என் மலர்tooltip icon

    இந்தியா

    விசாகப்பட்டினத்தில் பிரமாண்ட ஏற்பாடு - பிரதமர் மோடி தலைமையில் 3 லட்சம் பேர் யோகா பயிற்சி

    • தன்னுடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்த இளைஞர்களுடன் பிரதமர் மோடி சிறிது நேரம் கலந்துரையாடினார்.
    • 11-வது யோகா தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

    விசாகப்பட்டினம்:

    பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் யோகா கலையை உலக அளவில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். இதற்காக இந்தியா சார்பில் ஐ.நா. சபையிடம் வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று ஐ.நா. சபை அறிவித்தது. அதன்படி கடந்த 10 ஆண்டுகளாக ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    இந்த ஆண்டு உலகம் முழுவதும் 11-வது சர்வதேச யோகா தினம் இன்று (சனிக்கிழமை) காலை கொண்டாடப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு இந்த தினத்தை கொண்டாடும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 191 நாடுகளில் 1,300 இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்த இந்திய கலாச்சார தொடர்பு மையத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    யோகா கலை தோன்றிய இந்தியாவில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் யோகா நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இன்று நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.

    பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் ஏதாவது ஒரு நகரில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பதை வழக்கத்தில் வைத்துள்ளார். அதன்படி இன்று அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதற்காக அவர் நேற்று பீகார், ஒடிசா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இரவே விசாகப்பட்டினத்துக்கு வந்து தங்கி இருந்தார்.

    இன்று அதிகாலை 5.30 மணிக்கு அவர் விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரைக்கு வந்தார். அங்கு அவர் யோகா பயிற்சி செய்வதற்கு சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யோகா பயிற்சி செய்ய தயார் நிலையில் இருந்தனர்.

    காலை 6 மணிக்கு யோகா பயிற்சி தொடங்கியது. இளைஞர்களுடன் சேர்ந்து பிரதமர் மோடி யோகா பயிற்சி செய்தார். பல்வேறு வகையான யோகாசனங்களை அவர்கள் ஒருங்கிணைந்து செய்தனர். ஒவ்வொரு யோகாசனத்தின் போதும் பிரதமர் மோடி அமைதியான முறையில் செய்தார்.

    அவரை சுற்றி இருந்த இளைஞர்களும் யோகா பயிற்சியை நேர்த்தியுடன் செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் யோகா பயிற்சி நடைபெற்றது. பிரதமர் மோடியுடன் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

    யோகா பயிற்சி முடிந்ததும் பிரதமர் மோடி உரையாற்றினார். பிறகு அவர் தன்னுடன் சேர்ந்து யோகா பயிற்சி செய்த இளைஞர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார். முன்னதாக 11-வது யோகா தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு தபால் தலையையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.

    பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மிக பிரமாண்டமான யோகா நிகழ்ச்சியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இது உலக சாதனை புத்தகமான கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என்று தெரிகிறது. அதற்கு ஏற்ற வகையில் விசாகப்பட்டினத்தில் இன்று மிக விரிவான அளவுக்கு யோகா பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    யோகா நிகழ்ச்சி நடைபெற்ற ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகாபுரம் என்ற பகுதி வரை சுமார் 26 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் மற்றும் சாலையையொட்டிய பகுதிகளில் யோகா பயிற்சிகள் செய்ய அரங்குகளும், சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. இந்த பகுதிகளில் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்து யோகா செய்ததாக கணிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடியுடன் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 லட்சத்து 20 ஆயிரம் பேரும் எளிதாக வந்து செல்வதற்கு விசாகப்பட்டினம் நகருக்குள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அந்த பஸ்கள் மூலம் மாணவர்கள், பெண்கள், இளைஞர்கள், பணிபுரிபவர்கள் மிக எளிதாக தங்களுக்கு ஒதுக்கப் ட்ட பகுதிக்கு சென்று வந்தனர்.

    இவர்கள் யோகா பயிற்சி செய்வதற்கு தேவையான யோகா விரிப்புகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதற்காக 5 லட்சம் யோகா விரிப்புகளை ஆந்திர மாநில அரசு விசாகப்பட்டினத்தில் நேற்று தயார் நிலையில் வைத்தது குறிப்பிடத்தக்கது.

    விசாகப்பட்டினம் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தங்களது வருகையை பதிவு செய்தனர். இதற்காக தனி வலைதளம் உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும் விசாகப்பட்டினத்தில் இன்று அதிகாலை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலாகா கூறி இருந்ததால் யோகா பயிற்சிக்கான மாற்று ஏற்பாடுகளையும் ஆந்திர அரசு செய்து இருந்தது.

    3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுடன் பிரதமர் மோடி ஒரே பகுதியில் இருந்ததால் விசாகப்பட்டினத்தில் ஆர்.கே. கடற்கரை பகுதியில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. யோகா பயிற்சி நடைபெற்ற 26 கிலோ மீட்டர் தொலைவும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு படையும் கண்காணிப்பு வளையத்துக்குள் வைக்கப்பட்டு இருந்தது.

    அந்த 26 கிலோ மீட்டர் தூரத்துக்கும் சாலையின் இரு பகுதிகளிலும் 1,200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பார்வையாளர்கள் கண்காணிக்கப்பட்டனர். அந்த பகுதியில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    யோகா நிகழ்ச்சியை சமூக விரோதிகள் சீர்குலைத்து விடக்கூடாது என்பதற்காக விசாகப்பட்டினத்தில் உயர் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு மையமும் அமைக்கப்பட்டு இருந்தது.

    Next Story
    ×