என் மலர்
சினிமா செய்திகள்
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி - ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு மார்ச் 4-ல் துவங்கவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #VijaySethupathi #VijayChander
விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்கள்.
காமெடி வேடத்தில் சூரி நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, எம்.பிரபாகரன் கலை பணிகளையும், அனல் அரசு சண்டைக்காட்சிகளையும், பிரவீன்.கே.எல். படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 4-ந் தேதி ஐதராபாத்தில் துவங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது. #VijaySethupathi #VijayChander #RaashiKhanna #NivethaPethuraj
மணிரத்னம் படத்துக்காக 3வது முறையாக சரத்குமார், ராதிகா இருவரும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். #Maniratnam #Sarathkumar #Radhika
மணிரத்னத்தின் முன்னாள் உதவி இயக்குனரும் படை வீரன் படத்தின் இயக்குனருமான தனா அடுத்து விக்ரம் பிரபுவை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். மணிரத்னம் கதை, வசனம் எழுதும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியனும் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் சரத்குமாரும் ராதிகாவும் கணவன் மனைவியாக நடிக்க இருக்கிறார்கள். சரத்குமார் நடிப்பில் அடங்காதே படம் விரைவில் வெளியாக இருக்கிறது. ஜிவி.பிரகாஷ், சுரபி நடித்துள்ள இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார்.

சரத்குமாரும் ராதிகாவும் இணைந்து ஏற்கனவே நம்ம அண்ணாச்சி, சூர்ய வம்சம் படங்களில் நடித்து உள்ளனர். மணிரத்னம் படத்துக்காக 3வது முறையாக இணைகின்றனர்.
பாலிவுட் படங்களில் நடித்தாலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலேயே நடிக்க ஆர்வம் இருப்பதாக டாப்சி கூறியிருக்கிறார். #Taapsee #TaapseePannu
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் பரபரப்பாக இருந்த நடிகை டாப்சி தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். டாப்சி, அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்த பட்லா திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தமிழில் ‘கேம் ஓவர்’ என்ற படத்தில் டாப்சி நடித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவே அதிக விருப்பம் காட்டுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “தமிழ் படங்களின் மூலம்தான் நான் சினிமாவில் அறிமுகமானேன். பெரிதாக ஹிட் படங்கள் கொடுக்கவில்லை என்றாலும் ஹீரோயினாக அறிமுகம் கிடைத்தது இங்குதான்.
பாலிவுட்டில் பல வாய்ப்புகள் வந்தன. நல்ல படங்களில் நடித்தேன். எவ்வளவு பாலிவுட் படங்களில் நடித்தாலும் தமிழ், தெலுங்கு சினிமாவை விட்டுவிட மாட்டேன்.

இங்குதான் என் திரையுலக வாழ்க்கை தொடங்கியது. பாலிவுட்டில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் தமிழ், தெலுங்கு படங்களில் நல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன். அதற்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் கொடுத்து நடிக்க தயாராக இருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ஒரு படமாவது நடிக்க வேண்டுமென்று புத்தாண்டில் தீர்மானித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதல் சம்பவங்களை சினிமாவாக எடுக்க இந்தி பட உலகில் கடும் போட்டி நிலவியுள்ளது. #PulwamaAttack #India
ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த சம்பவத்தை இந்தியில் உரி த சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. கடந்த ஜனவரி 11-ந்தேதி வெளியான இந்த படத்துக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கடந்த பிப்ரவரி 14-ந்தேதி புல்வாமா பகுதியில் தீவிரவாத தாக்குதலுக்கு 40 ராணுவ வீரர்கள் பலியானார்கள். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள்ளேயே சென்று அதிரடி தாக்குதல் நடத்தியது.
அதில் ஒன்றான பாலகோட் சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின்லேடன் தங்கி இருந்த அபோதாபாத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
நாடுமுழுக்க பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் அடிப்படையிலும் படம் எடுக்க இந்தி சினிமாக்காரர்கள் தயாராகிவிட்டனர். சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான தலைப்புகளை பதிவு செய்ய தயாரிப்பாளர்கள் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான தலைப்பை பதிவு செய்ய 5-க்கு மேல் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் போட்டி போட்டுள்ளனர்.
புல்வாமா தி டெரர் அட்டாக், புல்வாமா வெர்சஸ் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0, சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 மற்றும் பாலகோட், வார் ரூம், இந்துஸ்தான் ஹமாரா ஹை உள்ளிட்ட பல தலைப்புகளை பதிவு செய்ய முயன்றுள்ளனர். விரைவில் இந்த படங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்ட படத்தின் 50வது நாளையொட்டி, நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். #Petta #SuperStar #Rajinikanth #Petta50
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, சசிகுமார், நவாசுதீன், சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ளது. இந்த வெற்றியை படக்குழுவினருடன் நடிகர் ரஜினிகாந்த் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

இந்த விழாவில் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் தனுஷ், பாபி சிம்ஹா மற்றும் படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். #Vishal #ProducerCouncil
தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் செயல்பட்டு வருகிறார். இவர் தலைமையில் பொதுக்குழு கூட்டம் 3.3.2019 அன்று நடைபெற இருந்தது. தற்போது பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த அறிக்கையில், ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சார்பாக 3.3.2019 அன்று சென்னை ராமாபுரத்தில் உள்ள ஜீவன் ஜோதி மஹாலில் காலை 10.30 மணிக்கு நடக்கவிருந்த ஆண்டுப் பொதுக்குழு கூட்டம் தற்போது சென்னை உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுப் பெற்ற நீதியரசர் கே.என்.பாஷா அவர்களின் ஆலோசனையின்படி ஒத்தி வைக்கப்படுகிறது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை உறுப்பினர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்’ இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பண மோசடி வழக்கில் கமரகட்டு பட இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #KamarKattu #Director
‘கமரகட்டு’ என்ற படத்தை இயக்கியவர் ராம்கி ராமகிருஷ்ணன். இவர் நர்த்தகி என்ற படத்தை இயக்கிய விஜயபத்மா மற்றும் அவரது கணவர் முத்துகிருஷ்ணன் என்பவருடன் சேர்ந்து சவுகார்பேட்டையை சேர்ந்த அசோக் என்ற பைனான்சியரிடம் ‘இதயம் திரையரங்கம்’ என்ற படத்தை தயாரிப்பதற்காக பணம் வாங்கினார். இதற்கு ஈடாக சொத்து பத்திரம் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

ஆனால் சொன்ன தேதியில் மொத்த கடன் தொகையான 40 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அசோக் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மூவரும் கடந்த 27-ந்தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் யோகிபாபு நடிப்பது குறித்து மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். #Rajini #YogiBabu #ARMurugadoss
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு யோகிபாபுவுக்கு கிடைத்துள்ளது. இதுபற்றி யோகிபாபு அளித்துள்ள பேட்டியில், ‘பேட்ட’ படத்திலேயே ரஜினி சார்கூட நடிக்க வேண்டியது. அவர்கூடவே வரும் வேடம் தான். வேற படங்கள் சென்று கொண்டிருந்ததால் வாய்ப்பு கை நழுவி போய்விட்டது.

வருத்தமாக சுற்றிக்கொண்டு இருந்தேன். இப்போது இந்த வாய்ப்பு, அந்த வருத்தத்தை போக்கி விட்டது. ‘சர்கார்’ படப்பிடிப்பில் ‘அடுத்து ஒரு நல்ல செய்தி இருக்கு. நாம் பண்ணுவோம்’ என்று முருகதாஸ் சார் சொன்னார். அந்த நல்ல செய்தி, ரஜினி சார் படம்னு தெரிந்தபோது அவ்வளவு சந்தோஷம். படப்பிடிப்பு தேதிகள் திட்டமிட்டு வருகிறார்கள். இந்த முறை வாய்ப்பை இழந்துவிடமாட்டேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருந்த படம், நிறுத்தி வைத்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. #Dhanush #KarthikSubbaraj
ஹாலிவுட்டின் பிரபல நடிகர் அல் பசீனோ. காட்பாதர் படங்களின் பாகங்களில் நடித்து பிரபலமான இவர், ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார்.
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் பல மாதங்களுக்கு முன்பு தொடங்க இருந்தது. சில காரணங்களால் இந்த படம் தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதில் முக்கிய வேடம் ஒன்றில் அல் பசீனோவை நடிக்க வைக்க முயற்சி நடந்ததாகவும் ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் இதனாலேயே படம் நிறுத்தி வைக்கப்பட்டதாக இப்போது கூறப்படுகிறது. தனுஷ் அசுரன் படத்தில் நடித்தபடி நாகார்ஜுனா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படங்களை முடித்த பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் அவர் நடிப்பார். அப்போது மீண்டும் அல் பசீனோவை நடிக்க வைக்க முயற்சி மேற்கொள்ள படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
இந்தி பட நடிகையான சன்னி லியோன் இடத்தை தற்போது தெலுங்கு நடிகை ஷ்ரத்தா தாஸ் பிடித்திருக்கிறார். #SunnyLeone #ShraddhaDas #Ayogya
நடிகை ஷ்ரத்தா தாஸ் நடன பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, “தமிழில் விரைவில் ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். அது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஷால் நடித்து வரும் ‘அயோக்யா’ படத்திற்காக ஒரு கிளப் பாடலில் நடனம் ஆடுவதற்காகத்தான் ஷ்ரத்தா தாஸ் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். முன்னதாக இந்த பாடலில் சன்னி லியோன் ஆடுவதாக இருந்தது.
அவருக்கு பதிலாக ஷ்ரத்தா ஆடி இருக்கிறார். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், வங்காளம் என்று பல படங்களில் நடித்த ஷ்ரத்தா தாஸ் தற்போது சில நாட்களாக சென்னையில் இருக்கிறார். இந்த பாடலுக்கு சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார். பாடல் வரிகளை ரோகேஷ் எழுதியுள்ளார்.

நடன இயக்குனராக பாபா மாஸ்டர் பணிபுரிகிறார். கிளப் போன்று அமைக்கப்பட்ட அரங்கில் இந்த பாடல் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் விஷால், ஷ்ரத்தா இருவரும் ஆடியுள்ளனர். இந்த பாடலின் படப்பிடிப்பு பணிகள் 2 நாட்களாக நடந்தன. வெங்கட் மோகன் இயக்கி வருகிறார்.
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன் - சரோஜா - ஆனந்த்பாண்டி - ஸ்ரீபல்லவி நடிப்பில் வெளியாகி இருக்கும் `தாதா 87' படத்தின் விமர்சனம். #DhaDha87 #DhaDha87Review
நாயகன் ஆனந்த் பாண்டி, படித்து விட்டு ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். பார்க்கும் பெண்களை எல்லாம் தன் வசப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார். அதே பகுதியில் தாதாவாக இருக்கும் சாருஹாசன், சாதிகள் இருக்க கூடாது என்று நினைத்து வாழ்கிறார். இப்படி இருக்கும் நேரத்தில் இரண்டு சமூகத்தை சேர்ந்தவர்கள் கவுன்சிலர் பதவிக்கான தேர்தலுக்கு போட்டி போட்டுகிறார்கள்.
இந்த இடத்திற்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான ஜனகராஜ், தனது மகள் நாயகி ஸ்ரீபல்லவியுடன் குடி வருகிறார். ஸ்ரீபல்லவியை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் ஆனந்த் பாண்டி. எப்படியாவது ஸ்ரீபல்லவியை காதலில் விழ வைக்க வேண்டும் என நினைத்து தினமும் பின் தொடர்கிறார். இந்த விஷயம் ஜனகராஜ்க்கு தெரிந்து, போலீசில் புகார் கொடுக்கிறார்.

இருந்தாலும், ஸ்ரீபல்லவியை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ஸ்ரீபல்லவி, ஆனந்த் பாண்டியின் காதலை ஏற்றுக் கொள்கிறார். காதலை ஏற்றுக் கொண்டபின் தான் ஒரு திருநங்கை என்பதை ஆனந்த் பாண்டியிடம் சொல்லுகிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் ஆனந்த் பாண்டி, ஸ்ரீபல்லவியின் காதலை ஏற்றுக் கொண்டாரா? அதன்பின் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக ஆனந்த் பாண்டி துறுதுறு இளைஞனாக நடித்திருக்கிறார். நடிப்பில் ஓரளவிற்கு ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். நாயகியாக வரும் ஸ்ரீபல்லவி, கதாபாத்திரத்தை உணர்ந்து செவ்வன செய்திருக்கிறார். ஒரு சில இடங்களில் அனுபவ நடிகை போல் தெரிகிறார்.

தாதாவாக வரும் சாருஹாசன், சாதிகள் ஒழிக்க வேண்டும் என்று நினைப்பதும், மனைவியாக வரும் சரோஜாவுடன் ரொமன்ஸ் செய்வதும் என நடிப்பில் மிளிர்கிறார். தாதாவுக்கான கெத்தும், கணவருக்குண்டான பாசம், ரொமன்ஸ் என வித்தியாசம் காண்பித்திருக்கிறார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக வரும் ஜனகராஜ், தன்னுடைய அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெறுகிறார்.
வித்தியாசமான கதைக்களத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீஜி. உண்மையான காதலுக்கு எதுவும் தடையில்லை என்பதை சொல்ல வந்த இயக்குனருக்கு பாராட்டுகள். குறிப்பாக திருநங்கையின் வாழ்க்கையையும், அவர்களின் வலியையும் ஆழமாக சொல்லியிருக்கிறார். மேலும் திருநங்கைகளின் பெற்றோர்களின் வலி, சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மற்றவர்கள் அவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதையும் கூறியிருக்கிறார். படத்தின் முதற்பாதி திரைக்கதை அங்கும், இங்கும் சென்றாலும், பிற்பாதியில் தான் சொல்ல வந்ததை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். முதற்பாதியில் சாதி அரசியல் பற்றி சொன்னவிதம் அருமை. சாருஹாசனை கையாண்ட விதம் சிறப்பு.

ராஜபாண்டியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. லியாண்டர் லீ மார்ட்டி, அல் ருஃபன், சக்கரவர்த்தி இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
மொத்தத்தில் ‘தாதா 87’ வலி. #DhaDha87 #DhaDha87Review #CharuHaasan #SarojaRajagopal #AnandPandi #SriPallavi
சேரன் இயக்கி நடித்து, சுகன்யா, உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் `திருமணம்' படத்தின் விமர்சனம். #Thirumanam #ThirumanamReview
ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் சுகன்யா. அவரது தம்பி உமாபதி. இவரும், காவ்யா சுரேசும் காதலிக்கிறார்கள். காவ்யாவின் அண்ணன் சேரன். குடும்ப பொறுப்பை தனது தோளில் சுமந்து கொண்டு நேர்மையானவராக இருக்கிறார்.
இந்த நிலையில், காவ்யா தனது காதலை குடும்பத்தாரிடம் தெரிவிக்க, இரு வீட்டாரும் சந்தித்து பேசுகிறார்கள். திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முந்தைய வேலையில் இரு வீட்டாரும் ஈடுபடுகிறார்கள். ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் தனது தம்பியின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த வேண்டும் என்று சுகன்யா விருப்பப்படுகிறார். ஆனால் தனது சக்திக்கு ஏற்ப மனநிறைவோடு தங்கைக்கு திருமணம் செய்து வைத்து அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையானதை செய்து கொடுக்க நினைக்கிறார் சேரன். இவர்களது மாறுபட்ட எண்ணத்தால் உமாபதி - காவ்யா திருமணத்தில் பிரச்சனை ஏற்படுகிறது.

இந்த பிரச்சனைகளை கடந்து, உமாபதி - காவ்யா திருமணம் நடந்ததா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதை புரிதலோடு காட்டியிருப்பதே படத்தின் மீதிக்கதை.
சேரன் ஒரு அண்ணனாகவும், நேர்மையான, சாதாரண குடும்ப தலைவனாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். உமாபதி, காவ்யா சுரேஷ் இருவருமே கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்துவிட்டு செல்கின்றனர். தம்பிக்காக வாழும் அக்காவாக சுகன்யா தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஜெயப்பிரகாஷ், மனோபாலா உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களது பணியை திருப்திகரமாக செய்திருக்கின்றனர்.

திருமணத்தை சாதாரணமாக நடத்திவிட்டு, வாழ்க்கையை மேன்மையோடு வாழ வேண்டும் என்ற கருத்தை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியிருக்கிறார் சேரன். ஆடம்பரமாக திருமணம் செய்துவிட்டு வாழ்க்கையில் கஷ்டப்படுவதற்கு பதிலாக, தேவையற்ற செலவை குறைத்து சிக்கனமாக திருமணம் செய்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறார். திருமணத்திற்கான தேவையில்லாத ஆடம்பர செலவுகளை மணமக்களின் வளர்ச்சிக்காக செலவிடலாம் என்பதை தனது பாணியில் கூறியிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். எனினும் திரைக்கதையின் வேகத்தை கொஞ்சம் கூட்டியிருக்கலாம். முடிவில் இயற்கை விவசாயமும் அதனால் கிடைக்கும் உணவுப் பொருட்களும் அவசியம் என்பதை புரிய வைத்திருக்கிறார்.

சித்தார்த் விபினின் பின்னணி இசை சிறப்பு. பாடல்களும் கேட்கும் ரகம் தான். ராஜேஷ் யாதவ்வின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `திருமணம்' தேவை. #Thirumanam #ThirumanamReview #Cheran #UmapathyRamayya #KavyaSuresh #Suganya






