என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பொது தரிசனம் மட்டுமின்றி கட்டண தரிசன வரிசையிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலையில் மலையை சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். தற்போது பவுர்ணமி மட்டுமின்றி மற்ற நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பொது தரிசனம் மட்டுமின்றி கட்டண தரிசன வரிசையிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    நவக்கிரகங்களால் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தடைகளைத் தகர்த்தெறியும் கோவில், தமிழகத்தில் நிறைய உண்டு. தோல் நோய் தீர தொழ வேண்டிய தெய்வம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    நவக்கிரகங்களால் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தடைகளைத் தகர்த்தெறியும் கோவில், தமிழகத்தில் நிறைய உண்டு. அவற்றுள் ஒன்று திருமங்கலக்குடி பிராணநாத சுவாமி திருக்கோவில். இது கும்பகோணம் அருகில் உள்ளது.

    தோல் நோய் உள்ளவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி, தொடர்ந்து 11 வாரங்கள் இத்தலத்தில் வழிபாடு செய்ய வேண்டும். இங்கு சுவாமிக்கு நிவேதனம் செய்து வெள்ளெருக்கு இலையில் வைத்து தரப்படும் தயிர் சாதத்தை சாப்பிட்டால் தோல் வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஆடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.
    மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. 31-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறார்கள்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் ஐயப்பசாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் சாமியை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. முதலில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 45 ஆயிரம் பக்தர்களாக உயர்த்தப்பட்டதோடு, உடனடி முன்பதிவு முறையும் கொண்டு வரப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து மண்டல பூஜையையொட்டி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தினசரி பக்தர்களின் எண்ணிக்கையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் உயர்த்தியது. அதாவது, 60 ஆயிரம் பக்தர்கள் சபரிமலைக்கு செல்லலாம் என உத்தரவிட்டது. அதன்படி பக்தர்களும் ஐயப்பசாமியை தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் 41 நாட்கள் சிறப்பு பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நேற்று நடந்தது. காலை 11.50 மணி முதல் 1.15 மணி வரை நடந்த பூஜையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடத்தினர்.

    முன்னதாக கலசாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜை தொடங்கிய போது ஐயப்பன் தங்க அங்கியில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது அங்கு தரிசனத்திற்காக இருமுடி கட்டுடன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமியே சரணம், ஐயப்பா சரணம் என்ற சரண கோஷம் முழங்க ஐயப்பசாமியை வழிபட்டனர்.

    மண்டல பூஜை முடிந்ததும் மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. இரவு 9.50 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு, 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜை காலம் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது.

    பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. 31-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறார்கள். அடுத்த மாதம் 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை, ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
    தேய்பிறை அஷ்டமி திதியான இன்று மாலை 4.30 மணியில் இருந்து 6 மணிக்குள் வீட்டில் திருவிளக்கேற்றி இந்த போற்றியை சொல்லி பைரவரை வழிபாடு செய்யலாம்.
    தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும். இந்த நாளில் மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியைச் சொல்லலாம்.

    ஓம் பைரவனே போற்றி
    ஓம் பயநாசகனே போற்றி
    ஓம் அஷ்டரூபனே போற்றி
    ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
    ஓம் அயன் குருவே போற்றி
    ஓம் அறக்காவலனே போற்றி
    ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
    ஓம் அடங்காரின் அழிவே போற்றி
    ஓம் அற்புதனே போற்றி
    ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
    ஓம் ஆனந்த பைரவனே போற்றி
    ஓம் ஆலயக் காவலனே போற்றி
    ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
    ஓம் இடுகாட்டுமிருப்பவனே போற்றி
    ஓம் உக்ரபைரவனே போற்றி
    ஓம் உடுக்கையேந்தியவனே போற்றி
    ஓம் உதிரங்குடித்தவனே போற்றி
    ஓம் உன்மத்த பைரவனே போற்றி
    ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
    ஓம் ஊழத்தருள்வோனே போற்றி
    ஓம் எல்லைத்தேவனே போற்றி
    ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
    ஓம் கபாலதாரியே போற்றி
    ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
    ஓம் கர்வபங்கனே போற்றி
    ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
    ஓம் கதாயுதனே போற்றி
    ஓம் கனல்வீசுங்கண்ணனே போற்றி
    ஓம் கருமேக நிறத்தனே போற்றி
    ஓம் கட்வாங்கதாரியே போற்றி
    ஓம் கனவைக்குலைப்போனே போற்றி
    ஓம் கருணாமூர்த்தியே போற்றி
    ஓம் கால பைரவனே போற்றி
    ஓம் காபாலிகர்தேவனே போற்றி
    ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
    ஓம் காளாஷ்டமி நாதனே போற்றி
    ஓம் காசிநாதனே போற்றி
    ஓம் காவல் தெய்வமே போற்றி
    ஓம் குரோத பைரவனே போற்றி
    ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
    ஓம் சண்டபைரவனே போற்றி
    ஓம் சட்டைநாதனே போற்றி
    ஓம் சம்ஹார பைரவனே போற்றி
    ஓம் சம்ஹாரகால பைரவனே போற்றி
    ஓம் சிவத்தோன்றலே போற்றி
    ஓம் சிவாலயத்திருப்போனே போற்றி
    ஓம் சிக்ஷகனே போற்றி
    ஓம் சீகாழித்தேவனே போற்றி
    ஓம் சுடர்சடையனே போற்றி
    ஓம் சுதந்திர பைரவனே போற்றி
    ஓம் சிவ அம்சனே போற்றி
    ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
    ஓம் சூலதாரியே போற்றி
    ஓம் சூழ்வினையறுப்பவனே போற்றி
    ஓம் செம்மேனியனே போற்றி
    ஓம் க்ஷேத்ரபாலனே போற்றி
    ஓம் தனிச்சந்நிதியுளானே போற்றி
    ஓம் தலங்களின் காவலனே போற்றி
    ஓம் தீதழிப்பவனே போற்றி
    ஓம் துஸ்வப்னநாசகனே போற்றி
    ஓம் தெற்கு நோக்கனே போற்றி
    ஓம் தைரியமளிப்பவனே போற்றி
    ஓம் நவரஸரூபனே போற்றி
    ஓம் நரசிம்மசாந்தனே போற்றி
    ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
    ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
    ஓம் நாய் வாகனனே போற்றி
    ஓம் நாடியருள்வோனே போற்றி
    ஓம் நிமலனே போற்றி
    ஓம் நிர்வாணனே போற்றி
    ஓம் நிறைவளிப்பவனே போற்றி
    ஓம் நின்றருள்வோனே போற்றி
    ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
    ஓம் பகையழிப்பவனே போற்றி
    ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
    ஓம் பலிபீடத்துறைவோனே போற்றி
    ஓம் பாபசக்ஷ்யனே போற்றி
    ஓம் பாசக்குலைப்போனே போற்றி
    ஓம் பால பைரவனே போற்றி
    ஓம் பாம்பணியனே போற்றி
    ஓம் பிரளயகாலனே போற்றி
    ஓம் பிரம்மசிரச்சேதனே போற்றி
    ஓம் பூஷண பைரவனே போற்றி
    ஓம் பூதப்ரேத நாதனே போற்றி
    ஓம் பெரியவனே போற்றி
    ஓம் பைராகியர் நாதனே போற்றி
    ஓம் மல நாசகனே போற்றி
    ஓம் மஹா பைரவனே போற்றி
    ஓம் மணி ஞானனே போற்றி
    ஓம் மகர குண்டலனே போற்றி
    ஓம் மகோதரனே போற்றி
    ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
    ஓம் முக்கண்ணனே போற்றி
    ஓம் முக்தியருள்வோனே போற்றி
    ஓம் முனீஸ்வரனே போற்றி
    ஓம் மூலமூர்த்தியே போற்றி
    ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
    ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
    ஓம் ருத்ரனே போற்றி
    ஓம் ருத்ராக்ஷதாரியே போற்றி
    ஓம் வடுக பைரவனே போற்றி
    ஓம் வடுகூர் நாதனே போற்றி
    ஓம் வடகிழக்கருள்வோனே போற்றி
    ஓம் வடைமாலைப்பிரியனே போற்றி
    ஓம் வாரணாசி வேந்தே போற்றி
    ஓம் வாமனர்க்கருளியவனே போற்றி
    ஓம் விபீஷண பைரவனே போற்றி
    ஓம் வீழாமல் காப்பவனே போற்றி
    சிற்பத்தில் பூமியை பெண்ணாக உருவகித்து புராணங்கள் சொல்வதைப் போல, சிற்பத்திலும் பூமாதேவியை பெண்வடிவில் செதுக்கியிருப்பது அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது.
    குஜராத் மாநிலம் பதான் நகரத்தில் அமைந்துள்ளது, ‘ராணி கி வாவ்’ என்ற படிக்கிணறு. இதனை தமிழில் ‘ராணியின் கிணறு’ என்பார்கள். 1050-ம் ஆண்டு சோலங்கி குல அரசை நிறுவியவர் முதலாம் பீமதேவன். இவரது நினைவாக, அவரது மனைவி உதயமதியால் கட்டப்பட்டதுதான் இதன் படிக்கிணறு. இதனை ஒரு பெண் நிறுவிய ‘காதல் சின்னம்’ என்றும் சொல்லலாம். 64 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 27 மீட்டர் ஆழம் கொண்டது இது. தரையின் கீழே 7 அடுக்குகளைக் கொண்டதாக இந்த கட்டமைப்பு இருக்கிறது. பிற்காலத்தில் மண்மூடிப்போயிருந்த இந்த கட்டிடத்தை, தொல்லியல் துறையினர் 1960-ம் ஆண்டு கண்டுபிடித்தனர்.

    இந்த படிக்கிணற்றின் பக்கவாட்டு சுவர்களில் திருமாலின் பத்து அவதாரங்கள் பற்றிய சிற்பங்கள், காளி, மகிஷாசூரன், நாக கன்னிகள், யோகினி, 16 வகையான கலைநயத்துடன் கூடிய தேவலோக கன்னிகள், புத்தர், சாதுக்கள், திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட திருமால் போன்ற பல்வேறு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுதான் இங்கே நீங்கள் பார்க்கும் வராகமூர்த்தி சிற்பம்.

    பொதுவாக வராகமூர்த்தி பூமியை மீட்டு வந்த சிற்பத்தை வடிக்கும்போது, அவரது இரண்டு கொம்புகளுக்கு மேல் பூமி இருப்பது போல்தான் வடிப்பார்கள். ஆனால் இந்த சிற்பத்தில் பூமியை பெண்ணாக உருவகித்து புராணங்கள் சொல்வதைப் போல, சிற்பத்திலும் பூமாதேவியை பெண்வடிவில் செதுக்கியிருப்பது அனைவரையும் கவரும் வகையில் இருக்கிறது.
    இன்று (சனிக்கிழமை) முதல் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி வரும் 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 3-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 10-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நம்பெருமாள் நேற்று முன் தினம் இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை உற்சவர் நம்பெருமாள் நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் நடத்தி காட்டப்பட்டது.

    பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளித்தார். அதன்பின் நம்மாழ்வாரை அர்ச்சகர்கள் இருவர் கொண்டு சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் சொல்லியபடி மூடினர். அதன்பின் பல்வேறு வேதங்களை சொல்லியபடி நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர்.

    பின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்த தாக தெரிவித்தனர். அப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசிமாலையும் அணிவிக்கப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டு வணங்கினர்.

    பின்னர் காலை 8 மணிமுதல் காலை 9 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார். காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    அதன் பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணிமுதல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெற்றது. அதன் பின் அதிகாலை 2மணி முதல் அதிகாலை 4 மணி வரை திருவாராதனம் வகையறாவும், அதிகாலை 4 மணி முதல் 5 மணிவரை சாற்று மறையும் நடைபெற்றது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முதல் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி வரும் 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

    பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும். இன்று முதல் ஸ்ரீரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல் பத்து உற்சவத்தில் இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுவார்.

    ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழித்திருநாள் 30-ந் தேதி தொடங்கி வரும் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    கொரோனா காரணமாக கடந்த ஆண்டு களையிழந்து காணப்பட்ட கிறிஸ்துமஸ் பெருவிழா, இந்த ஆண்டு மீண்டும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
    சென்னை :

    கிறிஸ்துமஸ் பெருவிழா உலகம் முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நள்ளிரவு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    இந்த பிரார்த்தனை கூட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

    கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து பிறப்பை விளக்கும் வகையில் பல்வேறு வகையான குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேவாலயங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் மற்றும் அலங்கார தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கிறிஸ்தவ மக்கள் புத்தாடைகள் அணிந்து பிரார்த்தனை நிகழ்ச்சிக்கு ஆலயங்களுக்கு வந்திருந்தனர்.

    சென்னை மயிலாப்பூர், எழும்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர், கிண்டி சாந்தோம், அடையாறு, பெசன்ட் நகர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்கள்.

    சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதேபோல் எழும்பூரில் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.

    சாந்தோம் தேவாயலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்துவ மக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன், இனிப்புகளை பரிமாறி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்கள். ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்கள் மேலும் தேவாலயங்களில் உள்ள கிறிஸ்துமஸ் குடில்களில் செல்பி போட்டோக்கள் எடுத்து மகிழ்ந்தார்கள்.

    கொரோனா காரணமாக கடந்த ஆண்டு களையிழந்து காணப்பட்ட கிறிஸ்துமஸ் பெருவிழா, இந்த ஆண்டு மீண்டும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் மகிழ்ச்சிப் பெருவிழா என்று கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
    பண்டிகை என்றாலே உற்சாகம்தான். அதிலும் குளிர்காலத்தில் வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகை கூடுதல் உற்சாகத்தை தரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது..

    பளிச்சிடும் வண்ண வண்ண விளக்குகள், குழந்தை இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் விதவிதமான குடில்கள், பலவகையான சுவையான கேக்குகள், பரிசுகளைச் சுமந்துவரும் அன்பான கிறிஸ்துமஸ் தாத்தா, கண்ணைக் கவரும் கிறிஸ்துமஸ் மரங்கள், வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள்என அனைத்துமே மனதிற்குள் கூடுதல் குதூகலத்தை கொண்டுவரும். கிறிஸ்தவர்களால் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் மகிழ்ச்சிப் பெருவிழா என்று கிறிஸ்துமஸ் பண்டிகையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

    *டிசம்பர் 25 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 5ஆம் தேதி வரை ‘கிறிஸ்துமஸ்டைட்’ அல்லது ‘ பனிரெண்டு புனித நாட்கள்’ என்று கூறப்படுகிறது.

    *ஆங்கிலத்தில் கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையில் உள்ள X,கிரேக்கத்தில் ‘கிரைஸ்ட்’என்ற பொருளில் இருந்து வந்தது.

    *ஜெர்மனியில் பதினாறாம் நூற்றாண்டில்தான் முதன்முதலில் கிறிஸ்துமஸ் மர அலங்காரம் தோன்றியதாக நம்பப்படுகிறது.

    *கிறிஸ்துமஸ் மரத்தை வீடுகளில் அலங்கரிக்கும் பாரம்பரியமானது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

    * நார்ட்மேன்ஃபிர் எனப் பெயர் கொண்ட மரமே கிறிஸ்துமஸ் மரங்களின் தலைவர் என்ற பட்டத்தை பெற்றுள்ளது.

    *பத்தொன்பதாம் நூற்றாண்டின் போது ஜெர்மனியில் செயற்கை கிறிஸ்துமஸ் மரங்கள் உருவாக்கப்பட்டு பின்னர் அவை மற்ற நாடுகளில் பிரபலமடைந்தன.

    *2007 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் 85 மீட்டர் உயரமுடைய மிகப்பெரிய மிதக்கும் கிறிஸ்துமஸ் மரமானது மைக்ரோ விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது.

    *கிறிஸ்துமஸ் மரமானது முதன்முதலில் ஆப்பிள் பழங்களை கொண்டுதான் அலங்கரிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. பின்னர் 1895ஆம் ஆண்டு முதல் கிறிஸ்துமஸ் மரமானது விளக்குகள்.மற்றும், மெழுகுவர்த்தி ஆகியவற்றைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டது.

    *டட்ச் புராணக் கதையின் வாயிலாக காலுறைகளை கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்கவிடும் மரபு துவங்கியது. செயின்ட் நிக்கோலஸ் என்பவர், வீதியில் வாழ்ந்த ஏழை மனிதரின் மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்ய பணம் இல்லாமல் தவித்ததைப்பார்த்து அவர்கள் நெருப்பூட்டும் இடத்தில் தங்க நாணயங்களைப் போட்டாராம்.அங்கு காய்ந்து கொண்டிருந்த காலுறைக்குள் தங்க நாணயங்கள் விழுந்தது.அதனால், வீதியில் வாழும் நிலை மாறி அந்த ஏழை தன்னுடைய மூன்று மகள்களுக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். அதனை நினைவு கூறும் விதமாக இன்றளவும் காலுறைகளை கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்க விடும் பழக்கம் தொடர்கின்றது.

    *கிறிஸ்துமஸ் தாத்தா, நத்தார் தாத்தா, சாண்டா கிளாஸ், புனித நிக்கலஸ் என்று பல பெயர்களால் அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா என்பவர் தொன்ம வரலாறு, மற்றும் நாட்டார் பாடல்களில் வரும் ஒரு பாத்திரம் ஆகும் .இவர் கிறிஸ்துமஸ் நாளுக்கு முதல் நாள் இரவில் குழந்தைகளுக்கு அன்பளிப்புகளை கொண்டு வருபவராக குறிப்பிடப்படுகிறார்.

    *புனித நிக்கோலஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த சிவப்பு- வெள்ளை அங்கியே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது. அப்போது முதல் உலகம் முழுவதும் அன்பின் திருவுருவமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருகிறார்.

    *கிறிஸ்துமஸ் தாத்தாவை ‘ கனக லோகா’ என்று ஹவாயிலும்;க்ரிஸ் க்ரிங்கில் என்று ஜெர்மனியிலும்; லீ பெஃபனா இன்று இத்தாலியிலும்; பெரே நோயல் என்று பிரான்சிலும்; டியூஷ்கா மோரோஸ் என்று ரஷ்யாவிலும் அழைக்கிறார்கள்.

    *சாண்டா கிளாஸ் குறித்து டாக்டர் மூர் எழுதிய புகழ்பெற்ற கவிதை இன்றளவும் அமெரிக்காவில் மிக பிரபலமாக உள்ளது.

    *கடும் குளிர் நிறைந்த துருவப் பிரதேசங்களில் பறக்கும் மான் வகைகள் இருந்ததாகவும் இந்த பறக்கும் மான்களையே கிறிஸ்துமஸ் தாத்தா தனது வாகனமாக பயன்படுத்தினார் என்றும் கதைகள் கூறுகின்றன.

    * முதன்முதலில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் முறையை தோற்றுவித்தவர் இத்தாலி நாட்டில் வாழ்ந்த’ புனித பிரான்சிஸ்’ என்ற துறவி ஆவார்.

    *இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் முதல் வாழ்த்து அட்டையை உருவாக்கியவர் என்ற பெருமையை பெறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த இவர், கிறிஸ்துமஸ் சமயத்தில் உறவினர்களுக்கு கடிதம் எழுத இயலாததால் அட்டையில் படத்தை அச்சிட்டு அனுப்பினார். அவர் ஆயிரம்பேருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதன்பிறகே கிறிஸ்துமஸ் சமயத்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் ஏற்பட்டது .

    *வில்லியம் மைனர் என்ற பிரிட்டிஷ் மாலுமி கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்திய பெருங்கடலில் உள்ள ஒரு தீவை கண்டு பிடித்தார். அதன் காரணமாகவே அந்த தீவிற்கு “கிறிஸ்துமஸ்” என்ற பெயர் சூட்டப்பட்டது.

    *“ஜிங்கிள் பெல்ஸ்” என்ற பிரபலமான கிறிஸ்துமஸ் பாடலை இசையமைத்தவர் அமெரிக்காவின், ஜேம்ஸ் பியர்பாண்ட் என்பவராவார்.

    *உலகின் பல நாடுகளிலும் கிறிஸ்துமஸ் சந்தைகள் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

    *உதவும் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக கொண்டாடப்படுவது தான் கிறிஸ்துமஸ் பண்டிகை. கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி தேவாலயங்களில் உண்டியல் பெட்டிகளை வைத்து விடுவார்கள். பணம் படைத்தவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் அப்பெட்டிகளில் பணத்தை போட்டு வருவார்கள.. வருடத்துக்கு ஒருமுறை அப்பபெட்டியானது திறக்கப்பட்டு அதிலிருக்கும் பணமானது ஏழை எளிய மக்களின் பொருளாதாரத் தேவையை நிறைவேற்றுவதற்காக வழங்கப்படுகின்றது.
    பல சிறப்புகளும், அதிசயங்களும் நிறைந்த இந்த திருச்செங்கோடு மலையில், ஐந்து தலைகளுடன் கூடிய ஆதிசேஷனின் உருவம் இருக்கிறது. இதில் மஞ்சளும், குங்குமமும் கலந்து பூசி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.
    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், பழமையும் புராணப் பெருமையும் கொண்ட திருத்தலம் ஆகும். இங்கு மூலவராக அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருநாமம் ‘பாகம்பிரியாள்’ என்பதாகும். பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும், இந்த திருக்கோவிலில், மார்கழி மாதத்தில் மட்டும் அபிஷேகம் செய்து வழிபடப்படும் மரகத லிங்கம் உள்ளது. இது பற்றிய தகவலை இங்கே பார்ப்போம்.

    முன்பொரு சமயம், ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் இடையே ‘யார் பலசாலி?’ என்ற வாதம் ஏற்பட்டது. அவர்களுக்குள் யுத்தம் நடைபெற்றால், உலகத்தில் பேரழிவு ஏற்படும் என்பதை உணர்ந்த முனிவர்கள், இதற்கு ஒரு யோசனையைக் கூறினர். ஆதிசேஷன் மேரு மலையை தன்னுடைய உடலால் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொள்ள, அவரது பிடியை வாயுதேவன் தன் சக்தியைக் கொண்டு தளர்த்த வேண்டும் என்பதே போட்டி. மலையை இறுகப் பற்றிக்கொண்ட ஆதிசேஷனின் பிடியை, வாயுதேவனால் தளர்த்த முடியவில்லை. இதனால் வாயுதேவன் தன்னுடைய மூச்சை அடக்கிக்கொண்டார். இதனால் உலகமே சுவாசிக்க முடியாமல் திணறிப்போனது. உலக உயிர்கள் அனைத்தும் துன்பத்தில் துவண்டன.

    இதைக் கண்டு முனிவர்கள் அனைவரும், ஆதிசேஷனிடம் பிடியை கொஞ்சம் தளர்த்தும்படி வேண்டினர். அவரும் அப்படியே செய்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட வாயு தேவன், தன்னுடைய முழு சக்தியையும் பிரயோகித்து மலையை சிதறச் செய்தார். மூன்று பாகமாக சிதறிய மேரு மலையோடு, ஆதிசேஷனின் உடலும் மூன்றாக பிரிந்து விழுந்தது. அதில் ஒன்று திருவண்ணாமலை திருத்தலம், மற்றொன்று இலங்கை, இன்னொன்று நாகமலை எனப்படும் திருச்செங்கோடு திருத்தலம் என்று தல புராணம் சொல்கிறது.

    பல சிறப்புகளும், அதிசயங்களும் நிறைந்த இந்த திருச்செங்கோடு மலையில், ஐந்து தலைகளுடன் கூடிய ஆதிசேஷனின் உருவம் இருக்கிறது. இதில் மஞ்சளும், குங்குமமும் கலந்து பூசி பக்தர்கள் வழிபடுகிறார்கள். இதனால் நாக தோஷம் நீங்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆதிசேஷன் படமெடுத்த நிலையில் லிங்கத்தை தாங்கியிருப்பது சிறப்புக்குரியது.

    சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டவர் பிருங்கி முனிவர். இவர் கயிலாயமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை தரிசனம் செய்ய அவ்வப்போது வருவதுண்டு. அப்போதெல்லாம் ஈசனை மட்டுமே வலம்வந்து வணங்கி விட்டு, அம்பாளை தரிசிக்காமல் சென்று விடுவார். இதனால் கோபம் கொண்ட அம்பாள், மற்றொரு முறை பிருங்கி முனிவர் கயிலாயம் வந்தபோது, ஈசனோடு நெருங்கி அமர்ந்து கொண்டார். இதன்காரணமாக பிருங்கி முனிவர் தன்னையும் வலம்வந்து வணங்கித்தான் ஆகவேண்டும் என்று பார்வதிதேவி நினைத்தார். ஆனால் வண்டு உருவம் எடுத்த பிருங்கி முனிவர், சிவபெருமானை மட்டும் சுற்றிவந்து வணங்கினார்.

    கோபத்தின் உச்சிக்கே சென்ற பார்வதி, பிருங்கி முனிவர் தனது சக்தி முழுவதையும் இழக்கும்படி சபித்துவிட்டார். ஆனால் அவர் நிலைகுலையாமல் இருப்பதற்காக ஊன்றுகோல் ஒன்றை வழங்கினார் சிவபெருமான். மேலும் பிருங்கி முனிவருக்கு, சிவமும் சக்தியும் வேறல்ல. இவரும் ஒன்றுதான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்து, சிவலிங்கமாக மாறினார். அந்த லிங்கத்தில் பார்வதியும் கலந்தார். திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரையும், அந்த லிங்கத்தின் முன்பாக உள்ள மரகத லிங்கத்தையும் வழிபட நினைத்தார், பிருங்கி முனிவர்.

    அவர் தினமும் அதிகாலையில் அங்கு வந்து மரகத லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். இதன் பயனாக அவர் மீண்டும் சக்தியைப் பெற்றார். பின்னர் தன்னுடைய சீடர்களுக்கு, இங்குள்ள மரகத லிங்கத்தின் சக்தியை எடுத்துரைத்த பிருங்கி முனிவர், மார்கழி மாதத்தில் மட்டும் மரகத லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுங்கள். பின் சூரியன் உதிக்கும் முன்பாக அதை பேழையில் வைத்துவிட வேண்டும். மற்ற மாதங்களில் சாதாரண லிங்கத்தை வைத்து வழிபடுங்கள் என்று கட்டளையிட்டார். அதன்படியே இன்றளவும் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் மட்டுமே மரதக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மற்ற நேரங்களில் சாதாரண லிங்கத்தையே தரிசிக்க முடியும்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மண்டல பூஜை நடக்கிறது. இதையொட்டி இன்று (சனிக்கிழமை) தங்க அங்கி அணிவித்து ஐயப்பனுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
    நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு வாய்ந்த நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆகியவை நடந்து வருகிறது.

    சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதையொட்டி, தங்க அங்கி கடந்த 22-ந்தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் ஊர்வலமாக சபரிமலைக்கு புறப்பட்டது.

    தங்க அங்கி இன்று (சனிக்கிழமை) மதியம் பம்பை கணபதி கோவில் வந்தடையும். பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு செல்கிறார்கள். மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும். தொடர்ந்து 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு தங்க அங்கி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தொடர்ந்து அலங்கார சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. பிறகு வழக்கமான பூஜைகளுடன் இரவு10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    மீண்டும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து, காலை 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பிறகு 11.55 மணி முதல் மதியம் 1 மணி வரை மண்டல பூஜை நடைபெறும். அதை தொடர்ந்து நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் முடிந்த பின்னர் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    மகர விளக்கையொட்டி ஐயப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். அன்றைய தினம் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 31-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14-ந்தேதி நடக்கிறது.
    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.
    கிறிஸ்துமஸ் விழாவை யொட்டி உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இப்பேராலயம் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. இங்கு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழா நேற்று இரவு 11 மணிக்கு திருப்பலியுடன் தொடங்கியது. வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய வளாகத்தில் உள்ள சேவியர் திடலில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து மறையுரை, கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், கொங்கனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.

    பேராலய அதிபர் இருதயராஜ் கிருஸ்துமஸ் திருப்பலிகளை நிறைவேற்றினார். பங்குத்தந்தை அற்புதராஜ் மற்றும் உதவிப் பங்குத் தந்தைகள் பூஜைகளை நடத்தினர். திருப்பலிகளின் நிறைவில் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகையில் பேராலய அதிபர் இருதயராஜ் குழந்தை இயேசு சொரூபத்தை பக்தர்களுக்குக் காண்பித்தார்.

    அப்போது அனைவரும் மண்டியிட்டு இயேசு துதி வாசகங்களை ஜெபித்தனர். பேராலய நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வாழ்த்துச் செய்தி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் கிருஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

    கிறிஸ்துமஸ் பண்டி கையையொட்டி பேராலய கோபுரங்கள் மட்டுமின்றி வேளாங்கண்ணி நகரமே மின்னொளி பந்தலில் ஜொலித்தது.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் பேராலய விண்மீன் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் சேவியர் திடலில் வழிபாடு நடத்தப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

    கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு அடையாளமாக நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி குழந்தை ஏசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பர்.
    ஏசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸ் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது திருப்பலி, குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா, வாழ்த்து அட்டை மற்றும் பரிசுகளை் பரிமாறல் போன்றவை ஆகும். கிறிஸ்துமஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்று தேவாலயங்கள், கிறிஸ்தவர்கள் வீடுகள் என்று களைக்கட்டி இருக்கும். கிறிஸ்துமஸ் பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இந்தியாவில் கிறிஸ்தவ கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு விடுமுறை நாட்கள் பெரிய வெள்ளி அல்லது புனித வெள்ளி மற்றும் கிறிஸ்து பிறப்புவிழா ஆகும். டிசம்பர் 24-ந் தேதி நள்ளிரவில் கிறிஸ்தவர்கள் ஆலயங்களுக்குச் சென்று திருப்பலியில் கலந்துகொண்டு நற்கருணை விருந்தில் பங்கேற்பர். கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு அடையாளமாக நாணல் போன்ற புல்லினால் குடில் கட்டி குழந்தை ஏசு, மரியாள், யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் செரூபங்களை வைப்பர். விண்மீன்களுக்கு அடையாளமாக காகிதத்தாலான விண்மீன்களை வண்ண விளக்குக்களால் அலங்கரிப்பர். வீடுகளில் விருந்து நடைபெறும்.

    எல்லாரும் புத்தாடை அணிவர். நண்பர்களையும் உறவினரையும் சந்திக்கச் செல்வர். மேலும், இரவில் வாண வேடிக்கைகள் நடைபெறும். பல இடங்களில் கிறிஸ்துமஸ் பஜனை நடைபெறும். அப்போது பாடல் குழுவினர் அணியாகச் சென்று வீடுகளில் உள்ளவர்களை சந்தித்து கிறிஸ்துமஸ் பாடல்கள்(கரோல்ஸ்) இசைப்பார்கள். கிறிஸ்தவர்களோடு பிற சமயத்தவரும் இணைந்து இவ்விழவைக் கொண்டாடுகின்றனர். கிறிஸ்து பிறப்பு விழா மதநல்லிணக்கம் உருவாக உறுதுணையாக உள்ளது என்பதில் ஐயமில்லை.
    ×