என் மலர்
இந்தியா
- தமிழ்நாடு துணை முதல்வர், எப்போதும் இனியவர்
- என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யாக கமல்ஹாசன், துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாடு துணை முதல்வர், எப்போதும் இனியவர், என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க.
பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.
- புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பனையூர் அலுவலகம் வந்தார்.
அ.தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைவதாக கூறப்பட்டது. செங்கோட்டையனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் இணைவதாக நேற்று முதல் தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில், கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பேருந்தில் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்காக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. சத்தியபாமா, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசானா, புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய பனையூர் அலுவலகம் வந்தார். இதற்கிடையே, செங்கோட்டையனும் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்தார். அவரை புஸ்சி ஆனந்த் வரவேற்று அழைத்து சென்றார்.
இதனை தொடர்ந்து, த.வெ.க. அலுவலகத்திற்கு தலைவர் விஜய், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதர் அர்ஜூனா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வருகை தந்தனர். இதன்பின் நடைபெற்ற இணைப்பு விழாவில் விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் இணைந்தனர்.
- அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
- தாய், தந்தையை கூட இன்னும் சந்திக்காமல் நேராக பெரியார் திடலுக்கு வந்தேன்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது 49-வது பிறந்தநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், பாதுகாவலர்களுக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உதயநிதி உரையாற்றினார். அவர் பேசுகையில்,
தாய், தந்தையை கூட இன்னும் சந்திக்காமல் நேராக பெரியார் திடலுக்கு வந்தேன்.
மூத்தவர்களாகிய உங்களை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக வந்துள்ளேன். கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன் என்று பேசினார்.
- படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு ‘லிங்க்' பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- பொறுப்பு ஆசிரியர் படம் திரையிடும் முன்பு அந்த படத்தை பார்க்க வேண்டும்.
சென்னை:
பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு மாதம் 'காக்கா முட்டை' எனும் தமிழ் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 2014-ல் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் சென்னையில் குடிசைவாழ் பகுதியில் வசிக்கும் 2 சிறுவர்கள் பற்றிய கதையாகும். இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு 'லிங்க்' பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதற்குரிய பாடவேளைகளில் படத்தை திரையிட வேண்டும். இந்த பணிகளை கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும். பொறுப்பு ஆசிரியர் படம் திரையிடும் முன்பு அந்த படத்தை பார்க்க வேண்டும். அதன்பின் கதைச் சுருக்கத்தையும் படித்து மாணவர்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும். இதுசார்ந்த வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும்.
மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான சூழலே கடந்த ஒரு வாரமாக நீடிக்கிறது. கடந்த 21-ந் தேதி விலை குறைந்திருந்த நிலையில், 22-ந் தேதி விலை அதிகரித்துகாணப்பட்டது.
அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 720-க்கும், ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 760-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் மீண்டும் ரூ.94 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,770-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.94,160 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
இருப்பினும் வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 180 ரூபாய்க்கும் கிலோவுக்கு நான்காயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
26-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.94,400
25-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,760
24-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,160
23-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040
22-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
26-11-2025- ஒரு கிராம் ரூ.176
25-11-2025- ஒரு கிராம் ரூ.174
24-11-2025- ஒரு கிராம் ரூ.171
23-11-2025- ஒரு கிராம் ரூ.172
22-11-2025- ஒரு கிராம் ரூ.172
- இறந்துபோன 2 கோடிக்கும் அதிகமானோரின் ஆதார் எண்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் செயலிழக்கச் செய்துள்ளது.
- செயலிழந்த எந்தவொரு ஆதார் எண்ணும் மற்றொரு நபருக்கு மீண்டும் ஒதுக்கப்பட மாட்டாது.
புதுடெல்லி:
ஆதார் தரவுத்தளத்தின் தொடர்ச்சியான துல்லியத்தன்மையைப் பராமரிக்க நாடு தழுவிய தூய்மைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இறந்துபோன 2 கோடிக்கும் அதிகமானோரின் ஆதார் எண்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் செயலிழக்கச் செய்துள்ளது.
செயலிழந்த எந்தவொரு ஆதார் எண்ணும் மற்றொரு நபருக்கு மீண்டும் ஒதுக்கப்பட மாட்டாது. இருப்பினும், ஒரு நபர் இறந்தால், அடையாள மோசடி செய்ய அல்லது நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக இத்தகைய ஆதார் எண்ணை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க ஆதார் எண் செயலிழக்கச் செய்யப்படுவது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார்.
- த.வெ.க.வில் இணைந்த பிறகு செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைகிறார். செங்கோட்டையனுடன் அவரது ஆதரவாளர்களும் இணைகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை த.வெ.கவினர் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சென்னை நீலாங்கரை அடுத்த பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்திற்கு செங்கோட்டையன் ஆதரவாளர்கள் வருகை தந்துள்ளனர்.
கோபிசெட்டிபாளையத்தில் இருந்து பேருந்தில் த.வெ.க. அலுவலகத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன் ஆதரவாளர்களை புஸ்சி ஆனந்தன் வரவேற்றார். இணைப்பு விழாவில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவர் விஜய் நீலாங்கரை இல்லத்தில் இருந்து பனையூர் அலுவலகத்துக்கு புறப்பட்டார்.
த.வெ.க.வில் இணைந்த பிறகு செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
- தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவானது.
- வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல், இலங்கையை ஒட்டிய பகுதிகளில் மேலும் வலுவடைந்து புயல் உருவாக வாய்ப்பு உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதும் ஏமன் நாடு பரிந்துரைத்த 'டிட்வா' என்ற பெயர் புயலுக்கு சூட்டப்பட உள்ளது. வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.
புயல் உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்காள விரிகுடா, இலங்கையை ஒட்டி உள்ள கடற்கரை வழியாக நகரும். புயல் உருவாகி தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது. புயலால் நாளை மறுநாள் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மகாலிங்கம் அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற வாசலில் தற்கொலை செய்துள்ளார்.
- காவலர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐகோர்ட் மதுரை கிளை வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் மகாலிங்கம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற வாசலில் தற்கொலை செய்துள்ளார்.
மதுரை மாவட்டம் எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் தனது தற்கொலைக்கு காரணம் யாரும் இல்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மகாலிங்கம் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்.
- முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களது புகழ் ஓங்குக!
தமிழ்நாடும் தலைவர் கலைஞரும் மிகவும் நேசித்த தலைவர்; என் மீது அன்பு காட்டியவர்!
பதவிகளைத் துச்சமாக நினைத்து, #SocialJustice-ஐ உயிர்க்கொள்கையாக மதித்தவர்!
தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது 2023-ஆம் ஆண்டு இதே நாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங் அவர்களின் முழுவுருவச் சிலை!
#EWS, #NEET என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் ஒன்றியத்தில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'Miss' செய்கிறோம்.
சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் விஸ்வநாத பிரதாப் சிங் அவர்களது நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன்! என்று கூறியுள்ளார்.
- வருகிற 28, 29, 30-ந் தேதிகளில் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
சென்னை:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வருகிற 28, 29, 30-ந் தேதிகளில் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இதற்கிடையே கனமழையை எதிர்கொள்வதற்கான ஆயத்த நடவடிக்கைகள் குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் நேற்று ஆய்வு செய்தார்.
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய உன்னதி ஹூடா 21-13, 21-18 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ் 21-12, 21-14 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான ஷ்ரேயா லீலேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.






