search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சாமியை தரிசிக்க இருமுடி கட்டுடன் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
    X
    சாமியை தரிசிக்க இருமுடி கட்டுடன் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

    மண்டல பூஜை: பக்தர்கள் தரிசனத்துக்கு பிறகு சபரிமலை கோவில் நடை சாத்தப்பட்டது

    மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. 31-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறார்கள்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த மாதம் 15-ந் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் ஐயப்பசாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் சாமியை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு முறை அமல்படுத்தப்பட்டது. முதலில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 45 ஆயிரம் பக்தர்களாக உயர்த்தப்பட்டதோடு, உடனடி முன்பதிவு முறையும் கொண்டு வரப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து மண்டல பூஜையையொட்டி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு தினசரி பக்தர்களின் எண்ணிக்கையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் உயர்த்தியது. அதாவது, 60 ஆயிரம் பக்தர்கள் சபரிமலைக்கு செல்லலாம் என உத்தரவிட்டது. அதன்படி பக்தர்களும் ஐயப்பசாமியை தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் 41 நாட்கள் சிறப்பு பூஜையின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நேற்று நடந்தது. காலை 11.50 மணி முதல் 1.15 மணி வரை நடந்த பூஜையை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடத்தினர்.

    முன்னதாக கலசாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜை தொடங்கிய போது ஐயப்பன் தங்க அங்கியில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது அங்கு தரிசனத்திற்காக இருமுடி கட்டுடன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமியே சரணம், ஐயப்பா சரணம் என்ற சரண கோஷம் முழங்க ஐயப்பசாமியை வழிபட்டனர்.

    மண்டல பூஜை முடிந்ததும் மதியம் 1.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. பின்னர் மாலை 4 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. இரவு 9.50 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு, 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. 41 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜை காலம் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது.

    பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. 31-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறார்கள். அடுத்த மாதம் 14-ந் தேதி மகரவிளக்கு பூஜை, ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
    Next Story
    ×