என் மலர்
நீங்கள் தேடியது "jail sentence"
- மாமூல் தர மறுத்ததால் பொருள்களை சூறையாடினர். அதைத் தடுத்த கடை ஊழியர் சிவராஜைத் தாக்கினர்.
- ரவுடிகள் மீதான வழக்கு விசாரணை புதுவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை காந்தி வீதியில் பேக்கரி வைத்திருப்பவர் சண்முகசுந்தரம். இவரது பேக்கரிக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் புதுவை வைத்திகுப்பத்தைச் சேர்ந்த எலி கார்த்திகேயன் (30), வாணரப்பேட்டையை சேர்ந்த மதி மணிகண்டன் (29) ஆகியோர் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
மாமூல் தர மறுத்ததால் பொருள்களை சூறையாடினர். அதைத் தடுத்த கடை ஊழியர் சிவராஜைத் தாக்கினர். இதில் காயமடைந்த அவர், சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப் பதிவு செய்து எலி கார்த்தி, மதி ஆகியோரைக் கைது செய்தனர்.
அவர்கள் மீதான வழக்கு விசாரணை புதுவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிவில் குற்றஞ்சாட்டப்பட்ட எலிகார்த்திக், மதி ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.
- வீட்டில் யாரும் இல்லாத போது கடந்த 22-9-98 அன்று சென்னையில் இருந்து 14 வயது சிறுமி நாகர்கோவிலுக்கு தப்பி வந்துவிட்டார்.
- மகளை காணவில்லை என்று தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர். அவர்கள் நாகர்கோவில் வந்த சிறுமியை மீட்டனர்.
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சொந்தமாக செங்கல்சூளை நடத்தி வருகிறார்.
இவருக்கு சொந்தமாக 5 லாரிகள் உள்ளது. அவரிடம் லாரி டிரைவராக இரவிபுதூர்கடையை சேர்ந்த முருகேசன் என்ற முருகன் (வயது29) என்பவர் வேலைபார்த்து வந்தார். வேலைக்கு வரும் போது முருகேசன் தொழிலதிபரின் 14 வயது மகளிடம் பேசுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த 11-5-98 அன்று முருகேசன் தொழிலதிபர் வீட்டிற்கு ஒரு காரில் வந்தார். காரில் மேலும் 3 பேர் இருந்துள்ளனர். அவர்கள் திடீரென வீட்டில் இருந்து வெளியே வந்த தொழிலதிபரின் 14 வயது மகளை காரில் ஏற்றி கடத்தினர்.
இதனை கண்டு சிறுமியின் உறவினர்கள் அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் கார் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. பின்னர் அவர்கள் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ரெயில் மூலம் மும்பை சென்றுள்ளனர்.
அங்கு ஒரு வீட்டில் முருகேசனும், 14 வயது சிறுமியும் கணவன், மனைவி எனகூறி தங்கியுள்ளனர். பின்னர் முருகேசன், 14 வயது சிறுமியை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்துள்ளார். அங்கு முருகேசனின் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது கடந்த 22-9-98 அன்று சென்னையில் இருந்து 14 வயது சிறுமி நாகர்கோவிலுக்கு தப்பி வந்துவிட்டார். இதற்கிடையே மகளை காணவில்லை என்று தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடிவந்தனர். அவர்கள் நாகர்கோவில் வந்த சிறுமியை மீட்டனர்.
பின்னர் குழித்துறை அனைத்து மகளிர் போலீசில் இது தொடர்பாக சிறுமி கொடுத்த புகாரின் பேரில் முருகேசன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இது தொடர்பான வழக்கு குமரி மாவட்ட மகிளா விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜரானார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப்ராஜ், சிறுமியை கடத்திய முருகேசனுக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
- அனைத்து தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு கார்த்திக் தீர்ப்பளித்தார்.
- பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பூம்பாறையை அடுத்த கூக்கால் பிரிவு அருகே கடந்த 3-ந்தேதி மன்னவனூரைச் சேர்ந்த ஜீவா (வயது 22), பூண்டியைச் சேர்ந்த பாலமுருகன் (26) ஆகிய இருவரும் மது அருந்தி விட்டு மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
அப்போது மேல்மலை கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடைக்கானல் சென்று விட்டு காரில் தனது விடுதிக்கு வந்து கொண்டு இருந்தார். அவரிடம் ஜீவா, பாலமுருகன் ஆகிய 2 பேரும் லிப்ட் கேட்டுள்ளனர்.
வாலிபர்கள் மது அருந்தி இருந்த விபரம் தெரியாததால் அந்த பெண் அவர்களுக்கு லிப்ட் கொடுத்துள்ளார். காரில் ஏறிய சிறிது நேரத்தில் அவர்கள் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் காரில் இருந்து அவர்களை இறக்கி விட்டு இது குறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். இந்த வழக்கு கொடைக்கானல் 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் உடனடியாக விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
போலீசாரும் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு கார்த்திக் தீர்ப்பளித்தார். பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் அவர் உத்தரவிட்டார்.
மேலும் அவர் தனது தீர்ப்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். அனைத்து ஆண்களும் பெண்களை சரியான முறையில் நடத்துகிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். இது போன்ற சம்பவங்கள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்கு பதிவு செய்த 9 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
நீதித்துறை வரலாற்றில் இது புதிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
- வழக்கை போக்சோ கோர்ட்டு விசாரணை நடத்தி அப்பாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
- ஆசிரியருக்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த தொகையை சிறுவனுக்கு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டோபாடம் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 51). இவர் வீட்டில் வைத்து மாணவ-மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வந்தார். இவரிடம் 13 வயது சிறுவன் டியூசனுக்கு வந்தான். அவனிடம் அப்பாஸ் தவறாக நடந்துள்ளார். டியூசன் சென்டரிலும், சிறுவனது வீட்டிலும் வைத்து அவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இதனை சிறுவன் தனது பெற்றோரிடம் கூற, அவர்கள் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி, அப்பாஸ் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை போக்சோ கோர்ட்டு விசாரணை நடத்தி அப்பாசுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் அவருக்கு ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த தொகையை சிறுவனுக்கு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.
- கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் வெங்கடாசலத்தை, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்யும் முயற்சியில் பிரபு ஈடுபட்டார்.
- பிரபுவை கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் பிரபு (வயது 33).
மேட்டூர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது, பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன் என மேட்டூர் ஆர்.டி.ஓ.விடம் 3 ஆண்டுகளுக்கு பிணை பத்திரம் எழுதி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் வெங்கடாசலத்தை, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் பிரபுவை கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
நன்னடத்தைக்கான பிணை பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்டதால், விதிமீறல் தொடர்பாக, மேட்டூர் ஆர்.டி.ஓ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று மேட்டூர் ஆர்.டி.ஓ.தணிகாசலம், 2 ஆண்டுகள் 3 மாதத்திற்கு, பிரபுவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
- இந்த கொலை சம்பவம் சிங்கப்பூரையே உலுக்கியது.
- காயத்ரிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் :
சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன் (வயது 41). கடந்த 2015-ம் ஆண்டு இவரது வீட்டில் மியான்மர் நாட்டை சேர்ந்த பியாங் நகாய்டான் என்ற பெண் வீட்டு வேலை பணிக்கு சேர்ந்தார்.
இந்த சூழலில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் பியாங் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனை செய்தபோது, பல மாதங்களாக அவர் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காயத்ரி தனது வீட்டு பணிப்பெண் பியாங்குக்கு சரியாக உணவு அளிக்காமல் அடித்து கொடுமைபடுத்தி வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கு காயத்ரியின் தாயார் பிரேமா நாராயணசாமி உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இந்த கொலை சம்பவம் சிங்கப்பூரையே உலுக்கியது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காயத்ரி மற்றும் பிரேமா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் கோர்ட்டில் விசாரணை நடந்தது. இதில் காயத்ரிக்கு கடந்த 2021-ம் ஆண்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் காயத்ரியின் தாயார் பிரேமாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.
- கடந்த 2020-ம் ஆண்டு மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
- மாணவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறியதை நம்பிய பெற்றோர்கள் அந்த மாணவியை பிரகாசுடன் அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் புதுக்குப்பம் பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மகன் பிரகாஷ் (வயது 39).
இவர் செங்கல் சூளையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அதே செங்கல் சூளையில் திண்டிவனத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.
தம்பதி கூலி தொழிலாளர்களுக்கு 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயதில் ஒரு மகள் உள்ளார். அவரும் அந்த செங்கல் சூளையில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அந்த மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மாணவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறியதை நம்பிய பெற்றோர்கள் அந்த மாணவியை பிரகாசுடன் அனுப்பி வைத்தனர்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மாணவியை பிரகாஷ் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவி அழுது கொண்டே வந்து தனது பெற்றோரிடம் கூறினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், விசாரணைகள் முடிந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பிரகாசுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்று நீதிபதி சாந்தி தீர்ப்பளித்தார்.
இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிரகாஷ், மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- கடந்த 2019-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்துல் ஹக்கீமை போலீசார் கைது செய்தனர்.
- வழக்கை விசாரித்த கோர்ட்டு, அப்துல் ஹக்கீமுக்கு 62 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். இவர் அங்குள்ள மதரசா பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு பட்டாம்பி போக்சோ கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, அப்துல் ஹக்கீமுக்கு 62 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.
- கிரிஸ் வூ 32 வயதான ராப் பாடகர்.
- சீனாவில் 17 வயது சிறுமியை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டார்.
பீஜிங்
கனடா மற்றும் சீனா இடையிலான உறவு சமீபகாலமாக மோசமடைந்து வருகிறது. பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளுக்கு இடையே மோதல் நீடிக்கிறது. இதன் காரணமாக சீனாவில் கனடா நாட்டை சேர்ந்தவர்களும், கனடாவில் சீனர்களும் குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்படுவது தொடர் கதையாகி உள்ளது.
இந்த நிலையில் சீனாவில் கனடாவை சேர்ந்த பிரபல ராப் பாடகருக்கு கற்பழிப்பு வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிரிஸ் வூ என்கிற 32 வயதான ராப் பாடகர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் 17 வயது சிறுமியை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டார்.
தலைநகர் பீஜிங்கில் உள்ள சாயோயாங் மாவட்ட கோர்ட்டு இந்த வழக்கை விசாரித்து வந்தது. நேற்று இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தபோது, கிரிஸ் வூ மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி அவரை குற்றவாளியாக அறிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் கிரிஸ் வூக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த விவகாரம் குறித்து கனடா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
- இன்ஸ்பெக்டர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததால் டி.ஜி.பி. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தொடர்பு இல்லாத ஒருவரை கொலை குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் 3 ஆண்டுகளுக்கு எந்த வழக்கிலும் விசாரணை செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ் (வயது 42). இவர் மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் எரசக்கநாயக்கனூரைச் சேர்ந்த லாரன்ஸ் (வயது 31) என்பவர்தான் தனது குடும்ப பிரச்சினைக்கு காரணம் என பிரித்திவிராஜ் நினைத்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி லாரன்ஸ் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டு பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 1-ந் தேதி உயிரிழந்தார். இது குறித்து அப்போது உத்தமபாளையம் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராமகிருஷ்ணன் இந்த வழக்கில் பிரித்திவிராஜ் மற்றும் உத்தமபாளையத்தைச் சேர்ந்த வெள்ளைப்பாண்டியன் மகன் ராஜேஷ்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கில் கடந்த 8-ந் தேதி தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால் ராஜேஷ்குமார் நிரபராதி என்பதால் அவர் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சட்ட விரோதமாக குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ராஜேஷ்குமார் 29 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.
ராஜேஷ்குமார் சட்ட விரோதமாக சிறையில் இருந்ததற்கு சட்டப்படி இழப்பீடு பெற தகுதியுடையவர். விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணனிடம் உரிய இழப்பீடு பெற அவர் நீதிமன்றத்தை நாடலாம். இழப்பீட்டு தொகை இன்ஸ்பெக்டரின் சம்பளத்தில் பிடித்தம் செய்து வழங்க வேண்டும். அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் எந்த வழக்கிலும் விசாரணை அதிகாரியாக நியமிக்க கூடாது. ஏற்கனவே விசாரணை செய்து வரும் வழக்குகளில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததால் டி.ஜி.பி. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்பு இல்லாத ஒருவரை கொலை குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு பதிவு செய்துள்ளதால் அவர் 3 ஆண்டுகளுக்கு எந்த வழக்கிலும் விசாரணை செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தற்போது சிவகங்கையில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.