என் மலர்tooltip icon

    வழிபாடு

    • நந்தகோபாலனின் திருமாளிகையை காப்பவனே!
    • அழகிய புருவம் போல் வானவில்லை உண்டாக்கு.

    திருப்பாவை

    பாடல்

    நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

    கோயில்காப்பானே! கொடித்தோன்றும் தோரண

    வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்; ஆயர்சிறுமிய ரோமுக்கு அறைபறை

    மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;

    தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்; வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா! நீ

    நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    ஆயர்குடி மக்களின் தலைவனாக இருக்கின்ற நந்தகோபாலனின் திருமாளிகையை காப்பவனே! கொடிகள், மாவிலை தோரணங்கள் கட்டப்பட்ட வாசலை பாதுகாக்கும் காவலனே! மணிகளோடு கூடிய கதவை திறப்பாயாக! ஆயர்குல சிறுமிகளுக்கு நோன்புக்கு தேவையானவற்றை தருவதாக கிருஷ்ணன் நேற்றே வாக்களித்திருக்கிறான். அதனைப் பெற்று செல்வதற்காக வந்து இருக்கிறோம்.

    அவனைத் தூக்கத்தில் இருந்து எழுந்தருள வேண்டி திருப்பள்ளி எழுச்சி பாடுவதற்காக உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி வந்துள்ளோம். அதெல்லாம் முடியாது என்று தடுத்துவிடாதே.. கண்ணன் வீட்டுக் கதவைத் திறப்பாயாக!

    திருவெம்பாவை

    பாடல்

    முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்

    என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள்

    இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்

    பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்

    என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்

    தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கும்

    முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்

    விளக்கம்

    மேகமே மழைக்காலத்துக்கு முன்பே நீ கடலின் நீரை சுருக்கி வற்றச்செய்து, அதன் பிறகு அந்த நீரை வானத்திற்கு எடுத்துச்சென்றுவிடு! எங்களை காத்தருளும் அன்னை பார்வதியின் திருமேனியைப் போல நீல நிறமாக மாற்றிவிடு. அங்கே அவளின் மெல்லிய இடைபோல் மின்னல் ஒலியை உண்டாக்கு. அன்னையின் கால்களில் அணிந்துள்ள சிலம்புகள் எழுப்புகின்ற ஓசையைப்போன்று இடி முழக்கம் செய். அவரது அழகிய புருவம் போல் வானவில்லை உண்டாக்கு. உமையவளை விட்டுப்பிரிந்து இருக்காத எமது தலைவனாகிய இறைவனும் இறைவியும் அடியார்களுக்கு வாரி வழங்கும் அருளைப் போன்று மழையைப் பொழிவாய்

    • 2024-ம் ஆண்டு சனிபகவானின் ஆதிக்கத்தில் தொங்குகிறது.
    • எந்த எண்ணிற்கும் இல்லாத சிறப்பு இந்த எட்டாம் எண்ணிற்கு உண்டு.

    2024-ம் ஆண்டு 8ம் எண்ணின் அதிபதியான சனிபகவானின் ஆதிக்கத்தில் தொங்குகிறது. கால புருஷ 10,11-ம் அதிபதியான சனி பகவான் கும்பத்தில் ஆட்சி பலம் பெற்று இருக்கும் காலத்தில் 8-ம் எண் ஆதிக்கத்தில் புதிய வருடம் தொடங்குவது முன்னேற்றத்திற்கான ஒரு அமைப்பு. எந்த எண்ணிற்கும் இல்லாத சிறப்பு இந்த எட்டாம் எண்ணிற்கு உண்டு. எந்த எண்ணையும் எண்ணால் எழுதும் பொழுது எழுத்து கீழே வரும். ஆனால் எட்டாம் எண்ணை மட்டும் எண்ணால் எழுதும் பொழுது மேலே செல்லும்.

    குருவின் சஞ்சாரம்:

    ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் மேஷ ராசியில் சனியின் பார்வையில் சஞ்சரிக்கிறார். சனி குரு சம்பந்தம் இது தர்மகர்மாதிபதி யோகம். தொழில் முனைவோர் ஏற்றம் காண்பர். புதிய தொழிற்சாலைகள் பெருகும். மூடும் நிலையில் இருக்கும் தொழிற்சாலைகள் முழு நேரமாக உற்பத்தியை அதிகரிக்கும். தொழிலாளர்கள் ஏற்றம் பெறுவர். புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். ஏப்ரல் 21, 2024-ல் ரிஷப ராசிக்கு செல்கிறார். தங்கம் விலையேறும், பங்குச்சந்தை ஏற்றம் பெறும், ரியல் எஸ்டேட் வளர்ச்சி பெறும்.ஆன்மீக விழிப்புணர்வு அதிகரிக்கும். செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் வளர்ச்சி பெறும்.

    சனியின் சஞ்சாரம்:

    ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்பராசியில் ஆட்சி பலம் பெறுகிறார். சனி கொடுப்பவரா? கெடுப்பவரா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். கும்ப சனி குடம் குடமாய் கொடுக்கும் என்பது பழமொழி. எனவே கும்ப சனி கொடுக்கும் சுப பலன்களை அனுபவிக்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும். விவசாய உற்பத்தி அதிகரிக்கும். விளைச்சளுக்கு உரிய விலை கிடைக்கும். சுரங்க தொழில், எண்ணெய் உற்பத்தி,பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். இனம் புரியாத நோய் தாக்கம் இருக்கும்.அரசியல் களத்தில் நாட்டு மக்களுக்கு திருப்புமுனையான சம்பவங்கள் அமையும்.

    ராகு கேதுவின் சஞ்சார பலன்கள்:

    மீனராசியில் ராகுவும், கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். மீனம் நீர் ராசி, கடல் ராசி, வெளிநாட்டு வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும். வெளிநாட்டு மோகம் அதிகமாகும். பலர் வெளிநாட்டு வேலைக்கு செல்வார்கள். கடலில் விளையும் பொருட்களின் விளைச்சலும், தேவையும் பயன்பாடும் அதிகரிக்கும். கடற்படையினரின் சாதனைகளும், திறமைகளும் மிளிரும். வறட்சி குறையும்.

    மழைப்பொழிவு அதிகமாகும். ஏரி குளம் போன்றவை நிரம்பும். நீர் ராசியான மீனத்தை நோக்கி சனி பகவானும் செல்வதால் மழைப்பொழிவு அதிகமாகும். கல்வித்துறை, நிதித்துறை, நீதித்துறை, தூதரகம், வங்கிப்பணி, ஆலயப் பணி, மதபோதனை, மருத்துவம் ஆகிய துறையினரின் வளர்ச்சி பிரமாண்டமாகும். விமானம், கப்பல் போன்றவற்றின் மூலம் சுற்றலாத் துறைக்கு நல்ல வருமானம் கூடும். பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.போதை பொருட்கள் கடத்துபவர்கள் அதிகரிப்பர். அவர்கள் மீது வழக்குகளும் அதிகரிக்கும். அந்நிய சக்திகள் போராட்டத்தை தூண்டுவர்.

    பொது மக்களை குறிக்கும் சனிக்கும் உலக பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் குருவிற்கும் மத்தியில் ராகு பகவான் சஞ்சரிப்பதால் மக்கள் பொருள் சார்ந்த விசயத்தில் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும். இந்த வருடம் கடகம்,மகரம், கும்பம், மீனம் ராசி யினருக்கு அஷ்டம, ஏழரைச் சனி நடப்பதால் கவனம் தேவை. மேஷம், சிம்மம், கன்னி, தனுசு ராசியினருக்கு சாதக மான பலன் உண்டு. ரிஷபம், மிதுனம், விருச்சிகம், துலாம், ராசியினருக்கு சுமாரான பலன் உண்டாகும்

    அத்துடன் வாக்கிய பஞ்சாங்கம் சரியா? திருக்கணித பஞ்சாங்கம் சரியா? என்ற விவாதமும் அவசியமற்றது. அவரவரின் சுய அனுபவத்தில் எந்த பஞ்சாங்க முறை ஒத்து வருகிறதோ அதை பயன்படுத்தும் உரிமை அனைவருக்கும் உள்ளது. அதே நேரத்தில் திருக்கணித பஞ்சாங்க முறையே சரி என்பதற்கு சமீபத்தில் பெய்த மழை வெள்ளமே சரியான சாட்சி.

    தற்போது கோட்சாரத்தில் சனி பகவான் கும்ப ராசியில் சதய நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்து கொண்டு இருக்கிறார். விருச்சிகத்தில் ஆட்சி பலம் பெற்ற செவ்வாயின் 4-ம் பார்வை கும்ப சனியின் மேல் பதிந்தது. கும்ப சனியின் 10-ம் பார்வை விருச்சிகத்தில் உள்ள செவ்வாயின் மேல் பதிந்து டிசம்பர் 2,3,4,5ல் சென்னையின் பெரும் பகுதி மழை வெள்ளம் சூழ்ந்தது. தமிழ் நாட்டு வெள்ளத்தால் பல விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் ரத்து செய்யப்பட்டது. சனி செவ்வாய் சம்பந்தம் இல்லாமல் பேரிடர் ஏற்படாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. மகரத்தில் சனி இருந்தால் செவ்வாயின் பார்வை சனியின் மேல் பதியாது.

    ஆகம விதியை பின்பற்றும் கோவில்கள் இன்றும் வாக்கிய பஞ்சாங்கம் பயன்படுத்தப்படுகிறது. ஆகம விதியை மாற்றுவது மரபு அல்ல. ஆனால் திருத்தியமைக்கப்பட்ட திருக்கணித பஞ்சாங்க முறையின் படி உள்ள கிரக நகர்வே சரி என்பதை உணர்ந்தவர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து திருக்கணித முறையை பொது மக்களிடம் சேர்த்துக் கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

    நடப்பது கலியுகம். ஆக்கமும் அழிவும் தருவது இயற்கை. கிரகங்கள் தன் கடமையை செய்யும் போது நமக்குள் இருக்கும் உயிரே இறைவன் என்பதை உறுதியாக உணரும் போது, ஆத்மா புனிதமடையும். ஆத்மார்த்த பிரார்த்தனைக்கு வினையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வலிமை உண்டு.

    வீடும் நாடும் நலம் பெற குடும்ப உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து சாந்தி மந்திரத்தை ஆத்மார்த்தமாக ஜெபித்து வர பிரபஞ்ச சக்தி அளவிட முடியாத நன்மைகளை வழங்கும். 2024 புத்தாண்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ பிரபஞ்ச சக்தியை மண்டியிட்டு பிரார்த்திக்கிறேன்.

    • திருத்தணியில் படித்திருவிழா.
    • அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-16 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பஞ்சமி பிற்பகல் 2.08 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: மகம் காலை காலை 8.36 மணி வரை பிறகு பூரம்

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மதுரை மீனாட்சியம்மன் வைரக்கிரீடம் சாத்தி அருளல். திருத்தணி படித்திருவிழா. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீநம்பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் திருவாய்மொழி சாற்றுமுறை. திருமயிலை கற்பாம்பாள் சமேத கபாலீஸ்வரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்பாள் சமேத ரத்தினகிரீசுவரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பெருமை

    ரிஷபம்-ஆர்வம்

    மிதுனம்-நன்மை

    கடகம்-அமைதி

    சிம்மம்-பக்தி

    கன்னி-முயற்சி

    துலாம்- தனம்

    விருச்சிகம்-உழைப்பு

    தனுசு- முன்னேற்றம்

    மகரம்-பொறுமை

    கும்பம்-வரவு

    மீனம்-இன்பம்

    • ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம்.
    • பக்தர்கள் முருகன் பக்தி பாடல்கள் பாடி திருச்செந்தூருக்கு பாதயாத்திரை.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (திங்கட்கிழமை) ஆங்கில புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடக்கிறது.

    இதை முன்னிட்டு அதி காலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப தை திருநாளை கொண்டாடும் வகையில் அதற்கு முன்பாக கோவில்பட்டி, விருதுநகர், சங்கரன்கோவில், நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும், காவடி எடுத்து வந்தும் அலங்கார செய்த வாகனங்கள் முன் செல்ல பக்தர்கள் முருகன் பக்தி பாடல்கள் பாடி திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக வந்தவாறு உள்ளனர்.

    தற்போது பருவ மழை பெய்து ஒய்ந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ஏராளமான பக்தர்கள் வந்தவாறு உள்ளனர்.

    • குதிரை வாகனத்தில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார்.
    • பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

    திருச்சி:

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வேடுபறி வைபவம் நேற்று கோலாகலத்துடன் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் கடந்த 12-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 13-ந்தேதி தொடங்கிய பகல்பத்து நாட்களில் உற்சவர் நம்பெருமாள் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி திவ்வியபிரபந்தத்தின் திருமொழி பாசுரங்களைக் கேட்டவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 23-ந் தேதி நடைபெற்றது. அன்று உற்சவத்தின் இரண்டாம் பகுதியாக ராப்பத்து தொடங்கியது. ராப்பத்து நாட்களில் நம்பெருமாள் கோவில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் இசைக்கும் திருவாய்மொழி பாசுரங்களை கேட்டபடி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    ராப்பத்து உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றான வேடுபறி வைபவம் நேற்று கோவில் நான்காம் பிரகாரம் கிழக்கில் உள்ள மணல்வெளியில் நடைபெற்றது. இதற்காக உற்சவர் நம்பெருமாள் மாலை 5 மணியளவில் தங்க குதிரை வாகனத்தில் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு ஆரியட்டாள் வாசல் வழியாக மாலை 5.30 மணிக்கு கோவில் மணல் வெளிக்கு வந்த நம்பெருமாள்

    மாலை 6 மணிவரை மணல்வெளியில் குதிரை வாகனத்தில் ஓடியாடி, வையாளி வகையறா கண்டருளினார். இதனை ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபம் சென்றடைந்தார். இரவு 8.15 மணி முதல் இரவு 9.30 மணிவரை அரையர் சேவையுடன் பொதுஜன சேவை நடைபெற்றது. அங்கிருந்து நம்பெருமாள் இரவு 11 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இன்று (31-ந்தேதி) அதிகாலை 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    திருமாலுக்குத் தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், தனது பெருமாள் தொண்டு தொடர வழிப்பறிக்கொள்ளையனானார். இவரை தடுத்து ஆட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிது நேரம் விளையாட்டுக்காட்டி பின் அவரது காதில் ஓம்நமோ நாராயணாய எனும் மந்திரத்தை தானே உபதேசித்து ஆட்கொண்ட விதம் நேற்றைய வேடுபறி வைபவத்தின் ஒருபகுதியாக பக்தர்கள் முன்னிலையில் நடத்திக்காட்டப்பட்டது.

    இதையடுத்து திருமங்கை மன்னன் மரபில் வந்தவர்கள் என்று கூறப்படும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காவல்காரர் குடும்பத்தினர் மற்றும் அவர்தம் உறவினர்களுக்கு பெருமாள் சார்பில் மரியாதைகள் வழங்கப்பட்டது. அதன்பின் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபம் சென்றடைந்தார்.

    வேடுபறி உற்சவத்திற்கென நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் ஆரியப்படாள் வாசல்வழியே மணல்வெளிக்கு வந்துவிடு வதால் ராப்பத்து உற்சவத்தில் வேடுபறியன்று மட்டும் பரபதவாசல் திறப்பு நடைபெறுவதில்லை.

    10-ம் திருநாளான நாளை (திங்கட்கிழமை) தீர்த்தவாரியும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

    • சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
    • 20-ந்தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலை:

    2023-2024-ம் ஆண்டுக்கான மண்டல-மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் முதல் வழக்கமான பூஜை வழிபாடு நடைபெற்று வந்த நிலையில் 41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அன்றைய தினம் இரவே நடையும் அடைக்கப்பட்டது. இந்த மண்டல சீசனில் 33 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    சில நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் சபரிமலையில் அலைமோதியது. அந்த சமயத்தில் பக்தர்கள் 15 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பி.என்.மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

    நடை திறப்பையொட்டி நேற்று பிற்பகல் 2 மணிக்கு பின்னரே பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு மலையேற அனுமதிக்கப்பட்டனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். பிறகு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம் நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு உச்ச பூஜைக்கு பிறகு 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    பின்னர் மாலை 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும், அதனைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    வருகிற 15-ந்தேதி அதிகாலை 2.46 மணிக்கு மகர சங்கிரம பூஜை நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு ஐயப்ப சாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனையும், தொடர்ந்து மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.

    அதேபோல் 15-ந்தேதி முதல் 18-ந் தேதி வரை மாளிகப்புரத்தம்மன் கோவிலில் இருந்து 18-ம் படி வரை இரவில் அய்யப்ப சாமி ஊர்வலமும், 19-ந் தேதி அன்று சரம் குத்தி வரை சாமி ஊர்வலமும் நடக்கும். இந்த சீசனில் 20-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

    ஏற்கனவே 15-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கான முன்பதிவு முடிவடைந்து விட்டது. அந்த வகையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதே சமயத்தில் உடனடி பதிவு மூலம் தினமும் 15 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட உள்ளனர்.

    • கண்ணனைப் புகழ்ந்து போற்றி பாடுவதற்காக விரைந்து வருவாயாக!
    • அழகிய பூக்கள் நிறைந்த பொய்கையில் நீராடுவோம்.

    திருப்பாவை

    பாடல்

    எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

    சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;

    வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!

    வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!

    ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?

    எல்லோரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்.

    வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க

    வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    அடி பெண்ணே! இளமையான கிளி போன்றவளே! இன்னுமா தூங்குகிறாய்? சத்தம் போட்டு என்னை அழைக்காதீர்கள். இதோ வந்துவிடுகிறேன் என்று சொல்லி விட்டு மீண்டும் படுத்து உறங்குகிறாயே? நீ மிகவும் கெட்டிக்காரி. வாய்ப்பேச்சில் வல்லவள். நாங்கள் இதை நன்கு அறிவோம். இந்த கெட்டிக்காரத்தனம் தவிர உன்னிடம் வேறு என்ன வைத்திருக்கிறாய்? நான் மட்டும் எழாததுபோல் பேசுகிறீர்களே என்று கேட்கிறாயே? எல்லோரும் வந்து விட்டார்கள். வேண்டுமானால் நீயே வந்து எண்ணிக்கொள். மாயச்செயல்களில் வல்லவன், பலம் பொருந்திய குவாலயபீடம் என்ற யானையைக் கொன்றவன், தீயவர்களை அழிப்பவன் என்று பல சிறப்புகளைக் கொண்ட கண்ணனைப் புகழ்ந்து போற்றி பாடுவதற்காக விரைந்து வருவாயாக!

    திருவெம்பாவை

    பாடல்

    ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்

    சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர

    நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்

    பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்

    பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்

    ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்

    வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

    ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்

    விளக்கம்

    அணிகலன்களுடன் கூடிய கச்சு என்ற ஆடையை அணிந்த பெண்களே! ஒரு பெண் தனியாக இருந்து எம்பெருமான் பெயரையே 'சிவ சிவ' என்று சொல்லி இறைவனின் சிறப்புகளை ஒயாமல் பேசிக் கொண்டிருக்கிறாள். பக்தி பரவசத்தில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து தாரை தாரையாக வழிகிறது. பலமுறை தரையில் விழுந்து வணங்குகிறாள். அப்படியே தன்னை மறந்து கிடக்கிறாள். தேவர்களை வணங்கமாட்டாள். இவ்வளவு பித்துப்பிடித்து அலையும் இந்த பெண்ணை ஆட்கொள்ளும் ஒப்பற்ற சிறப்புடைய பெருமான் யார்? அந்த இறைவனுடைய புகழை நாம் பாடுவோம். அழகிய பூக்கள் நிறைந்த பொய்கையில் நீராடுவோம்.

    • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிட நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்.
    • பெருமாள் கோவில்களில் திருவாய்மொழி உற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-15 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி இரவு 11.51 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: மகம் (முழுவதும்)

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: காலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிட நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் திருவாய்மொழி உற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராக பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜ பெருமாள் காலை சிறப்பு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தனம்

    ரிஷபம்-வரவு

    மிதுனம்-பெருமை

    கடகம்-பொறுமை

    சிம்மம்-ஆக்கம்

    கன்னி-உழைப்பு

    துலாம்- நற்செயல்

    விருச்சிகம்-தாமதம்

    தனுசு- பொறுப்பு

    மகரம்-அமைதி

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-நிம்மதி

    • பக்தர்கள் நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வரிசையாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    • குன்றத்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    சென்னை:

    சென்னையில் உள்ள கோவில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பல கோவில்களில் 1-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் புத்தாண்டையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் நெரிசல் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வரிசையாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் புத்தாண்டு தரிசனத்துக்காக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சிறப்பு அபிஷேகத்துக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சென்னை தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தானத்துக்கு சொந்தமான பெருமாள் கோவிலில் புத்தாண்டையொட்டி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    வடபழனி முருகன் கோவில் புத்தாண்டையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். முருக பெருமான் தங்க நாணய அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது.

    பின்னர் பகல் 12 மணிக்கு தங்க கவச அலங்காரமும், மாலையில் ராஜ அலங்காரமும் நடக்கிறது. புத்தாண்டை முன்னிட்டு இரவு 9 மணிக்கு கோவில் நடை மூடப்படாது என்றும் இரவிலும் பக்தர்கள் உள்ள வரை சாமியை தரிசனம் செய்து செல்லலாம் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வெளியே சிறப்பு தரிசன டிக்கெட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் அனைவரும் சிரமமின்றி சாமியை தரிசனம் செய்து செல்லும் வகையில் கோபுர வாசல் முதல் 150 அடிக்கு நிழற்பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.

    கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    பூங்காநகர் ராசப்பா தெருவில் கந்தகோட்டம் முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் தொடங்கப்பட்ட நாள் டிசம்பர் 31-ந் தேதி ஆகும். இதை முன்னிட்டு நாளை மாலை 6 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். இதைத்தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் சாமி ஊர்வலம் நடைபெறும். மேலும் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பொது மக்களுக்கு சாமி தரிசனம் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    திருவொற்றியூர் தேரடியில் அமைந்துள்ள வடிவுடையம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி 1-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. பின்னர் சாமி தரிசனம் தொடர்ந்து நடைபெறும். மாலை 5 மணிக்கு அபிஷேகம் நடைபெறும். பின்னர் 6.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை சாமி தரிசனம் நடை பெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    தி.நகரில் உள்ள பத்மாவதி தாயார் சன்னிதானத்தில் புத்தாண்டையொட்டி 1-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சாமிக்கு விசேஷ அலங்காரங்கள், தீபதூப ஆராதனைகள் நடைபெறுகிறது. பின்னர் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்

    திருமுல்லைவாயலில் உள்ள பச்சையம்மன் மன்னாதி ஈஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிரம்ம முகூர்த்த நேரமான 4.30 மணி முதல் 6 மணிக்குள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பூப்பந்தல் அமைத்து சாத்துப்படி அலங்காரம் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    குரு தலமான பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவல்லீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    ஆங்கில புத்தாண்டையொட்டி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு வழிபாட்டிற்கு வருகை தருவார்கள். டிசம்பர் 31 இரவு முதல் பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வருவார்கள். எனவே பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட்டுள்ளன. சென்னையின் பிற பகுதிகளிலிருந்து திருவேற்காடு வந்து செல்ல மாநகர பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக சிறப்பு வரிசை ஏற்படுத்தப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோபூஜை, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. நள்ளிரவு 1 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 1-ந்தேதி இரவு 10 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் புத்தாண்டை யொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பின்னர் பக்தர்கள் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு வழங்குவதற்காக 25 ஆயிரம் லட்டுகளும் தயார் செய்யப்படுகிறது. குன்றத்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் புத்தாண்டு முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜையுடன் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு உற்சவர் பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. இங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் கோவில்களில் அபிஷேகம், அலங்காரம்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ரெங்கமன்னார் ராப்பத்து உற்சவ சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-14 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை காலை 9.56 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: ஆயில்யம் நாளை காலை 6.05 மணி வரை பிறகு மகம்

    யோகம்: மரண, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சங்கடஹர சதுர்த்தி. பிள்ளையார்பட்டி திருநாரையூர் பொள்ளப் பிள்ளையார், திருவலஞ்சுழி சுவேத விநாயகர், மதுரை முக்குறுணி விநாயகர், உப்பூர வெயிலுகந்த விநாயகர் கோவில்களில் காலை ஹோமம், அபிஷேகம், அலங்காரம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ரெங்கமன்னார் ராப்பத்து உற்சவ சேவை. குச்சனூர் சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். உப்பிலியப்பன்கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-சுகம்

    ரிஷபம்-நட்பு

    மிதுனம்-பணிவு

    கடகம்-ஆதரவு

    சிம்மம்-உயர்வு

    கன்னி-போட்டி

    துலாம்- வெற்றி

    விருச்சிகம்-புகழ்

    தனுசு- செலவு

    மகரம்-அமைதி

    கும்பம்-சுபம்

    மீனம்-இன்பம்

    • பணிவிடை செய்வதும், அவனை நினைத்து உருகுவதும் அர்ச்சனையாகும்.
    • இறைவனை தூய்மையான மனத்துடன் பூஜிக்க வேண்டும். அதுதான் சேவை.

    கடவுளை வணங்குவதன் மூலமே ஒவ்வொரு மனிதனுக்கும் மனத்தூய்மையும், ஆத்மசாந்தியும் கிடைக்கிறது. தெய்வத்தை வணங்குவது என்பது தெய்வத்தை நாம் நெருங்கிக் காண்கிறோம் என்பதாகும். வணங்கும் முறைகளை நாம் ஒன்பது வகையாகப் பிரிக்கலாம். அற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    கவனித்தல்:-

    கவனிப்பது என்பதன் அர்த்தம் `கேட்பது' என்பதாகும். இது குறிப்பிடுவது என்னவென்றால், தெய்வக் கதைகளையும், தெய்வங்கள் குறித்த பிற விஷயங்களையும் பக்தியோடும் ஆர்வத்துடனும் அமைதியான இடத்தில் இருந்து கேட்க வேண்டும் என்பதாகும்.

    கீர்த்தனம்:-

    கீர்த்தனம் ஆலாபனை செய்வதென்பது, ஆராதனையின் மற்றொரு சிறப்பம்சமாகும். பகவானின் லீலைகளை மனதில் கொண்டு பயபக்தியுடன் கீர்த்தனையை இசைக்கோர்வையாக பாடுவது.

    நினைத்தல்:-

    பகவானைப் பற்றி நிரந்தரமாக சிந்திப்பதுதான் 'நினைத்தல்' என்பதாகும். மனதை சுத்தப்படுத்தி அதிகாலை முதல் இரவு வரை இறைவனைக் குறித்து சிந்திக்க வேண்டும்.

    சேவை:-

    நாம் ஒவ்வொருவரும் இறைவனின் சேவகர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இறைவனை தூய்மையான மனத்துடன் பூஜிக்க வேண்டும். அதுதான் சேவை. நம்மை பகவானுக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு சேவை செய்ய வேண்டும்.

    தாசி:-

    சேவையின் மற்றொரு வடிவம் தாசி என்பது. தாசி என்பது, தனது வாழ்நாள் முழுவதையும் இறைவனுக்காக அர்ப்பணித்துச் சேவை செய்வதாகும். வாழ்க்கையில் வேறு எந்தவிதமான ஆசைகளோ, மோகங்களோ இல்லாமல் களங்கமற்ற பக்தியுடன் இறைவனுக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்வதுதான் தாசிப் பணி.

    அர்ச்சனை:-

    உலகேஸ்வரனுக்கு நாம் சேவகர்கள் என்று கருதி பணிவிடை செய்வதும், அவனை நினைத்து உருகுவதும் அர்ச்சனையாகும்.

    வணங்குதல்:-

    மனம், சொல், செயல் இவற்றால் தியானம் நடத்தி மந்திரங்கள் சொல்லி அர்ப்பணிப்பதும், சாஸ்டாங்கமாக விழுந்து இறைவனோடு அன்புகொள்வதும் வணங்குதல் எனப்படும்.

    இணைப்பு:-

    இறைவன் ஒரு மனிதனுக்கு நன்மையாகவோ அல்லது தீமையாகவோ வழங்குவது எதுவானாலும், அது அவனது நன்மைக்காகத்தான் என்பதாகும்.

    ஆத்ம சமர்ப்பணம்:-

    நமது சொந்த உடல், மனது மற்றும் சர்வ அங்கங்களையும் முழு சந்தோஷத்துடன் இறைவனுக்கு சமர்ப்பிப்பதுதான் ஆத்ம சர்ப்பணம்.

     பிரசாதம் சாப்பிடும் இறைவன்

    தினமும் சுவாமிக்கு பூஜை செய்யும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து வந்து நைவேத்தியத்தினை எடுத்துக்கொள்கிறது. இதனை இறைவனே எறும்பு வடிவில் எடுப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் இத்தல இறைவனை வணங்குவது மிகவும் சிறப்பு. இதனைக் காண நீங்கள் திருவெறும்பூர் செல்ல வேண்டும். எறும்பாக வரும் இறைவனின் பெயர் எறும்பீஸ்வரர்.

     தமிழ்ப் புத்தாண்டில் அன்னாபிஷேகம்

    சிவாலயங்களில் வழக்கமாக ஐப்பசி பவுர்ணமியில்தான் அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் தூத்துக்குடியில் உள்ள சங்கமேசுவரர் திருக்கோவிலில் தமிழ்ப்புத்தாண்டான சித்திரை முதல் நாளில் மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது. மேலும் அங்குள்ள மற்ற மூர்த்தங்களுக்கும் அந்த நாளில் அன்னாபிஷேகம் செய்யப்படுவது அத்தலத்திற்குரிய கூடுதல் சிறப்பாகும்.

    அதிசய கிரகங்கள்

    கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் நவக்கிரகங்கள் புதுமையாகக் காட்சியளிக்கின்றன. ஆம், எல்லா ஆலயங்களிலும் இருப்பதுபோல் இங்கே நவக்கிரகங்கள் காட்சி தரவில்லை. மாறாக, ஒரு மண்டபத்தின் மேல் பகுதியில் இவை செதுக்கப்பட்டுள்ளன. அந்த மண்டபத்தின் நேர் கீழே ஒரு மேடை உள்ளது. நவக்கிரகங்களை வழிபடும் பக்தர்கள் அந்த மண்டபத்தை வலம் வந்து, தங்கள் கிரகங்களுக்கு பக்கமாக உள்ளது போல், மேடை அருகில் நின்று வழிபடுகிறார்கள். இதுபோல் வேறு எந்த ஆலயத்திலும் இல்லை.

    வித்தியாசமான தலவிருட்சம்

    * ஈரோடு மாவட்டம் காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் திருக்கோவிலின் சிவலிங்கம் மணலில் வடிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள பாறை மீது தல விருட்சமான அத்திமரம் உள்ளது. மிகப் பழமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது வியப்புக்குரியது.

     * தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீசர் ஆலயத்தில் இரு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அபூர்வமான காட்சியாக அருள் தருகிறார் தட்சிணாமூர்த்தி. இவரது காலுக்குக் கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டுமே உள்ளனர்.

     * தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர் மீது பங்குனி, புரட்டாசி ஆகிய இரு மாதங்களிலும் பவுர்ணமி அன்றும், அதற்கு முன்பு இருநாளும், பின் வரும் இருநாளிலும் சந்திரனின் கிரகணங்கள் மூர்த்தியின் மீது விழுகிறது.

    • மார்கழி மாதத்தில் 21 நாட்கள் ஆத்யாயன உற்சவம் நடக்கும்.
    • இந்த ஆண்டும் ஆத்யாயன உற்சவம் நடந்து வருகிறது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணய கலகோற்சவம் நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உற்சவத்தை கண்டுகளித்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் 21 நாட்கள் ஆத்யாயன உற்சவம் நடக்கும். அதன்படி இந்த ஆண்டும் ஆத்யாயன உற்சவம் நடந்து வருகிறது. அதன் 17-வது நாளிலும் மற்றும் வைகுண்ட ஏகாதசியில் இருந்து 6-வது நாளிலும் பிரணய கலகோற்சவம் (ஊடல் உற்சவம்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரணய கலகோற்சவம் நேற்று நடந்தது. அதற்காக நேற்று மாலை உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தனித் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளினார்.

    அதேபோல் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் மற்றொரு தனித் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளினர். சாமியும், தாயார்களும் எதிர் எதிர் திசைகளில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து ஸ்ரீவாரி புஷ்கரணியை அடுத்த வராகசாமி கோவில் அருகில் வந்து எதிர் எதிரே நின்றனர்.

     பக்தர்களின் குறைகள், கோரிக்கைகள், நோய்களை போக்குவதில் முன்நிற்கும் ஏழுமலையான், தனது துணைவியார்களான ஸ்ரீதேவி, பூதேவியர்களை கண்டு கொள்வதில்லை, எனக் குற்றம் சாட்டி அவர்கள் சார்பாக அர்ச்சகர் ஒருவர் மலையப்பசாமி மீது முதலில் 3 முறை பூப்பந்துகளை எறிந்து தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர்.

    அப்போது நம்மாழ்வார் அருளிய பாசுரங்களை வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் 'கேலி' செய்யும் விதத்தில் பாராயணம் செய்ய, உற்சவர் மலையப்பசாமி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை மிரட்டும் தோரணையில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை, என்று கூறி பயப்படுவதுபோல் நடித்து மன்னிப்பு கேட்டார்.

    அதன்பிறகு கோபம் தணிந்து அமைதியாகி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் இருவரும் மலையப்பசாமியின் இருபுறமும் சேர்ந்தனர்.

    இந்த நிகழ்ச்சியை அடுத்து அவர்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து ஆஸ்தானம் நடத்தினர். பின்னர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர்.

    இந்த உற்சவத்தில் திருமலை ஜீயர்சுவாமிகள், தேவஸ்தான அதிகாரிகள், வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் சுற்றி நின்றவாறு உற்சவத்தை கண்டு களித்தனர்.

    ×