என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    தியானத்தை ஒருவர் தொடர்ந்து செய்யும்போது அவர் சந்திக்கும் தடைகள் என்ன? அவற்றை எப்படி சரிசெய்வது என்பது பற்றி இங்கு நாம் காண்போம்.
    1. சிலருக்கு ஆரம்பகாலத்தில் தியானம் செய்தபோது இருந்த ஆர்வம் போகப்போக குறைந்துவிடும். இதற்குக் காரணம் தியானத்தில் உடனடி பலன்களை எதிர்பார்ப்பதால்தான். தியானத்தில் உயர்ந்த நிலை அடைய குறைந்தது 6 ஆண்டுகளாவது ஆகும். "தியானம் செய்வதினால் என்ன பயன்?" என்னும் அலட்சியம் கூடவே கூடாது. பொறுமையும் நம்பிக்கையும் அவசியம்.

    2. ஓசைகள், குப்பைக்கூளங்கள், தீயவர்கள் உடனிருக்கும் சூழல்களில் தியானம் செய்ய மனம் வராதுதான். முடிந்தவரை சூழலை மாற்றிக்கொள்ளுங்கள். இல்லையெனில், தியானம் மனதில்தானே நடக்கின்றது என்பதைத் தெளிவாக புரிந்துக்கொண்டு எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தியானம் செய்யுங்கள்.

    3. நோய்கள் வந்தால் தியானத்தை நிறுத்துவது கூடாது. எப்படி ஒருவேளை உணவை நாம் எப்போதும் தவிர்க்க நினைப்பதில்லையோ, எந்த ஒரு நிமிடமும் நாம் சுவாசிப்பதை எப்படி நிறுத்துவதில்லையோ அதுபோல தியானமும் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாற வேண்டும். ஆசனம், தியானம், பிராணாயாமம் ஆகியவற்றை தொடர்ந்து செய்யுங்கள் நோய்களைத் தவிருங்கள்.

    4. எல்லோரிடமும் சம்பந்தம் இல்லாமல் தியானப்பயிற்சியை பற்றி பேசாதீர்கள். ஒவ்வொரு குருவும் அவர்களின் சிஷ்யர்களுக்கு சொல்லித்தரும் தியானத்தில் ஒரு சில வேறுபாடுகள் இருக்கும். அதைப் பற்றி யோசித்துக்கொண்டு நம்முடையது சரியில்லையோ என்று நினைப்பதால் தியானம் செய்ய மனம் வராது.

    5. தியானத்தை விட்டு விட்டு செய்யாதீர்கள். கண்ட நேரத்திலும், கண்ட இடங்களிலும் அதை செய்யாதீர்கள். காலை 4 மணிக்கோ அல்லது 6 மணிக்கோ, மாலை 6 மணிக்கோ அல்லது இரவு 8 மணிக்கோ தொடர்ந்து ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் செய்வதை பழக்கமாக்கிக்கொள்ளுங்கள் .

    6. தியானத்தில் நிறைவு அடைந்துவிட்டது போலவும், ஞானம் அடைந்துவிட்டது போலவும், உயர் நிலை அடைந்துவிட்டதாகவும் உங்களுக்குள்ளேயே நீங்களே கற்பனை செய்துகொண்டு பிறரிடம் உங்கள் புகழைப் பாடாதீர்கள். இப்படி சாதனை நிலையைத் தீர்மானித்துக் கொள்வதால் அவர்களுடைய சாதனை கெடும்.

    7. தியானப்பாதையில் செல்லும்போது அவர்களை வழிநடத்தவும், கஷ்டம் வரும்போது உபதேசித்து தைரியம் கூறுவதற்கும் நிச்சயம் ஒரு குரு தேவை. தியானப் பாதையில் வெற்றி பெற்ற குருவாக அவர் இருக்கவேண்டும்.

    8. மறதி, சோம்பல், அதீத தூக்கம் ஆகிய மூன்று குறைகளும் தியானத்தின் முக்கிய தடைகளாகும். பதஞ்சலி மகரிஷி நோய், உலகப்பற்று, சந்தேகம், மனச்சலிப்பு, சோம்பல், அலட்சியம், எழுச்சிகள், தவறாக புரிந்துக்கொள்ளுதல், அடைந்த நிலையில் வழுவிவிடல் ஆகியவை தியானத்திற்கான தடைகள் என்கிறார் .

    தியானத்தில் ஒவ்வொரு நிலையை அடையும் போதும் இப்படிப் பல தொல்லைகள் வருவது சகஜம். அதை சரியாகப் புரிந்துக்கொண்டு, சமயோசிதத்தால் அவற்றை உணர்ந்து குருவின் உதவியால் அவற்றைத் தாண்டினால் பேராற்றல் கிடைப்பது நிச்சயம்.
    கூந்தலை சுத்தமாக பராமரித்தால் பொடுகு, பேன், கூந்தல் உதிர்தல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம்.
    பாசிப்பயிறு அரைத்து தலைமுடியில் தேய்த்துக் குளிப்பது தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்து.

    வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை முட்டையின் வெள்ளைக்கரு, தயிர், பாசிப்பயிறு மூன்றையும் சேர்த்துத் தடவி வந்தால் தலைமுடிக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், தலைமுடி நன்கு பளபளப்பாக இருக்கும்.

    வேப்பிலை, துளசி, புதினா மூன்றையும் நன்கு அரைத்து தலையில் பேக் போட்டு அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

    வால்மிளகை பாலில் ஊற வைத்து நன்கு அரைத்து அதை தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து அலசினால் பொடுகுத் தொல்லை போய்விடும்.

    மருதாணி, டீ டிகாஷன், எலுமிச்சைச் சாறு மூன்றையும் தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால், உடல் சூடு தணிவதுடன் முடிக்கும் நல்ல வலு கிடைக்கும்.

    வெயில் காலங்களில் முடி வறண்டு காணப்படும். அதைத் தவிர்க்க செம்பருத்தி இலை, வெந்தயம், கறுப்பு உளுந்து, தயிர், எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் தேவையான அளவில் அரைத்து தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்த பின்னர் குளிக்க வேண்டும். இதனால் முடி உலர்ந்து போகாமல் இருப்பதோடு பொடுகுத் தொல்லை, நுனி முடியில் வெடிப்பு ஏற்படுதல் என எல்லா முடி பிரச்சினைகளையும் தவிர்க்கலாம்.

    தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய் மூன்றையும் 4 டீஸ்பூன் அளவு எடுத்து மிதமாக சூடாக்கி தலையின் முடிக் கால்களில் விரல் நுனியால் நன்கு தேய்த்த பின்னர் வெந்நீரில் டவலை நனைத்து தலையைச் சுற்றிக் கட்டினால் கூந்தல் வறட்சியின்றி காணப்படுவதோடு, முடியும் செழித்து வளரும்.

    கோடைக்காலங்களில் தலை சருமம் வறண்டு காணப்படுபவர்கள் வால்மிளகு, வெந்தயம் (4:2) என்ற விகிதத்தில் இரண்டையும் பசும்பாலில் ஊற வைத்து இதனுடன் கசகசாவையும் கலந்து அரைத்து தலையில் ஊற வைத்து அரைமணி நேரம் கழித்து குளிக்க, கூந்தல் சாஃப்ட்டாக மாறும்.
    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் தினமும் உணவில் ஓட்ஸ் சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸ், காய்கறிகள் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரோல்ட் ஓட்ஸ் (Rolled oats/Old fashioned Oats) - அரை கப்
    கேரட் -  1
    பீன்ஸ் - 5
    பச்சைப் பட்டாணி - 1 கைப்பிடி
    வெங்காயம் - 1 சிறியது
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
    சாம்பார் பொடி - அரை டீஸ்பூன்
    சீரகம் -  அரை டீஸ்பூன்
    கடுகு - கால் டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
    தண்ணீர் - 2 1/2 கப்



    செய்முறை :

    வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்.

    தேவையான உப்பு சேர்த்து 2 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    தண்ணீர் நன்கு கொதி வந்ததும் ஓட்ஸை கொட்டி கிளறிவிடவும்.

    மிதமான தீயில் சுமார் 5 நிமிடங்களில் ஓட்ஸ் வெந்துவிடும்.

    கஞ்சியை கொத்தமல்லி தூவி அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவைத்து இளம் சூட்டில் பரிமாறவும்.

    குறிப்பு :

    கஞ்சி அடுப்பிலிருந்து இறக்கும் போது கொஞ்சம் தண்ணீர் போல தெரிந்தாலும் ஆறும்போது கெட்டியாகி கஞ்சி பதம் வந்துவிடும். மிகவும் ஆறவிட்டால் கஞ்சி "களி" ஆகும் .
    பெண்கள் வயதுக்கு வந்ததும் ஒவ்வொரு மாதமும் அவர்களின் கர்ப்பப்பை கர்ப்பம் தரிப்பதற்குத் தயாராகிறது. கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
    முட்டை கருவுறுவதுதான் கர்ப்பப்பையின் முக்கியமான தருணம். கருவுற்ற முட்டை, கர்ப்பப்பையை அடையும்போது முட்டையின் மஞ்சள்பகுதி தீர்ந்துவிடுகிறது. உணர்விகளைப் பயன்படுத்தி முட்டை, கர்ப்பப்பை உள்ளடுக்கில் (எண்டோமெட்ரியம்) ஒட்டிக்கொள்கிறது.

    கர்ப்பத்தின்போது எண்டோமெட்ரிய அடுக்கை `புரொஜெஸ்டிரான்’ பராமரிக்கிறது, சுருக்கங்களைக் குறைத்து, வழக்கத்துக்கு முன்னதாகப் பிரசவ வலி ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரோஜென், கர்ப்பப்பை வளர்ச்சியையும், பால் சுரப்பையும் தூண்டுகிறது. ஏழாவது மாதத்தின்போதே 96 சதவீத சிசுக்கள் பிரசவத்துக்கு ஏதுவாக தலைகீழான நிலையை எட்டிவிடுகின்றன.

    ஒன்பதாவது மாதத்தில், தொப்புள்கொடி ஓர் ஒரு கிலோ அமைப்பாக வளர்ந்து, சிசுவின் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் செரிமான அமைப்பாகச் செயல்படுகிறது. அதன் சவ்வு வடிகட்டும் அமைப்பு, தாயின் ரத்தத்தையும், குழந்தையின் ரத்தத்தையும் பிரிக்கிறது. நச்சுக்கொடி, சிசுவின் கழிவுகளை வெளியேற்றுகிறது.

    கர்ப்பப்பை தொடர்பான வியாதிகள், பாதிப்புகள் இவை…

    டிஸ்மெனோரியா - மாதவிலக்குப் பிடிப்பு

    பைப்ராய்ட்ஸ் - கர்ப்பப்பை சுவர்களில் ஏற்படும் தேவையற்ற வளர்ச்சி. 200 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் தன்மையை அடைகிறது. வலியையும், ரத்தப் போக்கையும் ஏற்படுத்தலாம்.

    கர்ப்பப்பை கழுத்து புற்றுநோய் - பாலுறவால் பரவும் `ஹியூமன் பாப்பிலோமா வைரஸால்’ ஏற்படலாம்.

    எண்டோமெட்ரியோசிஸ் - கர்ப்பப்பைக்கு வெளியே கர்ப்பப்பை உள்ளடுக்கு வளர்வது. சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தலாம்.

    புரோலாப்ஸ்?- பெண்ணுறுப்புப் பாதைக்குள் கர்ப்பப்பை சுருங்குவது.

    எக்டோபிக் கருவுறுதல் - கர்ப்பப்பைக்கு வெளியே, அதாவது பெல்லோபியன் எனப்படும் கருக்குழாய் களில் கரு வளர்வது.

    ஹிஸ்டீரக்டாமி (கர்ப்பப்பையை நீக்குவது) - கடுமையான, குணப்படுத்த முடியாத கர்ப்பப்பை உள்ளடுக்கு அல்லது கர்ப்பப்பை கழுத்துப் புற்றுநோய், எண்டோமெட்ரியோசிஸ், புரோலாப்ஸ், தொடர்ச்சியான ரத்தப்போக்கின்போது இது பரிந்துரைக்கப்படுகிறது.

    கர்ப்பப்பை புற்றுநோய் - மார்பகப் புற்றுநோய்க்கு அடுத்து பெண்களுக்கு அதிகம் ஏற்படும் புற்றுநோயாகும். ஆரம்பத்திலேயே

    கண்டுபிடித்துவிட்டால் 90 சதவீதம் குணப்படுத்திவிட முடியும். ஒழுங்கற்ற

    ரத்தப்போக்கு, பொதுவான அறிகுறியாகும்.

    பிற அபாய காரணிகள்:

    * கர்ப்பப்பை உள்ளடுக்கின் அசாதாரண வளர்ச்சி

    * குண்டாகுதல்

    * `ஈஸ்ட்ரோஜன் ஒன்லி ஹார்மோன் தெரபி’யை பயன்படுத்துவது

    * மார்பகப் புற்றுநோய் மருந்தான `டாமோக்சிபென்’னை பயன்படுத்துவது

    * இடுப்புப் பகுதிக்குக் கதிர்வீச்சு சிகிச்சை

    * குடும்ப பாரம்பரியம்

    * குழந்தை இல்லாத பெண்களுக்கும், 12 வயதுக்கு முன் வயதுக்கு வந்தவர்களுக்கும், 55 வயது தாண்டியவர்களுக்கும் அதிக அபாயம் உண்டு.
    பெண்களே இப்போதுதான் கிச்சன் பக்கம் முதன் முதலாகபோகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிறையவே தயக்கம் வரும். அந்த தயக்கத்தை விரட்ட சில டிப்ஸ்…
    பெண்கள் படிப்பு, வேலை என்று இறங்கிவிட்டதால் சமையல் அறை அவர்களுக்கு கொஞ்சம் தூரமாகிவிட்டது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் சமைக்கப் பழகுவதும், திருமணத்திற்குப் பிறகு சமைக்கப் படிப்பவர்களும் ஏராளம். பல பெண்கள் சமையல் கற்றுக் கொள்வதற்காக பயிற்சி வகுப்புகளுக்கு கூட செல்கிறார்கள்.

    பெண்கள் இப்படி மாறிவிட்டதால், ஆண்களுக்கும் சமைத்துப் பழகிக் கொண்டால்தான் நல்லது என்ற நிலை வந்துவிட்டது. குடும்பத்தினரை விட்டு தூரமாக இருந்து பணி செய்பவர்களும் தன் கையால் சமைத்து சாப்பிட வேண்டிய சூழலும் பெருகி இருக்கிறது.

    எது எப்படியோ… நீங்கள் இப்போதுதான் கிச்சன் பக்கம் முதன் முதலாகபோகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிறையவே தயக்கம் வரும். அந்த தயக்கத்தை விரட்ட சில டிப்ஸ்…

    * என்ன சமைக்கப் போகிறோம் என்பதை முதலில் முடிவு செய்து விடுங்கள். அதற்கு தேவையான பொருட்களையும் பட்டியலிடுங்கள். பிறகு தோலை உறிக்க வேண்டியது, வெட்டி துண்டுகளாக்க வேண்டியது, அரைத்து பக்குவப் படுத்த வேண்டியது போன்ற வேலைகளை செய்து விடுங்கள். அதன்பிறகு பிறகு அடுப்பை பற்ற வையுங்கள்.

    * உதவிக்கு ஏற்கனவே சமையல் அனுபவம் உள்ளவர்களையோ அல்லது சமையல் புத்தகங்களையோ பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உதவிக்கு புத்தகமோ, ஆட்களோ இல்லாவிட்டால் கூட உங்கள் மீது நம்பிக்கை வைத்து களத்தில் இறங்கி விடுங்கள்.

    * நம்பிக்கையுடன் சமைத்து விட்டு வாயில் வைத்துப் பார்க்கும்போதுதான் உப்பு, உறைப்பு கூடியிருப்பது தெரியவரும். கவலையே படாதீர்கள். நேரமும், அனுபவமும் சிறந்த ஆசிரியர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, தொடர்ந்து சமைத்துப் பாருங்கள். தவறுகளை மெள்ள மெள்ள திருத்திக் கொள்ளலாம்.

    * சமையலுக்கு முக்கியமானது பொருட்களின் அளவு தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எது எது தேவை என்பதைப்போலவே அவற்றை எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது. அதற்காக கரண்டி, கப் மற்றும் பாத்திரங்களின் அளவுகளை ஞாபகத்தில் வைத்திருப்பதன் மூலம் ஒவ்வொன்றின் அளவையும் மாற்றிவிடாமல் பயன்படுத்த முடியும்.

    * முதன் முதலாக சமைக்கும்போது எளிதாக சமைக்க முடிந்ததும், குறுகிய நேரங்களில் சமைக்கக் கூடியதுமான குழம்புகளை வைத்துப் பழகுங்கள்.

    அப்புறமென்ன! சீக்கிரமே நீங்களும் நளபாகனாக-நளபாகியாக மாறிவிடுவீர்கள்.
    இன்றைய தலைமுறையினர், தங்கள் வீடுகளில் உள்ள ஒரு சுகாதார குறைபாட்டைப் பற்றி கொஞ்சமேனும் விழிப்புணர்வு பெற்றுள்ளதாக தெரியவில்லை. அதுதான், டாய்லெட் எனப்படுகின்ற குளியலறையுடன் கூடிய நவீன கழிப்பறை.
    வாழ்வின் ஒவ்வொரு துணுக்கையும் சுத்தம் என்ற பூதக் கண்ணாடியையும், சுகாதாரம் என்ற நுண்ணோக்கியையும் வைத்து நோக்குகின்ற இன்றைய தலைமுறையினர், தங்கள் வீடுகளில் உள்ள ஒரு சுகாதார குறைபாட்டைப் பற்றி கொஞ்சமேனும் விழிப்புணர்வு பெற்றுள்ளதாக தெரியவில்லை. அதுதான், டாய்லெட் எனப்படுகின்ற குளியலறையுடன் கூடிய நவீன கழிப்பறை அல்லது கழிப்பறையுடன் கூடிய குளியலறை.

    அதாவது, வீட்டுக்குள்ளேயே அமைக்கப்படுகின்ற குளியலறையுடன் கூடிய கழிவறை. தனித்தனி வீடுகளின் அளவு குறையத் தொடங்கியதாலும், அடுக்குமாடி வீடுகள் பெருகியதாலும், இடவசதி கருதி கழிவறைகளை குடியிருப்புக்குள்ளேயே கட்டிக் கொள்வது வழக்கமாகிப் போனது. இப்படி இருந்த போதிலும், நமக்குத் தெரிந்து 1980-களின் தொடக்கம் வரை, வீட்டிற்குள்ளேயேகூட குளியலறையும், கழிவறையும் தனித்தனியாகத்தான் அமைக்கப்பட்டன. அதன் பின்புதான் குளியலறை, கழிவறை இரண்டையும் இணைத்து, ஒரே அறையாக வடிவமைக்கும் போக்கு வளரத் தொடங்கியது.

    தமது கடைசி காலத்தில், பிள்ளையின் சொந்த வீட்டில் நகர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு வந்த முந்தைய தலைமுறையைச் சேர்ந்த தாய் தந்தையர் பலர், இந்த அதிசய டாய்லெட்டுகளைக் கண்டு அதிர்ந்து, தங்களது பழைய வீடுகளுக்கே சென்றுவிட்டனர். ஆதரிக்க வேறு யாரும் இல்லாத பெரியவர்கள் சிலர் இந்தப் புதிய அலர்ஜி கலாசாரத்தை சகித்துக்கொள்ள பழகிக்கொண்டதும் நடந்தது.

    மனிதன், பழக்கத்தின் அடிமை என்பதை நிரூபிப்பது போன்று, இப்போது உள்ள பழைய தலைமுறையினரும் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை. இத்தகைய நவீன டாய்லெட்டில் அமைந்துள்ள மேற்கத்திய கழிவறை பீங்கானை மூடிவிட்டு குளிக்கிற வழக்கமிருக்கிறது. ஆனாலும், அந்த மூடி மேலேயே குளியல் சோப்பு, ஷாம்பு போன்றவற்றை வைத்து, அவற்றைப் பயன்படுத்தி குளிக்கின்றனர். கேட்டால் இட வசதி குறைவு என்கிறார்கள்.

    சில வீட்டில் கழுவுவதற்கான சமையல் பாத்திரங்கள், மேற்கத்திய பாணி கழிவறைப் பீங்கானின் பக்கத்தில் குவிக்கப்படுகின்றன. கேட்டால், அவர்கள் வீட்டின் சிறிய சமையலறையில் பாத்திரங்களை கழுவ போதிய இடமில்லை என்று பதில் வந்தது. இது மிகப் பெரிய சுகாதாரக்கேடு. புதிதாக கட்டப்படும் தனி வீடுகளில், அனேகமாக இருபத்தைந்து அல்லது முப்பது சதுர அடிகளை இத்தகைய டாய்லெட்டுகளுக்கு ஒதுக்குவார்கள்.

    அதையே சற்று பொறுமையாக இருபது, இருபது சதுர அடிகளில் தனித்தனியாக குளியலறை மற்றும் கழிவறையை கட்டினால், அவசரத்திற்கும் கைகொடுக்கும், டென்ஷனையும் குறைக்கும். சுத்தத்துக்கு சுத்தம், மன திருப்தியும் ஏற்படும். யோசித்துப் பார்த்தால் இளைய தலைமுறைக்கும் கூட இந்த ஏற்பாட்டில் முழு திருப்தி கிடைக்கும்.
    மாலையில் காபி, டீயுடன் சாப்பிட சமோசா அருமையாக இருக்கும். இன்று மட்டன் கீமாவை வைத்து சமோசா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மைதா - 1 கப்
    பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
    மட்டன் கீமா - 250 கிராம்
    பெரிய வெங்காயம் - 1
    கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
    புதினா  இலை - தேவையான அளவு
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 4
    உப்பு - தேவையான அளவு
    நெய் - 3 தேக்கரண்டி
    தயிர் - 1 தேக்கரண்டி
    தக்காளி - 1 பெரியது
    கரம் மசாலா - 1 தேக்கரண்டி



    செய்முறை

    வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மட்டன் கீமாவை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடரை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1 மணிநேரம் அப்படியே மூடி வைக்கவும்.

    பிசைந்த மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளி, புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கரம்மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் மட்டன் கீமாவை சேர்த்து வதக்கவும்.

    கீமாவில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றும் வரை வதக்கிய பின்னர் இறக்கி ஆறவிடவும்.

    மாவு உருண்டையை வட்டமாக தேய்த்து கொள்ளவும்.

    வட்டங்களை கோன் வடிவமாக செய்து அதில் மட்டன் கீமா கலவையை வைத்து மூடவும். அனைத்து மாவிலும் இவ்வாறு செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் மட்டன் கீமா சமோசா ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடலுக்கு சுறுசுறுப்பை தரும் தேநீர் பிரியர்களுக்கு இந்த பதிவு சற்று பாதிப்பை உண்டாக்கும். ஆனாலும் தொடர்ந்து படித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.
    தினமும் காலை வேளையை சுறுசுறுப்பாக தொடங்க வைக்கும் ஒரு முக்கிய பானம் டீ என்னும் தேநீர். இதன் சுவை நாவை வருடும் போது உண்டாகும் ஆனந்தம் டீ பிரியர்களுக்கு மட்டுமே தெரியும். ஆகவே இத்தகைய தேநீர் பிரியர்களுக்கு இந்த பதிவு சற்று பாதிப்பை உண்டாக்கும். ஆனாலும் தொடர்ந்து படித்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.

    தேநீர் தயாரிக்கும் விதத்தில் அதன் நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. தேநீர் சுவை கிராம்பு, இஞ்சி, துளசி இலைகள், தேயிலை ஆகியவற்றை நீரில் கொதிக்க வைத்து தேன் சேர்த்து பருகுவது ஒரு பாரம்பரிய தேநீரின் சுவையை கொடுக்கும். இதுவே சிறந்த தேநீர் தயாரிக்கும் சரியான வழிமுறையுமாகும்.

    செரிமான மண்டலத்தின் சிறப்பான செயலாற்றல், சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை போக்க உதவுவது போன்றவற்றில் ஒரு சிறந்த தேநீர் சிறப்பாக செயல் புரிகிறது.

    தேநீர் தயாரிப்பு ஆனால் கடந்த சில காலமாக, இந்த தேநீர் தயாரிப்பு முறையில் மாற்றம் உண்டாக்கி அதில் சுவையை அதிகரிக்க பால் சேர்த்து பருகி வருகின்றனர். இதனால் இதன் சுவை உலகமெங்கும் பரவி தேநீர் பிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. முன்னர் கூறிய தயாரிப்பு முறை ஒரு மருத்துவ கலவையாக இருந்த நேரத்தில், பால் சேர்த்து தயாரிக்கும் இந்த முறை ஒரு மாற்றத்தை உண்டாக்கியுள்ளது.

    ஒரு கப் தேநீர், பதட்டத்தைப் போக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது.

    உணவு வழிகாட்டி குழுவின் அமைப்பாளரான டாக்டர் டி. ரகுநாத் ராவ், தேநீர் மற்றும் காபி ஆகியவற்றை குறைந்த பட்சம் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னும் பின்னும் பருகுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார். தேநீர் மற்றும் காபியில் உள்ள டானின் என்னும் ரசாயனம், இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கிறது.

    குறிப்பாக டீயில் பால் சேர்க்கப்படுவதால், சாப்பிட்ட பின் நன்மையை விட அதிக தீங்கை உண்டாக்குகிறது. குறிப்பாக செரிமானத்தில் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும் மிதமான அளவிற்கு மேல் இவற்றைப் பருகுவதால் உங்கள் குடல் பகுதியில் செயல்பாடுகளை தடை செய்து, தீவிர அசிடிட்டி மற்றும் வீக்கத்தை உண்டாக்குகிறது.

    இதனால் பெருங்குடல் மற்றும் செரிமான பாதையின் ஆரோக்கியம் பாதிக்கிறது. ஆகவே தேநீர் பிரியர்கள் சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் தேநீர் பருகுவதை நிறுத்திக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். 
    நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும்.
    நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும்.

    நமது சருமம் கொலாஜன் (Collagen) என்ற புரோட்டீன் ஃபைபர்ஸ்ஆல் ஆனது. வயதாகும் பொழுது நீர், கொழுப்புச்சத்து உடலில் இல்லாததால் இந்த கொலாஜன் சுருங்கும். வயது முதிரும் போது இந்தச் சுருக்கம் அதிகரிக்கும். இந்தச் சமயத்தில் உள்ளே சாப்பிடுவதற்கும் நல்ல சத்துணவு வேண்டும். அத்துடன் முகத்தில் பூசுவதற்குக்கூட கொலாஜன் தேவையாக இருக்கிறது. இது கடைகளில் கொலாஜன் என்றே கிடைக்கிறது. ஜெல் டைப்பில் கிடைக்கும் கொலாஜனை முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உபயோகிக்கலாம். வயதானவர்கள் அனைவருமே கொலாஜனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகச்சுருக்கம் போய் இளமை திரும்புவது நிச்சயம்.

    கொலாஜன் மாஸ்க் என்றுகூடக் கடைகளில் கிடைக்கிறது. அதை அப்படியே முகத்தில் போட்டு அரைமணி நேரம் ஊறவைத்துக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

    மேலும் உண்மையான ஆரஞ்சை வட்டவடிவத்தில் ‘கட்’ செய்த தோற்றத்துடன், ஆரஞ்சு ப்ளேவருடன் கூடிய கொலாஜன் மாஸ்க்கும் வந்திருக்கிறது. இதை முகத்தில் போடும்பொழுது ‘ப்ரெஷ்ஷான லுக்’ கிடைக்கும். இதை ஒரு பாக்கெட் வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது உபயோகிக்கலாம்.

    தற்பொழுது heat maskம் புதிதாக வந்திருக்கிறது. இது வயதானவர்களுக்கு மிகவும் உகந்தது. கொலாஜன் ஃபேஷியலுக்கு முன் இந்த ஹீட் மாஸ்க்கைப் போடலாம். இது சின்னச் சின்ன ட்யூப் வடிவத்தில் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. இதை ஒரு நிமிடம் மசாஜ் செய்தாற்போல் தடவி ஒரு நிமிடம் விட்டுவிட வேண்டும். இது லேசான சூடாக இருக்கும். ஆனால் உடனடி எஃபக்ட் கிடைக்கும். இது துவாரங்களின் உள்ளே போய் அழுக்கு வெளியே வந்துவிடும். தோல் நல்ல பளிச்சென்று இருப்பதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள். சில நிமிடங்களிலேயே ஃபேஷியல் செய்த பலன் கிடைத்துவிடும்.

    கொலாஜன் ஃபேஷியல் தசையை இறுகச் செய்து தோலுக்கு ஊட்டச்சத்தைக் கொடுக்கக் கூடியது. முக்கியமாக குறிப்பிட வேண்டுமென்றால் இந்த முறையைக் கடைப்பிடித்தால் சீக்கிரமே வயதான தோற்றத்தை அடையாமல் தடுக்கப்படுவீர்கள். அப்புறம் உங்களைப் பார்த்து நாலு பேராவது, ‘எக்ஸ்க்யூஸ் மீ! எந்தக் காலேஜில் படிக்கிறீங்க?’ என்று கேட்கப் போகிறார்கள்!
    என்னதான் சட்டமிருந்தாலும் பொறுப்பான பயணமே பாதுகாப்பான பயணம் என்பதை நாம் உணர்ந்து நடக்காதவரையிலும் விபத்துகளையும் உயிரிழப்புக்களையும் தடுக்க முடியாது.
    சாலை விபத்துகள் அதிகமாக ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. தேசியக் குற்றப் பதிவு ஆணையத்தின் ஆண்டறிக்கை பெரும்பாலான விபத்துகள் மனிதக் கவனக்குறைவினால் ஏற்படுவதாகக் கூறுகிறது. தற்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து விதி உள்ளது .ஆனால் அதை யாரும் சரி வர கடைப்பிடிப்பதில்லை. அதேபோல் காரோட்டிகள் சீட் பெல்ட அணிய வேண்டும் என்பது முக்கிய அம்சம்.

    அனைத்துக் கார்களுமே பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே தயார் செய்யப்படுகின்றன. எனினும் பெரும்பாலான நேரங்களில் காரோட்டிகளும் பயணிகளும் கார்களில் உள்ளப் பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்துவதில்லை, அலட்சியம் காட்டுகிறார்கள். இதுவே பெரும்பாலான விபத்துகளில் மரணம் ஏற்படக் காரணமாகி விடுகிறது. நவீனரக கார்களில் பல பாதுகாப்புச் சாதனங்களிருந்தாலும் அவற்றுள் மூன்று முக்கியமான சாதனங்கள் சீட்பெல்ட், கூடுதல் பாதுகாப்புக் காற்றுப்பை மற்றும் ஹெட்ரெஸ்ட் எனப்படும் தலைத்தாங்கி அணை ஆகியவை. அவை எப்படி உயிர்சேதத்தைத் தடுக்க உதவும் என்பதையும் பார்ப்போம்.

    முதலாவதாக சீட்பெல்ட். அணிந்து கொண்டு பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டால் சீட்பெல்ட் பயணியை இருக்கையோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொள்ளும். அதனால் விபத்து ஏற்படும் போது பயணி முன்பக்கமாகச் சாய்வது தடுக்கப்படுகிறது. பயணியின் தலை முன் இருக்கையின் மீதோ அல்லது வண்டியின் முன்பக்கத் தட்டிலோ மோதுவது தடுக்கப்படுகிறது.

    ஓட்டுநர் சீட்பெல்ட் அணிந்து கொள்ளும்போது விபத்து நடக்கும்போது முன்பக்கமாக சாய்வதால் அவரது தலையும் நெஞ்சும் வண்டியின் ஸ்டியரிங்கில் இடித்துக்கொள்வது தடுக்கப்படும். ஸ்டியரிங்கில் இடித்துக்கொள்ளும்போது தலைக்காயமும் நெஞ்செலும்புகளில் முறிவும் ஏற்படுவதால்தான் மரணம் ஏற்படுகிறது. அதனால்தான் சீட்பெல்ட் அணிவது கட்டாயமெனச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனினும் சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்வது வாடிக்கையாகிவிட்டது.



    சீட்பெல்ட் அணிவது அசவுகரியமாக இருக்கிறதென்றும் வசதியாக இல்லையென்றும் நினைக்கிறோம். முதலில் சிறிது அசவுகரியமாக இருந்தாலும் உயிர்பாதுகாப்பிற்கு முக்கியம் என்பதால் பழகிக்கொள்ள வேண்டும். அதுபோலவே முன் இருக்கையில் அமர்பவர்தான் கட்டாயமாக சீட்பெல்ட் அணிய வேண்டும் பின் இருக்கைகளில் பயணம் செய்வோருக்கு அது தேவையில்லை என்று பலர் கருதுகின்றனர். இதுவும் தவறு. பின் இருக்கையில் பயணம் செய்வோர் விபத்து ஏற்படும்போது முன் இருக்கையில் மோதிக்கொள்ள நேரிடும், அதனால் பெரும் காயமோ, உயிர்ச்சேதமோ ஆகலாம்.

    அது போலவே பயணியர் பலர் பின் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து படுத்துத் தூங்கிக்கொண்டு செல்வதும் வாடிக்கையாகும். இது சரியான செயல் அல்ல. பின் இருக்கையில் பயணம் செய்வோரும் சீட்பெல்ட் அணிந்துகொண்டு அமர்ந்தவாறே பயணம் செய்வதுதான் சரியானதாகும். தூக்கம் வந்தாலும் சீட்பெல்ட் அணிந்து கொண்டு அமர்ந்தவாறே தூங்குவதுதான் நல்லது. ஏனெனில் படுத்துக்கொண்டு பயணிக்கும்போது விபத்து ஏற்பட்டால் வண்டி பக்கவாட்டில் இடிபடும்போது பயணியிக்குத் தலைக்காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலும் தலைக்காயங்களால் மரணம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.

    இரண்டாவதாக பாதுகாப்பு காற்றுப்பை. இது ஒரு கூடுதல் பாதுகாப்புச் சாதனம். கார் வாங்கும்போது ஓட்டுநர் மற்றும் பயணியருக்கான கூடுதல் பாதுகாப்பாக காற்றுப்பை இருக்கும் வண்டியை வாங்குவது நல்லது. விபத்து நடக்கும்போது காற்றுப் பைகள் தாமாகவே விரிந்துகொள்ளும். அதனால் பயணி வண்டியின் முன்பக்கத்திலோ அல்லது பக்கவாட்டிலோ இடித்துக்கொள்ள நேரிட்டாலும் காற்றுப்பையிலேயே மோதுவார். அது ஒரு தலையணையைப் போல மிருதுவாக இருப்பதால் பெரும் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படுவதில்லை.



    என்னுடைய காரில் கூடுதல் பாதுகாப்புக் காற்றுப் பை உள்ளதால் சீட்பெல்ட் அணியாவிட்டால் ஒன்றும் ஆகாது என்றும் பலர் எண்ணுகின்றனர். அது தவறு. சீட்பெல்ட் அணிந்துகொண்டு அமரும் போதுதான் இந்தப் பாதுகாப்பு முழுமையாகக் கிட்டும். சீட்பெல்ட் அணியாமல் அமரும் போது காற்றுப்பை வெளிவந்து விரியும் வேகத்தோடு அதன்மீது மோதினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிர்ச்சேதமாகும் வாய்ப்பு அதிகம். காரிலுள்ள காற்றுப்பைக் கூடுதல் பாதுகாப்புச் சாதனம்தான்.

    மூன்றாவதாக ஹெட்ரெஸ்ட் எனப்படும் தலை தாங்கி அணை. பெரும்பாலும் இதன் முக்கியத்துவம் சரியாக உணரப்படுவதில்லை. ஹெட்ரெஸ்ட் கழுத்துக்கும், தண்டுவடத்துக்கும் பெரும் பாதுகாப்பை அளிக்கிறது. வண்டியில் ஓட்டுநர் மற்றும் பயணியின் உயரத்துக்கேற்ப ஹெட்ரெஸ்டைச் சரியான அளவில் பொருத்திக்கொள்ளுதல் அவசியம்.

    விபத்து நேரத்தில் பயணியின் தலைப் பின்பக்கமாகச் சாயநேரிடும். வண்டியின் வேகத்தையும் மோதலின் தீவிரத்தையும் பொருத்து தலை பின்பக்கமாக சாயும் வேகம் அதிகரிக்கலாம். அதனால் கழுத்துப்பகுதியில் பெரும் காயமோ அல்லது கழுத்துமுறிவோ ஏற்படலாம். கழுத்துமுறிவினால் நிச்சயம் மரணம் ஏற்படும். ஹெட்ரெஸ்ட் சரியாகப் பொருந்தியிருந்தால் இதனைத் தடுக்கலாம். ஆனால் 90 சதவீத ஓட்டுனர்கள் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறார்கள். பயணிகளுக்கோ இதுகுறித்த புரிதல் இல்லவேயில்லை என்பது வருத்தமளிக்கும் விஷயமாகும்.

    வண்டியிலுள்ளப் பாதுகாப்பு சாதனங்களைப்பற்றி நன்றாக அறிந்துகொள்வதும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதும் அவசியமாகும். சீட்பெல்ட் அணியாமல் பயணிப்பது குற்றம் என்றும் அதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்றாலும் சட்டத்தால் மட்டுமே விபத்துகளைத் தடுத்துவிடமுடியாது. என்னதான் சட்டமிருந்தாலும் பொறுப்பான பயணமே பாதுகாப்பான பயணம் என்பதை நாம் உணர்ந்து நடக்காதவரையிலும் விபத்துகளையும் உயிரிழப்புக்களையும் தடுக்க முடியாது.

    சோ. கணேச சுப்ரமணியன், கல்வியாளர்
    கர்ப்ப காலத்தில் சாதாரண காய்ச்சலைத் தாண்டி, பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டால் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
    கர்ப்ப காலத்தில் காய்ச்சல் வருவது இயல்பானது. ஆனால், பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகிய பிரச்னைகள் ஏற்பட்டால் கர்ப்பிணிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பத்தின் காரணமாக இவற்றின் விளைவுகள் கடுமையாகிவிடும் என்பதால் இந்த எச்சரிக்கை அவசியமாகிறது. சாதாரண காய்ச்சல் ஏற்படும்போது கர்ப்பிணிக்கோ, கருவில் வளரும் சிசுவுக்கோ அவ்வளவாக ஆபத்து ஏற்படுவதில்லை. அப்படியே ஆபத்து இருந்தாலும் இன்றைய நவீன சிகிச்சைகளால் அதை எளிதில் எதிர்கொள்ள முடியும்.

    டெங்கு:

    டெங்கு(Dengue) எனும் வைரஸ் கிருமிகளின் பாதிப்பால் வருகிறது. கர்ப்பிணிகளுக்கு இந்த நோய் ஏற்பட்டால் ஆபத்துகள் அதிகம். குறைப்பிரசவம் ஆகவும், எடை குறைவான குழந்தை பிறக்கவும் அதிக வாய்ப்புண்டு. கர்ப்பிணியிடமிருந்து சிசுவுக்குக் கிருமிகள் பரவி, பிறக்கும் போதே குழந்தைக்கு டெங்கு வரலாம். கர்ப்பிணிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். வயிற்றிலும் நுரையீரலிலும் நீர் கோர்த்துக் கொள்ளலாம். கல்லீரலும் சிறுநீரகமும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் குறைந்து கர்ப்பிணியின் உயிருக்கு ஆபத்து வரலாம்.

    எனவே, தட்டணுக்கள் பரிசோதனை, ரத்த உறைவுக்கான பரிசோதனைகள், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டுப் பரிசோதனைகளையும் மேற்கொண்டு, இந்த விபரீத விளைவுகளைத் தடுப்பதற்கான சிகிச்சைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    பன்றிக்காய்ச்சல்:

    இன்ஃபுளுயன்சா A (H1N1) என்னும் வைரஸ் கிருமியால் பன்றிக்காய்ச்சல் நோய் வருகிறது. கர்ப்பிணிகளை இது பாதித்தால், காய்ச்சல் கடுமையாவதுடன், மூச்சுக்குழாய் அழற்சிநோய், நிமோனியா, சுவாசத்தடை நோய்(ARDS), மூச்சுச்சிறுகுழாய் அழற்சி நோய், இதயத்தசை அழற்சி நோய், மூளைக்காய்ச்சல், சிறுநீரகச் செயலிழப்பு என்று பலதரப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி உயிரிழப்பு வரை கொண்டு வந்துவிடும். இது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். குறிப்பாக, கருச்சிதைவு ஏற்படலாம். குறைப்பிரசவம் நேரலாம். குழந்தை இறந்தும் பிறக்கலாம்.

    குழந்தைக்கு நரம்பு மண்டலத்தில் பிறவி ஊனங்கள் உண்டாகலாம். இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க, இந்த நோயுள்ளவர்கள் இருமும் போதும் தும்மும் போதும் மூக்கையும் வாயையும் சுத்தமான கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். கர்ப்பிணிகள் முகத்தை மூடிக்கொள்வதற்கு முகமூடி அணிவதாக இருந்தால், மூன்றடுக்கு முகமூடி அல்லது N95 ரக முகமூடி அணிந்தால்தான் நல்ல பலன் கிடைக்கும்.

    வீரியம் குறைக்கப்பட்ட மூவகை நுண்ணுயிரித் தடுப்பூசி(Trivalent inactivated vaccine – TIV) பன்றிக்காய்ச்சலைத் தடுக்கிறது. கர்ப்பம் ஆவதற்கு முன்பும் இதைப் போட்டுக் கொள்ளலாம்; கர்ப்பம் ஆன பிறகும் இதைப் போட்டுக் கொள்ளலாம். ஆனால், இது ஓராண்டுக்குத்தான் நோயைத் தடுக்கும். எனவே, வருடா வருடம் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்கிறவர்களுக்குப் பன்றிக்காய்ச்சல் எப்போதும் வராது. பன்றிக்காய்ச்சலைத் தடுக்க ‘நேசல் ஸ்பிரே தடுப்பு மருந்து’ ஒன்று உள்ளது. இதை கர்ப்பிணிகள் பயன்படுத்தக் கூடாது.
    சிறுதானிய புட்டு மிகவும் சத்தான சிற்றுண்டி. இன்று சிறுதானியங்களை சேர்த்து சுவையான சத்தான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    புட்டு மாவு தயார் செய்ய தேவையான பொருட்கள்

    சாமை - 1 கப்
    தினை - 1 கப்
    வரகு - 1 கப்
    குதிரைவாலி - 1 கப்
    கேழ்வரகு - 1 கப்
    கம்பு - 1 கப்
    சோளம் - 1 கப்

    புட்டு மாவு தயார் செய்யும் முறை

    சாமை, தினை, வரகு, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு, சோளம் ஆகியவற்றை தனித்தனியே வெறும் வாணலியில் போட்டு நன்கு வாசனை வரும்வரை வறுக்கவும். பின் அதனை ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும். சிறுதானியப்புட்டு மாவு தயார்.

    இந்த மாவினை காற்று புகாத டப்பாவில் அடைத்து சுமார் மூன்று மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.



    புட்டு தயார் செய்ய தேவையான பொருட்கள்

    சிறுதானிய புட்டு மாவு - 1 கப்
    தேங்காய் - ½ மூடி (மீடியம் சைஸ்)
    நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
    உப்பு - ஒரு சிட்டிகை
    ஏலக்காய் - 3
    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை :

    தேவையான அளவு தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பை சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

    தேங்காயை துருவிக் கொள்ளவும்.

    ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சிறுதானியப் புட்டு மாவை போட்டு அதனுடன் உப்பு கலந்த தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து கட்டி விழாமல் உதிரியாகப் பிசிறவும். புட்டு மாவானது உதிரியாகவும், ஈரப்பதத்துடனும் இருக்குமாறு செய்ய வேண்டும்.

    பின் ஈரப்பதமான மாவினை ஒன்றுபோல் அழுத்திவிட்டு துணியால் மூடி பத்து நிமிடம் வைக்கவும். பின் புட்டு மாவினை இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேக வைக்கவும்.

    வெந்த புட்டு மாவினை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து ஒரு சேர கலந்து விடவும்.

    சுவையான சிறுதானிய புட்டு தயார்.

    விருப்பமுள்ளவர்கள் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக மண்டை வெல்லத்தை கலந்து புட்டு தயார் செய்யலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×