search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vidhia"

    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.
    • சனீஸ்வர பகவானுக்கு வெள்ளிக்கவசத்தில் சிறப்பு அலங்காரம்.

    காரைக்கால்:

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்த சனி பகவானை நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியான காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இந்த கோவிலில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா நேற்று மாலை 5.20 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. அப்போது, சனீஸ்வரர், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசித்தார். அதுசமயம், சனீஸ்வர பகவானுக்கு வெள்ளிக்கவசத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

    சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள், கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், நளன் குளத்தில் புனித நீராடி, திருநள்ளாறின் நான்கு வீதிகளிலும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். முன்பதிவு செய்யாத திரளான பக்தர்கள், கோவில் அருகே, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த ஆன்லைன் முன்பதிவு மையத்தில் ரூ.300, ரூ.600, ரூ.1,000 கட்டண டிக்கெட் பெற்று தரிசனத்துக்கு சென்றனர். இவர்கள் தவிர தர்ம தரிசனம் மூலமாகவும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழ்நாடு உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கனமழை என்பதாலும், சனிப்பெயர்ச்சியன்று கூட்டம் அதிகம் காணப்படும் என்ற தயக்கத்தாலும், நேற்று அதிகாலை முதல் மாலை 4 மணி வரை மிக குறைவான பக்தர்களே நளன் குளத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். மாலை 4 மணிக்கு மேல் கூட்டம் அதிகரித்தது.

    குறிப்பாக காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் மதியம் 3 மணிக்கு மேல் லேசான மழை பெய்தது. இருந்தாலும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நளன் குளத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    சரியாக சனிப்பெயர்ச்சி நேரமான மாலை 5.20 மணிக்கு கனமழை பெய்தது. அப்போது சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று அதிகாலை காலை முதல், மாலை வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோவிலை சுற்றி ஆங்காங்கே பல்வேறு இடங்களில் மெகா எல்.இ.டி டி.வி.க்கள் வைக்கப்பட்டு சனிப்பெயர்ச்சி தீபாராதனை உள்ளிட்ட சனீஸ்வர சன்னதியில் நடந்த அனைத்து நிகழ்ச்சிகளும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. இதை பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.

    முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    நேற்று மாலை 6 மணி முதல் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி வரை என 24 மணி நேரமும் கோவில் நடை விடிய, விடிய பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ×