என் மலர்
வழிபாடு

பகவான் ஸ்ரீரமண மகரிஷி பிறந்த நாள்
- உலகத்தை உணர்ந்தவனே சிறந்த ஞானியாகிறான்.
- கிரிவல பாதையில் உள்ள ஸ்ரீரமணாஸ்ரமத்தில் ஜெயந்தி விழா.
இறைத்தேடல் என்பது எல்லை இல்லாத பயணம். இதில் வெற்றி பெற்றவர்கள் தன்னை உணர்ந்த மனிதர்களாகிறார்கள். நல்ல மனிதர்களால் மட்டுமே உலகத்தை உணர்ந்து கொள்ள முடியும். உலகத்தை உணர்ந்தவனே சிறந்த ஞானியாகிறான் என்பது மகான்களின் வாக்கு. இப்படி இந்த கலியுகத்தில் தன்னையும் உணர்ந்து, தன்னை உலகத்துக்கும் உணர்த்திய மகான்களில் ஒருவர் பகவான் ஸ்ரீரமண மகரிஷி.
மகான் மனிதப்பிறவி எடுத்தாலும் கர்மவினையை அனுபவித்தே தீரவேண்டும் என்ற மெய்ப்பொருளை இந்த மனித உலகத்திற்கு உணர்த்தியவர்.
மதுரையை அடுத்த திருச்சுழியில் 30-12-1879-ம் ஆண்டு அவதரித்தவர் பகவான் ஸ்ரீரமண மகரிஷி. இவர் அவதரித்த, மார்கழி மாத புனர்பூச நட்சத்திரத்தன்று, திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள ஸ்ரீரமணாஸ்ரமத்தில் ஜெயந்தி விழா, நடைபெறும். அதன்படி, 144-ம் ஆண்டு ஜெயந்தி மஹோத்ஸவம் இன்று. ஜெயந்தி தின பாராயணம் நடைபெறும். பகவான் ரமணரின் பக்தி பாடல்கள் மற்றும் கீர்த்தனைகளை பாடி பக்தர்கள் வழிபடுவர். ஸ்ரீரமணாஸ்ரமம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படும். அன்னதானம் வழங்கப்படும்.
ரமணரின் ஞான உபதேசங்களை இந்த ஞாலம் உணர பிள்ளையார் சுழி போட்ட இந்த திருத்தலம், பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற தலங்கள் 14-ல் 10-வது தலம் எனும் சிறப்பு வாய்ந்தது. முற்காலத்தில் சந்திரசேன பாண்டியன் தென் தமிழ்நாட்டை ஆண்டு வந்தான்.
அப்போது ஒரு நாள் மாபெரும் பிரளயம் உண்டாகவே மன்னன் அங்கு அருள்பாலிக்கும் ஈசன் (பூமிநாதர்) திருவடிகளில் தஞ்சம் புகுந்தான். இருகரங்களில் சங்கு, பிரம்பு ஆகியவற்றை ஏந்திய அடியாராகத் தோன்றிய சிவபெருமான் பூமியில் ஒரு பிலத்தை (துவாரம்) உண்டாக்கி அதனுள் சுழித்து பிரளய வெள்ளத்தை மறையச் செய்தார்.
சுழித்து இந்த வெள்ளம் பிலம் புகுந்த காரணத்தால் இத்திருத்தலம் திருச்சுழியல் எனப்பட்டது. நாளடைவில் அப்பெயர் சுருங்கி தற்போது திருச்சுழி என வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வுலகிலுள்ள அருள்மிகு துணைமாலையம்மன் சமேத திருமேனிநாதர் கோயிலுக்கு வடக்கு பக்கம் உள்ள கார்த்திகை வீதியில் தெய்வீக மணம் கமழும் சுந்தர மந்திரம் இல்லம்தான் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்து, இளமைக்காலத்தில் வாழ்ந்த வீடு. இன்றும் அந்த வீடு பழமை மாறாமல் ரமணரின் நினைவுகளை தாங்கி நிற்கிறது. அந்த தெய்வீக இடம் ரமணரின் உறவினர்களால் பரம்பரை, பரம்பரையாக பராமாரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன.






