என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சக்கரபாணி ஆலயத்தை வலம் வந்து வழிபட்டால், திருமண பாக்கியம், புத்திரப்பேறு கிடைக்கும். தீராத வியாதிகள் தீரும். இன்று இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தல வரலாறு

    ஜலந்தராசுரன் என்ற அரக்கனை அழிக்கும் பொருட்டு, சாரங்கபாணி சுவாமியால் திருச்சக்கரம் அனுப்பப்பட்டது. அது பாதாள லோகத்தில் இருந்த அந்த அசுரனை அழித்து, பூமியை பிளந்து கொண்டு காவிரி வழியாக வெளிவந்தது. காவிரிக்கரையில் யாகம் செய்துகொண்டிருந்த பிரம்மனின் கரங்களில் வந்து அமர்ந்தது. அதை காவிரிக்கரையிலேயே பிரதிஷ்டை செய்தார் பிரம்மன். அந்தச் சக்கரம், சூரியனை விட பன்மடங்கு ஒளி பொருந்தியதாக இருந்தது. இதனால் பொறாமை கொண்ட சூரியன், தன்னுடைய ஒளியையும் அதிகப்படுத்தினான். ஆனால் அந்த ஒளியையும் தனக்குள் இழுத்துக் கொண்டார், சக்கரபாணி. இதனால் ஒளியையும், பலத்தையும் இழந்த சூரியன், இத்தல இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றான்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது, சக்கரபாணி திருக்கோவில்.

    மூலவரின் திருநாமம், ‘சக்கரபாணி’. இவரது சன்னிதியின் வடபுறம் விஜயவல்லி தாயார் சன்னிதி இருக்கிறது.

    சோழர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் உள்ள இறைவன், மூன்று கண்களுடன் அருள்பாலித்து வருகிறார்.

    கும்பகோணம் மகாமக குளத்தைச் சுற்றிலும் 16 கோவில்கள் உள்ளன. இந்த ஆலயங்களை தரிசித்து, மகாமக குளத்தில் நீராடுபவர்களின் புண்ணியங்கள் அனைத்தும், சக்கரபாணிக்கு உரியதாகும்.

    இத்தல இறைவனான சக்கரபாணி, பூமியை பிளந்து கொண்டு காவிரியில் இருந்து தோன்றியவர். காவிரியில் ஸ்ரீசக்கரம் தோன்றிய இடம், தற்போது ‘சக்கர தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

    சூரியன், இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனிடம் சரணடைந்த காரணத்தால், நவகோள்களால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் இத்தல இறைவனை வழிபட்டால் நீங்கும்.

    இத்தல இறைவன் முக்கண்ணுடன் எழுந்தருளி உள்ளதால், பூ, துளசி, குங்குமம் ஆகியவற்றுடன் வில்வ அர்ச்சனையும் செய்யப்படுகிறது.

    ஏழரைச்சனி, அஷ்டமத்துச்சனி, ராகு-கேதுக்களால் வரும் பாதிப்புகள் என அனைத்தையும் நீக்கும் சக்தி, சக்ரபாணிக்கு உண்டு.

    இங்குள்ள இறைவனை, பிரம்மதேவன், அக்னி பகவான், சூரியன், மார்க்கண்டேயர் ஆகியோர் வழிபாடு செய்துள்ளனர்.

    இந்த கோவிலுக்குள் அமைந்திருக்கும் அமிர்த புஷ்கரணி தீர்த்தம், காசியையும், அங்கு பாயும் கங்கையையும் விட புனிதமானது.

    இந்த ஆலயத்தை வலம் வந்து வழிபட்டால், திருமண பாக்கியம், புத்திரப்பேறு கிடைக்கும். தீராத வியாதிகள் தீரும்.
    ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் திருமணம் நடைபெறாமல் தள்ளிப்போய், அவதிக்குள்ளாகும் நபர்கள் அதிகம். திருமணத் தடை நீக்கும் திருத்தலங்களை அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான நிகழ்வாக திருமணம் பார்க்கப்படுகிறது. அது நடைபெறாமல் தள்ளிப்போய், அவதிக்குள்ளாகும் நபர்கள் அதிகம். அவ்வாறு திருமணம் தாமதமாகும் நபர்கள், திருமணஞ்சேரி சென்று அங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரர், கோகிலாம்பாளை வழிபட்டு வரலாம் என்பது யாவரும் அறிந்த உண்மை.

    அதேபோல், சென்னை அருகே உள்ள சிறுவாபுரி வள்ளிமணாளப் பெருமான், திருவிடந்தை ஆதிவராகப் பெருமாள் -அகிலவள்ளி நாச்சியார் ஆகியோரையும் வழிபாடு செய்யலாம். மேலும் திருவீழிமிழலை அரசாணிக்கால் சுற்றி வந்து வழிபாடு செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
    இன்று நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பெண்கள் அரிசியை சேகரித்தனர். இதனை வீட்டுக்கு கொண்டு சென்று வைத்து வேண்டிக்கொண்டால் பசி எனும் நோய் ஒழிந்து, அள்ள அள்ள அன்னம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அஷ்டமி சப்பர தேரோட்டம் சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலையை எடுத்துக்கூறும் வகையில் நடைபெறுகிறது. ஒரு சமயம் பார்வதிக்கு இவ்வுலகத்தில் பிறந்த அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இறைவன் உணவு அளிக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்தது. இதனை சோதனை செய்ய பார்வதி குவளைக்குள் ஒரு எறும்பை அடைத்துவிட்டார்.

    சிவபெருமான் அன்று அனைத்து உயிரினங்களுக்கும் படியளந்து விட்டு திரும்பினார். அப்போது இடைமறித்த பார்வதி தாம் அடைத்து வைத்துள்ள எறும்புக்கு படியளக்க மறந்துவிட்டார் என நினைத்து சிவன் முன்பு குவளையை திறந்தார். அப்போது அதில் இருந்த எறும்பு அரிசியை சாப்பிட்டு கொண்டிருந்தது. இதையடுத்து பார்வதி தன் தவறை உணர்ந்தார். உலகில் தோன்றிய எல்லா உயிரினங்களுக்கும் தினமும் ஏதோ ஒரு வழியில் இறைவன் உணவு வழங்கி படியளக்கிறார் என்பதை விளக்கும் வகையில் மதுரையில் அஷ்டமி சப்பர தேரோட்டம் நடக்கிறது.

    அதன்படி தேரோட்டத்தின்போது சிவாச்சாரியார்கள் பூஜை செய்யப்பட்ட அரிசியை தேர் வரும் வழித்தடத்தில் வீசிச் செல்வார்கள். தேர் சென்ற பிறகு அதனை பக்தர்கள் சேகரித்து வீட்டுக்கு கொண்டு செல்வார்கள். இன்று நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பெண்கள் அரிசியை சேகரித்தனர். இதனை வீட்டுக்கு கொண்டு சென்று வைத்து வேண்டிக்கொண்டால் பசி எனும் நோய் ஒழிந்து, அள்ள அள்ள அன்னம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும், விபத்து, துர்மரணம் இவற்றிலிருந்தும் காப்பவர் பைரவர் மட்டுமே. இத்துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்.

    பைரவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதம் இருந்து வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும்.

    சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 8 மணிக்குள் அல்லது கோவில் நடை சாத்துவதற்குள் வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும். திறந்திருக்கும் பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும், கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ, கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது.

    64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம். இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதாரணமான விளக்கு போடலாம், அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதாரணமான விளக்கு 7 விளக்கு போடலாம்.
    திருப்பதியில் ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கான வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது. தினமும் 1000 டிக்கெட்டுகள் வீதம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் ரூ.500 கட்டணத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதம் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

    ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கான வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது. தினமும் 1000 டிக்கெட்டுகள் வீதம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இதற்கான டிக்கெட் கட்டணம் ரூ.500 வசூலிக்கப்படுகிறது. ரூ.300 கட்டணத்தில் சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதுபோல் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்திற்கும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    வி.ஐ.பி. தரிசனத்தை தேவஸ்தானம் எளிய முறையில் கொண்டு வந்துள்ளது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    இலவச தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. 2.60 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட சிறிது நேரத்தில் புக்கிங் செய்யப்பட்டு முடிந்து விட்டது.
    பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல்வேறு அரசு துறைகளின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவுக்கு வருகிற 12-ந்தேதி காலை 6.45 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. இதையடுத்து 17-ந்தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு வெள்ளிரதமும் நடைபெறுகிறது. மேலும் 18 -ந்தேதி தைப்பூச திருவிழாவும், அன்று மாலை 4.45 மணிக்கு திருத்தேரோட்டம், 24-ந்தேதி இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேரும் நடக்கிறது.

    எனவே கோவிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க கோவில் நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். கைகளை கழுவ கிருமி நாசினி, முககவசம் வைக்கப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல்வேறு அரசு துறைகளின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மார்கழி மாதத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐப்பனை வழிபட்டனர்.
    முசிறி ஐயப்பன் கோவிலில் 45-ம் ஆண்டாக திருவிளக்கு வழிபாடு, அய்யப்பன் பஜனை மற்றும் பம்பா தீபத்தேரை காவிரி ஆற்றில் விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை குருசாமிகள் ஜெயபாலன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அயப்பனை வழிபட்டனர்.

    தொட்டியம் கடைவீதியில் அமைந்துள்ள பகவதிஅம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் குட்டி குடித்தல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் மாரியாயி கும்பிடும் நிகழ்ச்சி கடந்த 24-ந் தேதி ஊர்சாற்றுமுறையுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாரியாயி கும்பிடும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அப்போது தொட்டியம் பகுதிக்கு உட்பட்ட பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இதேபோல தொட்டியம் மதுரா நகரில் அமைந்துள்ள ஐயப்பன் ஆசிரமத்தில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது. விழாவில் காலை அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு உற்சவர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் புறப்பாடும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், மண்டல பூஜை விழா குழுவினரும் செய்து இருந்தனர்.

    திருச்சி நவல்பட்டை அடுத்த போலீஸ் காலனி ஞான விநாயகர் கோவிலில் உள்ள அய்யப்பனுக்கு நேற்று மண்டல அபிஷேக பூஜையை முன்னிட்டு உற்சவமூர்த்தியின் திருவீதி உலா நடைபெற்றது.
    மாங்கல்ய தோஷத்தையும் நீக்கி சுமங்கலி பிராப்தம் தந்தருளும் திருத்தலமாக திருமங்கலக்குடி விளங்குகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சுவாமி : அருள்மிகு பிராணநாத சுவாமி.
    அம்பாள் : அருள்மிகு மங்களாம்பிகை.
    தீர்த்தம் : மங்கள தீர்த்தம்.

    தலச்சிறப்பு : நவக்கிரகங்களின் தோஷம் நீங்கிய தலம். இத்தலத்தை வழிபட்ட பின்னர் சூரியனார் கோயிலுக்குச் செல்வது மரபு. இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கார்த்திகை முதல் ஞாயிறு தொடங்கி 11-வது ஞாயிறு இங்கு வந்து வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம், சாமிக்கு நிவேதனம் செய்து சாப்பிட்டால் பெரு வியாதிகள் நீங்கும். மங்களநாயகியின் திருக்கரத்தில் இருக்கும் மாங்கல்ய சரடு பெண்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. மங்காளம்பிகைக்கு 5 வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டால் மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகியவை நீங்கப்பெற்று தீர்க்க சுமங்கலி பிராப்தமும், விரைவில் விவாக பிராப்தமும் கிடைக்க அம்பாள் அருள் புரிவாள். மேலும் இத்திருக்கோவிலில் உள்ள அகத்தீஸ்வரர் லிங்கத்திற்கு அமாவாசை தினத்தில் அபிஷேகம் செய்வதால் பூர்வ ஜன்ம தோஷம், பித்ருக்கள் சாபம் நிவர்த்தி ஆகும்.

    தல வரலாறு : பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில், அலைவாணர் என்பவர் அமைச்சராக இருந்தார். அவர் அரசனின் அனுமதி பெறாமல் வரிப் பணத்தை தான் வசிக்கும் திருமங்கலக்குடியில் சிவபெருமானுக்கு ஆலயம் எழுப்பச் செலவிட்டார். இதை அறிந்த மன்னன் அவரை அழைக்க, அமைச்சரோ மன்னனைக் காண அஞ்சி உயிர் நீத்தார். இறக்கும் போது அவர் தனது மனைவியிடம் "நான் இறந்தவுடன் என் உடலை திருமங்கலக்குடிக்கு எடுத்துச் சென்று அங்கேயே அடக்கமும் செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

    அவ்வாறு அவரது இறந்த உடலை எடுத்துச் செல்லும்போது, அமைச்சரின் மனைவி இறைவி மங்களாம்பிகையிடம் மாங்கல்ய பாக்கியம் அருளப் பிரார்த்தனை செய்தாள். ஊர் எல்லை அருகே வந்ததும் உயிரற்ற மந்திரியின் உடல் மீண்டும் உயிர் பெற்று எழுந்தது. அனைவரும் திகைத்துப் போய் நிற்க, அமைச்சர் தான் எழுப்பிய சிவபெருமான் ஆலயத்திற்குச் சென்று, "பிராணனைக் கொடுத்த பிராண நாதா" என்று போற்றி வழிபட்டார்.

    அன்று முதல் பிராணனைக் கொடுத்ததால் இறைவன் அருள்மிகு பிராணநாதேஸ்வரர் என்றும், மந்திரியின் மனைவி மாங்கல்யம் பெற்றதால் இத்தல அம்பிகை மாங்கல்யம் கொடுத்த அருள்மிகு மங்களாம்பிகை என்றும் போற்றப்படுகின்றனர். அப்போது அமைச்சரின் மனைவி தங்களுக்குக் காட்சி தந்த பிராணநாதர் மற்றும் மங்களாம்பிகையிடம், "எங்களுக்கு வரம் அளித்தபடி, இந்த ஆலயத்துக்கு வந்து வழிபடும் என் போன்ற மற்ற பெண்களுக்கும் மாங்கல்ய பாக்கியம் அருள வேண்டும்" என்று வேண்ட அவ்வாறே அருளினர். அதன்படி மாங்கல்ய தோஷத்தையும் நீக்கி சுமங்கலி பிராப்தம் தந்தருளும் திருத்தலமாக திருமங்கலக்குடி விளங்குகிறது.

    நவக்கிரகங்களால் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் தடைகளைத் தகர்த்தெறியும் கோவில், தமிழகத்தில் நிறைய உண்டு. அவற்றுள் ஒன்று திருமங்கலக்குடி பிராணநாத சுவாமி திருக்கோவில்.

    தோல் நோய் உள்ளவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி, தொடர்ந்து 11 வாரங்கள் இத்தலத்தில் வழிபாடு செய்ய வேண்டும். இங்கு சுவாமிக்கு நிவேதனம் செய்து வெள்ளெருக்கு இலையில் வைத்து தரப்படும் தயிர் சாதத்தை சாப்பிட்டால் தோல் வியாதிகள் நீங்கும் என்பது நம்பிக்கை. ஆடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இத்திருத்தலம்.

    நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் நண்பகல் 11. 30 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8 .30 வரை.

    கோவில் முகவரி :

    அருள்மிகு பிராணநாத சுவாமி திருக்கோவில்,
    திருமங்கலக்குடி அஞ்சல்,
    திருவிடைமருதூர் வட்டம்,
    தஞ்சை மாவட்டம் - 612 102.
    ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க பிறந்த நந்தவனத்திற்கு சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டது.
    ஒவ்வொரு மாதமும் வரும் பூரம் நட்சத்திரத்தன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் வளாகத்தில் ஆண்டாள் பிறந்த இடமான நந்தவனத்தில் அவர் காட்சி அளிப்பது வழக்கம். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் மட்டும் நந்தவனத்தில் ஆண்டாள் காட்சி அளிப்பது இல்லை.

    ஏன் என்றால், மார்கழி மாதத்தில் ராப்பத்து, பகல் பத்து உற்சவம் நடைபெறும் என்பதால், பிறந்த இடமான நந்தவனத்திற்கு ஆண்டாள் வருவதில்லை. இந்த ஆண்டு மார்கழி மாதத்தில் ராப்பத்து மற்றும் வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிகள் தள்ளி வருவதால் சுமார் 60 ஆண்டுகளுக்கு பிறகு மார்கழி மாத பூரம் நட்சத்திரமான நேற்று மாலை ஆண்டாள், தான்பிறந்த இடமான நந்தவனத்தில் காட்சி அளித்தார்.

    இந்த அற்புத நிகழ்வுக்காக கோவிலில் இருந்து ஆண்டாள் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி மேளதாளம் முழங்க பிறந்த நந்தவனத்திற்கு சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடத்தப்பட்டது. ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
    மதுரை சித்திரை திருவிழா தேரோட்டத்துக்கு இணையாக இன்று நடந்த அஷ்டமி சப்பர வீதிஉலாவில் பக்தர்கள் திரண்டிருந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடந்தோறும் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் விதமாக மார்கழி மாதத்தில் நடக்கும் அஷ்டமி சப்பர வீதிஉலாவில் சுவாமி- அம்பாள் மதுரை நகரின் வெளி வீதிகளில் உலா வந்து அருள்பாலிப்பார்கள். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான அஷ்டமி சப்பர வீதி உலா இன்று (27-ந் தேதி) நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார செய்யப்பட்டது.

    தொடர்ந்து காலை 6.15 மணிக்கு கோவிலில் இருந்து பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் மற்றும் மீனாட்சி அம்மனும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளியபடி புறப்பட்டனர்.

    பின்னர் கீழமாசி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 சப்பரங்களில் (தேர்) சுவாமி- அம்பாள் தனித்தனியாக எழுந்தருளினார். அதனை தொடர்ந்து ஹர ஹர சங்கர... சிவ சிவ சங்கர... என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து அஷ்டமி சப்பர தேரோட்டத்தை தொடங்கினர். இதில் மீனாட்சி அம்மன் எழுந்தருளிய தேரை பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

    யானைக்கல், விளக்குத் தூண் சந்திப்பு, கீழவாசல், கீழவெளி வீதி, தெற்கு வெளி வீதி, தவிட்டு சந்தை, தெற்குவாசல், கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, பெரியார் பஸ் நிலையம், ரெயில் நிலையம், மேலவெளி வீதி, குட்ஷெட் ரோடு, வக்கீல் புதுத்தெரு வழியாக அஷ்டமி சப்பர தேரோட்டம் நடந்தது.




    வழி நெடுகிலும் பெண்கள், குழந்தைகள் என குடும்பமாக வந்து பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். சித்திரை திருவிழா தேரோட்டத்துக்கு இணையாக இன்று நடந்த அஷ்டமி சப்பர வீதிஉலாவில் பக்தர்கள் திரண்டிருந்தனர். இதனால் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை 11 மணியளவில் தேர் நிலையை அடைந்தது.

    இதையொட்டி வெளி வீதி மற்றும் தேரோட்டம் நடந்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    அஷ்டமி சப்பர வீதி உலா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், போலீசார் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை செய்திருந்தார்.

    பிரசித்தி பெற்ற புனித தலமான சீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    மகாராஷ்டிராவில் புதிய வகை வைரசான ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக வழிபாட்டு தலங்கள், திருமண விழாக்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புனித தலமான சீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் அறிக்கை ஒன்று விடுத்து உள்ளார். அதில், சாய்பாபா கோவிலில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சாமியார்மடம் தூய யூதா ததேயு திருத்தல விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா ஜனவரி 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    சாமியார்மடம் தூய யூதா ததேயு திருத்தல விழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருத்தல அதிபர் திவ்யா ஆனந்தம் முன்னிலையில் தமிழக கார்மல் சபை மாநில தலைவர் நேசமணி கொடியை ஏற்றி வைத்து திருப்பலியை நிறைவேற்றினார். தமிழ்மாநில கார்மல் சபை ஆலோசகர் பீட்டர் ஜூலியன் மறையுரையாற்றினார். நள்ளிரவு 11.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருப்பலி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழா ஜனவரி 2-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதற்கு நாஞ்சில் கல்லூரி தாளாளர் எக்கர்மென்ஸ் மைக்கிள் மற்றும் குலசை பெலிக்ஸ் ஆகியோர் நடத்துகின்றனர்.

    29-ந்தேதி மாலை 6 மணிக்கு முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் திருப்பலியை நிறைவேற்ற, அருட்பணியாளர் சைமன் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு புனிதரின் சிறிய தேர் பவனி நடக்கிறது.

    31-ந்தேதி இரவு 11 மணிக்கு புத்தாண்டு நிகழ்ச்சி பெருவிழாவும், திருப்பலியும் நடைபெறுகிறது.

    1-ந்தேதி இரவு 8 மணிக்கு புனிதரின் திருத்தேர் பவனி நடைபெறுகிறது. அருட்பணியாளர் மிக்கேல்ராஜ் மறையரையாற்றுகிறார். 2-ந்தேதி காலை 9 மணிக்கு பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் மறையுரையாற்றி ஆடம்பர திருப்பலியை நடத்துகிறார். மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் திவ்யா ஆனந்தம் தலைமையில் கார்மல் அருட்பணியாளர்கள், அருட் பேரவையினர், அனைத்து நிர்வாகிகள், இறைமக்கள் செய்துள்ளனர்.
    ×