் மிக எளிதாக தங்களுக்கு ஒதுக்கப் ட்ட பகுதிக்கு சென்று வந்தனர்.
இவர்கள் யோகா பயிற்சி செய்வதற்கு தேவையான யோகா விரிப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதற்காக 5 லட்சம் யோகா விரிப்புகளை ஆந்திர மாநில அரசு விசாகப்பட்டினத்தில் நேற்று தயார் நிலையில் வைத்தது குறிப்பிடத்தக்கது.
விசாகப்பட்டினம் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்களது வருகையை பதிவு செய்தனர். இதற்காக தனி வலைதளம் உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் விசாகப்பட்டினத்தில் இன்று அதிகாலை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா கூறி இருந்ததால் யோகா பயிற்சிக்கான மாற்று ஏற்பாடுகளையும் ஆந்திர அரசு செய்து இருந்தது.
3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுடன் பிரதமர் மோடி ஒரே பகுதியில் இருந்ததால் விசாகப்பட்டினத்தில் ஆர்.கே. கடற்கரை பகுதியில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. யோகா பயிற்சி நடைபெற்ற 26 கிலோ மீட்டர் தொலைவும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு படையும் கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டு இருந்தது.
அந்த 26 கிலோ மீட்டர் தூரத்துக்கும் சாலையின் இரு பகுதிகளிலும் 1,200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பார்வையாளர்கள் கண்காணிக்கப்பட்டனர். அந்த பகுதியில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
யோகா நிகழ்ச்சியை சமூக விரோதிகள் சீர்குலைத்து விடக்கூடாது என்பதற்காக விசாகப்பட்டினத்தில் உயர் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட்டு இருந்தது.
- இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 8 லட்சம் இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- விசாகப்பட்டினத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்
சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் யோகா பயிற்சிக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 8 லட்சம் இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் எல்லாம் காலை முதல் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது. யோகா நிகழ்ச்சியில் பெருந்திரளான மக்களும் பங்கேற்று யோகா செய்தனர்.
இந்த யோகா நிகழ்ச்சியை மிகப்பிரமாண்டமாக நடத்துவதற்கு, ஆந்திர மாநில அரசு ஏற்பாடு செய்து இருந்தது. ஆந்திராவில் இன்று 3 லட்சம் பேர் பங்கேற்கும் கின்னஸ் சாதனை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இதையடுத்து பொதுமக்களுடன் இணைந்து அவர் யோகாசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பங்கேற்றார்.
- சர்வதேச யோகாசன தினத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள்.
- யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை.
உலகில் உள்ள 191 நாடுகளில் 11-வது சா்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.
சா்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சர்வதேச யோகாசன தினத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள். யோகா இன்று முழு உலகத்தையும் இணைத்துள்ளது பெருமைக்குரியது, மகிழ்ச்சி தருகிறது. யோகா அனைவருக்குமானது. அதற்கு எல்லைகள் கிடையாது.
யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. விசாகப்பட்டினத்தில் இந்த ஆண்டு யோகா தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி விசாகப்பட்டினத்தில் நடந்த பிரமாண்டமான யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்த பிறகு அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஐ.நா. சபை அறிவித்ததால் 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகாவை உலகம் முழுக்க இந்தியா கொண்டு சென்று இருக்கிறது. இதன் மூலம் உலகின் பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்து இருக்கிறது.
நாம் ஒவ்வொருவரும் தனி மனிதர்கள் அல்ல. இயற்கையோடு இணைந்து வாழ வேண்டிய ஒரு அங்கமாக இருக்கிறோம். அந்த வகையில் உலகம் முழுக்க சென்றுள்ள யோகா பயிற்சி மக்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது.
இன்று யோகா உலகத்தையே இணைத்து இருக்கிறது. உலக மக்களை ஒற்றுமையாக இருக்க செய்ய யோகா வழிவகுக்கிறது. இதை நினைத்து பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கி றது. யோகா மூலம் உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும்.
தற்போது உலகில் ஆங்காங்கே மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் தீர்த்து வைக்கும் மிகப்பெரிய ஆயுதமாக யோகா திகழ்கிறது. இந்தியாவில் பல கோடி மக்களின் வாழ்க்கையை யோகா மாற்றி உள்ளது.
யோகா பயிற்சி செய்ய வயது, அனுபவம் என்று எதுவும் தேவையில்லை. யோகாவுக்கு எல்லைகளே கிடையாது. அதனால்தான் அது உலகம் முழுக்க தனது சிறகை விரித்துள்ளது. உலக மக்களை இணைக்கும் பாலமாக அது மாறி வருகிறது.
யோகா பயிற்சி உலகில் அமைதி நிலவுவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் யோகா பயிற்சி சக்தி வாய்ந்த ஆயுதமாகும். யோகா செய்வதற்கு எந்த பின்னணியும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. திறன் இருந்தால் எல்லோரும் யோகா பயிற்சி செய்யலாம்.
இன்று உலகை இணைத்துள்ள யோகாவை பல கோடி மக்கள் தினமும் மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள். இது உலக மக்களுக்கு இந்தியா கொடுத்த பரிசும், அருமருந்தும் என்று சொல்லலாம். அந்த வகையில் நாம் யோகா பயிற்சியை புரட்சிகரமான ஒன்றாக மாற்றி இருக்கிறோம்.
யோகா பயிற்சி செய்யாதவர்கள் இன்று முதல் அந்த பயிற்சியை செய்ய தொடங்குங்கள். ஏற்கனவே நான் மனதின் குரல் நிகழ்ச்சியில் உடல் பருமன் பற்றி பேசி இருக்கிறேன். உணவில் எண்ணெய் சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறேன்.
இப்போது யோகா தினத்தை முன்னிட்டு நீங்கள் ஒவ்வொருவரும் தினமும் யோகா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கடந்த 10 ஆண்டுகளாக உலகம் முழுக்க பரவி வரும் யோகா பயிற்சியை நான் பார்த்துதான் வருகிறேன். அது என் மனதில் நிறைய மாற்றங்களையும், ஆச்சரியங்களையும் தருகிறது. 2015-ம் ஆண்டே மிக குறுகிய நாட்களில் 175 நாடுகளுக்கு யோகா பயிற்சியை கொண்டு சென்று சேர்த்தோம்.
2018-ம் ஆண்டு உலகம் முழுக்க சுமார் 10 கோடி பேர் ஜூன் 21-ந்தேதி யோகா பயிற்சி செய்தார்கள். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை சுமார் 25 கோடியாக அதிகரித்து சாதனை படைத்தது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும்.
இப்படி உலகம் முழுக்க யோகா செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இது உலகம் முழுவதும் ஒற்றுமையையும், ஆதரவையும் நிச்சயம் மேம்படுத்தும். இது சாதாரண செயல் அல்ல.
யோகா செய்தால் மனதில் இருக்கும் அழுத்தம் குறையும். ஈகோவை குறைக்கும். மனதில் அமைதியையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும். இத்தகைய சக்தி வாய்ந்த யோகாவை அவசியம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.
யோகா என்பது நமது மனதில் சமநிலையை கொண்டு வருவதற்கான ஒரு அற்புதமான பட்டன் ஆகும். இடைவெளியை ஏற்படுத்தி தரும் அந்த பட்டனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
- கோவில் பிரசாதங்கள் தயாரிப்பதற்கான பொருட்களை பரிசோதனை செய்ய ஆய்வகம் உருவாக்க திட்டம்.
- பெங்களூருவின் முக்கியப் பகுதியில் ஸ்ரீவாரி கோவில் கட்ட திருப்பதி தேவஸ்தான போர்டு திட்டம்.
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் ரேணிகுண்டா விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தின் பெயரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வதேச விமான நிலையம் (Sri Venkateswara International Airport) எனப் பெயர் மாற்ற என திருப்பதி தேவஸ்தானம் போர்டு இந்திய விமான போக்குவரத்துத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவலை தேவஸ்தானம் போர்டு தலைவர் பி.ஆர். நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும், கர்நாடக அரசின் நில ஒதுக்கீடு நிலுவையில் உள்ள நிலையில், பெங்களூருவின் முக்கியப் பகுதியில் ஸ்ரீவாரி கோவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் குமார சுவாமி, திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு 100 மின்சார பேருந்துகள் வழங்க ஒப்புக்கொண்டுள்ளார். திருப்பதியில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து கோவில் பிரசாதங்களுக்கு பயன்படுத்தப்படும் நெய், தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை பரிசோதனை செய்ய ஆய்வகம் உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
- ஆளும் தெலுங்கு தேசம் கட்சி (TDP) உறுப்பினர் எஸ். மணிகப்பா கைதுசெய்யப்பட்டார்.
- மணிகப்பா உடன், அவரது மனைவி மற்றும் அவரது மனைவியின் மைத்துனியும் சிரிஷாவை தாக்கியுள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் நாராயணபுரம் கிராமத்தில், கணவர் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால், மனைவியை மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆளும் தெலுங்கு தேசம் கட்சி (TDP) உறுப்பினர் எஸ். மணிகப்பா என்பவர், 28 வயதான சிரிஷா என்பவரை, அவரது இரண்டு குழந்தைகள் முன்னிலையில் வீட்டிலிருந்து இழுத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்து அடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சிரிஷாவின் கணவர் ஆர். திம்மப்பா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மணிகப்பாவிடம் ரூ.80,000 கடன் வாங்கியுள்ளார். திம்மப்பா பெங்களூரு சென்றிருந்த நிலையில், தவணைகள் நிறுத்தப்பட்டதால், சிரிஷாவை தாக்கியுள்ளனர்.
மணிகப்பா உடன், அவரது மனைவி மற்றும் அவரது மனைவியின் மைத்துனியும் சிரிஷாவை தாக்கியுள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, மணிகப்பா உட்பட ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் அதிகபட்சமாக 92 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- வெள்ளிக்கிழமைகளில் 60 முதல் 65 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்து வந்தனர்.
திருப்பதி:
கோடை விடுமுறை முடிந்த பிறகும் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறையாமல் அதிகரித்து காணப்படுகிறது.
கடந்த மாதம் 15-ந் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.
திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் அதிகபட்சமாக 92 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வெள்ளிக்கிழமை தோறும் ஏழுமலையானுக்கு அபிஷேக சேவை நடைபெறுவது வழக்கம். அபிஷேக சேவை காரணமாக 3 மணி நேரத்திற்கு மேல் தரிசனம் நிறுத்தப்படுகிறது.
வெள்ளிக்கிழமைகளில் 60 முதல் 65 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்து வந்தனர்.
ஆனால் தற்போது கூடுதலாக 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய தேவஸ்தான அதிகாரிகள் ஊழியர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- ஆந்திர அரசு ‘தல்லிக்கு (தாய்) வந்தனம்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
- ஆந்திர அரசு ரூ.8,745 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 'சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் அறிவித்த மற்றொரு வாக்குறுதி இன்று முதல் அமலுக்கு வரும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆந்திர அரசு 'தல்லிக்கு (தாய்) வந்தனம்' என்ற பெயரில் புதிய திட்டத்தை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. இதன்படி, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை (இன்டர்மீடியட்) பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான தொகை மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
இந்த திட்டம் மூலம் 67,27,164 மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர். இதற்காக ஆந்திர அரசு ரூ.8,745 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
1-ம் வகுப்பு மற்றும் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு மட்டும், அவர்கள் பள்ளிகளில் சேர்ந்த பிறகு, அந்தந்த பள்ளிகளின் பதிவேட்டு பட்டியலின் அடிப்படையில் அவர்களின் தாயாருக்கு ரூ.15,000 பின்னர் வழங்கப்படும் எனவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசின் புதிய திட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் அம்மாவின் வங்கிக் கணக்குகளில் ரூ.15,000 கல்வி உதவித்தொகை செலுத்தும் நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 67 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர்.
- பெண்கள் இரவு நேர ஷிஃப்ட்களில் வேலை செய்வதற்கான விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
- கடந்த 11 ஆண்டுகளாக மோடி அரசு தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு நாள் வேலை நேரத்தை 9 மணிநேரத்தில் இருந்து 10 மணிநேரமாக உயர்த்துவது என சந்திரபாபு நாயுடு தலைமையிலான பாஜக கூட்டணி NDA அரசு முடிவெடுத்துள்ளது.
இது குறித்து தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கே. பார்த்தசாரதி கூறுகையில், "தொழிலாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சாதகமான வகையில் தொழிலாளர் சட்டங்களைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு 5 மணிநேர வேலைக்கு 1 மணிநேர ஓய்வு இருந்தது. இனி 6 மணிநேர வேலைக்கு ஒரு மணிநேர ஓய்வு வழங்கப்படும்" என்றார்.
மேலும், கூடுதல் நேரம் (overtime) வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட நேரம் 75 மணிநேரத்தில் இருந்து காலாண்டுக்கு 144 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தங்கள், முதலீட்டாளர்களை மாநிலத்திற்கு ஈர்க்கும் என்றும், தொழிலாளர் நலன்களுக்கு உகந்ததாகவும் இருக்கும் என்றும் பார்த்தசாரதி தெரிவித்தார்.
உலகமயமாக்கல் அதிகரித்து வருவதால், உலகளாவிய விதிகளுக்கு ஏற்ப இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார்.
பெண்கள் இரவு நேர ஷிஃப்ட்களில் வேலை செய்வதற்கான விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன. முன்பு பெண்கள் இரவு ஷிஃப்ட்களில் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. தற்போது, சம்மதம், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் பெண்கள் இரவு ஷிஃப்ட்களில் வேலை செய்யலாம்.
இது பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும், பாலின சமத்துவத்திற்கும், தொழில் வளர்ச்சிக்கும் உதவும் என்றார் அமைச்சர்.
அதேவேளையில், இந்த தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்கு CPI மாநிலச் செயலாளர் கே. ராமகிருஷ்ணா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் மாநில NDA அரசுகள் தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளைப் பின்பற்றுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
"கடந்த 11 ஆண்டுகளாக மோடி அரசு தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது" என்று ராமகிருஷ்ணா தெரிவித்தார்.
இந்த விதிகளை எதிர்த்து ஜூலை 9 ஆம் தேதி அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இதில் அனைத்து பிரிவினரும் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.
- படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்மகூர் அடுத்த வெங்கட்ராவ் பள்ளியை சேர்ந்த 8 பெண் தொழிலாளர்கள் தெல்ல பாடுவில் உள்ள புகையிலை தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். இன்று அதிகாலை ஆட்டோவில் வேலைக்கு சென்றனர். ஆத்மகூர் அடுத்த ஏ.எஸ்.பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதி விட்டு சென்றது.
இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 4 பெண் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஆட்டோ டிரைவர் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆத்மகூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனர்.
- ஒவ்வொரு 150 மீட்டர் தூரத்திற்கு ஒரு டிஜிட்டல் திரை அமைக்கப்பட உள்ளது.
- யோகாசன தினத்தில் ஆந்திரா முழுவதும் 20 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.
சர்வதேச யோகா தினம் வரும் ஜூன் 21-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்று ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்கரையில் இருந்து பீமிலி கடற்கரை வரை 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு யோகாசனம் நடைபெறுகிறது.
இதில் அனக்கா பள்ளி, அல்லூரி சீதாராம ராஜ், விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 5 லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
கின்னஸ் சாதனைக்காக இந்த யோகாசனம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மாநில மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தலைமை செயலாளர் கிருஷ்ணா பாபு கூறுகையில்:-
ஒவ்வொரு 150 மீட்டர் தூரத்திற்கு ஒரு டிஜிட்டல் திரை அமைக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திற்கு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. யோகாசன தினத்தில் ஆந்திரா முழுவதும் 20 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.
அவர்களுக்கு மாநில அரசு சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சில செயலிகளுக்கு ஒரு மார்க்கெட்டிங் குழு இருக்கும்.
- டேட்டிங் செயலிகள் மூலம் ஏமாற வேண்டாம்.
திருப்பதி:
சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டும் செயலிகளுக்குப் பிறகு டேட்டிங் செயலிகள் மிகவும் பிரபலமான மோசடிகளாக மாறி வருகிறது.
நீங்கள் தனியாக இருக்கிறீர்களா சலிப்பாக இருக்கிறதா நானும் தனியாக இருக்கிறேன். நாம் கொஞ்ச நேரம் பேசலாமா, ப்ளீஸ், என குண்டூரைச் சேர்ந்த வாலிபருக்கு ஒரு இளம்பெண் பேஸ்புக்கில் தகவல் அனுப்பினார்.
யோசிக்காமல் வாலிபர் டேட்டிங் செயலியை பதிவிறக்கம் செய்து அவளுடன் அரட்டை அடிக்கத் தொடங்கினார். இரவும் பகலும் எந்த வித்தியாசமும் இல்லை அவளுடன் அரட்டை அடிப்பதே வேலையாக நீடித்தது.
அவ்வப்போது வீடியோ அழைப்புகள் சின்னச் சின்னப் பேச்சுகளில் இருந்து தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது வரை பரிச்சயமானார்கள்.
ஒருநாள் என் அப்பாவுக்கு ஒரு விபத்து நடந்து விட்டது. நீங்கள் எனக்கு உதவ முடியுமா என்று இளம்பெண் கேட்டார்.
வாலிபர் சொத்து ஆவணங்களை அடமானம் வைத்தும் சில நண்பர்களிடமிருந்து கடன் வாங்கியும் இளம்பெண் குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளில் 10 லட்ச ரூபாயை தவணைகளாக அனுப்பி வைத்தார்.
அதன் பிறகு இளம்பெண்ணிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இறுதியில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வாலிபர் போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சைபர்கிரைம் போலீசார் கூறியதாவது:-
டேட்டிங் செயலிகளில் மணிக்கணக்கான அரட்டை, போதை தரும் பேச்சு மயக்கும் அழைப்பு, அவை உலகத்தையே மறக்கச் செய்கின்றன. கடைசியில் அதில் மூழ்கடித்து பணத்தை பறித்து விடுகின்றனர்.
சில செயலிகளுக்கு ஒரு மார்க்கெட்டிங் குழு இருக்கும். சிலர் இளம்பெண்களை செயலிகளில் பதிவு செய்ய வைத்து வேண்டுமென்றே ஏமாற்றுகிறார்கள்.
அவர்கள் முதலில் அரட்டையடிக்கத் தொடங்குவார்கள். படிப்படியாக அறிமுகம் குரல் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு முன்னேறுகிறது. சிலர் நிர்வாண அழைப்புகள் செய்து நிர்வாண புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இதைப் பதிவு செய்து அந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்தி மிரட்டி பணம் பறிக்கின்றனர். டேட்டிங் செயலிகள் மூலம் ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நான் அவரிடம் (மோடியிடம்) ஒரே ஒரு விஷயத்தைக் கேட்டுக் கொண்டேன்.
- ஊழல் செய்பவர்களை எளிதாகப் பிடிக்க முடியும்
ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.500 நோட்டை ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
கடப்பாவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது பேசிய சந்திரபாபு நாயுடு, ரூ. 500 நோட்டுகளை நிறுத்த வேண்டும்.
இப்போது அதிகமான மக்கள் டிஜிட்டல் பணத்தைப் பயன்படுத்துவதால், அனைத்து பெரிய நோட்டுகளையும் நீக்குவது ஊழலைக் குறைக்க உதவும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பிரதமர் மோடியிடம் டிஜிட்டல் நாணயம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்ததை நினைவு கூர்ந்தார்.
"நான் அவரிடம் (மோடியிடம்) ஒரே ஒரு விஷயத்தைக் கேட்டுக் கொண்டேன். இன்று, நீங்கள் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை ரத்து செய்துவிட்டு, புதிய ரூ.2,000 நோட்டை அறிமுகப்படுத்துகிறீர்கள். தேவைப்பட்டால், ரூ.500, ரூ.1,000 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை ரத்து செய்யுங்கள்.
டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்துங்கள்.ஊழல் செய்பவர்களை எளிதாகப் பிடிக்க முடியும்" என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
மேலும், பெரிய ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்பட்டால் மட்டுமே ஊழல் முடிவுக்கு வரும். மத்திய அரசு விரைவில் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயடு வலியுறுத்தினார்.






