என் மலர்
வழிபாடு
- ரிஷிகள் வந்த வனம் என்பது மருவி 'ரிஷிவந்தியம்' என அழைக்கப்படுகிறது.
- சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரீஸ்வரராக ஒளி வடிவில் சிவன் காட்சி தருகிறார்.
பல ரிஷிகள் இங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டதால் `ரிஷிகள் வந்த வனம்' என்பது மருவி ரிஷிவந்தியம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேதா அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருமலை நாயக்கரால் புதுப்பித்து கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு வரலாற்று சான்றாக இந்த கோவிலில் திருமலைநாயக்கரின் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது.
சிவன் பார்வதி திருமணம் கயிலாயத்தில் நடந்தது. அப்போது தென் திசை உயர்ந்து வடதிசை தாழ்ந்தது. இதை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை செல்ல சிவபெருமான் உத்தரவிட்டார். சிவனின் கட்டளையை ஏற்ற அகத்தியர் பல தலங்களில் தங்கி சிவபூஜை செய்து சென்றார். ஓரிடத்தில் சிவபெருமான் அகத்தியருக்கு திருமணக்காட்சி தந்தார். இந்தக்காட்சி எந்நாளும் உலக மக்களுக்கு கிடைக்க வேண்டும் என அகத்தியர் வேண்டினார். அப்போது 'எனக்கு (லிங்கத்திற்கு) தேன் அபிஷேகம் செய்யும் காலத்தில் இங்குள்ள லிங்கத்தில் என்னுடன் பார்வதியும் இணைந்து தோன்றுவாள்' எனக்கூறி மறைந்தார்.
விஜயநகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக சிலர் காடு வெட்டும் போது மண்வெட்டியில் வெட்டுப்பட்ட சுயம்பு லிங்கம் கிடைத்தது. அந்த லிங்கம் தான் மூலவர் அர்த்தநாரீஸ்வரர். இன்றும் கூட வெட்டுப்பட்ட கீறலை சுயம்புலிங்கத்தில் பார்க்கலாம். இந்தக் கோவில் துவாபாரயுகத்தில் தோன்றியது என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இத்தலத்திற்கு அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் வந்து ஈசனை வழிபட்டுள்ளனர்.
இங்கு வழிபட்ட ராமருக்கு ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக்கோலத்தையும். பூஜை செய்த ரிஷிகளுக்கு நற்பலன்களையும், குக நமச்சிவாயருக்கு உணவளித்தும் அர்த்தநாரீஸ்வரர் அருள்புரிந்துள்ளார்.
குரு நமச்சிவாயரின் சீடரான குக நமச்சிவாயர் திருவண்ணாமலையில் இருந்து பல தலங்களை தரிசித்து விட்டு ரிஷிவந்தியம் வழியாக சிதம்பரம் சென்றார். அவ்வாறு செல்லும்போது, அவருக்கு பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்மனிடம் சென்று, `தாயிருக்க பிள்ளை சோறு' என்ற செய்யுளை பாடினார். உடனே அம்மன் அவர் முன் தோன்றி 'நான் இங்கு ஈசனுடன் அர்த்தபாகம் பெற்றிருக்கிறேன். எனவே இருவரையும் சேர்த்து பாடுவாயாக என்று கூறினார்.
இதையேற்று குக நமசிவாயரும் அதன்படியே 'மின்னும்படி வந்த சோறு கொண்டு வா என்ற பாடலை பாடினார். இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகை அம்மன் பொற்கிண் ணத்தில் சோறு கொண்டு வந்து குகநமச்சிவாயரின் பசியாற்றினாள் என வரலாறு கூறுகிறது.
தேவர்களின் தலைவனான இந்திரன் தினமும் இத்தலத்தில் இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால், அம்மனை வழிபடாமல் சென்று விடுவான்.
தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த முத்தாம்பிகை அம்மன், ஒருமுறை அபிஷேகக் குடங்களை மறைத்து வைத்துவிட்டாள். பால்குடங்களை காணவில்லையே என வருந்திய இந்திரன், அங்கிருந்த பலிபீடத்தில் தலையை மோதி உயிர் விட முயற்சித் தான். அப்போது சிவபெருமான் இந்திரன் முன் தோன்றி, இனிமேல் முத்தாம்பிகை அம்பாளுக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படி கூறினார்.
மேலும் தினமும் நடக்கும் தேன் அபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாகவும் கூறி மறைந்தார்.
தேன் கெடாது தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெட விடாது. இதன்படி இன்றும் கூட தினசரி நடக்கும் தேன் அபிஷேகத்தில் சுயம்புலிங்கத்தில் அர்த்தநாரீஸ்வரராக (ஆண்பாதி. பெண்பாதி) ஒளி வடிவில் சிவன் காட்சி தருகிறார். மற்ற அபிஷேகம் நடக்கும் போதுலிங்க வடிவம் மட்டுமே தெரியும்.
கோவில் அமைப்பு
முத்தாம்பிகை அம்மன் உடனுறை அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளே சென்றதும். உயர்ந்த கொடிமரம் உள்ளது. அதன் அருகே நந்திபெருமான் காட்சி அளிக்கிறார். பின்னர் உள்ளே அர்த்தநாரீஸ்வரர் காட்சி அளிக்கிறார். அவரை தரிசித்து விட்டு வரும் வழியில் 63 நாயன்மார்கள் சிலைகள் உள்ளன. மேலும் சனீஸ்வரர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், அகத்தியர், கஜலட்சுமி, வள்ளி, தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
அர்த்தநாரீஸ்வரருக்கு இடப்புறத்தில் முத்தாம்பிகை அம்மன் காட்சி தருகிறார். இதன் உட்பிரகாரத்தில் பெருமாள் புலி பாதங்களுடன் எழுந்தருளி இருப்பதையும் காணலாம்.
மேலும் முத்தாம்பிகை அம்மன் சன்னிதிக்கு நவக்கிரக சன்னிதியும் உள்ளது. முத்தாம்பிகை அம்மனை தரி சித்து விட்டு வெளியே வரும்போது அருகே உள்ள மண்டபத்தில் யாளிச்சிலை ஒன்று உள்ளது. அதன் வாயினுள் ஒரு கல் உருண்டை உள்ளது. பந்து போன்ற அந்த உருண்டையை நம்முடைய கைவிரலால் எந்த பக்கம் வேண்டுமானாலும் உருட்டலாம். ஆனால்' வெளியில் எடுக்க முடியாது. இது சிற்ப வேலைப்பாட்டுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும், சிலை வடித்தவர்களின் திறமையையும் காட்டுகிறது.
இதற்கு தென்கிழக்கு மூலையில் வசந்த மண்டபம் உள்ளது. அதில் பல்வேறு இசைகளை வெளிப்படுத்தும் சரிகமபதநி' இசைத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விழாக்கள்
இக்கோவில் தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. மேலும் கோவிலில் அகத்திய தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஞான போத புஷ்கரிணி தீர்த்தம், அக்னி தீர்த்தம், சங்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவம் 10 நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் கார்த்திகை மாதம் 3-வது திங்கட்கிழமையில் சாமிக்கு 108 சங்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ நாட்களில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்வது வழக்கம்.
கோவில் புதுப்பித்து பல ஆண்டுகள் ஆவதால் கோவில் மேல்தளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கோவிலை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணத்தடை நீங்கவும். குழந்தை பாக்கியம் பெறவும், சுகப்பிரசவம் வேண்டியும் ஏராளமானோர் இக்கோவிலில் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
மேலும் பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் தேன் வாங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்து அந்த தேனை சாப்பிட்டால் பேச்சு குறைபாடு நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள் கோவிலுக்கு வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். மேலும் சாமிக்கு புத்தாடை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அமைவிடம்
முத்தாம்பிகை அம்மன் உடனுறை அர்த்தநாரீஸ்வரரை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் தரிசிக்கலாம். திருக்கோவிலூரில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் தியாக துருகம் வழியாக கள்ளக்குறிச்சி செல்லும் சாலையில் இக்கோவில் உள்ளது. திருக்கோவிலூர், தியாக துருகம், கள்ளக்குறிச்சியில் இருந்து இக்கோவிலுக்கு செல்ல பேருந்துகள் உள்ளன.
- சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்.
- பாவங்கள் அனைத்தும் விலகி கோடி புண்ணியம் கிடைக்கும்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள மகாநந்தி தலத்தைச் சுற்றி சுமார் 15 கி.மீ சுற்றளவில் விநாயக நந்தி, கருட நந்தி, சூர்ய நந்தி, சோம நந்தி, சிவ நந்தி, விஷ்ணு நந்தி, பிரம்ம நந்தி, நாக நந்தி ஆகிய நந்திகளுடன் இந்த தல நந்தியையும் சேர்த்து மொத்தம் ஒன்பது நந்தி தலங்கள் அமைந்துள்ளன.
நந்தி மண்டலம் என்று சொல்லப்படும் அந்த நந்திகளுக்கு நாயகனாக மகாநந்தியில் அமர்ந்துள்ள சிவன் மகாநந்தீஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார். பிரம்ம நந்தி, நந்தியால் ரெயில் நிலையம் அருகே உள்ளது. நாக நந்தி நந்தியாலுக்கு மேற்கே உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் உள்ளது. சூர்ய நந்தியானது நந்தியாலுக்கு கிழக்கே இருக்கிறது. சிவ நந்தி என்பது நந்தியாலிலிருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள காதமாலா ஏரி அருகே உள்ளது.
கருட நந்தியானது மகா நந்திக்கு மேற்கேயும், விஷ்ணு நந்தி என்ற கிருஷ்ண நந்தி மகாநந்திக்கு இரண்டு கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளன. சோம நந்தி என்பது நந்தியாலுக்கு மேற்கே ஆத்மகூர் அருகிலும், விநாயக நந்தி என்பது மகா நந்தியிலும் அமைந்துள்ளது. காலையில் தொடங்கி, மாலைக்குள் நவ நந்திகளையும் தரிசனம் செய்பவர்கள் இந்த பூமியையே வலம் வந்த பலனை பெறுகிறார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
சங்கீத ஞானத்தில் சிறந்தவராக குறிப்பிடப்படும் நந்தியை, நடனம் மற்றும் இசைத்துறையில் உள்ளவர்கள் வழிபட்டால் கலையில் உன்னதமான நிலையை அடைவார்கள். அவரை வழிபடுபவர்களுக்கு பக்தியும், நற்குணங்களும் கொண்ட குழந்தைகள் பிறப்பார்கள் என்பதும் ஐதீகமாகும்.
சகல காரிய சித்தி, உயர்ந்த பதவிகள் மற்றும் அனைத்திற்கும் மேலான முக்தி என்ற ஆன்ம விடுதலையை நந்தி எளிதாக அருளுவார் என்பது ஆன்மிக நம்பிக்கை ஆகும். பிரதோஷ காலத்தில் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே சிவ தரிசனம் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகி கோடி புண்ணியம் கிடைக்கும்.
அருகம்புல் மாலையை சாற்றி, நெய் விளக்கு ஏற்றி நந்தியை வழிபடுவது, வில்வ இலைகளால் அலங்கரித்து அர்ச்சனைகள் செய்வது, அரிசியில் வெல்லம் கலந்து நிவேதனம் செய்வது ஆகியவை பல நன்மைகளை ஏற்படுத்தும் என்றும் ஆன்மிக சான்றோர் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக, நவக்கிரகங்களால் பாதிக்கப்பட்ட ரிஷப ராசியினர் பிரதோஷ காலத்தில் நந்தியை ஆத்மார்த்தமாக வணங்கினால் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும் என்ற ஜோதிட சூட்சுமத்தை ஜோதிட வல்லுனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள்.
- காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் பகல்பத்து உற்சவ சேவை.
- சிறப்புலி நாயனார் குரு பூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-28 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவிதியை பின்னிரவு 3.௦3 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: மூலம் காலை 11.42 மணி வரை பிறகு பூராடம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுப முகூர்த்த நாள். சந்திர தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சிறப்புலி நாயனார் குரு பூஜை. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், காஞ்சீபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் பகற்பத்து உற்சவ சேவை. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் ராஜாங்க சேவை. அகோபில மடம் ஸ்ரீமத் 43-வது பட்டம் ஸ்ரீ அழகியசிங்கர் திருநட்சத்திர வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி, குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-அமைதி
மிதுனம்-உற்சாகம்
கடகம்-இன்பம்
சிம்மம்-உறுதி
கன்னி-தனம்
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-நற்செயல்
தனுசு- பக்தி
மகரம்-மேன்மை
கும்பம்-பரிவு
மீனம்-பாசம்
- விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில்.
- மின்விளக்கு ஒளியில் இருபுறமும் சிவபெருமான் லிங்க வடிவம் தோன்றியது.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள பரதராமியில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பாள் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சிவபெருமானுக்கு பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
இரவு 7 மணி அளவில் கோவில் உட்புற சுவற்றில் மின்விளக்கு ஒளியில் விநாயகர் சன்னதியின் இருபுறமும் சிவபெருமான் லிங்க வடிவம் தோன்றியது.
இதன்மூலம் சிவபெருமான் காட்சி அளித்ததாக பக்தர்கள் பரவச மடைந்தனர். இதனைக் கண்டு மெய் சிலிர்த்து வணங்கினர்.
மின்விளக்கு ஒளி தெரியும் இடத்திற்கும் சிவலிங்கம் ஒளி உருவான இடத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் மின்விளக்கு எரிந்தவுடன் சிவலிங்கம் தென்பட்டது. பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது இந்த வீடியோ பரவி வருகிறது.
- கார்த்திகை மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
- ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று இரவு கார்த்திகை மாதம் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவர் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம் தேன், பன்னீர் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.இதை தொடர்ந்து உற்சவர் அங்காளம்மனுக்கு பலவித மலர்களை கொண்டு தர்பார் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் அருள்பாலித்தார். இரவு 10.40 மணிக்கு மேளதாளம் முழங்க வடக்கு வாசல் வழியாக உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது ஊஞ்சல் மண்டபம் எதிரில் இருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மா, அங்காளம்மா, என கரகோஷத்துடன தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து கோவில் பூசாரிகள் அங்காளம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடல் பாடினர். இரவு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து உற்சவர் அங்காளபரமேஸ்வரி அம்மனை கோவில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
ஊஞ்சல் உற்சவத்தில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி விழுப்புரம், கடலூர், சேலம்,வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார் பூசாரி, அறங்காவலர்கள் தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி,செல்வம் பூசாரி,சரவணன் பூசாரி , வடிவேல் பூசாரி சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- அம்மன் சிலை வெள்ளி கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
- அபிஷேக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
மேல்மருவத்தூர்:
மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில் கார்த்திகை மாத அமாவா சையை முன்னிட்டு கரு வறை ஆதிபராசக்தி அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
ஆதிபராசக்தி அம்மன் சிலை வெள்ளி கவசத்தால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சித்தர் பீடம் வந்த ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளா ருக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பண்ருட்டி, நெய் வேலி, பெண்ணாடம், சிதம்பரம் ஆகிய சக்தி பீடங்களை சேர்ந்த ஆன்மிக இயக்க நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
ஓம் சக்தி பீடத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த எண்கோண வடிவ யாக குண்டத்தை சுற்றி பல்வேறு சிறிய வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. எண்கோண யாககுண்டத்தில் லட்சுமி பங்காரு அடிகளார் கற்பூரம் ஏற்றி வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆன்மிக இயக்க துணைத் தலை வர்கள் செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், முதன்மை செயல் அலுவலர் அகத்தியன், ஸ்ரீலேகா செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தற்சமயம் சக்தி விரதம் இருந்து தைப்பூச சக்தி மாலை இருமுடி செலுத்தும் விழா நடைபெற்று வருவதால் லட்சக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் திரண்டு வந்து கருவறை முன்பு பொருத்தப்பட்டிருந்த சுயம்புவிற்கு அபிஷேக நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
- நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள் பாராயணம் செய்யப்படும்.
- வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாட்களுக்கு முன்னால் தொடங்கும்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு 450-க்கும் மேற்பட்ட விழாக்கள் நடக்கின்றன. அதில் 25 நாட்கள் தொடர்ச்சியாக நடக்கும் மிக நீண்ட விழாவான ஆத்யாயன உற்சவம் நேற்று மாலை கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் தொடங்கியது. இந்த காலத்தில் திருமலை ஜீயங்கார்களால் நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்கள் பாராயணம் செய்யப்படும்.
இந்த பாராயணம் வழக்கமாக தனுர் மாசத்தில் வைகுண்ட ஏகாதசிக்கு 11 நாட்களுக்கு முன்னால் தொடங்கும். அதில் முதல் 11 நாட்கள் `பகல்பத்து' என்றும் மீதமுள்ள 10 நாட்கள் `இரவு பத்து' என்றும் அழைக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து 22-ந்தேதி கண்ணிநுண் சிறுதாம்பு, 23-ந்தேதி ராமானுஜ நூற்றந்தாதி, 24-ந்தேதி வராகசாமி சாத்துமுறை, 25-ந்தேதி ஆத்யாயன உற்சவத்துடன் நிறைவடைகிறது.
- பகல்பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும்.
- ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள்.
திருச்சி:
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவ தும் பல்வேறு திரு விழாக்கள் வெகு விமரிசையாக நடை பெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வை குண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து. ராபத்து,இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்ட கம் நிகழ்ச்சியுடன் நேற்று (12-ந்தேதி) தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா இன்று தொடங் கியது. இதையொட்டி நம்பெருமாள் காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார். காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணிவரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.
இரவு 7.30 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பகல் பத்தின் முதல் நாளான இன்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும்.
இதேபோல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (22-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
23-ந்தேதி ராப்பத்து உற்ச வத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத் தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதை யொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 24-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.
29-ந்தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணிவரை திறந்திருக்கும். 30-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.
சொர்க்கவாசல் திறப்பு தினமான 23-ந்தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
ராப்பத்து ஏழாம் திருநாளான 29-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 30-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான ஜனவரி 1-ந்தேதி தீர்த்தவாரியும், 2-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.
- தன்வந்திரி பகவானுக்கான கோவில்கள் அபூர்வம்.
- மூலிகைகளின் வாசனை தெய்வீகமாகக் கமழ்கிறது.
கோவில் தோற்றம்
மனிதனுக்கு உண்மையான செல்வம் நோய் நொடி இல்லாத வாழ்க்கைதான். அப்படி ஒரு வாழ்க்கையை நமக்கு அளிப்பவர் தன்வந்திரி பகவான். மகாவிஷ்ணுவின் அம்சமான அவரை, வேதங்கள் `தேவர்களின் மருத்துவர்', `ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள்' என்றெல்லாம் குறிப்பிடுகிறது. இருப்பினும் தன்வந்திரி பகவானுக்கான கோவில்கள் அபூர்வம். அப்படி அமைந்த சில ஆலயங்களில் பண்ருட்டியில் உள்ள தன்வந்திரி ஆலயமும் ஒன்று.
நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பண்ருட்டியில் வாழ்ந்த பெருமாள் பக்தர் ஒருவர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல ஊர்களுக்குச் சென்று பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் அவர் நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் எந்த வெளியூருக்கும் சென்று பெருமாளை தரிசிக்க முடியவில்லை. பல நாட்களாக பிணி தொடர்ந்து நிலையில், தாம் இருந்த இடத்தில் இருந்தே திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் இருக்கும் தன்வந்திரி பகவானிடம், "என்னை நோய் நொடியில் இருந்து மீட்டெடுப்பாய் எம்பெருமாளே..." என மானசீகமாக வேண்டிக்கொண்டார். அதன் பலனாக அவர் மிக விரைவிலேயே குணமடைந்தார்.
சிலநாட்களுக்குப் பிறகு அவர் கனவில் தோன்றிய தன்வந்திரி பகவான், "நான் எங்கும் இருக்கிறேன். எனவே திருவரங்கம் நேரில் வரமுடியவில்லையே என கவலை கொள்ளாதே! உங்கள் ஊரிலே எனக்குக் கோவில் அமைத்து வழிபடுங்கள். எல்லோரையும் நோய் நொடியில் இருந்து காக்கிறேன்" என்று கூற, அதன்படி கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில் என்று கூறப்படுகிறது.

நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தின் முகப்பு வாசல் வழியே நுழைந்தால், வியந்து போவீர்கள். அங்கே எழில் கொஞ்சும் மூலிகைத் தோட்டம், அதன் நடுவில் எம்பெருமாளின் அழகுமிகு ஆலயம் அமைந்திருக்கிறது. கோவில் வளாகத்திற்குள் பலவிதமான மூலிகைகளின் வாசனை தெய்வீகமாகக் கமழ்கிறது. அதை சுவாசிக்கும் பொழுது, மிகப்பெரிய ஆற்றலும், புத்துணர்ச்சியும் நம்மை தொற்றிக்கொள்ளும். ஆகவே இங்கே ஏராளமான பக்தர்கள் அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.
கருவறையில் சங்கு, சக்கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப் பூச்சியை கரங்களில் ஏந்தி, மார்பில் அமிர்த லட்சுமியோடு சேவை சாதிக்கிறார், மூலவரான தன்வந்திரி வைத்திய நாராயணப்பெருமாள். இவரது திரு உருவம் திருமலை திருப்பதி சிற்பக் கல்லூரியில் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பு. இந்த ஆலயத்தில் இரவு நேரத்தில் நடைபெறும் அர்த்தஜாம பூஜைக்கே அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள். காரணம், தினந்தோறும் இந்த ஆலயத்திலேயே நாட்டு வைத்தியரைக் கொண்டு தயாரிக்கப்படும் அமிர்த கசாயத்தை, சுவாமியின் அர்த்தஜாம பூஜைக்குப் பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.
அதுதவிர மாதம்தோறும் அமாவாசை அன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை இந்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. அப்போதும் ஆயுர்வேத லேகியம் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதைப் பெற வெளியூர்களில் இருந்தும் பத்தர்கள் வருகிறார்கள். ஒருமுறையாவது இத்தலம் வந்து அமிர்த கசாயத்தையும், ஆயுர்வேத லேகியத்தையும் பெற்று உட்கொண்டால் எந்தவிதமான நோயும் நம்மை தாக்காது என்பது நம்பிக்கை.
தினசரி சுப்ரபாத பூஜை, கோ பூஜையும் செய்யப்படுகிறது. மரத்தால் செய்யப்பட்ட வைகுண்ட பால மூர்த்தியை ஆண்டுக்கு ஒருமுறை, வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே பக்தர்கள் தரிசிக்க முடியும். இந்த சிறப்பான நிகழ்வைக் காண பெருமளவில் பக்தர்கள், வைகுண்ட ஏகாதசி அன்று இவ்வாலயத்திற்கு வருகை தருவார்கள். அமாவாசை, பவுர்ணமி, வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி, தமிழ்மாத பிறப்பு, சுவாதி நட்சத்திர நாட்களில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தன்வந்திரி பகவானை மனதார பிரார்த்தனை செய்துகொள்ள, அவர்களுக்கு சுவாமியின் திருப்பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தாம்பூலம் பிரசாதமாகத் தரப்படுகிறது. அதை கோவிலில் வழங்கப்படும் தீர்த்தத்தில் கலந்து சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். பெருமாள் கோவில்களில் முக்கிய பிரசாதம் புளியோதரை. ஆனால் இங்கு மருத்துவராக இருக்கும் தன்வந்திரி வைத்திய நாராயணப் பெருமாளுக்கு, தன்வந்திரி ஜெயந்தி அன்று ஒருநாள் மட்டுமே புளியோதரை நிவேதனமாக செய்யப்படுகிறது. புளி, மருந்துகளை முறிக்கும் தன்மை கொண்டது. அதனால், அது பத்தியமாகவும் சொல்லப்படும். அதையொட்டியே இங்கே ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே புளியோதரை நைவேத்தியம் செய்யப் படுகிறது.
இவ்வாலயத்தில் கருடாழ்வாருக்கு தனிச் சன்னிதி உள்ளது. இந்த ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு உகந்த மூலிகைகள் நவக்கிரக சன்னிதியாக அமைக்கப்பட்டுள்ளது, வேறு எங்கும் காணமுடியாத சிறப்பம்சம். உங்களால் முடிந்தபோது இந்தக் கோவிலுக்கு ஒருமுறை வாருங்கள். உங்களுக்கு நல் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் தந்து தன்வந்திரி பகவான் ஆசிர்வதிப்பார். இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே இருக்கும் நான்கு முனை சாலை அருகில் இந்த தன்வந்திரி கோவில் உள்ளது.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, கார்த்திகை-27 (புதன்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பிரதமை நாளை விடியற்காலை 4.35 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: கேட்டை நண்பகல் 12.18 மணி வரை பிறகு மூலம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம். சகல விஷ்ணு ஆலயங்களிலும் பகற்பத்து உற்சவம் ஆரம்பம். மூர்க்க நாயகனார் குருபூஜை ஸ்ரீவில்லி புதூர் வேதபிரான் பட்டர் திருமாளிகை பச்சைபரப்பி கடாட்சித்து பெரிய பெருமாள் கருடன் பட்டர்பிரான் யானை திருப்பல்லாண்டு தொடக்கம். கீழ்த் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு காலையில் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சோர்வு
ரிஷபம்-பணிவு
மிதுனம்-வரவு
கடகம்-ஆதாயம்
சிம்மம்-செலவு
கன்னி-ஆர்வம்
துலாம்- புகழ்
விருச்சிகம்-ஜெயம்
தனுசு- விவேகம்
மகரம்-பெருமை
கும்பம்-மகிழ்ச்சி
மீனம்-சுகம்
- அனைத்து நிகழ்வுகளும் காலத்தால் நிர்ணயிக்கப்பட்டவை.
- அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் மேல் தனி ஆர்வம் உண்டு.
பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிகழ்வுகளும் காலத்தால் நிர்ணயிக்கப்பட்டவை. அப்படி இருக்க உழைப்பு, உழைப்பு என்று உண்ண, உறங்க நேரம் இன்றி உழைப்பவர்களை பார்த்து இருக்கிறோம். அதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் என உழைக்காமல் அதிர்ஷ்ட குதிரையை நம்பி வாழ்வை தொலைப்பவர் களையும் பார்க்கிறோம். உழைத்தவர்கள் எல்லாம் உயர்ந்துவிடவும் இல்லை. அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்கள் அதிர்ஷ்டத்தை துரத்துவதை ஆயுள் முழுவதும் நிறுத்தப் போவதும் இல்லை. மனிதராய் பிறந்த அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் மேல் தனி ஆர்வம் உண்டு.
மாடமாளிகையில் வாழ்பவர்கள் முதல் பிளாட்பாரத்தில் வசிப்பவர்கள் வரை அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் மேல் தனி விருப்பம் ... தனி மரியாதை .... தனி கவனம் உண்டு.
அதிர்ஷ்டம் என்றால் என்ன?அதை அடைவது எப்படி? நாம் விரும்பும் போது வருவது அதிர்ஷ்டமா? அல்லது எதிர்பார்க்காமல் தேடிவருவது அதிர்ஷ்டமா? அதிர்ஷ்டத்தை ஜாதகத்தால் வாஸ்துவால் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட கற்களால் அழைக்க முடியுமா? தேடும் அனைவருக்கும் கிடைக்காமல் ஒரு சிலரின் வாழ்வில் மட்டும் முகம் காட்டுவது ஏன்? என்ற அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் தருவது ஐந்தாமிடம். ஒருவரின் ஜனன காலத்தில் ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி மற்றும் ஐந்தாமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களே அதிர்ஷ்டத்தை வரவழைக்கிறது.
அதே நேரத்தில் பிரபஞ்சத்திடம் நாம் எதிர்பார்க்கும் அதிர்ஷ்டத்தைப் பெறக்கூடிய தகுதிகள் நம்மிடம் உள்ளதா, என்று நாம் கவனிக்க வேண்டும். பிரபஞ்ச சக்தி ஒருவருக்கு வழங்கும் அதிர்ஷ்டத்தை பெற என்ன தகுதி வேண்டும் என்பதை சிறு புராண கதை மூலம் தெரிந்து கொள்வோம்.
அர்ஜுனனும், கிருஷ்ணரும் உலாவிக் கொண்டிருந்த போது, ஒரு முதியவர் தர்மம் செய்யும்படி கேட்டார்.அர்ஜுனன் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்தார். முதியவருக்கு மகிழ்ச்சி. `ஆகா... இது நம் குடும்பத்திற்கு ஐந்தாறு ஆண்டுகளுக்கு போதுமே!' என்றெண்ணி வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது இதைக் கவனித்த ஒரு திருடன், பொற்காசுகளை வயோதிகரிடமிருந்து பறித்துச் சென்று விட்டான்.
சில தினங்கள் கழித்து, மீண்டும் அவ்வழியே வந்த அர்ஜுனனிடம் முதியவர் நடந்ததைச் சொல்ல, விலை உயர்ந்த நவரத்தின கல்லை கொடுத்து, அதையாவது பத்திரமாக கொண்டு செல்லும்படி கூறினார். முதியவரும் கவனமாக வீட்டுக்குக் கொண்டு சென்று, மனைவி, பிள்ளைகளிடம் கூட சொல்லாமல், பரணில் இருந்த பானையில் ஒளித்து வைத்து விட்டார்.
இதைஅறியாத அவரது மனைவி பரணிலிருந்த பானையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றாள். பானையை கழுவும் போது உள்ளிருந்த கல் ஆற்றில் விழுந்து விட்டது.
அவள் பானையுடன் வீட்டில் நுழைந்த போது, வெளியே சென்றிருந்த வயோதிகர் அந்த குடத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி ''கல் எங்கே?'' என மனைவியைக் கேட்டார். எதுவும் அறியாமல் அவள் விழிக்க, ஆற்றிற்கு சென்று பல மணி நேரம் தேடியும் பலனின்றி திரும்பினார்.
சில தினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்ஜுனனும் முதியவரை பார்க்கும் போது, அவர் நடந்ததை கூற அர்ஜுனன் கண்ணனிடம், ''இவர் அதிர்ஷ்டக்கட்டை,'' என்றான். அதை ஆமோதித்த கண்ணன், ''இந்த முறை நீ இவருக்கு இரண்டு காசு மட்டும் கொடு,'' என்றார்.
அர்ஜுனனும், அதைக் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, ''இரண்டு காசுகள் அவருக்கு என்ன சந்தோஷத்தை கொடுத்துவிடும்?'' எனக் கேட்டான். எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் என்ன நடக்கிறது பார்க்கலாம் வா,'' எனக்கூறிய கண்ணன் அர்ஜுனனுடன் முதியவரை பின் தொடர்ந்தார்.
செல்லும் வழியில் மீனவர் ஒருவர் உயிருடன் வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கிக் கொள்ளும்படி முதியவரிடம் கேட்டான்.
யோசித்த முதியவர், இந்தக் காசுகள் எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியைக் கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை வாங்கி ஆற்றிலேயே விட்டு புண்ணியமாவது மிஞ்சட்டும் என தீர்மானித்தார். அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டார்.
இன்னொரு மீனின் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதைப் பார்த்த அவர், மீனின் வாயைப் பிளந்து பார்த்தார். அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றார். அது அவர் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல். சந்தோஷ மிகுதியால் `சிக்கியாச்சு' என்று கூச்சலிட்டார்.
அதேநேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவரிடம் கொள்ளையடித்த திருடன் வர, அவன் திடுக்கிட்டு, தன்னை தான் முதியவர் கூறுகிறார் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில், கண்ணனும் அர்ஜுனனும் அவனைப் பிடித்து விட்டனர். அவனை சிறையில் அடைத்து விட்டு, அவன் வீட்டிலிருந்த திருட்டுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அனைத்தையும் முதியவருக்கு கொடுத்தனர்.
அர்ஜுனன் கண்ணனிடம், `வாழ்வில் தான் எத்தனை விசித்திரங்கள். அதிலும் இது போன்ற நிகழ்வுகள் எப்படி சாத்தியம்?'' என்று கேட்டான். கண்ணன் சிரித்துக்கொண்டே… ' இவர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கும் மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என்று எண்ணினார். அடுத்து நீ கொடுத்த விலை உயர்ந்த கல்லை தானும் உபயோ கிக்காமல், மற்றவருக்கும் பயன்படா மல் ஒளித்து வைத்திருந்தார். ஆகவே அவை இரண்டும் அவரிடம் தங்கவில்லை. இப்போதோ தன்னிட மிருந்தது மிகக்குறைவானது என்றாலும், தனக்கு உதவா விட்டாலும், இன்னொரு உயிராவது வாழட்டுமே என கருதினார். இந்த புண்ணியத்தால் இழந்த செல்வத்துக்கும் மேலாகவே அடைந்தார்.
இந்த கதையின் நீதி பொது நலமுள்ள வர்களுக்கும், தான, தர்மம் செய்பவர்களுக்கும், பாவ புண்ணியம் பார்ப்பவர்களுக்கும் அதிர்ஷ்ட கடாட்சம் கிடைக்கும் என்றார். அத்துடன் எந்த செயலாக இருந்தாலும் அதன் பலன் கிடைக்க போதிய கால அவகாசம் தேவை.
அதிர்ஷ்டம் ஒருவரைத் தேடி வரும் வரை பொறுமையாக விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டும்.செய்த செயல் வடிவாக்கம் பெறும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும்.
- பணக்காரராக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது.
- விடாமுயற்சியும் இருந்தால், பணத்தை வைப்பதற்கே இடம் இருக்காது.
அதிர்ஷ்டத்தால் பணக்காரராக வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்குமே அதிர்ஷ்ட சாலியாக அதிக பணம் உடையவர்களாக வாழவேண்டும் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஏனோ, சிலருக்கு பணத்தை சேர்க்கும் தந்திர வித்தை கடைசி வரை தெரியாமலேயே போகின்றது. மேலே கூறிய வழிபாட்டு முறையை பயன்படுத்தினால் ஒரு ரூபாயைக் கூட எதிர்காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளாதவர்கள் கையில் பணம் சேரும். வருமானம் இல்லாதவர்களுக்கு வருமானம் தானாக தேடி வரும்.
தொழிலில் முன்னேற்றம் இல்லாதவர்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து அதிக லாபத்தை பெற முடியும். இந்த பரிகாரத்தோடு சேர்ந்து உங்களுடைய விடாமுயற்சியும் இருந்தால், பணத்தை வைப்பதற்கே இடம் இருக்காது, அந்த அளவிற்கு பணம் நிரம்பி வழியும். அதற்கான ஒரு சூட்சம முறையைப் பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
மேஷம்
மேஷ ராசிக்கு ஐந்தாம் அதிபதி சூரியன் என்பதால் குங்குமப்பூ கலந்த தீர்த்தத்தை தினமும் அருந்த வேண்டும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதுடன் ஆதித்யஹ்ருதயம் கேட்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு ஐந்தாம் அதிபதி புதனால் ஏற்படும் தோஷங்கள் விலக துளசி தீர்த்தத்தை அடிக்கடி பருக வேண்டும். மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும். விஷ்ணு சகஸ்ர நாமம் கேட்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு ஐந்தாம் அதிபதி சுக்கிரன் என்பதால் பச்சைக் கற்பூரம், ஏலக்காய் , லவங் கம் கலந்த தீர்த்தத்தை தினமும் பயன் படுத்த வேண்டும். மகாலட்சுமியை வழிபட வேண்டும். லலிதா சகஸ்ர நாமம் கேட்க வேண்டும்.
கடகம்
கடகத்திற்கு ஐந்தாம் அதிபதி செவ்வாய் என்பதால் அடிக்கடி பீட்ரூட் சாறு தேன் கலந்து சாப்பிட வேண்டும். முருகனை வழிபட வேண்டும். கந்த சஷ்டி கவசம் கேட்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு ஐந்தாம் அதிபதி குரு என்ப தால் பச்சைக் கற்பூரம், கல்கண்டு, ஏலக்காய் கலந்த பாலை தினமும் அருந்த வேண் டும். அமாவாசை, பவுர்ணமி மற்றும் வியாழக்கி ழமைகளில் சித்தர்கள் ஜீவ சமாதியில் வழி பாடு நடத்த ஆன்ம பலம் பெருகும்.
கன்னி
கன்னி ராசிக்கு ஐந்தாம் அதிபதி சனி. இவர்கள் தினமும் குளிர்ந்த நீரில் ஒரு துளி வில்வ இலைப் பொடி கலந்து சாப்பிட வேண்டும். சிவ வழிபாடு செய்ய வேண்டும். தினமும் சிவ புராணம் படிக்க வேண்டும்.
துலாம்
துலாம் லக்னத்தின் ஐந்தாம் அதிபதி சனி பகவான் என்பதால் சனிக்கிழமை எள்ளு சாதம் சாப்பிட வேண்டும். வீட்டின் அருகில் அல்லது ஊரின் எல்லையில் உள்ள முனியப்பன், கருப்பசாமி போன்ற எல்லை தெய்வங்களை வணங்க வேண்டும்.
விருச்சிகம்
குருவை ஐந்தாம் அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசியினர் புனித நதி மற்றும் கடலில் அடிக்கடி நீராட வேண்டும். வியாழக்கிழமை கந்த குரு கவசம் படிக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியினரின் ஐந்தாம் அதிபதி செவ் வாய் என்பதால் அடிக்கடி மாதுளம் பழச்சாறு அருந்த வேண்டும். முருகனை வழிபட வேண்டும். திருப்புகழ் கேட்க வேண்டும்.
மகரம்
மகர ராசியின் ஐந்தாம் அதிபதி சுக்கிரன் என்பதால் தினமும் பச்சைக் கற்பூரம் மற்றும் ஏலக்காய் கலந்த புனித நீரை சிறிது அருந்த வேண்டும். அஷ்ட லட்சுமிகளை வழிபட வேண்டும். வெள்ளிக் கிழமை மகாலட்சுமி அஷ்டகம் படிக்க வேண்டும்.
கும்பம்
உங்களின் 5-ம் அதிபதி புதன் என்பதால் தினமும் நெல்லிக்காய் சாறு அருந்த வேண்டும். புதன் கிழமைகளில் பெருமாளை வணங்க வேண்டும். தினமும் மகா விஷ்ணு காயத்திரி மந்திரம் படிக்கவும்.
மீனம்
சந்திரன் உங்களின் ஐந்தாம் அதிபதி என்பதால் அடிக்கடி புனித நீராடல் செய்ய ஆத்ம சுத்தி ஏற்படும். திங்கட்கிழமை அம்மன் வழிபாடு செய்யவும்.






