என் மலர்
செய்திகள்
- வழிமறித்த மூன்று பேர் சிறுமியை தனிமையான இடத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
- 3 இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடிசாவில் விறகு சேகரிக்கச் சென்ற மாற்றுத்திறனாளி சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
ஒடிசா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் நாயரா கிராமத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, திங்கள்கிழமை மதியம் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்றுள்ளார்.
சிறுமி வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வழிமறித்த மூன்று பேர் சிறுமியை தனிமையான இடத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி நடந்ததை தனது பெற்றோரிடம் கூற அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார், 3 இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமூக வலைதளங்கள் வாயிலாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு முகவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளான்.
- 'ஹனி டிராப்' மூலமாகவோ அல்லது பண ஆசை காட்டியோ ரகசியங்களை வாங்குகிறார்கள்.
பஞ்சாப் மாநிலத்தில் இந்திய ராணுவம் தொடர்பான ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்குப் பகிர்ந்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பஞ்சாபின் எல்லைப்பகுதியைச் சேர்ந்த இந்தச் சிறுவன், சமூக வலைதளங்கள் வாயிலாகப் பாகிஸ்தானைச் சேர்ந்த உளவு முகவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளான்.
அவர்களுக்கு இந்திய ராணுவ நிலைகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உளவு அமைப்புகள் இந்திய இளைஞர்களைக் குறிவைத்து பெண்ணாசையை தூண்டும் 'ஹனி டிராப்' மூலமாகவோ அல்லது பண ஆசை காட்டியோ ரகசியங்களை வாங்குவது அதிகரித்து வரும் நிலையில் சிறுவன் சிக்கியுள்ளான்.
சிறுவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் பாகிஸ்தான் எண்களுடன் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவித்ததாக சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ஜனவரி 31-க்குள் அமெரிக்கா வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் அல்லது மதுரோ பதவி விலகுவார் என்று பந்தயம் காட்டினார்
- வெறும் 96 டாலருக்கு ஒப்பந்தங்களை வாங்கினார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ பதவியிலிருந்து தூக்கியெறியப்படுவார் என்று ஆன்லைனில் பந்தயம் கட்டிய மர்ம நபர் ஒருவர், ஒரே நாளில் 4,10,000 டாலர் (சுமார் 3.4 கோடி ரூபாய்) வென்றுள்ளார்.
Polymarket என்ற பிரபல ஆன்லைன் பந்தய தளத்தில், கடந்த டிசம்பர் 27 அன்று, ஜனவரி 31-க்குள் அமெரிக்கா வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் அல்லது மதுரோ பதவி விலகுவார் என்ற பந்தயத்தின் அடிப்படையில் வெறும் 96 டாலருக்கு பெயர் குறிப்பிடாத நபர் ஒருவர் ஒப்பந்தங்களை வாங்கினார்.
மதுரோவுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல் நடத்தி அவரைப் பிடித்த செய்தி வெளியானவுடன், அந்த நபர் கட்டிய பந்தயத்தின் மதிப்பு தாறுமாறாக உயர்ந்தது. மதுரோவின் வீழ்ச்சி உறுதி செய்யப்பட்டவுடன், அந்த நபரின் லாபம் 4.10 லட்சம் டாலராக எகிறியது.
அமெரிக்காவின் ராணுவத் திட்டம் குறித்து முன்கூட்டியே தெரிந்த யாரோ ஒருவர்தான் இப்படிப் பந்தயம் கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நீதா அம்பானி மும்பையில் விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
- இந்த விழாவிற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் மஹீகா சர்மா இருவரும் ஜோடியாக வருகை தந்தனர்.
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா, தனது காதலி மஹீகா சர்மாவை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அறிமுகம் செய்து வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணிகளின் உலகக்கோப்பை வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் நீதா அம்பானி மும்பையில் நேற்று முன்தினம் இரவு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் மற்றும் சினிமா துறையைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் மஹீகா சர்மா இருவரும் ஜோடியாக வருகை தந்தனர்.

விழாவின் போது, அங்கு வந்திருந்த பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சனிடம், ஹர்திக் பாண்டியா தனது காதலியை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர்கள் உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்ட எமது மக்களுக்கு இது கௌரவமான அங்கீகாரமாகும்.
- பாலஸ்தீனர்களின் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இந்தத் தூதரகம் ஒரு சான்று.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாலஸ்தீன நாட்டின் அதிகாரப்பூர்வ தூதரகம் திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மேற்கு லண்டனில் உள்ள ஹேமர்ஸ்மித் பகுதியில் இந்தத் தூதரகம் திறக்கப்பட்டது.
விழாவில் பேசிய பாலஸ்தீனத் தூதர் ஹுசாம் சோம்லோட், "இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தன்னாட்சி உரிமை மறுக்கப்பட்ட எமது மக்களுக்கு இது கௌரவமான அங்கீகாரமாகும்.
காசா, கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை என எங்கு இருந்தாலும், பாலஸ்தீனர்களின் அடையாளத்தை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இந்தத் தூதரகம் ஒரு சான்று" என்று தெரிவித்தார்.
காசாவில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தீவிரமடைந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் பாலஸ்தீனத்தைத் தனி நாடாகப் பிரிட்டன் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. அந்த முடிவின் தொடர்ச்சியாக இப்போது முழு அளவிலான தூதரக உறவுகள் எட்டப்பட்டுள்ளன.
- அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
- பராசக்தி டிரெய்லர் இதுவரை எந்த தமிழ் சினிமாவும் செய்யாத சாதனையை படைத்தது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. இந்த படத்தில் அதர்வா, ரவிமோகன், ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10-ந்தேதி வெளியாக உள்ளது.
அதேநேரம் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் சில நாள்களுக்கு முன் வெளியாகி யூடியூபில் 40 மில்லியன் (4 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது.
ஆனால் இந்த டிரெய்லருக்கு பின் வெளியான சிவகார்த்திகேயனின் பராசக்தி டிரெய்லர் இதுவரை எந்த தமிழ் சினிமாவும் செய்யாத சாதனையாக 47 மில்லியன் ( 4.7 கோடி) பார்வைகளைப் பெற்று ஜன நாயகனைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
திட்டமிட்டு புரமோஷன் செய்யப்பட்டதாலேயே இவ்வளவு பார்வைகள் கிடைத்துள்ளதாக விஜய் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
- வங்கதேச ஊடுருவல்காரர்கள் என அழைத்து, 8 தொழிலாளர்களையும் சூழ்ந்துகொண்டு லத்திகளால் கடுமையாகத் தாக்கினர்.
- இதில் ஒரு தொழிலாளியின் கை எலும்பு முறிந்ததுடன், மற்றவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், மேற்கு வங்க தொழிலாளர்கள் 8 பேர் மீது பஜ்ரங் தளம் அமைப்பினர் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 இஸ்லாமியத் தொழிலாளர்கள், ராய்ப்பூரில் உள்ள ஒரு பேக்கரியில் பணியாற்றி வந்தனர்.
நீண்ட நாட்களாகத் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கூலி நிலுவைத் தொகையை அவர்கள் கேட்டபோது, பேக்கரி நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கு வந்த பஜ்ரங் தளம் அமைப்பினர் வந்து, அவர்களை வங்கதேச ஊடுருவல்காரர்கள் என அழைத்து, 8 தொழிலாளர்களையும் சூழ்ந்துகொண்டு லத்திகளால் கடுமையாகத் தாக்கினர்.
இதில் ஒரு தொழிலாளியின் கை எலும்பு முறிந்ததுடன், மற்றவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாகப் பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தொடர் வன்முறை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழில் சுறா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
- கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவை சேர்ந்த பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் (77) இன்று காலமானார்.
1970களில் 'ஒத்தனிண்டே மகன்' என்ற படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அப்பச்சன்.
வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் பிரதானமாக நடித்து வந்தார். தமிழில் சுறா திரைப்படத்தில் நடித்திருந்தார். கடைசியாக 'சாலக்குடிகாரன் சங்கதி' திரைப்படத்தில் நடித்தார்.
இந்த நிலையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று ஆலப்புழையில் அவர் உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை விட கூட்டம் கணிசமாக அதிகரித்தால், அது ஒரு தீவிரமான விதிமீறலாகக் கருதப்படும்
- நிகழ்ச்சிக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பார்வையாளர்கள் தேவையின்றி ஒன்றுக்கூடக்கூடாது
தவெக தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை கூட்டத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு தயாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி,
- புதிய நெறிமுறைகளின்படி வரையறுக்கப்பட்ட இடத்தில் நிகழ்ச்சி நடத்த 10 நாள்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்
- அரசு பரிந்துரைத்ததற்கு மாற்றாக வேறு இடத்தில் நிகழ்ச்சி நடத்த 10 முதல் 30 நாட்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்
- 50,000-க்கும் மேல் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கு 30 நாட்கள் அல்லது அதற்கு முன்பே விண்ணப்பிக்கலாம்
- நிர்ணயிக்கப்பட்ட இடத்தை தவிர, வேறு எங்கும் வி.ஐ.பி. உரையாற்றக் கூடாது
- 500 பேருக்கு ஒரு கழிப்பறை, 300 மீட்டர் அளவில் ஒரு நடமாடும் கழிப்பறை ஏற்படுத்த வேண்டும்
- ஒரு நபருக்கு 4 லிட்டர் குடிநீர், ஒவ்வொரு 100 மீட்டருக்கும் குடிநீர் வசதியை ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
- நிகழ்விற்கான அனுமதி, சம்பந்தப்பட்ட காவல் துறையினரால் விதிக்கப்படும் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது.
- அனுமதி கடிதத்தில் 'இத்தனை மணி முதல் இத்தனை மணி வரை' என்று கொடுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டை எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது.
- ரோடு ஷோக்கள் 3 மணிநேரத்திற்குள் நடத்தப்பட வேண்டும்.
- விண்ணப்பத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையைப் பின்பற்றுவதற்கு உட்பட்டே இந்த அனுமதி வழங்கப்படுகிறது. அதாவது 500 பேர் வருவார்கள் என்று குறிப்பிட்டிருந்தால், அந்த எண்ணிக்கையைத் தாண்டக்கூடாது
- அனுமதி கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததை விட கூட்டம் கணிசமாக (50 சதவீதத்திற்கும் மேல்) அதிகரித்தால், அது ஒரு தீவிரமான விதிமீறலாகக் கருதப்படும்; மேலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- நிகழ்ச்சிக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பார்வையாளர்கள் தேவையின்றி ஒன்றுக்கூடக்கூடாது. நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியான கால அட்டவணையை பங்கேற்பாளர்களுக்குத் தெரிவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- கூட்டப் பாதுகாப்பு, ஒழுங்குமுறை மற்றும் சீரான மேலாண்மை போன்றவற்றை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் உறுதிசெய்ய வேண்டும். மேடைகள், தடுப்புகள் (Barricades), பந்தல்கள், அனைத்து தற்காலிக அமைப்புகள், மின்விளக்கு மற்றும் ஒலி அமைப்புகள் மற்றும் மின் இணைப்புகளின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்கள் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து பெற வேண்டும். இந்தச் சான்றிதழ்களை நிகழ்ச்சி தொடங்குவதற்கு குறைந்தது 4 மணி நேரத்திற்கு முன்னதாக அனுமதி வழங்கிய அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்
- ஏதேனும் அசம்பாவிதம் அல்லது தீ விபத்து ஏற்பட்டால் அதைச் சமாளிக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் தீயணைப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
- அனைத்து வாகனங்களும் ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களுக்கு (Parking lots) மட்டுமே திருப்பி விடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்; பொதுப் போக்குவரத்திற்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது. எதிர்பார்க்கப்படும் ஒவ்வொரு 50 வாகனங்களுக்கும் குறைந்தது ஒரு தன்னார்வலர் (Volunteer) இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
- நிகழ்வு நடைபெறும் முழு நேரத்திலும் அவசரகால மீட்பு வாகனங்களுக்கு (ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள், காவல் துறை வாகனங்கள்) தடையற்ற போக்குவரத்து இருப்பதை ஏற்பாட்டாளர் உறுதி செய்ய வேண்டும்.
- டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் ஏதேனும் வைப்பதாக இருந்தால், நடைமுறையில் உள்ள தமிழ்நாடு அரசின் அரசாணை மற்றும் சட்ட விதிகளின்படி, உரிய அனுமதி பெற்றே நிறுவ வேண்டும்.
- நடைமுறையில் உள்ள நிபந்தனைகளுக்கு இணங்கவே தற்காலிகக் கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும்.
- கர்ப்பிணிப் பெண்கள், மூத்த குடிமக்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய நபர்கள் பாதுகாக்கப்படுவதையும், அதிக மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு அவர்கள் ஆளாகாமல் இருப்பதையும், அதிக நேரம் நிற்க வைக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்காகத் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும், மேலும் அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காகத் தனி தன்னார்வலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
- அனுமதிக்கப்பட்ட அளவை விட மக்கள் அதிகம் வந்துவிட்டால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க 100 பேருக்கு ஒரு தன்னார்வலர் என்ற கணக்கில் ஆட்களை நியமித்து, தடுப்புகள் மூலம் அவர்களைப் பாதுகாப்பு பகுதிகளுக்குப் பிரித்து அனுப்ப வேண்டும்.
- ஊர்வலமாகச் செல்லும்போது சாலையை முழுமையாக அடைக்காமல், ஒரு பக்கமாக மட்டுமே செல்ல வேண்டும். மறுபாதியை வாகனங்கள் செல்வதற்காக ஒதுக்கி, பொதுமக்களுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- நிகழ்ச்சியின் தன்மை அல்லது எதிர்பார்க்கப்படும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, தகுதிவாய்ந்த அதிகாரம் கொண்ட அதிகாரி (காவல் துறை), அவசியமெனக் கருதப்படும் வேறு எந்தவொரு குறிப்பிட்ட நிபந்தனைகளையும் விதிக்கலாம்.
- அனுமதிக்கான அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்றுவதற்கு ஏற்பாட்டாளரே முழுப் பொறுப்பாவார். இதில் ஏதேனும் விதிமீறல் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டால், வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்; மேலும், சேதங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் மற்றும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்புள்ளது.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆற்று நீர் விவகாரத்தில் தெலுங்கானாவிற்கு அநீதி இழைத்ததாக கேசிஆர் மீது ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு.
- தெலுங்கானாவிற்கு அநீதி இழைத்த அவரை தூக்கிலிட வேண்டும் என ரேவந்த் ரெட்டி கூறியிருந்தார்.
ஆற்று நீர் விவகாரத்தில் தெலுங்கானா மாநிலத்திற்கு அநீதி இழைத்ததாக பிஆர்எஸ் தலைவர் கே. சந்திரசேக ராவ் மற்றும் அவரது மருமகன் ஹரிஷ் ராவ் ஆகியோரை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும், அநீதி இழைத்த இருவரையும் தூக்கில் போட தகுதியானவர்கள் எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ராகுல் காந்தியைத்தான் தூக்கிலிட வேண்டும் என பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் ராம ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக ராம ராவ் கூறுகையில் "உண்மையில் யாரை தூக்கிலிட வேண்டும். ராகுல் காந்தி வாரங்கலுக்கு வந்தார். அவர்கள் (காங்கிரஸ் தலைவர்கள்) விவசாயிகளை சந்தித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினர். ரைத்து பாண்டு (Rythu Bandhu) கீழ் கேசிஆர் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் 15 ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்றார்கள். அவர்கள் கொடுத்தார்களா?. அவர்கள் இரண்டு பயிர்களுக்கு கொடுக்கவில்லை. தற்போது அவர்கள் 15 ஆயிரத்திற்குப் பதிலாக 12 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளனர்.
அனைத்துப் பயிர்களுக்கும் ரூ.500 போனஸ் வழங்குவது, குத்தகை விவசாயிகளுக்கு ரைத்து பாண்டு திட்டத்தை விரிவுபடுத்துவது மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குவது உள்ளிட்ட மற்ற வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுகிறதா?.
அப்படியானால், யாரைத் தூக்கிலிட வேண்டும்? ரேவந்த் ரெட்டியை அல்ல. அவரை நம் மீது திணித்த ராகுல் காந்தியைத்தான் தூக்கிலிட வேண்டும். வாரங்கலில் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ராகுல் காந்தி 70 லட்சம் விவசாயிகளை ஏமாற்றிவிட்டார். அவரை ஒரு திறந்தவெளி சந்தையில் தூக்கிலிட வேண்டும்.
இவ்வாறு ராம ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.
- விலையுயர்ந்த பொருளை இழக்க நேரிடும் என்று கணித்துள்ளார்
- தாய்லாந்து கலாச்சாரத்தில், ஜோதிடம் ஆழமாக வேரூன்றியது
தான் சொன்ன ஜோசியத்தை உண்மை என நிரூபிக்க பெண்ணின் ஃபோனை திருடிய ஜோதிடர் கைது செய்யப்பட்ட சம்பவம் தாய்லாந்தில் அரங்கேறியுள்ளது.
தாய்லாந்தின் பட்டாயா பகுதியில் 38 வயதான உடோம்சாப் முயாங்கேவ் என்ற ஜோசியர் புத்தாண்டு அன்று, 19 வயதான பிம் என்ற இளம்பெண்ணிற்கு சீட்டுப் பார்த்து பலன் கூறியுள்ளார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு விரைவில் துரதிர்ஷ்டம் ஏற்படும் என்றும், அவர் ஒரு விலையுயர்ந்த பொருளை இழக்க நேரிடும் என்றும் கணித்துக் கூறியுள்ளார்.
பின்னர் துரதிர்ஷ்டத்தைத் தவிர்க்க ஒரு சடங்கு செய்ய வேண்டும். அதற்கு பணம் செலவாகும் எனக் கூறியுள்ளார். ஆனால் சடங்கு வேண்டாம் என்று தவிர்த்து அப்பெண் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே தனது ஐபோன் காணாமல் போனதை பிம் அறிந்தார். ஜோசியம் பார்க்கும்போது ஃபோனை தனது அருகில் வைத்ததை நினைவுக்கூர்ந்த பிம், மீண்டும் அங்கு சென்று ஜோசியரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார்.
அதற்கு, தனது வார்த்தைகள் பலித்ததாக உடோம்சாப் தெரிவித்துள்ளார். சந்தேகமடைந்த பிம் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் வந்து ஜோசியரின் பையைச் சோதனையிட்டபோது, முகக்கவசம் வைக்கும் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐபோனை மீட்டனர். விசாரணையில் பணத்திற்காக இவ்வாறு செய்ததாக உடோம்சாப் முயாங்கேவ் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து கலாச்சாரத்தில், ஜோதிடம் ஆழமாக வேரூன்றியது. அங்கு இது முக்கிய தொழிலாகவே, குறிப்பாக லாபகரமானதாக, முதலீடுகள் எல்லாம் போடப்பட்டு செய்யப்பட்டு வருகிறது.
- மக்கள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
- நாணய மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் அந்நாட்டின் மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தெஹ்ரான்:
ஈரானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த அந்நாட்டு மக்கள், வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும்.
ஒரு வாரத்துக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, மத்திய வெளிவிவகார அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ஈரானுக்கு தேவையற்ற பயணம் மேற்கொள்ள வேண்டாம் என இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
இந்நிலையில், இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் இந்தியர்களின் நலன்களின் பாதுகாப்புக்கு, ஈரான் அரசு என்ன வகையான உத்தரவாதம் வழங்க முடியும் என ஈரானிய தூதர் முகமது பதாலியிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
இதற்கு பதிலளித்த முகமது பதாலி, ஈரானில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்திய குடிமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்தார்.






