என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க. தொடர்பாக கோர்ட்டில் வழக்கு: ராமதாஸ் தரப்புக்கு பட்டை நாமம்தான் கிடைக்கும் - வக்கீல் பாலு
- கோர்ட்டில் எங்களுக்குத்தான் வெற்றி கிடைத்து இருக்கிறது என்று இனிப்பு கொடுத்து வெற்றியை கொண்டாடினார்கள்.
- இந்த வழக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனை வழக்குகள் போட்டாலும் சரி, அவர்களுக்கு கிடைப்பது பட்டை நாமம்தான்.
சென்னை:
பா.ம.க. டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், டாக்டர் அன்புமணி தலைமையிலும் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. டாக்டர் அன்புமணிதான் பா.ம.க. தலைவர் என்றும் கட்சி மற்றும் கட்சியின் சின்னம் அவரிடம்தான் இருக்கும் என்றும் ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் டாக்டர் ராமதாஸ் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்திய நிலையில் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு டெல்லி ஐகோர்ட்டில் ஒரு தீர்ப்பு வெளிவந்தது. இந்த நிலையில் இப்போது சென்னையில் உரிமையியல் கோர்ட்டில் கட்சி தனக்கே சொந்தம் என்று உரிமைக்கோரி டாக்டர் ராமதாஸ் நேற்று மீண்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் அன்புமணி தரப்பு கொள்கை பரப்பு செயலாளர் வக்கீல் பாலு கூறியதாவது:-
எந்த அரசியல் கட்சியிலும், எந்த கட்சி தலைவரும் செய்யாத வேடிக்கை மற்றும் வினோதங்களை டாக்டர் ராமதாஸ் தலைமையில் செய்து வருவதுதான் மிகப் பெரிய வேடிக்கை.
டாக்டர் அன்புமணிக்குத் தான் கட்சி சொந்தம், சின்னமும் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் இது நீதிமன்ற அவமதிப்பாகும். நான்தான் கட்சி தலைவர் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
கோர்ட்டில் எங்களுக்குத்தான் வெற்றி கிடைத்து இருக்கிறது என்று இனிப்பு கொடுத்து வெற்றியை கொண்டாடினார்கள். தங்களுக்கு வெற்றி கிடைத்தால் மீண்டும் மீண்டும் டாக்டர் ராமதாசை தலைவராக தேர்வு செய்வதாக ஏன் அறிவிக்க வேண்டும்? ஒரே வருடத்தில் 4 முறை அவரை தலைவராக தேர்வு செய்ததாக அறிவித்து உள்ளார்கள்.
எந்த கோர்ட்டிலும் அவர்கள் வெற்றி பெற முடியாது என்பது சட்டம் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். டெல்லி கோர்ட்டில் தங்களுக்குத்தான் வெற்றி கிடைத்தது என்று கொண்டாடியவர்கள்.
அப்படியென்றால் 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஏன் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். இது முழுக்க முழுக்க டாக்டர் ராமதாசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவரை சுற்றி இருக்கும் பூசாரிகளான ஜி.கே.மணி, அருள் போன்றவர்கள் நடத்தும் நாடகம். இந்த வழக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனை வழக்குகள் போட்டாலும் சரி, அவர்களுக்கு கிடைப்பது பட்டை நாமம்தான். வழக்குகளை சட்டப்படி நாங்கள் சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.






