என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிணை பத்திர விதியை மீறியதால் ரவுடிக்கு 2 ஆண்டுகள் ஜெயில்- மேட்டூர் ஆர்.டி.ஓ. உத்தரவு
- கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் வெங்கடாசலத்தை, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்யும் முயற்சியில் பிரபு ஈடுபட்டார்.
- பிரபுவை கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் பிரபு (வயது 33).
மேட்டூர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது, பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட மாட்டேன் என மேட்டூர் ஆர்.டி.ஓ.விடம் 3 ஆண்டுகளுக்கு பிணை பத்திரம் எழுதி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் வெங்கடாசலத்தை, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் பிரபுவை கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
நன்னடத்தைக்கான பிணை பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டு, குற்றச் செயல்களில் ஈடுபட்டதால், விதிமீறல் தொடர்பாக, மேட்டூர் ஆர்.டி.ஓ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று மேட்டூர் ஆர்.டி.ஓ.தணிகாசலம், 2 ஆண்டுகள் 3 மாதத்திற்கு, பிரபுவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.