என் மலர்tooltip icon

    வழிபாடு

    • சாண்டா கிளாசின் உண்மையான பெயர் `செயின்ட் நிக் கோலஸ்.
    • 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ பிஷப் ஆவார்.

    கிறிஸ்துமஸ் என்றாலே எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் கதாபாத்திரமாக இருப்பவர் கிறிஸ்துமஸ் தாத்தா. 1930-ம் ஆண்டுக்கு முன், கிறிஸ்துமஸ் தாத்தாவின் ஆடைகள் சிவப்பு நிறத்தில் இல்லை. நீலம், வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில்தான் இருந்தன. அதன் பிறகு 1930-ம் ஆண்டு சாண்டாவின் சிவப்பு ஆடை பிரபலமானது. அன்று முதல் இன்று வரை, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் சிவப்பு நிற சாண்டாவை நினைவுகூர்கின்றனர். சாண்டா கிளாசின் உண்மையான பெயர் `செயின்ட் நிக் கோலஸ். அவர் 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ பிஷப் ஆவார். துருக்கியில் பிறந்த அவர், ஏழைகளுக்கு உதவுவதற்காக தனது செல்வம் அனைத்தையும் கொடுத்து ஒரு புனிதரானார்.

    சாண்டா கிளாசுக்கு செயின்ட் நிக்கோலஸ், பாதர் கிறிஸ்துமஸ், தாத்தா புரோஸ்ட் மற்றும் கிரிஸ் கிரிங்கில் உள்ளிட்ட பல பெயர்கள் உள்ளன. பல நாடுகளில், கிறிஸ்துமஸ் தினம் அன்று சாண்டா கிளாஸ் வருவார் என்று குழந்தைகள் ஆவலுடன் காத் திருக்கிறார்கள்.

    கனடா நாடு சாண்டாவிற்கு ஒரு அஞ்சல் இடுகையை வழங்கியது. அங்கு மக்கள் சான்டா கிளாசுக்கு கடிதங்கள் எழுதலாம். அதற்கான அஞ்சல் குறியீடு, `H0H0H0'. இந்த அஞ்சல் சேவை ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிர கணக்கானவர்களுக்கு பதிலளிக்கிறது. ஜார்ஜியா மற்றும் அரிசோனா, அமெரிக்கா மற்றும் பின்லாந்தில் சாண்டா கிளாஸ் என்ற பெயரில் பல நகரங்கள் உள்ளன.

    1822-ம் ஆண்டு கிளமென்ட் மூர் எழுதிய `கிறிஸ்துமசுக்கு முந்திய இரவு' எனும் கட்டுரையில் கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் எழுதிய `ஜிங்கில் பெல் ஜிங்கில் பெல்' என்ற கவிதையில் கதாநாயகனாக கிறிஸ்துமஸ் தாத்தா இடம் பெறுகிறார். அதனாலேயே இன்றும் கிறிஸ்துமஸ் கலைநிகழ்ச்சிகள் நடக்கும் எல்லா இடத்திலும் கிறிஸ்துமஸ் தாத்தா வருகை நிச்சயமாக இடம்பெறும்.

    அப்போது ஜிங்கில் பெல் பாடல் ஒலிக்கப்படும். அதன் பின்னரே கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர் சாக்லேட்டுகளை வீசிக்கொண்டு வருவார். அவரது கைகுலுக்கலுக்கும், அவரை பார்ப்பதற்கும் ஆவலாய் இருக்கும் ரசிகர் பட்டாளம் ஒன்று கூடும்.

    இவ்வாறு கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி பல செய்திகள் இருந்தாலும், கிறிஸ்துமசின் மையச்செய்தியான பகிர்தலை பரிசுகள் கொடுப்பதன் மூலம் கிறிஸ்துமஸ் தாத்தா வெளிப்படுத்துகிறார். கடவுள் தன் ஒரே மகனை தன் மக்களுக்காக கொடுக்கிறார். இதுவே கிறிஸ்துமசின் மையமாக இருக்கிறது.

    இதனை உள்வாங்கி தன்னிடம் இருப்பதை இல்லாதவருக்கு பகிர்ந்து கொடுக்கும் தாராள மனதை கற்றுக்கொடுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா, அர்த்தமுள்ள விதத்தில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட அழைப்பு விடுப்பவராக இருக்கிறார்.

    • அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
    • சென்னை சாந்தோம் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினத்தில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    சென்னை சாந்தோம் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல் திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டங்களிலும் பனிமயமாதா உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    இத்தாலியின் வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் சிறப்பு விழாவில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டார். அப்போது எங்களது இதயம் பெத்லகேமில் உள்ளது. பயனற்ற போர் காரணமாக அமைதியின் அரசர் மீண்டும் ஒருமுறை புறக்கணிப்பட்டுள்ளார்" என்றார்.

    • சுவாரசிய தகவல்களை தெரிந்துகொள்வோமா?
    • கிறிஸ்துமஸ் என்றவுடன் மனதில் வருவது கிறிஸ்து குடில்

    உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று, கிறிஸ்துமஸ். டிசம்பர் மாதம் வந்தாலே பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். கிறிஸ்துமஸ் என்றவுடன் பலருக்கும் மனதில் வருவது கிறிஸ்து குடில், நட்சத்திரம், சாண்டாகிளாஸ், கிறிஸ்துமஸ் மரம், ஜிங்கிள் பெல் பாடல்கள் என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். கிறிஸ்துமசை பற்றி அறியாத மேலும் சில சுவாரசிய தகவல்களை தெரிந்துகொள்வோமா?

    கிறிஸ்துமஸ் பெயர்

    `கிறிஸ்துமஸ்' என்ற பெயர் பழைய ஆங்கில சொற்றொடரான கிறிஸ்டெஸ் மேஸ்ஸி (Cristes maesse) என்பதிலிருந்து வந்தது. அதற்கு `கிறிஸ்துவின் நிறை' என்று பெயர். கி.பி 336-ம் ஆண்டு, ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்டைன் காலத்தில், `டிசம்பர் 25-ந் தேதி' ரோமானிய தேவாலயத்தில்தான் கிறிஸ்துமஸ் முதன் முதலாக கொண்டாடப்பட்டது. பின்னர் இயேசுவின் பிறப்பு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25-ந் தேதி அன்று கொண்டாடப்படும் என்று போப் ஜூலியஸ் முறைப்படி அறிவித்தார்.

    ஜிங்கிள் பெல்ஸ், வாழ்த்து அட்டை

    1965-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி, பிரபல கிறிஸ்துமஸ் பாடலான 'ஜிங்கிள் பெல்ஸ்' விண்வெளியில் இசைக்கப்பட்ட முதல் பாடலாக வரலாறு படைத்தது. 1843-ம் ஆண்டு, சர் ஹென்றி கோல் என்று அழைக்கப்படும் நபர், முதல் அச்சிடப்பட்ட கிறிஸ்துமஸ் அட்டையை ஒருவருக்கு அனுப்பினார். அதில் 'மெர்ரி கிறிஸ்துமஸ்' மற்றும் 'ஏ ஹாப்பி நியூ இயர் டு யூ' என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன.

    கிறிஸ்துமஸ் மரம்

    மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் ஜெர்மனியில் 16-ம் நூற்றாண்டில் தொடங்கியது. இன்று நாம் காணும் கிறிஸ்துமஸ் மரங்கள் போல இல்லாமல் ஆரம்பத்தில் பேரீச்சை, ஆப்பிள்கள் மற்றும் பாதாம் போன்ற உணவு பதார்த்தங்களால் அலங்கரிக்கப்பட்டன. அதன்பின்னர் மரங்களை அலங்கரிக்க மெழுகுவர்த்திகள், விளக்குகள் மற்றும் பொம்மைகள் பயன்பாட்டுக்கு வந்தன.

    மாறுபடும் கிறிஸ்துமஸ் தேதி எல்லா கிறிஸ்தவர்களும் ஒரே நாளில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஜனவரி 7-ந்தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடும் 15 நாடுகள் உள்ளன. இந்தப் பட்டியலில் ரஷியா, எகிப்து, இஸ்ரேல், உக்ரைன், பல்கேரியா, மால்டோவா, மாசிடோனியா, எத்தியோப்பியா, ஜார்ஜியா, கிரீஸ், ருமேனியா, செர்பியா, பெலாரஸ், மாண்டினீக்ரோ மற்றும் கஜகஸ்தான் ஆகியவை அடங்கும். இது தவிர, பல மேற்கத்திய நாடுகளில் சில கிறிஸ்தவர்கள் ஜனவரி 7-ந்தேதியே கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள். ரஷியாவில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ஜனவரி 1-ந்தேதி தொடங்கி 7-ந்தேதி வரை நடக்கிறது.

    டிசம்பர் 24-ந் தேதி அமெரிக்காவில், கிறிஸ்துமஸ் 1840-ம் ஆண்டு பண்டிகையாக மாறியது. பல ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் பரிசுகளை பரிமாறி டிசம்பர் 24-ந்தேதி அன்று தங்கள் கொண்டாட்டங்களை தொடங்குகின்றன. செக் குடியரசு, போலந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், அர்ஜென்டினா, கொலம்பியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.

    கேண்டி கேன்

    கிறிஸ்துமஸின் மிகப் பிரபலமான மிட்டாய்களுள் ஒன்று `கேண்டி கேன்'. வெள்ளை, சிவப்பு நிறத்துடன் கொக்கி போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளை நிறம் தூய்மையையும், சிகப்பு நிறம் தியாகத்தையும் குறிப்பதாக கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர்.

    தற்காலிக சமையல் அறை

    1851-ம் ஆண்டு லண்ட னில், தன்னார்வலர்கள் லீசெஸ்டர் சதுக்கத்தை தேர்ந்தெடுத்தனர். பெரிய நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் வாடுவதால், ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக்கு உணவு, மகிழ்ச்சியை வழங்க தற்காலிக சமையலறைகள் அங்கு தோன்றின. அந்த சதுக்கத்தை கொடிகள், மலர்கள் மற்றும் பண்டிகை விளக்குகளால் அலங்கரித்தனர். பொரித்த மாட்டிறைச்சி, முயல் இறைச்சித் துண்டுகள், வாத்து, உருளைக்கிழங்கு, ரொட்டி, பிஸ்கட், தேநீர் மற்றும் காபி உள்ளிட்ட உணவுகளை பரிமாறும் கிறிஸ்துமஸ் சமையலறையை அவர்கள் அமைத்தனர். அது 22 ஆயிரம் பேருக்கு உணவளித்தது.

    மனித கிறிஸ்துமஸ் மரம்

    இந்தியாவில் மிகப்பெரிய மனித கிறிஸ்துமஸ் மரம் 4 ஆயிரத்து 30 பங்கேற்பாளர்களை கொண்டு 2015-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதி உருவாக்கப்பட்டது. இந்த கிறிஸ்துமஸ் மரம் கேரளா வின் செங்கனூரில், அந்த கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் களால் அமைக்கப்பட்டது.

    வித்தியாசமான நடைமுறை

    1970-ம் ஆண்டு தொடங்கி, கிறிஸ்துமஸ் அன்று ஜப்பான் மக்கள், `கென்டக்கி பிரைடு சிக்கன்' விருந்தில் கலந்துகொள்ளும் வித்தியாசமான பாரம்பரியத்தை கடைப்பிடிக்கின்றனர். ஜப்பான் முழுவதிலும் வசிக்கும் மக்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே உணவகங்களில் முன்பதிவும் செய்கிறார்கள். இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, பின்னர் பலரால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

    • சாதிமொழி இன வேறுபாடின்றி கொண்டாடப்படும் விழா.
    • கிறிஸ்து பிறப்பு என்பது அன்பை பிரதிபலிக்கும் விழா.

    உலகம் முழுவதும் சாதிமொழி இன வேறுபாடின்றி கொண்டாடப்படும் விழா, கிறிஸ்துமஸ் பெருவிழா. கிறிஸ்துமஸ் என்றால் மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். கிறிஸ்துமஸ் என்றால், இயேசு இவ்வுலகில் மனிதராக பிறந்தார் என்பதை மகிழ்ச்சியோடு கொண்டாடும் விழா. லூக்கா நற்செய்தி (2 :10–11)

    கிறிஸ்துமஸ் தோன்றிய வரலாற்றை பற்றி பல விதமான யுகங்கள் இருந்தாலும் இயேசு இவ்வுலகில் மனிதராக பிறந்தார் என்பது சரித்திர சான்று, அதை யாராலும் மறைக்க இயலாது. `உரோமயர்களின் கலைக்களஞ்சியம்' என்ற நூல், அகஸ்துஸ் சீசர் பேரரசராக இருந்தபோது டிசம்பர் மாதம் 25-ந்தேதி, அதாவது அமாவாசையில் இருந்து 15 நாட்களுக்கு பிறகு வந்த வெள்ளியன்று இயேசு பிறந்தார் என குறிப்பிடப்படுகின்றது. பல நூல்கள் தரும் விளக்கங்களை பார்க்கும் பொழுது கான்ஸ்டன்டைன் காலத்திற்கு முன்பாகவே கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் மாதம் 25-ந்தேதி கொண்டாடப்பட்டது என கருதப்படுகிறது.

    கான்ஸ்டன்டைன் உரோமை அரசரான பிறகு கிறிஸ்துவம் அரச மதமாக அறிவிக்கப்பட்டது. அப்பொழுது இருந்த திருத்தந்தை முதலாம் ஜீலியஸ் அவர்கள் கிபி 336-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதியை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாட அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    கிறிஸ்துமஸ் மரம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல வண்ணங்களோடு அலங்கரிக்கப்படும் இம்மரத்தின் உச்சியில் ஒரு முக்கோண அல்லது நட்சத்திர வடிவம் ஒன்றைக் காணலாம்.

    கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தைக் கொண்டிருப்பது கிறிஸ்துமஸ் மரத்தின் சிறப்பம்சம். கிறிஸ்துமஸ் மரத்தின் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூய ஆவி எனும் மூன்று பரிமாணங்களைக் குறிக்கிறது. முதன் முதலாக 1605-ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள ஸ்டிராஸ் பர்க் என்னுமிடத்தில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது கிறிஸ்துமஸ் மரம் இடம்பெற்றது.

    கிறிஸ்து பிறப்பு விழாக்காலத்தில் ஆலயங்களிலும் வீடுகளிலும் விண்மீன் தொங்கவிடப்படுகிறது. இயேசு பிறந்திருந்த இடத்திற்கு விண்மீன் ஞானிகளுக்கு வழிகாட்டியாக அழைத்துச் சென்றதை நினைவு படுத்துகிறது. `யாக்கோபில் இருந்து விண்மீன் ஒன்று உதிக்கும். இஸ்ரயேலில் இருந்து செங்கோல் ஒன்று எழும்பும்" (எண்ணிக்கை 24:17) என்று வாசிக்கிறோம்.

    கிறிஸ்துவை நோக்கி ஞானிகளுக்கு வழிகாட்டிய விண்மீன் போல, நாமும் பிறரைக் கிறிஸ்துவை நோக்கி அழைத்துவரும் உயிருள்ள விண்மீன்களாய் மாற இது நம்மை அழைக்கிறது.

    புனித பிரான்சிஸ் அசிசி 1223-ம் ஆண்டு இத்தாலி நாட்டில் உள்ள கிரேச்சியா என்ற இடத்தில் திருதந்தை மூன்றாம் ஓனொரியனிடம் அனுமதி பெற்று, குழந்தை இயேசுவை மெழுகால் செய்து, உண்மையான மனிதர்களை அன்னை மரியாகவும் சூசையாகவும் நிறுத்தி இயேசுவின் பிறப்பு காட்சியை அமைத்தார். மேலும் அவர் 1293-ம் ஆண்டு கிரேச்சியா மலையில் ஜான் என்ற நண்பர் வழியாக முதல் குடிலை அமைத்தார்.

    விண்ணில் இருந்த கடவுளின் சின்ன சின்ன ஆசைகள் மண்ணிலே முத்தமிட்ட இனிய நாள்தான் கிறிஸ்துமஸ். கடவுள் நம்மை அன்பு செய்கிறார் என்பதை நமக்கு வெளிப்படுத்தும் நாள் இந்நாள். பனிவிழும் இரவிலும் ஆனந்தம், குதூகலம், புதிய ஆடைகளின் அணிவகுப்பு, பளிச்சிடும் ஆலயத்தோற்றம், பளபளக்கும் பட்டாடைகள், அற்புதமாய் ஜொலிக்கும் குடில் என்று இவற்றிக்கு தான் நாம் முக்கியத்துவம் தருகிறோம்.

    ஆனால் அவர் மாட மாளிகையைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக மாட்டுக்குடிலைத் தேர்ந்தெடுத்தார். அவர் பிறந்த செய்தி அரசர்களுக்கோ செல்வந்தோருக்கோ முதலில் அறிவிக்கப்படவில்லை. ஏழ்மையின் சின்னமாமய் விளங்கும் இடையர்களுக்குதான் அறிவிக்கப்பட்டது. இறைவனின் பரம ரகசியம் எவ்வளவு எளிமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

    கிறிஸ்து பிறப்பு என்பது அன்பை பிரதிபலிக்கும் விழா. பகிர்வை உலகிற்கு அறிமுகப்படுத்தும் விழா. அன்பை இழந்த உள்ளங்களுக்கு இதயத்தை கொடுப்போம். பாசம் இழந்த இல்லங்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம். பரிதவிக்கும் இதயங்களுக்கு பகிர்வாக இருப்போம்.

    வாழ்க்கையைத் தொடாத விழாக்களும், வாழ்வை மாற்றாதக் கொண்டாட்டங்களும் வெறும் சடங்காக மட்டுமே அமையும்.

    • அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசுபிரான் பிறந்த தினம்.
    • உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விழா.

    "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக

    உலகில் அவருக்கு உகந்தோருக்கு

    அமைதி உண்டாகுக (லூக்கா 2:14)

    அகிலத்தின் விடுதலைக்காய், அவனியில் அவதரித்து, அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசுபிரான் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ். மனித நேயமிக்க மாபரன், பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள் தான் கிறிஸ்து பிறப்பு பெருவிழா. சாதி மத வேற்றுமைகளை தாண்டி, உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் விழா இது.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. நடுங்கும் குளிரில், எங்கும் தங்க இடம் கிடைக்காமல், ஆடு மாடு அடைக்கும் கொட்டகையே அவரது பிறந்த வீடாக அமைந்தது. இயேசு பாலன் உவக இரட்சகர் என்ற நிலையில் அரண்மனையையும் ஆடம்பரத்தையும் தெரிந்து கொள்ளவில்லை.

    எளிமையையும், ஏழ்மையையும் விரும்பி ஏற்றார். எளியோரின் பங்காளரானார். இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்துள்ளார் என்ற நற்செய்தி முதன்முதலாக சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட பாமரர்களாகிய இடையர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது.

    ஏழ்மையின் கோலமாய், தாழ்மையின் வடிவமாய்இயேசு பிறந்தார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இயேசுவின் தாழ்மை, இன்று நம் அனைவரையும் ஆதிக்க, ஆடம்பர வாழ்வி லிருந்து மாற்றம் பெற்று, அனைத்து ஏழை, எளிய மக்களோடு ஒன்றித்து வாழ அறைகூவல் விடுக்கிறது.

    "பூவுலகில் நன்மத்தோர்க்கு அமைதி உண்டாகுக" என்ற அமைதியின் நாயகன், நம்மில் தேடும் சமாதானம், அமைதி எங்கே?

    எத்தனை ஏற்ற தாழ்வுகள்! எத்தனை வன்முறைகள்!!

    இஸ்ரேயேல், பாலஸ்தீனப்போர்,

    ரஷ்ய, உக்ரேன் போர்,

    பனிப்போர், பகிரங்கப் போர்,

    வல்லரசு நாடுகளின் ஆதிக்க வெறி...

    பெத்லேகேமின் மகிழ்ச்சி நாட்கள் மறைந்துவிட்டனவோ என்ற எண்ணம் தோன்றுகிறதே... இறைவன் ஒற்றுமையுடன், ஒன்றாக, நிறைவாக அனைத்தையும் பகிரிந்து வாழ வேண்டுமென விரும்புகிறார். கள்ளம் கபடமற்ற குழந்தையின் இயல்புகள் நம்மில் மிளிர வேண்டுமெனவே, இயேசு மழலை அடையாளத்துடன் பாலகனாக, கிறிஸ்து பிறப்பு விழாவில் நம்மோடு உறவாடுகிறார்.

    நம் வாழ்வு சிறக்க, நாமும் பாலகனாக மாறுவோம். கிறிஸ்து பிறப்பு விழா என்பது பகிர்வின் அடையாளம். அன்பின், மகிழ்ச்சியின், நம்பிக்கையின், எதிர்பார்ப்பின் வெளிப்பாடு. இவையே இயேசுவின் கொடைகளாக நம் உள்ளங்களை நிறைக்கட்டும். இயேசு மண்ணில் பிறந்து, உலகிற்கு தந்த அமைதி நமது மனங்களில், குடும்பங்களில், உலக நாடுகளில் குடி கொள்ள வேண்டுமென ஜெபிப்போம்.

    பேராசை, பகைமை என்ற இருளை அகற்றி, அன்பெனும் பேரொளியை ஏற்றுவோம். நேர்மறையான எண்ணங்களுடன், நம்பிக்கையை விதை்து புத்தாண்டில் புதிய பயணத்தை தொடங்குவோம். உறவுகளை அன்பால் நனைத்திடுவோம். அன்பால் உலகை ஆள்வோம். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    • ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் வருவதால் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

    இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான 467-வது கந்தூரி விழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்றிரவு நாகப்பட்டினத்தில் இருந்து தொடங்கியது.

    தொடர்ந்து, சந்தனக்கூடு, அலங்கரிக்கப்பட்ட கப்பல்கள், செட்டிபல்லக்கு, சாம்பிராணி சட்டி, பெரிய ரதம், சின்ன ரதம் உள்ளிட்ட அலங்கார ரதங்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சந்தனக்கூடு ஊர்வலம் சென்று இன்று அதிகாலை 4 மணிக்கு நாகூர் தர்காவை வந்தடைந்தது.

    கால்மாட்டு வாசலில் சந்தன குடங்கள் இறக்கப்பட்டு, சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நாகூர் ஆண்டவர் சமாதியில் பாரம்பரிய முறைப்படி தர்ஹா நிர்வாகிகளுள் ஒருவரான கலீபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசினார்.

    நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்பட்ட சந்தனம் அங்கிருந்த பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. சந்தனக்கூடு ஊர்வலத்தை யொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நாகை நகரமே விழாக்கோலம் பூண்டது. நாகூர் தர்கா கந்தூரி விழா சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    • ஜனவரி 1-ந்தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
    • லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நேற்று காலை பரமபத வாசல் எனும் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது.

    இதன் வழியாக ஜனவரி 1-ந்தேதி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் சிரமம் இன்றி ஏழுமலையானை தரிசிப்பதற்காக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு உள்ளன. 9 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கபடுகிறது.

    இந்த நிலையில் வைகுண்ட வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்தனர். திருப்பதி மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. திருப்பதியில் தற்போது அதிக அளவில் பனிப்பொழிவு உள்ளதால் பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    வைகுண்ட வாசல் திறப்பையொட்டி நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமயதராய் ஏழுமலையான் தங்க தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.

    • எழுந்திருபெண்ணே! பரந்தாமன் புகழ் பாடுவோம்.
    • சிவபெருமானின் புகழை நாங்கள் பாடினோம்.

    திருப்பாவை

    பாடல்

    கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

    மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

    வான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்

    கூவுவான் வந்து நின்றோம் கோதுகுலம் உடைய

    பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

    மாவாய்! பிளந்தானை மல்லரை மாட்டிய

    தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

    ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    கிழக்கு வானம் வெளுத்துவிட்டது. எருமைகள் மேய்ச்சலுக்கு கிளம்பிவிட்டன. ஆயர்குல பெண்கள் பாவை நோன்பிற்காக நீராட புறப்பட்டு விட்டனர். உன்னையும் நீராட அழைத்துச் செல்ல வேண்டி, அவர்களைப் போகவிடாமல் தடுத்து நிறுத்தி வைத்துள்ளோம். இப்போது உன்னை எழுப்பிக் கொண்டு இருக்கிறோம். எழுந்திருபெண்ணே! பரந்தாமன் புகழ் பாடுவோம். குதிரை வடிவில் வந்த அசுரன் வாயைப் பிளந்து கொன்றவன், மல்யுத்தம் செய்ய வந்தவர்களை வென்றவன், தேவர்களுக்கு தலைவனான கிருஷ்ணனைப் பாடி வணங்கினால் நாம் விரும்பிய அனைத்தையும் கேட்டு அவன் நிறை வேற்றுவான். நாங்கள் சொல்வதை ஏற்று புறப்படு!

    திருவெம்பாவை

    பாடல்

    கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்

    ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்

    கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை

    கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ

    வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்

    ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ

    ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

    ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    கோழிகள் கூவுகின்றன. மற்ற பறவைகளும் ஒலி எழுப்புகின்றன. வீடுகளில் ஏழிசை கருவிகள் முழங்குகின்றன. எங்கும் வெண் சங்குகள் ஒலிக்கின்றன. ஒப்பற்ற பேரருளைக் கொண்ட சிவபெருமானின் புகழை நாங்கள் பாடினோம். இத்தனையும் உனக்கு கேட்கவில்லையா? இதற்குப் பிறகும் தெளியாத உன் உறக்கம் என்ன உறக்கமோ? வாய் திறந்து பேச மாட்டாயா? திருமால், தன் கண்ணை பறித்து சிவபெருமானுக்கு சாத்தி சக்கரத்தை பரிசாகப் பெற்றார். அதேபோன்று இறைவனிடம் அன்பு கொண்டு பெருவாழ்வு பெறுவோம். உலகம் எல்லாம் ஒடுங்கக்கூடிய பிரளய காலத்தில் இறுதியில் தான் ஒருவ னாக நின்று காத்தருளும் தலைவனாகிய சிவனைப் பாடுவோம்.

    • திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவில்களில் திருவாய் மொழி உற்சவம்.
    • கந்தகோட்டம் முருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-8 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவாதசி காலை 7.13 மணி வரை பிறகு திரயோதசி நாளை விடியற்காலை 5.25 மணி வரை பிறகு சதுர்த்தசி

    நட்சத்திரம்: கார்த்திகை இரவு 10.14 மணி வரை பிறகு ரோகிணி

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று கார்த்திகை விரதம். பிரதோஷம். சூரியனார் கோவில் ஸ்ரீசூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். குடந்தை ஸ்ரீசாரங்கபாணி, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் கோவில்களில் திருவாய் மொழி உற்சவம். திருப்பதி நவநிதி மகாதீர்த்தம். நாச்சியார்கோவில் ஸ்ரீஎம்பெருமான் தெப்ப உற்சவம். சென்னை கந்தகோட்டம் முருகப்பெருமான் சிறப்பு அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி-அம்பாள் விருஷபாரூடராய் காட்சியருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-ஓய்வு

    மிதுனம்-ஆசை

    கடகம்-வெற்றி

    சிம்மம்-தனம்

    கன்னி-புகழ்

    துலாம்- தாமதம்

    விருச்சிகம்-செலவு

    தனுசு- வரவு

    மகரம்-அன்பு

    கும்பம்-லாபம்

    மீனம்-திறமை

    • சயன மண்டபத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அலங்காநல்லூர்:

    திருமாலிருஞ்சோலை, தென்திருப்பதி என அழைக்கப்படும் மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு வருடந்தோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 13-ந்தேதி பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி-பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் சிகர நிகழச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா இன்று அதிகாலை நடந்தது. இதில் மேளதாளம் முழங்க வர்ணக்குடை, தீவட்டி பரிவாரங்களுடன் காலை 5.10 மணிக்கு கள்ளழகர் என்கிற சுந்தரராஜ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து அங்குள்ள சயன மண்டத்தை சுற்றி வந்து அதே மண்டபத்தில் எழுந்தருளினார். 'முன்னதாக நம்மாழ்வார் பரமபத வாசல் வழியாக பெருமாளை வரவேற்கும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து சயன மண்டபத்தில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் சுந்தர ராஜபெருமாள் அருள்பாலித்தார். திருஅத்யயன உற்சவத்தின் முக்கிய நிகழ்வான பெருமாள் சொர்க்கவாசல் எழுந்தருளும் நிகழ்வை காண அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கள்ளழகர் கோவிலுக்கு வருகை தந்து நீண்ட நேரம் காத்திருந்து சொர்க்கவாசல் வழியாக வந்து சுந்தரராஜ பெருமாளை வணங்கினர்.

    இதைப்போலவே இந்த கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை அதே நேரத்தில் சொர்க்கவாசல் வழியாக சுவாமி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அப்பன் திருப்பதி போலீசார் செய்தி ருந்தனர்.

    மதுரை நகரின் மைய பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கூடலழகர் பெருமாள் கோவிலில் இன்று மாலை சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு மூலவர் கூடலழகருக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

    காலை முதலே திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு கோவில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

      ஸ்ரீவில்லிபுத்தூர்:

      வராக சேத்திரமாக விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்து சிறப்பு வாய்ந்த தலமாகும்.

      இக்கோவிலானது பெருமாளை நினைத்து திருமொழி பாடிய பெரியாழ்வாரும், திருப்பாவை பாடிய ஆண்டாளும் பிறந்து பெருமைக்குரிய தலமாகும். கண்ணனை கரம் பற்ற நினைத்த ஆண்டாள் மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து திருப்பாவை பாடி கண்ணனை கரம் பிடித்தார் என்பது ஐதீகம்.

      அனைத்து பெருமாள் கோவில்களிலும் மார்கழி மாதத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவை தான் பாடப்படுகிறது. அதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெறும் மார்கழி நீராட்ட உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. மார்கழி நீராட்ட விழாவில் நடைபெறும் பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி, எண்ணெய் காப்பு உற்சவம், கூடாரை வெல்லும் சீர் வைபவம் ஆகிய உற்சவங்களில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வர்.

      அதன்படி இந்த ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்ட விழாவில் பகல் பத்து உற்சவம் கடந்த 13-ந் தேதி பச்சை பரப்புதலுடன் தொடங்கியது. பகல் பத்து உற்சவத்தில் வடபத்ர சயனர் சன்னதியில் உள்ள கோபால விலாசம் எனும் பகல் பத்து மண்டபத்தில் தினசரி பலவிதமான அலங்காரங்களில் ஆண்டாள் ரெங்கமன்னார், ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெரிய பெருமாள் மற்றும் ஆழ்வார்கள் எழுந்தருளி ஒருசேர பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

      இந்நிலையில் நேற்றுடன் பகல் பத்து உற்சவம் நிறைவு பெற்றது. ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை 5.50 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. 'கோவிந்தா' 'கோபாலா' கோஷம் முழங்க பெரிய பெருமாளும், அதன்பின் ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னாரும் பரமபத வாசல் வழியாக எழுந்தருளினர். அவர்களை பெரியாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் வரவேற்றனர். பின்னர் மாட வீதிகள் வழியாக வீதி உலா வந்து ஆண்டாள் ரெங்கமன்னார், பெரிய பெருமாள் ஆகியோர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

      வைகுண்ட ஏகாதசி விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

      கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர். டி.எஸ்.பி. முகேஷ் ஜெயகுமார் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

      இதேபோல் திருவண்ணாமலை சீனிவாசபெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவேங்கடமுடையான் கோவில், ராஜபாளையம் அயன்கொல்லங்கொண்டன் இடர்தவிர்த்த பெருமாள், சேத்தூர் சீனிவாச பெருமாள் உள்ளிட்ட பெரு மாள் கோவில்களில் காலை 5.50 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது.

      • திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று நேரடியாக சர்வ தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
      • வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருமலைக்கு தற்போது அதிக அளவில் வி.ஐ.பி. பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

      திருப்பதி:

      வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை 1.40 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

      முதலில் வி.ஐ.பி. பக்தர்கள் சுவாமியை தரிசித்த பின்னர் சொர்க்க வாசலை தரிசித்து விட்டு வெளியே வந்தனர். அதன் பின்னர், சாமானிய பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

      வரும் ஜனவரி 1-ம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.

      அத்துடன் திருப்பதியில் ஏற்பாடு செய்துள்ள 9 இடங்களிலும் வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணி முதலே சொர்க்க வாசல் தரிசனத்துக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டன.

      திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று நேரடியாக சர்வ தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

      இது ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஏராளமான பக்தர்கள் நேற்று திருமலையில் குவிந்ததால், எவ்வித டோக்கன்களும் இன்றி சர்வ தரிசன வரிசையில் செல்ல முயன்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

      ஆதலால், போலீசாருக்கும், பக்தர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 22-ம் தேதிக்கான சர்வ தரிசன டோக்கன்களை ஏன் ரத்து செய்தீர்கள்? என பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.

      அதன் பின்னர், சிறிது நேரத்தில் பக்தர்கள் சர்வ தரிசன வரிசையில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் சிறிது நேரம் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

      வைகுண்ட ஏகாதசியையொட்டி, திருமலைக்கு தற்போது அதிக அளவில் வி.ஐ.பி. பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

      இதனால் சாமானிய பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். தேவஸ்தானம் விஐபி சிபாரிசு கடிதங்களை ரத்து செய்திருந்தாலும், நேரடியாக வரும் வி.வி.ஐ.பி.க்களுக்கு தரிசன ஏற்பாடுகளை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

      ×