என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    பெண்கள் பழகும்போதே பக்கத்தில் இருப்பவர் பெண் பித்தரா? என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் எளிதாக பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.
    ‘மீ டூ’ விவகாரம் விஸ்பரூபம் எடுத்ததில், ஆண்கள் மட்டுமல்ல பெண்களுமே கலங்கித்தான் போயிருக்கிறார்கள். அனைவரும், ஜென்டில்மேனாக நினைத்த பல பிரபலங்கள், பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருப்பது எல்லோருக்கும் அதிர்ச்சியையும், கவலையையும் தந்திருக்கிறது. நல்லவர்போல பழகிக் கொண்டிருக்கும் ஒருவர், பாலியல் தொந்தரவில் ஈடுபடும்போது அந்த இடமே நரகம்போலத் தோன்றும்.

    அது அலுவலகமாக இருந்தால், வாழ்வுக்கு அடிப்படையான வேலையைவிடாமல் இந்தத் தொந்தரவில் இருந்து தப்பிப்பது எப்படி என்று பெண்கள் சிந்திப்பார்கள். உறவினரோ, நம்பிக்கையுடன் பேசிய நண்பரோ அப்படி தொந்தரவு செய்தால் அவர்களிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று மனம் குழம்புவார்கள். பழகும்போதே பக்கத்தில் இருப்பவர் பெண் பித்தரா? என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் எளிதாக பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.

    பேஸ்புக்கில் நட்பு பாராட்டுபவர் உரையாடலை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை கண்டுபிடிக்கலாம். ‘எப்போது உங்களைப் பார்ப்பேன்’, ‘ஐ மிஸ் யூ’, ‘ஐ லைக் யூ ’ என்பது போன்ற உரையாடல்களை அடிக்கடி போடுபவர், எப்போதும் உரையாடலுக்கு அழைப்பவர், போன் எண்ணைக் கேட்பவர், உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களை அறிந்து கொண்டு அதைச் செய்து உங்களை கவர நினைப்பவர்கள்.. போன்றவர்களிடம் மிக கவனமாக இருக்கவேண்டும். அவர் உங்களிடம் மட்டுமல்லாமல் உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் அப்படி பேசுகிறாரா? என்பதை அறிந்து கொண்டு அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

    “உங்கள் உடை அழகு, உங்கள் கண்கள் அழகோ அழகு, நன்றாகப் பேசுகிறீர்கள்? அழகாக எழுதுகிறீர்கள், உங்களைப் போன்ற பெண்ணை நான் பார்த்ததே இல்லை” என்று எதற்கெடுத்தாலும் உங்களை பாராட்டிக் கொண்டிருப்பவர்களிடம் தேவை கவனம்.

    உங்களை மற்றொரு பெண்ணின் பெயரைச் சொல்லி அழைப்பவர், அவருக்கு போன் செய்வதற்காக உங்கள் எண்ணை டயல் செய்துவிட்டேன் என்று பேச்சை ஆரம்பிப்பவர், உங்களிடம் எதையோ எதிர்பார்க்கிறார் என்று உஷாராகிவிடுங்கள்.



    நீங்கள் தனிமையிலும், கவலையிலும் இருப்பதை சிலர் சரியாக மோப்பம் பிடித்து பின் தொடருவார்கள். அவர்கள் அந்த சமயத்திற்காகத்தான் காத்திருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் உங்களை நெருங்கும் அவர்கள், தன்னம்பிக்கை ஊட்டுவதுபோல, “உங்களால் முடியும்” என்றும், “நான் உங்களுக்கு உதவுகிறேன்” என்றும், “நாம் ஒன்று சேர்ந்தால் சாதித்துவிடுவோம்” என்றும் நம்பிக்கை வலைவிரிப்பார்கள். அதில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

    தொடர்ந்து மெசேஜ் வருகிறதா?

    தவறாமல் தொடர்ந்து மெசேஜ் அனுப்புபவர்கள் எதிர்காலத்தில் பாலியல் தொந்தரவு தருவதற்கு வாய்ப்பு உண்டு. நீங்கள் ஒரு வாட்ஸ் அப் குழுவில் இருந்து விடைபெற்றாலும், தொடர்ந்து உங்கள் எண்ணை தேடிப்பிடித்து மெசேஜ் பறக்கவிடுவார்கள் அவர்கள். யாராவது ஒருவர் சிக்குவார் என்று நினைத்து, பலரிடம் இப்படி வாலை ஆட்டிக்கொண்டிருப்பார்கள்.

    செல்லப்பெயர் சூட்டுகிறார்களா?


    இந்த ஆசாமிகளில் சிலர், கொஞ்சிப் பேசி கவிழ்ப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். சுவீட்டி, பேபி, ஹனி, டார்லிங் என்று செல்லமாக அழைப்பதுடன் உங்களுக்குப் பிடித்தமானதையெல்லாம் செய்யத் தவறமாட்டார்கள். அவர்களிடம் தேவை எச்சரிக்கை.

    போனை மறைப்பவர்களா?

    இந்த ஆசாமிகள் பெரும்பாலும் மற்றவர்கள் அவர்களை கவனிக்கிறார்களா? என்பதை தீவிரமாக கவனிப்பார்கள். நீங்கள் அவர் மீது சந்தேகத்துடன் திரும்பினால் அவர் வேறு எங்கோ பார்ப்பதுபோல திரும்பிக் கொள்வார்கள். போனைப் பார்க்க முயன்றால் மறைத்துக் கொள்வார்கள். அதுபோல பல்வேறு விஷயங்களை ஒளிவுமறைவாக செய்வார்கள், எதிலும் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

    உண்மையை மறைக்கிறார்களா?

    அவர்களது உண்மையான பெயரை மறைத்து வேறு பெயரை சொல்பவர்கள், பெயரை மாற்றிச் சொல்லிப் பழகுவார்கள் அல்லது உங்கள் பெயரை மாற்றி செல் போனில் சேமிப்பது, தெரிந்தவர்களிடம் வேறுபெயரை சொல்லிவைப்பது என ஆங்காங்கே உண்மைகளை மறைப்பவர்களிடம் கவனமாக இருங்கள். முடிந்தால் உங்களையும் அப்படியே பின்பற்றச் சொல்வார்கள். அவர்களின் தவறுகளுக்கு அடிபணிந்தால் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். கவனம் தேவை.
    குளிர் காலத்தில், இதமான பருவநிலை இருந்தாலும், கூடவே தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றினால் நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
    தமிழகத்தில், நவம்பர் - ஜனவரி வரை குளிர், மழைக்காலம். இந்தப் பருவத்தில், இதமான பருவநிலை இருந்தாலும், கூடவே தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, ‘வைரஸ்’ தொற்று முதியவர்களையும், குழந்தைகளையும் அதிகம் தாக்கும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுமுறைகளை கடைபிடித்தால் நோய் வராமல் காத்து கொள்ளலாம்.

    தோல்: தோலில் வறட்சி, அரிப்பு, தலையில் பொடுகு அதிகம் இருக்கும். நீரிழிவு கோளாறு உள்ளவர்களுக்கு, அதிகமாக தோலின் நிறம் கறுப்பது, உதடுகளில் வெடிப்பு வரலாம். தினமும் தலையில் எண்ணெய் தேய்ப்பது, மிருதுவான சோப்பு, ஷாம்பு பயன்படுத்துவது, வெடிப்பு இருக்கும் இடத்தில் அவரவரின் தோலுக்கு ஏற்ற களிம்பு தடவுவது, வாரம் ஒருமுறை உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வறட்சியைப் போக்கும்.

    மூட்டு பிரச்சனைகள்: மூட்டுகளில் வலி, இறுக்கம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உணர்ச்சி அற்ற நிலை ஏற்படலாம். தவறாமல் நடைப்பயிற்சி, யோகா செய்யலாம். தேவைப்பட்டால் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஜீரண மண்டல கோளாறுகள்: வீட்டில் சமைத்த உணவையே சாப்பிட வேண்டும். வெளியில் சுகாதாரமற்ற முறையில் தயார் செய்யும் உணவை சாப்பிட்டால், கிருமித் தொற்று ஏற்பட்டு, வாந்தி, பேதி, வயிற்றில் வலி வரலாம். குளிர்ந்த நிலையில், ‘பாக்டீரியா’ போன்ற, தொற்றுக் கிருமிகள் அதிகம் வளரும். அந்தந்த வேளை சமைத்த சூடான உணவை சாப்பிடுவது நல்லது. வெளியில் சாப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், நல்ல சுகாதாரமான இடங்களில் மட்டுமே உண்ண வேண்டும். கொதிக்க வைத்து, ஆற வைத்த நீரை குடிப்பது பாதுகாப்பானது.



    இருமல், சளி தொல்லைகள்: குளிர் காலத்தில் மூக்கில் நீர் வடிவது, காய்ச்சல், இருமல், சளித் தொல்லைகள் வர வாய்ப்புகள் அதிகம். பாக்டீரியா, வைரஸ் போன்ற தொற்றுக் கிருமிகளால், இத்தொல்லை வரும். உடல் சூட்டை அதிகரிக்கும் உடை அணிவது, கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லாமல் இருப்பது, ஆஸ்துமாவிற்கு, ‘இன்ஹேலர்’ பயன்படுத்துவது, ப்ளூ, நிமோனியா வராமல் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வது, தொல்லைகளைத் தவிர்க்க உதவும். தடுப்பு ஊசியால் எந்தப் பக்க விளைவுகளும் வராது.

    நரம்பு பிரச்சனைகள்: குளிர் காலத்தில் பார்கின்சன்ஸ், பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் அதிகமாகும். தசைகளில் இறுக்கம், வலி வரும். எனவே, வீட்டிலேயே பிசியோதெரபி தினமும் செய்து கொள்வது பலன் தரும்.

    பொதுவான உடல் பிரச்சனைகள்: குளிர் காலத்தில் பசி அதிகம் இருக்கும். உடல் பருமன் உள்ளவர்கள், எடைக்கு ஏற்ப கலோரி குறைந்த உணவாக சாப்பிட வேண்டும். தைராய்டு பிரச்சனை இருந்தால், அதிக குளிரை தாங்க முடியாது. தாகம் குறைவாக இருக்கும். சோர்வு, பலவீனம், நீர் வறட்சி ஏற்படும். வெங்காயம், பீட்ரூட், பச்சைக் காய்கறிகள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களில் மாதுளை, கொய்யா மிகவும் நல்லது. பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற உலர் நட்ஸ், காய்கறி சூப் நிறைய சாப்பிடலாம். தாகம் இல்லை என்றாலும் போதுமான அளவு நீர் குடிக்க வேண்டும்.
    சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குடைமிளகாய் - ஒன்று,
    உருளைக்கிழங்கு - 2,
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    உருளைக்கிழங்கைத் தோல் சீவி குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும்.

    வேக வைத்த உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

    குடைமிளகாயின் நடுவில் இருக்கும் விதைகளை நீக்கிவிட்டுச் சிறு சிறு சதுரங்களாக நறுக்கிக்கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி வேகவைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கவும்.

    அதனுடன் குடைமிளகாயைச் சேர்த்து லேசாக நிறம் மாறாமல் வதக்கவும். குடைமிளகாய் நன்றாக வேகக்கூடாது.

    உருளைக்கிழங்கு நன்கு பொன்னிறமாக வதங்கியதும் மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா ரெடி.

    குறிப்பு: குடமிளகாயை மற்ற காய்கறிகளைப் போல் அதிக நேரம் சமைக்காமல் லேசாக வதக்கினால் அதன் சத்துகள் முழுவதுமாகக் கிடைக்கும்.

    இந்தப் பொரியல் குழந்தைகள் விரும்பி உண்ணும் ஃப்ரைடு ரைஸுக்கு ஏற்ற சைடிஷ். மிளகுத்தூளுக்குப் பதிலாக, சாம்பார் பொடி சேர்த்து இதைச் செய்து எலுமிச்சை சாதம் போன்ற கலவை சாதங்களுக்கு சைடிஷ்ஷாகப் பரிமாறலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக அழகாக இருக்க இப்பொழுது நிறைய கூந்தல் பராமரிப்பு பொருட்கள் உள்ளன. அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
    இந்த காலத்தில் பெண்கள் நீண்ட நேரம் வேலை மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றால் அவர்களின் கூந்தல் நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றனர். உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக அழகாக இருக்க இப்பொழுது நிறைய கூந்தல் பராமரிப்பு பொருட்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. உங்களுக்கு தகுந்த பிராண்ட் பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே வேலைக்கு போகும் பெண்களின் கூந்தல் பராமரிப்புக்காக மிகவும் அத்தியாவசியமான சில பொருட்களை பற்றி பார்ப்போம்.

    * ஹேர் கன்டிஷனரை நீங்கள் ஷாம்பு பயன்படுத்தினால் முடியில் இருக்கும் எண்ணெய் பசை மட்டும் தான் போகும். ஆனால் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு கன்டிஷனர் தேவை. தினமும் ஷாம்பு போட்டு குளித்த பிறகு கன்டிஷனர் பயன்படுத்தினால் மிருதுவான மற்றும் அலங்கரிக்க ஏதுவான கூந்தல் கிடைக்கும். நீங்கள் கன்டிஷனரை தேர்ந்தெடுக்கும் போது உங்கள் ஷாம்பு பிராண்ட் கன்டிஷனரை அல்லது உங்கள் கூந்தல் ஸ்டைல்லிஸ்ட் இடம் ஆலோசனை பெற்று தேர்ந்தெடுக்கலாம்.

    * நீங்கள் நீண்ட நேரம் வேலை பார்ப்பவரா இருந்தால் கண்டிப்பாக அந்த நாள் இறுதியில் கூந்தல் கலைந்து போகும். இந்த பிரச்சினை நிறைய பெண்களிடம் உள்ளது. எனவே இதற்கு நீங்கள் ஹேர் வேக்ஸ் பயன்படுத்தினால் நல்ல வித்தியாசத்தை காண்பீர்கள். கொஞ்சம் ஹேர் வேக்ஸ் பயன்படுத்தினால் போதும் உங்கள் கூந்தல் அதிசயிக்கும் படி அழகாக கலையாமல் இருக்கும்.



    * உங்களது முகம் மற்றும் கூந்தல் பொலிவிழந்து காணப்பட்டால் அது எண்ணெய் பசையுள்ள கூந்தலாகும். இதற்கு நீங்கள் தனியாக பராமரிப்பு செய்ய நேரம் கிடைக்காது. இதற்கு ஒரே தீர்வு வறண்ட கூந்தல் ஷாம்பு இதை நீங்கள் நேரடியாக பயன்படுத்தினால் கூந்தல் அழகாக மாறும். நீங்கள் வெளி இடங்களுக்கு செல்லும் போது கூட கைக்கு அடக்கமான ஷாம்பு பாட்டில் வாங்கி கொள்ளுங்கள். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    * நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் காலநிலை மாற்றம் உங்களுக்கு முடி உதிர்வை ஏற்படுத்துகிறது. இதை கண்டு கொள்ளாமல் விட்டால் நாளுக்கு நாள் அதிகரித்து விடும். இதை சரி செய்ய ஹேர் வாளியுமரைசரை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். இந்த வாளியுமரைசர் ஸ்பிரே வடிவிலும் கிடைக்கிறது. ஷாம்பு போட்ட பிறகு இதை பயன்படுத்தினால் கூந்தல் அழகாக அடர்த்தியாக காணப்படும். மேலும் இது வறண்ட சிக்கலான கூந்தலை சமாளிக்கவும் உதவுகிறது.

    * உங்களது நீளமான கூந்தல் என்றால் அதை முழுமையாக பராமரிக்க நீண்ட நேரம் தேவைப்படும். ஆயில் மற்றும் ஷாம்பு அதன் வேரை சென்றடைய நீண்ட நேரம் ஆகும். எனவே இதற்கு ஹேர் மாஸ்க் மற்றும் க்ரீம்கள் பயன்படுத்தினால் எளிதில் முடியின் வேருக்கு சென்று நல்ல பலனை தரும். மேலும் மூலிகை மாஸ்க் மற்றும் க்ரீம்கள் பயன்படுத்தினால் அதிகமான பலனை பெறலாம்.
    பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்கள் இவைகளை கொண்டு பெண்களின் உடல் ஆரோக்கியத்தை அறியலாம்.
    பெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு நாள்கள் வரை திட்டுத்திட்டான ரத்தப்போக்கு இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள். ஆனால் உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்கள் எனப் பொதுவான வரைமுறையில் இருந்து இவை மாறுபடும்போது, அவை ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறியாகப் பார்க்கப்பட வேண்டும்.

    அதிகளவு உதிரப்போக்கு ஏற்படுத்தும் எண்டோமெட்ரியாசிஸ் (Endometeriosis)

    மாதவிடாயின் உதிரம் அடர்த்தி அதிகமாகவும் அதிகளவிலும் வெளியேறினால், கருப்பையின் எண்டோமெட்ரியாசிஸ் திசுக்கள் கரைந்து வெளியேறுகின்றன எனக் கொள்ளலாம். இதற்கு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். மருந்துகளிலேயே இதைக் குணப்படுத்திவிடலாம். சரியாகாவிட்டால், திசுக்களை பயாப்ஸி செய்து நோயின் தீவிரத்தன்மையைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படும்.

    மாதவிடாய் மாயமாகும் அமனோரியா (Amenorrhoea)

    சிலருக்குக் கர்ப்பம் தரிக்காமலேயே மாதவிடாய் நின்று போகலாம். சீரான சுழற்சியின்றிப் பின்னர் வெளியேறலாம். இதனை ‘செகண்டரி அமனோரியா’ என்கிறோம். ஹார்மோன் சமச்சீரின்மை பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு இருக்கலாம். அவர்கள் ஹார்மோன் டெஸ்ட் எடுத்துப் பிறகு சிகிச்சை பெறுவது அவசியம். சிலருக்குப் பிறவியிலேயே கர்ப்பப்பை வளர்ச்சி பெறாமல் இருக்கும். இதை ‘பிரைமரி அமனோரியா’ என அழைப்போம். இவர்கள் தக்க வயது வந்த பின்னரும் பூப்படையாமல் இருப்பார்கள். இவர்கள் ‘இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கலாம்’ என்று நினைக்காமல், மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொள்வது அவசியம்.

    பயமுறுத்தும் பிசிஓடி (PCOD – PolyCystic Ovarian Syndrome)

    சீரற்ற மாதவிடாய்ச் சுழற்சி, மாதவிடாய் ஒரே நாளில் முடிந்துவிடுவது, தொடர்ச்சியான மாதவிடாய் நாள்கள் இவையெல்லாம் பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சனையின் அறிகுறிகள். இளம் பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்கும் பெண்கள் வரை பாதிக்கக்கூடிய இப்பிரச்னைக்கு காலம் தாழ்த்தாத மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம்.



    வலிதரும் ஃபைப்ராய்டு (Fibroid)

    சிலருக்கு அதிக வலியோடு மாதவிடாய் நிகழும். இதற்குக் கர்ப்பப்பையில் இருக்கும் ஃபைப்ராய்டு கட்டிகளும் காரணமாகலாம். இதனால் மாதவிடாய் ஒழுங்கற்று 20 நாள்களுக்கு ஒருமுறை ஏற்படலாம். இந்தக் கட்டிகள் பெரிதாகும்போது உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டிகளை அகற்றச் சிகிச்சை பெற வேண்டும்.

    கருக்கலைதல் (Miscarriage) கவலை

    சிலருக்குச் சிறுநீர்ப் பரிசோதனையில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட சில நாள்களில் உதிரம் கொஞ்சம் கொஞ்சமாக வலியோடு வெளியேறும். இவ்வாறு இருந்தால் மருத்துவ ஆலோசனையின் படி ஸ்கேன் செய்து கருவானது வளர்ச்சி நிலையில் இருக்கிறதா அல்லது கலைந்துவிட்டதா என்று உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தொடரும் கர்ப்பக்காலத்தில் ஓய்வு முதல் மருந்து வரை மருத்துவ ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கரு கலைந்திருந்தால், அதற்கான காரணம் அறிந்து, சிகிச்சையையும் எடுக்க வேண்டும்.

    துர்நாற்றமா? கவனம் தேவை!


    மாதவிடாய் ரத்தம் சிலருக்குத் துர்நாற்றத்துடன் வெளியேறலாம். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான காரணத்தை மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மூலம் அறிந்துகொள்ள வேண்டும். எண்டோமெட்ரியல் கேன்சர் இருப்பவர்களுக்கு இவ்வாறு ஏற்படலாம். இவர்களுக்கு மாதவிடாய் முறையற்று 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை என ஏற்படும். இதனால் ரத்தச்சோகை ஏற்படலாம்.

    மெனோபாஸுக்குப் பின்னர், அதாவது மாதவிடாய் நின்ற பின்னரும் உதிரம் வெளியேறுவதாக உணர்ந்தால் அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான (Cervical Cancer) அறிகுறியாக இருக்கலாம். அதை அசட்டை செய்யாமல் ஆரம்பத்திலேயே பரிசோதனையில் உறுதிப்படுத்திச் சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்.
    கொள்ளுப்பருப்பில் ஏராளமான நன்மைகள் உள்ளன. மாதத்துக்கு இரண்டு முறை சேர்த்துக்கொண்டால் போதுமானது. இன்று கொள்ளு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இட்லி அரிசி - ஒரு கப்,
    பச்சரிசி - அரை கப்,
    கொள்ளு - ஒன்றரை கப்,
    கல் உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் கொள்ளுப்பருப்பு சேர்த்து, தண்ணீரில் நன்கு கழுவிக்கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் மீண்டும் ஒருமுறை தண்ணீரில் கழுவிக்கொள்ளவும்.

    ஊறவைத்தவற்றை கிரைண்டரில் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து பொங்கப் பொங்க நன்கு அரைத்துக்கொள்ளவும் (சுமார் 30 நிமிடங்கள்). அரைத்த மாவைப் பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளவும். பிறகு தேவையான அளவு கல் உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்கவிடவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை மாவை ஊற்றி தோசையைச் சுற்றி 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு நன்கு முறுகலானதும் திருப்பிப் போட்டு வேகவைத்து இறக்கவும்.

    காரச் சட்னியுடன் சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான கொள்ளு தோசை ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்களை சொல்லக் கேட்டு தெரிந்து கொள்வதை விட, பெற்றோரையும் மற்றோரையும் பார்த்து தெரிந்து கொள்கின்றனர் என்பது புலப்படுகிறது.
    ஆம்பூரில் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் சிறுமி ஹனீபாஜாரா போலீஸ் நிலையத்தில் தன் தந்தை மீதே ஒரு விசித்திர புகார் கொடுத்தார். அதில், தன் வீட்டில் கழிவறை கட்டக்கோரி தந்தையிடம் கேட்டதாகவும் அதற்கு படிப்பில் முதலிடம் எடுத்தால் கழிவறை கட்டி தருவதாக அவர் உறுதி அளித்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளாக படிப்பில் முதலிடம் பெற்ற பின்னரும் கழிவறை கட்டித்தராமல் ஏமாற்றி வருவதாகவும் கூறி இருந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் தூய்மை இந்தியாதிட்டத்தின் கீழ் அந்த சிறுமி வீட்டில் தனி நபர் கழிப்பறை கட்டிக்கொடுக்க உத்தரவிட்டார்.ஆம்பூர் நகராட்சி ஆணையாளர் அச்சிறுமியை தூய்மை இந்தியா திட்டத்தின் தூதராக நியமித்து உத்தரவிட்டார்.

    சமூக வலைதளங்களில் வைரலான ஒரு செய்தி என் மனதை வருடியது. பயணம் செய்யும் தாயும், அவருடைய ஆறு வயது குழந்தையும் புத்தகம் படித்துக்கொண்டிருந்தனர். உடன் பயணிப்பவர்களுக்கு ஆச்சரியம். ‘என் குழந்தை எத்தனை அறிவுறுத்தினாலும் கேட்பதில்லை. கைபேசியில் விளையாடத்தான் விரும்புகிறது.

    உங்கள் குழந்தை எப்படி அமைதியாக படிக்கிறது? நீங்கள் என்ன சொல்லி குழந்தைக்கு புரிய வைத்தீர்கள்?’ என்று ஒருவர் அந்ததாயிடம் கேட்டார். அதற்கு அந்த தாய் ‘குழந்தைகள் நாம் சொன்னால் கேட்பதில்லை. அவை நம்மைப் பார்த்துதான் கற்றுக்கொள்கின்றன’ என்று ஒற்றை வரியில் பதிலளித்தார். குழந்தைகள் பெற்றோரைப் பார்த்துதான் நிறைய கற்றுக்கொள்கின்றன என்பது தான் உண்மை. கடந்த வருடம் தொலைக் காட்சிப்பெட்டியில் ஒரு விளம்பரம் பார்த்தேன். மகனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறார் தந்தை. ஆனால் மகன் அவருடன் செல்ல மறுத்து அழுகிறான்.

    என்னவென்று கேட்டபோது ‘நீ ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுகிறாய். அதனால் உன்னுடன் வர மாட்டேன்’ என்கிறான் மகன். தந்தை தன் தவறை உணர்ந்து ஹெல்மெட் அணிந்து அவனை அழைத்துக் செல்கிறார். ஒரு குழந்தை காயம் பட்ட சமயத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் அழுதால் ஏதோ ஒரு காரணத்துக்காக அது போராடுகிறது என்று பொருள். இந்தக் குழந்தை போராடி தன் தந்தை செய்கின்ற தவறை எடுத்துச் சொல்லி அவரை திருத்துகிறதா?

    “பாடியநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், வாகனம் ஓட்டும் பெற்றோர் ஒரு மாதத்தில் எத்தனை முறை சாலை விதிகளை மீறியிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து ஒவ்வொரு மாணவரும் மாதாந்திர அறிக்கை தரவேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அப்பெற்றோருக்கு தம் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்போகிறது” என்று என் நண்பர் ஒரு செய்தியை என்னிடம் சொன்னார். பிள்ளைகள் பெற்றோரைத் திருத்தப்போகிறார்களா?

    பள்ளி மாணவர்கள் குடித்துவிட்டு வகுப்புக்குச் செல்வது, சாதிச் சண்டைகளில் ஈடுபடுவது, பெண் குழந்தைகளுக்கும், மாணவிகளுக்கும் கற்பழிப்பு போன்ற கொடிய பாலியல் தொல்லைகள் கொடுப்பது, பள்ளிக்கு விடுமுறை வேண்டி சக மாணவனைக் கொலை செய்வது, குண்டு வைத்துள்ளதாக பள்ளி நிர்வாகத்தை மிரட்டி விடுமுறை விடச் செய்வது, ஆசிரியர்களை மிரட்டுவது, அடிப்பது, தற்கொலை மிரட்டல் விடுவது மற்றும் தேர்வு எழுதுவதில் தில்லு முல்லுகள் செய்வது போன்ற நிகழ்வுகள் இந்நாட்களில் கூடிக்கொண்டே இருக்கின்றன.



    பற்றாக்குறைக்கு தொலைக்காட்சித் தொடர்களும், திரைப்படங்களும் குடும்பத்தின் சிந்தனையை சீக்கு பிடிக்க வைக்கின்றன. குழந்தைகள் நல்ல பழக்க வழக்கங்களை சொல்லக் கேட்டு தெரிந்து கொள்வதை விட, பெற்றோரையும் மற்றோரையும் பார்த்து தெரிந்து கொள்கின்றனர் என்பது புலப்படுகிறது. எனவே யார் இப்போது திருந்த வேண்டும். குழந்தைகளா? பெற்றோரா? யார் யாரைத் திருத்துவது?

    இந்த செய்திகள் எனக்கு பெரிய ஆறுதலையும் நிம்மதியையும் கொடுத்தது. இன்றைய தலைமுறையை திருத்த வேண்டுமானால் முதலில் நேற்றைய தலைமுறையைத் திருத்த வேண்டிய கட்டாயத்தில் இச்சமூகம் உள்ளது. நாம் உருவாக்கும் ஆட்சியாளர்கள் சமூகத்துக்கு வேண்டிய மாற்றங்களை நிகழ்த்தாத நிலையில் மக்களேதான் அந்த மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

    இத்தலைமுறை மாற்றத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஆட்சியாளர்கள் தோற்றுப் போனால் அதைச் செயல்படுத்தும் அடுத்த நிலையில் உள்ளவர்கள் ஆசிரியர்கள் தான்கல்வி வியாபாரமாகாத காலத்தில் அரசுப் பள்ளிகள் அதிகமில்லா விட்டாலும் ஒவ்வொரு பள்ளியிலும் நிரம்பி வழிந்தன. “வாத்தியாரைய்யா எம் பையனுக்கு பாடம் சொல்லிக் குடுங்கய்யா அடங்க மாட்டேன்கிறான். தலையைத் தவிர்த்து உடம்பெல்லாம் எங்கு வேண்டுமானாலும் அடிச்சி சொல்லி கொடுங்கய்யா” என்று தம் மகனை ஆசிரியர்களிடம் ஒப்பவித்தவர்கள் அதிகம்.

    அன்று பெரும்பாலான ஆசிரியர்கள் ஒழுக்கசீலர்களாக வாழ்ந்து மாணவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தனர். ஆனால் இக்கால ஆசிரியர்கள் சமூகத்தையே மாற்றக் கூடிய மனிதத்தை வளர்க்க வேண்டிய நிலையில் இருக்கின்றனர். இது மிக கடினமான ஒன்று அன்றைய பெற்றோர் சமூகம் மனிதத்தை வளத்தெடுக்க உதவியது.

    இன்றைய பெற்றோர் சமூகம் தங்களை அறியாமலேயே மனிதத்துக்கு எதிராக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்றைய அரசியல் தலைவர்கள் வளர்த்தெடுக்கும் சமுதாயத்தில் ஒவ்வொரு தலைமுறையும் கூடுதலான சுயநலம் கொண்டதாகவே வளர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்றைய கால கட்டத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை நூறு சதவீதத்தை எட்டிப்பிடித்துக் கொண்டுள்ளது.

    தம் பிள்ளைகளை டாக்டராக்க வேண்டும். ஐ.ஏ.எஸ் ஆக்க வேண்டும் என்ற தம் கனவை நனவாக்கவே வளர்ந்து கொண்டிருக்கும் நியூகிளியர் குடும்பங்கள் அதிபெரும்பான்மையாக உள்ள சமூகம் இது. சட்டங்களின் குறைபாடுகளை நன்கு அறிந்த சமூகம் எளிதில் திருத்த இயலாத சமூகம். இவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் குழந்தைகளின் எதிர்காலத்தை நோக்கியே உள்ளது.

    யார் சொன்னாலும் இவர்கள் மாறப்போவதில்லை. ஆனால் லஞ்சம் வாங்கும் தந்தையிடம் “நீ லஞ்சம் வாங்கிய பணத்தில் என்னைப் படிக்க வைத்தால் நான் படிக்கமாட்டேன் உடுத்தமாட்டேன். உண்ணமாட்டேன்” என்று மகனோ, மகளோ புரட்சி செய்தால் நிச்சயம் தந்தை திருந்துவார். ஆசிரியர் சமூகம் முயற்சி செய்தால் குழந்தைகள் மூலமே தற்போதைய தலைமுறையை மாற்ற முடியும்.

    மு.அசோக்குமார், ஐ.பி.எஸ்.,
    போலீஸ் சூப்பிரண்டு (ஓய்வு)
    இன்றைய காலகட்டத்தில் யோகாசனம் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று எந்த ஆசனத்தை செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
    விருக்‌ஷா ஆசனம்: உடலை ஒருநிலைப்படுத்தும். கால், தொடை, முதுகு, தோள்பட்டையை பலப்படுத்தும். மன ஒருமைப்பாட்டையும் தரும்.

    உதன் ஆசனம்: கால், இடுப்பை பலப்படுத்தும். இந்த ஆசனம் பெண்களுக்கு பயனுள்ளது. கர்ப்பப்பை மற்றும் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவும்.

    நகுல் ஆசனம்: இடுப்பு மற்றும் முதுகை பலப்படுத்தும். இடுப்பு பகுதியில் சதை பற்றை குறைக்க இந்த ஆசனம் உதவும். செரிமானத்தையும் சீர்படுத்தும்.

    சக்கி சலான் ஆசனம்: நரம்பு மண்டலம், வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளை பலப்படுத்த இந்த ஆசனம் பயன்படும். பிரசவத்திற்கு பிறகு பெண்கள் இந்த ஆசனத்தை செய்து வருவதன் மூலம் தளர்வாக இருக்கும் வயிறு பகுதியை சரிப்படுத்திவிடலாம். மாதவிடாய் கோளாறுகளையும் சரி செய்துவிடும். கர்ப்ப காலங்களில் பெண்கள் முதல் மூன்று மாதங்கள் மட்டும் இந்த ஆசனத்தை செய்து வரலாம்.

    பரிவிர்த்தி ஜானு ஆசனம்: கல்லீரல், சிறுநீரகம் மற்றும் வயிற்று பகுதி உறுப்புகளை பலப்படுத்தும். முதுகு வலியை சரி செய்யும். அடிக்கடி தலைவலி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை செய்துவரலாம்.

    கோமுக ஆசனம்: இடுப்பு, தொடை, மார்பு, தோள்பட்டையை பலப்படுத்தும்.

    தனுர் ஆசனம்: முதுகு மற்றும் வயிறை பலப்படுத்தும். இனப்பெருக்க உறுப்புகளின் செயல்திறனை அதிகப்படுத்தும். மன அழுத்தத்தையும் குறைக்கும்.

    வியாகராசனம்: முதுகு தண்டை பலப்படுத்தும் ஆசனம் இது. தொடை இடுப்பு மற்றும் வயிற்று பகுதி சதை பிடிப்பை குறைக்கும். ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும்.

    உதர் ஆசனம்: இடுப்பு சதையை குறைக்கும். தோள்பட்டையை விரிவு படுத்தும். மலச்சிக்கலை சரி செய்யும். நாளமில்லா சுரப்பிகளை துரிதப் படுத்தும்.

    நடராஜ ஆசனம்: உடல் எடையை குறைக்க உதவும். கணுக்கால், தொடை, மார்பு, வயிறு, இடுப்பு பகுதியை பலப் படுத்தும். செரிமானத்தை சரி செய்யும், மன அழுத்தத்தை குறைக்கும்.

    அர்த்த சந்திரா: செரிமானத்தை சீர்படுத்தும். மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக்குறைக்கும்.

    சக்ராசனம்: இதயத்திற்கு சிறந்த ஆசனம் இது. ஆஸ்துமா உள்ளோருக்கும் பலனளிக்கும். தைராய்டு மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளை துரிதப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். உடல் ஆற்றலை மேம்படுத்தும்.

    ஹாலாசனம்: ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். ஆஸ்துமா மற்றும் மூச்சு குழாய் பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும். பெண்களின் மாதவிடாய் பிரச்சினைகளை சரி செய்யும். மலச்சிக்கலையும் போக்கும்.

    சர்வாங்காசனம்: ரத்த மண்டலம், சுவாச மண்டலம் மற்றும் செரிமான உறுப்புகளுக்கு இந்த ஆசனம் பலம் தரும். இந்த ஆசனம் செய்யும்போது தொண்டைக்கு அதிக ரத்த ஓட்டத்தை அளித்து தைராய்டு பிரச்சினைகளை சரி செய்யும். காது, மூக்கு மற்றும் தொண்டை பிரச்சினை களுக்கும் நிவாரணம் தரும். முடி உதிர்வை குறைக்கும்.

    விப்ரீத் கரணி: ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும். இனப் பெருக்க ஆற்றலை அதிகப்படுத்தும். செரிமானத்தை பலப்படுத்தும். கண், காதுகளுக்கும் இந்த ஆசனம் நலம் பயக்கும்.

    மஹாபந்தன ஆசனம்: நாள் முழுவதும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். புத்துணர்ச்சியை கொடுக்கும். மன அழுத்தத்தை போக்கும்.

    மஹாமுத்ராசனம்: உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்தி உடலை சீராக்கும்.

    சவாசனம் : எந்த ஆசனம் செய்தாலும் இறுதியில் சவாசனம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நாம் பயிற்சி செய்யும்போது இழந்த ஆற்றலை மீண்டும் பெற உடலை ஓய்வு நிலையில் வைத்திருக்க வேண்டும். அதற்காக கண்டிப்பாக இறுதியில் இந்த ஆசனம் செய்ய வேண்டும்.
    அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு நீரிழிவு எளிதாக ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கு உடல் உழைப்பு மிகவும் அவசியமானது.
    நீரிழிவு நோய் கட்டுப்பாடு குறித்து சென்னை எழும்பூர் மற்றும் கிண்டியில் அமைந்துள்ள டாக்டர் அ. இராமச்சந்திரன் நீரிழிவுநோய் மருத்துவமனை சிகிச்சை குழுவினர் தெரிவித்ததாவது :

    ‘எவ்வகை உணவை நாம் உண்டாலும் கடைசியாக உடலில் அது கணையம் சுரக்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன் மூலம் சர்க்கரை சத்தாக மாற்றப்படுகிறது. அப்போது சுரக்கும் இன்சுலின் அளவு குறைவது அல்லது வீரியமாகச் செயல்படாமல் போவது ஆகிய காரணங்களால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுவது நீரிழிவு குறைபாடு என்று குறிப்பிடப்படும்.

    இன்றைய காலகட்டத்தில் வயதானவர்களுக்கு மட்டுமல்லாது, இளைஞர்களுக்கும் நீரிழிவு குறைபாடு வர ஆரம்பித்துவிட்டது. பொதுவாக இவ்வகை குறைபாடு உள்ளவர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நேர்மறை எண்ணங்களோடு செயல்பட்டு அதை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இயலும்.

    அவ்வாறு கட்டுப்பாட்டில் வைக்க இயலாத நிலையில் தலை முதல் கால் வரை உடலின் அனைத்து உறுப்புகளும். பாதிக்கப்பட்டு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தலாம். குறிப்பாக, இதயம் கண், நரம்புகள், சிறுநீரகம், கால் ஆகியவை சிக்கல்களுக்கு உள்ளாகலாம். அவற்றை தவிர்க்க வாழ்க்கை நடைமுறை மாற்றமே மிகச்சிறந்த வழியாகும். அதை ஒரு சிகிக்சை முறையாகவும் கருதலாம்.

    மேலும், அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர்கள் ஆகியோர்களுக்கு நீரிழிவு குறைபாடு எளிதாக ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கு உடல் உழைப்பு மிகவும் அவசியமானது. சர்க்கரை இனிப்பை தவிர்த்தல், எண்ணெய், கொழுப்புணவை தவிர்த்தல் நார்ச்சத்து உணவுகளை அதிகம் உண்ணுதல், கிழங்கு வகை உணவுகளை தவிர்த்தல், உடற்பயிற்சி குறிப்பாக நடைப்பயிற்சி, மாடிமேல் ஏற லிப்டை எதிர்பார்க்காமல் படிக்கட்டுகளை பயன்படுத்துதல் ஆகியவை எப்போதும் நல்லது.

    மேலும், மன பதற்றம் மற்றும் மன உளைச்சல் ஆகியவை இன்சுலின் நன்றாக சுரப்பதையும், செயல்படுவதையும் தடை செய்கின்றன. அதனால் அமைதியான வாழ்க்கைக்கு யோகா, தியானம் போன்றவை அவசியமானதாக உள்ளன.

    மேற்கண்ட பழக்க வழக்கங்களை தொடர்ந்து கடைப்பிடித்தால் நீரிழிவு குறைபாடு ஒரு பிரச்சினையாக இருக்காது. மேலும், மருத்துவர்களின் ஆலோசனைகள்படி மருந்து மாத்திரைகளை தவறாமல் சாப்பிடுவதுடன், குடும்பத்தார் ஆலோசனைகளையும் கேட்டு ஆரோக்கியமான வழிகளில் நடந்துகொள்வதும் நல்லது.

    நீரிழிவு குறைபாடு உள்ளவர்களின் நன்மைக்காக அவர்களது குடும்பத்தினர் உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வைப்பதுடன், சோம்பல் காரணமாக உடற்பயிற்சியை செய்யத் தவறும் பட்சத்தில் அதன் நன்மைகளை பற்றி எடுத்து சொல்லவேண்டும். சுயக்கட்டுப்பாடு, குடும்பத்தாரின் ஆதரவு போன்றவை நீரிழிவு குறைபாட்டை கட்டுபாட்டில் வைக்க உதவி செய்வதுடன், ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் நீண்ட நாள் வாழ நிச்சயம் உதவும்..’

    இவ்வாறு நீரிழிவு நோய் சிகிச்சை குழுவினர் தெரிவித்தனர்.

    எழும்பூர் தொலைபேசி எண்: 044-28582003-05

    கிண்டி தொலைபேசி எண்: 044-22353729-32
    குளிர் காலத்தில் மாலையில் டீ, காபியுடன் சாப்பிட முந்திரி பக்கோடா அருமையாக இருக்கும். இன்று முந்திரி பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முந்திரி பருப்பு - 30
    மிளகாய் வற்றல் - 4
    பெருங்காயம் - ஒரு சிட்டிகை
    அரிசிமாவு - கால் கப்
    கடலை மாவு - 1 கப்
    எண்ணெய் - தேவைக்கேற்ப
    நெய் - 2 டேபிள் ஸ்பூன்
    உப்பு - தேவைக்கேற்ப
    கறிவேப்பிலை - 1 கொத்து



    செய்முறை :


    முந்திரிபருப்பை நெய்யில் சிறு தீயில் வறுத்து உப்பு தூவி தனியாக வைக்கவும்.

    பிறகு மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, அரைத்த மசாலா, நெய் மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ளவும்.

    பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரியை ஒவ்வொன்றாக மாவில் தோய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    பின் அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து எடுத்து முந்திரியின் மேல் தூவவும்.

    இப்போது சுவையான முந்திரி பக்கோடா தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.
    சிலருக்கு மன அழுத்தம், வேலைப்பளு ஆகியவற்றின் காரணமாக, அடிக்கடி தலை வலிக்கும். உடனே எல்லோரும் செய்கின்ற முதல் விஷயம் நல்ல ஸ்டிராங்கான காபி குடிக்க வேண்டும் என்பது தான். அதேபோல், சில சமயம் நல்ல பசியுடன் சாப்பிடாமல் இருந்தால் கூட சிலருக்கு தலை வலிக்கும். இப்படி தலைவலிக்கும் நேரத்தில் சில உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும். அப்படி தலைவலி இருக்கும்போது என்னவெல்லாம் சாப்பிடக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.

    * நம்மில் பலரும் தலைவலி வந்ததும் முதலில் தாவுவது ஸ்டிராங்கான காபிக்கு தான். காபி குடித்தவுடன் தலைவலி காணாமல் போனதுபோல் நினைத்துக் கொள்வோம். ஆனால் உண்மை அது இல்லை. சில சமயங்களில் மிக ஸ்டிராங்கான காபியை நீங்கள் குடிப்பது உங்களுடைய தலைவலியைத் தூண்டிவிட்டு, அதிகரிக்கவே செய்யும். அதனால் காபி பிரியர்கள் தலைவலிக்கும் போது அதைக் குடித்துவிடாதீர்கள்.

    * சிலருக்கு பால் சம்பந்தப்பட்ட பொருள்கள் என்றாலே அலர்ஜியாக இருக்கும். தலைவலி இருக்கும்போது சீஸ் சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்கள் ஏதாவது சாப்பிட்டால், ஒற்றைத் தலைவலி அதிக நேரம் உங்களை விடாது.

    * சிலருக்கு மது அருந்தியவுடன் மூன்று மணி நேரத்துக்குள்ளாக ஒற்றைத் தலைவலி வர ஆரம்பித்துவிடும். ஒரு ஆய்வின் முடிவின் படி, மது அருந்துபவர்களில் கிட்டதட்ட 29 முதல் 36 சதவீதம் வரையிலானவர்களுக்கு ஒற்றைத் தலைவலி பாதிப்பு இருக்கிறது.

    * நாமே வாங்கி, சுத்தம் செய்வதை விட தற்போது பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை மிக அதிக அளவில் சாப்பிடுகிறோம். பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அடிக்கடி சாப்பிடுகிறவர்களுக்கு 5 சதவீதம் பேருக்கு அதிகபட்சமாக சாப்பிட்டு ஒரு மணி நேரத்திலும் குறைந்த அளவாக சாப்பிட்ட நிமிடம் முதலே ஒற்றைத் தலைவலி உருவாக ஆரம்பித்து விடுகிறது. அதிலுள்ள அதிக அளவிலாக நைட்ரேட் ஒற்றைத் தலைவலியை உண்டாக்குகிறது.



    * நூடுல்ஸ், பாஸ்தா போன்ற சைனீஸ் உணவுகளும் உங்களுடைய ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கச் செய்யும் காரணியாக இருக்கும்.

    * சர்க்கரை உடலுக்குக் கேடு என்பதால் சிலர் செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் நாம் பயன்படுத்தும் செயற்கை இனிப்புகள் நம்முடைய ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக இருப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    * சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மிக அதிக அளவில் இருக்கிறது. அது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். நச்சுக்களை நீக்கும் என்பதெல்லாம் உண்மை தான். ஆனால் ஒற்றைத் தலைவலி உண்டாவதற்கு 11 சதவீதம் சிட்ரஸ் பழங்கள் தான் காரணமாக இருக்கின்றன என சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

    * டார்க் சாக்லேட் உடம்புக்கு நல்லது தான். ஆனாலும் 2 முதல் 22 சதவீதம் வரையிலாக மக்களுக்கு சாக்லெட் சாப்பிடுவதால் ஏற்படும் சென்சிடிவால் தலைவலி பிரச்சனை உண்டாகிறதாம்.

    * குல்டன் என்னும் சத்துக்கள் அடங்கிய கோதுமை, பார்லி போன்ற தானியங்கள் அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அதை சிலருடைய உடல் ஒத்துழைக்காமல் போகும்போது, ஒற்றைத் தலைவலி உண்டாகும்.
    பெண்களுக்கு உடல் முழுவதும் மெல்லியதாக இருக்கும் முடிகள் அவர்களுடைய அழகை குறைக்கும் வகையில் இருக்கும். இந்த முடிகளை நீக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
    ஒரு சில பெண்களுக்கு உடல் முழுவதும் மெல்லியதாக இருக்கும் முடிகள் அவர்களுடைய அழகை குறைக்கும் வகையில் இருக்கும். இந்த முடிகளை நீக்க பெண்கள் பல்வேறு வழிகளை கடைபிடித்து வந்தாலும் இதற்கு நிரந்தர தீர்வு உள்ளது. அது என்னவென்று பார்ப்போமா!

    1. சாதாரணமாக சவரம் செய்து மழித்தல். ஒருவேளை மீண்டும் முளைத்தால் மீண்டும் சவரம்தான். வேறு வழியில்லை.

    2. இரசாயன பொருட்களை உபயோகித்து முடிகளை பிளீச்சிங் செய்வது. இதன் மூலம் முடிகளை மிக மெல்லிய நிறமாக்கி வெளியே தெரியாமல் செய்யலாம்.

    3. எலக்ட்ரோலைசிஸ் என்ற முறைப்படி முடிகளை வேரோடு பிடுங்குதல். இதனால் மீண்டும் முடி முளைக்காது. இந்த சிகிச்சை கொஞ்சம் காஸ்ட்லி மற்றும் நேரம் அதிகம் ஆகும்

    4. லேசரை பயன்படுத்தியும் முடிகளை தனித்தனியாக எடுத்து மீண்டும் முளைக்காமல் செய்யலாம். முந்தைய முறை போலவே இந்த முறைக்கும் நேரமும் பணமும் அதிகம் ஆகும்

    5. ஆனால் மேற்கண்ட சிகிச்சைகள் அனைத்தும் நிரந்தர தீர்வை தருகின்றதோ இல்லையோ பக்கவிளைவுகள் மற்றும் பணம் அதிகம் செலவாகும்.

    எனவே இந்த பிரச்சனை வராமல் இருக்க சிறு வயதில் இருந்தே பெண்கள் முகம் உள்பட உடல் முழுவதும் மஞ்சள் பூசி வந்தால் இந்த பிரச்சனையே வராது என்பது குறிப்பிடத்தக்கது.

    கஸ்தூரி மஞ்சள், குப்பமேனி இலை பவுடரை நன்றாக கலந்து சருமத்தில் தடவி குளித்து வந்தால் தேவையற்ற முடிகள் நீங்கும். இந்த பவுடரை போடும் போடு புருவங்களில் படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
    ×