என் மலர்tooltip icon

    வழிபாடு

    இஸ்லாத்தில் பெண்களுக்கான உரிமைகள்
    X

    இஸ்லாத்தில் பெண்களுக்கான உரிமைகள்

    • சமத்துவத்தையும் போதிக்கும் இனிய மார்க்கம் இஸ்லாம்.
    • பெண்களுக்கு அதிகமான உரிமைகளை அன்றே வழங்கிய மார்க்கம்

    அமைதியையும், சமத்துவத்தையும் போதிக்கும் இனிய மார்க்கம் இஸ்லாம். பெண்களுக்கு அதிகமான உரிமைகளை அன்றே வழங்கிய மார்க்கம் இது.

    'பெண் குழந்தையை ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு, இறைவன் புறத்திலிருந்து வாழ்த்தும், நற்செய்தியும் உண்டு' என்று எடுத்தியம்பினார்கள் நபி (ஸல்) அவர்கள்.

    இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களை உயிரோடு புதைக்கும் கொடுமையான பழக்கம் அரபு உலகில் இருந்தது. இதை திருக்குர்ஆன் (17-31) இவ்வாறு கண்டித்தது: "வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்.

    அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்".

    இந்த இறைக்கட்டளையின் மூலமாகச் சிசுக்கொலைக்கு இஸ்லாம் முற்றுப்புள்ளி வைத்தது. மேலும் பெண் சிசுக்கொலை பெரும்பாவம் என்கிறது இஸ்லாம்.

    'எவருக்கு மூன்று பெண் மக்கள் இருந்து அவர்களை அரவணைத்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றி, கருணை காட்டி வருவாரோ அவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, அருகிலிருந்த நபித்தோழர் 'இரு பெண் மக்கள் இருந்தாலுமா?' என்று கேட்டார். அதற்கு நபிகளார் `ஆம், இரு பெண் மக்கள் இருந்தாலும்' என்று பதில் கூறினார்கள்.

    'ஒரு பெண் தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றார்' என்ற செய்தியை அன்னை ஆயிஷா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் கூறியதும், `இவ்வாறு பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுகிறவருக்கு, அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக்காக்கும் திரையாக இருப்பார்கள்' எனக் கூறினார்கள்.

    'திருக்குர்ஆன் விரிவுரை, வாரிசுரிமைச் சட்டங்கள், ஹலால்-ஹராம், அரபி இலக்கியம், மரபுக் கவிதைகள், வரலாறு போன்ற துறைகளில் ஆயிஷா (ரலி) அவர்கள் புலமை பெற்று திகழ்ந்தார்கள்.

    பெண்களுக்குரிய ஆன்மிக, சமூக, பொருளாதார, கல்வி உரிமைகளோடு இவை அனைத்தையும் விட ஒரு பெண்ணின் கண்ணியத்திற்கும், மானத்திற்கும் பாதுகாப்பளிப்பது ஒரு நாகரிக சமூகத்தின் மிகப்பெரிய பொறுப்பு என்பதை ஆடை விஷயத்தில் இஸ்லாம் ஓர் அழகிய முன்மாதிரியை வழங்குகிறது. பெண் விடுதலை என்பது பெண், பெண்ணாக வாழ்வதுதான். பெண்கள் ஆண்களைப் போல உடையை அணிந்து கொண்டு வாழ்வது சுதந்திரமாகாது.

    பெண்கள் முகம், மணிக்கட்டுகள், பாதம் ஆகியவற்றைத் தவிர மற்ற பாகங்களை மறைக்க வேண்டும்' என இஸ்லாம் கட்டளையிடுகிறது.

    திருமண விஷயத்தில் பெண்களுக்கு இஸ்லாம் பல்வேறு உரிமைகளை வழங்கியிருக்கிறது. ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பெண்ணின் விருப்பமே முக்கியமானது. `நம்பிக்கை கொண்டோரே, பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை' (திருக்குர்ஆன் 4:19) என்று திருமறையில் இறைவன் கூறுகிறான். திருமணத்திற்குப் பெண்ணின் சம்மதம் அவசியம் என வலியுறுத்துகிறது இஸ்லாம்.

    மணமகன் தான் மணக்கப்போகும் பெண்ணுக்கு அவன் சக்திக்கேற்ப மணக்கொடை (மஹர்) கொடுக்க வேண்டும். மணப்பெண் மஹர் எனும் மணக்கொடையைப் பெறுவதை இஸ்லாம் பெண்ணிற்கான உரிமையாக ஆக்கியுள்ளது. இது குறித்து திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது `நீங்கள் திருமணம் செய்து கொண்ட பெண்களுக்கு அவர்களுடைய மஹரை மகிழ்வோடு கொடுத்து விடுங்கள்'. (திருக்குர்ஆன் 4:4)

    'மனைவியுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைக்கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருக்கக்கூடும்' (திருக்குர்ஆன் 4:19) என பெண்மையைப் போற்றுகிறது.

    விவாகரத்துப் பெறும் உரிமையை இஸ்லாம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கி உள்ளது. `அல்லாஹ்வின் வரம்புகளை அவர்கள் இருவரும் நிலைநிறுத்த மாட்டார்கள் என்று நீங்கள் அஞ்சினால் அவள் கணவனுக்கு ஏதேனும் ஈடாகக் கொடுத்து பிரிந்து விடுவதில் அவர்கள் இருவரும் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும்' என்ற திருக்குர்ஆன் (2:229) வசனத்தின் மூலம் கணவனை விவாகரத்துச் செய்யும் உரிமை மனைவிக்கு உண்டு என்பதை அறியலாம்.

    'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளராவார். ஆண் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    இஸ்லாம் இல்லத்தை அமைதி அளிக்கும் இடமாகக் கூறுகிறது. குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதிலும், குடும்ப உறவுகளைப் பேணுவதிலும் கணவனுக்கும் மனைவிக்கும் சம பங்கு உள்ளது என்கிறது இஸ்லாம்.

    Next Story
    ×