என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    மஞ்சள் காமாலை எப்படி உருவாகிறது என்பதை புரிந்து கொண்டால் இதற்கான தீர்வு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    உடல் ரத்தத்தில் மஞ்சள் பித்தம்(பிலிரூபின்) அதிகரிப்பதே மஞ்சள் காமாலை ஆகும். மஞ்சள் காமாலை என்று சொன்னால் மக்களிடையே ஒரு வித பயம் அல்லது பீதி ஏற்பட்டு விடுகிறது. முதலில் இதனை பற்றி மக்களிடையே ஒரு விழிப்புணர்வு வரவேண்டும். மஞ்சள் காமாலை எப்படி உருவாகிறது என்பதை புரிந்து கொண்டால் இதற்கான தீர்வு என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    மஞ்சள் பித்தம் என்பது சிவப்பு அணுக்கள் இறக்கும் போது அவற்றில் இருந்து வெளிவருகிறது. இது இயற்கையாகவே நமது ரத்தத்தில் ஒரு சிறு அளவு இருக்கும். இது அதிகமாகாமல் பார்த்து கொள்வது கல்லீரலின் வேலை ஆகும். அளவுக்குமேல் போகும் பித்தத்தை ரத்தத்தில் இருந்து எடுத்துக்கொண்டு, அதை பித்த நீராக மாற்றி பித்த நாளங்களில் சுரந்து பிறகு அது பித்தப்பையில் தேக்கி வைக்கப்படுகிறது. பின்னர் மலத்தின் வழியாக உடலை விட்டு வெளியேறி விடுகிறது.

    சிவப்பு அணுக்களில் இருந்து ஆரம்பித்து கல்லீரலினால் பித்த நீராக உருவாகி பித்தப்பையில் தங்கியிருந்து பித்தநாளம் மூலமாக குடலுக்கு வந்து பின்னர் வெளியேறும் பாதைகளில் ஏதாவது ஒரு இடத்தில் கோளாறு ஏற்பட்டால் வருவதே இந்த மஞ்சள் காமாலை நோய். இதனை அடிப்படையாக கொண்டே மஞ்சள் காமாலை மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. முதல்வகை சிவப்பு அணுக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள்.

    இதில் அளவுக்கு அதிகமாக சிவப்பு அணுக்கள் இறந்து அவற்றில் இருந்து அதிகமாக மஞ்சள் பித்தம் வருவது. 2-வது கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள். இதில் கல்லீரல் அதன் வேலையை செய்யாமல் இருப்பதனால் ரத்தத்தில் மஞ்சள் பித்தம் தங்கி விடுகிறது. 3-வது அடப்பு காமாலை என்பது அதாவது பித்தநீர் பாதையில் ஏதாவது அடைப்பு ஏற்பட்டு அது கல்லீரலில் இருந்து குடலுக்கு வரமுடியாமல் தடைபட்டு வருகிறது.

    இந்த 3 வகை வருவதற்கு தனித்தனியே நிறைய காரணங்கள் உள்ளது. எனவே மஞ்சள் காமாலை வந்தவுடன் முதலில் நாம் செய்யவேண்டியது என்னவென்றால் மூன்றில் எந்தவகை மஞ்சள் காமாலை என்று தெரிந்து கொள்ளவேண்டும். பின்னர் அதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ளவேண்டும். ஏனென்றால் ஒவ்வொன்றுக்கும் வேறு வேறு சிகிச்சை முறைகள் உள்ளன.

    இதில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம என்னவென்றால், கல்லீரலினால் வருகிற ஒரு சில காரத்திற்கு தான் நாட்டு மருந்து உதவி செய்யும். சிவப்பு அணுக்கள் சம்பந்தப்பட்ட காமாலை, அடப்பு காமாலை மற்றும் ஒரு சில கல்லீரல் நோய்களினால் வரும் காமாலைக்கு வேறுவிதமான மாத்திரை மருந்துகள் அல்லது அறுவை சிகிச்சை மூலமாக அடைப்பை நீக்குதல் போன்ற சிகிச்சைகளும் தேவைப்படும்.

    நோய்நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் நோய்நாடி வாய்ப்பசெயல் என்ற வள்ளுவன் வாக்குக்கிணங்க மஞ்சள் காமாலையின் வகையை கண்டுபிடித்து அதன் காரணத்தை கண்டுபிடித்து அதற்கான சரியான சிகிச்சை முறையை தேர்ந்தெடுத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தால், இந்த மஞ்சள் காமாலை குணமடைய நிறைய வாய்ப்புள்ளது. மேற்கண்ட தகவலை கடலூர் குடல் கல்லீரல் மருத்துவம் மற்றும் குடல் உள்நோக்கு மைய டாக்டர் வினோத் கூறி உள்ளார்.

    டாக்டர் வினோத்
    கிவி பழத்தில் வைட்டமின் சி சத்து பெருமளவு உள்ளது. கிவி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
    கிவி பழம் ஊட்டச்சத்து நிறைந்தது. ஆரஞ்சு, எலுமிச்சை பழங்களை காட்டிலும் கிவி பழத்தில் வைட்டமின் சி சத்து பெருமளவு உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். புற்றுநோய் பாதிப்பில் இருந்தும் மீளலாம்.

    இரவில் ஆழ்ந்த தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், படுக்கைக்கு செல்லும் முன்பு கிவி பழம் சாப்பிடலாம்.

    இந்த பழத்தில் நார்ச்சத்துக்களும் அதிகம் உள்ளது. அதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்கலாம். ரத்த அழுத்தம், கொழுப்பு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் கிவி உதவுகிறது.

    கர்ப்பிணி பெண்களும் இதனை சாப்பிடலாம். இது கருவின் வளர்ச்சிக்கும், அதன் ஆரோக்கியத்திற்கும் துணை புரிகிறது. வைட்டமின் சி மட்டுமின்றி வைட்டமின்கள் ஏ, பி 6, பி 12, இ மற்றும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற சத்துக்களும் கிவியில் இருக்கிறது. ரத்த நாளங்கள், எலும்புகள், பற்களின் ஆரோக்கியத்திற்கும், பார்வைத்திறன் மேம்படவும் இது உதவுகிறது. 
    கேரளா கோயில்களில் வழங்கப்படும் பிரத்யேகப் பிரசாதம், இந்தப் பாயாசம். இந்த அரவணப் பாயாசத்தை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    புழுங்கலரிசி - 200 கிராம் (சின்ன அரிசியாக இருக்க வேண்டும்)
    வெல்லம் - 1 கிலோ
    தண்ணீர் - தேவையான அளவு
    நெய் - 250 மில்லி
    ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன்.



    செய்முறை :

    புழுங்கலரிசியை தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி கொள்ளவும்.

    வடிகட்டிய பாயாசத்தை அடுப்பில் வைத்து பாகாகக் காய்ச்சவும்.

    இத்துடன் அரிசியைச் சேர்த்து மிதமான தீயில் கைவிடாமல் கிளறி விடவும்.. அதிகம் குழையாமலும், அதிகம் வெந்து போகாமலும் பார்த்துக்கொள்ளவும்.

    அரிசி உடைய ஆரம்பிக்கும் போது நெய்யை ஊற்றி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    பார்ப்பதற்கு வேகாதது போல இருக்கும் இந்தப் பாயசம் சாப்பிடும் போது கரகரவென்றிருக்கும்.

    சூப்பரான அரவணப் பாயாசம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம் இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.
    கல்வியிலோ, உடல்திறனிலோ, வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ பின் தங்கியிருக்கும் போது நண்பர்களால் புறக்கணிக்கப்படும்போதும் ஆசிரியர் அல்லது பெற்றோரால் அடிக்கடி அவமானப்படுத்தப்படும் போதும் ஒரு குழந்தை தன்னைத் தானே குறைத்து மதிப்பிடத் துவங்குகிறது. இங்குதான் குழந்தையின் மனவெழுச்சி நிலை மாறுபடுகிறது.

    இதை நாம் எப்படி கண்டுபிடிப்பது?

    * உங்கள் குழந்தை அதீத தனிமையை விரும்புகிறதா?
    * ஏதாவது ஒரு உடல் வலியைச் சொல்லி, பள்ளி செல்வதை படிப்பதைத் தவிர்க்கிறதா?
    * தேர்வு நேரங்களில் அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளின்போது வாந்தியெடுப்பதோ அல்லது வயிறு சரியில்லை எனச் சொல்வதோ
    நடக்கிறதா?
    * உங்களின் சாதாரண கோபத்துக்கும், தனது அசாதாரண கோபத்தை வெளிப்படுத்துகிறதா?
    * பொது நிகழ்ச்சிகளுக்கு வர மறுக்கிறதா?
    * சில நேரங்களில் ஒருவித எரிச்சல், அழுகை அல்லது மனபதற்றத்துடன் காணப்படுகிறதா?,
    * உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபப்படுவதும் அடம்பிடிப்பதுமாக இருக்கிறதா?

    மேற்கண்டவை மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள். இது ஓர் ஆலோசனைதான். மற்றபடி, உங்கள் குழந்தை மனப்பதற்ற நிலையில் உள்ளதா என்பதை அறிய ஒரு மனநல மருத்துவரிடம் காண்பித்து இது எந்த வகையிலான மனப்பதற்றம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். பெற்றோர் செய்ய வேண்டியவை கல்வியின் அவசியம், நல்ல மதிப்பெண் பெறுதலின் முக்கியத்துவம், லட்சியம் குறித்தான தூண்டுதல், உணர்வுப்பூர்வமான வழிகாட்டல் இவற்றை பற்றிய புரிதலே நம் குழந்தைகளை பொறுப்புடன் செயல்பட வைக்கும்.

    அச்சுறுத்தும் மிரட்டல்கள், தண்டனை தரப்போவதான வார்த்தைகள் குழந்தையை உங்களிடமிருந்து பிரித்துவிடும் என்பதை மறவாதீர்கள். குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம்... இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது. 
    துளசியை மட்டும் தனியாக உட்கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படும். அதே வேளையில் உரிய உபபொருட்கள் சேர்த்து சாப்பிடும்போது அரிய மருந்தாக துளசி விளங்குகிறது.
    ஒரு தாவரத்தை உண்ணும்போது, அதில் நோய் நீக்கும் தன்மை இருந்தால், அதை மூலிகை என்று கூறுகிறோம். அம்மூலிகைகளில் உணவாக சமைத்து உண்டபிறகு மருந்தாகும் தாவரத்தை கீரை என்கிறோம். அதே போன்று சமைக்காமல் பச்சிலையாக மருந்தாகும் தாவரத்தை பச்சிலை மருந்து என்று குறிப்பிடுகிறோம்.

    உண்ணாமல் தாவரத்தின் காற்றுபட்டால் நோய் நீங்கும் தாவரத்தை தெய்வ மூலிகை என்கிறோம். அப்படி எண்ணற்ற தாவரங்களின் காற்றுப்படுவதால் நோய் நீங்குவதோடு, அவை தரும் அதிகப்படியான உயிர்காற்றான பிராண வாயுவால் உயிரினங்கள் உயிர் வாழ முடிகிறது.

    அத்தகைய தாவரங்களில் ஒன்றுதான் துளசி. இதன் காற்றுப்பட்டாலே நோய் நீங்கும். அதிகளவில் பிராணவாயுவை உண்டு பண்ணி தருவது துளசி. இத்துளசியை வீடுகளில் வைத்து பெண்கள் அவற்றை சுற்றி வருவதை பார்க்க முடியும். அப்படி சுற்றி வரும்போது, பெண்களுக்கு அதிகளவு பிராணவாயு கிடைக்கிறது. இதனால் மூச்சுத் திணறல் உண்டாகாமலும், நோய் வராமலும் துளசி பாதுகாக்கிறது.

    இது தமிழ், சமஸ்கிருதம், மலையாளம் ஆகிய மொழிகளில் துளசி என்றும், கன்னடத்தில் விஷ்ணு துளசி என்றும் அழைக்கப்படுகிறது.

    துளசியில், துளசி, கருந்துளசி, செந்துளசி, நாதுளசி என நான்கு வகை உண்டு. இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இதை அப்படியே சாப்பிடக்கூடாது.

    துளசியில் இனி துளசி என்றால் 21 இலைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மிளகு சேர்த்து மைய அரைக்க வேண்டும். பிறகு வெள்ளைத்துணியில் வைத்து பிழிந்து இரண்டு அல்லது மூன்று துளிகள் மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வாரம் ஒரு நாள் தொடர்ந்து காலையில் கொடுத்தால் நுரையீரல் மற்றும் அது சம்பந்தமான நோய்கள் வராது.

    துளசி இலையில் ஒன்பது மிளகு வைத்து அரைத்து மூன்று நாள் சாப்பிட்டால் பேய் சொறி என்கிற தோல் அலர்ஜியை போக்கும்.



    இதே இலையில் ஐந்து மிளகு வைத்து அரைத்து பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் காலத்தில் மூன்று, நான்கு, ஐந்தாவது நாட்களில் மூன்று நாள் சாப்பிட்டால் மாதகால வயிற்று வலியை போக்கும்.

    இதையே திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையென்றால், மூன்று நாள் வீதம் மூன்று மாதங்களுக்கு கொடுத்தால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும்.

    துளசியில் ஏழு மிளகு சேர்த்து நன்றாக அரைத்து சாறெடுத்து, அதை வெள்ளைத்துணியில் நனைத்து நீண்டநாள் ரணம், புண் ஆகியவற்றின் மீது தொடர்ந்து ஐந்து நாள் வைத்து வந்தால் புண் ஆறிவிடும்.

    விஷக்கடிகளுக்கு ஒன்பது மிளகு வைத்து அரைத்து தினமும் காலை ஏழுநாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விஷம் முறியும். தோல் வெடிப்பு, தலையில் பொடுகு, சொறி, தலைப்புண், மீசை மீது ரணம், தாடிப்புண் போன்றவை சரியாகும்.

    துளசியுடன், இரண்டு மிளகு அளவு புதினா உப்பு, ஐந்து மிளகு ஆகியவற்றை அரைத்து, மூன்று நாளைக்கு கொடுத்தால் பக்கவாதம், ஜன்னி, ஈர சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

    மேலும் துளசியுடன் ஐந்து மிளகு, மூன்று மிளகு அளவு மஞ்சள் தூளும் சேர்ந்து அரைத்து மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் மூச்சு பயிற்சி (யோகாசனம்) போன்றவைகளுக்கு உகந்தது. நீர் உடல் குறையும். இதே துளசியுடன் மூன்று மிளகு, போதிய கற்கண்டுடன் அரைத்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.

    இப்படி துளசியின் மருத்துவ குணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதனால் தான் கோவில்களில் தீர்த்தத்துடன் துளசி உள்ளதோடு பல வீடுகளில் வணங்குவதற்குரியதாகவும் துளசி செடி விளங்குகிறது.

    ஆனால், துளசியை மட்டும் தனியாக உட்கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படும். அதே வேளையில் உரிய உபபொருட்கள் சேர்த்து சாப்பிடும்போது அரிய மருந்தாக துளசி விளங்குகிறது.

    டாக்டர் கே.பி.அர்ச்சுணன், தலைவர், தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்கம்
    திருமண வாழ்வில் அதிக பிரச்சனைகளையும் அந்த பிரச்சனைகளை எந்த முறையில் தீர்வு கண்டு குடும்பத்தில் சந்தோஷத்தை கொண்டு வரலாம் என்றும் பார்க்கலாம்.
    உங்களின் பார்ட்னர் உங்களிடம் சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபித்துக்கொள்கிறார் என்றால், அது உங்கள்மீதான கோபமல்ல. நிதானமாக இருந்து அந்தச் சூழ்நிலையை சகஜநிலைக்கு மாற்றுங்கள். என்ன செய்தால் உங்களின் பார்ட்னர் சகஜமாக மாறுவார் என்பதைத் தெரிந்துகொள்ள, கொஞ்சம் `ஹோம் வொர்க்' செய்யவேண்டியிருக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஹோம் வொர்க் செய்யலாமே!

    தற்போது பெண்களும் அலுவலகம் செல்கின்றனர். எனவே, வீட்டுவேலைகளை சமமாகப் பிரித்து செய்வது அவசியம். பொதுவாக ஆண்கள், வீட்டுவேலைகள் செய்யத் தெரியாமலோ அல்லது செய்யப் பிடிக்காமலோ இல்லை. வீட்டுவேலைகள் செய்வதிலிருக்கும் கடுமையைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் மிக முக்கியமான காரணம். ஒருமுறை தன் மனைவியோடு நின்று அனைத்து வேலைகளையும் சமமாகப் பங்கிட்டு செய்தால் மட்டுமே, இந்தப் பிரச்னை தீரும். அன்பை அளவில்லாமல் பரிமாறிக்கொள்வதுபோல், வீட்டுச்சுமையையும் சமமாகப் பகிர்ந்துகொள்ளுங்கள்!



    உங்கள் பார்ட்னரின் சிரிப்பு, அழுகை, கோபம் போன்ற `ரியல் நோட்டிஃபிகேஷனை'விட, உங்கள் போனில் வரும் `ரீல் நோட்டிஃபிகேஷனை' சரிபார்க்கத்தான் நேரம் சரியாக இருக்கிறது. குறைந்தபட்சம், வார இறுதிநாளில் தொலைபேசி மற்றும் சமூக வலைதளங்களுக்கு விடுதலை கொடுத்து, உங்கள் பார்ட்னரோடு நேரத்தை முழுமையாகச் செலவிடுங்கள். மனம்விட்டு பேசும்போது எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் இருப்பது சிறந்தது.

    வங்கிக்கணக்கில் பணம் இருந்தாலும் சரி... இல்லைன்னாலும் சரி, பண விஷயத்தில் கணவன் - மனைவிக்கிடையே சண்டைவருவது இயல்பு. கணவன்-மனைவியாய் இருந்தாலும், ஒவ்வொருவருடைய தேவை என்பது வேறு. எண்கள் நிறைந்த தாள் என்பதையும் தாண்டி அது உணர்வுகளின் வெளிப்பாடு. `ஆசை' இருக்கும் வரையில் `காசு' வாழும். எது அத்தியாவசியம், எது வீண் செலவு என்பதை கணவன் - மனைவி இருவரும் ஆலோசித்து முடிவெடுப்பது அவசியம். தேவைக்கு மீறி செலவு செய்வதில் இருக்கும் பிரச்னைகளை நன்கு ஆராய்ந்து, பிறகு அடி எடுத்து வைப்பது நல்லது. உங்கள் அன்பை முறிக்கும் எந்த விஷயத்தையும் இருவருக்குமிடையில் அனுமதிக்காதீர்கள்.

    சந்தோஷமான வாழ்க்கைக்காக சிறிது நேரம் உங்கள் பார்ட்னருக்குச் செலவிடுங்கள். அன்பைவிட வேறென்ன பெரிதாக இருக்கப்போகிறது.
    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த கோவைக்காய் சிப்ஸ் அருமையாக இருக்கும். இன்று இந்த சிப்ஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோவைக்காய் - கால் கிலோ,
    ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸ் - 150 கிராம்,
    எண்ணெய் - 200 கிராம்.



    செய்முறை:

    கோவைக்காயை நன்றாக கழுவி நான்காக நீளவாக்கில் வெட்டவும்.

    ரெடிமேட் பஜ்ஜி மிக்ஸை நறுக்கிய காயுடன் சேர்த்து, சிறிதளவு நீர் தெளித்துப் பிசிறி (பிசையக் கூடாது) கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசிறி வைத்த கோவைக்காயை சூடான எண்ணெயில் உதிர்க்கவும். நன்றாக சிவந்தபின் எடுத்துப் பரிமாறவும்.

    சூப்பரான கோவைக்காய் சிப்ஸ் ரெடி.

    குறிப்பு: விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறலாம். பஜ்ஜி மிக்ஸில் உள்ள காரம், உப்பு போதா விட்டால், கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உங்களை எப்போதும் பிரைட்டாக காட்ட, முகம் ப்ரெஷாக இருக்க வேண்டும். அதற்காக, வீட்டிலே செய்துகொள்ளக்கூடிய சூப்பரான பேஸ் மாஸ்க் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    உங்களை எப்போதும் பிரைட்டாக காட்ட, முகம் ப்ரெஷாக இருக்க வேண்டும். அதற்காக, வீட்டிலே செய்துகொள்ள வேண்டியவை...

    காய்ச்சிய பாலை ஒரு பஞ்சில் நனைத்து முகத்தைச் சுத்தம் செய்யவும். அதன்பின், பொடித்த சர்க்கரைத்தூளை முகத்தில் தேய்த்து, முகம் முழுவதும் லேசாக மசாஜ் செய்யவும். அதன்பின், ரோஸ்வாட்டரை முகத்தில் அப்ளை செய்து காயவிடவும். அதன்பின், பாலாடையை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும். இறுதியாக, பேஷ் பேக் போட்டு அரை மணி நேரம் கழித்து, முகத்தைக் கழுவவும். மாசு மருவற்ற முகம் பளிச்சென மிளிரும்.

    பேஷ் பேக்:

    முல்தானிமெட்டி - ஒரு டீஸ்பூன்
    வெள்ளரிக்காய் ஜூஸ் - ஒரு டீஸ்பூன்
    ரோஸ்வாட்டர் - ஒரு டீஸ்பூன்

    இவற்றை ஒன்றாகச் கலந்து, முகத்தில் அப்ளை செய்யவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு கழுவவும். அல்லது, பாலாடையுடன் குங்குமப் பூ, வெள்ளரிச் சாறு, அரைத்த சந்தனம் ஆகியவற்றைக் கலந்து, முகத்தில் பேக் போட்டுக்கொள்வதன் மூலம் முகம் அழகாக மிளிரும்.

    இதனைச் செய்ய நேரம் இல்லை என்பவர்கள், க்ளென்சிங், டோனிங் மாய்சரைஸிங்கை உங்கள் சருமத்துக்கு ஏற்ப க்ரீம் டைப்பாகவோ, ஜெல் டைப்பாகவோ தேர்வுசெய்து பயன்படுத்தலாம். அல்லது, மாதம் ஒருமுறை பார்லரில் சென்று பேஷியல் செய்துகொள்வதன் மூலம், இறந்த செல்களைச் சருமத்திலிருந்து நீக்கி, முகத்தைப் பளிச்சிட செய்யலாம்.
    இந்த முத்தியை தொடர்ந்து செய்து வந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து விடும். இன்று இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    செய்முறை : நடுவிரல், மோதிர விரல் உள்ளங்கையைத் தொட்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டி இருக்க வேண்டும்.

    தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் செய்தாலே போதும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்யலாம்.

    பயன்கள் : இரத்த அழுத்தம் உடனடியாக கட்டுக்குள் வந்து விடும். தலைசுற்றல், படபடப்பு குறையும். வெயிலில் அலையும் போது, அதிகப்படியான மனஉளைச்சல், அதிகப்படபடப்பு பி.பி.அதிகரிக்கும். அந்த சமயங்களில், 10 நிமிடங்கள் இந்த முத்திரையை செய்யலாம்.

    விரிப்பில் மீது நேராக சப்பணம் இட்டு அமர்ந்து நாற்காலியில் பாதங்கள் தரையில் பதிய அமர்ந்தபடி செய்யலாம். வெறும் வயிறு அல்லது சாப்பிட்ட ஒன்றரை மணி நேரம் கழித்து செய்யலாம்.
    வரகு, ராகி, கோதுமையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. வயதானவர்கள் சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது.
    தேவையான பொருட்கள் :

    வரகு அரிசி - 200 கிராம்
    கோதுமை - 100 கிராம்
    கேழ்வரகு - 100 கிராம்
    உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
    வெந்தயம் - 2 டீஸ்பூன்
    நெய் (அ) நல்லெண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வரகு அரிசி, ராகி, கோதுமையை தண்ணீரில் 5 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைத்து கொள்ளவும்.

    அரைத்த எல்லா மாவையும் ஒன்றாக கலக்கவும்.

    இதில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

    சத்தான வரகு ராகி கோதுமை தோசை தோசை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    வீட்டுக்கடன் பெறுவதற்கு எளிதான சூழல் அமைந்துள்ள இன்றைய நிலையில் வங்கிகள் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு எளிமையான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றன.
    வீட்டுக்கடன் பெறுவதற்கு எளிதான சூழல் அமைந்துள்ள இன்றைய நிலையில் வங்கிகள் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பல்வேறு எளிமையான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றன. வங்கி நடவடிக்கைகளில் வாடிக்கையாளரது நன்னடத்தைகளுக்கு வெகுமதி அளிக்க இருப்பதாக பல வங்கிகள் அறிவித்துள்ளன. அதாவது, வாடிக்கையாளரின் ‘கிரெடிட் ஸ்கோர்’ (Credit Score Report) நிலவரத்தை பொறுத்து வீட்டு கடன் வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நான்கு அமைப்புகள்

    மத்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் அடிப்படையில் நான்கு விதமான வங்கி கடன் தகவல் அமைப்புகள் (Credit Rating Bureaus) செயல்பட்டு வருகின்றன. அவை, சிபில், ஈக்விபேக்ஸ், ஹை-மார்க் மற்றும் எக்ஸ்பீரியன் ஆகியவை ஆகும். இந்த அமைப்புகள் வாடிக்கையாளரது வங்கி கணக்குகளை அனைத்து அடிப்படையிலும் ஆராய்ந்து, சரியான நேரத்தில் தவணைகள் செலுத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு என்ற விபரங்களை கவனித்து அதற்கேற்ப ‘கிரெடிட் ஸ்கோர்’ மதிப்பீட்டை அளிக்கின்றன.

    கடன் பெற்றவர் பற்றி தகவல்

    கடந்த வருடங்களில் தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறு நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெற்றவர்களது தகவல்களை மேற்கண்ட வங்கி கடன் தகவல் அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.



    ‘ஸ்கோர்’ மதிப்பிடும் விதம்

    பெற்ற கடனை திருப்பி செலுத்தும் முறையை பொறுத்து ‘கிரெடிட் ஸ்கோர்’ குறைந்தபட்சம் 300 என்ற அளவாகவும், அதிகபட்சம் 900 என்ற அளவாகவும் கணக்கிடப்படுகிறது. அதன் அடிப்படையில் 500-க்கும் மேற்பட்டு கூடுதலான ‘ஸ்கோர்’ பெற்ற வாடிக்கையாளர்களுக்கு புதிய வங்கி கடன் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

    எச்சரிக்கை அவசியம்

    பொதுவாக, வங்கி வாடிக்கையாளர்களில் பலரும் முன்னர் ஒரு சமயத்தில் பெற்ற வங்கி கடனுக்கான நடவடிக்கைகளில் சரிவர செயல்படாமல் விட்ட காரணத்தால், பின்னர் கடன் பெறும் காலத்தில் அது பாதிப்பை அளிக்கக்கூடியதாக மாறும் என்பது பற்றி தெரியாமல் உள்ளதாக நிதியியல் ஆலோசகர்கள் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 
    சில கர்ப்பிணிகள் தங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருந்துகளை எடுத்துக் கொள்வதுண்டு. அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா என்று சந்தேகம் வரும்.
    ஒரு குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை பெறுவதையும், நல்ல மன வளர்ச்சியை கொண்டிருப்பதையும் அந்த குழந்தை பிறந்தவுடன் அதற்குக் கிடைக்கும் போதிய அளவிலான தாய்ப்பால் உறுதி செய்கிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் முருகன் ஜெயராம் விளக்குகிறார்.

    ஒரு குழந்தையின் உடலை பாதுகாப்பதில் தாய்ப்பாலுக்கு நிகர் எதுவுமே இல்லை. தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம். சர்க்கரை நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கலாம். அதிக எடை அடையாமலும் தடுக்க முடியும் என்கிறது மருத்துவ ஆய்வுகள்.

    அரிய பல சத்துக்கள் நிறைந்த தாய்ப்பால் குழந்தைகள் முழு ஆரோக்கியத்துடன் வளர உதவுகிறது. எனவே, எக்காரணம் கொண்டும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை தவிர்க்கக் கூடாது. சிலருக்கு மார்பகங்கள் சிறிதாக இருக்கலாம்.

    இதனால், போதிய அளவு தாய்ப்பால் சுரப்பு இருக்குமா என்று சந்தேகப்படுவர். ஆனால், மார்பகங்களின் அளவுகள் ஒரு பிரச்சினையே அல்ல. குழந்தை பிறந்து விட்டால் தாய்ப்பால் ஊறுவது இயற்கையானது.

    சத்துள்ள உணவுகளை உண்ணவில்லை என்றாலும் தாய்ப்பாலில் குழந்தைக்கான சத்துக்கள் நிரம்பியே காணப்படும். சில கர்ப்பிணிகள் தங்கள் உடல்நலப் பிரச்சினைகளுக்காக மருந்துகளை எடுத்துக் கொள்வதுண்டு. அப்போது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா என்று சந்தேகம் வரும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில், தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கலாம். குழந்தைக்கு பாலூட்டும் காலங்களில் எக்காரணம் கொண்டும் கடைகளில் தாங்களாகவே மருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது.

    குழந்தையின் உதடுகள் பால் குடிப்பது போல் அடிக்கடி சப்புக்கொட்டும். கைகளை அடிக்கடி முகம் மற்றும் வாய் நோக்கி கொண்டு செல்லும். குழந்தையின் இந்த அறிகுறிகளை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தை அழத்தொடங்கும். குழந்தையை தாய் உடலுடன் ஒட்டி அணைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், குழந்தை பாதுகாப்பாக உணருவதோடு, குழந்தை அமைதியாக இருக்கும். அதன் உடலின் சர்க்கரை அளவு இயல்பாக இருக்கும். குழந்தைக்கு பால் கொடுக்கும் போது தாயின் தலையும், தோள்பட்டைகளும் சரியான நிலையில் இருக்கும்படி அமர்ந்து தலையணையில் முதுகை சாய்த்து அமர்ந்த நிலையில் தரலாம்.

    டாக்டர் முருகன் ஜெயராம்
    ×