என் மலர்
வழிபாடு
- எல்லையற்ற பக்தியால், சிவ பரம்பொருளை வணங்கி பேரருள் பெற்றவர்கள்.
- சிவனுடைய அடியார்கள் கோடிக்கணக்கில் உண்டு.
அறுபத்தி மூன்று நாயன்மார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முறையில் சிவத்தொண்டு புரிந்து, எல்லையற்ற பக்தியால், சிவ பரம்பொருளை வணங்கி, அவருடைய பேரருள் பெற்றவர்கள். சிவனுடைய அடியார்கள் கோடிக்கணக்கில் உண்டு. ஆனால், ஏன் 63 அடியார்களை மட்டும் தொகையடியார்கள், நாயன்மார்கள் என்று பட்டம் சூட்டி அவர்கள் குருபூஜையை சிறப்பாகக் கொண்டாடுகிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத அரும்பெரும் செயலை, பக்தியின் எல்லை நிலத்தில் நின்று, செய்தது நமக்குப் புலப்படும்.
நம்முடைய கற்பனைக்கும் அப்பாற்பட்ட இந்த அரும் செயல்களைச் செய்ததால் அவர்கள் சிவனருட் செல்வர்களாக விளங்குகின்றார்கள். அந்த சிவனருட் செல்வர்களுடைய குருபூஜையை நடத்துவதன் மூலமும், கலந்து கொள்வதன் மூலமும் எல்லையற்ற நலன்களைப்பெறலாம். பூம்புகார் ஒரு காலத்தில் மிகப்பெரிய துறைமுகம். சோழநாட்டின் தலை நகர். பூம்புகாரில் மார்கழி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் இயற்பகை நாயனார். பொதுவான இயற்கைக் குணத்திற்கு எதிர் குணம் கொண்டவர் என்பதால் இவருக்கு இயற்பகை நாயனார் என்ற பட்டப்பெயர்.
சிவனடியார்க்கு அடிமை என்ற நிலையில் சிவத்தொண்டுபுரிவதையே தம் முடைய வாழ்வின் நோக்கமாக கொண்டதாலும், அதை இயல்பாகவே செய்யும் தன்மை கொண்டிருந்ததாலும் இவருக்கு இயற்பகை நாயனார் என்று பெயர். இந்த காரணப் பெயருக்கு ஏற்ற சம்பவம் ஒன்று அவருடைய வாழ்க்கையில் நடைபெற்றது. அது சாதாரண மனிதர்கள் வாழ்வில் நடக்கக்கூடாத ஒரு பயங்கரம்.
ஆனால், ஆத்ம சுத்தம் மிகுந்தவர்கள் பக்தியில்சிறந்தவர்கள் இதை வேறொரு எல்லையிலிருந்துதான் பார்ப்பார்களே தவிர உலக வழக்குகளில் அகப்பட்டு விமர்சிக்க மாட்டார்கள். அப்படி என்ன இந்த இயற்பகை நாயனார் செய்து விட்டார் என்று நீங்கள் நினைக்கலாம்.
சிவனடியார்களுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளலான இவரிடம், ஒரு சிவனடியார் வந்து, இவருடைய மனைவியைத் தானம் கேட்டார்.
இவர் மனைவியின் முகத்தைப் பார்த்தார். இது சிவச்சோதனை என்று சிந்தை சொல்ல தெளிவடைந்தார். இறைவன் எந்த நிலையிலும் கைவிட மாட்டான் என்கின்ற ஆத்மசுத்தி இருப்பவர்களுக்கு உலக விமர்சனங்கள் தடையாக இருக்காது. அவருடைய மனைவி தயக்கமின்றி சொன்னாள். ''அடியார்களுக்கு எம்மை விற்கவும் தகுமே என்று சொல்வார்கள்.
ஒரு அடியாரோடு அவருக்கு பணிவிடை செய்ய நான் செல்வதாக இருந்தால் மகிழ்ச்சிதான்'' என்று தெரிவித்தார். இதனை உலகம் ஏற்குமா? உறவினர்கள் ஏற்பார்களா? கடும் போர் மூண்டது. தன்னுடைய வாள் வலியாலும் தோள் வலியாலும் உறவினர்களையும் எதிர்த்தார்.
இயற்பகை நாயனார் பூம்பு காரிலிருந்து சிவனடியாரோடு தன் மனைவியை பாதுகாப்பாக அனுப்பிவைத்தார். இயற்கைக்கு மாறுபட்ட செயலையும் செய்யத் துணிந்தவர் என்பதனால் அவருக்கு இயற்பகை நாயனார் என்று பெயர்.
அதனால்தான் சுந்தரர், திருத்தொண்டத்தொகையில், ''இல்லையே என்னாத இயற்பகை நாயனாருக்கு அடியேன்'' என்று உள்ளம் உருகிப்பாடுகின்றார். தனக்காக இவ்வளவையும் செய்தார் என்று உளம் பூரித்த சிவபெருமான் அந்த இடத்திலே ரிஷப வாகனத்தில் ஏறி அருட்காட்சி தந்தார்.
''என்னே, உன்னுடைய பக்தி! உன்னுடைய பிரேமம்! எந்தவித சஞ்சலமும் இல்லாது ஒரு செயலைச் செய்வது என்பது சாதாரண மனித ஆற்றலுக்கும் மனித எண்ணத்திற்கும் அப்பாற்பட்டது. அதை நீ செய்தாய். நீ புனிதன்! அசல் சிவன் அடியார்! நீவீர் இருவரும் வாழ்வாங்கு வாழ்ந்து, வற்றாத வளம் பெற்று, சிவபதம் அடைவீர்'' என்று அருளி மறைந்தார்.
அவருடைய குரு பூஜை தினம் இன்று. இப்படி பகையை வென்று, தன் மனைவியோடு சிவனடியாரை கொண்டு போய் விட்ட இடம் திருச்சாய்க்காடு. இப்பொழுதும் பூம்புகாருக்கு அருகில் இத்தலம் இருக்கிறது. சாயாவனம் என்றும் பெயர். இறைவன் திருநாமம் சாயாவனேஸ்வரர். அப்பர், சம்பந்தர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி வடகரை சிவத்தலமாகும்.
இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான்.
அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திர லோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். அம்மனுக்கு ''குயிலினும் இனிமொழியம்மை'' என்ற திருநாமம். உடனே சிவன் தோன்றி, "இந்திரா! இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக,'' என அருள்புரிந்தார்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-18 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி மாலை 6.04 மணி வரை பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: உத்திரம் நண்பகல் 1.39 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: அமிர்த, மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த கோதண்ட ராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சன சேவை, சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-அமைதி
மிதுனம்-ஆதரவு
கடகம்-நட்பு
சிம்மம்-பண்பு
கன்னி-பாசம்
துலாம்- புகழ்
விருச்சிகம்-ஜெயம்
தனுசு- பாராட்டு
மகரம்-பயணம்
கும்பம்-சாதனை
மீனம்-ஓய்வு
- திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
- திருவிடைமருதூர் பிரகத்குசாம் பிகை புறப்பாடு.
2-ந்தேதி (செவ்வாய்)
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* தேய்பிறை சஷ்டி விரதம்.
* திருநெல்வேலி வீரராகவபுரம் பெருமாள் கோவில் ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை.
* கீழ்நோக்கு நாள்.
3-ந்தேதி (புதன்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவர் திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
4-ந்தேதி (வியாழன்)
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சகல உயிர்களுக்கும் படியளந்து அருளிய லீலை.
* பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* சமநோக்கு நாள்.
5-ந்தேதி (வெள்ளி)
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு கண்டருளல்.
* மதுரை செல்லத்தம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா.
* திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் திருமஞ்சனம்.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம் பிகை புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
6-ந்தேதி (சனி)
* திருவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
* மதுரை செல்லத்தம்மன் திருவீதி உலா.
* திருநள்ளாறு சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.
* சமநோக்கு நாள்.
7-ந்தேதி (ஞாயிறு)
* சர்வ ஏகாதசி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.
* கீழ்நோக்கு நாள்.
8-ந்தேதி (திங்கள்)
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள் எண்ணெய் காப்பு விழா தொடக்கம்.
* திருவைகுண்டம் கண்ணபிரானுக்கு பாலாபிஷேகம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்
- பன்னீராயிரம் திருப்பணி யாரங்கள் சமர்ப்பிக்கப்படும்.
- நம்மாழ்வார் பரமபதம் செல்லும் ஒரு முக்தன் வேடத்தில் இருப்பார்.
திருவாய்மொழியின் கடைசி பதிகத்தில், நம்மாழ்வார் மோட்சத்துக்கு செல்லும் வழியையும், அங்கே தமக்குக் கிடைத்த வரவேற்பையும் பாடியிருக்கிறார். இந்த உற்சவத்தை நம்மாழ்வார் மோட்ச உற்சவம் என்பார்கள். அன்று பெருமாள் வழக்கம்போல் புறப்பட்டு வந்து சந்திர புஷ்கரணியில் தீர்த்தம் சாதித்து, தீர்த்தவாரி நடத்தி, திருமாமணி மண்டபம் சேர்வார். பிறகு திருமஞ்சனம் கண்டருள்வார். அன்று அவருக்கு பன்னீராயிரம் திருப்பணி யாரங்கள் சமர்ப்பிக்கப்படும்.
நம்மாழ்வார் பரமபதம் செல்லும் ஒரு முக்தன் வேடத்தில் இருப்பார். கிரீடம் முதலான திருவாபரணங்கள் இல்லாமல், பட்டு பீதாம்பரம் இல்லாமல், வெள்ளை உடுத்தி, பன்னிரு திருநாமம் சாற்றி, துளசி மாலையும் தரித்து, சேவை சாதிப்பார். இரண்டு அர்ச்சகர்கள், தங்கள் சரீரத்தைப் போர்வையால் போர்த்திக் கொண்டு ஆழ்வாரை திருக் கரங்களில் எழுந்தருளப் பண்ணிக் கொள்வார்கள்.
சத்ர சாமரங்கள் அவருக்குப் பிடிக்கப்படும். மோட்சத்துக்கு செல்லும் அர்ச்சிராதி மார்க்கத்தை (ஒளி வழியை) விவரிக்கும், "சூழ் விசும்பு'' என்ற ஒன்பதாம் திருவாய்மொழி சேவிக்கப்படும். நம்மாழ்வார் திருமேனியை எடுத்துச் சென்று பெருமாளின் திருவடியில் வைப்பார்கள்.
அங்கே, திருவாய் மொழியின் கடைசி பதிகமான `முனியே நான்முகனே முக்கண்ணப்பா' என்ற பதிகம் பாடப்படும். ஆழ்வாரின் மீது திருத்துழாய் (துளசி) வைத்துக்கொண்டே இருப்பார்கள். ஆழ்வாரை துளசியால் மூடிவிடுவார்கள். இந்தப் பதிகம் பூர்த்தியானவுடன், பெருமாள் ஆழ்வாருக்கு தம்முடைய கஸ்தூரி திருமண்காப்பையும் மாலையையும் அருளுவார்.
அதற்கு பிறகு, ''எங்களுக்கு ஆழ்வாரை கொடுத்தருள வேண்டும்'' என்று பிரார்த்தனை செய்ய, மூடியிருந்த துளசியை நீக்கிவிட்டு, மறுபடியும் ஆழ்வாரை யதாஸ்தானம் செய்ய, கைகளில் ஏந்திக் கொள்வார்கள். மதுரகவிகளின் கண்ணி நுண்சிறுத்தாம்பு என்கின்ற பாசுரம் சேவையாகும்.
பெருமாள் திருமாமணி மண்டபத்தில் இருந்து சன்னதிக்குப் புறப்படும்போது பனிக்காக போர்வை சாத்திக்கொண்டு விலாமிச்சை வேர் சப்பரத்தில் எழுந் தருளுவார். மல்லாரி என்கின்ற ராகம் வாசிக்கப்படும். ஒய்யார நடைபோடுவார். அப்பொழுது பலவிதமான வாத்தியங்கள் இசைக்கப்படும். கடைசியாக வாசிக்கப்படுவது வீணை. இந்த வாத்தியத்துடன் நாழி கேட்டான் வாசலில் இருந்து படியேற்றம் ஆகி சன்னதிக்குச் செல்வார்.
- உயர்ந்த மனம் கொண்ட நந்தகோபாலா!
- நீ உறக்கம் கலைந்து எழுந்திருப்பாயாக!
திருப்பாவை
பாடல்
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்; செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
உடுக்க உடையும், குடிப்பதற்கு நீரும், உண்பதற்கு உணவும் கேட்டவர்களுக்கு, அவர்களின் மனம் நிறைவடையும்படி அவற்றை அளிக்கும் எம்பெருமானே! உயர்ந்த மனம் கொண்ட நந்தகோபாலா! நீ உறக்கம் கலைந்து எழுந்திருப்பாயாக! பெண்களுக்கெல்லாம் கொழுக்கொம்பாக உதவி நிற்கின்ற இளகிய மனம் கொண்ட யசோதையே! எங்கள் தலைவியே! எழுந்த ருள்வாயாக! வாமன அவதாரத்தின் போது வானத்தைப் பிளந்து உயர்ந்து நின்று, உன் திருவடிகளால் உலகத்தை அளந்த தேவதேவனே! கண்ணா! நீ தூக்கம் நீங்கி கண்விழிக்க வேண்டும். வீரக்கழல் அணிந்த செல்வனே பலராமா! நீயும் உன் தம்பி கண்ணனும் துயில் எழுந்து வந்து எங்களைக் காத்தருள வேண்டும்.
திருவெம்பாவை
பாடல்
செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசே அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
விளக்கம்
தேன் சிந்தும் மலர்களை அணிந்துள்ள பெண்ணே! சிவந்த கண்களுடைய திருமால், நான்கு திசைக்கும் ஒரு முகம் வீதம் நான்கு முகங்களை கொண்ட பிரம்மா, தேவலோகத்தில் வாழும் தேவர்கள், இவர்களிடம் இல்லாத ஓர் இன்பநிலை நமக்குக் கிடைத்துள்ளது. தலைவனாகிய சிவபெருமான் நமது வேண்டுதலை நிறைவேற்றுபவர். அவர் சிவந்த தாமரை மலர் போன்ற பாதங்களைக் கொண்டவர். இவர் நம் வேண்டுதலுக்கு இணங்க நமது வீடுகள்தோறும் எழுந்தருள் கிறார். அழகான கண்களைக் கொண்ட சிவனடியார்களின் நோய் தீர்க்கும் அரு மருந் தாக இருப்பவன், அமுதம் போன்றவன் என்றும் சிறப்புமிக்க அந்த இறைவனைப் போற்றிப் புகழ்வோம். அழகிய மலர்கள் நிறைந்த குளத்தில் மூழ்கி நீராடுவோம். நம் குற்றங்கள் நீங்க ஆடி மகிழ்ந்து பாடுவோம்.
- கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ, கேட்கவோ செய்ய வேண்டும்.
- கந்தர் அலங்காரப் பாடலை பாராயணம் செய்யவும்.
மங்கள வாரமான சனிக்கிழமையில் முருகனுக்குரிய சஷ்டி விரதம், மகாலட்சுமிக்குரிய பூரம் நட்சத்திரத்தில் வருவது விசேஷமானது. சஷ்டி விரதம் இருப்பவர்கள் மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல் நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு.
காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின்போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். இந்த விரதத்தின் மூலமாக வீடு வாகன யோகங்களை பெறலாம். திருமணத் தடைகள் நீங்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். முருகனை நினைத்து உபவாசமிருந்து மாலை அருகிலுள்ள முருகன் ஆலயத்திற்கு சென்று வணங்குங்கள். கீழ்க்கண்ட கந்தர், கந்தர் அலங்காரப் பாடலை பாராயணம் செய்யவும்.
`சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயல் பொழில் தேம் கடம்பின்
மால் பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மா மயிலோன்
வேல் பட்டு அழிந்தது வேலையும்
சூரனும் வெற்பும் அவன்
கால் பட்டு அழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே'.
- முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
- இயற்பகை நாயனார் குருபூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-17 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி மாலை 4.06 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம்: பூரம் காலை காலை 11.12 மணி வரை பிறகு உத்திரம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருநெல்வேலி ஸ்ரீ வீரராகவபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை. இயற்பகை நாயனார் குருபூஜை. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-களிப்பு
ரிஷபம்-நட்பு
மிதுனம்-அமைதி
கடகம்-உதவி
சிம்மம்-உழைப்பு
கன்னி-பாராட்டு
துலாம்- ஜெயம்
விருச்சிகம்-பரிசு
தனுசு- பிரீதி
மகரம்-நலம்
கும்பம்-வெற்றி
மீனம்-ஆக்கம்
- ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக பிறந்துள்ளது.
- நள்ளிரவு முதலே கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.
சென்னை:
2023-ம் ஆண்டு முடிந்து 2024-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு உற்சாகமாக பிறந்துள்ளது. இதை யொட்டி கோவில்களில் மக்கள் புத்தாண்டு சிறப்பு தரிசனத்துக்காக அலை மோதினார்கள்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. புத்தாண்டில் இன்று சாமி தரிசனம் செய்வதற்காக நள்ளிரவு முதலே கோவிலில் பக்தர்கள் திரண்டனர்.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அதிக அள வில் காணப்பட்டனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசைக்கும் ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. அதன்வழியாக சென்று பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து புத்தாண்டில் தங்கள் எண்ணங்களும் விருப்பங்களும் நிறைவேற மனமுருகி வேண்டிக் கொண்டனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 5 மணி அளவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இந்த கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. தி.நக ரில் உள்ள திருப்பதி தேவஸ் தான கோவிலில் தரிசனம் செய்ய நள்ளிரவு முதலே பக்தர்கள் திரண்டிருந்தனர். பெருமாளை தரிசித்து செல்வசெழிப்பான வாழ்க்கையை தருமாறு மனமுருகி பக்தர்கள் வேண்டிக் கொண்டனர்.
கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக கோவிலின் முன்பு உள்ள திருமலைபிள்ளை சாலையில் தடுப்புகள் அமைத்து நீண்ட வரிசை ஏற்படுத்தப் பட்டிருந்தது. அதன் வழியாக சென்று பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர்.
வடபழனி முருகன் கோவிலில் புத்தாண்டை யொட்டி சாமி தரிசனத்துக்காக அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரமாக முருகப்பெருமானுக்கு தங்க நாணய அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதனை பார்த்து பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முருகா... முருகா... என்று உச்சரித்தப்படியே மன முருகி வழிபட்டனர்.
இதன் பின்னர் சந்தன காப்பு அலங்காரத்திலும் முருகன் காட்சி அளித்தார். அதிகாலை 4 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையில் தங்க நாணய அலங்காரத்துடன் காட்சி அளித்த முருகனுக்கு பின்னர் தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.
புத்தாண்டையொட்டி இன்று இரவு 9 மணிக்கு நடையை சாத்தாமல், பக்தர்கள் இருக்கும் வரையில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பக்தர்களின் வசதிக்காக நிழல் தரும் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன. கோயம்பேட்டில் உள்ள குருங்காலீஸ்வரர் கோவிலிலும் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சென்னை பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோவிலிலும் நள்ளிரவில் இருந்தே திரண்டனர். பக்தர்கள் அதிகாலையில் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். டிசம்பர் 31-ந்தேதியான நேற்று கந்தகோட்டம் முருகன் கோவில் திறக்கப்பட்ட நாளாகும். இதையொட்டி நேற்று மாலையில் கோவிலில் 108 காங்காபிஷேகம் செய்யப்பட்டது.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வடிவுடையம்மனை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பாடி சிவன் கோவில், திருமுல்லை வாயலில் உள்ள பச்சையம்மன் மன்னாதி ஈஸ்வரர் கோவில் ஆகியவற்றிலும் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு தரிசனம் செய்தார்கள்.
பச்சையம்மன் மன்னாதி ஈஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பிரம்மமுகூர்த்த நேர மான அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அம்ம னுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றது.
பூப்பந்தல் அமைத்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலில் திருவல்லீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. திருவேற்காடு தேவி கருமா ரியம்மன் கோவிலுக்கு செல்ல சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலிலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சென்னையை அடுத்த ரங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில், மடிப்பாக்கம் பாதாள விநாயகர் கோவில், கீழ்க்கட்டளை சக்திமுருகன் கோவில், லட்சுமிநாராயணா கோவில் ஆகிய ஆலயங்களில் இன்று புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கீழ்க்கட்டளை லட்சுமி நாராயணா கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்க ளுக்கு புதிய 5 ரூபாய் நாணயம் வழங்கப்பட்டது.
புரசவைாக்கம் கங்காதீஸ்வரர் ஆலயம் உள்பட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் புத்தாண்டு தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
- புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புத்தாண்டு பண்டிகை கோலாகலம்.
- சேவியர் திடலில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
நாகப்பட்டினம்:
உலகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) ஆங்கில புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ பேராலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அதன்படி, கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் புத்தாண்டு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பேராலய வளாகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கமான சேவியர் திடலில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
முன்னதாக 2023-ம் ஆண்டிற்கு நன்றி செலுத்தி வழியனுப்பும் வகையில் இரவு 10.45 முதல் 11.45 மணி வரை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மறையுரை நடந்தது.
பின், 2024-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக இரவு 11.45 மணிக்கு பரிபாலகர் சகாயராஜ் தலைமையில், பேராலய பங்கு தந்தை டேவிட் தனராஜ் உள்பட 10-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற சிறப்பு பாடல் திருப்பலி நடந்தது. இரவு சரியாக 12 மணிக்கு பரிபாலகர் சகாயராஜ் குத்து விளக்கேற்றி புத்தாண்டை வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. பின்னர், 2023-ம் ஆண்டில் நடந்த நல்ல நிகழ்வுகளை நினைவு கூர்ந்து, தீய நிகழ்வுகள் புதிய ஆண்டில் நடைபெறாமல் இருக்க அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டனர்.
தொடர்ந்து, புத்தாண்டை வரவேற்று ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். பேராலயம் சார்பிலும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. புத்தாண்டை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரகணக்காணோர் திரண்டதால் நகரமே களைகட்டியது.
- கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்.
- நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரா தனையும், 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நள்ளிரவில் இருந்தே நீண்ட வரிசையில் நின்றனர். வரிசை கோவில் பிரகாரத்தையும் தாண்டி நீண்டு கொண்டே சென்றது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக இலவச தரிசனம் மற்றும் ரூ. 100 கட்டணம், மூத்த குடிமக்கள் தரிசனம் என தனித்தனியே வரிசைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சமீபத்தில் தென் மாவட்டத்தில் பெய்த கனமழையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது போக்குவரத்து சரி செய்யப்பட்டுள்ள நிலையில் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. கோவில் வளாகத்தில் சண்முக விலாசமண்டபம், கிரிப்பிரகாரம், நாழிக்கிணறு, கடற்கரை மற்றும் மொட்டை போடும் இடம், காதுகுத்தும் இடம், துலாபாரம் செலுத்தும் இடம் என அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. தனியார் விடுதிகள். சன்னதி தெருவில் உள்ள சமுதாய மடங்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பாதயாத்திரையாக, குழுக்களாக வருகை தந்த பக்தர்கள் மேளதாளத்துடன் ஆடி பாடிவந்தனர். காவடி, பால்குடம், எடுத்து வந்தும் சில பக்தர்கள் ஒரு அடி முதல் 21 அடி வரை அலகு (வேல்) குத்தி வந்து நேர்ச்சை செய்தனர். சிறு குழந்தைகள் முருகன் வேடம் அணிந்து வந்தும் நேர்ச்சை செய்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், சுகாதாரம், கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், உறுப்பினர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
- மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் நடைதிறப்பு.
- நேற்று களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது.
மகரவிளக்கு பூஜையையொட்டி நேற்று முன்தினம் சபரிமலையில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.நேற்று சன்னிதானம் பகுதியில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் களபாபிஷேக ஊர்வலம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம்.
- பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவில் நடை திறக்கப்பட்டு சம்பந்த விநாயகர், உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
உற்சவ மூர்த்திக்கு வெள்ளி கவசம் அணிவிக்க பட்டிருந்தது. அதிகாலை கோவிலில் நடை திறக்கும் போதே, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தரிசன வரிசை ராஜகோபுரத்தையும் கடந்து மாட வீதி வரை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டிருந்தது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பெண்கள், முதியவர்கள் கடும் அவதிப்பட்டனர். குறிப்பாக, சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
கோவிலுக்குள் சிறப்பு மற்றும் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இன்று காலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேல் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இன்று சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு நாள் முழுவதும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.






