என் மலர்tooltip icon

    இந்தியா

    • இருளர் குடும்பத்தினர் கோவளம் சாலையில் உள்ள மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஓட்டல், ரிசார்ட், விடுதிகள் முடங்கினர்.

    மாமல்லபுரம்:

    வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள "டிட்வா" புயலின் தாக்கத்தால் நேற்று மாலை மாமல்லபுரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் காற்றுடன் மழை பெய்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மீனவர்கள் தங்களது படகுகள், மிஷின், வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனர்.

    கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் தென்பகுதி, பட்டிப்புலம் பகுதிகளில் கடற்கரை கரையோரம் குடில் அமைத்து தங்கியிருந்த இருளர் 120 குடும்பங்கள் பாதுகாப்பு இன்றி இருப்பதாக தகவலறிந்த, மாவட்ட கலெக்டர் சினேகா அவர்களை பாதுகாக்க உத்தரவிட்டார்.

    சப்-கலெக்டர் மாலதி ஹலென் தலைமையில் திருப்போரூர் தாசில்தார் சரவணன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் வாசுதேவன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து, அப்புறப்படுத்தி கோவளம் சாலையில் உள்ள முத்தமிழ் மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு மாமல்லபுரம் நகராட்சி ஆணையர், தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், துணைத்தலைவர் ராகவன் உள்ளிட்டோர் உணவுகள் வழங்கினர்.

    மாமல்லபுரத்தில் ஞாயிறு, விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகளவில் காணப்படும். டிட்வா புயல் காரணமாக தொடர் மழை பெய்து வருவதால் மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பகுதிகளான கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் ஓட்டல், ரிசார்ட், விடுதிகள் முடங்கினர். கடற்கரை சாலையோர கடைகள் மற்றும் அரசு கைவினை பொருட்கள் கடை இருக்கும் ஐந்துரதம் வளாகங்களில் உள்ள கடைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

    • உழவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு அடுத்தடுத்து செய்து வரும் துரோகங்கள் கண்டிக்கத்தக்கவை.
    • காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்கள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    டிட்வா புயல் காரணமாக காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கொட்டித் தீர்த்து வரும் மழையால் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. நன்றாக வளர்ந்து கதிர் வைக்கும் நிலையில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்திருப்பதால் உழவர்கள் கவலையும், வேதனையும் அடைந்துள்ளனர்.

    பருவமழையில் பயிர்கள் சேதமடைவதால் பாதிக்கப்படும் உழவர்களுக்கு இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு அடுத்தடுத்து செய்து வரும் துரோகங்கள் கண்டிக்கத்தக்கவை. திமுக ஆட்சிக்கு வந்து கடந்த நான்கரை ஆண்டுகளில் பல முறை பருவமழையால் உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருமுறை கூட அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை; பல முறை அவர்களுக்கு இழப்பீடே வழங்கப்படவில்லை. ஏனோ அந்த அளவுக்கு உழவர்களை திமுக அரசு பழிவாங்கி வருகிறது.

    கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், அப்பயிர்களுக்கு இன்று வரை இழப்பீடு அறிவிக்கப்படவில்லை.

    நடப்பாண்டின் நிலை இதுவென்றால், கடந்த ஆண்டின் நிலைமை இன்னும் மோசமாகும். காவிரி பாசன மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் பெய்த கனமழையில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிர்கள் சேதமடைந்தன. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள் மொத்தம் 1.05 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றுக்கு ரூ.71.79 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு பரிந்துரைத்த பிறகும் கூட பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை.

    கடந்த ஆண்டுகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.39, ரூ.52, ரூ.90 என நிவாரணம் மற்றும் காப்பீட்டுத் தொகையை வாரி வழங்கிய பெருமை திமுக ஆட்சியாளர்களுக்கு உண்டு. தமிழ்நாடு கடுமையான வறட்சியைச் சந்தித்த காலத்தில் உழவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை விட இந்த திமுக ஆட்சியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால் காவிரி பாசன மாவட்டங்களின் உழவர்கள் பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், அதைப் பற்றி திமுக அரசு கொஞ்சமும் கவலைப்படவில்லை.

    கடந்த ஆண்டுகளிலும், நடப்பு வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்திலும் நெற்பயிர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யாமல் உழவர்களை ஏமாற்றிய திமுக அரசு மீண்டும் ஒருமுறை துரோகம் செய்யக்கூடாது. டிட்வா புயல் - மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர்.
    • பொதுமக்களின் விண்ணப்பங்களை BLO-க்கள் டிச.15-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்று வருகின்றன. கடந்த 4-ந்தேதி தொடங்கிய கணக்கெடுப்பு பணி டிசம்பர் 4-ந்தேதியுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று தற்போதைய வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தினை வழங்கி வருகின்றனர். 

    இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    பொதுமக்களின் படிவத்தை BLO-க்கள் டிச.15-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    வரைவு வாக்காளர் பட்டியல் டிச.16-ந்தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.14-ந்தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • விடுமுறை நாள் என்பதால் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.
    • கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. மேலும் சுபமுகூர்த்த தினங்களில் ஏராளமான திருமணங்களும் நடைபெறுகிறது.

    இந்நிலையில் இன்று விடுமுறை நாள் என்பதால் கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.

    வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுப முகூர்த்த தின நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வார்கள். மேலும் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் டிட்வா புயல் மற்றும் தொடர் மழை பெய்து வந்ததால், வழக்கத்தை விட சற்று குறைவான பக்தர்களே கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். 

    • இலங்கை நிலப்பரப்பின் ஊடுருவலில் இருக்கும்போது அதன் தாக்கத்தால் நமக்கு மழை கொடுக்கக்கூடிய வகையில் அமையவில்லை.
    • வானிலை காரணிகள் மாறியதால் டிட்வா புயலால் கரைப்பகுதியில் மழை மேகங்களை உருவாக்க முடியவில்லை.

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 180 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    தற்போது புயலின் வேகம் அதிகரித்து 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. டிட்வா புயல் வேதாரண்யத்தில் இருந்து 140 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு - புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக நகர வாய்ப்பு உள்ளது. பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் முறையே 60 கி.மீ. மற்றும் 30 கி.மீ. தூரத்தில் மையம் கொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

    இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக எதிர்பார்த்த மழை பெய்யாதது ஏன்? என்று தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * டிட்வா புயல் இலங்கை நிலப்பரப்பின் ஊடுருவலில் இருக்கும்போது அதன் தாக்கத்தால் நமக்கு மழை கொடுக்கக்கூடிய வகையில் அமையவில்லை.

    * இலங்கையில் இருந்து வெளியே கடல் பகுதிக்கு வந்த பிறகு வானிலை காரணிகள் மாறியதால் டிட்வா புயலால் கரைப்பகுதியில் மழை மேகங்களை உருவாக்க முடியவில்லை.

    * வறண்ட காற்றின் ஊடுருவல் மற்றும் காற்று முறிவே மழை குறைந்ததற்கு காரணம்.

    * தற்போதைய நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை படிப்படியாக குறையும். இருந்த போதிலும் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளுநர் மாளிகைகள் 'ராஜ்பவன்' என்று அழைக்கப்படுகிறது.
    • நமது ஆளுநரின் இந்த முயற்சி ராஜ்பவன் வரலாற்றில் ஒரு மைல்கல்.

    சென்னை:

    இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுநர் மாளிகைகள் 'ராஜ் பவன்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் யூனியன் பிரதேசங்களில் உள்ள துணை நிலை ஆளுனர்களின் மாளிகை 'ராஜ் நிவாஸ்' என்று அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஆளுநர் மாளிகையின் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். இந்த பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

    அதில் இந்தியா முழுவதும் உள்ள ராஜ்பவன்கள் 'லோக் பவன்' என்றும், ராஜ் நிவாஸ்கள் 'லோக் நிவாஸ்' என்றும் ஒரே மாதிரியாக பெயர் மாற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதில் 'லோக் பவன்' என்பது தமிழில் 'மக்கள் பவன்' என்று பொருள்படும். இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் ராஜ் பவன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர் பாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஆளுநர் மாளிகைகள் 'ராஜ்பவன்' என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜனாதிபதி மாளிகையில் நடந்த ஆளுநர்கள் மாநாட்டில் தலைமையேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி 'ராஜ்பவன்' என்பதை 'மக்கள் பவன்' என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

    அதை அனைவரும் வரவேற்ற நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகமும் அதை ஏற்று அதிகாரபூர்வமாக 'ராஜ்பவன்' என்பதை இனி 'மக்கள் பவன்' என அனைத்து மாநிலங்களும் மாற்றி அழைக்க உத்தரவிட்டுள்ளது.

    நமது ஆளுநரின் இந்த முயற்சி ராஜ்பவன் வரலாற்றில் ஒரு மைல்கல். அவரது கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய அரசுக்கு நன்றி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இலங்கையில் சிக்கி தவிப்பவர்கள் இன்று தமிழ்நாட்டிற்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.
    • 38 நிவாரண மையங்களில் 2,393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 220 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    * கடலூர், விழுப்புரம், சென்னையில் அதிக மழை இருக்கும் என எதிர்பார்த்தோம்.

    * புயல் காரணமாக எதிர்பார்த்த அளவிற்கு மழை இதுவரை பெய்யவில்லை.

    * இலங்கையில் சிக்கி தவித்து வருபவர்களை அழைத்து வருவதற்கான பணிகள் நடக்கிறது.

    * இலங்கையில் சிக்கி தவிப்பவர்கள் இன்று தமிழ்நாட்டிற்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.

    * தற்போது பெய்த மழையால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    * தூத்துக்குடி, தஞ்சையில் 2 பேர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளனர்.

    * மயிலாடுதுறையில் 20 வயது இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

    * தமிழகத்தில் பெய்த மழையால் 56 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

    * புயலின் தாக்கம் குறித்து மதியம் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறும்.

    * 38 நிவாரண மையங்களில் 2,393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
    • கடலில் இருந்து மேலும் விலகி சென்னைக்கு 70 கி.மீ. தூரம் வரை மட்டும் டிட்வா புயல் நகரும்.

    வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 220 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தாலும் மழை குறையும்.

    மழை குறைவாக பொழிந்தாலும் காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை, காற்றுக்கு வாய்ப்பு உள்ளது.

    இன்று மாலை தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையில் இருந்து குறைந்தபட்சம் 70-30 கி.மீ. தொலையில் மையம் கொண்டிருக்கும்.

    கடலில் இருந்து மேலும் விலகி சென்னைக்கு 70 கி.மீ. தூரம் வரை மட்டும் டிட்வா புயல் நகரும். அதற்கு பிறகு டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக படிப்படியாக வலுவிழக்கும். இன்று இரவுக்குள் டிட்வா புயல் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
    • பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ள்ளது.

    கொடைக்கானலில் கடும் குளிருடன் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நேற்று வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களான தூண்பாறை, மோயர்பாய்ண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட், பேரிஜம் ஏரி உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்ற போதும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி இன்று 2-வது நாளாக சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

    மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

    மற்ற சுற்றுலா தலங்களான பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    பொதுமக்களும் வெளியே நடமாடுவதை தவிர்த்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, கும்பக்கரை அருவி, சுருளி அருவி ஆகியவற்றிலும் சுற்றுலாப் பயணிகள் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஆண்டிபட்டி பகுதியில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சக்கம்பட்டியை சேர்ந்த மணி (வயது60) என்பவர் நடந்து சென்றபோது தவறி கால்வாயில் விழுந்து பலியானார். இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் அதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதே போல் வருசநாடு மலைப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் அனுமதிக்கப்பட்ட போதும் குறைந்த அளவே சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.

    • பூப்பறித்து விட்டு 3 பேரும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
    • சம்பவ இடத்திலேயே அருள் செல்வபிரபு, உஷா, பிளஸ்சி ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

    சுரண்டை:

    தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாத புரத்தை சேர்ந்தவர் அருள் செல்வபிரபு (வயது 50). இவர் சுரண்டை பகுதியில் மெட்டல் பாலீஷ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி உஷா (40). இவர் நர்சிங் முடித்து விட்டு மெடிக்கல் வைத்து நடத்தி வந்தார்.

    மேலும் சுரண்டை நகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராகவும் இருந்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் சுரண்டையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் ரெட்டைகுளம் பகுதியில் இவர்களுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. தோட்டத்தில் தற்போது பூ பயிரிடப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை அருள் செல்வபிரபு தனது மனைவி மற்றும் மனைவியின் தங்கையான அதே பகுதியை சேர்ந்த பிளஸ்சி (35) ஆகியோரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    அங்கு பூப்பறித்து விட்டு 3 பேரும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். ரெட்டைகுளம் விலக்கு பகுதியில் வந்தபோது பின்னால் வந்த காய்கறி லாரியின் முன்பக்க பகுதி மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் 3 பேரும் சாலையில் விழுந்தனர். அப்போது மோதிய லாரியின் பின்பக்க டயர் 3 பேர் மீதும் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அருள் செல்வபிரபு, உஷா, பிளஸ்சி ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தகவல் அறிந்து சுரண்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேர் உடலையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக 3 பேரும் விபத்தில் பலியான செய்தியை கேட்டு அவர்களது உறவினர்கள் அங்கு சென்று உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

    • யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி இடம் பெற்றிருந்தனர்.
    • 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது.

    நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் ஏ.ஜே.எல். நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது.

    2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'யங் இந்தியன்' நிறுவனத்தில் இயக்குநா்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா்.

    இதையடுத்து ஏ.ஜே.எல். நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் முடிவு செய்தது. அதைத் தொடா்ந்து அந்தக் கடன் தொகைக்காக ஏ.ஜே.எல்.நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்றதா என்று கண்டறிய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

    அதில் சோனியாவுக்கும், ராகுலுக்கும் யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் உள்ளன. அவா்களின் மேற்பாா்வையில் ஏ.ஜே.எல். நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடன் அளித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் சோனியா ராகுல் உள்ளிட்டோர் ரூ.988 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.

    குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவா்களான மோதிலால் வோரா, ஆஸ்காா் பொ்னாண்டஸ், யங் இந்தியன் நிறுவன நிா்வாகிகள் சுமன் துபே, சாம் பிட்ரோடா உள்ளிட்டோர், ஒரு தனியாா் நிறுவனம் மற்றும் யங் இந்தியன் நிறுவனம் மீதும் சதி மற்றும் பண முறைகேடு குற்றச்சாட்டை அமலாக்கத்துறை முன்வைத்தது.

    இந்த குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பாக டெல்லி கோர்ட்டில் தொடா் விசாரணையை மேற்கொண் டது. அமலாக்கத் துறையிடம் சில விளக்கங்களையும் கேட்டது.

    இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பான உத்தரவை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

    ராகுல், சோனியா மீது புதிய வழக்கு

    இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல்காந்தி, சோனியா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி கோர்ட்டில் இந்த வழக்கை ஒத்திவைத்த மறுநாள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவினர் ராகுல் காந்தி, சோனியா மற்றும் 6 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.

    • புயலின் மையப்பகுதி கடலோரப் பகுதியில் இருந்து அதிகபட்சமாக 25 கி.மீ. தூரத்திற்கு நெருங்கி வரும்.
    • டிட்வா புயல் சென்னையை நெருங்கும்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கவும் வாய்ப்பு உள்ளது.

    தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் சென்னையில் இருந்து 220 கி.மீ. தொலைவிலும் வேதாரண்யத்திலிருந்து 120 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    டிட்வா புயல் கடந்த 6 மணி நேரமாக 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் வடக்கு - வடமேற்காக நகர்ந்து வடதமிழகத்தை நெருங்கும். டிட்வா புயல் கரையை தொடுவதற்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயலின் மையப்பகுதி கடலோரப் பகுதியில் இருந்து அதிகபட்சமாக 25 கி.மீ. தூரத்திற்கு நெருங்கி வரும். டிட்வா புயல் இன்று மாலை வலுவிழக்கக்கூடும். டிட்வா புயல் சென்னையை நெருங்கும்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் நேற்று 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில் தற்போது கடலூர், புதுவை துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    கடலூர், நாகை, புதுவை, காரைக்கால் துறைமுகங்களில் இடதுபுறம் புயல் கடப்பதை குறிக்கும் வகையில் 5-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    ×