என் மலர்
நீங்கள் தேடியது "Pride is the weapon of spirituality"
- நமக்கு வாய்க்கும் எதுவும் இறைவனால் தரப்பட்டது.
- நமது மனதில் கர்வத்தை அமர வைப்பதும் தவறு.
`வாவ்.. சாரி நல்லா இருக்கே.. எங்கே வாங்கினே?'
`இது ஒரிஜினல் காஞ்சிபுரம் பட்டு. இங்கே கிடைக்கிறதெல்லாம் டூப்ளிகேட், அதனால நேரடியா போய் தறியிலயே நெய்து வாங்கினேன். என்ன விலை தான் ஐம்பதாயிரம் ரூபா. பரவாயில்லை, ஒர்த் தான்'. இப்படிப்பட்ட உரையாடலை நாம் அடிக்கடி கடந்திருப்போம். ஆண்களும் இதில் சளைத்தவர்கள் இல்லை என்றாலும், ஆடைகளைப் பொறுத்தவரை பெண்கள் தான் கில்லாடிகள்.
ஒரே வாக்கியத்தில் பல விஷயங்களை நாசூக்காய் பொருத்தி விடுவார்கள். `என் பட்டு காஞ்சிபுரம் பட்டு, உங்களை மாதிரி பக்கத்து கடைல வாங்கினதுல்ல.. நேரடியா அங்கேயே போய் வாங்கினது. அதுவும் உங்களை மாதிரி மெஷின்ல நெய்தது இல்ல, தறியில நெய்தது. இதோட விலை ஐம்பதாயிரம், நீங்க நெருங்க முடியாது. ஆனா எனக்கு இதெல்லாம் சாதாரணம்...' என இத்தனை விஷயங்களும் அந்த ஒற்றை வாக்கியத்தில் இருப்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
அதே போல அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது விருது ஏதேனும் பெற்ற ஆண்கள் அதை மிக லாவகமாக வெளிப்படுத்துவார்கள்.
`எத்தனையோ பேர் இருந்தாலும், தகுதியில்லாத என்னை தலைவராக்கினார் கடவுள்' என்றாவது சொல்லி, தான் தலைவராக்கப்பட்டோம் எனும் விஷயத்தைச் சொல்லிவிடுவார்கள். கூடவே 'நிறைய பேர் போட்டியில இருந்தாங்க, எனக்கு தான் கிடைச்சுது தெரியும்ல' எனும் விஷயத்தை பக்குவமாய்ப் பதிவு செய்வார்கள். இவையெல்லாம் தவறானவை. கடவுள் இவற்றையெல்லாம் எதிர்க்கிறார்.
"நீ அணிந்திருக்கும் ஆடைகுறித்துப் பெருமை பாராட்டாதே; நீ புகழ்பெறும் நாளில் உன்னையே உயர்த்திக்கொள்ளாதே. ஆண்டவரின் செயல்கள் வியப்புக்குரியவை; அவை மனிதரின் கண்ணுக்கு மறைவாய் உள்ளன" என்கிறது சீராக் 11:4.
நமது ஆடைகளைக் குறித்து பெருமை பாராட்டுவது தவறு என்றும், நமக்கு புகழ் கிடைக்கும் நாளில் நாம் நம்மை உயர்வாய் கருதிக்கொள்வது தவறு என்றும் விவிலியம் குறிப்பிடுகிறது. அதாவது, எந்தக் கணத்திலும் பணிவையும், தாழ்மையையும் விட்டுவிடக்கூடாது என்கிறது விவிலியம்.
இன்றைக்கு நாம் ஆடைக்காக அதிகம் செலவிடுகிறோம். அல்லது ஆடை மிகவும் வசீகரமாக, அழகாக, நேர்த்தியாக, பிராண்டட் ஆக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அதன் மூலம் பிறருடைய பார்வை நம் மீது விழ வேண்டும் என்றும். அதன் மூலம் நாம் பெருமை அடைய வேண்டும் எனவும் உள்ளூர விரும்புகிறோம்.
ஆடை என்பது நமது தேவைக்கான ஒரு விஷயமே தவிர, நமது பகட்டைப் பறைசாற்ற வேண்டிய விஷயம் அல்ல. காரணம், ஆடை இல்லாமல் இருக்கின்ற எத்தனையோ மனிதர்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் ஆடை கொடுக்க வேண்டுமே தவிர. நம்மிடம் உயர்வான ஆடை இருக்கிறது என்று சொல்லி அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கக் கூடாது.
`ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள்' என இயேசு சொல்கிறார். எப்போதெல்லாம் நாம் ஆடையில்லாமல் இருக்கும் ஒரு ஏழைக்கு ஆடை அளிக்கிறோமோ அப்போதெல்லாம் அவர் சொல்கிறார். எனவே நமது விருப்பம் பகட்டான ஆடைகளை நாம் அணிவதல்ல, தேவையானவர்களுக்கு ஆடைகளை அளிப்பதாய் இருக்க வேண்டும்.
எதைக்குறித்தும் பெருமை பாராட்டுவது இறைவனின் பார்வைக்கு பிரியம் இல்லாதது என்பதே உண்மை. லூசிபர் எனும் தலைமை தூதன் கடவுளை விடத் தன்னை உயர்த்திக் கொண்டதால் பாதாளத்திற்கு தள்ளப்பட்டான் என்கிறது இறையியல். நாம் நம்மை உயர்ந்தவர்களாகக் கருதிக்கொள்ளும் போதெல்லாம், கீழ் நோக்கித் தள்ளப்படுவோம்.
`தன்னடக்கத்தோடு கூடிய ஆடையை அணிந்து கொள்ளுங்கள்' என்கிறது திமோத்தேயு நூல். தன்னடக்கத்தோடு கூடிய ஆடை என்பது `பெருமை பாராட்டத் தேவையற்ற இயல்பான ஆடை' என பொருள் கொள்ளலாம்.
ஆடைகள், விவிலியம் எங்கும் ஒவ்வொரு செய்தியைச் சொல்லிக்கொண்டே செல்கின்றன. யோசேப்புவுக்கு யாக்கோபு அளித்த பல வர்ண ஆடை சகோதரர் மனதில் பொறாமையை விதைத்தது. அவரை அழிக்குமளவுக்கு அவர்களைத் தூண்டியது.
யோசேப்பு, பற்றிக்கொண்டிருந்த ஆடையை உதறி விட்டு ஓடியதால் சிற்றின்பப் பாவத்தில் விழாமல் தப்பித்தார். பாலை நிலத்தில் பல ஆண்டுகள் நடந்தாலும் கிழியாத ஆடைகளை கடவுள் இஸ்ரேல் மக்களுக்கு உடுத்தியது கடவுளின் கிருபையைப் பேசுகிறது.
ஆடைகள் அவசியமானவை, ஆனால் அவை அவலட்சணமாகவோ, அலங்காரமாகவோ இருப்பது தவறு. பிறர் மனதில் பொறாமையையோ, இயலாமையையோ, துயரத்தையோ வருவிப்பதும் தவறு, நமது மனதில் கர்வத்தை அமர வைப்பதும் தவறு.
ஆடையோ, வாழ்க்கையோ நமக்கு வாய்க்கும் எதுவும் இறைவனால் தரப்பட்டது. அந்த மகிமை முழுவதையும் கொடுத்தவருக்கே கொடுப்போம். அந்த மகிமையின் இழைகளை தற்பெருமைக் கிரீடங்களாகச் சூடிக்கொள்ள நினைப்பது பாவம் என்பதைப் புரிந்து கொள்வோம்.






