என் மலர்
வழிபாடு

இயற்பகை நாயனார் குருபூஜை
- எல்லையற்ற பக்தியால், சிவ பரம்பொருளை வணங்கி பேரருள் பெற்றவர்கள்.
- சிவனுடைய அடியார்கள் கோடிக்கணக்கில் உண்டு.
அறுபத்தி மூன்று நாயன்மார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முறையில் சிவத்தொண்டு புரிந்து, எல்லையற்ற பக்தியால், சிவ பரம்பொருளை வணங்கி, அவருடைய பேரருள் பெற்றவர்கள். சிவனுடைய அடியார்கள் கோடிக்கணக்கில் உண்டு. ஆனால், ஏன் 63 அடியார்களை மட்டும் தொகையடியார்கள், நாயன்மார்கள் என்று பட்டம் சூட்டி அவர்கள் குருபூஜையை சிறப்பாகக் கொண்டாடுகிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத அரும்பெரும் செயலை, பக்தியின் எல்லை நிலத்தில் நின்று, செய்தது நமக்குப் புலப்படும்.
நம்முடைய கற்பனைக்கும் அப்பாற்பட்ட இந்த அரும் செயல்களைச் செய்ததால் அவர்கள் சிவனருட் செல்வர்களாக விளங்குகின்றார்கள். அந்த சிவனருட் செல்வர்களுடைய குருபூஜையை நடத்துவதன் மூலமும், கலந்து கொள்வதன் மூலமும் எல்லையற்ற நலன்களைப்பெறலாம். பூம்புகார் ஒரு காலத்தில் மிகப்பெரிய துறைமுகம். சோழநாட்டின் தலை நகர். பூம்புகாரில் மார்கழி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் இயற்பகை நாயனார். பொதுவான இயற்கைக் குணத்திற்கு எதிர் குணம் கொண்டவர் என்பதால் இவருக்கு இயற்பகை நாயனார் என்ற பட்டப்பெயர்.
சிவனடியார்க்கு அடிமை என்ற நிலையில் சிவத்தொண்டுபுரிவதையே தம் முடைய வாழ்வின் நோக்கமாக கொண்டதாலும், அதை இயல்பாகவே செய்யும் தன்மை கொண்டிருந்ததாலும் இவருக்கு இயற்பகை நாயனார் என்று பெயர். இந்த காரணப் பெயருக்கு ஏற்ற சம்பவம் ஒன்று அவருடைய வாழ்க்கையில் நடைபெற்றது. அது சாதாரண மனிதர்கள் வாழ்வில் நடக்கக்கூடாத ஒரு பயங்கரம்.
ஆனால், ஆத்ம சுத்தம் மிகுந்தவர்கள் பக்தியில்சிறந்தவர்கள் இதை வேறொரு எல்லையிலிருந்துதான் பார்ப்பார்களே தவிர உலக வழக்குகளில் அகப்பட்டு விமர்சிக்க மாட்டார்கள். அப்படி என்ன இந்த இயற்பகை நாயனார் செய்து விட்டார் என்று நீங்கள் நினைக்கலாம்.
சிவனடியார்களுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளலான இவரிடம், ஒரு சிவனடியார் வந்து, இவருடைய மனைவியைத் தானம் கேட்டார்.
இவர் மனைவியின் முகத்தைப் பார்த்தார். இது சிவச்சோதனை என்று சிந்தை சொல்ல தெளிவடைந்தார். இறைவன் எந்த நிலையிலும் கைவிட மாட்டான் என்கின்ற ஆத்மசுத்தி இருப்பவர்களுக்கு உலக விமர்சனங்கள் தடையாக இருக்காது. அவருடைய மனைவி தயக்கமின்றி சொன்னாள். ''அடியார்களுக்கு எம்மை விற்கவும் தகுமே என்று சொல்வார்கள்.
ஒரு அடியாரோடு அவருக்கு பணிவிடை செய்ய நான் செல்வதாக இருந்தால் மகிழ்ச்சிதான்'' என்று தெரிவித்தார். இதனை உலகம் ஏற்குமா? உறவினர்கள் ஏற்பார்களா? கடும் போர் மூண்டது. தன்னுடைய வாள் வலியாலும் தோள் வலியாலும் உறவினர்களையும் எதிர்த்தார்.
இயற்பகை நாயனார் பூம்பு காரிலிருந்து சிவனடியாரோடு தன் மனைவியை பாதுகாப்பாக அனுப்பிவைத்தார். இயற்கைக்கு மாறுபட்ட செயலையும் செய்யத் துணிந்தவர் என்பதனால் அவருக்கு இயற்பகை நாயனார் என்று பெயர்.
அதனால்தான் சுந்தரர், திருத்தொண்டத்தொகையில், ''இல்லையே என்னாத இயற்பகை நாயனாருக்கு அடியேன்'' என்று உள்ளம் உருகிப்பாடுகின்றார். தனக்காக இவ்வளவையும் செய்தார் என்று உளம் பூரித்த சிவபெருமான் அந்த இடத்திலே ரிஷப வாகனத்தில் ஏறி அருட்காட்சி தந்தார்.
''என்னே, உன்னுடைய பக்தி! உன்னுடைய பிரேமம்! எந்தவித சஞ்சலமும் இல்லாது ஒரு செயலைச் செய்வது என்பது சாதாரண மனித ஆற்றலுக்கும் மனித எண்ணத்திற்கும் அப்பாற்பட்டது. அதை நீ செய்தாய். நீ புனிதன்! அசல் சிவன் அடியார்! நீவீர் இருவரும் வாழ்வாங்கு வாழ்ந்து, வற்றாத வளம் பெற்று, சிவபதம் அடைவீர்'' என்று அருளி மறைந்தார்.
அவருடைய குரு பூஜை தினம் இன்று. இப்படி பகையை வென்று, தன் மனைவியோடு சிவனடியாரை கொண்டு போய் விட்ட இடம் திருச்சாய்க்காடு. இப்பொழுதும் பூம்புகாருக்கு அருகில் இத்தலம் இருக்கிறது. சாயாவனம் என்றும் பெயர். இறைவன் திருநாமம் சாயாவனேஸ்வரர். அப்பர், சம்பந்தர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழநாடு காவிரி வடகரை சிவத்தலமாகும்.
இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவள் பூமிக்கு வந்தாள். தாயைக் காணாத இந்திரன், அவள் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான்.
அவள் தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திர லோகம் இழுத்து செல்ல முயற்சித்தான். கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவினாள். அம்மனுக்கு ''குயிலினும் இனிமொழியம்மை'' என்ற திருநாமம். உடனே சிவன் தோன்றி, "இந்திரா! இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக,'' என அருள்புரிந்தார்.






