என் மலர்
வழிபாடு

சிறப்புலி நாயனார் குருபூஜை
- புண்ணியர்கள் வாழ்ந்த பூமி இந்த பூமி.
- மிகப்பெரிய வள்ளலாக வாழ்ந்தவர் சிறப்புலி நாயனார்.
நிலையற்ற பொருளைக் கொண்டு நிலைபெற்ற பொருளாக மாற்றும் புண்ணியர்கள் வாழ்ந்த பூமி இந்த பூமி. சுந்தரர் `சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்" என்று குறிப்பிடும்படியான மிகப்பெரிய வள்ளலாக வாழ்ந்தவர் சிறப்புலி நாயனார். எல்லா ஆலயங்களிலும் திருமடங்களிலும் கார்த்திகை பூராடத்தில், அவருடைய குருபூஜை தினம் நடக்கிறது.
திருக்கடையூருக்கு பக்கத்தில் பூம்புகார் அருகே ஆக்கூர் என்ற ஒரு ஊர் உண்டு. அந்த ஊர் ஈஸ்வரனுக்கு `தான்தோன்றீஸ்வரர்' என்று பெயர். தான்தோன்றீஸ்வரர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென் கரைத் தலங்களில் 46-வது சிவத்தலமாகும்.
இத்தலம் மீது சம்பந்தர் பாடிய தேவாரம் இரண்டாம் திருமுறையிலும், கபிலதேவ நாயனார் பாடிய பாடல் பதினொராம் திருமுறையிலும் உள்ளது. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி. இத்தகு பெருமை பெற்ற ஊரில் அந்தணர் குலத்தில் அவதரித்தவர் சிறப்புலி நாயனார்.
நாள்தோறும் தவறாது `நமசிவாய' என்னும் திருவைந்தெழுத்தை ஓதியும், தம்முடைய குலவழக்கப்படி வேள்விகள் செய்து அதனுடைய பயனை சிவனார்க்கே அர்ப்பணமும் செய்தார்.
சிவபூஜை செய்வதிலும் சிவனடியார்களுக்கு அமுது படைப்பதிலும் உற்றம் சுற்றம் இணைந்து செயல்பட்ட அவர், ஒருமுறை ஆயிரம் அடியார்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும் என்று ஒரு வைராக்கியத்தோடு இருந்தார்.
பல்வேறு இடங்களில் இருந்து அடியார்கள் இந்த அன்னம் பாலிக்கும் பூஜையில் கலந்து கொள்வதற்காக ஆக்கூர் வந்து சேர்ந்தார்கள். அவர் எண்ணிப் பார்த்தார். 999 அடியார்களே இருந்தார்கள். ஒரு அடியார் வந்தால் பூஜையைத் தொடங்கிவிடலாம் என்று காத்திருந்தார்.
இவருடைய ஊக்கத்தையும் வைராக்கியத்தையும் கண்ட தான்தோன்றீஸ்வரர் தாமே, இந்த அன்னம் பாலிக்கும் பூஜையில் கலந்துகொள்ள வேண்டும் என்று வயதான சிவனடியார் வடிவில் வந்து சேர்ந்தார். அதனால், அந்த ஊர் ஈஸ்வரனுக்கு ஆயிரத்தில் ஒருவர் என்ற திருநாமமும் உண்டாயிற்று.
`திருவாக்கூர் அருமறையோர் உலகம் ஏத்தும்
சிறப்புலியார் மறப்புலியார் உரிமேற் செங்கண்
அரவார்த்தார் வருமேற்றார்க்கு அன்பரானார்க்கு
அமுதளிப்பார் ஒளிவெண்ணீறு அணிந்த மார்பர்
பெருவாக்கான் மறைபரவி யாகம் போற்றும்
பெற்றியினார் ஐந்தெழுத்தும் பிறழாது ஓதிக்
கருவாக்கா இறைவந்தாள் இணைகள் சேர்ந்த
கருத்தினார் எனையாவும் திருத்தி னாரே.'
இத்தகு பெருமை பெற்ற சிறப்புலி நாயனார் குரு பூஜை தினம் இன்று.






