என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நூல்களைத் தேர்ந்து எடுத்துப் பரிசாக வழங்குங்கள். அறிவியல், விளையாட்டு போன்ற அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் எந்த நூலாகவும் இருக்கலாம்.
    உங்கள் குழந்தைகளின் பிறந்த நாளை ஏன் சிறப்பாகக் கொண்டாடுகிறீர்கள்? நாள்தோறும் அவர்களைப் பொறுப்பாகக் கவனிக்கிறோம் என்று சும்மா இருந்து விடுகிறீர்களா? அன்று உங்களுக்கு என்ன வேலை இருந்தாலும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பது இல்லையா? அது போலக் கூடுதல் கவனம் செலுத்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.

    உலக இளைஞர் புத்தக இயக்கம், உலகக் குழந்தைகள் புத்தகத் தினத்தை கொண்டாடத் திட்டமிட்டது. குழந்தைகளுக்காகத் தங்கள் நல்வாழ்வை அர்ப்பணித்த எண்ணற்றோர் அவர்கள் நினைவிற்கு வந்தனர். அவர்களில் முதன்மையானவராக டென்மார்க்கைச் சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன் இருந்தார். அவர் பிறந்த ஏப்ரல் 2-ந்தேதியையே உலகக் குழந்தைகள் புத்தகத் தினமாக கொண்டாட முடிவு செய்தனர்.

    அதன்படி, 1967-ம் ஆண்டில் இருந்து இத்திருநாள் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் உலகளாவிய அளவில் குழந்தைகளுக்குப் பல்வேறு போட்டிகளை அறிவித்துப் பரிசுகளை வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தலைப்பைத் தந்து அது தொடர்பான படைப்புகளுக்குப் பரிசு வழங்குகின்றனர்.

    வாசிப்பு பழக்கத்தின் இன்றியமையாமையைக் குழந்தைகள் உணரச் செய்வது, அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் புத்தகங்கள் எத்தகைய பங்கு வகிக்கின்றன என்பதை அறியச் செய்வது இந்த திருநாளின் நோக்கமாகும்.

    இந்த நாளில் நாம் குழந்தைகளாக இருந்ததை எண்ணிப் பார்க்க வேண்டும். எந்தெந்தக் கதைகள் நம் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து உள்ளன. அவை வாழ்க்கைக்கு எப்படி எல்லாம் பயன்பட்டன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    நம் உணர்வை குழந்தைகளிடம் சொல்லி அவர்களின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். நல்ல புத்தகங்களைத் தேர்ந்து எடுத்து குழந்தைகளுக்குப் பரிசு தரலாம். படிக்கச் சொல்லி அவர்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்தலாம்.



    நம் குழந்தைகள் நற்பண்பாளர்களாகத் திகழ வேண்டும். எல்லோரிடமும் அன்பாகப் பழக வேண்டும். உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். வீரமும் துணிவும் கொண்டவர்களாக விளங்க வேண்டும். நினைத்ததை நிறைவேற்றும் விடாமுயற்சி கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

    நம் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பெரும்பங்கு புத்தகங்களுக்கு உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே, நற்பண்புகளை வளர்க்கும் நூல்களைத் தேர்வு செய்து படிக்க கொடுக்கலாம்.

    வண்ணப் படங்களுடன் பெரிய எழுத்தில் உள்ள நூல்களைக் குழந்தைகள் விரும்பிப் படிப்பார்கள். தமிழில் அப்படிப்பட்ட நூல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இவ்வகை நூல்கள் குழந்தைகளின் கதை சொல்லும் திறனையும் கற்பனை வளத்தையும் அதிகப்படுத்தும்.

    குழந்தைக் கதைகள் என்றாலே நம்முடைய நினைவிற்கு வருவது தெனாலிராமன் கதைகளே. விக்கிரமாதித்தன் கதைகளை குழந்தைகளின் எல்லை தாண்டியதாகவும், வன்முறையைத் தூண்டுபவையாகவும் கருதுகிறோம்.

    குழந்தைகளிடம் கதை கேட்டால் பெரும்பாலானோர் தெனாலிராமன் குதிரை வளர்த்த கதையும், பூனை வளர்த்த கதையும் சொல்வார்கள். உயிரினங்களைத் துன்புறுத்தி இன்பம் காணும் கதைகள் அவை. இவற்றைப் படிக்கும் குழந்தைகள் உயிர்களிடம் எப்படி அன்பு காட்டும்?

    மற்றவை பெரும்பாலானவை பொய் சொல்லி ஏமாற்றுவது, திருடிவிட்டுத் தப்புவது போன்ற கதைகளாகவே உள்ளன. எதிர்மறைச் சிந்தனையை வளர்க்கும் இந்தக் கதைகளைக் குழந்தைகள் படிக்கலாமா?

    மாறாக, விக்கிரமாதித்தன் கதைகள் வீரம், நேர்மை, துணிவு, உயிர்களிடத்து அன்பு காட்டுதல், உயிரைக் கொடுத்துப் பிறரைக் காப்பாற்றத் துணிதல், செயற்கரும் செயல் செய்தல் போன்ற உயர்ந்த கருத்துகளைச் சொல்கின்றன. கிளி துன்பப்படுவதைப் பார்த்து இரக்கம் கொண்டு தானும் கிளியாக மாறி அதன் துன்பத்தைப் போக்கும் விக்கிரமாதித்தன் செயல் குழந்தைகள் உள்ளத்தில் அன்பை விதைக்கும். அதில் வரும் புதிர் கதைகள் குழந்தைகளைச் சிந்திக்கத் தூண்டும்.

    உங்கள் குழந்தைகளுக்கு நல்ல நூல்களைத் தேர்ந்து எடுத்துப் பரிசாக வழங்குங்கள். அறிவியல், விளையாட்டு போன்ற அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் எந்த நூலாகவும் இருக்கலாம். அந்த நூல்கள் அவர்கள் மேன்மேலும் வளரத் தூண்டுதலாக அமையும். எதிர்காலத்தில் அவர்கள் சிறந்து விளங்கி உங்களுக்குப் பெருமை சேர்ப்பார்கள்.

    பேராசிரியர் எ.சோதி
    அன்றாடம் நாம் சாப்பிட்டு வரும் சில உணவுகளின் மூலம் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. இங்கு அப்படி எந்த உணவுகள் எல்லாம் மலச்சிக்கலை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம்.
    மலச்சிக்கல் ஏற்படுவதற்கு தண்ணீர் குறைவாக குடிப்பது, உட்கார்ந்தே பணியாற்றுகின்ற வாழ்க்கை மற்றும் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவுகள் தான் காரணமாகும். அதே சமயம் அன்றாடம் சாப்பிட்டு வரும் சில உணவுகளின் மூலமும் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புள்ளது. அதுவும் நாம் எதிர்பாராத சில உணவுகள் நமக்கு மலச்சிக்கல் தொல்லையை ஏற்படுத்தவும் செய்யும். இங்கு அப்படி எந்த உணவுகள் எல்லாம் மலச்சிக்கலை ஏற்படுத்தும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

    * அதிகப்படியான அலுவலக வேலையால் எளிதில் சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு கடைகளில் உறைய வைக்கப்பட்ட உணவுகள் விற்கப்படுகின்றன. ஆனால் அந்த உணவுப் பொருட்களில் நார்ச்சத்து குறைவாக இருப்பதோடு, கொழுப்புக்களும் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, அவற்றை அடிக்கடி எடுத்து வருவதன் மூலம், செரிமானம் சீராக நடைபெறாமல், மலச்சிக்கல் ஏற்படுகிறது.

    * வாழைப்பழங்கள் கூட மலச்சிக்கலை உண்டாக்கும். அதுவும் அது கனிந்திருக்கும் நிலையைப் பொருத்தது. வாழைப்பழமானது ஓரளவு காயாக இருந்தால், அது மலம் வெளியேறுவதற்கு தடையை ஏற்படுத்தும். அதுவே நன்கு கனிந்திருந்தால் மலச்சிக்கலில் இருந்து விடுதலை தரும். ஏனெனில் பச்சை மற்றும் கனியாக வாழைப்பழங்களில் ஸ்டார்ச் அதிகம் உள்ளதால், அது எளிதில் செரிமானமாகாமல், மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது.

    * சிப்ஸ் மற்றும் வறுத்த நொறுக்குத்தீனிகளை சிலர் எப்போதும் தின்றவாறே இருப்பார்கள். உண்மையில் அத்தகைய உணவுப் பொருட்களில் கொழுப்புக்கள் அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் இருப்பதோடு, சீக்கிரம் செரிமானமாகாமல், மலச்சிக்கலை ஏற்படுத்தும்.



    * மாட்டிறைச்சி கூட செரிமானமாக தாமதமாகும். இதற்கு அதில் உள்ள அதிகளவிலான கொழுப்புக்கள் மற்றும் புரோட்டீன்கள் தான். இவை செரிமான மண்டலத்தினால் எளிதில் உடைக்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இச்சத்தை அதிகம் எடுத்தாலும், மலச்சிக்கல் ஏற்படும்.

    * உங்களுக்கு பிரெஞ்சு பிரைஸ், பஜ்ஜி, பக்கோடா போன்ற வறுத்த உணவுகள் ரொம்ப பிடிக்குமா? அவற்றை அடிக்கடி சாப்பிடுபவரா? அப்படியெனில் உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கு அது ஒன்றே போதும். அவற்றில் கொழுப்பு அதிகம் இருப்பதோடு, அவை உணவுகளை குடலினுள் மெதுவாக நகர்த்துவதோடு, வாய்வு தொல்லையுடன் மலச்சிக்கலையும் ஏற்படுத்தும்.

    * பலரும் பிஸ்கட், கேக் போன்றவை ஆரோக்கியமானது என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் அவை ஆரோக்கியமற்றது மட்டுமின்றி, உடல் எடை அதிகரிக்கக்கூடியது. மேலும் இவற்றில் நார்ச்சத்து மிகவும் குறைவு மற்றும் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளது. இதனால் செரிமானமாவதில் தாமதமாகி, மலச்சிக்கல் ஏற்படும்.

    * வாழைப்பழங்களைப் போலவே, காபி சில நேரங்களில் குடலியக்கத்தை சீராக தூண்டி, மலச்சிக்கலில் இருந்து விடுதலை தரும். இல்லாவிட்டால், அதிகப்படியான காபியை குடிக்கும் போது, அதில் உள்ள காப்ஃபைன் உடல் வறட்சியை ஏற்படுத்தி, மலச்சிக்கலை ஏற்படுத்தும். 
    விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மாலையில் இந்த தேங்காய் பால் பணியாரம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பச்சரிசி - அரை கப்
    உளுந்து - அரை கப்,
    தேங்காய் - ஒன்று,
    பால் - ஒரு டம்ளர்,
    ஏலக்காய் - சிறிதளவு
    சர்க்கரை - கால் கப்



    செய்முறை

    உளுந்து மற்றும் அரிசியை ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வடை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

    தண்ணீர் அதிகம் சேர்க்காமல் தேங்காய் பால் எடுத்து வைத்து கொள்ளவும்.

    அதனுடன் பால், ஏலக்காய் தூள், ருசிக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்து வைக்கவும்.

    அரைத்து வைத்து இருக்கும் மாவில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போடவும்.

    நல்ல பொன்னிறமாக மாறியதும் தனியாக எடுத்து வைக்கவும்.

    பரிமாறும் பொழுது தேவையான அளவு பணியாரத்தை எடுத்து, அதில் தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.

    குழந்தைகள் இந்த பணியாரத்தை விரும்பி சாப்பிடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உங்கள் தலைமுடி வளராமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அதை சரிசெய்தால், நிச்சயம் உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
    இன்றைய தலைமுறையினர் இளமையிலேயே முடியை இழந்துவிடுகின்றனர். முடி கொட்டுவதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை மேம்படுத்த எத்தனையோ வழிகளை முயற்சிக்கின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. இப்படி பல முயற்சிகளை மேற்கொண்டும் உங்களுக்கு முடி வளராவிட்டால், அதற்கும் சில காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அதை சரிசெய்தால், நிச்சயம் உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம்.

    இங்கு ஒருவருக்கு ஏன் தலைமுடி வளர்வதில்லை என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

    * மோசமான உணவுப் பழக்கமும் முடியின் வளர்ச்சியைத் தடுக்கும். ஆரோக்கியமற்ற உணவுகளை எந்நேரமும் உட்கொள்ளும் போது, போதிய வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் உடலுக்கு கிடைக்காமல், முடியின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களின்றி, முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். அதுமட்டுமின்றி, உடல் எடையைக் குறைக்க மேற்கொள்ளும் டயட், உடல் எடையைக் குறைக்கும் அதே சமயம் முடியின் வளர்ச்சியைக் குறைக்கும்.

    * உங்களுக்கு முடி வளராமல் இருப்பதற்கான காரணங்களுள் மற்றொன்று டென்சன். ஒருவர் அளவுக்கு அதிகமான மனதளவில் கஷ்டப்பட்டால், அது முடியின் வளர்ச்சியை தான் பாதிக்கும். மேலும் தலைமுடியின் வேர்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுத்தாலும், முடியின் வளர்ச்சி பாதிக்கப்படும்.



    * தலைமுடி வேகமாக உலர வேண்டும் என்பதற்காக பலர் ஹேர் ட்ரையர் பயன்படுத்துவார்கள். இப்படி ஹேர் ட்ரையரை அதிகம் பயன்படுத்தினால், அதனால் மயிர்கால்கள் பாதிக்கப்பட்டு, முடி உதிர்வதோடு, அதன் வளர்ச்சி முழுமையாக தடுக்கப்படும். அதேப் போல் வெளியே வெயிலில் செல்லும் போது, தலைக்கு ஏதேனும் ஒரு துணியை கட்டிக் கொண்டு செல்லுங்கள். இல்லாவிட்டால் சூரியக்கதிர்களின் நேரடியான தாக்கத்தால் தலைமுடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.

    * தற்போது நிறைய பேர் தலைக்கு தினமும் எண்ணெய் வைப்பதில்லை. இப்படி எண்ணெய் வைக்காமல் இருப்பதால், தலைமுடி மிகுந்த வறட்சிக்குள்ளாகி, முடி வெடிப்பை ஏற்படுத்தி, முடியின் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்துகிறது

    * தலைமுடியைப் பராமரிக்கிறேன் என்று பலர் ஷாம்புக்கள், கெமிக்கல் நிறைந்த சீரத்தைப் பயன்படுத்துவார்கள். இப்படி கண்ட கெமிக்கல் நிறைந்த பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்தினால், அவை முடியின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் முழுமையாக தடுத்துவிடும்.

    * தலைமுடி அதிகம் உதிர்வதற்கு வைட்டமின் குறைபாடும் ஓர் முக்கிய காரணம். தலைமுடி ஆரோக்கியமாக வளர வேண்டுமானால், அதன் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்களை அன்றாடம் எடுக்க வேண்டியது அவசியம். எனவே முடி அதிகம் உதிர்ந்தால் மருத்துவரை கலந்தாலோசித்து, அவர் பரிந்துரையின் பேரில் நடந்து கொள்ளுங்கள்.
    பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள். அதிலும் சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அதிகம் அவதிப்படுகிறார்கள்.
    பிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் மற்றும் தொப்பை பிரச்சினைக்கு ஆளாகுகிறார்கள். அதிலும் சிசேரியன் செய்த பெண்கள் தொப்பை பாதிப்பால் அதிகம் அவதிப்படுகிறார்கள். சிசேரியன் செய்த பிறகு உடல் இயக்கமின்றி அதிக நேரம் படுக்கையில் இருப்பது தொப்பை உண்டாக காரணமாகிவிடுகிறது.

    மேலும் வயிற்றில் இருந்த குழந்தையின் வெற்றிடத்தில் காற்று நிரம்புவதாலும், வயிற்றில் கொழுப்பு சேருவதாலும் தொப்பை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் தவிர்த்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் தொப்பை, உடல் பருமன் பாதிப்புக்கு வழிவகுத்துவிடும்.

    பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட உடல் சோர்வும், அதனால் ஏற்படும் பசியும் உண்ணும் உணவின் அளவை அதிகப்படுத்தி விடும். தாய்ப்பால் கொடுப்பதற்காக சத்தான உணவுகளை தேடிப்பிடித்து சாப்பிட வேண்டியிருக்கும். அந்த உணவுகளாலும் உடல் எடை கூடும். குழந்தை பிறந்து ஒரு ஆண்டை கடந்த பிறகோ, தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திய பிறகோ உடல் பருமனை குறைப்பதற்கான முயற்சியில் பெண்கள் ஈடுபட தொடங்கிவிட வேண்டும்.

    சரியான உணவுப்பழக்க வழக்கங்களையும், உடற்பயிற்சியையும் கடைப்பிடிக்க வேண்டும். பிரசவத்திற்கு பிறகு செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளும், யோகாசனங்களும் ஏராளம் இருக்கின்றன. அவற்றுள் உடல் தகுதிக்கு ஏற்ற பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்துவர வேண்டும். அதில் அலட்சியம் காண்பிக்கக்கூடாது. ஏனெனில் குழந்தை ஒரு வயதை தாண்டிய பின்னரும் எடை குறைப்பில் கவனம் செலுத்தாமல் இருந்தால் தோற்ற பொலிவில் மாறுதல் உண்டாகிவிடும். பின்னர் பழைய தோற்றத்திற்கு திரும்புவது கடினமான விஷயமாகி விடும்.

    வாதநோயை குறைக்கும் தன்மை கொண்டது முடக்கத்தான் கீரை. இன்று இந்த கீரையை வைத்து சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    துவரம் பருப்பு - 1 கப்,
    அரிசி  - 1 கப்,
    ஆய்ந்த கீரை -  1 கைப்பிடி
    நெய், எண்ணெய் - 1 தேக்கரண்டி.,
    கடுகு  - 1 தேக்கரண்டி
    கறிவேப்பிலை -  சிறிது,
    பெருங்காயம்  - சிறிது,
    வெங்காயம் - 1,
    தக்காளி - 1,
    மஞ்சள் தூள் -  அரை தேக்கரண்டி.,
    சாம்பார்த்தூள் - ருசிக்கேற்ப,
    பட்டை - 2 துண்டு
    கிராம்பு - 2,
    பிரிஞ்சி இலை - 1,
    ப.மிளகாய் - 1
    கொத்தமல்லி - சிறிதளவு

    அரைக்க :

    தேங்காய் - 1 கப்
    சீரகம் -  அரை தேக்கரண்டி.,
    ப.மிளகாய் -  காரத்திற்கேற்ப,



    செய்முறை

    அரிசி, பருப்பை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊரவைக்கவும்

    கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கொள்ளவும்.

    குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கீரையை சேர்த்து வதக்கவும்.

    கீரை வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    அடுத்து கொதி வரும் போது அரிசி, பருப்பு, ஊற வைத்த தண்ணீருடன் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை மிதமாக எரியவைத்து 5 நிமிடம் அல்லது தேவைக்கேற்ப வேகவிடவும்.

    குக்கர் திறந்தவுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதூவி, நெய் சேர்த்து தயிர்சட்னி அப்பளத்துடன் பரிமாறலாம்.

    சூப்பரான முடக்கத்தான் கீரை சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தொடைகள், இடுப்பு, முழங்கால், கழுத்து தசைகளுக்கு பலன் தரும் ஆசனம் இது. இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    பெயர் விளக்கம்: “உபவிஷ்ட கோணாசனா” என்றால் ஒரு குறிப்பிட்ட கோண நிலையில் உட்கார்ந்து செய்யும் ஆசனம் என்று பொருள்.

    செய்முறை: தண்டாசனத்தில் உட்காரவும். கால்கள் இரண்டையும் முடிந்தளவு நன்றாக அகற்றி வைக்கவும்.  தலைக்குமேலே இரு கைகளையும் உயர்த்தி மூச்சை உள்ளுக்கு இழுக்கவும்.

    மூச்சை நிதானமாக வெளியே விட்டுக்கொண்டு குனிந்து இடது கால் கட்டை விரலை இடது கை கட்டைவிரல், ஆள்காட்டி விரல், நடு விரல்களாலும், வலதுகால் கட்டை விரலை வலது கை கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல்களாலும் பிடித்து தலையை மேலே உயர்த்தவும்.  கால்களை தூக்கவோ, எந்த ஒரு பக்கமும் சாய்க்கவோ கூடாது.  கண்களால் புருவ மத்தியை பார்க்கவும். இந்த நிலையில் சில முறை மூச்சை இழுத்து விடவும்.

    மூச்சை வெளியேவிட்டு, முன்னுக்கு குனிந்து தலையை தரையை நோக்கி கொண்டுபோய் தாடை தரைவிரிப்பை தொடும்படி வைக்கவும்.  பிறகு நிதானமாக புஜங்களையும், மார்பையும், தரையில் தொடும்படி வைக்கவும்..



    இந்த ஆசன நிலையில் சாதாரண மூச்சுடன் 30 முதல் 60 வினாடி நிலைத்திருக்கவும்.  பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து நிமிர்ந்து படம் 19&ல் உள்ள நிலைக்கு வந்து, அதிலிருந்து தண்டாசன நிலைக்கு வரவும்.  இந்த ஆசனத்தை 2&4 முறை பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்தவேண்டிய இடம்:தொடை தசைகள், முழங்கால் பகுதி மீதும், மூலாதாரம் அல்லது சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: ஆரம்பப் பயிற்சியில் இடது, வலது காலை தனித்தனியாக இரு கைவிரல்களால் பிடித்து, இடது பக்கம் சிலமுறை, வலது பக்கம் சிலமுறை என குனிந்து முழங்காலை நெற்றியால் தொட முயலவும். இப்படி சில நாட்கள் பழகிய பிறகு இரு கால் விரல்களையும் கை விரல்களால் பிடித்து முதலில் நெற்றியை தரையில் தொடுவதற்கு பயிற்சி செய்யவும். பிறகு தலையை உயர்த்தி தாடையை தரையில் தொட முயலவேண்டும். இதை நன்கு செய்யமுடிந்த பிறகு நிதானமாக மார்பையும் தரையை தொடும்படி வைக்க முயற்சி செய்ய வேண்டும்.

    பயன்கள்: தொடைகள், இடுப்பு, முழங்கால், கழுத்து தசைகள் பலம் பெறும். கால்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். நீரிழிவு நோயினால் கால்களில் இரத்த ஓட்டம் குறைந்தவர்களுக்கு பயனுள்ளது.

    தற்போது இந்தியாவின் பெண்கள் விரும்பும் வகையில் சிறப்பு மிகு தனிப்பட்ட உணவுகளுக்கு ஏற்றவாறு சமைத்திட வசதியான மைக்ரோ வேவ் ஓவன்கள் வந்து விட்டன.
    சமையலறையில் கேஸ் ஸடவ் சமையலைவிட தற்போது மைக்ரோவேவ் ஓவன் சமையல் தான் அதிகப்படியாக நடைபெறுகிறது. ஏனென்றால் கேஸ் அடுப்பின் வெந்தனல் சமையலின் போது சமைப்பவரும் ஏறக்குறைய வெப்பத்தின் பிடியில் சிக்கி தவிக்க வேண்டிய சூழல். ஆனால் மைக்ரோவேவ் ஓவன் அப்படி இல்லை. எந்த அனலும் இல்லை. புகையும் இல்லை.

    சுவைமிகு அனைத்து அயிட்டங்களும் ருசியுடன் சமைத்து தந்துவிடுகிறது. அதுவுமின்றி நேரம் சிக்கனம், எரிபொருள் சிக்கனம். ஒவ்வொரு விதமான உணவு தயாரிப்பிற்கும் ஏற்ற இயக்க வசதி என அனைத்திலும் மைக்ரோ வேவ் ஓவன்கள் தனித்து விளங்குகின்றன. தற்போது இந்தியாவின் சிறப்பு மிகு தனிப்பட்ட உணவுகளுக்கு ஏற்றவாறு சமைத்திட வசதியான மைக்ரோ வேவ் ஓவன்கள் வந்து விட்டன.

    அனைத்து சமையலும் ஒரே ஓவனில்

    சமையல் என்பதில் அவித்தல், பொறித்தல், வறுத்தல், வேகவைத்தல் போன்ற பல பணிகள் உண்டு. இது போன்ற ஏராளமான பணிகள் பலவற்றையும் மேற்கொள்ள வசதியான தனிச்சிறப்பு ஓவன்கள் வந்துள்ளன. இதன் மூலம் விதவிதமான இந்திய மற்றும் வெளிநாட்டு உணவு வகைகளையும் சமைத்து உண்ணலாம். விருந்தினர்கள் மற்றும் பண்டிகை நேரத்தில் பல வகையான உணவு வகைகளை தயார் செய்வது கடினமான பணி. ஆனால் அனைத்து வகையான சமையலையும் மேற்கொள்ளக் கூடிய மைக்ரோ வேவ் ஓவன் ஒன்று இருந்தால் போதும் அத்தனையும் சில மணிநேரத்தில் செய்து பரிமாறலாம்.

    வறுத்தல், பொறித்தல், பார்பிக்யூ, சூடுபடுத்துதல், நீராவி வேகவைத்தல், கிரில்லிங், பேக் செய்தல், பதப்படுத்துவது, ஸ்டூவிங், அதிக எண்ணெயின்றி வறுத்தல் என பல பணிகளை ஒரே ஓவன் செய்து முடித்து விடுகிறது.



    சுவைமிகு பார்பிக்யூ உணவுகள்

    பார்பிக்யூ உணவுகளை தயாரித்திட தனிப்பட்ட கருவி வேண்டாம். புதிய அனைத்தும் உள்ளடங்கிய மைக்ரோ வேவ் ஓவனில் அதே சுழலக்கூடிய ரோட்டினரி வசதியுள்ளதால் முற்றிலும் 360 டிகிரி சுழற்சியில் ஒரே சீரான வேகவைத்தல், மொறுமொறுப்பு என சிக்கன் டிக்கா, பன்னீர் டிக்கா போன்றவைகளை செய்து உண்ண முடியும். மோட்டார் வசதியுடன் சுழலக்கூடிய கம்பி அமைப்பு உள்ளதால் மற்ற ஓவன்களை விட இதில் பார்பிக்யூ உணவுகள் சீக்கிரமாக, சுவையுடன் செய்து கொள்ள முடியும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் விதவிதமான பார்பிக்யூ உணவு வகை மெனுவும் உள்ளது.

    ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உட்புற அமைப்பு

    உட்புற தகடு அமைப்பு என்பது புதிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருந்தியவாறு வந்துள்ளது. இதன் மூலம் சூடு உட்புறம் சீராக பரவி சீரான வேகவைத்தலை நடைமுறை படுத்துகிறது. சிராய்ப்பு மற்றும் பூச்சுகள், காயம் ஏற்பட்டு விடும் என்ற பயமின்றி சமைக்க முடியும்.

    சுத்தமான நெய் உருக்க வசதியான ஓவன்

    பெரும்பாலும் வெண்ணெய்யை வாங்கி வீட்டில் நெய்யை உருக்கும் போது ஒரு வித வாசம் வீசும். அந்த வாசம் ஏதும் வீசாமல் 12 நிமிடத்தில் வெண்ணெய்யை நெய்யாக உருக்கி தந்துவிடுகிறது ஓவன். மைக்ரோ ஓவன் கிளாஸ் பவுலில் வெண்ணெய்யை போட்டு நெய் பட்டனை அழுத்தினால் போதும் நெய் காய்ச்சி தந்து விடும்.

    அதிக எண்ணெய்யின்றி பொறித்தல்

    கொழுப்பு மற்றும் எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிட தயங்குபவர்களுக்கு என அதிக எண்ணெய் உறிஞ்சாத சமோசா, வடை, பஜ்ஜி போன்றவைகளை சமைத்து உண்ண வசதியான அமைப்பு உள்ளது. இதன் மூலம் பொறிக்கும் போது அந்த உணவு பொருளில் வெகு குறைந்த அளவு எண்ணெய்தான் இருக்கும். பயமின்றி உண்ணலாம். ஆரோக்கியமானது. 
    பாலில் வைட்டமின்களும், கால்சியமும் உள்ளடங்கி இருக்கின்றன. அதிகபடியான கலோரிகளை எரித்து உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு பால் உதவுகிறது.
    பாலில் வைட்டமின்களும், கால்சியமும் உள்ளடங்கி இருக்கின்றன. அதிகபடியான கலோரிகளை எரித்து உடல் எடையை சீராக பராமரிப்பதற்கு பால் உதவுகிறது. பசுவின் பால், எருமை பால் ஆகிய இரண்டு விதமான பால் வகைகள்தான் அதிகமாக புழக்கத்தில் இருக்கின்றன. இந்த இரண்டு வகையான பால்களிலும் சில வித்தியாசங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

    முக்கியமாக கொழுப்பு மற்றும் புரத சத்தில் வேறுபாடு காணப்படுகிறது. எருமை பாலை விட பசும் பாலில் கொழுப்பு குறைவாக இருக்கிறது. மேலும் எருமைபாலை விட பசும் பால் இலகுவான தன்மை கொண்டது. பச்சிளம் குழந்தைகளுக்கு பசுவின் பால் உகந்ததாக இருக்கிறது. பன்னீர், குல்பி, தயிர், நெய் ஆகியவை தயாரிப்பில் எருமை பால் முக்கிய பங்கு வகிக்கிறது.

    பாலின் தன்மை அடர்த்தியாக இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கிறது. பசுவின் பாலை விட எருமை பாலில் ஆக்சிடேசன் செயல்பாடு அதிகமாக இருக்கிறது. அதனால் பசுவின் பாலைவிட அதனை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும். பொதுவாக எந்த பாலாக இருந்தாலும் அது அதன் கன்றுகளுக்கானது. மனிதர்களுக்கானது அல்ல. இன்னொருபுறம் இயற்கையாகவே பால் பலருக்கு சரியாக செரிமானம் ஆவதில்லை. அதனால் நேரடியாக பாலை பருகுகிறவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

    கோடைகாலத்தில் கிடைக்கும் நுங்கில் பல்வேறு சுவையான உணவுகளை தயாரிக்கலாம். இன்று நுங்கை வைத்து புட்டிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நுங்கு - 10,
    பால் - ஒரு கப்,
    வெனிலா எசன்ஸ் - சிறிதளவு,
    சைனா கிராஸ் - 1 டீஸ்பூன்,
    சர்க்கரை - தேவையான அளவு.



    செய்முறை:

    நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்

    பாலை நன்றாக சுண்ட காய்ச்சி ஆறவைக்கவும்.

    சைனா கிராஸை கால் கப் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும்.

    பாலுடன் வெனிலா எசன்ஸ், சர்க்கரை, சைனா கிராஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    சர்க்கரை கரைந்த பிறகு நுங்குத் துண்டுகள் சேர்த்து கலக்கவும்.

    சிறிய கண்ணாடி கிண்ணங்களில் ஊற்றி ஃப்ரீசரில் 6 மணி நேரம் வைத்து எடுக்கவும்.

    பிறகு ஒரு தட்டில் கிண்ணத்தை கவிழ்த்து பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம்.
    உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம்.

    பொதுவாக உங்கள் சிறுநீரில் ஏற்படும் மாற்றத்தை வைத்து எளிதாக உங்கள் உடல்நல மாற்றத்தை கண்டறிந்துவிடலாம். உடல்நிலை சரியில்லை எனும் போது முதலில் சிறுநீர் பரிசோதனை செய்வதற்கு காரணமும் இதுதான். நாட்டு வைத்தியம் செய்பவர்கள் கூட சிறுநீரின் நிறத்தை வைத்தே என்ன பாதிப்பாக இருக்ககூடும் என்பதை கணித்துவிடுவார்கள்.

    எனவே, நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது அண்ணாந்து விட்டத்தை பார்ப்பதை தவிர்த்து சிறுநீரின் நிறம் சரியாக தான் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியது அவசியம்…

    உங்கள் சிறுநீர் மந்தமாக வெளிப்படுகிறது என்றால் அது உங்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முன்னறிவுப்பு ஆகும். வெள்ளை இரத்த அணுக்கள் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு கொண்டிருந்தால் தான் இந்த மாதிரி சிறுநீர் வெளிப்படும்.



    சிறுநீர் கழிக்கும் போதும் சிவப்பு நிறமாகவோ அல்லது இரத்தம் கசிவது போலவோ இருந்தால் உங்கள் சிறுநீரகத்தில் கட்டிகள் இருக்கின்றன என்று அர்த்தம். உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.

    சிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வெளிபடுதல், நீரிழிவு அல்லது சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். இது ஏற்படுவதற்கு காரணம் சிறுநீரகம் சரியாக புரதச்சத்திணை வடிகட்டாது செயல்படுவதுதான் என கூறப்படுகிறது.

    கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதன் முன்னறிவிப்பு தான் சிறுநீர் பழுப்பு நிறமாக வெளிப்படுவது என்று கூறப்படுகிறது. மற்றும் பித்தச்செம்பசையின் (bilirubin) காரணமாக கூட ஒருவகையில் காரணமாக இருக்கலாம்.

    இவ்வாறான நிற மாற்றங்கள் சிறுநீரில் காணப்பட்டால் உடனடியாக மருத்துவிரிடம் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள். 
    பெண்ணின் வாழ்க்கை ஒரு பூமாலை போன்றது. குற்ற பின்னணி கொண்டவர்கள் கையில் அவர்கள் வாழ்க்கை ஒப்படைக்கப்பட்டால் அது (குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக) சின்னாபின்னமாகிவிடும்.
    கசப்பான உண்மை இது, பெற்றோர் மிகுந்த கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் இது. இந்த சமூகம் கிரிமினல்கள், ரவுடித்தனம் செய்பவர்கள், ஊருக்கு அடங்காதவர்கள் என்று பலரை ஒதுக்கிவைக்கிறது. அப்படிப்பட்டவர்களில் சிலரை ‘டீன்ஏஜ்’ பெண்கள் விரும்புகிறார்கள். அவர்களுடன் ஒட்டி உறவாட ஆசைப்படுகிறார்கள். நெருப்போடு விளையாடுவது போன்ற விபரீதம் அது என்று அவர்களுக்கு தெரியத்தான் செய்கிறது. ஆனாலும் அந்த விளையாட்டுக்கு அவர்கள் தயாராகி விடுகிறார்கள்.

    இப்படி கிரிமினல்களையும், குற்ற பின்னணி கொண்டவர்களையும் டீன்ஏஜ் பெண்கள் விரும்புவது அதிகரித்துக்கொண்டிருக்கிறது. தவறானவர்கள் என்று தெரிந்த பின்பும் தயக்கமில்லாமல் அவர்கள் வலையில் போய் இளம் பெண்கள் விழ என்ன காரணம்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    டீன் ஏஜில் பெண்களிடம் உடல்ரீதியான, மனோரீதியான மாற்றங்கள் நிறைய ஏற்படும். அப்போது ஒவ்வொரு விஷயத்தையும் தர்க்கரீதியாக பார்க்கும் எண்ணம் அவர்களிடம் மேலோங்கும். ‘பலரும் தவறென்று சொல்வதை நாம் ஏன் சரியென்று சொல்லக்கூடாது?’ என்ற கேள்வியை தனக்குள்ளே கேட்டு, அந்த தப்புக்குள் சரியென்று வாதிட என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்று அவர்கள் தேடத் தொடங்குகிறார்கள். இப்படித்தான் ‘நெகட்டிவிட்டி’ என்ற எதிர்மறையின் மீது அவர்களுக்கு முதல் ஈர்ப்பு ஏற்படுகிறது.

    ஊடகங்களில் சில ‘வில்லன்களை’ பற்றி வெளிவரும் கட்டுரைகளை இவர்கள் படிக்கும் போதும், அவர்களை பற்றிய புத்தகங்களை வாசிக்கும்போதும், அவர்கள் செய்யும் எதிர்மறையான சாகசங்களை மட்டும் நினைவில் நிலைநிறுத்தி வியக்கிறார்கள். தொடர்ந்து அவர்களை பற்றியே சிந்தித்து அவர்களை தங்கள் மனதுக்குள் ஒரு ஹீரோ லெவலுக்கு உயர்த்திவிடுகிறார்கள். அந்த நேரங்களில் சினிமாக் களிலோ, டெலிவிஷன் தொடர்களிலோ வரும் வில்லன் கதாபாத்திரங்களை அவர்கள் வீரம் நிறைந்த கதாபாத்திரம் போல் உணருவார்கள். அதற்கு அவர்கள் மனது பழகிவிட்டால், நிஜ வாழ்க்கையில் வில்லன்களாக இருப்பவர்களுக்கும், ஹீரோ அந்தஸ்து கொடுத்து ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

    டீன்ஏஜ் பெண் ஒருத்தி, ரவுடி ஒருவரை காதலிக்கிறாள் என்றால் அதற்கு அவள் வாழும் இடத்து சுற்றுச்சூழல், அவளது தோழிகள், அவளது குடும்பச்சூழல், எதிர்மறை கதாபாத்திரங்களை விரும்பும் அவளது எண்ணங்கள் போன்ற பல விஷயங்கள் காரணமாக இருக்கின்றன. சமூகம் அந்த ரவுடி மீது வைத்திருக்கும் பயத்தை, அவள் மரியாதை என்ற கணக்கில் தவறாக எடுத்துக்கொள்வாள். எல்லோரும் அவருக்கு அஞ்சுவதால் தனக்கு அவர் மூலம் மிகுந்த பாதுகாப்பு கிடைத்துவிடும் என்று தவறாக நம்புகிறாள்.



    தோழிகளில் சிலர் ரவுடி ஒருவரிடம் இருக்கும் ஒருசில நல்ல குணங்களை சொல்லும்போது, அவரை சிறந்த மனிதர் என்ற அந்தஸ்துக்கு தவறாக கணித்து விடுகிறாள். அவர்களது தோற்றமும், அவர்கள் கையில் புழங்கும் பணமும், அவர்களது நெட்ஒர்க் செயல்பாடுகளும்கூட சில பெண்களை கவர்ந்துவிடுகிறது. ஒருசில பெண்கள், அத்தகைய ரவுடிகள் காதல் கலைகளிலும் வல்லவர்களாக இருப்பார்கள் என்றும் தவறான நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இப்படி ரவுடிகளையும், குற்றபின்னணி கொண்டவர்களையும் டீன்ஏஜ் பெண்கள், விரும்ப பல காரணங்கள் இருக்கின்றன.

    குற்றபின்னணி கொண்டவர்களை காதலிப்பவர்களும், கல்யாணம் செய்துகொண்டவர்களும் வாழ்க்கையில் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவிக்கிறார்கள். அவர்கள் தவறை உணர்ந்து, இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப நினைக்கும்போது அவர்களை மீட்டுக்கொண்டு வரும் முயற்சியில் குடும்பமும், சமூகமும் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு மனோதத்துவ கவுன்சலிங் உதவும். தவறான அபிப்பிராயங்களை மனதில் இருந்து அகற்ற தியானமும் கைகொடுக்கும். அதே நேரத்தில் தங்கள் டீன்ஏஜ் பிள்ளைகள் இதுபோன்றவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க பெற்றோர் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

    உங்கள் மகளுக்கு 12 வயதாகும்போதே அவளிடம் நட்பு பாராட்டத் தொடங்கிவிடுங்கள். அந்த வயதை கடக்கும்போது பெற்றோரின் பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே வந்து கருத்துக் களாலும், எண்ணங்களாலும் தன்னைத்தானே வடிவமைத்துக்கொள்ள ஒவ்வொரு பெண்ணும் முயற்சிப்பாள். அப்போது அவர் களுக்கு பெற்றோர் நம்பிக்கை, பாதுகாப்பு, அன்பு, மரியாதை, சுதந்திரம் போன்ற அனைத்தையும் வழங்கி, நல்ல தோழமையை உருவாக்கிக்கொடுத்து அவர்களிடம் நேர்மறையான சிந்தனையை வளர்க்கவேண்டும்.

    பெற்றோரும் நல்லவர்களாக வாழ்ந்து காட்டி, மகள்களுக்கு ரோல்மாடலாக திகழவேண்டும். தவறான தொடர்புகளை பெற்றோர் ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது. மகள்களுக்கு ரோல்மாடலாக திகழவேண்டும். தங்களுக்குள் சண்டையிட்டு குடும்பத்தில் நிம்மதியற்ற சூழலையும் உருவாக்கிவிடக் கூடாது. பெண்களுக்கு சுயகவுரவம் மிக முக்கியம் என்பதை உணர்த்தவேண்டும்.

    அவர்களை மதிப்புமிக்கவர்களாக வளர்த்தெடுக்கவேண்டும். ஏழையாக இருந்தாலும் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கையூட்டவேண்டும். வாழ்க்கையில் கசப்பான சம்பவங்களை சந்தித்தவர்களும், மற்றவர்களால் வஞ்சிக்கப்பட்டவர்களும், தங்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணை அமையாது என்ற எண்ணத்தில் இருப்பவர்களும் குற்ற பின்னணி கொண்டவர்களை காதலிக்கிறார்கள்.

    பெண்ணின் வாழ்க்கை ஒரு பூமாலை போன்றது. குற்ற பின்னணி கொண்டவர்கள் கையில் அவர்கள் வாழ்க்கை ஒப்படைக்கப்பட்டால் அது (குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக) சின்னாபின்னமாகிவிடும்.

    - விஜயலட்சுமி பந்தையன். 
    ×