என் மலர்tooltip icon

    வழிபாடு

    • விநாயகர் கோவில்களில் கணபதி ேஹாமம், அபிஷேகம், அலங்காரம்.
    • உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-30 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தி இரவு 11.09 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: உத்திராடம் காலை 9.25 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சதுர்த்தி விரதம். திருவோண விரதம். குச்சனூர் சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மிலட்டூர் விநாயகப் பெருமான் பவனி. சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் புறப்பாடு, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருவலஞ்சுழி சுவேத விநாயகர், உப்பூர் வெயிலுகந்த விநாயகர், மதுரை முக்குறுணி விநாயகர் கோவில்களில் காலை கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வாழ்வு

    ரிஷபம்-ஊக்கம்

    மிதுனம்-ஆர்வம்

    கடகம்-பரிவு

    சிம்மம்-பாசம்

    கன்னி-ஆக்கம்

    துலாம்- ஆதரவு

    விருச்சிகம்-அன்பு

    தனுசு- ஜெயம்

    மகரம்-கடமை

    கும்பம்-பக்தி

    மீனம்-பயணம்

    • மரங்கள் சூழ்ந்து வனப்புடன் எழில்மிகுந்து காணப்படும்.
    • இறைவனின் இருப்பிடமாக கோவில்களுடன் காட்சியளிக்கின்றன.

    பல்லுயிர்களின் வாழ்விடமாக விளங்குவது மலைகள். நிலத்தினின்றும் உயர்ந்து மரங்கள் சூழ்ந்து வனப்புடன் எழில்மிகுந்து காணப்படும் சில மலைகளை மேகங்கள் உச்சி முகர்ந்து செல்லும். இது ஒரு வகையென்றால் சில மலைகள் பாறை அடுக்குகளாக காட்சியளிக்கும்.

    இவை போன்று எத்தகையதாயினும் பல மலைகள் இறைவனின் இருப்பிடமாக கோவில்களுடன் காட்சியளிக்கின்றன என்றால் அது மிகையாகாது. அத்தகைய மலைகளுள் ஒன்றாக விளங்குவதுதான் கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோன்றிமலை. ஊரின் பெயரும் அதுவே.

    தாந்தோன்றிமலை என்பதற்கு நேராக பொருள் கொண்டால் தானாக தோன்றிய மலை என்றாகிறது. மேலும் தாமான் தோன்றிக்கோள் எனும் குறுநில மன்னன் இந்த மலையை தனது இருப்பிடமாக கொண்டு, சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டுவந்தான் என்பது புறநானூற்று பாடல் மூலம் அறியப்படும் செய்தியாகும்.

    இதனால் இந்த மன்னனின் நினைவாக இவ்வூர் இப்பெயரை பெற்றிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த மலை இறைவனால் தோற்றுவிக்கப்பட்டதாகவும், அடியார்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பல்வேறு கருத்துகளும் உள்ளன.

    இதேபோல் இந்த மலையை சம்பந்தப்படுத்தி ஒரு புராண கதையும் உள்ளது. அதாவது ஒரு சமயத்தில், திருப்பாற்கடலில் திருமால் தனது அந்தப்புரத்தில் திருமகளுடன் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார். வாயிலின் வெளியே ஆதிசேஷன் காவல் புரிந்தார். அப்போது இறைவனை தரிசிப்பதற்காக அங்கு வந்த வாயுபகவான் உள்ளே நுழைய முயன்றார். ஆனால் ஆதிசேஷனோ, வாயுபகவானை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார். இதனால் அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதமும், யார் பலசாலி என்பது பற்றிய சச்சரவும் ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் வெளியே வந்த திருமால், 2 பேருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்தார். அப்போது இருவருக்கும் ஒரு போட்டியையும் வைத்தார். அதாவது ஆதிசேஷன் திருவேங்கட மலையை தனது உடலால் அழுத்தி பிடித்துக்கொள்ள வேண்டும். வாயுபகவான் அதை தனது பலத்தால் அசைத்து தன்வசப்படுத்த வேண்டும் என்பது அந்த போட்டியாகும். அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள போட்டி தொடங்கியது.

    போட்டியின் விதிப்படி ஆதிசேஷன் திருவேங்கட மலையை தனது உடலால் சுற்றி இறுக அழுத்தி கொண்டார். வாயு பகவான் அதனை பெயர்த்தெடுக்க முயன்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. கோபம் கொண்ட வாயு பகவான் தனது முழு பலமும் கொண்டு பெரும் புயலாக வீசியபோது அம்மலையின் சிறுசிறு பாகங்கள் சிதறுண்டு நாலா பக்கமும் விழுந்தன.

    அவ்வாறு சிதறி விழுந்த குன்றுகளில் ஒன்றுதான் இந்த தாந்தோன்றிமலை ஆகும், என்பதே அந்த கதையாகும். அதனால் திருவேங்கட மலைக்கு தெய்வீக சக்தி இருப்பது போன்று, அதனில் இருந்து சிதறிய குன்றுகளுக்கும் தெய்வீக சக்தி உண்டு என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இம்மலை தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.

    குடைவரை கோவில்

    தென் திருப்பதி என்ற பெயருக்கு ஏற்ப இங்கு இறைவன் கல்யாண வெங்கடரமண சுவாமியாக கோவில் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் பொதுவாக கோவில்கள் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும். ஆனால் இந்த கோவிலோ மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு குடைவரைக் கோவில் ஆகும். அதற்கேற்ப கருவறை விளங்குகிறது.

    இங்கு பாறையோடு ஒட்டிய நிலையில் கல்யாண வெங்கடரமண சுவாமி தன் மார்பில் லட்சுமியைத் தாங்கி நின்ற வண்ணம் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அவர் நான்கு கைகளை கொண்டுள்ளார். கோவிலின் அர்த்த மண்டபம், நுழைவு மண்டபம் ஆகியவை பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

    • மார்கழி மாதங்களில ஐயப்ப பூஜைகளும், பஜனைகளும் நடைபெறும்.
    • கோவிலுக்கு அருகே பாலருவியும், அச்சன்கோவில் ஆறும் உள்ளது.

    கோவில் தோற்றம்

    கார்த்திகை மாதம் பிறந்தாலே 'சுவாமியே சரணம் ஐயப்பா' என்ற சரண கோஷம் ஊர் தோறும், வீடு தோறும் கேட்கும். அனைத்து ஊர்களிலும் ஐயப்ப சுவாமிக்கு மாலை அணிந்த பக்தர்கள், கருப்பு மற்றும் காவி உடை அணிந்து செல்வதையும் அதிக அளவில் காணலாம். கார்த்திகை, மார்கழி மாதங்களில் எங்கு பார்த்தாலும் ஐயப்ப பூஜைகளும், பஜனைகளும் நடைபெறும். அந்த அளவிற்கு சுவாமி ஐயப்பன் மீது பக்தர்கள் பக்தி கொண்டு மாலை அணிந்து, சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபட்டு வருகிறார்கள்.

     தமிழ்நாட்டில் முருகப்பெருமானுக்கு திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, திருத்தணி என்று அறுபடை வீடுகள் இருப்பது போல், ஐயப்ப சுவாமிக்கும் கேரளாவில் ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழா, பந்தளம், எரிமேலி, சபரிமலை என அறுபடை வீடுகள் உள்ளன. குளத்துப்புழாவில் பாலகனாகவும், ஆரியங்காவில் பூரண-புஷ்கலையுடன் அய்யனாகவும், அச்சன்கோவிலில் அரசனாகவும், எரிமேலியில் சாஸ்தாவாகவும், சபரிமலையில் ஐயப்பனாகவும் இருந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கின்ற பக்தர்கள், ஐயப்பனின் இந்த ஆறு கோவில்களுக்கும், தமிழகத்தில் பாபநாசம் மலையில் காரையாற்றில் உள்ள சொரிமுத்து அய்யனார் உள்ளிட்ட பல்வேறு கோவிலுக்கும் சென்று விட்டு சபரிமலை செல்வது வழக்கம்.

    ஐயப்பனின் அறுபடை வீடுகளில் அரசனாக இருந்து ஆட்சி செய்வது, அச்சன்கோவில் திருத்தலமாகும். இந்த அச்சன் கோவில் தர்மசாஸ்தா, மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒருவரான பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். அச்சன் கோவில் திருக்கோவிலானது, தமிழக எல்லையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது.

    செங்கோட்டை, பண்பொழி, மேக்கரை வழியாக காட்டுப்பகுதியில் சென்றால் அச்சன்கோவில் செல்லும் வழியில் கோட்டைவாசல் கருப்பசாமி கோவில் உள்ளது. அச்சன்கோவில் செல்லும் பக்தர்கள் இந்த கோவிலில் வழிபட்ட பின்னரே அச்சன்கோவில் செல்வார்கள். கோவிலுக்கு அருகே பாலருவியும், அச்சன்கோவில் ஆறும் உள்ளது.

    அச்சன்கோவிலில் பூரண - புஷ்கலையுடன் தர்மசாஸ்தா மூலவராக உள்ளார். விநாயகர், முருகர், நாகராஜன், நாகக்கன்னி, குருவாயூரப்பன், வனதேவதைகளும் உள்ளன. கோவிலுக்கு எதிரே கருப்பசாமி கோவில் இருக்கிறது. தர்மதாஸ்தா சுவாமிக்குரிய நகைகள் எல்லாம் புனலூரில் அரசு கருவூலத்தில் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும், மண்டல பூஜையின் போது கோவிலுக்கு கொண்டு வந்து சுவாமிக்கு அணிவிக்கப்படும்.

    இந்த தர்மசாஸ்தா கோவிலுக்கு ஒரு வாள் உண்டு. காந்த மலைப்பகுதியில் இருந்து இறைவனே இதை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த வாள் இடத்துக்கு இடம், நிறம், எடை மாறும் அதிசயவாள் என்று சொல்லப்படுகிறது.

    சுவாமி தர்மசாஸ்தா இங்கே அரசனாகவும், ஆண்டவனாகவும் இருப்பதால், அவரிடம் வைக்கின்ற கோரிக்கைகள் விரைவில் நிறைவேறும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

    குழந்தை இல்லாத தம்பதியர்கள் சுவாமியை வழிபட்டு நாகராஜா கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் முந்தானை சேலையை கிழித்து தொட்டில் கட்டி ஆட்டினால், மறு ஆண்டுக்குள் குழந்தை பாக்கியம் கிடைத்து வீட்டில் தொட்டிலாடும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.

    நாக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகராஜா கோவிலில் வந்து வழிபடுவார்கள். அங்கு கேரள மாநிலத்தைச் சேர்ந்த வீணை வாசிப்போர் தங்கள் கையில் வைத்திருக்கும் வீணையை இசைத்து நாகராஜன் பற்றி பாடல்களை பாடினாலும், தோஷம் உள்ளவர்களின் ராசி, நட்சத்திரம் பற்றி பாடினாலும் தோஷம் நீங்குவதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அப்பகுதி பக்தர்கள் கூறுகையில், `அச்சன்கோவில் வனப்பகுதியாகும். இந்த கோவிலில் உள்ள தர்மசாஸ்தா அரசனாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களை பாதுகாத்து வருகிறார். அவருடைய கையில் வைத்துள்ள வெள்ளை சந்தனத்தையும், தண்ணீரையும் பாம்பு கடித்தவர்களுக்கு கொடுத்து உயிரை காப்பாற்றி வருகிறார். இந்த சிலை பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. '

    இந்த சிலையை வடித்த சிற்பி தர்மசாஸ்தாவின் கட்டளைப்படி அந்த மலைப்பகுதியில் உள்ள ராஜநாகத்தின் விஷத்தை போக்கும் மருந்தை எடுத்து வைத்து சிலையை செதுக்கி உள்ளார். சிலையை செதுக்கிய இரும்பு உளியை தண்ணீரில் தோய்த்து அடிப்பதற்கு பதிலாக அந்த மருந்தில் நனைத்து செதுக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் சிலையில் சுவாமிக்கு அபிஷேகம் செய்த தண்ணீரும், வெள்ளை சந்தனமும் அப்படியே இருக்கும். பாம்பு கடித்தவருக்கு அந்த தண்ணீரையும், சந்தனத்தையும் கொடுத்தவுடன் குணம் கிடைத்து விடுகிறது. நடை மூடிய பிறகும் எந்த நேரமாக இருந்தாலும் கோவில் மணியை அடித்த உடனே பூசாரி வந்து நடையை திறந்து பரிகாரமாய் இந்த சிகிச்சை அளிக்கிறார்' என்றார்கள்.

    இத்தனை சிறப்பு மிக்க அச்சன்கோவிலில் மார்கழி மாதம் நடைபெறுகின்ற மண்டல பூஜை வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினமே ஆபரணப்பெட்டி ஊர்வலம் நடைபெறும். தொடர்ந்து 17-ந் தேதி கொடியேற்றம், 25-ந் தேதி காலை 11 மணிக்கு தேரோட்டம், 26-ந் தேதி ஆராட்டும் நடக்கிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் `நிறைப் புத்தரிசி பூஜை' நடைபெறும். இந்த பூஜையில் பல்வேறு இடங்களில் இருந்து வயல்களில் விளைந்த நெற்கதிர்களை கொண்டு வந்து கொடுத்து பூஜை நடத்தி அதனை பக்தர்களுக்கு கோவிலிலிருந்து வழங்குவார்கள். இதனைப் பெற்று வீட்டில் வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    இதேபோல் அச்சன்கோவிலுக்கு சொந்தமான வயல்களில் தனியாக நெல் பயிரிடப்பட்டு அந்த நெற்கதிர்களை அறுவடை செய்து அச்சன்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் சபரிமலையில் நடைபெறும் நிறைப்புத்தரிசி விழாவிற்காக விரதம் இருந்த 51 பக்தர் களுடன், 51 நெற்கதிர் கட்டுகளை சபரிமலை கோவில் நிர்வாகத்தினா் சபரிமலைக்கு எடுத்துச் செல்வார்கள்.

    அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவிலில் தினமும் அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து பூஜைகள் நடக்கும். மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை கோவில் திறந்திருக்கும். ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் மண்டல பூஜை தேரோட்டம் நடைபெறும். ஐயப்பன் கோவில்களில் தேரோட்டம் நடைபெறும் ஒரே கோவில் இந்த அச்சன்கோவில் ஆகும்.

    ஒவ்வொரு கோவிலிலும் தேரை பக்தர்கள் வடம் (கயிறு), இரும்புச் சங்கிலி ஆகியவற்றால் இழுப்பார்கள். ஆனால் தர்மசாஸ்தா தேரை மட்டும் மூங்கில் பிரம்புகள் வைத்து தான் பக்தர்கள் இழுப்பார்கள். இந்த அதிசயம் இந்தக் கோவிலில் மட்டும் தான் நடைபெறுகிறது.

    தேரோட்டத்தின் போது தமிழக மக்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். தேரோட்டத்தின் போது கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடக்கும். இதேபோல் மண்டல பூஜை நாட்களிலும் இந்த கருப்பன் துள்ளல் (அதாவது கருப்பசாமி வல்லயம் அரிவாள் வைத்து ஆடுவது) சிறப்பு வாய்ந்ததாகும்.

    அச்சன்கோவில் பகுதியில் யாருக்கு பாம்பு கடித்தாலும், உடனே கோவிலுக்கு அந்த நபரை கொண்டு வருவார்கள். அவரை கொடிமரத்தின் அருகில் படுக்க வைத்து விட்டு கோவில் மணி அடித்தவுடன் கோவில் பூசாரி வந்து கோவிலைத் திறந்து சுவாமியின் சிலையில் உள்ள சந்தனத்தையும், தீர்த்தத்தையும் (தண்ணீர்) எடுத்து மருந்தாக கொடுக்கிறார். அதை குடித்த உடன் பாம்பின் விஷம் இறங்கி அந்த நபர் உயிர் பிழைத்து விடுவார். அந்த அதிசயம் இன்றும் இங்கு நடைபெறுகிறது.

    கோவில் உள்ள இடம் அடர்ந்த வனப்பகுதியாகும். அங்கிருந்து ஆஸ்பத்திரிக்கு வர வேண்டுமானால் செங்கோட்டை, புனலூருக்கு தான் செல்ல வேண்டும். அதற்குள் பாம்பு கடித்தவர் இறந்துவிட வாய்ப்புள்ளது. எனவே இந்த கோவிலில் சுவாமியின் சந்தனத்தையும், தீர்த்தத்தையும் கொடுத்தால் விஷம் இறங்கி விடுகிறது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.

    • நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது.
    • ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறும்

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து மக்கள் வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு 467-வது கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தூரி விழாவையொட்டி முன்னதாக கடந்த 10-ந் தேதி தர்காவில் உள்ள 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.

    கந்தூரி விழாவையொட்டி நாகை மீரா பள்ளிவாசலில் இருந்து கொடி ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலமானது யாகூசன் பள்ளி தெரு, நூல்கடை சந்து, சாலப்பள்ளி தெரு, வெங்காய கடைத்தெரு, பெரிய கடைவீதி, வெளிப்பாளையம், காடம்பாடி, வடக்கு பால்பண்ணைச்சேரி வழியாக நாகூர் சென்றது.

    ஊர்வலத்தில் மந்திரி கப்பல், செட்டி பல்லக்கு, சின்ன ரதம் என ஏராளமான அலங்கார வாகனங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த கொடி ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    நாகையில் இருந்து நாகூர் வரை சாலைகளின் இருபுறமும் நின்று பொதுமக்கள் கொடி ஊர்வலத்தை கண்டு ரசித்தனர். தொடர்ந்து நாகூர் தர்கா பரம்பரை கலிபா துவா ஓதிய பின்னர் 5 மினராக்களில் ஒரே நேரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது கண்கவர் வான வேடிக்கையுடன் நாகூர் தர்கா, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.

    கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்றத்தை முன்னிட்டு நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நாகையில் வருகிற 23-ந்தேதி இரவு நடக்கிறது. மறுநாள் 24-ந்தேதி அதிகாலை நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
    • அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

    இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 26-ந் தேதி காலையில் கோவிலில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

    அன்றுமுதல் தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியில் காட்சி அளித்தது. மலையில் காட்சி அளித்த மகா தீபத்தை காண பக்தர்கள் பலர் மலை உச்சிக்கு சென்று தரிசித்து வந்தனர்.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் அத்தகைய சிறப்பு வாய்ந்த மலையின் உச்சிக்கு பக்தர்கள் ஏறி சென்று வந்ததையொட்டி வழக்கமாக தீபத் திருவிழா நிறைவுற்ற பிறகு பிராயச்சித்த பூஜை நடத்தப்படும். அதன்படி தீபத் திருவிழா நிறைவடைந்த பிறகு இந்த ஆண்டிற்கான பிராயச்சித்த பூஜை நேற்று நடந்தது.

    இதனையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டு சாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து புனிதநீர் கலசத்தை மலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிராயச்சித்த பூஜை நடந்தது.

    பின்னர் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாள்.
    • அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை நம்பெருமாள் முத்து கிரீடம், ரத்தின காதுகாப்பு, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சர்வ அலங்காரத்துடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் பின்தொடர பக்தர்கள் புடைசூழ ராஜமகேந்திரன் திருச்சுற்று வழியாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

    • புண்ணியர்கள் வாழ்ந்த பூமி இந்த பூமி.
    • மிகப்பெரிய வள்ளலாக வாழ்ந்தவர் சிறப்புலி நாயனார்.

    நிலையற்ற பொருளைக் கொண்டு நிலைபெற்ற பொருளாக மாற்றும் புண்ணியர்கள் வாழ்ந்த பூமி இந்த பூமி. சுந்தரர் `சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்" என்று குறிப்பிடும்படியான மிகப்பெரிய வள்ளலாக வாழ்ந்தவர் சிறப்புலி நாயனார். எல்லா ஆலயங்களிலும் திருமடங்களிலும் கார்த்திகை பூராடத்தில், அவருடைய குருபூஜை தினம் நடக்கிறது.

    திருக்கடையூருக்கு பக்கத்தில் பூம்புகார் அருகே ஆக்கூர் என்ற ஒரு ஊர் உண்டு. அந்த ஊர் ஈஸ்வரனுக்கு `தான்தோன்றீஸ்வரர்' என்று பெயர். தான்தோன்றீஸ்வரர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென் கரைத் தலங்களில் 46-வது சிவத்தலமாகும்.

    இத்தலம் மீது சம்பந்தர் பாடிய தேவாரம் இரண்டாம் திருமுறையிலும், கபிலதேவ நாயனார் பாடிய பாடல் பதினொராம் திருமுறையிலும் உள்ளது. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி. இத்தகு பெருமை பெற்ற ஊரில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் சிறப்புலி நாயனார்.

    நாள்தோறும் தவறாது `நமசிவாய' என்னும் திருவைந்தெழுத்தை ஓதியும், தம்முடைய குலவழக்கப்படி வேள்விகள் செய்து அதனுடைய பயனை சிவனார்க்கே அர்ப்பணமும் செய்தார்.

    சிவபூஜை செய்வதிலும் சிவனடியார்களுக்கு அமுது படைப்பதிலும் உற்றம் சுற்றம் இணைந்து செயல்பட்ட அவர், ஒருமுறை ஆயிரம் அடியார்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும் என்று ஒரு வைராக்கியத்தோடு இருந்தார்.

    பல்வேறு இடங்களில் இருந்து அடியார்கள் இந்த அன்னம் பாலிக்கும் பூஜையில் கலந்து கொள்வதற்காக ஆக்கூர் வந்து சேர்ந்தார்கள். அவர் எண்ணிப் பார்த்தார். 999 அடியார்களே இருந்தார்கள். ஒரு அடியார் வந்தால் பூஜையைத் தொடங்கிவிடலாம் என்று காத்திருந்தார்.

    இவருடைய ஊக்கத்தையும் வைராக்கியத்தையும் கண்ட தான்தோன்றீஸ்வரர் தாமே, இந்த அன்னம் பாலிக்கும் பூஜையில் கலந்துகொள்ள வேண்டும் என்று வயதான சிவனடியார் வடிவில் வந்து சேர்ந்தார். அதனால், அந்த ஊர் ஈஸ்வரனுக்கு ஆயிரத்தில் ஒருவர் என்ற திருநாமமும் உண்டாயிற்று.

    `திருவாக்கூர் அருமறையோர் உலகம் ஏத்தும்

    சிறப்புலியார் மறப்புலியார் உரிமேற் செங்கண்

    அரவார்த்தார் வருமேற்றார்க்கு அன்பரானார்க்கு

    அமுதளிப்பார் ஒளிவெண்ணீறு அணிந்த மார்பர்

    பெருவாக்கான் மறைபரவி யாகம் போற்றும்

    பெற்றியினார் ஐந்தெழுத்தும் பிறழாது ஓதிக்

    கருவாக்கா இறைவந்தாள் இணைகள் சேர்ந்த

    கருத்தினார் எனையாவும் திருத்தி னாரே.'

    இத்தகு பெருமை பெற்ற சிறப்புலி நாயனார் குரு பூஜை தினம் இன்று.

    • வளர்பிறை திருதியை திதி, மிகவும் விசேஷமானது.
    • திருதியை தினத்தில் எது செய்தாலும் அது மிகச்சிறப்பாக விருத்தியடையும்.

    பொதுவாகவே வளர்பிறை திருதியை திதி, மிகவும் விசேஷமானது, மங்கலகரமானது. திருதியை தினத்தில் எது செய்தாலும் அது மிகச்சிறப்பாக விருத்தியடையும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான், அட்சய திருதியை அன்று நாம் பல பொருள்களை வாங்குகிறோம். பல செயல்களை தொடங்குகின்றோம். வாங்கிய பொருளும் தொடங்கிய செயலும் வளரச் செய்யும் கார்த்திகை மாதத்தின் இந்த திருதியை அபியோக திருதியை தினமாகும். சிலர் ரம்பா திருதியை என்றும் சொல்கிறார்கள்.

    இன்று அம்பாள் படத்தை வைத்து பூஜித்து மாலையில் விளக்கேற்றி, அம்பாளின் ஸ்தோத்திரங்களையும் பாடல்களையும் சொல்லி வழிபட வேண்டும். இந்த வழிபாடு யோக பலன்களை விருத்தி செய்யும். தொழில்துறை மேம்படும். வியாபார விருத்தி உண்டாகும். திடீர் தலைமைப்பதவி போன்ற பதவி உயர்வுகள் கிடைக்கும்.

    • திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் காளிங்க நர்த்தனக் காட்சி.
    • திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, கார்த்திகை-29 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: திருதியை நள்ளிரவு 1.13 மணி வரை. பிறகு சதுர்த்தி.

    நட்சத்திரம்: பூராடம் காலை 10.39 மணி வரை. பிறகு உத்திராடம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீகூடலழகர், திருமொகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் தலங்களில் திருமொழித் திருநாள் தொடக்கம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் காளிங்க நர்த்தனக் காட்சி. வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி தெப்பத்தில் பவனி. திருவிடைமருதூர் பிருகத்குசாம்பிகை புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-புகழ்

    கடகம்- வரவு

    சிம்மம்- சுபம்

    கன்னி- உறுதி

    துலாம்- ஈகை

    விருச்சிகம்- பெருமை

    தனுசு- பொறுப்பு

    மகரம்- மாற்றம்

    கும்பம்- சாந்தம்

    மீனம்- அன்பு

    • பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.
    • 10-ம் நாள் வரை மூலவர் மீசையின்றி சேவை சாதிப்பார்.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருமொழித் திருநாள் என்னும் பகல் பத்து உற்சவத்துடன் நேற்று தொடங்கியது. நேற்று வேங்கட கிருஷ்னன் திருக்கோலத்தில் பெருமாள் மாடவீதிகளை வலம் வந்து அருள்பாலித்தார்.

    10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உற்சவர், வேணுகோபாலன், காளிங்க நர்த்தனர், சக்கரவர்த்தி திருமகன், ஏணிக் கண்ணன், பரமபத நாதன், பகாசு ரவதம், ராமர் பட்டாபிஷேகம், முரளி கண்ணன், நாச்சியார் ஆகிய திருக்கோலங்களில் மாட வீதிகளை வலம் வந்து அருள் பாலிக்கிறார். பகல் பத்து விழாவில் 6-ம் நாள் மாலை முதல் 10-ம் நாள் வரை மூலவர் மீசையின்றி சேவை சாதிப்பார்.

    வைகுண்ட ஏகாதசியான வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கிறார்கள். அன்று இரவு 11.30 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி நம்மாழ்வாருடன் பெரிய வீதி புறப்பாடும் நடக்கிறது.

    வைகுண்ட ஏகாதசியை யொட்டி 23-ந்தேதி அதி காலை 2.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை பக்தர்கள் மூலவரை தரி சனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    பின்னர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் திருவாய்மொழித் திருநாள் எனப்படும் ராப் பத்து உற்சவம் வருகிற 24-ந்தேதி முதல் ஜனவரி 2-ந்தேதி வரை நடக்கிறது.

    • திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் வெள்ளம்.
    • தடுப்புச் சுவர் பகுதி சரிந்து விழுந்தது.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்வதற்கு வசதியாக படி பாதையும், வாகனங்கள் மூலம் செல்ல மலைப்பாதையும் கோவில் நிர்வாக சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மிக்ஜம் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால், திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த 4-ந்தேதி இரவு திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையின் ஒரு பகுதியில் திடீரென்று மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் 12 மீட்டர் நீளம், 8 மீட்டர் உயரத்துக்கு தடுப்பு சுவர் பகுதி சரிந்து விழுந்தது.

    இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் மலைப்பாதை வழியாக கோவிலுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. தற்போது மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சீரமைப்பு பணிகளை இன்னும் ஒரு வாரத்தில் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்த நிலையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை யொட்டி திருத்தணி முருகன் கோவிலுக்கு மலை ப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று முதல் இன்னும் ஒரு வாரம் அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • சுவாமியின் திவ்விய தரிசனம் கண்டு பரவசத்தில் ஆழ்ந்துவிட்டார்.
    • சிவ நாமம் உச்சரிப்பதிலும் தம்மை முழுமையாக ஆட்படுத்திக்கொண்டார்.

    தஞ்சை கரை அருகில் மத்தியார் ஜூன சேத்திரத்தில் அமைந்த திருவிசைநல்லூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர், ஸ்ரீதர ஐயாவாள். இவர் முழு பெயர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள் என்பதாகும். இவர் சிவ பெருமானை ஆராதனை செய்து வேதங்களை நன்கு கற்றவர்.

    எல்லையில்லா சிவ பக்தி உள்ளவர். மைசூர் சமஸ்தானத்தில் திவான பணிபுரிந்து வந்தவர். ஆனாலும் அதில் ஈடுபாடு இல்லாமல், இறைவனைத் தரிசிப்பதிலும், சிவ நாமம் உச்சரிப்பதிலும் தம்மை முழுமையாக ஆட்படுத்திக்கொண்டார். எனவே. பதவியைத் துறந்துவிட்டு நாடெங்கும் சிவதரிசனம் செய்யப் புறப்பட்டுவிட்டார்.

    அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் காவிரியின் வடக்கு, தெற்கு கரைகளில் அமைந்திருக்கும் சிவாலயங்களைத் தரிசித்து வணங்கியபடி திருவிடைமருதூர் என்னும் திருத்தலத்துக்கு வந்தார். அங்கிருந்த மகாலிங்க சுவாமியின் திவ்விய தரிசனம் கண்டு பரவசத்தில் ஆழ்ந்துவிட்டார். தினமும் மகாலிங்க சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்ற விருப்பத்தில், அருகிலுள்ள திருவிச நல்லூரிலேயே தங்கினார். தஞ்சையை ஆண்ட மன்னர் அவரை நல்ல முறையில் கவுரவித்து நிலம், வீடு போன்ற மானியங்கள் அளித்தார்.

    தினமும் மாலையில் திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க மூர்த்தியை தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் இவர் ஆக்யா ஷஷ்டி, ஸ்ரீ கிருஷ்ணத்வா தச மஞ்சரி, ஸ்தோத்ரபத்ததி, கங்காஷ்டகம், சிவபக்த லட்சணம், தயாசதகம், சிவபக்தி கல்பலதிகா போன்ற பக்தி நூல்களை எழுதியுள்ளார்.

    இவர் ஒரு சமயம் தன்னுடைய முன்னோர்களுக்காக சிரார்த்தம் (திதி) கொடுக்க வேண்டியிருந்தது. அப்பொழுது சிரார்தத்திற்கு தேவையான உணவுகளை மிகுந்த ஆச்சாரத்துடன் தயார் செய்தார். அப்பொழுது அங்கு சாப்பிட வந்த பிராமணர்கள் குளிக்கச்சென்றார்கள். அந்த நேரத்தில் ஒரு புலையன் (சிலர் குறவன் என்பார்கள்). 'எனக்கு மிகவும் பசிக்கிறது, உணவு தாருங்கள்' என்று ஸ்ரீதர ஐயாவாளிடம் வந்து வேண்டினார்.

    அவனது கஷ்டத்தை கண்டு மனம் உருகிய ஸ்ரீதர ஐயாவாள், அவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, வாழை இலை போட்டு, தன்னுடைய முன்னோர்களுக்காக செய்து வைத்த உணவை பரிமாறி சாப்பிட வைத்தார். 350 வருடங்களுக்கு முன் இது மிகப் பெரிய விஷயம். இவ்வாறு செய்த வரை, ஊரை விட்டு விலகி வைக்க கூட தயக்க மாட்டார்கள். ஆனால் ஸ்ரீதர ஐயாவாளுக்கு சம்பிரதாயத்தை விட ஒருவரின் பசியை ஆற்றுவது முக்கியமானதாக பட்டது.

    இந்த நிலையில் ஆற்றுக்கு குளிக்கச் சென்ற அந்தணர்கள் திரும்பி வந்தனர். அப்போது வீட்டிற்குள் புலையன் ஒருவனுக்கு, ஸ்ரீதர ஐயாவாள் உணவு அளித்ததை அறிந்து கோபம் கொண்டனர். பின்னர், சாஸ்திரத்தை மீறி நடந்து கொண்டதால், உங்களுடைய வீட்டில் நாங்கள் தர்ப்பண காரியங்களைச் செய்ய மாட்டோம்' என்று கூறி விட்டனர். அப்போது ஸ்ரீதர ஐயாவாள், "மறுபடியும் வீட்டை சுத்தம் செய்து தங்களுக்கு தனியாக உணவு தயாரித்து பரிமாறுகிறேன்" என்றார். ஆனால் அதை ஏற்க அந்தணர்கள் தயாராக இல்லை.

    அவர்கள், "நீ கங்கைக்கு சென்று குளித்துவிட்டு இந்த பாவத்தை போக்கிவிட்டு வா பின் நான் உங்கள் இல்லத்தில் உணவு அருந்துகிறோம்" எனக்கு கூறி எல்லா அந்தணர்களும் சாப்பிடாமல் திரும்பிச் சென்றனர். ஐயாவாள் ஒரு தர்ப்பையை எடுத்து முறைப்படி ஆவாகனம் செய்து முன்னோர்களுக்கு வேட்டி தட்சிணை பழம் முதலில் வைத்து படைத்தார்.

    அன்று மாலை மகாலிங்கேஸ்வரரை தரிசனம் செய்ய கோவிலுக்குச் சென்றார். மாலையில் கோவிலை திறந்த அர்ச்சகர் திகைத்து நின்றார். கோவிலின் உட்புறம் ஸ்ரீதர ஐயா வாள், தன்னுடைய வீட்டில் முன்னோர்களுக்கு படைத்த புதிய வேட்டி, பழம், தட்சிணை முதலானவை மகாலிங்கேஸ்வரர் சன்னிதியில் இருந்தன.

    இருப்பினும் தன்னுடைய முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்ய முடியாததை எண்ணி வருந்திய ஸ்ரீதர ஐயாவாள், மற்ற அந்தணர்கள் கூறியபடி கங்கையில் நீராடுவதற்காக காசிக்கு புறப்பட ஆயத்தமானார். அவர் வீட்டை விட்டு வெளிய வந்த சில அடி தூரத்தில், அவருக்கு எதிரில் ஒரு அழகிய பெண் வந்தாள். அவள் ஸ்ரீதர ஐயாவாளிடம், `நான் உனது கிணற்றில் இருக்கும் பொழுது, நீ ஏன் என்னை தேடி காசிக்கு செல்கிறாய் என்று கூறியபடியே திடீரென்று மறைந்து போனாள்.

    இந்த நிகழ்வைப் பற்றி ஸ்ரீதர ஐயாவாள், அந்தப் பகுதியில் இருந்தவர்களிடமும், அந்தணர்களிடமும் கூறினார். ஆனால் யாரும் அவரை நம்பவில்லை. அப்போது அவரது வீட்டிற்குள் இருந்த நீர் பெருக்கெடுத்து வெளியே வந்து தெருக்களில் ஓடியது. அப்போது அனைவரும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது. ஸ்ரீதர ஐயாவாள் வீட்டின் கிணற்றில் இருந்து நீர் பொங்கி எழுந்து பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர். ஸ்ரீதர ஐயாவாளுக்கு சிவபெருமானின் அருள் இருப்பதை நினைத்து அனைவரும் அவரிடம் மன்னிப்பு கேட்டனர். பின்னர் அவரது முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்து வைத்தனர்.

     ஸ்ரீதர ஐயாவாள் இல்லத்து கிணற்றில் இருந்து கங்கை பிரவாகம் எடுத்து பொங்கியது. ஒரு கார்த்திகை அமாவாசை திதி தினம் ஆகும். இந்த நிகழ்ச்சி இன்று கூட, அதாவது வருடம் தோறும் கார்த்திகை அமாவாசை தினத்தில், ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த மடத்தில் உள்ள கிணற்றில் இருந்து கங்கை பொங்கி வருவதைக் காண முடியும்.

    இவரது வாழ்க்கை சரித்திரத்தில் இருந்து தீண்டத்தகாதவர்கள் என்று உலகத்தில் ஒருவரும் இல்லை என்றும், பசித்திருப்பவருக்கு அன்னம் இடுவதை விட பெரிய தர்மம் உலகத்தில் எதுவும் இல்லை என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

    அமைவிடம்

    கும்பகோணத்திலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ தொலைவில் திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் மடம் உள்ளது. கும்பகோணத்திலிருந்து பேருந்து, ஆட்டோ வசதி உண்டு.

    ×