என் மலர்tooltip icon

    வழிபாடு

    • வெள்ளை சங்கின் பேரொலியை நீ கேட்கவில்லையா?
    • எல்லோருக்கும் தலைவனாக விளங்கும் இறைவனை நீ பாடுவாயாக!

    திருப்பாவை

    பாடல்

    புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்

    வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

    பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

    கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

    வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

    உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

    மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்

    உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    பெண்ணே! பொழுது விடிந்தது. இதோ பறவைகள் ஒலி எழுப்புகின்றன. கருடனை வாகனமாக கொண்ட பெருமாள் கோவிலில் இருந்து ஒலிக்கின்ற வெள்ளை சங்கின் பேரொலியை நீ கேட்கவில்லையா? தூக்கத்தில் இருந்து எழுந்திரு! பூதகி என்னும் ராட்சசியின் மார்பில் சுரந்த விஷப்பாலை குடித்து அவளை அழித்தவன், வண்டிச் சக்கரத்தின் வடிவில் வந்த சகடாசுரனை தன் கால்களால் உதைத்துக் கொன்றவன், திருப்பாற்கடலில் ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது துயில் கொண்டிருப்பவன். இப்படி பல சிறப்புகள் உடைய திருமாலை, முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுந்து 'அரி அரி்' என்று போற்றி அழைக்கும் பேரொலி உள்ளத்தில் புகுந்து குளிர்விக்கிறதே! நோன்புக்கு செல்வோம் எழுந்து வா!

    திருவெம்பாவை

    பாடல்

    மானேநீ நென்னலை நாளைவந் துங்களை

    நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே

    போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ

    வானே நிலவே பிறவே அறிவரியான்

    தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்

    வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

    ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்

    ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்

    விளக்கம்

    மான் போன்ற சாயலை உடையவளே! நாளைக்கு நானே முதலில் வந்து உங்களை எழுப்புவேன் என்று கூறினாயே! இப்போது நாங்கள் உன்னைத் தேடி வந்து எழுப்புகிறோம். நேற்று நீ சொன்ன சொல் எந்ததிசையில் சென்றுவிட்டது? நீ பதில் சொல்லமாட்டாய். இன்னும் பொழுது விடியவில்லையா? வானுலக தேவர்களும், மண்ணில் வாழும் மக்களும் மற்ற உலகில் உள்ளவர்களால் கூட அறிய முடியாத தன்மையை கொண்டவன் இறைவன். அப்படிப்பட்டவன் எங்கள் மீது வலிய வந்து கருணைகாட்டுகிறான். அவன் புகழை நாங்கள் பாடுவதைக் கேட்டும் நீ உறங்குகிறாய்? பதில் எதுவும் சொல்லாமலும், இறைவனைப் பாடி உருகாமலும் இருக்கிறாயே! இது உனக்கு சரிதானா? உனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தலைவனாக விளங்கும் இறைவனை நீ பாடுவாயாக!

    • சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள்.
    • திருமாலின் முதன்மையான வாகனமாக இருக்கிறார்.

    ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கருடாழ்வார் வழிபாடு மூலம் நமக்கு உண்டாகும் பிரச்சினைகளை எளிதில் தீர்த்து விடலாம். நமக்கு ஏற்படக் கூடிய பிரச்சினைகளின் சுமை எதுவாக இருந்தாலும், அதை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியை நாம் பெற வேண்டுமென்றால் கருடாழ்வார் வழிபாடு நமக்கு கைகொடுக்கும் கருட பகவான் என்பவர் திருமாலின் வாகனங்களில் பெரிய திருவடி என்று அழைக்கப்படுபவர் ஆவார். இவரே திருமாலின் முதன்மையான வாகனமாக இருக்கிறார். கருட பகவானைப் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்வோம்.

    கருட பகவான் ஞானம், பலம், ஐஸ்வர்யம், வீரியம், அதீத சக்தி, தேஜஸ் என்ற ஆறு விதமான குணங்களுடன் திகழ்கிறார்.

    கருடனுடைய மகிமையை பற்றி ஏகாதசி, திருவோணம் போன்ற புண்ணிய தினங்களில் படிப்பவர்களும், கேட்ப வர்களும் கடும் நோய்களில் இருந்து விடுதலை பெறுகிறார்கள். கருட பகவானுக்கு சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகா மோதர், மல்லீபுஷ்ய பிரியர். மங்களாலயர், சோமகார், பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகரு டன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி, ஓடும்புள், கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு. கருடனுக்கு சிவப்பு நிறமுள்ள பட்டு வேஷ்டியை அணிவித்து மல்லிகைப்பூ, மரிக் கொழுந்து, கதிர்ப்பச்சை. சம்பகப் பூக்களால் அர்ச்சனை செய்வது சிறந்தது.

    குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி, சந்தோஷம் நிலவ வேண்டு மென்றால் திங்கட்கிழமை கருடாழ்வார் வழிபாடு சிறந்தது. உடல் உறுதியும், மன உறுதியும் தேவை என்றால் செவ்வாய்க் கிழமைகளில் கருடாழ்வார் வழிபாடு சிறப்பானது. எதிரி தொல்லை இருப்பவர்களும், ரொம்பவும் பயந்த சுபாவம் இருப்ப வர்களும் கருடாழ்வாரை புதன் கிழமை வழிபடுவது நல்லது. நீண்ட ஆயுளைப் பெற வியாழக்கிழமை வழிபாடு சிறந்தது.

    வீட்டில் பணப் பிரச்சினை தீர்வதற்கு கருடாழ்வாரை வெள்ளிக்கிழமை அன்று வழிபட வேண்டும். சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றால் சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள். இப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள். தீர குறிப்பிட்ட கிழமைகளிலும் கருடாழ்வாரை வழிபடலாம். தினம்தோறும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கக்கூடிய சங்கடங்கள் சிறு துரும்பாக மாறும்.

    • திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
    • ஸ்ரீநம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் அர்ச்சுன மண்டபம் எழுந்தருளல்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-6 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: தசமி காலை 10 மணி வரை. பிறகு ஏகாதசி.

    நட்சத்திரம்: அசுவினி இரவு 11.18 மணி வரை. பிறகு பரணி.

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருக்குற்றாலம் ரதோத்சவம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்துடன் அர்ச்சுன மண்டபம் எழுந்தருளல். திருப்பெருந்துறை ஸ்ரீமாணிக்க வாசகர் ஊர்த்துவ தாண்டவக் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பயணம்

    ரிஷபம்-உதவி

    மிதுனம்-சோர்வு

    கடகம்- தாமதம்

    சிம்மம்- களிப்பு

    கன்னி- தனம்

    துலாம்- பரிவு

    விருச்சிகம்- உதவி

    தனுசு- ஊக்கம்

    மகரம்- மாற்றம்

    கும்பம்- ஆர்வம்

    மீனம்- நட்பு

    • ஆயர்குலத்தினில் தோன்றிய மாணிக்க விளக்கை போன்றவன்.
    • அறிந்து கொள்ள முடியாத தன்மை கொண்டவன் இறைவன்.

    திருப்பாவை

    பாடல்

    மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்

    தூய பெருநீர் யமுனைத் துறைவனை

    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்

    தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

    தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது

    வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

    போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

    தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    மாயாஜாலம் செய்வதில் வல்லவன், வடமதுரையில் பிறந்தவன், தூய்மையான நீர் பெருக்கெடுத்து ஓடும் யமுனைக்கரையில் விளையாடி வாழ்பவன், ஆயர்குலத்தினில் தோன்றிய மாணிக்க விளக்கை போன்றவன், தான் பிறந்த தாயின் வயிற்றுக்கு பெருமை சேர்த்தவன், அவனே தாமோதரன். அப்படிப்பட்ட கண்ணனை, தூய்மையான மனதோடு சென்று அவன் திருவடிகளில் மலர் தூவி வணங்க வேண்டும். வாயினால் அவன் புகழைப்பாடி, மனதினால் தியானித்து வழிபட்டால், நமது பிழைகள் யாவும் நீங்கும். முற்பிறவியில் நாம் செய்த பாவங்களும், தொடர்ந்து வருகின்ற பாவங்களும் நெருப்பினில் இட்ட தூசியைப்போல் மறைந்துவிடும். ஆகவே அவன் பெருமைகளைப் பாடுவோம்.

    திருவெம்பாவை

    பாடல்

    மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்

    போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்

    பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

    ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

    கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்

    சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று ஓலம் இடினும் உணராய்

    உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    திருமால், நான்முகன் ஆகியோரால் காணமுடியாத இறைவனின் திருப்பாதங்களை, நாம் காணமுடியும் என்று பொய்யாக பிறர் நம்பும் படியாக பாலும், தேனும் ஒழுக பேசிய வாயையுடைய பெண்ணே, கதவைத் திறப்பாயாக! பூமியில் உள்ளவர்களாலும், வானுலகில் உள்ள தேவர்களாலும், பிற உலகத்தில் உள்ளவர்களாலும் அறிந்து கொள்ள முடியாத தன்மை கொண்டவன் இறைவன். அவன் எளியவர்களான நம் மீது அன்பும், கருணையும் கொண்டு அருள்புரிகிறான். அவனது பெருங்குணத்தை போற்றுகிறோம். சிவனே... சிவனே.. என்று அவன் திருநாமத்தை உரக்கப்பாடுகிறோம். இதைக்கேட்டும் உணர்ச்சி இல்லாமல் தூங்குகிறாயே! நறுமணம் நிறைந்த கூந்தலை உடையவளே, இதுவோ உனது தன்மை. நீ எப்போதுதான் இதை உணரப்போகிறாய்! எழுந்திரு.!!

    • இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும்.
    • ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும்.

    வருடம் முழுவதும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், வைகுண்ட ஏகாதசியிலாவது விரதம் இருந்தால் சிறப்பான பலனை அடையலாம்.

    சிறப்பு மிகுந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் கண் விழித்து நீராடிவிட்டு, இறைவனை வழிபட்டு விரதத்தைத் தொடங்க வேண்டும். ஏகாதசி திதி முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். குளிர்ந்த நீரை மட்டும் பருகலாம்.

    மேலும் 7 முறை துளசி இலையை மட்டும் சாப்பிடலாம். குளிர்ந்த நீர், வயிற்றை சுத்தமாக்குகிறது. துளசி இலை வெப்பம் தரக்கூடியது. ஏகாதசி விரதம் இருப்பது மார்கழி மாதமான குளிர்காலம் என்பதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை உட்கொள்ள வேண்டும்.

    முழு நாளும் உணவருந்தாமல் இருக்க முடியாதவர்கள், நெய், காய்கனிகள், பழங்கள், நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து உண்ணலாம்.

    இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் துதி முதலியவற்றை ஓதுவதுமாக இரவுப் பொழுதை உறங்காது கழிக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை `பாரணை' என்கிறார்கள்.

    உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்திக்கீரை போன்றவற்றைச் சேர்த்து சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

    • விஷ்ணு முரனுடன் போரிட்டு வென்றார்.
    • இறைவனை சரணடையும், நல்லவர்களுக்கு வைகுண்ட பதவிகிடைக்கும்.

    இந்துக்களின் மிக முக்கிய விஷேசங்கள், பண்டிகைகளில் ஒன்றுதான் வைகுண்ட ஏகாதசி. இந்த முக்கிய நிகழ்வு மார்கழி மாதத்தில் நம் மனதை குளிர்விக்க வைக்கும் விரதம் தான் வைகுண்ட ஏகாதசி விரதம். இறைவனை சரணடையும், நல்லவர்களுக்கு வைகுண்ட பதவி கொடுப்பதற்காக வைகுண்ட கதவுகள் திறக்கும் நாளாகும்.

    மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினொன்றாம் நாள், `வைகுண்ட ஏகாதசி' என இந்துக்களால் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    அந்த அற்புத திருநாள் கோலாகலமாக நடைபெறுகிறது. பகல் பத்து, ராபத்து என இருபது நாள் திருவிழாவாகவும், பகல் பத்து முடியும் பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசி என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    வைகுண்ட ஏகாதசி எப்படி பிறந்தது?

    தேவர்களையும், முனிவர்களையும் முரன் என்ற அரக்கன் மிகவும் துன்புறுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களை காப்பாற்றுமாறு பகவான் விஷ்ணுவிடம் முறையிட்டனர். அனைவரையும் காக்கும் பொருட்டு விஷ்ணு முரனுடன் போரிட்டு வென்றார். வென்ற பின்னர் ஒரு குகையில் ஓய்வெடுக்க பெருமாள் சென்றார். இதைப்பார்த்த தோல்வியின் விரக்தியில் இருந்த முரன், பெருமாளை கொல்ல ஒரு வாளை ஓங்கியபடி வந்தார். அப்போது விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி ஒரு பெண் வடிவில் உருவெடுத்து, முரனுடன் போரிட்டு வென்றாள்.

    முரனை வென்ற அந்த திருமாலின் சக்தியால் உருவான அந்த பெண்ணுக்கு ஏகாதசி என அரங்கன் பெயர் சூட்டினார். அதோடு அன்றைய திதிக்கு ஏகாதசி பெயர் வந்தது. இந்த நாளில் தன்னை வழிபடுவோருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக பெருமாள் வரமளித்தார். இதனால் இந்த தினம் வைகுண்ட ஏகாதசி என்ற பெயரில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.

    • சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் வரும் 23-ந்தேதி அதிகாலை.
    • திருவரங்கம் பூலோக வைகுண்டமாய் ஜொலிக்கும் என்பது சிறப்பு.

    பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா முக்கிய திருநாளான வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் வரும் 23-ம் தேதி அதிகாலை நடைபெற உள்ளது. வைண்ட ஏகாதசி விழா பகல் பத்து, ராத்திரி பத்து என்று தொடர்ந்து 21 நாள்கள் நடைபெறும். அப்போது திருவரங்கம் பூலோக வைகுண்டமாய் ஜொலிக்கும் என்பது சிறப்பு.

    வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து உற்சவ முதல் நாளாக திருநெடுந்தண்டகத்துடன் தொடங்கும். நான்முகனுக்கு உண்டான அகங்காரத்தை ஒடுக்க நினைத்த திருமால், தன் காதுகளில் இருந்து மது, கைடபர்களை வெளிப்படச் செய்தார். அவர்கள் நான்முகனைக் கொல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்த திருமால், பிரம்மாவை காப்பாற்றி, அசுரர்கள் கேட்கும் வரத்தைத் தருவதாகக் கூறினார்.

    அப்போது அந்த அசுரர்கள் திருமாலுக்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாக ஆணவத்துடன் கூறினர். திருமாலும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்டார். அவ்வாறே அசுரர்களை வதமும் செய்தார். அப்போது ``பகவானின் பரமபதத்தில் தாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்" என்ற வரத்தை அசுரர்கள் கேட்டனர்.

    அதன்படி, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலாம் சொர்க்கவாசல் திறந்து, அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக் கொண்டார் திருமால். அசுரர்கள் பெற்ற முக்தியை அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, ``பெருமாளே! தங்களது அர்ச்சாவதாரம் விளங்கும் சகல ஆலயங்களிலும் மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, சொர்க்க வாசல் திறக்கப்பட வேண்டும்.

    அப்போது அந்த வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல் வழியாக வெளியே வருபவர்களும் பரமபத மோட்சம் அடைய வேண்டும்'' என்று வரம் கேட்டனர் அசுரர். தீனகருணாகரனான திருமாலும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார். இதுவே வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறக்கும் ஐதீகத்தின் திருக்கதை.

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.
    • சனீஸ்வர பகவானுக்கு வெள்ளிக்கவசத்தில் சிறப்பு அலங்காரம்.

    காரைக்கால்:

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்த சனி பகவானை நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியான காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா நேற்று மாலை 5.20 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. அப்போது, சனீஸ்வரர், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசித்தார். அதுசமயம், சனீஸ்வர பகவானுக்கு வெள்ளிக்கவசத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

    சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், நளன் குளத்தில் புனித நீராடி, திருநள்ளாறின் நான்கு வீதிகளிலும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முன்பதிவு செய்யாத திரளான பக்தர்கள், கோவில் அருகே, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் முன்பதிவு மையத்தில் ரூ.300, ரூ.600, ரூ.1,000 கட்டண டிக்கெட் பெற்று தரிசனத்துக்கு சென்றனர். இவர்கள் தவிர தர்ம தரிசனம் மூலமாகவும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கனமழை என்பதாலும், சனிப்பெயர்ச்சியன்று கூட்டம் அதிகம் காணப்படும் என்ற தயக்கத்தாலும், நேற்று அதிகாலை முதல் மாலை 4 மணி வரை மிக குறைவான பக்தர்களே நளன் குளத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். மாலை 4 மணிக்கு மேல் கூட்டம் அதிகரித்தது.

    குறிப்பாக காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் மதியம் 3 மணிக்கு மேல் லேசான மழை பெய்தது. இருந்தாலும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நளன் குளத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    சரியாக சனிப்பெயர்ச்சி நேரமான மாலை 5.20 மணிக்கு கனமழை பெய்தது. அப்போது சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று அதிகாலை காலை முதல், மாலை வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலை சுற்றி ஆங்காங்கே பல்வேறு இடங்களில் மெகா எல்.இ.டி டி.வி.க்கள் வைக்கப்பட்டு சனிப்பெயர்ச்சி தீபாராதனை உள்ளிட்ட சனீஸ்வர சன்னதியில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. இதை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

    முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    நேற்று மாலை 6 மணி முதல் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி வரை என 24 மணி நேரமும் கோவில் நடை விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • சிவனை நினைத்து சிவபதம் அடைந்த நாயனார், வாயிலார் நாயனார்.
    • சென்னை திருமயிலையில் அவதரித்தவர்.

    சதாசர்வகாலமும் சிவனை நினைத்து சிவபதம் அடைந்த நாயனார், வாயிலார் நாயனார். சென்னை திருமயிலையில் அவதரித்தவர். இவரைப் பற்றிய பெரிய கதைகளும் வரலாற்று குறிப்புகளும் இல்லை என்றாலும்கூட, இவருடைய சன்னதி மயிலை கற்பகாம்பாள் சன்னதியில் உள்ளது. சுந்தரரும் சேக்கிழாரும் இவரைப் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    ``வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச் எப்பொழுதும் வழங்க வேண்டும்'' என்று அப்பர் பாடி உள்ளபடி மனதையே ஆலயம் ஆக்கிக் கொண்டு, ஞானத்தை திருவிளக்கு ஆக்கி, ஆனந்தத்தை அவருக்கு தருகின்ற திருமஞ்சனமாக்கி, அன்பு என்கிற திரு அமுது படைத்து பூஜை செய்தவர் வாயிலார் நாயனார்.

    மனதில் எப்போதும் சிவசிந்தனையும், சிவபூஜையும் செய்து கொண்டு இருந்ததே இவருடைய பேற்றுக்கு காரணம்.

    ``மறவாமையால் அமைத்த மனக்கோயில் உள்ளிருத்தி

    உறவாதி தனையுணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றி

    இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி,

    அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்.''

    இவரது வழிப்பாட்டின் வலிமையை இந்த பாடல் உணர்த்துகிறது. அவருடைய குருபூஜை மார்கழி ரேவதி நட்சத்திரத்தில் அதாவது இன்று நடைபெறுகிறது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், திருவள்ளூர் கோவில்களில் பகற்பத்து உற்சவ சேவை.
    • வாயிலார் நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-5 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி காலை 11.53 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: ரேவதி நள்ளிரவு 12.20 மணி வரை பிறகு அசுவினி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் காலையில் வெள்ளச்சிவிகை, மாலையில் சிவபூஜை செய்தருளல். தேவகோட்டை ஸ்ரீரங்கநாதர் பவனி. வாயிலார் நாயனார் குருபூஜை. திருகுற்றாலம் குற்றாலநாதர் ரிஷப வாகனத்தில் வீதி உலா. ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், திருவள்ளூர் கோவில்களில் பகற்பத்து உற்சவ சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பனுக்கு புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நட்பு

    ரிஷபம்-நிறைவு

    மிதுனம்-நன்மை

    கடகம்-நற்செயல்

    சிம்மம்-ஆர்வம்

    கன்னி-ஆக்கம்

    துலாம்- தேர்ச்சி

    விருச்சிகம்-உறுதி

    தனுசு- வாழ்வு

    மகரம்-பரிவு

    கும்பம்-பாசம்

    மீனம்-பக்தி

    • மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.
    • விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இன்று (புதன்கிழமை) மாலை 5.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு (கடந்த சனிப்பெயர்ச்சி 2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.) சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார்.

    இந்தநிலையில், விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்களுக்கான குடிநீர், கழிவறை, அன்னதானம், இலவச பஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடு, தரிசனத்திற்கான ஆன்லைன் மற்றும் கட்டண டிக்கெட், இலவச தரிசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை, மாவட்ட கலெக்டரும், கோவில் நிர்வாக அதிகாரியுமான அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளனர்.

    குறிப்பாக, நளன் குளம் வாயிலிலிருந்து இலவச தரிசனம் வரிசை தொடங்குகிறது. வி.ஐ.பி. தரிசனம், யானை மண்டபம் வழியாகவும், 1,000 ரூபாய் டிக்கெட் கோவில் ராஜகோபுரம் வழியாகவும், 600 டிக்கெட் தெற்கு வீதி வழியாகவும், 300 டிக்கெட் மேற்கு வீதி மற்றும் நளன் குளம் எதிர் வாயில் வழியாகவும் செல்கிறது. கோவிலைச்சுற்றி ஆன்லைன் மற்றும் கட்டண தரிசனம் டிக்கெட் விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட்டில், புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோடும் வருவது போல் ஏற்பாடு செய்யப்படுள்ளது. வழி தவறினாலும், கியூ ஆர் கோடு மூலம் உரிய இடத்திற்கு சென்று சேரலாம்.

    வாகன நிறுத்துமிடத்திலிருந்து பக்தர்களை இலவச பஸ் மூலம் கோவிலுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதற்காக 26 பஸ்கள் தயார் நிலையில் உள்ளது. பஸ் நிறுத்தம் இடத்திலும் 120-க்கு மேற்பட்ட நகரும் கழிவறை வசதிகளும், 212-க்கு மேற்பட்ட நிரந்தர கழிவறை வசதிகள் உள்ளது. பக்தர்கள் வரிசையாக செல்லும் இடத்தில் தண்ணீர், பிஸ்கட், அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    முக்கியமாக, இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணிவரை என 24 மணிநேரமும் கோவில் நடை மூடாமல் விடிய, விடிய தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி 162 கண்காணிப்பு கேமராக்கள், மெகா எல்.இ.டி. டிவி வசதிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

    புதுச்சேரியிலிருந்து 1500 போலீசாரும், உள்ளூர் போலீசார் சுமார் 300 பேரும், இதுதவிர அப்த மித்ரா, தன்னார்வலர்களும் என சுமார் 2000 பேர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். பக்தர்களின் அவசர மருத்துவ வசதிக்காக, ஆம்புலன்ஸ், விநாயாக மிஷன் மற்றும் மீனாட்சி மிஷன் தனியார் மருத்துவமனை குழு ஏற்பாடு செய்துள்ளோம்.

    அதேபோல், இவர்கள் நளன் குளத்தில் குளிக்க, சிறப்பு ஷவர் வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால், பக்தர்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் சனிபெயர்ச்சிக்கு வருகை தந்து, மிக எளிமையாக தரிசனம் செய்து செல்லலாம்.

    • தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா.
    • 3-ம் திருவிழாவான இன்று இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. 3-ம் திருவிழாவான இன்று இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதில் கலந்து கொள்ள வந்த குமாரகோவில் வேளிமலை முருகனுக்கு நாகர்கோவிலில் வரவேற்பு அளிக்கப்பட்ட காட்சி.

    ×