search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    விண்ணின் வேந்தர் மண்ணில் பிறந்தார்
    X

    விண்ணின் வேந்தர் மண்ணில் பிறந்தார்

    • அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசுபிரான் பிறந்த தினம்.
    • உலகம் முழுவதும் கொண்டாடப்படும் விழா.

    "உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக

    உலகில் அவருக்கு உகந்தோருக்கு

    அமைதி உண்டாகுக (லூக்கா 2:14)

    அகிலத்தின் விடுதலைக்காய், அவனியில் அவதரித்து, அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசுபிரான் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ். மனித நேயமிக்க மாபரன், பூமிக்கு புறப்பட்டு வந்த புண்ணிய நாள் தான் கிறிஸ்து பிறப்பு பெருவிழா. சாதி மத வேற்றுமைகளை தாண்டி, உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் விழா இது.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. நடுங்கும் குளிரில், எங்கும் தங்க இடம் கிடைக்காமல், ஆடு மாடு அடைக்கும் கொட்டகையே அவரது பிறந்த வீடாக அமைந்தது. இயேசு பாலன் உவக இரட்சகர் என்ற நிலையில் அரண்மனையையும் ஆடம்பரத்தையும் தெரிந்து கொள்ளவில்லை.

    எளிமையையும், ஏழ்மையையும் விரும்பி ஏற்றார். எளியோரின் பங்காளரானார். இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்துள்ளார் என்ற நற்செய்தி முதன்முதலாக சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட பாமரர்களாகிய இடையர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டது.

    ஏழ்மையின் கோலமாய், தாழ்மையின் வடிவமாய்இயேசு பிறந்தார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இயேசுவின் தாழ்மை, இன்று நம் அனைவரையும் ஆதிக்க, ஆடம்பர வாழ்வி லிருந்து மாற்றம் பெற்று, அனைத்து ஏழை, எளிய மக்களோடு ஒன்றித்து வாழ அறைகூவல் விடுக்கிறது.

    "பூவுலகில் நன்மத்தோர்க்கு அமைதி உண்டாகுக" என்ற அமைதியின் நாயகன், நம்மில் தேடும் சமாதானம், அமைதி எங்கே?

    எத்தனை ஏற்ற தாழ்வுகள்! எத்தனை வன்முறைகள்!!

    இஸ்ரேயேல், பாலஸ்தீனப்போர்,

    ரஷ்ய, உக்ரேன் போர்,

    பனிப்போர், பகிரங்கப் போர்,

    வல்லரசு நாடுகளின் ஆதிக்க வெறி...

    பெத்லேகேமின் மகிழ்ச்சி நாட்கள் மறைந்துவிட்டனவோ என்ற எண்ணம் தோன்றுகிறதே... இறைவன் ஒற்றுமையுடன், ஒன்றாக, நிறைவாக அனைத்தையும் பகிரிந்து வாழ வேண்டுமென விரும்புகிறார். கள்ளம் கபடமற்ற குழந்தையின் இயல்புகள் நம்மில் மிளிர வேண்டுமெனவே, இயேசு மழலை அடையாளத்துடன் பாலகனாக, கிறிஸ்து பிறப்பு விழாவில் நம்மோடு உறவாடுகிறார்.

    நம் வாழ்வு சிறக்க, நாமும் பாலகனாக மாறுவோம். கிறிஸ்து பிறப்பு விழா என்பது பகிர்வின் அடையாளம். அன்பின், மகிழ்ச்சியின், நம்பிக்கையின், எதிர்பார்ப்பின் வெளிப்பாடு. இவையே இயேசுவின் கொடைகளாக நம் உள்ளங்களை நிறைக்கட்டும். இயேசு மண்ணில் பிறந்து, உலகிற்கு தந்த அமைதி நமது மனங்களில், குடும்பங்களில், உலக நாடுகளில் குடி கொள்ள வேண்டுமென ஜெபிப்போம்.

    பேராசை, பகைமை என்ற இருளை அகற்றி, அன்பெனும் பேரொளியை ஏற்றுவோம். நேர்மறையான எண்ணங்களுடன், நம்பிக்கையை விதை்து புத்தாண்டில் புதிய பயணத்தை தொடங்குவோம். உறவுகளை அன்பால் நனைத்திடுவோம். அன்பால் உலகை ஆள்வோம். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

    Next Story
    ×