search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தாமான் தோன்றிக்கோள் ஆட்சி செய்த தாந்தோன்றிமலை
    X

    தாமான் தோன்றிக்கோள் ஆட்சி செய்த தாந்தோன்றிமலை

    • மரங்கள் சூழ்ந்து வனப்புடன் எழில்மிகுந்து காணப்படும்.
    • இறைவனின் இருப்பிடமாக கோவில்களுடன் காட்சியளிக்கின்றன.

    பல்லுயிர்களின் வாழ்விடமாக விளங்குவது மலைகள். நிலத்தினின்றும் உயர்ந்து மரங்கள் சூழ்ந்து வனப்புடன் எழில்மிகுந்து காணப்படும் சில மலைகளை மேகங்கள் உச்சி முகர்ந்து செல்லும். இது ஒரு வகையென்றால் சில மலைகள் பாறை அடுக்குகளாக காட்சியளிக்கும்.

    இவை போன்று எத்தகையதாயினும் பல மலைகள் இறைவனின் இருப்பிடமாக கோவில்களுடன் காட்சியளிக்கின்றன என்றால் அது மிகையாகாது. அத்தகைய மலைகளுள் ஒன்றாக விளங்குவதுதான் கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோன்றிமலை. ஊரின் பெயரும் அதுவே.

    தாந்தோன்றிமலை என்பதற்கு நேராக பொருள் கொண்டால் தானாக தோன்றிய மலை என்றாகிறது. மேலும் தாமான் தோன்றிக்கோள் எனும் குறுநில மன்னன் இந்த மலையை தனது இருப்பிடமாக கொண்டு, சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டுவந்தான் என்பது புறநானூற்று பாடல் மூலம் அறியப்படும் செய்தியாகும்.

    இதனால் இந்த மன்னனின் நினைவாக இவ்வூர் இப்பெயரை பெற்றிருக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இந்த மலை இறைவனால் தோற்றுவிக்கப்பட்டதாகவும், அடியார்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பல்வேறு கருத்துகளும் உள்ளன.

    இதேபோல் இந்த மலையை சம்பந்தப்படுத்தி ஒரு புராண கதையும் உள்ளது. அதாவது ஒரு சமயத்தில், திருப்பாற்கடலில் திருமால் தனது அந்தப்புரத்தில் திருமகளுடன் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார். வாயிலின் வெளியே ஆதிசேஷன் காவல் புரிந்தார். அப்போது இறைவனை தரிசிப்பதற்காக அங்கு வந்த வாயுபகவான் உள்ளே நுழைய முயன்றார். ஆனால் ஆதிசேஷனோ, வாயுபகவானை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார். இதனால் அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதமும், யார் பலசாலி என்பது பற்றிய சச்சரவும் ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் வெளியே வந்த திருமால், 2 பேருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்தார். அப்போது இருவருக்கும் ஒரு போட்டியையும் வைத்தார். அதாவது ஆதிசேஷன் திருவேங்கட மலையை தனது உடலால் அழுத்தி பிடித்துக்கொள்ள வேண்டும். வாயுபகவான் அதை தனது பலத்தால் அசைத்து தன்வசப்படுத்த வேண்டும் என்பது அந்த போட்டியாகும். அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள போட்டி தொடங்கியது.

    போட்டியின் விதிப்படி ஆதிசேஷன் திருவேங்கட மலையை தனது உடலால் சுற்றி இறுக அழுத்தி கொண்டார். வாயு பகவான் அதனை பெயர்த்தெடுக்க முயன்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. கோபம் கொண்ட வாயு பகவான் தனது முழு பலமும் கொண்டு பெரும் புயலாக வீசியபோது அம்மலையின் சிறுசிறு பாகங்கள் சிதறுண்டு நாலா பக்கமும் விழுந்தன.

    அவ்வாறு சிதறி விழுந்த குன்றுகளில் ஒன்றுதான் இந்த தாந்தோன்றிமலை ஆகும், என்பதே அந்த கதையாகும். அதனால் திருவேங்கட மலைக்கு தெய்வீக சக்தி இருப்பது போன்று, அதனில் இருந்து சிதறிய குன்றுகளுக்கும் தெய்வீக சக்தி உண்டு என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இம்மலை தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.

    குடைவரை கோவில்

    தென் திருப்பதி என்ற பெயருக்கு ஏற்ப இங்கு இறைவன் கல்யாண வெங்கடரமண சுவாமியாக கோவில் கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் பொதுவாக கோவில்கள் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும். ஆனால் இந்த கோவிலோ மேற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவில் ஒரு குடைவரைக் கோவில் ஆகும். அதற்கேற்ப கருவறை விளங்குகிறது.

    இங்கு பாறையோடு ஒட்டிய நிலையில் கல்யாண வெங்கடரமண சுவாமி தன் மார்பில் லட்சுமியைத் தாங்கி நின்ற வண்ணம் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அவர் நான்கு கைகளை கொண்டுள்ளார். கோவிலின் அர்த்த மண்டபம், நுழைவு மண்டபம் ஆகியவை பிற்காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

    Next Story
    ×