search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேகதாது அணை"

    • கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா பிரதமர் மோடியை சந்தித்தார்.
    • அப்போது மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் கர்நாடக காங்கிரஸ் முதல் மந்திரி சித்தராமையாவும், துணை முதல் மந்திரி சிவகுமாரும் சந்தித்துப் பேசினர்.

    அப்போது பிரதமர் மோடியிடம், கர்நாடகா போன்ற மாநிலத்தில் நீர்ப்பாசன திறனை பலப்படுத்துவது அவசியம். பெரும்பாலான மாநிலங்கள் தங்களிடம் உள்ள நீர்வளத்தைப் பயன்படுத்தி, நீர்ப்பாசன வசதியை செய்து கொள்கின்றன.

    மத்திய ஜல்சக்தி அமைச்சகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை எங்களின் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க தாமதம் காட்டுகின்றன.

    குறிப்பாக, மேகதாது திட்டத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. இத்திட்டத்துக்கு விரைவில் அனுமதி அளிக்கும்படி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும். மஹதாயி, பத்ரா மேலணை போன்ற நீர்ப்பாசன திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கவேண்டும் என சித்தராமையா வலியுறுத்தினார்.

    இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்தார்.

    • மத்திய உள்துறை அமைச்சக, உத்தரவை ரத்து செய்யாமல் ரேசன் கடைகளை புதுவையில் திறக்க முடியாது.
    • புதுவை மின் விநியோகம் தனியார் மயத்துக்கு உள்துறை இணை செயலர் கையெழுத்திட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரியில் மூடியுள்ள ரேசனை திறந்து அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை வழங்கப்படும் என கூறிவிட்டு தற்போது அரிசி, சர்க்கரை மட்டும் தருவதாக முதலமைச்சர் ரங்கசாமி கூறுவது சரியல்ல. ரேசன்கடைகள் திறக்கப்படுமா.? இல்லையா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

    மத்திய உள்துறை அமைச்சக, உத்தரவை ரத்து செய்யாமல் ரேசன் கடைகளை புதுவையில் திறக்க முடியாது. அதற்கு பிரதமர், உள்துறை அமைச்சரை நேரில் முதலமைச்சர் சந்தித்து புதுவை மக்களுக்கு இலவச அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை புதுவை காங்கிரஸ் எதிர்க்கும்.

    புதுவை மின் விநியோகம் தனியார் மயத்துக்கு உள்துறை இணை செயலர் கையெழுத்திட்டுள்ளார். புதுவை அரசு மீது தொடர்ந்து ஊழல் புகார்களை, குற்றச்சாட்டுகளை கூறிவருகிறேன். இதற்காக என் மீது புதுவை முதலமைச்சர், உள்துறை அமைச்சர் வழக்கு தொடுத்தால் சந்திக்கத் தயார்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    முன்னதாக திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலையில் இருந்து ஹெலிகாப்டரில் வந்த கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரசார் புதுவை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

    • மேகதாது அணை திட்டத்தால் தமிழகம் ஆதாயமடையும் என்று கூறினார்.
    • திடக்கழிவு மேலாண்மை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

    பருவமழை காரணமாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கும் இந்த முறை சாதகமான சூழலை உருவாக்கி இருக்கியது என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை திட்டத்தால் தமிழகம் ஆதாயமடையும் என்று அவர் கூறினார்.

    தமிழகம் வந்துள்ள டிகே சிவக்குமார் சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

    இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிகே சிவக்குமார், "மேகதாது அணை தமிழ்நாட்டுக்காக தான். மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட அதிக பயன்பெறுவது தமிழ்நாடு தான். தற்போது போதுமான அளவு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மேகதாது அணை குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார்."

    "சென்னையில் உள்ள துப்புரவு திட்டம் என்னை வெகுவாக ஈர்த்துள்ளது. இதற்காக நான் அரசாங்கத்தையும் ஒட்டுமொத்த அதிகாரிகள் குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்தேன். அவர்கள் வித்தியாசமான அணுகுமுறையை எடுத்துள்ளனர். இந்த வருகை எங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல கற்றல் செயல்முறையாக இருந்தது," என்று தெரிவித்தார்.

    • தென்பெண்ணை ஆற்றில் மார்கண்டேயன் அணை கட்டுகிறார்கள்.
    • கனிமவளத்திற்கு மாநில அரசே வரி விதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கதக்கது.

    வேலூர்:

    தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்பாடி தாலுகா சேனூர் கிராமத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகமும் கர்நாடகாவும் மேகதாது அணை விவகாரத்தில் 38 முறை பேசியும் சுமுக தீர்வு ஏற்படவில்லை. இதனால் நடுவர் மன்றம் சென்றோம். நேரடியாக பட்டேலும், கருணாநிதியும், பிரதமராக இருந்த தேவேகவுடாவும் பேசியும் அப்போதே நடக்கவில்லை.

    பேச்சால் இதற்கு தீர்வில்லை என நாங்கள் அறிவித்த பின்னர் அப்போது பிரதமர் வி.பி.சிங் நடுவர் மன்றம் அமைத்தார். நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளோம்.

    மறுபடியும் சென்று பேசினால் என்ன ஆகும் என கேட்டால் எல்லா வழக்கிலும் ஒன்றை கர்நாடகா கூறுவார்கள். பேசி தீர்க்கிறோம் என்றால் அது பிரச்சனைக்கு தீர்வாகாது.

    தென்பெண்ணை ஆற்றில் மார்கண்டேயன் அணை கட்டுகிறார்கள். அதற்கும் நாம் நடுவர் மன்றம் கேட்டோம் ஆனால் அவர்கள் 2 ஆண்டுகளாகியும் இன்னும் பேசவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துகொள்ளலாம் என்பது தற்கொலைக்கு சமம்.

    கனிமவளத்திற்கு மாநில அரசே வரி விதிக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கதக்கது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார். அருந்ததியர் உள் இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நாங்கள், செல்லும் என கூறியதை தான் அறிவித்தோம்.

    வயநாடு விவகாரத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா என்ன சொன்னார் என்பதை பினராயி விஜயன் படிக்கிறார். 'வரலாம் வெள்ளம் என சொல்லி உள்ளனர், அதில் பிரளயம் ஏற்படும் என கூறவில்லை'. இதில் பினராயி விஜயன் சொல்வதுதான் உண்மை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒட்டுமொத்த தமிழக மக்களையும், விவசாயிகளையும் மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு.
    • காங்கிரஸ் கட்சியின் இந்த எதேச்சதிகாரப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மேகதாது அணை தொடர்பாக, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்தியும், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் துணை முதல்-அமைச்சர் சிவக்குமார், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தாங்கள் தயாராக இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

    சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியின் நலனுக்காக, தி.மு.க. அரசு, தமிழக விவசாயிகளின் நலன்களைத் தாரை வார்த்ததன் விளைவு, இன்று, மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தக் கூட தமிழக அரசை மதிக்காமல் செயல்படுகிறது. கர்நாடக காங்கிரஸ் கட்சி. கர்நாடக காங்கிரஸ் அரசு அவமானப்படுத்தியிருப்பது தி.மு.க. என்ற கட்சியை அல்ல. காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்படுவது தி.மு.க.விற்குப் புதிதும் அல்ல.

    ஆனால், ஒட்டுமொத்த தமிழக மக்களையும், விவசாயிகளையும் மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு. காங்கிரஸ் கட்சியின் இந்த எதேச்சதிகாரப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    தி.மு.க., உடனடியாக, தங்கள் கூட்டணியான காங்கிரஸ் கட்சித் தலைமையிடம், மேகதாது அணை கட்டும் கர்நாடக காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்துவதோடு, தமிழகத்தின் உரிமைகளையும், தமிழக விவசாயிகளின் நலனையும் தங்கள் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணிக்காக வழக்கம்போல காவு கொடுக்காமல் நடந்து கொள்ளும்படியும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நாங்கள் தயாராக இருக்கும் நிலையில், அவர்கள் விவாதிக்க தயாராக இல்லை.
    • மேகதாது எங்களுடைய உரிமை. எங்கள் மாநிலத்தில் நீர்த்தேக்கம் கட்டப்படும்.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுடன் விவாதிக்க கர்நாடக மாநில அரசு தயாராக இருக்கிறது. மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை. மத்திய அரசு தேவையான அனுமதி அளித்தால், கர்நாடக மாநிலம் திட்டத்தை அமல்படுத்த தயாராக உள்ளது.

    நாங்கள் தயாராக இருக்கும் நிலையில், அவர்கள் விவாதிக்க தயாராக இல்லை. மேகதாது எங்களுடைய உரிமை. எங்கள் மாநிலத்தில் நீர்த்தேக்கம் கட்டப்படும். தமிழ்நாடு தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்குகிறது.

    வழக்கமான மழைக்காலங்களில் கேஆர்எஸ் உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டும். அப்போது 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2022-23-ல் 665 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த வருடம் அதிகமான தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளது. ஏற்கனவே 83 டிஎம்சிக்கு அதிகமான நீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் குறைவான காலத்தில் எங்களால் அதிகமான தண்ணிர் திறந்து விட முடியாது.

    கர்நாடகா மாநிலத்தில் அணைகள் நிரம்பும்போது கூடுதல் நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. தமிழகத்தில் மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டும்போது கடலுக்கு நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கூடுதல் நீரை மேகதாதுவில் சேமித்து வைக்க முடியும்.

    இது நம்மை விட தமிழகத்திற்குத்தான் பலன் தரும். இருந்தும் அரசியலுக்காக பிரச்சனைகளை கிளப்பி விடுகிறார்கள். இத்திட்டத்திற்கு இதுவரை மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை.

    இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    • காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது.
    • மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி ஆற்றில் தண்ணீரை பங்கிட்டுக்கொள்வது தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது.

    இதற்கு நிரந்தர தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக இந்த ஆணையங்கள் அவ்வப்போது உத்தரவிட்டு வருகிறது.

    ஆனால் ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா கண்டுகொள்வதில்லை. உரிய நீர் திறந்து விடப்படாததால் இந்த ஆண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

    இதற்கிடையே காவிரி ஆற்றின் குறுக்கே ரூ,9 ஆயிரம் கோடியில் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது. இதற்கு ஒப்புதல் தருமாறு மத்திய அரசுக்கு கர்நாடகா அனுமதி கேட்டுள்ளது. மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே மேகதாது அணை தொடர்பாக தேனி மாவட்டம் பெரியகுளம் அழகாபுரியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர், மத்திய நீர்வள ஆணையத்திடம் சில தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு இருந்தார்.

    அதற்கு நீர்வள ஆணையம் பதில் அனுப்பியுள்ளது. அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பெங்களூருவில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மேகதாது அணை திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து முன்னாள் பிரதமர் தேவேகவுடாவிடம் இருந்து 15-3-2024 அன்று கடிதம் பெறப்பட்டது. அந்த கடிதத்துக்கு 3-5-2024 அன்று பதில் வழங்கப்பட்டது.

    காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எழுதிய கடிதத்தையும் நீர்வள ஆணையம் பெற்றது.

    ஆனால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் இன்று வரை எந்த ஒப்புதலும் வழங்கவில்லை.

    இவ்வாறு நீர்வள ஆணையம் பதில் தெரிவித்து உள்ளது.

    • மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    • காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பி உள்ளது

    தஞ்சாவூா்:

    மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு ஆதரவான ஆணையத்தின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். ராசி மணல் அணைக்கட்டுமானத்தை தொடங்கிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மதியம் தஞ்சை அருங்காட்சியகத்தில் காவிரி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர்.

    பின்னர் அங்கிருந்து பேரணியாக விவசாய சங்க நிர்வாகிகள் அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புறப்பட்டு மத்திய மற்றும் தமிழக, கர்நாடக அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பியவாறே தஞ்சை சாந்த பிள்ளைகேட் நீர்வளத்துறை காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு வந்தடைந்தனர்.

    இதையடுத்து மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போலீசார் பேரிக்கார்டு உள்ளிட்ட தடுப்புகள் கொண்டு தடுத்தனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது . மேலும் விவசாயிகள் நடுரோட்டில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.


    அப்போது பி. ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அணைக்கட்ட மத்திய அரசு அனுமதி கொடுக்க வாய்ப்பு உள்ளது.

    இதனை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மேகதாது அணைக்கட்டுவதை தடுத்து நிறுத்த கோரி எங்களது போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றார்.

    • தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது தி.மு.க.வின் வழக்கம்.
    • காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தி.மு.க. அரசு அடகு வைத்து விடக்கூடாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம்; அதன் மூலம் பெங்களூரு நகரத்திற்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை முதல்-அமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதைக் கண்டிக்கக் கூட முன்வராமல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது, காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

    மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையாவும், துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமாரும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக்கொள்ள முடியாது.

    கர்நாடக முதல்- அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பேச்சுகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதுகுறித்து எதுவுமே தெரியாதது தான் வியப்பாகவும், வேதனையாகவும் இருக்கிறது. உலகில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் அவர், தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

    எப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது தி.மு.க.வின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தி.மு.க. அரசு அடகு வைத்து விடக்கூடாது.

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதல்-அமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் அடுத்த மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது.
    • இதில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நீரை பெற, சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றையே ஒவ்வொரு முறையும் தமிழகம் நாட வேண்டியுள்ளது.

    இந்த அமைப்புகள் கூடும் கூட்டத்தில் தமிழகம் தனக்கு தேவையான, உரிமையுள்ள தண்ணீரை தர கர்நாடகத்தை வலியுறுத்துமாறு கேட்பதும், அதனை பரிசீலனை செய்து, அதன்பேரில் ஒரு முடிவு எடுத்து குறிப்பிட்ட அளவு நீரை திறக்க கர்நாடகத்தை அந்த அமைப்புகள் வலியுறுத்துவதும் வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் ஏப்ரல் 4-ம் தேதி கூட உள்ளது. இது 29-வது கூட்டம் ஆகும். இந்தக் கூட்டத்தில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றி பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பெங்களூரு குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வேண்டும் என கர்நாடக கோரிக்கை விடுத்து வருகிறது.

    இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகளுக்கு ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் அழைப்பு விடுத்துள்ளார்.

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
    • தமிழகத்திற்கு தண்ணீர் தந்ததால், இன்று நாங்கள் கண்ணீர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஓசூர்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட சலுவளி கட்சி நிறுவன தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், ஓசூர் அருகே கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி வளைவு பகுதியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தின் போது, மேகதாதுவில் அணை கட்டுவது எங்கள் உரிமை, அதை நிறைவேற்றியே தீருவோம் என்று கோஷங்களை முழக்கினர். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த வாட்டாள் நாகராஜ், நிருபர்களிடம் கூறியதாவது:

    மேகதாதுவில் அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம், அதனை தடுத்தே தீருவோம் என்று என்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். எத்தனை தடைகள், எதிர்ப்புகள் வந்தாலும், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம். மழைக்காலங்களில் உபரிநீர், கடலுக்கு சென்று வீணாவதை தடுக்கவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும் தான் மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது.


    அந்த அணைவிலிருந்து மேட்டூர் உள்ளிட்ட தமிழக அணைகள் மற்றும் தடுப்பணைகளுக்கும் நீர் பாய்ந்து சென்று, தமிழக மக்களுக்கும் பயன்படும். எனவே, இதில் அரசியல் செய்ய வேண்டாம். பெங்களூரு மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையிலும், மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் தந்ததால், இன்று நாங்கள் கண்ணீர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் குடிநீர் இல்லாத காரணத்தால் அங்கு வாழும் தமிழ் மக்களை, தமிழ்நாட்டுக்கு திருப்பி அழைத்துக் கொள்ள தயாரா? எனவே, மேகதாது விவகாரத்தில் , விளையாட வேண்டாம். ஓசூர், தாளவாடி, மற்றும் நீலகிரியை கர்நாடகத்துடன் சேர்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    மேகதாது போராட்டத்திற்கு ஆதரவாக கன்னட நடிகர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். மேலும், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, மேகதாது விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம், அங்கு, அணை கட்டுவதற்கு வாய்ப்பு தாருங்கள் என்று வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் அவர்கள் இருவரும் கர்நாடக மாநிலத்திற்கு வரக்கூடாது.

    மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தீவிரம டைந்தால், கர்நாடக மாநிலம் முழுவதும் தமிழ் சினி மாக்கள் திரையிட அனுமதிக்க மாட்டோம். எல்லைப் பகுதிகளை அடைப்போம் என எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு அவர் நிருபர்களிடம் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, வாட்டாள் நாகராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    • தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க., இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக அங்கம் வகிக்கிறது.
    • தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், மேகதாது திட்டத்தை தடுப்போம் என்று கூறியுள்ளதை கவனித்தேன்.

    பெங்களூரு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. நேற்று முன்தினம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் கர்நாடகத்தில் மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதை தடுப்போம் என்று உறுதியளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு கர்நாடக பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசையும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க.வையும் இலக்காக கொண்டு கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். தி.மு.க.வுக்கும், கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கர்நாடக பா.ஜனதா தலைவர் விஜயேந்திரா தனது எக்ஸ் தளத்தில் "பலவீனமான முதல்-மந்திரி நமது முதல்-மந்திரி, நமது காவிரி நமது உரிமை" என்ற பெயரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க., இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக அங்கம் வகிக்கிறது. அக்கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவதை தடுத்து நிறுத்துவோம் என்று தெரிவித்துள்ளது. இது, சித்தராமையா அரசு மு.க.ஸ்டாலினுடன் ரகசிய உறவு வைத்துள்ளதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க., பேரம் பேசி நமது காவிரி நீரை கூடுதலாக பெறும். மேகதாது திட்டத்தையும் தடுத்து நிறுத்தும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கை தொடர்பாக நீர்ப்பாசனத்துறையை தன்வசம் வைத்துள்ள கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில், மேகதாது திட்டத்தை தடுப்போம் என்று கூறியுள்ளதை கவனித்தேன். அவர்கள் (தமிழ்நாடு) தங்களின் மாநிலத்தில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். சுப்ரீம் கோர்ட்டில் நமக்கு நீதி கிடைக்கும். மேகதாது திட்டத்தால் கர்நாடகம் மட்டுமின்றி தமிழ்நாடும் பயன் அடையும். ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களை சேர்ந்த மக்கள் கர்நாடகத்தில் வசிக்கிறார்கள். அதனால் மேகதாது திட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு பேசும் நல்ல காலம் வரும். மேகதாது திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×