search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தங்க அங்கி
    X
    தங்க அங்கி

    சபரிமலையில் நாளை மண்டல பூஜை: தங்க அங்கி அணிவித்து இன்று சிறப்பு தீபாராதனை

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மண்டல பூஜை நடக்கிறது. இதையொட்டி இன்று (சனிக்கிழமை) தங்க அங்கி அணிவித்து ஐயப்பனுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
    நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 15-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு வாய்ந்த நெய்யபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆகியவை நடந்து வருகிறது.

    சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுவதையொட்டி, தங்க அங்கி கடந்த 22-ந்தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் ஊர்வலமாக சபரிமலைக்கு புறப்பட்டது.

    தங்க அங்கி இன்று (சனிக்கிழமை) மதியம் பம்பை கணபதி கோவில் வந்தடையும். பின்னர் அங்கிருந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் தலைச்சுமையாக தங்க அங்கியை சன்னிதானத்திற்கு கொண்டு செல்கிறார்கள். மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும். தொடர்ந்து 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்பட்டு தங்க அங்கி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தொடர்ந்து அலங்கார சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. பிறகு வழக்கமான பூஜைகளுடன் இரவு10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    மீண்டும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து, காலை 11 மணிக்கு நடைபெறும் களபாபிஷேகத்திற்கு பிறகு 11.55 மணி முதல் மதியம் 1 மணி வரை மண்டல பூஜை நடைபெறும். அதை தொடர்ந்து நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் முடிந்த பின்னர் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

    மகர விளக்கையொட்டி ஐயப்பன் கோவில் நடை மீண்டும் வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். அன்றைய தினம் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 31-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் அடுத்த மாதம் 14-ந்தேதி நடக்கிறது.
    Next Story
    ×