என் மலர்tooltip icon

    இந்தியா

    யோகா இன்று முழு உலகத்தையும் இணைத்துள்ளது பெருமைக்குரியது - பிரதமர் மோடி
    X

    யோகா இன்று முழு உலகத்தையும் இணைத்துள்ளது பெருமைக்குரியது - பிரதமர் மோடி

    • சர்வதேச யோகாசன தினத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள்.
    • யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை.

    உலகில் உள்ள 191 நாடுகளில் 11-வது சா்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று நாடு முழுவதும் யோகா தின பயிற்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.

    சா்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    சர்வதேச யோகாசன தினத்தையொட்டி அனைவருக்கும் வாழ்த்துகள். யோகா இன்று முழு உலகத்தையும் இணைத்துள்ளது பெருமைக்குரியது, மகிழ்ச்சி தருகிறது. யோகா அனைவருக்குமானது. அதற்கு எல்லைகள் கிடையாது.

    யோகா வெறும் உடற்பயிற்சி அல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. விசாகப்பட்டினத்தில் இந்த ஆண்டு யோகா தின கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி விசாகப்பட்டினத்தில் நடந்த பிரமாண்டமான யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்த பிறகு அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்தியா கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஐ.நா. சபை அறிவித்ததால் 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யோகாவை உலகம் முழுக்க இந்தியா கொண்டு சென்று இருக்கிறது. இதன் மூலம் உலகின் பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்து இருக்கிறது.

    நாம் ஒவ்வொருவரும் தனி மனிதர்கள் அல்ல. இயற்கையோடு இணைந்து வாழ வேண்டிய ஒரு அங்கமாக இருக்கிறோம். அந்த வகையில் உலகம் முழுக்க சென்றுள்ள யோகா பயிற்சி மக்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒரு அங்கமாக மாறி இருக்கிறது.

    இன்று யோகா உலகத்தையே இணைத்து இருக்கிறது. உலக மக்களை ஒற்றுமையாக இருக்க செய்ய யோகா வழிவகுக்கிறது. இதை நினைத்து பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கி றது. யோகா மூலம் உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும்.

    தற்போது உலகில் ஆங்காங்கே மோதல்களும், கருத்து வேறுபாடுகளும் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் தீர்த்து வைக்கும் மிகப்பெரிய ஆயுதமாக யோகா திகழ்கிறது. இந்தியாவில் பல கோடி மக்களின் வாழ்க்கையை யோகா மாற்றி உள்ளது.

    யோகா பயிற்சி செய்ய வயது, அனுபவம் என்று எதுவும் தேவையில்லை. யோகாவுக்கு எல்லைகளே கிடையாது. அதனால்தான் அது உலகம் முழுக்க தனது சிறகை விரித்துள்ளது. உலக மக்களை இணைக்கும் பாலமாக அது மாறி வருகிறது.

    யோகா பயிற்சி உலகில் அமைதி நிலவுவதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் யோகா பயிற்சி சக்தி வாய்ந்த ஆயுதமாகும். யோகா செய்வதற்கு எந்த பின்னணியும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. திறன் இருந்தால் எல்லோரும் யோகா பயிற்சி செய்யலாம்.

    இன்று உலகை இணைத்துள்ள யோகாவை பல கோடி மக்கள் தினமும் மகிழ்ச்சியுடன் செய்கிறார்கள். இது உலக மக்களுக்கு இந்தியா கொடுத்த பரிசும், அருமருந்தும் என்று சொல்லலாம். அந்த வகையில் நாம் யோகா பயிற்சியை புரட்சிகரமான ஒன்றாக மாற்றி இருக்கிறோம்.

    யோகா பயிற்சி செய்யாதவர்கள் இன்று முதல் அந்த பயிற்சியை செய்ய தொடங்குங்கள். ஏற்கனவே நான் மனதின் குரல் நிகழ்ச்சியில் உடல் பருமன் பற்றி பேசி இருக்கிறேன். உணவில் எண்ணெய் சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறேன்.

    இப்போது யோகா தினத்தை முன்னிட்டு நீங்கள் ஒவ்வொருவரும் தினமும் யோகா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    கடந்த 10 ஆண்டுகளாக உலகம் முழுக்க பரவி வரும் யோகா பயிற்சியை நான் பார்த்துதான் வருகிறேன். அது என் மனதில் நிறைய மாற்றங்களையும், ஆச்சரியங்களையும் தருகிறது. 2015-ம் ஆண்டே மிக குறுகிய நாட்களில் 175 நாடுகளுக்கு யோகா பயிற்சியை கொண்டு சென்று சேர்த்தோம்.

    2018-ம் ஆண்டு உலகம் முழுக்க சுமார் 10 கோடி பேர் ஜூன் 21-ந்தேதி யோகா பயிற்சி செய்தார்கள். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை சுமார் 25 கோடியாக அதிகரித்து சாதனை படைத்தது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும்.

    இப்படி உலகம் முழுக்க யோகா செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இது உலகம் முழுவதும் ஒற்றுமையையும், ஆதரவையும் நிச்சயம் மேம்படுத்தும். இது சாதாரண செயல் அல்ல.

    யோகா செய்தால் மனதில் இருக்கும் அழுத்தம் குறையும். ஈகோவை குறைக்கும். மனதில் அமைதியையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும். இத்தகைய சக்தி வாய்ந்த யோகாவை அவசியம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

    யோகா என்பது நமது மனதில் சமநிலையை கொண்டு வருவதற்கான ஒரு அற்புதமான பட்டன் ஆகும். இடைவெளியை ஏற்படுத்தி தரும் அந்த பட்டனை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    Next Story
    ×