search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமதாஸ்"

    • பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
    • இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    சென்னை:

    பக்ரீத் பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்து வருமாறு:-

    நபிகள் நாயகம் காட்டிய வழியில் சமத்துவம்-சகோதரத்துவம்-அன்புநெறி ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள்.

    ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை 'ஈத்துவக்கும் இன்பம்' என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இசுலாமியப் பெருமக்களுக்கு வழிகாட்டுவதே இந்த பக்ரீத் பெருநாள்! நபிகள் நாயகத்தின் போதனைகள் அன்றாட வாழ்வில் மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறவழிக்கான அறிவுரைகளாகவே அமைந்திருக்கின்றன.

    நபிகள் நாயகத்தின் அத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்கின்ற இசுலாமிய மக்கள் அனைவரும் இந்த பக்ரீத் பெருநாளை இனிதே கொண்டாடி மகிழ எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:-

    இறை நம்பிக்கை உள்ள வர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

    ஓ.பன்னீர்செல்வம்

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்:- "ஒற்றுமையே உயர்வு தரும்" என்பதற்கேற்ப, அனைவர் வாழ்விலும் ஒன்றுமை உணர்வுமே லோங்கிட வேண்டும், வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்பதை தெரிவித்து எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை:-

    இஸ்லாமிய சமுதாயத்தினரின் உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    பக்ரித் திருநாள் சொல்லும் பாடத்தை புரிந்து கொண்டால், உலகில் எங்கும் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாது; மாறாக, எங்கும் அன்பு, சகோதரத்துவம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவை மட்டுமே தழைத்தோங்கும். அத்தகைய நிலையை ஏற்படுத்த கடுமையாக உழைப்போம்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, பெருந் தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், விஜய்வசந்த் எம்.பி., ஐ.ஜே.கே. தலைவர் ரவி பச்சமுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் முனிருத்தீன் ஷெரீப் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.
    • இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு முன்வரும்.

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    நமது புனித பூமியான விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 14&ஆம் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக தம்பி பனையபுரம் சி.அன்புமணி அறிவிக்கப்பட்டிருக்கிறார். உங்களில் ஒருவராக பல பத்தாண்டுகளாக களமாடி வரும் அவரைப் பற்றி பாட்டாளி சொந்தங்களாகிய உங்களுக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை.

    விக்கிரவாண்டி என்றதும் எனது நினைவில் மட்டுமின்றி, உனது நினைவிலும் தோன்றுவது தியாகமும், துரோகமும் தான். அவற்றில் தியாகத்தை முதலில் நினைவு கூர்கிறேன். தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் சமூகச் சூழலிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் கிடக்கும் வன்னியர்களுக்கு தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, நான் அறிவித்த 7 நாள் தொடர் சாலைமறியல் போராட்டம் 1987-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் அதிகாலை 12.01 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. அந்தப் போராட்டத்தை முறியடிக்க முடியாத காவல்துறை, சாலை மறியல் போராட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே என்னையும், என்னுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வன்னியர் சங்கத்தினரையும் கைது செய்து விட்டு, மனித வேட்டையை தொடங்கியது.

    பாப்பனப்பட்டு என்ற இடத்தில் ரெங்கநாதக் கவுண்டர், வீரப்பக் கவுண்டர் ஆகியோரை சுட்டுக் கொன்ற காவல்துறை அடுத்து சித்தணி என்ற இடத்தில் ஏழுமலை என்ற மாவீரனை தங்களின் குண்டுகளுக்கு இரையாக்கியது. அப்போதும் கொலைப்பசி அடங்காத காவல்துறை, பனையபுரம் கூட்டுச்சாலையில் போராட்டம் நடத்திய நமது சொந்தங்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தான் ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்கார வேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கயத்தூர் தண்டவராயன் ஆகிய 5 சொந்தங்களும் தங்களின் மார்புகளில் துப்பாக்கி குண்டுகளை வாங்கி உயிர்த்தியாகம் செய்தனர்.

    இவர்களில் சித்தணி ஏழுமலை தவிர மீதமுள்ள 7 மாவீரர்களும் சுட்டுவீழ்த்தப்பட்ட மண் விக்கிரவாண்டி தொகுதியில் தான் உள்ளது. அவர்களின் உயிர்த்தியாகம் ஈடு இணையற்றது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ஆம் நாள் அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்தி வருகிறோம் என்ற போதிலும், இந்த ஆண்டு அதற்கும் முன்னதாக ஜூலை 13-ஆம் நாள் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்று, அதற்கான சான்றிதழை சமூக நீதிக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவுச் சின்னங்களில் வைப்பது தான் அவர்களுக்கு செலுத்தும் சிறந்த மரியாதையாக இருக்கும் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள்.

    தியாகத்தைத் தொடர்ந்து துரோகத்திற்கு வருகிறேன். இதே விக்கிரவாண்டி தொகுதியில் ஐந்தாண்டுகளுக்கு முன் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுகவைச் சேர்ந்த இராதாமணி என்பவர் காலமானதைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 21-ஆம் நாள் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான பரப்புரை தொடங்கும் முன்பே அக்டோபர் 7-ஆம் நாள் அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதன்பின் 5 ஆண்டுகள் ஆகி விட்டன; திமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை.

    விக்கிரவாண்டி தேர்தல் பரப்புரையின் போது, தாங்களாக முன்வந்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அப்போது ஏற்பட்ட கருத்து விவாதத்தின் போது நான் விடுத்த சவாலில் வெற்றி பெறும் வகையில், 2020-ஆம் ஆண்டில் தொடங்கி பல கட்ட போராட்டங்களை நடத்தியும், அப்போதைய ஆளும் அதிமுக அரசுக்கு அழுத்தம் கொடுத்தும் வன்னிய மக்களுக்கு 10.50% இடஒதுக்கீட்டை வென்றெடுத்தோம். அதற்கான நடைமுறைகளில் நிகழ்ந்த சில குளறுபடிகள் காரணமாக அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து தொடரப் பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம்; அதற்கு எந்தத் தடையும் இல்லை என்று 2022 மார்ச் மாதத்தில் தீர்ப்பளித்தது.

    வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின், அதைக் கூட நிறைவேற்றியிருக்க வேண்டியதில்லை. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படியாவது உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கலாம். ஆனால், அதைக்கூட செய்ய மனமில்லாதவர் தான் மு.க.ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் ஒரே மாதத்தில் தரவுகளைத் திரட்டி இட ஒதுக்கீடு வழங்கியிருக்க முடியும். ஆனால், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 10 மாதங்கள் கழித்து தான் 2023 ஜனவரி 12-ஆம் நாள் வன்னியர் உள் இடஓதுக்கீடு பரிந்துரைக்குமாறு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணையிட்டார். அதன்பிறகு ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டன. இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடு 3 முறைக்கும் மேல் நீட்டிக்கப்பட்டு விட்டது. ஆனால், வன்னியர்களுக்கு இன்று வரை சமூகநீதி வழங்கப்படவில்லை.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நானே நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்; எட்டு முறை அவருக்கு கடிதம் எழுதினேன். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான குழுவினர் 3 முறை முதலமைச்சரை சந்தித்து இட ஒதுக்கீட்டு கோரிக்கையை வலியுறுத்தினர். பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் அடங்கிய குழுவினர் 50 முறைக்கும் கூடுதலாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து வன்னியர் இட ஒதுக்கீட்டை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனாலும் எந்த பயனும் இல்லை. காரணம்... வன்னியர்கள் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இருப்பது வன்மம் தானே தவிர, அவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் அல்ல.

    வன்னியர்களுக்கு திமுக துரோகம் செய்வது இது முதல் முறையல்ல. 1970-ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட சட்டநாதன் ஆணைய அறிக்கையில், வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 16% தனி இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அது செயல்படுத்தப்பட்டு இருந்தால் இப்போது வன்னியர்களுக்கு மட்டும் 15%க்கும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். ஆனால், அந்த பரிந்துரையை செயல்படுத்த மறுத்தது அப்போதைய முதலமைச்சர் கலைஞர். 1989-ஆம் ஆண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முந்தைய ஆளுனர் ஆட்சியில் 12.12.1988-ஆம் நாள் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால் கண்டிப்பாக வன்னியர்களுக்கு 16% தனி இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அவ்வாறு இட ஒதுக்கீடு கிடைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் 107 சாதிகளுடன் வன்னியர்களையும் சேர்த்து 20% இட ஒதுக்கீடு கொடுத்து அடித்துக் கொள்ள வைத்தார் கலைஞர்.

    தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மூன்று முறை வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், அந்த மூன்று வாய்ப்புகளையும் சீர்குலைத்தது திமுக அரசுகள் தான். தமிழ்நாட்டில் திமுக வளர்ந்ததற்கு காரணம் வன்னியர்கள் தான். ஆனால், வன்னியர்களால் ஆட்சிக்கு வந்த திமுக, அதற்கு காரணமான வன்னியர்களுக்கு செய்ததெல்லாம் துரோகம் தான். திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை வழங்கிய முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கே துரோகம் செய்த கட்சி தான் திமுக. ஏ.ஜி. என்று அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு கூட திமுகவுக்கு மனம் இல்லை. 2019-ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகியும் அதற்கான அறிவிப்பை வெளியிட்டதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. இட ஒதுக்கீட்டு ஈகியர்கள் 21 பேருக்கு நினைவு மண்டபம் கட்டும் அறிவிப்பும் செயல்படுத்தப்படவில்லை.

    திமுகவின் வன்னியர் துரோகம் இத்துடன் நின்று விடவில்லை. திமுகவிலும் வன்னியர்கள் திட்டமிட்டு ஒழிக்கப்பட்டனர். ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்திலும், பின்னர் விழுப்புரம் மாவட்டத்திலும் திமுகவில் கோலோச்சிய செஞ்சி இராமச்சந்திரன், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஜியின் புதல்வர் ஏ.ஜி.சம்பத் ஆகியோர் திமுகவில் தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அண்மையில் மறைந்த விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி அவர்களுக்கு பதிலாக விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக வன்னியர் ஒருவரை நியமிப்பதற்கு கூட திமுகவுக்கு மனமில்லை. வன்னியர்களுக்கு திமுக இழைத்து வரும் துரோகங்களை பட்டியலிட்டால் அதற்கு பக்கங்கள் போதாது.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் காரணமாக இருந்த இட ஒதுக்கீட்டுப் போராளிகளின் தியாகத்தை போற்றுவதற்கும், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைப்பதை 50 ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்துக் கொண்டிருக்கும் திமுகவின் துரோகத்திற்கு கணக்குத் தீர்ப்பதற்குமான களம் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆகும். எத்தனை, எத்தனை துரோகங்கள் செய்தாலும் வன்னியர்கள் நம்மை ஆதரித்துக் கொண்டே இருப்பார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் திமுக தலைமைக்கு இந்தத் தேர்தலில் நாம் பாடம் புகட்ட வேண்டும். அப்போது தான் நமது வலிமை அவர்களுக்குத் தெரியும். இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்தினால் தான் அடுத்தத் தேர்தலுக்கு முன்பாகவாவது வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு முன்வரும். அதனால் தான் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத் தேர்தலை போர் என்று கூறுகிறேன். இதை பாட்டாளி சொந்தங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    மொத்தத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நமக்கு மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கும் தோல்வி தான் வன்னிய மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்கும். இதை உணர்ந்து பாட்டாளி சொந்தங்களும், பிற சமுதாய மக்களுக்கும் விக்கிரவாண்டி தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    • குறைந்தது 16 மணி நேரமாவது தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
    • குறுவை சாகுபடி செய்யும் அனைத்து உழவர்களுக்கும் குறுவைத் தொகுப்பு திட்ட உதவிகளை நீட்டிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், அங்குள்ள உழவர்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்வதற்கு வசதியாக குறுவை சாகுபடி தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

    ஆனாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிலப்பரப்புக்கு மட்டும் தான் குறுவைத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டி ருப்பது நியாயமல்ல.

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.78.67 கோடி மதிப்பிலான குறுவைத் தொகுப்புத் திட்டத்தின்படி, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பளவில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டும் தான் விதை நெல் மானியமும், இயந்திர நடவு மானியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.

    இப்போது இயந்திர நடவு மானியமாக ஏக்கருக்கு ரூ.4000 மட்டுமே வழங்கப்படும் என்றும், மீதமுள்ள தொகையை உழவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு முழுக்க முழுக்க இலவசமாக ஜிப்சம் உரம் வழங்கப்பட்ட நிலையில், இப்போது ஜிப்சம் மானியமாக ஏக்கருக்கு ரூ.250 மட்டுமே வழங்கப்படும். அதுவும் 25000 ஏக்கருக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    குறைந்தது 16 மணி நேரமாவது தடையின்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், குறுவை சாகுபடி செய்யும் அனைத்து உழவர்களுக்கும் குறுவைத் தொகுப்பு திட்ட உதவிகளை நீட்டிக்க வேண்டும். இயந்திர நடவு மானியம், ஜிப்சம் உர மானியம் ஆகியவற்றை முழுமையாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வேட்பாளர் தேர்வு தொடர்பாக அன்புமணி, புகழேந்தி உள்பட மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.
    • யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பதற்கான அதிகாரத்தை ராமதாசிடம் நிர்வாக குழுவினர் வழங்கி உள்ளனர்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் என்று டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    கட்சியில் யாரை வேட்பாளராக அறிவிப்பது, கூட்டணி கட்சியான பா.ஜ.க. ஆதரவை பெறுவது போன்ற விவகாரங்களை கட்சியின் நிர்வாக குழுவினருடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசித்தார்.

    தைலாபுரம் தோட்டத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் தீரன், வடிவேல் ராவணன், பு.த.அருள்மொழி, தர்மபுரி எம்.எல்.ஏ.வெங்கடேஷ், திருக்கச்சூர் ஆறுமுகம், ஜெய பாஸ்கர், வக்கீல் பானு, டாக்டர் செந்தில் உள்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் 18 பேர் கலந்து கொண்டனர்.

    வேட்பாளர் தேர்வு தொடர்பாக அன்புமணி, புகழேந்தி உள்பட மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இவர்களில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பதற்கான அதிகாரத்தை டாக்டர் ராமதாசிடம் நிர்வாக குழுவினர் வழங்கி உள்ளனர்.

    • ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது பாதியில்தான் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது சாத்தியமாகும்.
    • மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக தண்ணீர் திறந்து விடப்படும் நாளான ஜூன் 12-ந் தேதியாகிய இன்று, நடப்பு குறுவை பாசனத்திற்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

    ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது பாதியில்தான் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது சாத்தியமாகும். அதுவரை குறுவை சாகுபடியை தாமதிக்க முடியாது. அவ்வாறு தாமதித்தால், குறுவை பயிர்கள் வடகிழக்குப் பருவமழையில் சிக்கி சேதமாகும் ஆபத்துள்ளது. அனைத்துக் காரணிகளையும் ஆய்வு செய்து பார்க்கும் போது நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்யப்படுவதை ஊக்குவிப்பது தான் சாத்தியமான, புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும்.

    எனவே, உழவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு காவிரி பாசன மாவட்ட உழவர்களுக்கு விதைகள், உரங்கள், நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளிட்டவற்றை மானியத்தில் வழங்கும் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். நிலத்தடி நீரைக் கொண்டு விவசாயம் செய்ய வேளாண்மைக்காக மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல மையங்களில் தேர்வுக் கூட கண்காணிப்பாளர்கள் காலை 9.15 மணிக்கு பிறகு தான் தேர்வுக் கூடங்களுக்கு வந்துள்ளனர்.
    • மிகவும் தாமதமாகத்தான் விடைத்தாள்களையும், வினாத்தாள்களையும் வழங்கியுள்ளனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நான்காம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய அளவில் குளறுபடிகள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    சரியாக 9 மணிக்கு விடைத்தாள் வழங்கப்பட வேண்டும். 9.15 மணிக்கு வினாத்தாள் தொகுப்பு வழங்கப்பட்டு, அதில் உள்ள பக்கங்கள் சரியாக உள்ளனவா? என்பதை ஆய்வு செய்த பிறகு, வினாத்தாள் எண்ணை விடைத்தாளில் குறிப்பிட வேண்டும். அதன் பிறகு சரியாக காலை 9.30 மணி முதல் தேர்வர்கள் விடைகளை எழுதத் தொடங்க வேண்டும்.

    ஆனால், பல மையங்களில் தேர்வுக் கூட கண்காணிப்பாளர்கள் காலை 9.15 மணிக்கு பிறகு தான் தேர்வுக் கூடங்களுக்கு வந்துள்ளனர். அதைத் தொடர்ந்து மிகவும் தாமதமாகத்தான் விடைத்தாள்களையும், வினாத்தாள்களையும் வழங்கியுள்ளனர். சில கூடங்களில் காலை 10 மணிக்குப் பிறகு தான் வினாத்தாள்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதனால், பல்லாயிரக்கணக்கான தேர்வர்களால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை.

    டி.என்.பி.எஸ்.சி நான்காம் தொகுதி தேர்வுகளில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும். தேர்வர்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் நோக்குடன் தேர்வை ரத்து செய்து விட்டு, விதி முறைகளை முழுமையாக பின்பற்றி மறு தேர்வு நடத்துவதற்கும் தேர் வாணையத்திற்கு அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
    • 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

    இந்தியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் தலைவரான நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

    குடியரசு தலைவர் மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இவரைத் தொடர்ந்து 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

    இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் மற்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.


    முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பதிவில், "தொடர்ச்சியாக மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ள திரு. நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். பிரதமராக அரசியலமைப்பை நிலைநிறுத்தி, நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பராமரித்து, கூட்டாட்சி தத்துவத்தை மேம்படுத்தி, மாநில உரிமைகளை மதிக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்க உண்மையான உணர்வுடன் செயல்படுவீர்கள் என நம்புகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.


    கமல்ஹாசன் தனது வாழ்த்து செய்தியில், "தங்களின் மிகப்பெரிய பலத்தை பயன்படுத்தும் நாடுகள், அதன் மக்கள் மிகப் பெரிய பெருமைகளை சந்திப்பார்கள். மதிப்புக்குரிய இந்திய பிரமதர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள். தேச நலன், ஒற்றுமை மற்றும் தேசிய கடமை உணர்வில், 18-வது மக்களவையில் தேர்வாகியிருக்கும் பிரதிநிதிகள் ஒன்றிணைன்து பணியாற்றி மேலும் வலிமையான, பிரகாசமான இந்தியாவை உறுவாக்கும் கனவை நிறைவேற்ற செயல்படட்டும். ஜெய் ஹிந்த்!," என்று குறிப்பிட்டுள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது வாழ்த்து செய்தியில், "இந்திய வரலாற்றில், ஜவகர்லால் நேருவுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி அவர்களுக்கும், அவருடன் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டுவதிலும், பல்வேறு துறைகளில் சாதனை படைப்பதிலும் புதிய உச்சங்களை தங்களின் அரசு தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    • அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான இரு நகரப் பேருந்துகள் அச்சு முறிந்து நடுவழியில் நின்றுள்ளன.
    • பழைய பேருந்துகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தஞ்சாவூரில் நேற்று ஒரே நாளில் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான இரு நகரப் பேருந்துகள் அச்சு முறிந்து நடுவழியில் நின்றுள்ளன. ஓட்டுனர்கள் சிறப்பாக செயல்பட்டதால் விபத்துகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அந்த அரசுப் பேருந்துகளை நம்பி பயணம் செய்த மக்கள், வேறு ஊர்திகளில் ஏறி தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைய வேண்டிய அவல நிலைக்கு ஆளானார்கள். அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதும், அதை சரி செய்ய தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததும் கண்டிக்கத்தக்கது.

    பழுதடைந்த பேருந்துகளை சரி செய்யவும், அதற்கு தேவையான உதிரி பாகங்களை வாங்கவும் போக்குவரத்துக் கழகங்களில் நிதி இல்லை. அதனால் கிட்டத்தட்ட 25 சதவீத பேருந்துகள் இயக்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. இன்னும் சில பணிமனைகளில் மேலாளர்களே தங்களின் சொந்த செலவில் உதிரி பாகங்களை வாங்கி பழுது நீக்க வேண்டியிருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டு கின்றன. 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். அதற்காகவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அப்பாவிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்து துன்புறுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது
    • மாநில, மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்து கொள்வர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞரும், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளருமான கணல் கதிரவனை, அவருக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத பொய் வழக்கு ஒன்றில் சூளகிரி காவல்துறையினர் சேர்த்திருக்கின்றனர். அப்பாவிகள் மீது பொய்வழக்கு பதிவு செய்து துன்புறுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

    வழக்கறிஞர் கணல் கதிரவன் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்தும், அந்த வழக்கில் இருந்து அவரை நீக்க வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் வரும் 11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் பா.ம.க செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தலைவருமான வழக்கறிஞர் க. பாலு பங்கேற்று கண்டன உரை நிகழ்த்துவார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பா.ம.க. மற்றும் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் இந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் கலந்து கொள்வர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் அடுத்த மாதம் முதல் மின்சார கட்டணத்தை உயர்த்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கும் ஆணையின்படி, வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

    மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்திற்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

    அதன்படி, நடப்பாண்டின் ஏப்ரல் மாத பணவீக்க அளவான 4.38 விழுக்காடு அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அதனால் யூனிட்டுக்கு 50 காசுகள் வரை மின்சாரக் கட்டணம் உயரும்.

    அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வறட்சி காரணமாக வேளாண்மை பாதிப்பு, மக்களின் வருவாய்க் குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின்சாரக் கட்டணத்தை மீண்டும் உயர்த்தினால் அதை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சாரக் கட்டணங்கள் 2.18% உயர்த்தப்பட்டது. அப்போது பொதுமக்களால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், மின் கட்டண உயர்வை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடப்பாண்டில் மட்டும் மின்சாரக் கட்டண உயர்வை மக்களால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்?

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இழப்பைக் குறைக்க மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது தீர்வல்ல. 2022-ஆம் ஆண்டில் ரூ.31,500 கோடிக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியும் மின்சார வாரியத்தின் நஷ்டம் குறைவதற்கு பதிலாக அதிகரித்துள்ளது.

    எனவே, கட்டண உயர்வால் பயன் இல்லை. மின்சார வாரியத்தில் நடக்கும் ஊழல்களைத் தான் தடுக்க வேண்டும். வீடுகள், தொழிற்சாலைகள் ஆகிய இரு தரப்புக்கும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடுமையான வெயிலோ, மழையோ இல்லாமல் இதமான சூழல் நிலவும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலோ, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலோ தேர்தலை நடத்த ஆணையம் திட்டமிட வேண்டும்.
    • வாக்கு எண்ணும் மையங்களில் போதிய மின்விசிறிகளை அமைக்கவும், அனைத்து முகவர்களும் அமருவதற்கு இருக்கைகளை அமைக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்தியாவில் மக்களவைத் தேர்தலில் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்த 25 பணியாளர்கள் உள்ளிட்ட 61 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மக்களவைத் தேர்தலில் முறையான திட்டமிடல்கள் இருந்திருந்தால் இந்த உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடியும். உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வெப்பவாத பாதிப்பால் உத்தரப்பிரதேசத்தில் நேற்று உயிரிழந்த 17 பேரில் 15 பேரும், பீகாரில் உயிரிழந்த 14 பேரில் 10 பேரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பான்மையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஆவர். ஒடிசா, அரியானாவிலும் கணிசமான எண்ணிக்கையில் வெப்பவாதத்தால் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வெப்ப அலைகள் வீசிய நேரத்தில் வெளியில் நடமாடியதால் நீரிழப்பு ஏற்பட்டு அவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.

    கடுமையான வெப்ப அலை வீசிய நேற்று தேர்தல் பரப்புரை இருந்திருந்தால் உயிரிழப்புகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்று வல்லுனர்கள் கூறியுள்ளனர். ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வெப்ப அலைகள் உருவாவதற்கு முன்னதாகவே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டதால், இத்தகைய உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வெப்ப அலையால் வெப்பவாத உயிரிழப்புகள் அதிகரித்ததற்கு மக்களவைத் தேர்தல்கள் இந்த நேரத்தில் நடத்தப்பட்டதும் ஒரு முதன்மைக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

    பொதுவாகவே தேர்தல்கள் எனப்படுபவை மக்களைச் சந்திப்பதையும், களத்தில் பணியாற்றுவதையும் அடிப்படையாகக் கொண்டவை. தாங்க முடியாத வெப்ப அலை வீசும் காலத்தில் தேர்தல்களை நடத்துவது அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும். எனவே, இனிவரும் காலங்களில் கோடைக்காலங்களில் தேர்தல்களை நடத்துவதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும். கடுமையான வெயிலோ, மழையோ இல்லாமல் இதமான சூழல் நிலவும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலோ, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலோ தேர்தலை நடத்த ஆணையம் திட்டமிட வேண்டும்.

    தமிழ்நாட்டிலும் கடுமையான வெப்பம் வாட்டி வரும் வேளையில் தான் வரும் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஆனால், வாக்கு எண்ணும் மையங்களில் போதிய எண்ணிக்கையில் மின்விசிறிகள் அமைக்கப்படவில்லை. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் பதிவான வாக்குகளை எண்ண குறைந்தபட்சம் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 7 மின்விசிறிகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் 30 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக வைத்துக் கொண்டால், பேரவைத் தொகுதிவாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 14 மேஜைகளில் 420 முகவர்களும், 30க்கும் மேற்பட்ட பணியாளர்களும் இருப்பார்கள். அவர்களுக்கு 7 மின்விசிறிகள் போதுமானவை அல்ல.

    வாக்கு எண்ணும் மையங்களில் காற்றோட்டமும், இதமான சூழலும் இல்லாவிட்டால் பணியாளர்களாலும், முகவர்களாலும் சரியாக பணி செய்ய முடியாது. இதைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணும் மையங்களில் போதிய மின்விசிறிகளை அமைக்கவும், அனைத்து முகவர்களும் அமருவதற்கு இருக்கைகளை அமைக்கவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோடை வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்களும், தொழிலாளர்களும் பகலில் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
    • நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ந்தேதி அரசு பள்ளிகளும், மாநிலப் பாடத்திட்ட பள்ளிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கொளுத்தி வரும் கோடை வெயிலால் மக்கள் கடுமையான அவதிக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது நியாயமற்றது. அரசின் இந்த முடிவு பள்ளி செல்லும் குழந்தைகளை கடுமையாக பாதிக்கும்.

    கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் கத்திரி வெயிலுக்கு முன்பாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிக அளவாக 113 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்தனர். கோடை மழையின் காரணமாக கத்திரி வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக வெப்பம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தலைநகர் சென்னையில் 108 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை திறப்பது சரியான முடிவு இல்லை.

    கோடை வெயில் கடுமையாக இருப்பதால் பொதுமக்களும், தொழிலாளர்களும் பகலில் வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் பள்ளிகளை திறந்தால் எந்த பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டார்கள். எனவே, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பை ஜூன் மாதத்தின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×