என் மலர்
இந்தியா

ஆந்திராவில் தனியார் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் பணிநேரம் 10 மணிநேரமாக அதிகரிப்பு!
- பெண்கள் இரவு நேர ஷிஃப்ட்களில் வேலை செய்வதற்கான விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
- கடந்த 11 ஆண்டுகளாக மோடி அரசு தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு நாள் வேலை நேரத்தை 9 மணிநேரத்தில் இருந்து 10 மணிநேரமாக உயர்த்துவது என சந்திரபாபு நாயுடு தலைமையிலான பாஜக கூட்டணி NDA அரசு முடிவெடுத்துள்ளது.
இது குறித்து தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கே. பார்த்தசாரதி கூறுகையில், "தொழிலாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சாதகமான வகையில் தொழிலாளர் சட்டங்களைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்பு 5 மணிநேர வேலைக்கு 1 மணிநேர ஓய்வு இருந்தது. இனி 6 மணிநேர வேலைக்கு ஒரு மணிநேர ஓய்வு வழங்கப்படும்" என்றார்.
மேலும், கூடுதல் நேரம் (overtime) வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட நேரம் 75 மணிநேரத்தில் இருந்து காலாண்டுக்கு 144 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்தங்கள், முதலீட்டாளர்களை மாநிலத்திற்கு ஈர்க்கும் என்றும், தொழிலாளர் நலன்களுக்கு உகந்ததாகவும் இருக்கும் என்றும் பார்த்தசாரதி தெரிவித்தார்.
உலகமயமாக்கல் அதிகரித்து வருவதால், உலகளாவிய விதிகளுக்கு ஏற்ப இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாக அவர் கூறினார்.
பெண்கள் இரவு நேர ஷிஃப்ட்களில் வேலை செய்வதற்கான விதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன. முன்பு பெண்கள் இரவு ஷிஃப்ட்களில் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. தற்போது, சம்மதம், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் பெண்கள் இரவு ஷிஃப்ட்களில் வேலை செய்யலாம்.
இது பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கும், பாலின சமத்துவத்திற்கும், தொழில் வளர்ச்சிக்கும் உதவும் என்றார் அமைச்சர்.
அதேவேளையில், இந்த தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்கு CPI மாநிலச் செயலாளர் கே. ராமகிருஷ்ணா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் மாநில NDA அரசுகள் தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளைப் பின்பற்றுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
"கடந்த 11 ஆண்டுகளாக மோடி அரசு தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது" என்று ராமகிருஷ்ணா தெரிவித்தார்.
இந்த விதிகளை எதிர்த்து ஜூலை 9 ஆம் தேதி அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இதில் அனைத்து பிரிவினரும் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.






