என் மலர்tooltip icon

    வழிபாடு

    • நமக்கு மன நிம்மதியை உடனடியாக தருவது சிறப்பு.
    • நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

    ஸ்ரீமந்நாராயணன் பலவிதமான ரூபங்களில், பலவிதமான திருநாமங்கள் தாங்கி, உலகெங்கும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து அருளுகிறார். செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த வீராபுரம் என்ற கிராமத்தில் பழம்பெருமை வாய்ந்த பத்மாவதி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் திருத்தலத்தில் எங்குமே காண இயலாத ரூபத்தில் தேவராஜப் பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்து வருவது பலரும் அறியாத ஒன்று.

    பச்சைப்பசேல் என்ற இயற்கை சூழலில் கிராமத்தில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இத்தலம், நமக்கு மன நிம்மதியை உடனடியாக தருவது சிறப்பு. ஆலயத்திற்குள் நுழைந்ததும் இத்தலத்தின் பழம்பெருமையை பறைசாற்றும் விளக்குத்தூண் அமைந்துள்ளது.

    அடுத்ததாக ஒரு சிறிய சன்னிதியில் சிறிய திருவடி எழுந்தருளியுள்ளார். உள்ளே நுழைந்ததும் மற்றுமொரு சிறிய சன்னிதியில் பெரிய திருவடியான கருடாழ்வார், சீனிவாசப்பெருமாளை தரிசித்த வண்ணம் காட்சி தருகிறார். கருவறை - அர்த்தமண்டபம் என்ற அமைப்போடு திகழும் இத்தலத்தில், கருவறையில் சீனிவாசப்பெருமாள் நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

    அந்த கரங்களில் சக்கரம், சங்கு, அபய, வரத ஹஸ்த சின்னங்களுடன் காணப்படுகிறார். அருகில் அமைந்துள்ள மற்றோர் சன்னிதியில் பத்மாவதித் தாயார் அமர்ந்த திருக்கோலத்தில் அழகுற வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    சுற்றுப்பிரகாரத்தில் ஒரு தனி சன்னிதியில் எங்குமே காண இயலாத வகையில் தேவராஜப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். வழக்கமாக தேவராஜப் பெருமாள், நான்கு கரங்களுடன் சங்கு சக்கரத்துடனும், அபய, வரத ஹஸ்த நிலையிலும் காட்சி தருவார்.

    ஆனால் இத்தலத்தில் அதே நான்கு கரங்களுடன் இருந்தாலும், அந்த கரங்களில் சங்கும், சக்கரமும், கமலமும், கதையும் தாங்கி அருள்பாலிக்கிறார். இது ஒரு வித்தியாசமான அமைப்பாகும்.

    இத்தலத்திற்கு வந்து பத்மாவதித் தாயாரையும், சீனிவாசப் பெருமாளையும் மனமுருகி தரிசித்து வேண்டிக்கொண்டால், திருமணத்தடைகள் அனைத்தும் விலகி விரைவில் திருமணம் கைகூடுவதாக ஐதீகம். மேலும் மன சஞ்சலத்தை நீக்கி புத்திர பாக்கியத்தை வழங்கும் பரிகார தலமாகவும் இத்தலம் புகழ் பெற்றுள்ளது.

    இத்தலத்தில் வைகாசி மாதம் ரேவதி நட்சத்திர தினத்தன்று வாஷிக உற்சவமும், ஆவணி மாதத்தில் பவித்தோற்சவமும், பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணமும், வைகுண்ட ஏகாதசி உற்சவமும் கொண்டாடப்படுகின்றன. மேலும் நவராத்திரி உற்சவம், புரட்டாசி மாதத்தில் ஐந்து சனிக்கிழமைகளில் திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

    செங்கல்பட்டில் இருந்து அமைந்தகரை மார்க்கத்தில் டி-72 என்ற நகரப்பேருந்து வீராபுரம் வழியாகச் செல்கிறது. திருக்கழுக்குன்றத்தில் இருந்து வீராபுரத்திற்கு ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.

    • இலங்கை மன்னன் ராவணன் தலையை கிள்ளி எறிந்தவன்.
    • இறைவன் செந்தாமரை மலர் நிறம் உடையவன்.

    திருப்பாவை

    பாடல்

    புள்ளின்வாய் கீண்டானை, பொல்லா அரக்கனைக்

    கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்,

    பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;

    வெள்ளி எழுந்து, வியாழம் உறங்கிற்று;

    புள்ளும் சிலம்பினகாண்; போதரிக் கண்ணினாய்!

    குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே,

    பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்

    கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    பறவை வடிவத்தில் வந்த பகாசுரனின் வாயைப் பிளந்தவன், ராமனாக அவதாரம் எடுத்தபோது இலங்கை மன்னன் ராவணன் தலையைக்கிள்ளி எறிந்தவன். இப்படிப் பட்ட ஸ்ரீமன்நாராயணனின் புகழைப் பாடிக் கொண்டு, எல்லோரும் பாவை நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்றுவிட்டார்கள். வியாழன் என்னும் கோள் மறைந்துவிட்டது. வெள்ளி என்ற கோள் உதயமாகிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. பூப்போன்ற கண்களை கொண்டவளே! இந்த குளிர்ந்த நீரில் நீராடி பரந்தாமனை பாடாமல் படுத்தே கிடக்கலாமோ? இது நல்ல நாள்? கண்ணனிடம் வரம்பெறும் நாளில் தூக்கம் என்கிற திருட்டுத்தனத்தை விட்டுவிட்டு எங்களோடு சேர்ந்து நீராட வருவாயாக!

    திருவெம்பாவை

    பாடல்

    பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்

    அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

    தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த

    பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்

    சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

    பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    நீர் நிரம்பிய குளத்தில் பசுமையும் கருமையும் கலந்த கருங்குவளை மலர்கள் உள்ளன. செந்தாமரை மலர்களும் உள்ளன. நாம் வணங்கும் உமையவள் குவளை மலர் நிறமுடையவள். இறைவன் செந்தாமரை மலர் நிறம் உடையவன். குருகு எனப்படும் குறுக்கத்தி மாலை அம்பிகையை அலங்கரிக்கிறது. இந்த பொய்கை இறைவியும், இறைவனும் இணைந்தது போல் காணப்படுகிறது. பறவைகளினால் பலதரப்பட்ட ஓசைகள் உண்டாகின்றன. தங்கள் அழுக்கைப் போக்க அங்கு பலர் நீராட வருகிறார்கள். இப்படிப்பட்ட தாமரை மலர்கள் படர்ந்த பொய்கையில், கால் சிலம்புகள் ஒலிக்கவும். சங்குகள் ஒலிக்கவும், மார்பகங்கள் மகிழ்ச்சியில் பூரிக்கவும், நீர்த்துளிகள் சிதறவும் மூழ்கி நீராடுவோம்!

    • திருமாலின் ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம்.
    • தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” என்பதை நிலைநாட்டியவர்.

    பரசுராமரை நீதியை நிலைநாட்ட வந்த அவதாரமாகக் கருதுவார்கள். திருமால் தர்மத்தை நிலைநாட்ட எடுத்த அவதாரங்களில் ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம். சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் நான்காவது மகனாக அவதரித்தவர் பரசுராமர். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்பதை நிலைநாட்டியவர். அதனாலேயே தன்னுடைய தந்தையால் சிரஞ்ஜீவி வரத்தைப் பெற்றவர். அதற்கு முன் உள்ள எந்த அவதாரத்திலும் அவர் எந்த ஆயுதத்தையும் பிரயோகப்படுத்தவில்லை.

    ஆனால், முதன்முதலாக பரசுராம அவதாரத்தில்தான் கோடலி ஆயுதத்தை பிரயோகப்படுத்துகின்றார். பரசுராமர் சிரஞ்ஜீவி என்பதால் இன்றைக்கும் கன்னியாகுமரிக்கு அருகில் மகேந்திர மலையில் தவம் செய்து கொண்டிருப்பதாகச் சொல்லுகின்றார்கள். எங்கெல்லாம் தர்மம் குறைந்து, நலிந்து மக்கள் துன்பப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் பரசுராம அவதாரம் நிகழும் என்பார்கள்.

    கோடரியை ஆயுதமாகக் கொண்ட பரசுராமர் தம்முடைய அவதார காலத்தின் முடிவில் கோடரியை கடலில் வீசினார். அதன் வேகத்திற்கு பயந்து மேற்குக் கடல் பின்வாங்கியது. அப்படி உருவான புண்ணியபூமிதான் கேரள பூமி என்பார்கள்.

     திருவள்ளம் ஸ்ரீபரசுராம சுவாமி கோயில் தென்னிந்தியாவின் மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இது திருவனந்தபுரத்தின் திருவள்ளம் அருகே கரமணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பரசுராமருக்கு ஒரே கோயில் இது. பாண்டியன் காலத்தின் பிற்பகுதியில் 12 மற்றும் 13-ம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    • காஞ்சீபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருவாய்மொழி உற்சவம்.
    • காஞ்சீபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருவாய்மொழி உற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-13 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை காலை 8.15 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: பூசம் பின்னிரவு 3.42 மணி வரை பிறகு ஆயில்யம்

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. காஞ்சீபுரம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருவாய்மொழி உற்சவம். திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவேடகம் ஏலவார்குழலியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள் திருவாய்மொழி உற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜ பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உவகை

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-ஊக்கம்

    கடகம்-வெற்றி

    சிம்மம்-திடம்

    கன்னி-தேர்ச்சி

    துலாம்- சஞ்சலம்

    விருச்சிகம்-வரவு

    தனுசு- நற்செயல்

    மகரம்-முயற்சி

    கும்பம்-பக்தி

    மீனம்-பரிவு

    • பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டது.
    • வருகிற 30-ந்தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு சபரி மலையில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்படுகிறது.

    இந்த ஆண்டு மண்டல பூஜை சீசனிலும் அந்த நடைமுறையே கடை பிடிக்கப்பட்டது. மேலும் நிலக்கல்லில் உடனடியாக முன்பதிவு செய்தும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பேருக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், உடனடி முன்பதிவு செய்தும் பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்தனர். இதன் காரணமாக சபரி மலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் காணப்பட்டது.

    இதனால் பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லக்கூடிய மலைப்பாதையில் கூட, பக்தர்கள் வெகுநேரம் காத்திருந்தனர். சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் 15 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை நிலவியது.

    இதன் காரணமாக பக்தர்கள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் அவதிக்குள்ளானதாக பக்தர்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்வதில் அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று பல்வேறு கட்சியினரும் கருத்து வெளியிட்டனர்.

    இந்தநிலையில் மண்டல பூஜை விழா முடிந்து சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்பட உள்ளது. மகரவிளக்கு தரிசனம் ஜனவரி 15-ந்தேதி நடக்கிறது.

    • தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி.
    • சிறப்பு பூஜைகள் நடந்தது.

    சிதம்பரம்:

    புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறும். சிவபெருமானுக்குரிய ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நாளில் ஆடல் அரசனான நடராஜருக்கு சிறப்பு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.

    நிகழ்ச்சியில் சுவாமி நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.இந்த தரிசனத்தின் போது மூலவரே தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.

    ஆகையால், நடராஜரின் தரிசனத்தை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சிதம்பரம் வருவார்கள்.

    அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதை தொடர்ந்து, தினமும் நடராஜருக்கு காலை, மாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும்.

    விழாவில் 9-ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் மூலவராகிய நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    பின்னர் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் ஊர்வலமாக ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். அங்கு நேற்று முன்திம் இரவு 10 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.

    பின்னர், சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணி முதல் தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 3 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

    இதையடுத்து மாலை 4 மணி அளவில் மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம், பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர்.

    அப்போது, பல்லக்கில் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி தரிசனம் தந்தார். இந்த அற்புத காட்சியை கோவிலுக்குள் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சிவ, சிவா, ஓம் நமசிவாயா என்று பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து மாலை 4.30 மணி அளவில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விழாவில் இன்று (வியாழக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது.

    • மகா தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.
    • மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடராஜருக்கு மகா தீப மை திலகமிடப்பட்டது.

    மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது.

    ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு அருணாசலேஸ்வரர் கோவிலில் 5-ம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    தொடர்ந்து நேற்று காலை நாடராஜருக்கும், அம்பாளுக்கும் பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட மகா தீப மை நடராஜருக்கு திலகமிடப்பட்டது.

    அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் திரண்டு இருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பினர்.

    தொடர்ந்து மாணிக்கவாசகர் உற்சவம் முன்னே செல்ல நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் வெள்ளத்தில் ஆடியபடி திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே மாடவீதியை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து தீப மை பிரசாதம் வருகிற 30-ந் தேதி முதல் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மூலம் வினியோகம் செய்யப்பட உள்ளது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து கோவில் நிர்வாக அலுவலத்தில் தீப மை பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • 5 நாட்கள் சிறப்பு பூஜையும் மற்றும் விழா கால பூஜையும் நடைபெறும்.

    சபரிமலை:

    பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த பூஜையில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்வார்கள்.

    இதுதவிர ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜையும் மற்றும் விழா கால பூஜையும் நடைபெறும். அந்த வகையில் 2023-2024-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி அன்று திறக்கப்பட்டது.

    இந்த வருடம் ஐயப்பனை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் 16 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.

    கூட்டம் கட்டுக்கடங்காமல் திரள்வதால் சபரிமலையில் பக்தர்கள் சிரமப்படுவதை தவிர்க்க அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு உத்தரவிட்டது.

    இந்தநிலையில் 41 நாட்கள் பூஜையின் சிகர நிகழ்ச்சியாக மண்டல பூஜை நேற்று நடந்தது. காலை 10.30 முதல் பகல் 11.30 மணி வரையிலான முகூர்த்த நேரத்தில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை நடைபெற்றது. அப்போது தங்க அங்கி அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    முன்னதாக நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், களபாபிஷேகம் நடத்தப்பட்டது. மண்டல பூஜைக்கு பிறகு பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது.

    பின்னர் தீபாராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுடன் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அத்துடன் மண்டல கால பூஜை நிறைவுக்கு வந்தது. இந்த பூஜையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சரண கோஷத்துடன் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

    மண்டல பூஜை நிறைவடைந்து கோவில் நடை அடைக்கப்பட்டதால் மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

    • உலகத்தை உணர்ந்தவனே சிறந்த ஞானியாகிறான்.
    • கிரிவல பாதையில் உள்ள ஸ்ரீரமணாஸ்ரமத்தில் ஜெயந்தி விழா.

    இறைத்தேடல் என்பது எல்லை இல்லாத பயணம். இதில் வெற்றி பெற்றவர்கள் தன்னை உணர்ந்த மனிதர்களாகிறார்கள். நல்ல மனிதர்களால் மட்டுமே உலகத்தை உணர்ந்து கொள்ள முடியும். உலகத்தை உணர்ந்தவனே சிறந்த ஞானியாகிறான் என்பது மகான்களின் வாக்கு. இப்படி இந்த கலியுகத்தில் தன்னையும் உணர்ந்து, தன்னை உலகத்துக்கும் உணர்த்திய மகான்களில் ஒருவர் பகவான் ஸ்ரீரமண மகரிஷி.

    மகான் மனிதப்பிறவி எடுத்தாலும் கர்மவினையை அனுபவித்தே தீரவேண்டும் என்ற மெய்ப்பொருளை இந்த மனித உலகத்திற்கு உணர்த்தியவர்.

    மதுரையை அடுத்த திருச்சுழியில் 30-12-1879-ம் ஆண்டு அவதரித்தவர் பகவான் ஸ்ரீரமண மகரிஷி. இவர் அவதரித்த, மார்கழி மாத புனர்பூச நட்சத்திரத்தன்று, திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள ஸ்ரீரமணாஸ்ரமத்தில் ஜெயந்தி விழா, நடைபெறும். அதன்படி, 144-ம் ஆண்டு ஜெயந்தி மஹோத்ஸவம் இன்று. ஜெயந்தி தின பாராயணம் நடைபெறும். பகவான் ரமணரின் பக்தி பாடல்கள் மற்றும் கீர்த்தனைகளை பாடி பக்தர்கள் வழிபடுவர். ஸ்ரீரமணாஸ்ரமம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படும். அன்னதானம் வழங்கப்படும்.

    ரமணரின் ஞான உபதேசங்களை இந்த ஞாலம் உணர பிள்ளையார் சுழி போட்ட இந்த திருத்தலம், பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்கள் 14-ல் 10-வது தலம் எனும் சிறப்பு வாய்ந்தது. முற்காலத்தில் சந்திரசேன பாண்டியன் தென் தமிழ்நாட்டை ஆண்டு வந்தான்.

    அப்போது ஒரு நாள் மாபெரும் பிரளயம் உண்டாகவே மன்னன் அங்கு அருள்பாலிக்கும் ஈசன் (பூமிநாதர்) திருவடிகளில் தஞ்சம் புகுந்தான். இருகரங்களில் சங்கு, பிரம்பு ஆகியவற்றை ஏந்திய அடியாராகத் தோன்றிய சிவபெருமான் பூமியில் ஒரு பிலத்தை (துவாரம்) உண்டாக்கி அதனுள் சுழித்து பிரளய வெள்ளத்தை மறையச் செய்தார்.

    சுழித்து இந்த வெள்ளம் பிலம் புகுந்த காரணத்தால் இத்திருத்தலம் திருச்சுழியல் எனப்பட்டது. நாளடைவில் அப்பெயர் சுருங்கி தற்போது திருச்சுழி என வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வுலகிலுள்ள அருள்மிகு துணைமாலையம்மன் சமேத திருமேனிநாதர் கோயிலுக்கு வடக்கு பக்கம் உள்ள கார்த்திகை வீதியில் தெய்வீக மணம் கமழும் சுந்தர மந்திரம் இல்லம்தான் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்து, இளமைக்காலத்தில் வாழ்ந்த வீடு. இன்றும் அந்த வீடு பழமை மாறாமல் ரமணரின் நினைவுகளை தாங்கி நிற்கிறது. அந்த தெய்வீக இடம் ரமணரின் உறவினர்களால் பரம்பரை, பரம்பரையாக பராமாரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன.

    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை .
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-12 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பிரதமை காலை 7.06 மணி வரை பிறகு துவிதியை

    நட்சத்திரம்: புனர்பூசம் நள்ளிரவு 1.41 மணி வரை பிறகு பூசம்

    யோகம்: அமிர்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், குடந்தை ஸ்ரீ சாரங்கபாணி ராப்பத்து உற்சவம். பெருஞ்சேரி வாகீசுவரர் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை. ஆலங்குடி குருபகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிம்மதி

    ரிஷபம்-ஓய்வு

    மிதுனம்-அனுகூலம்

    கடகம்-பயணம்

    சிம்மம்-வெற்றி

    கன்னி-நலம்

    துலாம்- மாற்றம்

    விருச்சிகம்-வரவு

    தனுசு- யோகம்

    மகரம்-உயர்வு

    கும்பம்-மகிழ்ச்சி

    மீனம்-சாதனை

    • 20 பக்க பகவத் கீதை புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறது.
    • தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி:

    திருப்பதி தேவஸ்தானம் இளைஞர்களுக்காக 20 பக்க பகவத் கீதை புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த பகவத் கீதை தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்படுகிறது.

    பகவத்கீதையின் காலத்தால் அழியாத போதனைகள் 20 பக்கங்கள் கொண்ட அச்சிடப்பட்ட பதிப்பின் மூலம் எளிய மொழியில் மாணவர்களுக்குச் சென்றடையும்.

    ஒரு லட்சம் புத்தகங்கள் அச்சிட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்களிடையே அவர்களின் தார்மீக மற்றும் ஆன்மீக கல்விக்கு பங்களிக்கும் வகையில் விநியோகிக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • மகா தீப மை பிரசாதம் நாளை முதல் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதைத்தொடர்ந்து கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மலை மீது ஏற்றப்பட்ட மகாதீப மை நடராஜருக்கு வைக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து தெற்கு திருமஞ்சனம் கோபுரம் வழியாக நடராஜர் வெளியே வந்து எழுந்தருளி மாடவீதியில் உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜ பெருமானை வணங்கினர்.

    இன்று நடராஜருக்கு சாத்தப்பட்ட மகா தீப மை பிரசாதம் நாளை முதல் பக்தர்களுக்கு வழங்கப்படும். மகா தீபத்திற்கு நெய் காணிக்கை அளித்த பக்தர்களுக்கும் மகா தீப மை பிரசாதம் வழங்கப்படும்.

    திருவண்ணாமலையில் இன்று 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 5 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ×