என் மலர்
வழிபாடு
- சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
- மண்டல பூஜைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
திருவனந்தபுரம்:
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (கார்த்திகை 1-ந்தேதி) முதல், மாலை அணிந்து விரதமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
மண்டல பூஜை தொடங்கிய சில நாட்கள் பக்தர்கள் வருகை குறைந்து காணப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர்.
இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சபரிமலை சன்னிதானம், பம்பை, பக்தர்கள் நடைபயணம் மேற்கொள்ளும் மலை பாதைகள், மரக்கூட்டம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்த விவகாரத்தில் கேரள ஐகோர்ட்டு தலையிட்டு பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சபரிமலைக்கு செல்ல நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. மேலும் அதற்கான சில நெறிமுறைகளையும் வெளியிட்டது. அதனை அமல்படுத்தியதன் மூலம் சபரிமலையில் நிலவிய கூட்ட நெரிசல் கட்டுக்குள் வந்தது.
இந்த நிலையில் சபரிமலையில் மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா 1973-ம் ஆண்டு சபரிமலைக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும்.
ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் பத்தினம்திட்டா மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து இன்று காலை புறப்பட்டது. தங்க அங்கி ஊர்வலம் வரக்கூடிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஊர்வலம் வந்த இடங்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டு நின்று தங்க அங்கியை தரிசனம் செய்தனர். ஐயப்பனின் தங்க அங்கி ஊர்வலம் பல்வேறு கோவில்களுக்கு சென்று, இறுதியில் சபரிமலைக்கு வந்து சேருகிறது.
நாளை மறுநாள் (26-ந்தேதி) தங்க அங்கி ஊர்வலம் பம்பைக்கு வந்து சேரும். அங்கு பம்பை கணபதி கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்படும். பின்பு அங்கிருந்து நீலிமலை வழியாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தங்க அங்கி எடுத்துச் செல்லப்பட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
26-ந்தேதி மாலையில் இருந்து மறுநாள் (27-ந்தேதி) வரை ஐயப்ப சுவாமி தங்க அங்கியில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள். பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகளவில் இருக்கும் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
மண்டல பூஜைக்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது.
மண்டல பூஜை நடைபெறும் 27-ந்தேதி ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய 40 ஆயிரம் பக்தர்களே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை முடிந்து அன்றைய தினம் இரவு 11.30 மணிக்கு கோவில் நடைசாத்தப்படுகிறது.
பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 30-ந்தேதி மாலை மீண்டும் திறக்கப்படுகிறது.
- சகல விஷ்ணு ஆலயங்களிலும் பரமபதவாசல் திறப்பு விழா.
- ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் முத்தங்கி சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-7 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி காலை 6.27 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: பரணி இரவு 10.34 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று ஸ்ரீவைகுண்ட ஏகாதசி. சகல விஷ்ணு ஆலயங்களிலும் பரமபதவாசல் திறப்பு விழா. திருநெல்வேலி நெல்லையப்பர் புறப்பாடு. வீரவநல்லூர் சுவாமி குதிரை வாகனத்திலும் அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் முத்தங்கி சேவை. சகல விஷ்ணு ஆலயங்களிலும் ராப்பத்து உற்சவ சேவை. திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-போட்டி
மிதுனம்-தனம்
கடகம்-லாபம்
சிம்மம்-மேன்மை
கன்னி-நிறைவு
துலாம்- உறுதி
விருச்சிகம்-போட்டி
தனுசு- இன்பம்
மகரம்-உயர்வு
கும்பம்-திறமை
மீனம்-பயிற்சி
- வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்றது.
- தமிழ்நாடு முழுவதும் வைஷ்ணவ ஸ்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு
- 5 சபைகளில் முதல் சபையான ரத்தின சபையாக திகழ்கிறது.
- ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது நடராஜபெருமானின் 5 சபைகளில் முதல் சபையான ரத்தின சபையாக திகழ்கிறது. இங்கு ஆண்டு தோறும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசன விழா விமரிசையாக நடப்பது வழக்கம்.
இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா வருகிற 26-ந் தேதி விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்காக திருவா லங்காடு கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களின் வசதிக்காக கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
விழாவையொட்டி வருகிற 26-ந்தேதி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு ரத்ன சபாபதி பெருமாள் கோவில் வளாகத்தின் பின்புறத்தில் உள்ள தல விருட்சத்தின் கீழ் அபிஷேகம் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
அதைத்தொடர்ந்து விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்குகிறது. நடராஜருக்கு நெல்லிப்பொடி, வில்வப்பொடி, பால், தேன் மற்றும் பழங்கள் என 33க்கு மேற்பட்ட வகையான அபிஷேகங்கள் விடிய விடிய மறுநாள் காலை வரை நடைபெறும்.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சிறப்பு அலங்கா ரத்தில் மகா தீபாராதனை நடைபெறும்.
பின்னர் 27-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு, கோபுர தரிசனம், பகல், 12 மணிக்கு, அனுக்கிரக தரிசனமும் 28-ந் தேதி காலை, 9 மணிக்கு, சாந்தி அபிஷேகமும் நடை பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், செயல் அலுவலர் ரமணி, மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
- சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் பங்கேற்பார்கள்.
- பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியை யொட்டி நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பகதர்கள் பங்கேற்பார்கள். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்.
இதன்படி இந்த ஆண்டும் பார்த்தசாரதி கோவிலில் பக்தர்களின் வசதிக்காக தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை 2½ மணி அளவில் உபயதாரர்கள், கட்டணதாரர்கள் என 1,500 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இதன் பின்னர் நாளை காலை 6 மணியில் இருந்து பொது தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நாளை இரவு கோவில் நடை சாத்தப்படும் வரையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். இந்த ஆண்டு அதைவிட கூடுதல் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 1 லட்சம் பக்தர்கள் நாளை பார்த்தசாரதி கோவிலில் திரள்வார்கள் என்று எதிர் பார்ப்பதால் தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோரது மேற்பார்வை யில் ராயப்பேட்டை உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு உள்ளனர். இவர்களோடு 6 துணை கமிஷனர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நாளை காலை 6 மணி தரிசனத்துக்கு இன்று இரவில் இருந்தே பக்தர்கள் கோவிலில் கூடுவார்கள் என்பதால் அவர்களின் வசதிக்காக 2 வரிசைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு மாட வீதியில் இருந்து ஒரு வரிசையும், கிழக்கு கோபுரத்தின் எதிர் திசையில் இருந்து ஒரு வரிசையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு சிறப்பு தரிசனம் கிடையாது என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்திருப்பதால் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தர்களும் பொது தரிசன வரிசை வழியாகவே அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ள னர். 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதையொட்டி திரு வல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று பிற்பகலில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட உள்ளனர். இன்று இரவு முதல் நாளை இரவு வரை தொடர்ச்சியாக அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
கோவிலை சுற்றிலும் 10 இடங்களில் தீயணைப்பு கருவிகளுடன் 3 வாகனங்களில் 60 தீயணைப்பு வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலமாக போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெயில் மற்றும் மழையால் பக்தர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தகரத்திலான தற்காலிக மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலின் தெப்பக்குளத்தில் ரப்பர் படகுகளுடன் 10 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோவிலை சுற்றிலும் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு குடிநீர் விநி யோகம், தற்காலிக கழிப்பிட வசதி, தாய்மார்கள் பாலூட் டும் தற்காலிக அறை என மற்றும் கோவிலுக்கு உள்ளேயும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 5-ம் திருவிழாவான இன்று கருட தரிசனம் நடைபெற்றது.
- ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் தரிசனம் நடைபெற்றது.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் 10 நாள் மார்கழி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. மார்கழி விழாவை முன்னிட்டு தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. 5-ம் திருவிழாவான இன்று முக்கிய நிகழ்வான கருட தரிசனம் நடைபெற்றது.
விழாவில், அதிகாலை 5 மணியளவில் ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் தரிசனம் நடைபெற்றது. வீரமார்த்தாண்ட விநாயகர் கோயில் முன் தாணுமாலய சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கிழக்கு நோக்கி எழுந்தருளினர்.
அந்நேரத்தில், அவர்களைச் சுற்றி கருடன் வலம் வரும் கருட தரிசனம் நடைபெற்றது. இதை காண்பதற்கு சுசீந்திரம் கோயில் வளாக பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
பின்னர், இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி ரதவீதியை வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. கருட தரிசனத்துக்கு அதிக அளவில் பக்தர்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- அரங்கன் மனித பிறவியில் உயர்வு தாழ்வு பார்த்ததில்லை.
- முகமதிய பெண்மணிக்கும் அருள்பாலித்தவன் அரங்கன்.
ஸ்ரீரங்கத்து அரங்கன் அனைவருக்கும் பொதுவானவர். இவர் மனித பிறவியில் உயர்வு தாழ்வு பார்த்ததில்லை. ஏன், மதங்களிடையே வேறுபாடு கண்டதில்லை. அனைவரையும் அரவணைத்து செல்லும் பேரருளாளர் இவர். இந்த பிரமாண்ட ஆலயத்தின் இரண்டாவது பிரகாரத்தில் அமைந்திருக்கும் துலுக்க நாச்சியார் சன்னதி, புதிதாக வருபவர்களை வியப்பில் ஆழ்த்தும்.
ஆமாம், முகமதிய பெண்மணிக்கும் அருள்பாலித்தவன் இந்த அரங்கன். கண்ணன் அடிதொழ ஜாதி வேண்டாம், மதம் வேண்டாம், அன்பு ஒன்றே போதும் என நிரூப்பித்த சம்பவம் இது. முகலாயர்களின் முதல் படையெடுப்பின் போது இந்த ஸ்ரீரங்கத்திருத்தலம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
சுல்தானின் படைகள் திருவரங்கத்தை நெருங்குவதை அறிந்து கொண்ட பக்தர்கள், மூலஸ்தானத்துக்கு முன்பாக ஒருதற்காலிக சுவற்றை எழுப்பி அதன் முன் உற்சவரான நம்பெருமாளை வைத்து விடுகின்றனர். கோவிலை சூறையாட வந்த மாலிக் கபூரின் படையினர் உற்சவர் நம்பெருமாளின் விக்ரகத்தை டெல்லிக்கு தூக்கி சென்று விடுகின்றனர்.
அந்த விக்ரகத்தை பார்த்த சுல்தானின் மகள், அதை தன் அறையிலேயே வைத்துக் கொண்டாள். அது மட்டுமல்லாமல் அந்த அரங்கனை அவள் உளமார நேசிக்கவும் ஆரம்பித்தாள். திருவரங்கத்து வாழ் பெரியோர்கள் நம்பெருமாளை எப்படி மீட்பது என ஆலோசித்தனர்.
கசன்பி பாதுஷாவிற்கு ஆடல், பாடல் என்றால் மிகவும் விருப்பம் என்று அறிந்தனர். அதில் சிறந்தவர்களில் 60 பேர் பாதுஷாவின் மாளிகைக்கு சென்றனர். புகழ் பெற்ற ஜக்கிந்தி நடனம் ஆடினார்கள். மனம் மகிழ்ந்த பாதுஷா நிறைய பரிசுகள் வழங்கினார். அதை வேண்டாம் என்று கூறிய நடன குழுவினர் எங்கள் அரங்கன் சிலையை பரிசாக தாருங்கள் என்று கேட்டனர்.
வெறும் சிலையை மட்டும் கேட்கிறார்களே என வியந்த பாதுஷா, அந்தப்புரத்தில் இருந்து எடுத்துக் கொள்ள கூறினார். சுரதாணிக்கு தெரியாமல் அவர்கள் அரங்கன் சிலையை கொண்டு வந்துவிட, சுரதாணி அரங்கனைக் காணாமல் அழுது புலம்பினாள். அவளின் நிலையை கண்ட பாதுஷா அரங்களை மீட்டு வருமாறு வீரர்களை அனுப்பினார். அரங்கனை காண வேண்டும் எனும் ஆசையில் சுல்தாணியும் படைகளோடு சென்றாள்.
படை வருவதை அறிந்த நாட்டிய குழுவினர், அரங்கனை எடுத்துக் கொண்டு திருமலை காட்டுப்பகுதியில் மறைத்து வைத்தார்கள். வீரர்களுடன் திருவரங்கம் வந்த சுல்தாணி அரங்கனைக் காணாமல் மிகுந்த துயரம் அடைந்தாள். துக்கம் தாங்காமல் கோவிலின் முன் மயங்கி விழுந்து உயிர் துறந்தாள். அப்போது அங்கு அரங்கனின் விஸ்வரூபம் தோன்றியது. சுரதாணியின் உடலில் இருந்து ஒரு துளி கிளம்பி அரங்கனின் திருமேனியில் ஐக்கியம் அடைந்தது.
பல்லாண்டு காலம் திருமலையில் மறைத்து வைக்கப்பட்ட அரங்கன், ஒருசோழ மன்னனால் திருவரங்கம் கொண்டுவரப்பட்டு மறுபடியும் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
சோழனின் கனவில் தோன்றி சுரதாணிக்கு ஒரு சன்னிதி அமைக்கும்படி அரங்கன் கூறினான். அதன்படி சோழ மன்னன், அரங்கன் கருவறைக்கு வடகிழக்கு மூலையில் ஒரு சன்னிதி அமைத்து, அதில் சித்திர வடிவில் சுரதாணியின் வடிவை தீட்டச் செய்தான்.
இன்றும் கோவில் இரண்டாம் பிரகார வடகீழ் மூலையில் சித்திர வடிவில் சுரதாணி காட்சி அளிக்கிறார். இன்றும் நம்பெருமாளுக்கு ஏகாதசி அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து துலுக்க நாச்சியாருக்கு நைவேத்தியம் படைக்கப்பட்ட பிறகு அரங்கனுக்கு படைக்கப்படுகிறது. அரங்கனை தரிசிக்கும் போது மறக்காமல் அன்னை துலுக்க நாச்சியாரையும் தரிசிக்கின்றனர் பக்தர்கள்.
- முன்பு இவ்வூர் `பருத்திக்கொல்லை’ என்று அழைக்கப்பட்டுள்ளது.
- பல்லவர்களால் எழுப்பப்பட்ட ஆலயம்.
கோவில் தோற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் என்ற ஊர், சிறப்புமிக்க வைணவத் திருத்தலமாகத் திகழ்கிறது. சிலேடைக் கவி என்று அழைக்கப்படும் காளமேகப் புலவரின் சொந்த ஊர் இதுவாகும். இந்த ஊரைப் பற்றி காளமேகப் புலவர், கீழ்கண்டவாறு சிறப்பித்துக் கூறியிருக் கிறார்.
`மண்ணில் இருவர் மணவாளர்
மண்ணளந்த கண்ணவன்,
இவன்பேர் காளமுகில் கண்ணன்
அவனுக்கூ ரெண்ணில் அணியரங்க மொன்றே
இவனுக்கூர் எண்ணாயிரம்'
எண்ணாயிரம் ஊர் சிறந்த வைணவத் தலமாகத் திகழ, அங்குள்ள அழகிய நரசிங்க பெருமாள் கோவிலே முக்கிய காரணம். இந்த ஆலயத்தில் நான்கு விதமான கோலத்தில் பெருமாள் அருள்பாலித்து வருகிறார். ஒன்று, அழகிய சிங்கர் எனப்படும் லட்சுமி நரசிம்மர். இரண்டு, ஸ்ரீதேவி- பூதேவி உடனாய வைகுண்டவாசப்பெருமாள். மூன்று, லட்சுமி வராகர். நான்கு, வேணுகோபாலர். நடுநாட்டுப் பதியில் தல யாத்திரையில் ஈடுபட்டிருந்த முனிவர்களும், சித்தர்களும், லட்சுமி நரசிம்மரின் திவ்ய தரிசனத்தைக் காண விரும்பினர். அதற்காக திருமாலை வேண்டினர். அதன்படி திருமால், அவர்களுக்கு லட்சுமி நரசிம்மர் கோலத்தை காட்டி அருளிய தலம் இதுவாகும்.
முன்பு இவ்வூர் `பருத்திக்கொல்லை' என்று அழைக்கப்பட்டுள்ளது. இங்கு தீவிர விஷ்ணு பக்தையான பருத்திக்கொல்லையம்மாள் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கி, ராமானுஜர் இந்தத் திருத்தலத்திற்கு வந்துள்ளார்.
பின்னர் அவர் இவ்வூரில் உள்ள எண்ணாயிரம் என்ற மலையில் துறவறம் மேற்கொண்டிருந்த 8 ஆயிரம் சமணர்களை சந்தித்தார். பின் அவர்களுடன் வாதம் புரிந்து, தன்னுடைய கூர்மையான அறிவாலும், இறை அருளாலும் வெற்றிகொண்டார். இதனால் அந்த சமணத் துறவிகள், வைணவத்தை தழுவினர். அப்படி வைணவத்தை தழுவிய அவர்களின் வம்சாவளியினர் தங்களை `அஷ்ட சகஸ்ர கோத்திரர்' என்று அழைத்துக் கொண்டனர்.
பல்லவர்களால் எழுப்பப்பட்ட ஆலயம் இதுவாகும். அவர் களுக்கு பின்னர் சோழர்கள் ஆட்சியில் இந்த ஆலயம் பல்வேறு திருப்பணிகளால் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆதித்த சோழனின் மகனான முதலாம் பராந்தகச் சோழன் தனது ஒப்பற்ற கலைத் திறமையைக் கொண்டு, சிறியதாக இருந்த இந்த பெருமாள் கோவிலை, கற் கோவிலாகவும், பேராலயமாகவும் விரிவு படுத்தியதாக கல்வெட்டு சான்றுகள் எடுத்துரைக்கின்றன.
பராந்தகச் சோழனால் சீரமைக்கப்பட்ட இவ்வாலயம், பின்னர் அவரது பேரனான ராஜராஜ சோழனால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழன் காலத்தில் எசாலம், எண்ணாயிரம், நந்திவாடி மற்றும் பிரம்மதேசம் ஆகிய நான்கு ஊர்களும் 'ராஜராஜ சதுர்வேதிமங்கலம்' என்று அழைக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு ஊர்களிலும் வேதம் ஓதும் அந்தணர்களை குடியமர்த்தினான், மாமன்னன் ராஜராஜன். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் எண்ணாயிரத்தில் வேத பாடசாலை ஒன்றை நிறுவினான். அந்தணர்களுக்கு வேண்டிய பொன்னும், நெல்லும் கொடுத்து, அவர்கள் தங்கும் இடத்தையும் அமைத்துத் தந்துள்ளான். சிவ வேதியர்களுக்கும், வைணவ பட்டர் களுக்கும் போதிய நிலங்களையும் தானமாக வழங்கியுள்ளான்.
தரையில் இருந்து சுமார் 4 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் முழுவதும், கருங்கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. இரு பக்க திண்ணைகளுடன் கூடிய முன் மண்டபம், நடுவே படிகள், உள்ளே நீண்ட மண்டப வரிசை இருக்க, அங்கே வேணுகோபாலர் காட்சி தருகிறார். இடை மண்டபத்தின் இடது புறம் லட்சுமி வராகர், அற்புதக்கலை படிப்பாகத் திகழ்கிறார். கருவறையில் ஸ்ரீதேவி - பூதேவி உடனாய வைகுண்டவாசப் பெருமாள் வீற்றிருக்க, அவா்களுக்கு முன்பாக லட்சுமி நரசிம்மர் வீற்றிருக்கிறார்.
பிரதோஷ வேளைகளிலும், சுவாதி நட்சத்திரம் அன்றும், இங்கு நரசிம்மருக்கு நடந்திடும் திருமஞ்சன சேவையில் கலந்துகொண்டு, நரசிம்மருக்கு பாலபிஷேகம் செய்து, பானகம் நிவேதனம் செய்தால், தீராத கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை.
மேலும் பில்லி, சூன்யம் உள்ளிட்ட மாந்திரீக பிரச்சினைகளும் அகலும் என்கிறார்கள். குழந்தை வரம் வேண்டுபவர்கள், ரோகிணி நட்சத்திரம் அன்று வேணுகோபாலருக்கு திருமஞ்சனம் செய்து, பால் பாயசம் நைவேத்தியமாக படைத்தால் பலன் கிடைக்குமாம்.
அதேபோல் திருமண வரம் வேண்டி வருபவர்கள், லட்சுமி வராகருக்கு மாலை சாத்தி வணங்கினால் போதுமானது.
அமைவிடம்
விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ளது, நேமூர். இங்கிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, எண்ணாயிரம் திருத்தலம்.
- 2-வது நாளான நேற்று திரளான பக்தர்கள் வருகை தந்தனர்.
- ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
திருநள்ளாறு:
மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் நேற்று முன்தினம் பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிபகவானை தரிசனம் செய்து, எள் தீபம் ஏற்றி வழிபட்டனர்.
தற்போது பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடப்பதாலும், தொடர் மழை, வெள்ளம் காரணமாக சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.
இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி விழாவின் 2-வது நாளான நேற்று திரளான பக்தர்கள் வருகை தந்தனர். அவர்கள் நளன்குளத்தில் புனித நீராடி கலிதீர்த்த விநாயகரை வழிபட்டு பின்னர் சனீஸ்வரனை தரிசனம் செய்தனர்.
நேற்று காலை முதல் மாலை வரை சுமார் ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. நாளை (சனிக்கிழமை) அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- வீடுகளில் குடில்கள் அமைத்தும், கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்தும் அலங்கரித்துள்ளனர்.
புதுச்சேரி:
ஏசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் குடில்கள் அமைத்தும், கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்தும் அலங்கரித்துள்ளனர். மேலும் வீடுகளில் ஸ்டார்கள் தொடங்கவிட்டுள்ளனர். மேலும் நகரப்பகுதியில் சாலையோரங்களில் குடில்கள், ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள், பொம்மைகள் உள்ளிட்டவைகள் விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கிறிஸ்தவர்கள் வீடுகளில் சென்று குழந்தைகளுக்கு பரிசுகளும் அளித்து வருகின்றனர்.
புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, மிஷன் வீதி ஜென்மராக்கினி, தூய்மா வீதி கப்ஸ், அரியாங்குப்பம் மாதா, வில்லியனூர் மாதா உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.
- அதிகாலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும்.
- நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுநதாண்டகத்துடன் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் பிரதான நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
முன்னதாக 13-ந்தேதி முதல் பகல்பத்து திருவிழா நடைபெற்றது. பகல் பத்து உற்சவம் 10-வது நாளான இன்றுடன் நிறைவு பெறுகிறது. சொர்க்கவாசல் திறப்புடன் நாளை ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது.
இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் நாளை அதிகாலை 3 மணியளவில் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத் திலிருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வருவார். தொடர்ந்து இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வருவார்.
முன்னதாக விரஜா நதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்ட ருள்வார். அதனைத் தொடர்ந்து காலை 4 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்படும். அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலைக் கடந்து மணல்வெளி, நடைப் பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக் கொட்டகைக்கு வருவார். அங்கு பெருமாள் சுமார் 1 மணிநேரம் பக்தர் களுக்கு சேவை சாதிப்பார்.
அதன்பின் சாதரா மரியாதையாகி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நள்ளிரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். நள்ளிரவு 12 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு அதிகாலை 1.15 மணியளவில் மூலஸ்தானம் சேருவார்.

வைகுண்ட ஏகாதசிவிழா வின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான மோகினி அலங்காரம் வைபவம் இன்று (22-ந் தேதி) நடந்தது. இதை முன்னிட்டு இன்று காலை உற்சவர் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் அர்ச்சுன மண்டபத்திற்கு எழுந்தருளினார். மாலை 5 மணிக்குமேல் நான்காம் பிரகாரம் வலம் வந்து கருட மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார், இரவு 8 மணிக்குமேல் ஆழ்வார், ஆச்சார்யர்கள் மரியாதை யான பின் 9 மணியளவில் மூலஸ்தானம் சேருவார். விழாவிற்கான ஏற்பாடு களை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் தலைமையில், அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், கைங்கர்யபரர்கள், அலு வலர்கள், பணியாளர்கள் மற்றும் உபயதாரர்கள் உள்ளிட்ட ஒருங் கிணைப்பாளர்கள் செய்துள்ளனர்.

வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் விழா கோலம் பூண்டுள்ளது. ராஜகோபுரம் உள்ளிட்ட, 21 கோபுரங்கள், 7 பிரகாரங்கள் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிப்பட்டு ஜொலிக் கின்றன. மேலும், கோவில் வளாகத்திற்குள் மூலவர் ரங்கநாதர், சங்கு, சக்கரம், நாமம் போன்ற உருவங்களில் மின் விளக்குகள் ஜொலிக்கின்றன.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண சுமார் 1 லட்சம் பக்தர்கள் வரு வார்கள் என்று எதிர் பார்க்கபப்டுகிறது. இன்று காலை முதலே கோவிலில் பக்தர்கள் குவிய தொடங்கி உள்ளனர். இதனால் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்பு பணிக்காக திருக்கோவில் ரெங்க விலாஷ் மண்டபம் அருகில் மாநகர காவல்துறை சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றது.
- வெள்ளை சங்கின் பேரொலியை நீ கேட்கவில்லையா?
- எல்லோருக்கும் தலைவனாக விளங்கும் இறைவனை நீ பாடுவாயாக!
திருப்பாவை
பாடல்
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
விளக்கம்
பெண்ணே! பொழுது விடிந்தது. இதோ பறவைகள் ஒலி எழுப்புகின்றன. கருடனை வாகனமாக கொண்ட பெருமாள் கோவிலில் இருந்து ஒலிக்கின்ற வெள்ளை சங்கின் பேரொலியை நீ கேட்கவில்லையா? தூக்கத்தில் இருந்து எழுந்திரு! பூதகி என்னும் ராட்சசியின் மார்பில் சுரந்த விஷப்பாலை குடித்து அவளை அழித்தவன், வண்டிச் சக்கரத்தின் வடிவில் வந்த சகடாசுரனை தன் கால்களால் உதைத்துக் கொன்றவன், திருப்பாற்கடலில் ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது துயில் கொண்டிருப்பவன். இப்படி பல சிறப்புகள் உடைய திருமாலை, முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுந்து 'அரி அரி்' என்று போற்றி அழைக்கும் பேரொலி உள்ளத்தில் புகுந்து குளிர்விக்கிறதே! நோன்புக்கு செல்வோம் எழுந்து வா!
திருவெம்பாவை
பாடல்
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலவே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்
விளக்கம்
மான் போன்ற சாயலை உடையவளே! நாளைக்கு நானே முதலில் வந்து உங்களை எழுப்புவேன் என்று கூறினாயே! இப்போது நாங்கள் உன்னைத் தேடி வந்து எழுப்புகிறோம். நேற்று நீ சொன்ன சொல் எந்ததிசையில் சென்றுவிட்டது? நீ பதில் சொல்லமாட்டாய். இன்னும் பொழுது விடியவில்லையா? வானுலக தேவர்களும், மண்ணில் வாழும் மக்களும் மற்ற உலகில் உள்ளவர்களால் கூட அறிய முடியாத தன்மையை கொண்டவன் இறைவன். அப்படிப்பட்டவன் எங்கள் மீது வலிய வந்து கருணைகாட்டுகிறான். அவன் புகழை நாங்கள் பாடுவதைக் கேட்டும் நீ உறங்குகிறாய்? பதில் எதுவும் சொல்லாமலும், இறைவனைப் பாடி உருகாமலும் இருக்கிறாயே! இது உனக்கு சரிதானா? உனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தலைவனாக விளங்கும் இறைவனை நீ பாடுவாயாக!






