search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோப்ப நாய்"

    • பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
    • டிபன் பாக்ஸ் வடிவில் மர்ம பொருளை கண்டெடுத்தனர்.

    சென்னை:

    சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று மாலை மர்ம நபர்கள் மூலம் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக பொது மக்கள் அதிகம் கூடும் இடமான எலியட்ஸ் கடற்கரை மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வெடி குண்டுகள் வெடிக்கப் போவதாக கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள் காவலர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

    அதேபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, சென்ட்ரல் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டனர்.

    மேலும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள நினைவுச் சின்னம் அருகே டிபன் பாக்ஸ் வடிவில் மர்ம பொருளை கண்டெடுத்தனர். அதில் வெடிகுண்டு இருக்கிறதா என்பது குறித்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டு பிடிக்கும் கருவிகளைக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்த சோதனை நடந்தது.

    பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கடற்கரை முழுவதும் சோதனை நடத்தினர். மர்ம பொருள் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியானது.

    மேலும் டி.ஜி.பி. அலுவலகத்தில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் எலியட்ஸ் கடற்கரை தவிர மற்ற 29 இடங்களில் உள்ள வெடிகுண்டுகளை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் 2500 பிட்காயின் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    100-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டும் எந்த வெடி பொருளும் சிக்காததால் காவல் துறையினர் சோதனையை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். இருப்பினும் சென்னை போலீசாரை வெடிகுண்டு மிரட்டல் கலங்கடித்துவிட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை.
    • போலீசார் சிறுவனை தேடும் பணியை துவங்கினர்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் போவை பகுதியில் உள்ள அசோக் நகரில் ஆறு வயது சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாட சென்றான். விளையாட சென்ற சிறுவன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்வில்லை. இதையடுத்து, பெற்றோர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும், சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

    உடனே காவல் நிலையம் விரைந்த பெற்றோர், தங்களின் மகன் காணாமல் போனது பற்றி புகார் அளித்தனர். காணாமல் போன சிறுவன் விளையாடி கொண்டிருந்த பகுதியில் சி.சி.டி.வி. கேமரா எதுவும் பொருத்தப்படவில்லை. இதன் காரணமாக போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சிறுவனை தேடும் பணியை துவங்கினர்.

    அதன்படி மோப்ப நாய் "லியோ" சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டது. முதலில் சிறுவன் அணிந்திருந்த டி-சர்ட் ஒன்றை மோப்பம் பிடித்த லியோ, பிறகு சிறுவன் விளையாடி கொண்டிருந்த மைதானத்திற்கு அழைத்து செல்லப்பட்டது. அங்கிருந்து தேடலை துவங்கிய லியோ மைதானத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவிலேயே சிறுவனை கண்டுபிடித்து அசத்தியது.

    மோப்ப நாய் தேடுதல் வேட்டையில் இறங்கிய மூன்றரை மணி நேரத்தில் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டான். அதிநவீன தொழில்நுட்ப உதவிகள் இல்லாத பட்சத்தில் போலீசார் தங்களுக்கே உரிய பாணியில் தேடுதல் வேட்டையை நடத்தியதோடு, சில மணி நேரங்களில் சிறுவனை காப்பாற்றிய சம்பவம் பொது மக்களிடையே வரவேற்பை பெற்றது. 

    • போலீஸ் இன்ஸ்பெக்டரை விட போலீஸ் மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது.
    • அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் என்று கருத்து நிலவியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் போலீஸ் நிலையங்களை வாடகைக்கு எடுக்கலாம் என்று கேரள காவல்துறை தெரிவித்துள்ளது. போலீஸ் நிலையத்துடன் இன்ஸ்பெக்டர் மோப்பநாய், வயர்லெஸ் கருவிகள் உள்ளிட்டவைகளையும் கட்டணம் செலுத்தி வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

    மேலும் ஒவ்வொரு வசதிக்கான கட்டண பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு போலீஸ் நிலையத்திற்கு ரூ12 ஆயிரம், வயர்லெஸ் கருவிகளுக்கு ரூ12ஆயிரத்து 130, மோப்ப நாய்க்கு ரூ7ஆயிரத்து 280, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரூ3 ஆயிரத்து 35 முதல் ரூ3ஆயிரத்து 340 வரை என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மொத்தமாக ஒரு போலீஸ் நிலையம், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், வயர்லெஸ் கருவிகள், மோப்பநாய் என அனைத்தும் சேர்த்து ரூ34 ஆயிரத்து 750 கட்டணமாக இருக்கிறது. இன்ஸ்பெக்டருக்கு பதிலாக சிவில் போலீஸ அதிகாரிக்கான கட்டணம் ரூ610 ஆகும்.

    காவல்துறை வெளியிட்டுள்ள இந்த பட்டிலின்படி, போலீஸ் இன்ஸ்பெக்டரை விட போலீஸ் மோப்ப நாய்க்கு வாடகை அதிகமாக இருக்கிறது. ஆனால் அதற்கான காரணம் தெளிவாக கூறப்படவில்லை.

    காவல்துறையின் இந்த முடிவுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அரசு அதிகாரிகள் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

    அரசின் நிதி நெருக்கடியை சரிசெய்வதற்கான திட்டம் என்று கருத்து நிலவியது. ஆனால் இது நிதிநிலையை உயர்த்துவதற்கான திட்டம் இல்லை என்றும், இது ஏற்கனவே உள்ள பழைய திட்டம் எனவும், புதிய கட்டணங்களுடன் தற்போது வெளிவந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • முத்துகுமாரசாமி, வீட்டின் கதவை திறந்து குடும்பத்துடன் உள்ளே சென்றார்.
    • கடலூரில் இருந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பூங்குணம் கிராமம் உள்ளது. இங்கு சோடா கம்பெனி நடத்தி வருபவர் முத்துகுமாரசாமி (வயது 40). கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவரது தாயார் இறந்துவிட்டார். இதனால் தினமும் இரவு குடும்பத்துடன் அங்கு சென்று தங்கிவிட்டு, காலையில் எழுந்து வீட்டிற்கு வந்து விடுவார்கள். 

    அதன்படி, இன்று காலை வீட்டிற்கு வந்த முத்துகுமாரசாமி, வீட்டின் கதவை திறந்து குடும்பத்துடன் உள்ளே சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைக்கப்பட்டு திறந்திருந்தது. வீட்டிலிருந்த பீரோவை பார்த்தபோது அதுவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக பண்ருட்டி போலீசாருக்கு முத்துகுமாரசாமி தகவல் கொடுத்தார். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

    அப்போது முத்துகுமா ரசாமியின் எதிர்வீட்டின் பின்பக்க கதவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் ராமலிங்கம், ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர். இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் புதுவையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போலீசார், சம்பவத்தை கூறி உடனடியாக பூங்குணம் வருமாறு கூறினார்கள். அவர்கள் வந்த பிறகே அந்த வீட்டில் எந்தெந்த பொருட்கள் திருடு போயுள்ளது என்பது தெரியவரும். இதனைத் தொடர்ந்து கடலூரில் இருந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடியது யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்து வருகின்றனர். ஒரே நாளில் எதிரெதிர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பண்ருட்டி காந்திரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியர் அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் பூவாராகமூர்த்தி, பள்ளிக்கு விரைந்து வந்தார். அறையில் இருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர், மின் விசிறி மற்றும் கல்வி உபகரணங்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக பண்ருட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். பண்ருட்டி நகரில் எப்போதும் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள காந்தி ரோட்டில் இருந்த அரசுப் பள்ளியில் கொள்ளை நடந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வன அலுவலர்கள் சிற்றாறு பகுதியில் புலி வந்த தடங்கள் குறித்து ஆய்வு
    • மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு 2 நாட்களாக அந்த பகுதி முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் சிற்றாறு வன பகுதியில் சிலோன் காலனி அருகே புலி நடமாடுவதாக கூறப்பட்ட நிலையில் தொழிலாளி ஒருவரின் வீட்டின் அருகில் கட்டப்பட்டிருந்த ஆடு காணாமல் போனதும், ஆட்டின் உடல் பாகங்கள் புதர் பகுதியில் கண்டுபிடி க்கப்பட்டதும் தொழிலாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    இதையடுத்து மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜா உத்தரவின் பேரில் களியல் வனச்சரக அலுவலர் சேக் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் வன அலுவலர்கள் சிற்றாறு பகுதியில் புலி வந்த தடங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்றனர்.

    அப்போது மல்லமுத்தன்கரை பகுதியில் ஆட்டின் குடல் மற்றும் தோல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் புலியின் காலடித் தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

    இந்நிலையில் அப்பகுதியில் புலியின் நடமாட்ட த்தை கண்டறியும் வகையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட பகுதிகளில் மரங்களில் விஷேச காமிரா பொருத்தும் பணிகள் வனத்துறை சார்பில் மாட்டப்பட்டு தீவரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளியின் வீட்டு தொழுவத்தில் கட்டப்பட்டுயிருந்த பசு மாட்டை புலி மீண்டும் இரவில் வந்து கடித்து குதறியது.

    அதன் அலறல் சத்தம் கேட்டு தொழிலாளி வந்து பார்த்ததும் புலி ஆவேசமாக இருந்தது. பசு மாட்டை காப்பாற்ற சென்ற தொழிலாளியின் மகனின் கையில் புலியின் கை விரல்பட்டு காயங்கள் ஏற்பட்டன. அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் நாகர்கோவில் மாவட்ட வனத்துறைக்கு சொந்தமான மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு 2 நாட்களாக அந்த பகுதி முழுவதும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அந்த பகுதி பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் வனத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். புலியின் நடமாட்டத்தை மாட்டப்பட்டுயிருக்கும் காமிராவில் பதிந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

    புலி நடமாட்டம் காரணமாக தொழிலாளர்கள் ரப்பர் பால்வடிப்புக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மாலையில், வழுக்கம் பாறை சந்திப்பி லிருந்து நடந்து குடியிருப்பு பகுதிக்கு வருவதற்கும் அச்சப்படுகின்றனர்.

    எனவே வனத்துறையினர் புலியை கண்காணித்து அதனை காட்டுப்பகுதிக்குள் துரத்த வனத்துறையினர் தீவர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • தற்போது 10 வயதை எட்டியதால் பணி ஓய்வு வழங்கப்பட்டது.
    • ஜெனியை இடுக்கி மோப்பநாய் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாபு தனது வீட்டுக்கு அழைத்து செல்ல கோரிக்கை விடுத்தார்.

    திருச்சூர் கேரள போலீஸ் அகாடமியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஜெனி கடந்த 2015-ம் ஆண்டு முதல் இடுக்கி மோப்பநாய் படையில் பணியாற்றியது.

    கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் துப்புதுலங்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் முக்கிய பங்கு வகித்தது. தற்போது 10 வயதை எட்டியதால் பணி ஓய்வு வழங்கப்பட்டது.

    அதன்படி பணி ஓய்வு பெற்ற நாய் ஜெனிக்கு போலீசார் போல் மாலை அணிவித்து மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். இடுக்கி மோப்பநாய் படை பிரிவில் நடந்த நிகழ்ச்சியில் ஜெனி மோப்பநாய் சீருடையில் வந்தது. அதனை இடுக்கி மாவட்ட எஸ்.பி. குரியகோஸ் மாலையிட்டு வரவேற்றார். அதன்பிறகு போலீஸ் நடைமுறைப்படி மரியாதை செலுத்தப்பட்டது. உயர் போலீஸ் அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

    வழக்கமாக பணி ஓய்வு பெறும் மோப்ப நாய்கள் திருச்சூர் போலீஸ் அகாடமி ஓய்வு முகாமிற்கு அனுப்பப்படும் ஆனால் ஜெனியை இடுக்கி மோப்பநாய் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சாபு தனது வீட்டுக்கு அழைத்து செல்ல கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று எஸ்.பி. அவரிடம் ஜெனியை ஒப்படைத்தார். பல ஆண்டுகளாக பழகிய சாபுவுடன் ஜெனி உற்சாகமாக சென்றது.

    • பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பினோம்.

    கோவை:

    கோவை மாநகர காவல்துறையில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 7 மோப்ப நாய்கள் உள்ளன.

    போதை பொருட்களை கண்டறிவதற்காக புதிதாக பெல்ஜியம் மெலானாய்டு வகையை சேர்ந்த மதனா என பெயரிடப்பட்ட 8 மாதமே ஆன மோப்ப நாய் சேர்க்கப்பட்டு தற்போது 8 மோப்பநாய்கள் உள்ளன.

    இதுதவிர திண்டுக்கல், பாளையங்கோட்டை மத்திய சிறை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்பலவாணன் தலைமையில் இந்த பிரிவு இயங்குகிறது. இங்கு உள்ள போலீஸ் மோப்ப நாய் பயிற்சி பிரிவில் கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை ஆண் போலீசார் மட்டுமே மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர்.

    இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மோப்ப நாய் பிரிவில் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய திருப்பூரை சேர்ந்த கவிப்பிரியா (வயது25), தேனியை சேர்ந்த பவானி(26) ஆகிய 2 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்கள் வில்மா என்றபெயர்கொண்ட லேப்ரடார் வகை நாய், பெல்ஜியம் மெலானாய்டு நாய் உள்ளிட்ட மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே மோப்ப நாய் பிரிவில் நியமிக்கப்பட்ட பெண் போலீசார் எவ்வாறு பயிற்சி அளிக்கிறார்கள் என்பதை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதுகுறித்து பெண் போலீசார் கவிப்பிரியா, பவானி ஆகியோர் கூறியதாவது:-

    நாங்கள் கடந்த 2022-ம் ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தோம். நாங்கள் ஏற்கனவே வீடுகளில் நாய்களை வளர்த்து வருகிறோம். இதனால் எங்களுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம் உண்டு.

    நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து பணியாற்ற விரும்பினோம். அப்போது தான் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் போலீஸ் மோப்ப நாய் பிரிவில் சேர பெண் போலீசாரிடம் ஆர்வம் உள்ளதா? என கேட்டிருந்தார்.

    இதையடுத்து நாங்கள் எங்களின் ஆர்வத்தை கூறவே, எங்களை தற்போது மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்க நியமித்துள்ளனர். மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து நாய்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற எங்களுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியது மகிழ்ச்சியாக உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கிட்டத்தட்ட 35 வழக்குகளில் விசாரணைக்கு உதவியாக டோனி செயலாற்றி உள்ளது.
    • மாநில அளவில் காவல்துறையில் திறன் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றது.

    திருவள்ளூர்:

    காவல் துறையில் பணியாற்றிய டோனி என்கிற டாபர்மேன் (மோப்பநாய்), இருதயக் கோளாறு காரணமாக உயிரிழந்தது. டோனி சுமார் 8 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி உள்ளது.

    சென்னை மாநகர காவல் மோப்ப நாய்பிரிவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான டோனி, சென்னை மாநகர காவலில் இருந்து பிரிந்து 02.05.2022 அன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டது.

    டோனி 20.02.2014 அன்று பிறந்து 45 நாட்கள் ஆன நிலையில் மோப்ப நாய் பிரிவில் சேர்க்கப்பட்டு, ஒரு சிறந்த துப்பறிவாளராக பணியாற்றி உள்ளது. மேலும் கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகள் உட்பட கிட்டத்தட்ட 35 வழக்குகளில் விசாரணைக்கு உதவியாக டோனி செயலாற்றி உள்ளது.

    2017 ஆம் ஆண்டில், டோனி மாநில அளவில் காவல் துறையில் திறன் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றது. மேலும் 2020ல் அடையாறில் நடைபெற்ற கெனல் கிளப்மீட்டில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.

    ஆவடி காவல் ஆணையாளர் த.சந்தீப் ராய் ரத்தோர் டோனியின் சிறப்பான சேவைகளை நினைவு கூர்ந்து நன்றியை தெரிவித்தார். ஆவடி காவல் ஆணையரக அதிகாரிகள் மற்றும் டோனியின் பயிற்சியாளர் தலைமை காவலர் தனசேகர் மலர் தூவி இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் டோனியின் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    • நீலகிரி மாவட்ட காவல்துறையில் 4 மோப்பநாய்கள் புலன்விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
    • கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி ஜாக்கி என்ற மோப்பநாய் காவல்துறையில் இணைந்தது.

    நீலகிரி மாவட்ட காவல்துறையில் 4 மோப்பநாய்கள் புலன்விசாரணைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் 2 மோப்பநாய்கள் குற்றம் நடைபெற்ற இடத்தில் சோதனை நடத்தவும், 2 மோப்பநாய்கள் வெடிமருந்து சோதனை நடத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

    இதில் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ந் தேதி ஜாக்கி என்ற மோப்பநாய் காவல்துறையில் இணைந்தது. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ந் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றது. அந்த மோப்பநாய், பட்பயர் பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்தது. இதுவரை 96 முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த அந்த மோப்பநாய், நேற்று மரணம் அடைந்தது. அதன் இறுதிச்சடங்கில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நவாஸ் உள்பட அதிகாரிகள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

    ×