என் மலர்
வழிபாடு
- நமக்கு வாய்க்கும் எதுவும் இறைவனால் தரப்பட்டது.
- நமது மனதில் கர்வத்தை அமர வைப்பதும் தவறு.
`வாவ்.. சாரி நல்லா இருக்கே.. எங்கே வாங்கினே?'
`இது ஒரிஜினல் காஞ்சிபுரம் பட்டு. இங்கே கிடைக்கிறதெல்லாம் டூப்ளிகேட், அதனால நேரடியா போய் தறியிலயே நெய்து வாங்கினேன். என்ன விலை தான் ஐம்பதாயிரம் ரூபா. பரவாயில்லை, ஒர்த் தான்'. இப்படிப்பட்ட உரையாடலை நாம் அடிக்கடி கடந்திருப்போம். ஆண்களும் இதில் சளைத்தவர்கள் இல்லை என்றாலும், ஆடைகளைப் பொறுத்தவரை பெண்கள் தான் கில்லாடிகள்.
ஒரே வாக்கியத்தில் பல விஷயங்களை நாசூக்காய் பொருத்தி விடுவார்கள். `என் பட்டு காஞ்சிபுரம் பட்டு, உங்களை மாதிரி பக்கத்து கடைல வாங்கினதுல்ல.. நேரடியா அங்கேயே போய் வாங்கினது. அதுவும் உங்களை மாதிரி மெஷின்ல நெய்தது இல்ல, தறியில நெய்தது. இதோட விலை ஐம்பதாயிரம், நீங்க நெருங்க முடியாது. ஆனா எனக்கு இதெல்லாம் சாதாரணம்...' என இத்தனை விஷயங்களும் அந்த ஒற்றை வாக்கியத்தில் இருப்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
அதே போல அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது விருது ஏதேனும் பெற்ற ஆண்கள் அதை மிக லாவகமாக வெளிப்படுத்துவார்கள்.
`எத்தனையோ பேர் இருந்தாலும், தகுதியில்லாத என்னை தலைவராக்கினார் கடவுள்' என்றாவது சொல்லி, தான் தலைவராக்கப்பட்டோம் எனும் விஷயத்தைச் சொல்லிவிடுவார்கள். கூடவே 'நிறைய பேர் போட்டியில இருந்தாங்க, எனக்கு தான் கிடைச்சுது தெரியும்ல' எனும் விஷயத்தை பக்குவமாய்ப் பதிவு செய்வார்கள். இவையெல்லாம் தவறானவை. கடவுள் இவற்றையெல்லாம் எதிர்க்கிறார்.
"நீ அணிந்திருக்கும் ஆடைகுறித்துப் பெருமை பாராட்டாதே; நீ புகழ்பெறும் நாளில் உன்னையே உயர்த்திக்கொள்ளாதே. ஆண்டவரின் செயல்கள் வியப்புக்குரியவை; அவை மனிதரின் கண்ணுக்கு மறைவாய் உள்ளன" என்கிறது சீராக் 11:4.
நமது ஆடைகளைக் குறித்து பெருமை பாராட்டுவது தவறு என்றும், நமக்கு புகழ் கிடைக்கும் நாளில் நாம் நம்மை உயர்வாய் கருதிக்கொள்வது தவறு என்றும் விவிலியம் குறிப்பிடுகிறது. அதாவது, எந்தக் கணத்திலும் பணிவையும், தாழ்மையையும் விட்டுவிடக்கூடாது என்கிறது விவிலியம்.
இன்றைக்கு நாம் ஆடைக்காக அதிகம் செலவிடுகிறோம். அல்லது ஆடை மிகவும் வசீகரமாக, அழகாக, நேர்த்தியாக, பிராண்டட் ஆக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அதன் மூலம் பிறருடைய பார்வை நம் மீது விழ வேண்டும் என்றும். அதன் மூலம் நாம் பெருமை அடைய வேண்டும் எனவும் உள்ளூர விரும்புகிறோம்.
ஆடை என்பது நமது தேவைக்கான ஒரு விஷயமே தவிர, நமது பகட்டைப் பறைசாற்ற வேண்டிய விஷயம் அல்ல. காரணம், ஆடை இல்லாமல் இருக்கின்ற எத்தனையோ மனிதர்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் ஆடை கொடுக்க வேண்டுமே தவிர. நம்மிடம் உயர்வான ஆடை இருக்கிறது என்று சொல்லி அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கக் கூடாது.
`ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள்' என இயேசு சொல்கிறார். எப்போதெல்லாம் நாம் ஆடையில்லாமல் இருக்கும் ஒரு ஏழைக்கு ஆடை அளிக்கிறோமோ அப்போதெல்லாம் அவர் சொல்கிறார். எனவே நமது விருப்பம் பகட்டான ஆடைகளை நாம் அணிவதல்ல, தேவையானவர்களுக்கு ஆடைகளை அளிப்பதாய் இருக்க வேண்டும்.
எதைக்குறித்தும் பெருமை பாராட்டுவது இறைவனின் பார்வைக்கு பிரியம் இல்லாதது என்பதே உண்மை. லூசிபர் எனும் தலைமை தூதன் கடவுளை விடத் தன்னை உயர்த்திக் கொண்டதால் பாதாளத்திற்கு தள்ளப்பட்டான் என்கிறது இறையியல். நாம் நம்மை உயர்ந்தவர்களாகக் கருதிக்கொள்ளும் போதெல்லாம், கீழ் நோக்கித் தள்ளப்படுவோம்.
`தன்னடக்கத்தோடு கூடிய ஆடையை அணிந்து கொள்ளுங்கள்' என்கிறது திமோத்தேயு நூல். தன்னடக்கத்தோடு கூடிய ஆடை என்பது `பெருமை பாராட்டத் தேவையற்ற இயல்பான ஆடை' என பொருள் கொள்ளலாம்.
ஆடைகள், விவிலியம் எங்கும் ஒவ்வொரு செய்தியைச் சொல்லிக்கொண்டே செல்கின்றன. யோசேப்புவுக்கு யாக்கோபு அளித்த பல வர்ண ஆடை சகோதரர் மனதில் பொறாமையை விதைத்தது. அவரை அழிக்குமளவுக்கு அவர்களைத் தூண்டியது.
யோசேப்பு, பற்றிக்கொண்டிருந்த ஆடையை உதறி விட்டு ஓடியதால் சிற்றின்பப் பாவத்தில் விழாமல் தப்பித்தார். பாலை நிலத்தில் பல ஆண்டுகள் நடந்தாலும் கிழியாத ஆடைகளை கடவுள் இஸ்ரேல் மக்களுக்கு உடுத்தியது கடவுளின் கிருபையைப் பேசுகிறது.
ஆடைகள் அவசியமானவை, ஆனால் அவை அவலட்சணமாகவோ, அலங்காரமாகவோ இருப்பது தவறு. பிறர் மனதில் பொறாமையையோ, இயலாமையையோ, துயரத்தையோ வருவிப்பதும் தவறு, நமது மனதில் கர்வத்தை அமர வைப்பதும் தவறு.
ஆடையோ, வாழ்க்கையோ நமக்கு வாய்க்கும் எதுவும் இறைவனால் தரப்பட்டது. அந்த மகிமை முழுவதையும் கொடுத்தவருக்கே கொடுப்போம். அந்த மகிமையின் இழைகளை தற்பெருமைக் கிரீடங்களாகச் சூடிக்கொள்ள நினைப்பது பாவம் என்பதைப் புரிந்து கொள்வோம்.
- சமத்துவத்தையும் போதிக்கும் இனிய மார்க்கம் இஸ்லாம்.
- பெண்களுக்கு அதிகமான உரிமைகளை அன்றே வழங்கிய மார்க்கம்
அமைதியையும், சமத்துவத்தையும் போதிக்கும் இனிய மார்க்கம் இஸ்லாம். பெண்களுக்கு அதிகமான உரிமைகளை அன்றே வழங்கிய மார்க்கம் இது.
'பெண் குழந்தையை ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு, இறைவன் புறத்திலிருந்து வாழ்த்தும், நற்செய்தியும் உண்டு' என்று எடுத்தியம்பினார்கள் நபி (ஸல்) அவர்கள்.
இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களை உயிரோடு புதைக்கும் கொடுமையான பழக்கம் அரபு உலகில் இருந்தது. இதை திருக்குர்ஆன் (17-31) இவ்வாறு கண்டித்தது: "வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.
அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்".
இந்த இறைக்கட்டளையின் மூலமாகச் சிசுக்கொலைக்கு இஸ்லாம் முற்றுப்புள்ளி வைத்தது. மேலும் பெண் சிசுக்கொலை பெரும்பாவம் என்கிறது இஸ்லாம்.
'எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்களை அரவணைத்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி, கருணை காட்டி வருவாரோ அவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, அருகிலிருந்த நபித்தோழர் 'இரு பெண் மக்கள் இருந்தாலுமா?' என்று கேட்டார். அதற்கு நபிகளார் `ஆம், இரு பெண் மக்கள் இருந்தாலும்' என்று பதில் கூறினார்கள்.
'ஒரு பெண் தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றார்' என்ற செய்தியை அன்னை ஆயிஷா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் கூறியதும், `இவ்வாறு பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுகிறவருக்கு, அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக்காக்கும் திரையாக இருப்பார்கள்' எனக் கூறினார்கள்.
'திருக்குர்ஆன் விரிவுரை, வாரிசுரிமைச் சட்டங்கள், ஹலால்-ஹராம், அரபி இலக்கியம், மரபுக் கவிதைகள், வரலாறு போன்ற துறைகளில் ஆயிஷா (ரலி) அவர்கள் புலமை பெற்று திகழ்ந்தார்கள்.
பெண்களுக்குரிய ஆன்மிக, சமூக, பொருளாதார, கல்வி உரிமைகளோடு இவை அனைத்தையும் விட ஒரு பெண்ணின் கண்ணியத்திற்கும், மானத்திற்கும் பாதுகாப்பளிப்பது ஒரு நாகரிக சமூகத்தின் மிகப்பெரிய பொறுப்பு என்பதை ஆடை விஷயத்தில் இஸ்லாம் ஓர் அழகிய முன்மாதிரியை வழங்குகிறது. பெண் விடுதலை என்பது பெண், பெண்ணாக வாழ்வதுதான். பெண்கள் ஆண்களைப் போல உடையை அணிந்து கொண்டு வாழ்வது சுதந்திரமாகாது.
பெண்கள் முகம், மணிக்கட்டுகள், பாதம் ஆகியவற்றைத் தவிர மற்ற பாகங்களை மறைக்க வேண்டும்' என இஸ்லாம் கட்டளையிடுகிறது.
திருமண விஷயத்தில் பெண்களுக்கு இஸ்லாம் பல்வேறு உரிமைகளை வழங்கியிருக்கிறது. ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பெண்ணின் விருப்பமே முக்கியமானது. `நம்பிக்கை கொண்டோரே, பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை' (திருக்குர்ஆன் 4:19) என்று திருமறையில் இறைவன் கூறுகிறான். திருமணத்திற்குப் பெண்ணின் சம்மதம் அவசியம் என வலியுறுத்துகிறது இஸ்லாம்.
மணமகன் தான் மணக்கப்போகும் பெண்ணுக்கு அவன் சக்திக்கேற்ப மணக்கொடை (மஹர்) கொடுக்க வேண்டும். மணப்பெண் மஹர் எனும் மணக்கொடையைப் பெறுவதை இஸ்லாம் பெண்ணிற்கான உரிமையாக ஆக்கியுள்ளது. இது குறித்து திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது `நீங்கள் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹரை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்'. (திருக்குர்ஆன் 4:4)
'மனைவியுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருக்கக்கூடும்' (திருக்குர்ஆன் 4:19) என பெண்மையைப் போற்றுகிறது.
விவாகரத்துப் பெறும் உரிமையை இஸ்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கி உள்ளது. `அல்லாஹ்வின் வரம்புகளை அவர்கள் இருவரும் நிலைநிறுத்த மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் கணவனுக்கு ஏதேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவதில் அவர்கள் இருவரும் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்' என்ற திருக்குர்ஆன் (2:229) வசனத்தின் மூலம் கணவனை விவாகரத்துச் செய்யும் உரிமை மனைவிக்கு உண்டு என்பதை அறியலாம்.
'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளராவார். ஆண் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இஸ்லாம் இல்லத்தை அமைதி அளிக்கும் இடமாகக் கூறுகிறது. குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதிலும், குடும்ப உறவுகளைப் பேணுவதிலும் கணவனுக்கும் மனைவிக்கும் சம பங்கு உள்ளது என்கிறது இஸ்லாம்.
- தானம் என்பது ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்வது ஆகும்.
- தர்மம் என்பது எந்தப் பலனையும் எதிர்பாராமல் செய்வது ஆகும்.
உலகில் பிறந்தவர்கள் அனைவருக்கும் உள்ள முக்கியமான இரண்டு கடமைகள் தானம் மற்றும் தர்மம் ஆகியவையாகும். தானம் என்பது ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்வது ஆகும். தர்மம் என்பது எந்தப் பலனையும் எதிர்பாராமல் செய்வது ஆகும். அவரவருக்கு உரிய வகையில் இவற்றை கடைப்பிடித்தால், உலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீரவேண்டும் என்ற வாழ்க்கை நியதியில், மகிழ்ச்சி கொண்ட மனதுடன் இந்த உலகை விட்டுச் செல்ல இயலும்.
மரணம் எனும் விஷயத்தை கட்டுப்படுத்தும் தேவன் எமதர்மன் ஆவார். அவருக்கு `தர்மராஜன்' என்ற பெயரும், காலம் தவறாமல் உயிர்களைக் கவர்வதால் `காலன்' என்ற பெயரும் உண்டு. பேராசையில் மூழ்கி பொன், பொருள், புகழ் ஆகியவற்றை நினைத்தபடியே வாழ்பவர்கள்தான் மரணத்துக்கு பயப்படுவார்கள். சத்தியத்தைக் கடைப்பிடித்து நீதி, நேர்மையுடன் வாழ்பவர்களுக்கு மரண பயம் இருக்காது என்பதை ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அஷ்டதிக்கு பாலகர்களில் தெற்கு திசையின் அதிபதியான எமதர்மன், மகாவிஷ்ணுவின் பாரம்பரியத்தில் வந்தவர். அதாவது, மகாவிஷ்ணுவிடம் இருந்து தோன்றிய பிரம்மா, அவரிடமிருந்து தோன்றியவர்கள் மரீசி, காஸ்யபர், சூரியன் ஆகியோர் சூரியனிடம் இருந்து தோன்றியவரே எமதர்மன் ஆவார்.
விஸ்வகர்மாவின் மகள் சம்ப்ஜனாவை சூரியன் மணம் புரிந்ததில், அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு மகன்கள் மற்றும் யமுனா என்ற மகளும் பிறந்தனர். எமன் நீதி, நேர்மை தவறாத சத்தியத்தின் பிரதிநிதி. தனது சித்தி சாயாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சூரியனின் ஆணைப்படி சிவனைக் குறித்து கடும் தவம் புரிந்து, சிவபெருமானிடமிருந்து தென் திசை அதிபதி என்ற பட்டத்துடன், எமலோகத்துக்கும் அதிபதி ஆனார்.
சிவபெருமான், தனது ரிஷபத்துக்கு சமமான தோற்றம்கொண்ட, கரிய எருமை மாடு ஒன்றை உருவாக்கி, விஷ்ணுவின் அம்சமான எமனுக்கு வாகனமாக அருளியதுடன், ஜீவன்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப நீதி வழங்கும் அதிகாரத்தையும் அளித்தார்.
இரண்டு கூரிய சிகரங்களுக்கு நடுவில் உள்ள பாதாளத்தில் ஓடும் அக்னி ஆற்றுக்கு மேலே, சிகரங்களை இணைத்துக் கட்டிய ஒரு தலைமுடியில் கட்டித் தொங்கவிடப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்து எமதர்மன் நீதி வழங்குவதாக ஐதீகம். அவரது நீதி சிறிது பிசகினாலும், சிம்மாசனத்துடன் எமன், அக்னி ஆற்றில் விழ நேரிடும் என்ற நிலையில், சரியான நியாயம் வழங்குவதாகவும் புராணக்கதை வழக்குகள் உள்ளன. தேவர்களுள் மிகவும் மதிநுட்பம் வாய்ந்தவராக எமதர்மன் குறிப்பிடப்படுகிறார்.
- 13-ந்தேதி அனைத்து பெருமாள் கோவில்களிலும் பகல்பத்து உற்சவம் ஆரம்பம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், காளிங்க நர்த்தன காட்சி
12-ந்தேதி (செவ்வாய்)
* கிருஷ்ண அங்காரக சதுர்த்தசி.
* அமாவாசை.
* திருவரங்கம் நம்பெருமாள் திருநெடுந்தாண்டவம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* சமநோக்கு நாள்.
13-ந்தேதி (புதன்)
* அனைத்து பெருமாள் கோவில்களிலும் பகல்பத்து உற்சவம் ஆரம்பம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.
* சமநோக்கு நாள்.
14-ந்தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் ராஜாங்க சேவை.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
15-ந்தேதி (வெள்ளி)
* வள்ளியூர் சுப்பிரமணியர் கோவிலில் தெப்ப உற்சவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், காளிங்க நர்த்தன காட்சி அருளல்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.
16-ந்தேதி (சனி)
* சதுர்த்தி விரதம்.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், ஆண்டாள் திருக்கோலமாக காட்சியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், கோதண்டராமர் திருக்கோலக் காட்சி.
* சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
17-ந்தேதி (ஞாயிறு)
* தனுர் மாத பூஜை ஆரம்பம்.
* அனைத்து ஆலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்க விழா.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், காளிங்க நர்த்தன காட்சி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
18-ந்தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* பிள்ளையார் நோன்பு.
* ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், பரமபதநாதன் திருக்கோலம்.
* மேல்நோக்கு நாள்.
- ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று தொடங்குகிறது.
- திருவிழாவில் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
ஸ்ரீரங்கம்:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இந்த விழா ஜனவரி 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது. 22-ந்தேதி மோகினி அலங்காரமும், 23-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது. 29-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 30-ந்தேதி திருமங்கைமன்னன்வேடுபறி நிகழ்ச்சியும், ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும், 2-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவடைகிறது. இதையொட்டி கோவிலில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் லட்ச கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பிற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் உள்ள ரெங்கவிலாஸ் மண்டபம் அருகில் புறகாவல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.
புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி நிருபர்களிடம் கூறியதாவது:-
வைகுண்ட ஏகாதாசி திருவிழாவில் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிந்தார்கள். இந்த ஆண்டு சுமார் 2½ லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் 2,500 பேர் பாதுகாப்பு பணிக்கு பணியமர்த்தப்பட உள்ளார்கள். பகல்பத்து மற்றும் ராப்பத்தின் போது திருச்சி மாநகர போலீசார் 380 பேர் 2 ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
இந்த வருடம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நான்கு சக்கர வாகனங்களை சித்திரைவீதி மற்றும் உத்திரவீதியில் நிறுத்த அனுமதி இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கோவிலின் உட்புறத்தில் முக்கிய இடங்களில் 120 கண்காணிப்பு கேமராக்கள்,
கோவிலை சுற்றி வெளிப்புறத்தில் 102 கண்காணிப்பு கேமராக்கள், வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் 14 கண்காணிப்பு கேமராக்கள் என மொத்தம் 236 கேமராக்கள் பொருத்தப்பட்டு அதை புறக்காவல் நிலையத்தில் இருந்தே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை 13-ந்தேதியிலிருந்து 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாம்படி.
- பலனை எதிர்ப்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் மூன்றாவது படி.
முதல்படி:
விஷாத யோகம், பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பை விஷாத யோகம். இதுவே முதல்படி.
இரண்டாம்படி:
சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாம்படி.
மூன்றாம்படி:
கர்மயோகம், உபதேசம் பெற்றால் போதுமா? மனம்பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்ப்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.
நான்காம் படி:
ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம்படி.
ஐந்தாம்படி:
சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.
ஆறாம்படி:
தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.
ஏழாம்படி:
ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்... எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவதுபடி.
எட்டாம்படி:
அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப் பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.
ஒன்பதாம் படி:
ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம், கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத் தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மீகம் என்று உணர்வது ஒன்பதாம்படி.
பத்தாம்படி:
விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தை கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம்படி.
பதினொன்றாம்படி:
விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வது பதினொன்றாம் படி.
பன்னிரண்டாம்படி:
பக்தி யோகம். இன்பம்-துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை-பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம்படி.
பதின்மூன்றாம்படி:
ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம்படி.
பதினான்காம்படி:
குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.
பதினைந்தாம் படி:
தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.
பதினாறாம் படி:
சம்பத் விபாக யோகம், இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.
பதினேழாம் படி:
சிரித்தாத்ரய விபாக யோகம், சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாம் படி.
பதினெட்டாம் படி:
மோட்ச சன்யாச யோகம், யாரிடமும் எந்த உயிர்களிடமும் பைதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி.
சத்தியம் நிறைந்த இந்த பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பைரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.
- முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-26 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சதுர்த்தசி காலை 6.22 மணி வரை பிறகு அமாவாசை நாளை மறுநாள்
காலை 5.49 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: அனுஷம் நண்பகல் 12.29 மணி வரை பிறகு கேட்டை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சர்வ அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு பூஜை செய்ய நன்று. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் திருநெடுந்தாண்டகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சன சேவை. குரங்கனி முத்து மாலையம்மன் புறப்பாடு. திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாசம்
ரிஷபம்-பயணம்
மிதுனம்-நேர்மை
கடகம்-இன்பம்
சிம்மம்-பாராட்டு
கன்னி-களிப்பு
துலாம்- லாபம்
விருச்சிகம்-ஆக்கம்
தனுசு- தனம்
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-பக்தி
மீனம்-ஓய்வு
- வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது.
- திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை தொடங்குகிறது.
திருச்சி:
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராபத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி நம்பெருமாள் அன்று காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைவார்.
காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். இரவு 7 மணிக்கு அர்ஜூன மண்ட பத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
பகல் பத்தின் முதல் நாள் முதல் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளிப்பார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். இதேபோல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான வருகிற 22-ந் தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
23-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசலில் எழுந்தருளுவார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 29-ந் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 30-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. சொர்க்கவாசல் திறப்பு தினமான 23-ந் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது.
ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். ராப்பத்து ஏழாம் திருநாளான 29-ந் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 30-ந் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும், 2-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவுபெறும்.
- குபேரன் பூமிக்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்கி கிரிவலம் வருகிறார்.
- குபேர கிரிவலம் செல்ல மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உகந்தநேரம்
திருவண்ணாமலை:
கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளன்று குபேரன் பூமிக்கு வந்து அருணாசலேஸ்வரரை வணங்கி கிரிவலம் வருகிறார் என்பது ஐதீகம்.
அதனால் அன்றைய தினத்தில் கிரிவலப் பாதையில் உள்ள 7-வது லிங்கமாக உள்ள குபேர லிங்கத்தை தரிசனம் செய்து கிரிவலம் சென்றால் செல்வ செழிப்புடன் வாழலாம் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
அதன்படி கார்த்திகை மாதம் சிவராத்திரி நாளான இன்று குபேர கிரிவலம் செல்ல மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உகந்தநேரம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று அதிகாலையில் இருந்தே உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து குபேர லிங்க கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் சென்றனர். மாலை 6 மணியளவில் குபேர லிங்க கோவிலில் மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜை நடக்கிறது.
குபேர கிரிவலத்தை யொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் விடுமுறை நாளான நேற்று அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர்.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வந்தனர். அவர்களுடன் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் வந்த பக்தர்கள் ஒன்று திரண்டனர். பொது தரிசன பாதையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- கடந்த மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.
- தினசரி 1 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
சபரிமலை:
மண்டலபூஜை சீசனையொட்டி, கடந்த மாதம் 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு சபரிமலையில் குவிந்து வருகிறார்கள். ஆன்லைன் முன்பதிவு தவிர நிலக்கல்லில் உடனடி முன்பதிவும் நடைபெற்று வருவதால் சபரிமலையில் தினசரி 1 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
ஆனால், 18-ம் படி வழியாக நிமிடத்திற்கு அதிகபட்சமாக 70 பக்தர்கள் மட்டுமே செல்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு 4,200 பக்தர்கள் மட்டுமே சன்னிதானத்தில் தரிசனம் செய்ய முடியும். தினசரி 17 மணிநேரம் வரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பதால் சபரிமலையில் குவிந்து வரும் பக்தர்கள் அனைவரும் குறிப்பிட்ட நேரத்தில் சாமியை தரிசனம் செய்ய முடிவதில்லை. இதனால் 18 மணி நேரம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
அதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரித்து 18 மணி நேரமாக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. அதன்படி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 4 மணிக்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கு அதாவது ஒரு மணி நேரம் முன்னதாக நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு நடை சாத்தப்படும்.
இந்த நிலையில் பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் ஐ.ஜி. ஸ்பர்ஜன் குமார் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் சபரிமலையில் முகாமிட்டு உள்ளனர்.
இந்த நிலையில், 'சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வசதியாக, தரிசனம் முடிந்த பக்தர்கள் சன்னிதானத்தில் தங்காமல் உடனுக்குடன் மலையிறங்க வேண்டும்' என்று ஐ.ஜி ஸ்பர்ஜன் குமார் பக்தர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் சீசனையொட்டி பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால், நிலக்கல்லில் நடந்து வரும் உடனடி தரிசன முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேவஸ்தானத்தையும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- சுவாதி நட்சத்திரத்தையொட்டி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம்.
- கார்த்திகை மாத கடைசி ஞாயிறு பேடிஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்
திருமலை:
திருமலை-திருப்பதி முதலாவது மலைப்பாதையில் 7-வது மைல் அருகில் அலிபிரி நடைபாதை ஓரம் லட்சுமிநரசிம்மர் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தையொட்டி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.
அதன்படி நேற்று காலை சுவாதி நட்சத்திரத்தில் மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பன்னீர் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அதில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.
அதேபோல் திருமலையில் ஏழுமலையான் கோவில் எதிரே உள்ள பேடிஆஞ்சநேயர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மூலவர் பேடிஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.
அதன்படி கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று பேடி ஆஞ்சநேயர் கோவிலில் மூலமூர்த்திக்கு காலை மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன் ஆகிய சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபராதனை காண்பிக்கப்பட்டது.
அதில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி, பறக்கும் படை அதிகாரி நந்தகிஷோர், பேஷ்கார் ஸ்ரீஹரி மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- திங்கள்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமான தினமாகும்.
- சிவபெருமான் மனம் குளிர்ந்து நமக்கருள்வான் என்பது நம்பிக்கை.
தீப வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் பூஜித்து வணங்குகின்ற மாதம் கார்த்திகை மாதம். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கார்த்திகை மாதத்தில், சோமவாரம் எனப்படும் திங்கள்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமான தினமாகும்.
திங்கள் என்பது சந்திரனைக் குறிக்கும். சந்திர பகவான் "மனோகாரகர்' ஆவார். மனதில் எழும் எண்ணங்களுக்கு இவரே காரண கர்த்தாவாக இருக்கிறார்.
சந்திரனைப் பிறையென சூடிக் கொண்டிருக்கும் ஈசனுக்கு பல சிவாலயங்களில், கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.
சந்திரனுக்கு "சோமன்' என்ற பெயரும் உண்டு. அதனால் தான் சிவனுக்கு சோமநாதன், சோமேஸ்வரர், சந்திர சூடேஸ்வரர், சந்திர சேகரர் என்றெல்லாம் திருநாமங்கள் அமைந்துள்ளன.
எட்டுவகை சங்குகள்:
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது வெளிவந்த பதினாறு வகையான தெய்வீகப் பொருள்களில் வலம்புரி சங்கும் ஒன்று என்கிறது புராணம். இந்த சங்கே தெய்வ ஆராதனைகளில் ஒலி எழுப்பப் பயன்படுத்தப்படுகிறது. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என எட்டுவகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாகவும்,10 ஒவ்வொரு தெய்வமும் அவைகளுக்குரிய சங்குகளைக் கொண்டிருப்பதாகவும் வைகானஸ ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலான சங்குகளில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். இதனை இடம்புரி சங்கு என்று கூறுவர். அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக இருக்கும். அத்தகைய சங்குகளை வலம்புரி சங்கு என்பார்கள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி சங்கே பெருமை பெற்றது. அந்த சங்கினால் பூஜைகள் செய்வது அளவற்ற பலன்களைத் தரவல்லது.
மகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் உள்ளது வலம்புரி சங்கு. பஞ்ச பாண்டவர்களில் தருமர் "அனந்த விஜயம்' எனும் ஒளிபொருந்திய சங்கையும், அர்ச்சுனன் "தேவதத்தம்' எனும் தேவசங்கையும், பீமன் "மகாசங்கம்' எனும் பெரிய சங்கையும், நகுலன் "சுகோஷம்' எனும் அதிர்ஷ்ட சங்கையும், சகாதேவன் "மணி புஷ்பகம்' எனும் சூட்சும சங்கையும் தாங்கி இருந்தார்கள் என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்கு, நுண் கிருமிகளை அழிக்கும் மருத்துவ குணம் கொண்டது. வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுவதோடு பல விதமான நோய்களும் குணமாகிறது. மேலும் தீய சக்திகளைத் தடுக்கும் குணம் உள்ளது. இதனால் தான் இன்றும் சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். குழந்தைகளுக்கு பால் ஊட்டுவதற்கும் சங்கைப் பயன்படுத்தி வந்தனர்.
சங்கினை காதில் வைத்துக் கொண்டால் ஓம்கார ஒலியைக் கேட்கலாம். ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்த தேவதா மூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்கிறோமோ, அந்த தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரண பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையில்தான் திருக்கோயில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.
சங்காபிஷேகம் செய்வதில் பல நியமங்கள் இருக்கின்றன. 54, 60, 108 சங்குகள், 1,008 சங்குகள் என்ற எண்ணிக்கைகளில் அபிஷேகம் செய்வார்கள். சங்குகளில் புனித நீரால் அபிஷேகம் செய்ய, சிவபெருமான் மனம் குளிர்ந்து நமக்கருள்வான் என்பது நம்பிக்கை.






