search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pasuram-15"

    • கண்ணனைப் புகழ்ந்து போற்றி பாடுவதற்காக விரைந்து வருவாயாக!
    • அழகிய பூக்கள் நிறைந்த பொய்கையில் நீராடுவோம்.

    திருப்பாவை

    பாடல்

    எல்லே இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?

    சில்லென் றழையேன்மின், நங்கைமீர்! போதர்கின்றேன்;

    வல்லை, உன் கட்டுரைகள்! பண்டேஉன் வாயறிதும்!

    வல்லீர்கள் நீங்களே, நானேதான் ஆயிடுக!

    ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறுடையை?

    எல்லோரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்.

    வல்லானை கொன்றானை, மாற்றாரை மாற்றழிக்க

    வல்லானை, மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    அடி பெண்ணே! இளமையான கிளி போன்றவளே! இன்னுமா தூங்குகிறாய்? சத்தம் போட்டு என்னை அழைக்காதீர்கள். இதோ வந்துவிடுகிறேன் என்று சொல்லி விட்டு மீண்டும் படுத்து உறங்குகிறாயே? நீ மிகவும் கெட்டிக்காரி. வாய்ப்பேச்சில் வல்லவள். நாங்கள் இதை நன்கு அறிவோம். இந்த கெட்டிக்காரத்தனம் தவிர உன்னிடம் வேறு என்ன வைத்திருக்கிறாய்? நான் மட்டும் எழாததுபோல் பேசுகிறீர்களே என்று கேட்கிறாயே? எல்லோரும் வந்து விட்டார்கள். வேண்டுமானால் நீயே வந்து எண்ணிக்கொள். மாயச்செயல்களில் வல்லவன், பலம் பொருந்திய குவாலயபீடம் என்ற யானையைக் கொன்றவன், தீயவர்களை அழிப்பவன் என்று பல சிறப்புகளைக் கொண்ட கண்ணனைப் புகழ்ந்து போற்றி பாடுவதற்காக விரைந்து வருவாயாக!

    திருவெம்பாவை

    பாடல்

    ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்

    சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர

    நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்

    பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்

    பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்

    ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்

    வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி

    ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்

    விளக்கம்

    அணிகலன்களுடன் கூடிய கச்சு என்ற ஆடையை அணிந்த பெண்களே! ஒரு பெண் தனியாக இருந்து எம்பெருமான் பெயரையே 'சிவ சிவ' என்று சொல்லி இறைவனின் சிறப்புகளை ஒயாமல் பேசிக் கொண்டிருக்கிறாள். பக்தி பரவசத்தில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து தாரை தாரையாக வழிகிறது. பலமுறை தரையில் விழுந்து வணங்குகிறாள். அப்படியே தன்னை மறந்து கிடக்கிறாள். தேவர்களை வணங்கமாட்டாள். இவ்வளவு பித்துப்பிடித்து அலையும் இந்த பெண்ணை ஆட்கொள்ளும் ஒப்பற்ற சிறப்புடைய பெருமான் யார்? அந்த இறைவனுடைய புகழை நாம் பாடுவோம். அழகிய பூக்கள் நிறைந்த பொய்கையில் நீராடுவோம்.

    ×