என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணாயிரம் பெருமாள்"

    • முன்பு இவ்வூர் `பருத்திக்கொல்லை’ என்று அழைக்கப்பட்டுள்ளது.
    • பல்லவர்களால் எழுப்பப்பட்ட ஆலயம்.

    கோவில் தோற்றம்

    விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் என்ற ஊர், சிறப்புமிக்க வைணவத் திருத்தலமாகத் திகழ்கிறது. சிலேடைக் கவி என்று அழைக்கப்படும் காளமேகப் புலவரின் சொந்த ஊர் இதுவாகும். இந்த ஊரைப் பற்றி காளமேகப் புலவர், கீழ்கண்டவாறு சிறப்பித்துக் கூறியிருக் கிறார்.

    `மண்ணில் இருவர் மணவாளர்

    மண்ணளந்த கண்ணவன்,

    இவன்பேர் காளமுகில் கண்ணன்

    அவனுக்கூ ரெண்ணில் அணியரங்க மொன்றே

    இவனுக்கூர் எண்ணாயிரம்'

    எண்ணாயிரம் ஊர் சிறந்த வைணவத் தலமாகத் திகழ, அங்குள்ள அழகிய நரசிங்க பெருமாள் கோவிலே முக்கிய காரணம். இந்த ஆலயத்தில் நான்கு விதமான கோலத்தில் பெருமாள் அருள்பாலித்து வருகிறார். ஒன்று, அழகிய சிங்கர் எனப்படும் லட்சுமி நரசிம்மர். இரண்டு, ஸ்ரீதேவி- பூதேவி உடனாய வைகுண்டவாசப்பெருமாள். மூன்று, லட்சுமி வராகர். நான்கு, வேணுகோபாலர். நடுநாட்டுப் பதியில் தல யாத்திரையில் ஈடுபட்டிருந்த முனிவர்களும், சித்தர்களும், லட்சுமி நரசிம்மரின் திவ்ய தரிசனத்தைக் காண விரும்பினர். அதற்காக திருமாலை வேண்டினர். அதன்படி திருமால், அவர்களுக்கு லட்சுமி நரசிம்மர் கோலத்தை காட்டி அருளிய தலம் இதுவாகும்.

    முன்பு இவ்வூர் `பருத்திக்கொல்லை' என்று அழைக்கப்பட்டுள்ளது. இங்கு தீவிர விஷ்ணு பக்தையான பருத்திக்கொல்லையம்மாள் என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கி, ராமானுஜர் இந்தத் திருத்தலத்திற்கு வந்துள்ளார்.

    பின்னர் அவர் இவ்வூரில் உள்ள எண்ணாயிரம் என்ற மலையில் துறவறம் மேற்கொண்டிருந்த 8 ஆயிரம் சமணர்களை சந்தித்தார். பின் அவர்களுடன் வாதம் புரிந்து, தன்னுடைய கூர்மையான அறிவாலும், இறை அருளாலும் வெற்றிகொண்டார். இதனால் அந்த சமணத் துறவிகள், வைணவத்தை தழுவினர். அப்படி வைணவத்தை தழுவிய அவர்களின் வம்சாவளியினர் தங்களை `அஷ்ட சகஸ்ர கோத்திரர்' என்று அழைத்துக் கொண்டனர்.

    பல்லவர்களால் எழுப்பப்பட்ட ஆலயம் இதுவாகும். அவர் களுக்கு பின்னர் சோழர்கள் ஆட்சியில் இந்த ஆலயம் பல்வேறு திருப்பணிகளால் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆதித்த சோழனின் மகனான முதலாம் பராந்தகச் சோழன் தனது ஒப்பற்ற கலைத் திறமையைக் கொண்டு, சிறியதாக இருந்த இந்த பெருமாள் கோவிலை, கற் கோவிலாகவும், பேராலயமாகவும் விரிவு படுத்தியதாக கல்வெட்டு சான்றுகள் எடுத்துரைக்கின்றன.

    பராந்தகச் சோழனால் சீரமைக்கப்பட்ட இவ்வாலயம், பின்னர் அவரது பேரனான ராஜராஜ சோழனால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழன் காலத்தில் எசாலம், எண்ணாயிரம், நந்திவாடி மற்றும் பிரம்மதேசம் ஆகிய நான்கு ஊர்களும் 'ராஜராஜ சதுர்வேதிமங்கலம்' என்று அழைக்கப்பட்டுள்ளது.

    இந்த நான்கு ஊர்களிலும் வேதம் ஓதும் அந்தணர்களை குடியமர்த்தினான், மாமன்னன் ராஜராஜன். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் எண்ணாயிரத்தில் வேத பாடசாலை ஒன்றை நிறுவினான். அந்தணர்களுக்கு வேண்டிய பொன்னும், நெல்லும் கொடுத்து, அவர்கள் தங்கும் இடத்தையும் அமைத்துத் தந்துள்ளான். சிவ வேதியர்களுக்கும், வைணவ பட்டர் களுக்கும் போதிய நிலங்களையும் தானமாக வழங்கியுள்ளான்.

    தரையில் இருந்து சுமார் 4 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் முழுவதும், கருங்கல்லால் வடிக்கப்பட்டுள்ளது. இரு பக்க திண்ணைகளுடன் கூடிய முன் மண்டபம், நடுவே படிகள், உள்ளே நீண்ட மண்டப வரிசை இருக்க, அங்கே வேணுகோபாலர் காட்சி தருகிறார். இடை மண்டபத்தின் இடது புறம் லட்சுமி வராகர், அற்புதக்கலை படிப்பாகத் திகழ்கிறார். கருவறையில் ஸ்ரீதேவி - பூதேவி உடனாய வைகுண்டவாசப் பெருமாள் வீற்றிருக்க, அவா்களுக்கு முன்பாக லட்சுமி நரசிம்மர் வீற்றிருக்கிறார்.

    பிரதோஷ வேளைகளிலும், சுவாதி நட்சத்திரம் அன்றும், இங்கு நரசிம்மருக்கு நடந்திடும் திருமஞ்சன சேவையில் கலந்துகொண்டு, நரசிம்மருக்கு பாலபிஷேகம் செய்து, பானகம் நிவேதனம் செய்தால், தீராத கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை.

    மேலும் பில்லி, சூன்யம் உள்ளிட்ட மாந்திரீக பிரச்சினைகளும் அகலும் என்கிறார்கள். குழந்தை வரம் வேண்டுபவர்கள், ரோகிணி நட்சத்திரம் அன்று வேணுகோபாலருக்கு திருமஞ்சனம் செய்து, பால் பாயசம் நைவேத்தியமாக படைத்தால் பலன் கிடைக்குமாம்.

    அதேபோல் திருமண வரம் வேண்டி வருபவர்கள், லட்சுமி வராகருக்கு மாலை சாத்தி வணங்கினால் போதுமானது.

    அமைவிடம்

    விழுப்புரத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் உள்ளது, நேமூர். இங்கிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, எண்ணாயிரம் திருத்தலம்.

    ×