search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராமேசுவரம் கோவிலில் சுவாமி, அம்பாள் திருவீதி உலா நடந்த போது எடுத்த படம்.
    X
    ராமேசுவரம் கோவிலில் சுவாமி, அம்பாள் திருவீதி உலா நடந்த போது எடுத்த படம்.

    ராமேசுவரத்தில் கோவிலுக்குள் அஷ்டமி சப்பர திருவீதி

    மார்கழி மாத அஷ்டமியை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலுக்குள் அஷ்டமி சப்பர உலா நிகழ்ச்சி நடந்தது. சாமி வெளியே வராததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் அஷ்டமி நாளன்று சுவாமி ,அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலிலிருந்து எழுந்தருளி நகரின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று பக்தர்களுக்கு படிஅளப்பது வழக்கம்.

    இந்த நிலையில் மார்கழி மாதத்தின் அஷ்டமி தினத்தை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நேற்று காலை 10 மணி அளவில் சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் உடன் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்று கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் அஷ்டமி சப்பரம் உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியுடன் மூன்றாம் பிரகாரத்தை சுற்றி வலம் வந்தனர்.

    ஆண்டுதோறும் மார்கழி மாதத்தின் அஷ்டமி நாளன்று ராமேசுவரம் கோவிலில் சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி நகரின் அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டும் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக கோவிலின் உள்ளேயே அஷ்டமி சப்பர உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையிலும் படியளக்கும் நிகழ்ச்சிக்காக சாமி, அம்பாள் கோவிலில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படாமல் மூன்றாம் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அதே நேரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருப்புவனம் புவனேசுவரர் கோவில், மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் சாமி வெளியே வந்து சப்பரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைவாக இருந்த போதிலும் சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் உள்ளிட்டவைகள் நடைபெற்ற போதிலும் ராமேசுவரம் கோவிலிலும் சாமி திருவீதி உலா வெளியே நடந்திருந்தால் இன்னும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசித்து இருப்பார்கள். எனவே இனி வரும் காலங்களிலாவது திருவிழா நாட்களில் சாமி புறப்பாடு வெளியே ரதவீதிகளில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    Next Story
    ×