என் மலர்
வழிபாடு
- 700 ஆண்டுகள் பழமையானது அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில்.
- திருமண கோலத்தில் சனி பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள கடலோரப் பகுதி, சேதுபாவாசத்திரம். இந்த ஊரின் அருகே உள்ள விளங்குளம் என்ற இடத்தில் 700 ஆண்டுகள் பழமையான அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. தோஷ நிவர்த்தி தலமாக விளங்கும் இந்த ஆலயத்தில், மாந்தா - ஜேஸ்டா ஆகிய இரண்டு மனைவிகளுடன் திருமண கோலத்தில் சனி பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

சூரிய பகவானின் மகன்களான சனீஸ்வரருக்கும், எமதர்மராஜனுக்கும் சிறு வயதில் பகை இருந்தது. அதனால் சனியின் காலில் எமதர்மராஜன் அடிக்க, சனியின் காலில் ஊனம் ஏற்பட்டது. அந்தக் கால் ஊனத்துடன் மன அமைதி தேடி, பூலோகத்தில் அமைந்த புனிதத் தலங்களை தரிசித்து வந்தார், சனி பகவான். சுரைக்காய் குடுவையை ஏந்தி பிச்சை பெற்று, அதில் கிடைக்கும் தானியங்களை சமைத்து அன்னதானமாக அளித்து வந்தார்.
ஒரு நாள் விளாமரங்கள் அடர்ந்த இந்த பகுதிக்கு வந்தார், சனி பகவான். அப்போது ஓரிடத்தில் விளாமரத்தின் வேரால் தடுக்கப்பட்டு, அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தார். அங்கே பல கோடி யுகங்களாக மறைந்திருந்த `பூச ஞான வாவி' என்ற ஞான தீர்த்தம் சுரந்து, சனி பகவானை மேல் எழுப்பி கரை சேர்த்தது. இது நடந்தது சித்திரை மாத வளர்பிறை திருதியையும், பூச நட்சத்திரமும், சனிக்கிழமையும் சேர்ந்த ஒரு தினமாகும். இதனால் சனி பகவானின் ஊனம் நிவர்த்தியானதாக தலவரலாறு சொல்கிறது.
சனி பகவான் விழுந்த பள்ளத்தில் நீரூற்றாக வெளிப்பட்ட ஞான வாவி, குளமாக மாறியதால், இந்த கிராமம் 'விளம்குளம்' என்று அழைக்கப்பட்டது. பின்னர் அதுவே மருவி `விளங்குளம்' என்றானது. ஊனம் நீக்குதல், திருமணத்தடை போன்ற தோஷ நிவர்த்தி தலமாக விளங்கும் இந்தக் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அதுமட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் இங்கே வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் அட்சய திருதியை திருநாளில் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகிறது. சனிப் பெயர்ச்சி அன்றும் இங்கே விசேஷ பூஜைகள் செய்யப்படும்.
- உற்சவ மூர்த்திகள் தனி, தனி தேர்களில் வீதிவலம் வந்தனர்.
- ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தங்கர தத்தில் பிச்சாண்டவர் வெட்டுங்குதிரை வாகன வீதிஉலா நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்த்திருவிழா நடை பெற்றது.
சித்சபையில் வீற்றுள்ள மூலவரான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்ரர் ஆகிய ஐவரும் தனி, தனி தேர்களில் வீதிவலம் வந்தனர். இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை யொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
நாளை (புதன்கிழமை) அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகா பிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை யும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
28-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. தேரோட்டத்தை யொட்டி சிதம்பரம் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
- ஏழு சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருமலை:
திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் கோலாகலமாகத் தொடங்கி நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்று மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மின் விளக்குகள், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காமாட்சி, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியர் எழுந்தருளி ஏழு சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கபிலத்தீர்த்தம் புஷ்கரணியின் கரைகளில் அமர்ந்திருந்த பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூர ஆரத்தி காண்பித்தும் முப்பெரும் தேவியரை தரிசனம் செய்தனர்.
தெப்போற்சவத்தில் கோவில் துணை அதிகாரி தேவேந்திரபாபு, உதவி அதிகாரி சுப்புராஜு, கண்காணிப்பாளர் பூபதி, கோவில் ஆய்வாளர்கள் ரவிக்குமார், பாலகிருஷ்ணா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்கள் பக்தி பாடல்களை பாடினர்.
அதைத்தொடர்ந்து தெப்போற்சவத்தின் 5-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) சண்டிகேஸ்வரர், சந்திரசேகரர் தெப்பத்தில் எழுந்தருளி 9 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
- கண்ணனை வணங்கி, இப்பிறவியில் மகிழ்ச்சியாக வாழும் பெண்ணே!
- அவன் உடம்பில் ஒரு பக்கத்தில் அன்னை பார்வதி உறைகிறாள்.
திருப்பாவை
பாடல்
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான்
தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்!
அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.
விளக்கம்
முற்பிறவியில் பாவை நோன்பு இருந்து கண்ணனை வணங்கி, இப்பிறவியில் மகிழ்ச்சியாக வாழும் பெண்ணே! உன்னை நாங்கள் பலமுறை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. எழுந்திருக்காவிட்டாலும் பரவாயில்லை, பதிலாவது சொல்லக்கூடாதா?. மணம் மிக்க துளசி மாலையை தலையில் சூடியிருக்கும் நாராயணன், நாம் வேண்டிய வரங்களைத் தருவார். முன்னோர் காலத்தில் ராமனால் எமதர்மனின் வாயில் விழுந்த கும்பகர்ணன், உனக்கு தூக்கத்தைத் தந்தானா? சோம்பல் குணம் உடையவளே! எங்கள் குலத்திற்கு அருமையான ஆபரணம் போன்றவளே! உன் தூக்கம் கலைந்து எழுந்து வந்து கதவை திறப்பாயாக!
திருவெம்பாவை
பாடல்
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
விளக்கம்
சிவபெருமானின் திருவடிகள் ஏழு பாதாள உலகங்களையும் கடந்து, சொற்களால் விளக்க முடியாத சிறப்புடன் விளங்குகின்றன. மலர்கள் நிறைய சூடிய அவன் திருமுடி எல்லாப்பொருட்களும் சென்றுசேரும் முடிவாக இருக்கிறது. அவன் ஒரே திருமேனி உடையவன் அல்ல. அவன் உடம்பில் ஒரு பக்கத்தில் அன்னை பார்வதி உறைகிறாள். அவன் அர்த்தநாரீஸ்வரன். வேதங்களும், விண்ணுலகில் உள்ளவர்களும், மண்ணுலகில் உள்ளவர்களும் பாடி துதித்தாலும், அவனது பெருமை பேசமுடியாத அளவுக்கு விரிந்து செல்கிறது. அவன் திருதொண்டர் களின் உள்ளங்களில் குடியிருப்பவன். குற்றமில்லாத குலத்தில் பிறந்து சிவாலயத்தில் பணி செய்கின்ற பெண் பிள்ளைகளே! எப்போதும் அவர்களுடன் இருக்கும் நீங்களாவது அவனுடைய ஊர் எது? அவனுடைய பெயர் என்ன? அவனைப் பாடும் தன்மை எப்படி என்று கூறுவீர்களா? அதன்படி நாங்கள் நடந்துகொள்வோம்.
- பஞ்சசம்ஸ்காரம் எனும் தீட்ஷையைப் பெற்றார்.
- மகா விஷ்ணுவின் திருவடிகளில் இணைந்தார்.
"எங்கே போனானோ கண்ணன்
என்ன செய்வோம் தோழி [எங்கே]
உங்களை விட்டெங்கும் போகிலேன் நானென்று
எங்களிடத்திலன்பா யியம்பிய கோபாலன் [எ]
கணநேரமும் எம்மை விட்டுப்பிரியாத
மனமுடையோன் யாங்கள் மயங்கவிட் டேயின்று [எ]
மங்கையர்கள் கர்ம சங்கடந்தீர்க்கும்
தங்கமேனியனான யெங்கள்
ஸ்ரீகோபாலன் [எ]
வெண்ணெய்தயிர்பால் உண்ணு
வோனாகி நம்
எண்ணங்கவர்ந்த மணி வண்ணன்
ஸ்ரீகோபாலன்'' [எ]
இந்த அழகான கீர்த்தனையை இயற்றியவர் யார் தெரியுமா? ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள். எத்தனையோ மஹான்கள் அவதரித்த தேசம் நம் தேசம். அதில் ஒருவர் மதுரையின் ஜோதி என்று புகழப்படும் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள். மதுரையில் சாதாரண சௌராஷ்ட்ர நெசவாளர் குடும்பத்தில் 1843-ஆம் ஆண்டு மார்கழி மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவருடைய இயற்பெயர் ராமபத்ரன்.
படிப்பில் நாட்டம் இல்லாத இவர், மனம் முழுவதும் தெய்வீகமே ஆட்கொள்ள, எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது, தந்தையின் கோபத்தால் வீட்டை விட்டு வெளியேறி திருப்பரங்குன்றத்திற்குச் சென்றவர். அங்கே மலைப்பகுதியில் குகையில் தவம் செய்தார். அதன் பிறகு குருநாதரைத் தேடி பரமக்குடிக்குச் சென்றார். அங்கே நாகலிங்க அடிகளிடம் யோகம் பயின்றார். 18 நாட்களில் அஷ்டமா சித்திகளை கற்றார். அமர்ந்த நிலையிலேயே பூமியிலிருந்து உயரக் கிளம்பும் சித்தியைக் கண்ட குரு நாகலிங்க அடிகளார், அவருக்கு சதானந்த அடிகளார் என்று பெயர் கொடுத்தார்.
பலவிதமான சித்திகளோடு வாழ்ந்து கொண்டிருந்த சுவாமிகள், இவைகளால் ஞானம் பெற இயலாது என்று எண்ணி, பாண்டிய நாட்டில் ஆழ்வார்திருநகரிக்கு சென்றார். அங்கே நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த ஆச்சார்ய வம்ச வடபத்ரார்யர் என்கின்ற வைணவ அடியாரிடம் வைணவ நெறியைக் கற்றார். அவரிடம் பஞ்சசம்ஸ்காரம் எனும் தீட்ஷையைப் பெற்றார். ராமானுஜர் சித்தாந்தத்தில் உள்ள நூல்களான கீதா பாஷ்யம், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை, விஷ்ணுபுராணம் முதலியவற்றை கற்றறிந்தார்.
பாடல்களை இயற்றி பஜனை செய்து கொண்டே யாத்திரை செய்தார். கும்பகோணத்துக்கு அருகாமையில் திருப்புவனம் என்ற ஊருக்குச் சென்ற பொழுது, அவருடைய பக்தை ஒருவர், அவருக்கு தன்னிடம் இருந்த நகைகளையும், சேலைகளையும் காணிக்கையாகக் கொடுத்தார். அந்தச் சேலையை அணிந்து கொண்டு தலையில் மகுடம் வைத்துக் கொண்டு, நடனம் ஆடினார். கிருஷ்ண பிரேம பாவத்தால் "நாயகி சுவாமிகள்" ஆனார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் போன்ற தலங்களுக்கு யாத்திரை செய்தார். ஆயிரக்கணக்கான பாடல்களை அவர் சௌராஷ்டிர மொழியிலும் தமிழ் மொழியிலும் எழுதினார்.
ஒரு மாபெரும் அடியார் கூட்டமே அவரோடு ஹரி பக்தியில் திளைத்தது. 1914 – ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி, வைகுண்ட ஏகாதசி நாளில் பகவான் ஹரி வந்து விட்டார் என்று சொல்லிக் கொண்டே மகா விஷ்ணுவின் திருவடிகளில் இணைந்தார். இவருடைய பிருந்தாவனம் மதுரை அழகர்கோயில் அருகிலுள்ள காதக் கிணறு என்னுமிடத்தில் இருக்கிறது. மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் வீதியில் சுவாமிகளுடைய ``கீதா மந்திர்" என்கின்ற ஆலயம் மிகச் சிறப்பாக இருக்கிறது.
- திருநெல்வேலி நெல்லையப்பர் திருவீதி உலா.
- சிதம்பரம் ஆனந்தநடராஜ மூர்த்தி அம்பாள் சிவகாமசுந்தரி ரதோற்சவம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-10 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பவுர்ணமி நாளை விடியற்காலை 6.07 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம்: மிருகசீரிஷம் இரவு 10.57 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று பவுர்ணமி. ஆருத்ரா அபிஷேகம். சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருநெல்வேலி நெல்லையப்பர் திருவீதி உலா. சங்கரன்கோவில் சிவபெருமான் ரதோற்சவம். சிதம்பரம் ஆனந்தநடராஜ மூர்த்தி அம்பாள் சிவகாமசுந்தரி ரதோற்சவம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் இராபத்து உற்சவ சேவை. இரவு வெள்ளி ரதத்தில் பவனி. திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் பஞ்சப் பிரகார உற்சவம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெரு மானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-தனம்
மிதுனம்-பண்பு
கடகம்-பணிவு
சிம்மம்-உதவி
கன்னி-நற்செய்தி
துலாம்- மேன்மை
விருச்சிகம்-உயர்வு
தனுசு- உழைப்பு
மகரம்-வெற்றி
கும்பம்-பரிசு
மீனம்-உவகை
- கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிப்பது கிறிஸ்துமஸ் மரம்.
- கிறிஸ்தவர்களின் வீடுகளில் ஒளிவீசும் ஸ்டார் தொங்கவிடப்பட்டிருக்கும்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில், அவர் பிறந்த தினமான டிசம்பர் 25-ந் தேதி நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் தொடக்கமாக, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவூட்டும் பல சின்னங்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் போதும், விழாவின் ஆயத்த பணி நாட்களின் போதும் இந்த சின்னங்கள் பிரதானமாக இடம் பெறுகின்றன.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் சின்னங்களான கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம், மணிகள், சாண்டா கிளாஸ், ஏஞ்சல்ஸ், புறா போன்ற பல சின்னங்கள் உள்ளன.
ஒளிரும் கிறிஸ்துமஸ் மரம்
கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முக்கிய பங்கு வகிப்பது கிறிஸ்துமஸ் மரம். அதாவது பசுமை மாறாத ஊசியான கூம்பு வடிவில் உள்ள மரங்களை வெட்டி ஆலயத்தின் வெளியே வைத்து, அதில் வண்ண விளக்குகள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரிப்பர். சிலர் பண்டிகையை கொண்டாடும் விதமாக தங்களது வீட்டின் முன்பும் கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து விழாவை கொண்டாடுவார்கள்.
கிறிஸ்துமஸ் மரத்தின் பிறப்பிடம் ஜெர்மனி. புனித போனிடஸ் என்பவர் ஜெர்மனியில் கிறிஸ்தவ மத போதனை செய்திருந்த வேளையில் அங்கிருந்த மக்கள் ஓக் மரத்தை தெய்வமாக வழிபட்டனர். அதனை கண்ட அவர் அம்மரத்தை வெட்டி வீழ்த்தினார். அதனடியில் இருந்து கிறிஸ்துமஸ் மரம் முளைத்து வளர்ந்ததாக ஓர் நிகழ்வு கூறப்படுகிறது. இதுவே கிறிஸ்துமஸ் மரத்திற்கு அனைவர் கூறும் கதை.
1500-ம் ஆண்டு மார்ட்டின் லூதர்கிங் பனிபடர்ந்த மரங்கள் மீது வெளிச்சம் பட்டு ஒளிர்வதை கண்டு பீர்மரத்தை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்துமஸ் விழாவில் பயன்படுத்தினார் என கூறப்படுகிறது.
18-ம் நூற்றாண்டிற்கு பிறகு கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் நிகழ்வு உலக நாடுகள் முழுவதும் பரவியது. கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தை கொண்டிருப்பதும், அதன் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூயஆவி எனும் முப்பரிமாணங்களை குறிப்பதாகவும் உள்ளது என கிறிஸ்துவ விளக்கங்கள் கூறுகின்றன.
கிறிஸ்துமஸ் ஸ்டார்
கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திற்கு முன்பாகவே, டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கிறிஸ்தவர்களின் வீடுகளில் ஒளிவீசும் அழகிய நட்சத்திரம் (கிறிஸ்துமஸ் ஸ்டார்) தொங்கவிடப்பட்டிருக்கும். கிறிஸ்துமஸ் விழாவில் நட்சத்திரத்தின் அலங்கார அணிவகுப்பு நிகழ காரணமாய் யாதெனின், பெத்லேகம் விண்மீன் அல்லது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்பது இயேசுவின் பிறப்பை ஞானிகளுக்கு சுட்டிக்காட்டிய விண்மீன். பெத்லகேமில் இயேசு பிறந்த இல்லம் வரை ஞானிகளுக்கு வழிகாட்டியது இந்த நட்சத்திரம்.
அதன் நினைவாய் தங்கள் இயேசு பிறப்பு வழிகாட்டிய விண்மீன் தொங்கட்டும் என கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் "கிறிஸ்துமஸ் ஸ்டார்" என்ற விண்மீன் விளக்கை ஒளிர விடுகிறார்கள்.
கிறிஸ்துமஸ் குச்சி
250 வருடங்களுக்கு முன்பு ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த கிறிஸ்துமஸ் இனிப்பு குச்சி. 1670-ல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது குழந்தைகள் அமைதியாக அமர்வதற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட' ஜே' வடிவிலான இனிப்பு குச்சி. இருப்பினும் இந்த ஆடுமேய்ப்பர் துரடு வடிவ இனிப்பு குச்சியின் வடிவம் ஜீசஸ்சை குறிப்பதாகவும், இதில் உள்ள சிவப்பு கோடு சிலுவையின் ரத்தத்தையும், வெண்ணை நிறம் தூய்மையை குறிப்பதாகவும் கூறப்படுகிறது. பெப்பர்மின்ட் சுவை ஹைசாப் செடியை நினைவு கூறும் வகையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிறிஸ்துமஸ் விழாவை நினைவு கூறும் வகையில் இன்னும் நிறைய சின்னங்கள் உள்ளன. இவை கிறிஸ்துமஸ் விழாவின் மகிழ்ச்சியை, அதன் புனிதத்தை அறிவிக்கும் நோக்கிலேயே உள்ளன.
- இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது உலகம் முழுவதும் அறியலாயிற்று.
- தூய பரிசுத்த ஆவியால் கன்னி மரியாள் கருவுற்றார்.
உலக மக்களை ரட்சிக்க வந்த இறைமகன் இயேசு கிறிஸ்து, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெத்லகேமில் யோசேப்பு-மரியா தம்பதியருக்கு மகனாக அவதரித்தார்.
இயேசுவின் பிறப்பை அறிவிப்பதற்காக கடவுள், கபிரியேல் எனும் வானதூதரை, கலிலேயாவில் உள்ள நாசரேத் என்னும் ஊரில் உள்ள மரியாளிடம் அனுப்பினார். அப்போது "மரியா... நீர் கடவுளின் அருளை கண்டடைந்துள்ளீர். கருவுற்று ஒரு மகனை பெறுவீர். அவருக்கு இயேசு என்று பெயிரிடுவீர். அவர், உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்" என்று மரியாவிடம் கூறினார் கபிரியேல்.
அந்த காலத்தில், பேரரசர் அகுஸ்து சீசர், தனது பேரரசு முழுவதும் மக்கள் தொகையை கணக்கெடுக்குமாறு உத்தரவிட்டு இருந்தார்.
சிரியா நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராக இருந்தபோது முதன் முறையாக மக்கள்தொகை கணக்கிடப்பட்டது. தங்கள் பெயரை பதிவு செய்ய அவரவர்கள் தங்களது ஊருக்கு சென்றனர்.
தாவீது வழி மரபினரான யோசேப்பும், தான் திருமணம் செய்ய ஒப்பந்தமான மரியாளோடு பெயரை பதிவு செய்ய நாசரேத்தில் இருந்து யூதேயாவில் உள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்கு சென்றார். அப்போது தூய பரிசுத்த ஆவியால் கன்னி மரியாள் கருவுற்றிருந்தார். அங்கு இருந்த போது மரியாளுக்கு பேறுகாலம் வந்தது. அவர் தனது தலைமகனான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்தார்.
அந்த நாளைத் தான் ஒவ்வொரு டிசம்பர் 25-ந் தேதியும் கிறிஸ்துமஸ் ஆக உலகம் முழுவதும் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இயேசு கிறிஸ்து பிறந்தபோது, மரியாளுக்கு விடுதியில் இடம் கிடைக்கவில்லை. அதனால், குழந்தையை துணிகளில் பொதிந்து மாட்டுத் தொழுவத்தில் இருந்த தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்தனர்.
அப்போது, அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி, இரவு முழுவதும் தங்கள் கிடையை காவல் காத்துக்கொண்டிருந்தனர். திடீரென்று வானதூதர் அவர்கள் முன் தோன்றினார். அவர்களிடம், "இதோ... எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன். இன்று, ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். அந்த குழந்தையை துணிகளில் சுற்றி மாட்டுத் தீவனத் தொட்டியில் கிடத்தி இருக்கிறார்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார்.
வானதூதர் சென்றபின், அந்த இடையர்கள் பெத்லகேம் சென்றனர். வானதூதர் அறிவித்தபடியே, அங்கு இருந்த பாலன் இயேசுவை கண்டு வணங்கினர். இதற்கிடையில், கிழக்கில் இருந்து ஜெருசலேம் வந்த சில ஞானிகள், ஏரோது அரசனிடம், "யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே? அந்த அறிவிப்புக்கான விண்மீன் எழக்கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்றார்கள்.
அரசனும் மறைநூல் அறிஞர்களை அழைத்து, மெசியா எங்கே பிறப்பார் என்று விசாரித்தான். அவர்கள் அவனிடம், "யூதேயாவில் உள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்" என்று கூறினார்கள். தொடர்ந்து, யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டு சென்று விண்மீன் தோன்றிய காலத்தை பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான் மன்னன் ஏரோது. அந்த ஞானிகளிடம், "நீங்கள் சென்று குழந்தையை குறித்து திட்டவட்டமாக எனக்கு தெரிவியுங்கள்" என்றும் கூறி, அவர்களை பெத்லகேமிற்கு அனுப்பினான்.
அவர்கள் பெத்லகேம் சென்றபோது, முன்பு எழுந்த விண்மீன் மீண்டும் தோன்றி அவர்களுக்கு வழிகாட்டியது. அந்த விண்மீனை அவர்கள் பின்தொடர்ந்து சென்றனர். ஓரிடத்தில் அந்த விண்மீன் நின்றதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
இறைமகன் இயேசு பாலகனாக அன்னை மரியாள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருந்ததை கண்டு பெருமகிழ்ச்சி கொண்டனர். தாங்கள் கொண்டு வந்த பேழைகளை திறந்து, அதில் இருந்த பொன், சாம்பிராணி, வெள்ளைப் போளம் ஆகியவற்றை காணிக்கையாக கொடுத்தனர்.
மன்னன் ஏரோதை சந்திக்க மீண்டும் செல்ல வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டு இருந்ததால், அவர்கள் அங்கு செல்லவில்லை. வேறுவழியாக தங்கள் நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். இவ்வாறாக இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது உலகம் முழுவதும் அறியலாயிற்று.
- பக்தர்கள் ஸ்ரீவாரி புஷ்கரணியில் 3 முறை மூழ்கி புனித நீராடினர்.
- பல உள்ளூர் கோவில்களில் சக்கர ஸ்நானம் நடந்தது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவாதசி விழா நேற்று நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை கோவிலில் இருந்து உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஊழியர்கள் ஊர்வலமாக பூவராகசாமி கோவில் அருகில் ஸ்ரீவாரி புஷ்கரணியின் கரைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்து, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஸ்ரீவாரி புஷ்கரணி புனிதநீரில் அர்ச்சகர்கள் 3 முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்தனர்.

அப்போது புஷ்கரணியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவாரி புஷ்கரணியில் 3 முறை மூழ்கி புனித நீராடினர். தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்ததும், சுதர்சன சக்கரத்தாழ்வாரை மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண. கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

வைகுண்ட துவாதசியையொட்டி திருப்பதியில் உள்ள பல உள்ளூர் கோவில்களில் சக்கர ஸ்நானம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில், திருப்பதி கோதண்டராமசாமி கோவில், கோவிந்தராஜசாமி கோவில், நாராயணவனம், நாகலாபுரம், தொண்டமநாடு ஆகிய பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் ஸ்நாபன திருமஞ்சனம், சக்கர ஸ்நானம் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனிதநீராடினர்.
- தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையானதாகும்.
- மரகத நடராஜர் சன்னதி ஆருத்ரா அன்று மட்டுமே திறக்கப்படும்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவில் திரு உத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி கோவில். இந்த கோவில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையானதாகும்.
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும்.
இந்தநிலையில் திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் இந்த ஆண்டின் ஆருத்ரா திருவிழாவானது கடந்த 18-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியதில் இருந்து தினமும் சுவாமி-அம்பாள் மற்றும் நடராஜர் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
ஆருத்ரா தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி அளவில் மரகத நடராஜர் சன்னதியானது திறக்கப்படுகின்றது. தொடர்ந்து நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனங்கள் முழுவதுமாக களையப்படுகிறது. பின்னர் நடராஜருக்கு பால், பன்னீர், மாபொடி, மஞ்சப்பொடி, திரவியப் பொடி, தேன், இளநீர் உள்ளிட்ட 32 வகையான மங்கல பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து அன்று இரவு 11 மணி அளவில் நடராஜருக்கு மீண்டும் ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்து நாளை மறுநாள் (27-ந்தேதி) காலை சூரிய உதயமாகும் நேரத்தில் நடராஜருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகிறது. 27-ந்தேதி மாலை மீண்டும் நடராஜர் சன்னதியானது மூடப்படுகிறது.
நாளை (26-ந்தேதி) காலையில் இருந்து நாளை மறுநாள் மாலை வரையிலும் மட்டும் மரகத நடராஜர் சன்னதியில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெறு வதை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை கோவிலில் நாளை பகல் மற்றும் இரவு முழுவதும் சென்னை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கிறது.
நாளை நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் பணி யாளர்கள் செய்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் ஒரு நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதியானது பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- காலை 6.07 மணி முதல் புதன்கிழமை காலை 6.19 மணிக்கு நிறைவடைகிறது.
- கிரிவலம் செல்ல உகந்த நேரம்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பவுர்ணமி தோறும் அங்குள்ள அண்ணாமலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
அதன்படி மார்கழி மாத பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6.07 மணிக்கு தொடங்கி புதன் கிழமை காலை 6.19 மணிக்கு நிறைவடைகிறது. இது கிரிவலம் செல்ல உகந்த நேரம். மேலும் கோவிலில் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- சாண்டா கிளாசின் உண்மையான பெயர் `செயின்ட் நிக் கோலஸ்.
- 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ பிஷப் ஆவார்.
கிறிஸ்துமஸ் என்றாலே எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் கதாபாத்திரமாக இருப்பவர் கிறிஸ்துமஸ் தாத்தா. 1930-ம் ஆண்டுக்கு முன், கிறிஸ்துமஸ் தாத்தாவின் ஆடைகள் சிவப்பு நிறத்தில் இல்லை. நீலம், வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில்தான் இருந்தன. அதன் பிறகு 1930-ம் ஆண்டு சாண்டாவின் சிவப்பு ஆடை பிரபலமானது. அன்று முதல் இன்று வரை, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது உலகம் முழுவதும் உள்ள மக்கள் சிவப்பு நிற சாண்டாவை நினைவுகூர்கின்றனர். சாண்டா கிளாசின் உண்மையான பெயர் `செயின்ட் நிக் கோலஸ். அவர் 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவ பிஷப் ஆவார். துருக்கியில் பிறந்த அவர், ஏழைகளுக்கு உதவுவதற்காக தனது செல்வம் அனைத்தையும் கொடுத்து ஒரு புனிதரானார்.
சாண்டா கிளாசுக்கு செயின்ட் நிக்கோலஸ், பாதர் கிறிஸ்துமஸ், தாத்தா புரோஸ்ட் மற்றும் கிரிஸ் கிரிங்கில் உள்ளிட்ட பல பெயர்கள் உள்ளன. பல நாடுகளில், கிறிஸ்துமஸ் தினம் அன்று சாண்டா கிளாஸ் வருவார் என்று குழந்தைகள் ஆவலுடன் காத் திருக்கிறார்கள்.
கனடா நாடு சாண்டாவிற்கு ஒரு அஞ்சல் இடுகையை வழங்கியது. அங்கு மக்கள் சான்டா கிளாசுக்கு கடிதங்கள் எழுதலாம். அதற்கான அஞ்சல் குறியீடு, `H0H0H0'. இந்த அஞ்சல் சேவை ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிர கணக்கானவர்களுக்கு பதிலளிக்கிறது. ஜார்ஜியா மற்றும் அரிசோனா, அமெரிக்கா மற்றும் பின்லாந்தில் சாண்டா கிளாஸ் என்ற பெயரில் பல நகரங்கள் உள்ளன.
1822-ம் ஆண்டு கிளமென்ட் மூர் எழுதிய `கிறிஸ்துமசுக்கு முந்திய இரவு' எனும் கட்டுரையில் கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் எழுதிய `ஜிங்கில் பெல் ஜிங்கில் பெல்' என்ற கவிதையில் கதாநாயகனாக கிறிஸ்துமஸ் தாத்தா இடம் பெறுகிறார். அதனாலேயே இன்றும் கிறிஸ்துமஸ் கலைநிகழ்ச்சிகள் நடக்கும் எல்லா இடத்திலும் கிறிஸ்துமஸ் தாத்தா வருகை நிச்சயமாக இடம்பெறும்.
அப்போது ஜிங்கில் பெல் பாடல் ஒலிக்கப்படும். அதன் பின்னரே கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர் சாக்லேட்டுகளை வீசிக்கொண்டு வருவார். அவரது கைகுலுக்கலுக்கும், அவரை பார்ப்பதற்கும் ஆவலாய் இருக்கும் ரசிகர் பட்டாளம் ஒன்று கூடும்.
இவ்வாறு கிறிஸ்துமஸ் தாத்தா பற்றி பல செய்திகள் இருந்தாலும், கிறிஸ்துமசின் மையச்செய்தியான பகிர்தலை பரிசுகள் கொடுப்பதன் மூலம் கிறிஸ்துமஸ் தாத்தா வெளிப்படுத்துகிறார். கடவுள் தன் ஒரே மகனை தன் மக்களுக்காக கொடுக்கிறார். இதுவே கிறிஸ்துமசின் மையமாக இருக்கிறது.
இதனை உள்வாங்கி தன்னிடம் இருப்பதை இல்லாதவருக்கு பகிர்ந்து கொடுக்கும் தாராள மனதை கற்றுக்கொடுக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா, அர்த்தமுள்ள விதத்தில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட அழைப்பு விடுப்பவராக இருக்கிறார்.






