என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி நடை திறக்கப்பட்ட மறுநாள் முதல் 41 நாட்கள் நடைபெற்றது. இந்த பூஜைகளின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 26-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நடை அடைக்கப்பட்டது.

    இந்தநிலையில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். பக்தர்களும் சபரிமலைக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அடுத்த மாதம் 14-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையும், ஜோதி தரிசனமும் நடைபெறும்.

    மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை தரிசனத்திற்கு முன் பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் கூறியதாவது:-

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மண்டல பூஜை காலம் வரை ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தினசரி 50 ஆயிரம் பக்தர்களுக்கும், உடனடி தரிசன முன் பதிவு மூலம் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மகர விளக்கை முன்னிட்டு கூடுதல் பக்தர்களுக்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தினசரி 60 ஆயிரம் பக்தர்களுக்கும். உடனடி தரிசனத்திற்கு முன் பதிவு செய்யும் அனைவருக்கும் தரிசன அனுமதி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம், எருமேலி, நிலக்கல், கோட்டயம், கொட்டாரக்கரை உள்பட 10 இடங்களில் உடனடி தரிசனத்திற்கான ஆன்லைன் முன் பதிவு நடைபெற்று வருகிறது. தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்காக சான்றிதழ் அல்லது ஆர்.டி.பி.சி. ஆர். கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து, அதற்கான நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பூஜையில் சாமிக்கு நெய், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை பக்தர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர்.
    கோவை செல்வபுரம் தில்லை நகரில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஐயப்ப சாமிக்கு தனி சன்னதி இருக்கிறது. இங்கு சமீபத்தில் மண்டல பூஜை நடைபெற்றது. இதில் சபரிமலைக்கு செல்ல மாலை அணிவித்து விரதம் தொடங்கியவர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பூஜையில் சாமிக்கு நெய், மஞ்சள், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை பக்தர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    இந்த நிலையில் அதில் ஒருவர் தான் எடுத்த வீடியோவை கவனித்து பார்த்தபோது, நெய்யாபிஷேகம் நடைபெற்று கொண்டு இருந்தபோது அய்யப்ப சாமி சிலை கண் திறந்து மூடுவது போல பதிவாகி இருந்தது. இதை கண்டு அவர் நெகிழ்ச்சி அடைந்தார். மேலும் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். இது தவிர சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. நெய்யாபிஷேகம் நடைபெற்றபோது சாமி சிலை கண் திறந்ததாக கூறப்படும் நிகழ்வு, கோவை மாவட்ட பக்தர்கள் இடையே பரபரப்பையும், பரவசத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    பத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிவதன் மூலம் அடையும் பலனை ஒருவர் இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம் எளிதில் அடைவார்.
    வைகாச மாதம் தேய்பிறையில் வருகின்ற ஏகாதசிக்கு வருதினி ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி விரதம் எல்லா வகையான பாவங்களையும் போக்கி சௌபாக்கியத்தைத்தரக்கூடியது. பிறவியைக் கடல் என்பார்கள். அந்தப் பிறவிக் கடலைக் கடக்க ஒரு தெப்பம் தேவை. அந்தத் தெப்பமே இந்த ஏகாதசி விரதம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. யாரொருவர் இந்த ஏகாதசியின் பெருமைகளை படித்தாலோ அல்லது காதால் கேட்டாலோ அவர் நிச்சயமாக ஆயிரம் பசுக்களை தானம் செய்வதின் பலனை அடைவார் மற்றும் தன் எல்லா பாவ விளைவுகளினின்றும் விடுபட்டு பகவான் விஷ்ணுவின் பரமபதத்தை அடைவார்.

    ஏப்ரல் / மே மாதங்களில் தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பவிஸ்யோத்தர புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரக்கும் இடையிலான உரையாடலின் விவரிக்கப்பட்டுள்ளது. பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார் என தருமை மன்னா, இந்த ஏகாதசியின் பெயர் வருத்தினி. இது ஒருவருக்கு இந்த வாழ்க்கையிலும் அதற்கு பிறகும் நல்ல அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்தால் ஒரு ஜீவன் தன் பாவ விளைவுகளை குறைத்துக்கொண்டு, நிரந்தமான ஆனந்தத்தை அடைந்து மிகுந்த பாக்கியசாலி ஆகிறான்.

    இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் ஒரு துர்பாக்கியசாலியான மனைவியும் பாக்கியசாலி ஆகிறாள். ஒருவன் இப்பிறவியிலும் அதற்கு பின்னரும் ஆனந்தத்தையும் நல்ல அதிர்ஷ்டமும் அடைகிறான். அவர்கள் அனைத்து பாவ விளைவுகளும் நீங்கப்பெற்று பிறப்பு இறப்பு என்ற சூழலில் இருந்து விடுபட்டு இறைவனின் தூய பக்தி தொண்டை அடைகின்றனர். இந்த ஏகாதசி விரதத்தை சரியான முறையில் கடைபிடித்து மன்தாதா என்ற மன்னன் முக்தி பெற்றார். மேலும் துந்துமாரா போன்ற பல மன்னர்கள் இந்த ஏகாதசியை கடைப்பிடித்து முக்தி பெற்றனர்.

    பத்தாயிரம் ஆண்டுகள் தவம் புரிவதன் மூலம் அடையும் பலனை ஒருவர் இந்த ஏகாதசியை கடைப்பிடிப்பதன் மூலம் எளிதில் அடைவார். சூரிய கிரகணத்தின்போது குருக்ஷேத்திரத்தில் 40 கிலோ தங்கத்தை தானமாக கொடுப்பதன் மூலம் அடையும் புண்ணியத்தை ஒருவர் சுலபமாக இந்த வருத்தினி ஏகாதசியை கடைப்பிடிப்பதன் மூலம் அடைவார்.  மன்னர்களில் சிறந்தவனே, ஒரு குதிரையை தானமளிப்பதைவிட ஒரு யானையை தானம் அளிப்பது சிறந்தது. யானையை தானமளிப்பதைவிட நிலத்தை தானமளிப்பது சிறந்தது. நிலத்தை தானமளிப்பதைவிட எள் தானம் உயர்ந்தது எள் தானத்தைவிட பொன் தானம் உயர்ந்தது. பொன் தானத்தைவிட உணவு தானிய தானம் உயர்ந்தது. உணவு தானிய தானத்தைவிட உயர்ந்த தானம் எதுவும் இல்லை. ஓ, மன்னர்களில் சிறந்தோனே, உணவு தனியங்களை தானமளிப் பதன் மூலம் ஒருவர் தன் முன்னோர்களையும், தேவர்களையும் மற்றும் எல்லா ஜீவராசிகளையும் திருப்தி படுத்த முடியும்.

    ஒருவர் தன் மகளை தாரைவார்த்து கொடுப்பது உணவு தானியங்களை தானமளிப்பதற்கு சமம் என கற்றறிந்த சான்றோர்கள் தெரிவிக்கின்றனர். உணவு தானிய தானத்தையும் பசுதானத்தையும் முழு முதற்கடவுளே சமபடுத்துகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக அனைத்து வகையான தானங்களை விட மற்றவர்களுக்கு ஞானத்தை அளிப்பதே மிக உயர்ந்ததாகும். வருத்தினி ஏகாதசியை கடைப்பிடிப்பதால் ஒருவர் எல்லா வித தானியங்களின் பலனையும் அடைவார்.

    தன் மகளை விற்று வாழ்க்கை நடத்துபவன் மிகப்பெரிய பாவத்தை செய்தவன் ஆகிறான். அத்தகையவன் கடைசி பிரளயம் வரும் வரை நரகத்திலேயே வாழ வேண்டியவன் ஆகிறான். ஆகையால் ஒருவன் தன் மகளை தாரை வார்க்கும் பொருட்டு எந்த ஒரு செல்வத்தையும் ஏற்கக் கூடாது. ஒரு குடும்பஸ்தர், பேராசையின் காரணத்தால், செல்வத்திற்காக தன் மகளை விற்றால், அடுத்த பிறவியில் அவன் ஒரு  பூனை உடலை அடைகிறான். ஆனால், ஒருவன் தன் வசதிக்கேற்ப ஆபரணங்களால் தன் மகளை அலங்கரித்து, ஒரு நல்ல வரனுக்கு தாரை வார்த்து கொடுப்பதால் தான் அடையும் புண்ணியத்தை யமராஜாவின் செயலாளரான சித்திரகுப்தனாலும் கணக்கிட முடியாது.

    இந்த ஏகாதசியைக் கடைப்பிடிப்பவர் வெண்கல பாத்திரத்தில் உண்ணுதல் மாமிசத்தை உண்ணுதல்,கீரை தேன் போன்றவற்றை உண்ணுதல், மற்றவர்கள் சமைத்த உணவை ஏற்றுக்கொள்ளுதல், போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சூதாட்டம், உறக்கம், வெற்றிலை பாக்கை சுவைத்தல், மற்றவர்களை குறை சொல்வது, பாவப்பட்ட ஒருவருடன் பேசுவது, கோபம் கொள்வது, பொய் சொல்வது ஆகியவற்றை ஏகாதசியன்று தவிர்க்க வேண்டும். மேலும் ஏகாதசிக்கு முன்தினத்திலிருந்தே உடலுறவை தவிர்க்க வேண்டும். ஒருவர் இந்த ஏகாதசியை விதிகளுக்குட்பட்டு கடைபிடித்தால் அவருடைய எல்லா பாவவிளைவுகளும் அழிந்து விடும், மற்றும் அவர் மிக உயர்ந்த இலக்கை அடைவார்.
    கொரோனா ஊரடங்கு நடப்பில் உள்ளதால் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து வரவேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமி சிலை உள்ளது. ஆஞ்சநேயருக்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டிற்கான ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வருகிற 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

    விழாவையொட்டி 1-ந் தேதி (சனிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 10.30 மணிக்கு தாணுமாலய சாமிக்கு அபிஷேகம், 11.30 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 6 மணிக்கு கால பைரவருக்கு தீபாராதனை போன்றவை நடக்கிறது.

    2-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ராம பிரானுக்கு அபிஷேகம், காலை 8 மணிக்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சாமிக்கு நல்லெண்ணெய், ஆயிரக்கணக்கான லிட்டர் பால் மற்றும் தயிர், களபம், சந்தனம், குங்குமம், விபூதி, மஞ்சள், அரிசி மாவு, பன்னீர், எலுமிச்சை பழச்சாறு, கரும்புச் சாறு, பஞ்சாமிர்தம், மாதுளைச் சாறு, தேன் என 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடஷ அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகத்தை காண அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுசீந்திரத்தில் கூடுவார்கள்.

    மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகம், இரவு 7 மணிக்கு ஆஞ்சநேயர் சாமிக்கு பல்வேறு பூக்களால் புஷ்பாபிஷேகம், இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை போன்றவை நடக்கிறது.

    கொரோனா ஊரடங்கு நடப்பில் உள்ளதால் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து வரவேண்டும், கைகளை சுத்தமாக கழுவிய பின்பே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் சமபந்தி விருந்து போல அளிக்காமல் பிரசாதமாக கொடுக்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் செந்தில்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
    ஆங்கில புத்தாண்டு தரிசனம், வைகுண்ட ஏகாதசியையொட்டி பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது, என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா ஆகியவை நடக்கயிருப்பதால் வருகிற 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை முக்கிய வி.ஐ.பி. பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    சாமி தரிசனம் செய்ய வரும் வி.ஐ.பி. பக்தர்கள் தாங்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று, கொரோனா தொற்று இல்லை என்பதற்கான 48 மணிநேரத்துக்கு முன்பாக எடுக்கப்பட்ட சான்று ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும். ஆங்கில புத்தாண்டு தரிசனம், வைகுண்ட ஏகாதசியையொட்டி பக்தர்கள் கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது.

    கோவிலில் ஜனவரி மாதம் 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி மற்றும் 14-ந்தேதி வைகுண்ட துவாதசியை முன்னிட்டு கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து பக்தர்களுக்கு தரிசன ஏற்பாடுகள் செய்து தரப்படும். ஜனவரி 13-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்களுக்கு வைகுண்ட வாசல் தரிசனம் வழங்கப்படும்.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையானை தரிசிக்க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு மட்டுமே வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். சாதாரணப் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    ஜனவரி மாதம் 11-ந்தேதியில் இருந்து 14-ந்தேதி வரை தேவஸ்தான விடுதி அறைகள் முன்பதிவு செய்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்யாண கட்டாக்களில் பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கை செலுத்த போதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். கல்யாணக் கட்டாக்களில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க வழிகாட்டுதல் விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமுடி இறக்கும் பணியில் நவீன கருவிகள் பயன்படுத்தப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசியையொட்டி திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தில் பக்தர்களுக்கு தினமும் அதிகாலை 4 மணியில் இருந்து இரவு 12 மணி வரை 10 நாட்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு மருத்துவச் சேவை அளிக்க பல்வேறு பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. வைகுண்ட வாசல் தரிசனத்தையொட்டி திருமலையில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதி செய்து தரப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    டிசம்பர் மாதம் 28-ம் தேதியில் இருந்து ஜனவரி மாதம் 3-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    28-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * சித்தயோகம்
    * முருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்க பூமாலை
    * சந்திராஷ்டமம் - பூரட்டாதி, உத்திரட்டாதி

    29-ம் தேதி புதன் கிழமை :
     
    * சித்தயோகம்
    * ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு
    * திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்
    * சந்திராஷ்டமம் - உத்திரட்டாதி, ரேவதி
     
    30-ம் தேதி வியாழக்கிழமை :

    * சர்வ ஏகாதசி
    * ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம்- ரேவதி, அசுபதி

    31-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * பிரதோஷம்
    * கீழ்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை
    * திருவிடைமருதூர் பிரஹத்குசாம்பிகை புறப்பாடு
    * சந்திராஷ்டமம் - அசுபதி, பரணி

    1-ம் தேதி சனிக்கிழமை :

    * மாத சிவராத்திரி
    * ஆங்கில புத்தாண்டு
    * சித்தயோகம்
    * மதுரை மீனாட்சி வைரக்கிரீடம் சாற்றியருளல்
    * ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி  சேவை
    * சந்திராஷ்டமம் - பரணி, கார்த்திகை

    2-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    * அமாவாசை
    * ஸ்ரீஅனுமன் ஜெயந்தி
    * நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
    * நெல்லை வரதராஜபெருமாள் கோவில் ஆஞ்சநேயருக்கு புஷ்பாஞ்சலி
    * சந்திராஷ்டமம் - கார்த்திகை, ரோகிணி

    3-ம் தேதி திங்கள் கிழமை  :

    * இஷ்டி காலம்
    * மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் காலை சிம்மாசனத்தில் பவனி
    * சகல விஷ்ணு ஆலயங்களில் பகற்பத்து உற்சவாரம்பம்
    * சந்திராஷ்டமம் -  ரோகிணி, மிருகசீருஷம்
    மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சப்பர ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    சிவன் கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா நடத்தப்படுகிறது. மானாமதுரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலிலும் படியளக்கும் திருவிழா நடந்தது.

    நேற்று மார்கழி மாத அஷ்டமி திருநாள் என்பதால் திருப்பள்ளி எழுச்சிக்கு பின்னர் ஆனந்தவல்லி, சோமநாதருக்கு பன்னீர், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.அதன்பின்னர் .ரிஷப வாகனத்தில் சோமநாதர், பிரியாவிடை, ஆனந்தவல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் திருமண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    அதன் பின்னர் அலங்கரிக்கப்பட்ட அஷ்டமி சப்பரத்தில் ஆனந்தவல்லியும், சோமநாதசுவாமி, பிரியாவிடையும் தனித்தனி சப்பரங்களில் எழுந்தருளினார்கள். பின்னர் 4 வீதிகளிலும் சப்பர திருவீதி உலா வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சாமி திருவீதி உலாவின் போது எறும்பு உள்ளிட்ட ஜீவராசிகளுக்கும் உணவு வழங்கும் விதத்தில் அரிசி உள்ளிட்ட நவதானியங்கள் தூவப்பட்டன. கீழே விழுந்த நவதானியங்களை பக்தர்கள் சேகரித்தனர்.

    திருப்புவனத்தில் உள்ள புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவிலில் மார்கழி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் படிஅளக்கும் திருநாள் வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாள், கணபதி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுடன் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா கோவிலின் உள்ஆடி வீதியில் உலா வந்தது. கொடி மரம் அருகே சுவாமி, அம்பாள் மற்றும் தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருமந்திர பாடல் ஒவ்வொன்றும், சிவனின் அன்பையும், அவருடைய இருப்பையும், அவரால் கிடைக்கும் பேரின்பத்தையும் பற்றி எடுத்துரைக்கின்றன. அந்த சிறப்புக்குரிய திருமந்திரப் பாடல்களை பார்க்கலாம்.
    பாடல்:-

    உரையற்று உணர்வற்று உயிர்பரமற்று
    திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
    கரையற்ற சத்தாதி நான்கும் கடந்த
    சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே.

    விளக்கம்:-

    சிவபெருமான் நம்மை ஆட்கொண்ட நிலையில், பேச்சு இன்றி போனது, உணர்வு அற்று போனது, உயிர் சிவனோடு வேறுபாடு அற்று ஒன்றிப்போனது. கடலும், அலையும் வேறில்லை என்பது போன்ற நிலை உண்டானது. எல்லையற்ற நுண்ணோசை, நினைவோசை, குரல்வளை ஓசை, செவியோசை ஆகிய நான்கு சத்தங்களை கடந்து விளங்கும் சிவனருளில் சேர்ந்து அதனை நுகரப் பெற்றுப் பேசாதநிலை எய்தினோம்.

    பாடல்:-

    பச்சிம திக்கிலே வைத்த ஆசாரியன்
    நிச்சலும் என்னை நினை என்ற அப்பொருள்
    உச்சிக்கும் கீழது உண்ணாக்கு மேலது
    வைச்ச பதமிது வாய்திறவாதே..

    விளக்கம்:-

    பச்சிம திக்கு எனப்படும் மேற்கு திசை நோக்கி தன்னுடைய மாணவனை அமரச் செய்யும் குருவானவர், அந்த திசையில் இருந்தபடியே நாள்தோறும் சிவனை நினைத்து வரும்படி உத்தரவிடுவதோடு, ஈசனை வழிபடுவதற்கான மந்திரத்தையும் உபதேசம் செய்துவைப்பார். அந்த சிவன் இருக்கும் இடமானது, நம்முடைய வாய் உச்சரிக்கும் ஈசனின் திருநாமத்தில்தான். சிவனை விட்ட நீங்காத நிலை பெற்ற பின்பு, ஒருவருக்கு மீண்டும் பிறப்பு உண்டாகாது.

    பாடல்:-

    அகார முதலா அனைத்துமாய் நிற்கும்
    உகார முதலா உயிர்ப்பெய்து நிற்கும்
    மகார உகாரம் இரண்டும் அறியில்
    லகார உகாரம் இலிங்கமது ஆமே.

    பொருள்:-

    உலகத்தையும், அதில் வாழும் உயிர்கள் அனைத்தையும் தாங்குபவராக சிவபெருமான் இருக்கிறார். அவர் அகரமாய் நிற்கிறார். அகரமாக இருக்கும் சிவபெருமானின் திருவருட் சக்தியானது, உகாரமாய் நம்மிடம் உயிர்ப்பு வடிவில் நிற்கும். இப்படி சிவம், சக்தி இருவரும் நம்மிடம் அகரமாகவும், உகரமாகவும் இருப்பதை அறிந்துகொண்டோம் என்றால், அந்த இரண்டும் இணைந்த குறியீடே சிவலிங்கம் என்பதை உணர்ந்து தெளிய முடியும்.
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்திக்கு முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உதவி ஆணையர் ரமேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:- நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ஜனவரி மாதம் 2-ந் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அன்று காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்கள் வீதம் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    பக்தர்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இலவச அல்லது கட்டண வழியில் சென்று சாமி தரிசனம் செய்யலாம். அதற்கு பக்தர்கள் hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் மட்டுமே கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியோடு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    முககவசம் அணியாதவர்களுக்கு கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். மேலும் உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் ஆஞ்சநேயர் ஜெயந்தி நிகழ்ச்சிகளை சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    ‘இரவெல்லாம் நின்று வணங்கி, பகலெல்லாம் நோன்பு நோற்பவனுக்கு கிடைக்கும் பாக்கியத்தைவிட நற்குணத்தால் சிறந்தவனுக்கு அதிக பாக்கியம் கிடைக்கும்’. (நூல்: அஹ்மத்)

    உணவு, உடை, இருப்பிடம் போன்றவைகள் மனிதனின் அத்தியாவசிய தேவைகள் ஆகும். இது தவிர பிறதேவைகளும் மனிதர்களுக்கு இருக்கவே செய்கிறது. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் அவசியமான, முக்கியமான தேவைகள் இருக்கலாம்.

    இந்த தேவைகளை தனது உழைப்பின் மூலம் சிலர் நிறைவேற்றிக்கொள்கிறார்கள். சிலர் மற்றவர்கள் உதவியுடன் தேவைகளை அடைந்துகொள்கிறார்கள்.

    ஆனால் சில தேவைகளை நிறைவேற்றும் வல்லமை மனித சக்தியையும் மீறியதாக இருப்பதுண்டு. அதுபோன்ற சூழ்நிலையில் மனிதன் தஞ்சம் அடையும் ஒரே புகலிடம் இறைவன் மட்டுமே.

    அந்த ஏக இறைவனிடம் கையேந்தி, கண்ணீர்விட்டு தனது வேண்டுதலை, தேவையை, பிரார்த்தனையை மனிதன் தெரிவிக்கின்றான். இறைவன் நாடினால் அந்த தேவை நிறைவேற்றியும் வைக்கப்படும்.

    ஈமான் எனப்படும் இறையச்சத்துடன் செய்யப்படும் பிரார்த்தனைகள் இறைவனிடம் மிக முக்கிய இடத்தை பெறுகிறது. இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

    “நபியே! உங்களிடம் என்னுடைய அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால், அதற்கு நீங்கள் கூறுங்கள்: ‘நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கின்றேன். எவரும் என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்’. ஆதலால் அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும். என்னையே நம்பிக்கை கொள்ளவும். அதனால் அவர்கள் நேரான வழியை அடைவார்கள். (திருக்குர்ஆன் 2:186)

    “இறைவன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்”. (திருக்குர்ஆன் 40:60)

    இந்த திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் அல்லாஹ் மிக தெளிவாக நமக்கு கூறுவது என்னவென்றால், “அடியார்கள் என்னையே நம்பட்டும், என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும், அப்படி அவர்கள் இறையச்சத்துடன் செய்தால் அவரது பிரார்த்தனைக்கு நான் பதில் அளிக்கிறேன்”, என்று குறிப்பிடுகின்றான்.

    நபிகளார் மூலம் நமக்கு அருளப்பட்ட இந்த வசனத்தின் உண்மைத்தன்மையை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப நடந்து இறையச்சத்துடன் நமது தேவைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனிடமே கேட்கவேண்டும். அப்போது நமது பிரார்த்தனைக்கு பதில் கிடைப்பதோடு, நாம் நேர்வழியையும் அடையலாம்.

    அதேநேரத்தில் நமது பிரார்த்தனைகள் ஏற்கப்படவேண்டும் என்றால் நமது இறைநம்பிக்கையும், நற்செயல்களும் சிறந்ததாக இருக்க வேண்டும்.

    ‘நற்குணங்களில் பலவீனமாக இருப்பவன் இறை நம்பிக்கையிலும் (ஈமான்) பலவீனமானவனாகவே இருப்பான்’ என்று இஸ்லாம் கூறுகின்றது.

    எனவே நமது இறை நம்பிக்கை பலம்மிக்கதாக, இறைவனின் திருப்பொருத்தத்தை ஏற்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்ப நமது வாழ்க்கை முறைகளும், சொல்லும், செயலும் அமைய வேண்டும்.

    திருக்குர்ஆனும், நபிகளாரும் காட்டிய வழியில் நமது அன்றாட வாழ்வும், செயல்களும் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் நமது பிரார்த்தனைகள் இறைவனின் கவனத்திற்கு செல்லும். அநியாயங்களையும், அக்கிரமங்களையும் செய்து விட்டு இறைவனிடம் கையேந்தினால் எந்த பலனும் ஏற்படாது.

    நற்குணங்கள் நிரம்பிய மனித வாழ்க்கையே மேம்பட்ட வாழ்க்கையாக கருதப்படுகிறது. நற்குணங்களும், நற்செயல்களும் கொண்டவர்களே மக்களால் விரும்பப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களை இறைவனும் நேசிக்கின்றான். நற்குணங்களைப் பேணுபவனுக்கு இவ்வுலகிலும் நன்மை கிடைக்கின்றது, மறுமையிலும் இறைவனிடம் நன்மையே பெறுகின்றான்.

    இது குறித்த நபி மொழிகள் சொல்வது என்னவென்றால்:

    ‘மறுமையில் நன்மை தீமை நிறுக்கப்படும் தராசில் அதிக கனம் தருவது நற்குணங்களே’. (நூல்: அபூதாவூத்)

    ‘நற்குணங்களில் பரிபூரணம் பெற்றவரே இறை நம்பிக்கையில் பரிபூரணம் பெற்றவராவார்’. (நூல்: அஹ்மத்)

    ‘நான் அதிகம் நேசிப்பவரும், என்னோடு மறுமை நாளில் மிக நெருக்கமாக இருப்பவரும் யார் எனில், சிறந்த நற்குணங்கள் கொண்டவரே’. (நூல்: திர்மதி)

    ‘சுவனத்தில் மனிதன் அதிகம் நுழைவதற்குக் காரணமாக அமைவது இறையச்சமும், நற்குணமும் தான்’ (நூல்: இப்னு மாஜா)

    ‘இரவெல்லாம் நின்று வணங்கி, பகலெல்லாம் நோன்பு நோற்பவனுக்கு கிடைக்கும் பாக்கியத்தைவிட நற்குணத்தால் சிறந்தவனுக்கு அதிக பாக்கியம் கிடைக்கும்’. (நூல்: அஹ்மத்)

    எனவே, நற்குணங்கள் நிரம்பியதாக நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம். இறைவனின் வழியில் நடந்து நற்செயல்களை செய்வோம். இதன் மூலம் நமது நியாயமான தேவைகளை இறைவனிடம் கேட்டுப்பெற்றுக்கொள்ளும் பாக்கியத்தை அடைவோம், ஆமின்.

    பேராசிரியர் அ முகம்மது அப்துல் காதர், சென்னை.
    மார்கழி மாத அஷ்டமியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலுக்குள் அஷ்டமி சப்பர உலா நிகழ்ச்சி நடந்தது. சாமி வெளியே வராததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அஷ்டமி நாளன்று சுவாமி ,அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலிலிருந்து எழுந்தருளி நகரின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பக்தர்களுக்கு படிஅளப்பது வழக்கம்.

    இந்த நிலையில் மார்கழி மாதத்தின் அஷ்டமி தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நேற்று காலை 10 மணி அளவில் சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் உடன் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்று கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் அஷ்டமி சப்பரம் உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியுடன் மூன்றாம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தனர்.

    ஆண்டுதோறும் மார்கழி மாதத்தின் அஷ்டமி நாளன்று ராமேசுவரம் கோவிலில் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி நகரின் அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டும் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக கோவிலின் உள்ளேயே அஷ்டமி சப்பர உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையிலும் படியளக்கும் நிகழ்ச்சிக்காக சாமி, அம்பாள் கோவிலில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படாமல் மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அதே நேரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்புவனம் புவனேசுவரர் கோவில், மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் சாமி வெளியே வந்து சப்பரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைவாக இருந்த போதிலும் சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் உள்ளிட்டவைகள் நடைபெற்ற போதிலும் ராமேசுவரம் கோவிலிலும் சாமி திருவீதி உலா வெளியே நடந்திருந்தால் இன்னும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசித்து இருப்பார்கள். எனவே இனி வரும் காலங்களிலாவது திருவிழா நாட்களில் சாமி புறப்பாடு வெளியே ரதவீதிகளில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    நாமக்கல் காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் சென்றாய பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வீரபக்த ஆஞ்சநேயர் சாமிகோவிலில் வருகிற 2-ந் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.
    நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் சென்றாய பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது வீரபக்த ஆஞ்சநேயர் சாமி. இந்த கோவிலில் வருகிற 2-ந் தேதி அமாவாசை நாளன்று அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.

    அன்று காலை 7.30 மணி முதல் 10 மணிக்குள் மூல நட்சத்திரத்தில் சாமிக்கு அபிஷேக ஆராதனை, பூஜை, சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் உற்சவர் அனுமன் திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், வீரபக்த ஆஞ்சநேயர் பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.
    ×