என் மலர்
பிரிட்டன்
- இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
- ஸ்டார்மரின் வீட்டில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது பிரதமர் மோடியின் 4-வது இங்கிலாந்து பயணம் என்றாலும் ஸ்டாமர் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்பு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மன்னர் 3-ம் சார்லசையும் சந்திக்கிறார். ஸ்டார்மரின் வீட்டில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்படுகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும் அவுட்டாகினர்.
- கவாஸ்கரின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.
மான்செஸ்டர்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது..
அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 49.1 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 46 ரன்னிலும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சுப்மன் கில் 12 ரன்னிலும் அவுட்டாகினர்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் கே.எல்.ராகுல் ரன் குவித்ததன் மூலம் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
அதாவது, வெளிநாட்டு மண்ணில் ஒரு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 1,000 ரன்களைக் கடந்த 2வது துவக்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்குமுன், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவாஸ்கர், வெஸ்ட் இண்டீஸ் (1,404), இங்கிலாந்து (1,152), பாகிஸ்தான் (1,001) ஆகிய நாடுகளில் 1,000 ரன்களை விளாசி இருந்தார். தற்போது அவரது சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்துள்ளார்.
- இரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் தொடங்கியது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்தார்.
மான்செஸ்டர்:
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்- தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்தும், பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும், லார்ட்சில் நடந்த 3வது டெஸ்டில் இங்கிலாந்தும் வென்றன.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.
இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்திய அணியில் கருண் நாயர், ஆகாஷ் தீப், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக சாய் சுதர்சன், அனில் கம்போஜ் மற்றும் ஷர்துல் தாக்குர் இடம்பிடித்துள்ளனர்.
- 500 லாரிகள் மூலம் நாடு முழுவதும் பொருட்களை கொண்டும் செல்லும் சேவையை வழங்கி வந்தது.
- நிறுவனத்தின் ஐடி அமைப்பில் ஊடுருவியது.
பிரிட்டன் போக்குவரத்து நிறுவனமான கே.என்.பி லாஜிஸ்டிக்ஸ் 158 ஆண்டுகள் பழமையான நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் சுமார் 500 லாரிகள் மூலம் நாடு முழுவதும் பொருட்களை கொண்டும் செல்லும் சேவையை வழங்கி வந்தது.
இந்நிலையில் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தனது நிறுவனக் கணக்கிற்கு பலவீனமான கடவுச்சொல்லை அமைத்தபோது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
அகிரா என்ற சைபர் கும்பல் இந்தக் கடவுச்சொல்லை எளிதாக யூகித்து நிறுவனத்தின் ஐடி அமைப்பில் ஊடுருவியது.
அதன் பிறகு, ஊழியர்கள் பயன்படுத்த முடியாத வகையில் நிறுவனத்தின் அனைத்து தரவையும் முடக்கினர். இந்தத் தரவை மீண்டும் அணுக, அவர்களிடம் பணம் கேட்கப்பட்டது.
ஆனால் நிறுவனம், கொடுக்க போதுமான பணம் இல்லாததால் நிறுவனம் இறுதியில் மூடப்பட்டது. அதன் 700 ஊழியர்கள் வேலை இழந்தனர்.
பிரிட்டனில் உள்ள பல முக்கிய நிறுவனங்கள் சமீபத்தில் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன.
- டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 318 ரன்கள் குவித்தது.
லண்டன்:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.
இந்நிலையில், இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் பிரதிகா ராவல் 26 ரன்னில் அவுட்டானார். 45 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா வெளியேறினார்.
ஹர்லின் தியோல் உடன் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் இணைந்தார். நிதானமாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்லின் தியோல் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கேப்டனுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணைந்து அதிரடியை வெளிப்படுத்தினார். ஜெமிமா 45 பந்தில் அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார்.
பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் சதமடித்து அசத்தினார். அவர் 82 பந்துகளில் 102 ரன்கள் குவித்து அவுட்டானார்.
இறுதியில், இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 318 ரன்கள் குவித்தது. ரிச்சா கோஷ் 38 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
- மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.
மான்செஸ்டர்:
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி 23ம் தேதி தொடங்குகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி நேற்று ஜிம் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவர் முழங்காலில் காயம் அடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் எஞ்சிய இரு ஆட்டங்களில் விளையாடுவது கடினம் தான். எனவே அவர் இந்தப் போட்டி தொடரில் இருந்து விலகுவார் என கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டு வரும் நிலையில் நிதிஷ்குமார் ரெட்டியின் காயம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
- மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
லண்டன்:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றி அசத்தியது. தொடர்ந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
சவுத்தாம்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என
முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது. அங்கு மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா அணி, 29 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி 40 ரன்கள் எடுத்தார். தீப்தி ஷர்மா 30 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் கோடினார்.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. டாமி பியூமெண்ட் 34 ரன் எடுத்தார்.
ஏமி ஜோன்ஸ் பொறுப்புடன் ஆடினார். நாட் சீவர் பிரண்ட் 21 ரன்னில் வெளியேறினார்.
மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 24 ஓவரில் 115 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இறுதியில், இங்கிலாந்து அணி 21 ஓவரில் 116 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-1 என சமனிலை பெற்றுள்ளது.
- மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகித்து வருகிறது.
- இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி தொடங்குகிறது.
லண்டன்:
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகித்து வருகிறது.
இதற்கிடையே, இரு அணிகளும் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த 2வது வீரர் என்ற சாதனையை படைக்க உள்ளார். ஜோ ரூட் தற்போது 13,259 ரன்களுடன் 5வது இடத்தில் உள்ளார்.
இந்தப் போட்டியில் 30 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டையும், 31 ரன்களை எடுத்தால் ஜேக் காலீசையும், 120 ரன்கள் எடுத்தால் அதிக ரன்கள் எடுத்த ரிக்கி பாண்டிங் சாதனையையும் முறியடிப்பார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார். அவர் 15,921 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வாக்களிக்கும் வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது.
- அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்க அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.
லண்டன்:
இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு இந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் முன், வாக்களிக்கும் வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில், இங்கிலாந்தில் வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்துள்ளது அந்நாட்டு அரசு. இதன்மூலம் ஜனநாயகத்தில் மக்கள் அதிகளவில் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் 59.7 சதவீதம் வாக்குகளே பதிவானது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாததால் சுமார் 7.5 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை. எனவே அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்க அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது.
ஏற்கனவே ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் 16 வயதுடையவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் வாக்கு செலுத்தும் உரிமையைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது.
- வெற்றிக்காக ஜடேஜா இறுதி வரை போராடியது அனைவரது பாராட்டையும் பெற்றது.
லண்டன்:
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது. ஜடேஜா வெற்றிக்காக இறுதி வரை போராடியது அனைவரது பாராட்டையும் பெற்றது.
இதற்கிடையே, இந்திய அணி வீரர்கள் மற்றும் இந்திய அணி வீராங்கனைகள் நேற்று இங்கிலாந்து மூன்றாம் மன்னர் சார்லசை, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுசில் சந்தித்துப் பேசினர்.
பிரிட்டனுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, இந்திய கிரிக்கெட் போர்டு துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்நிலையில், இங்கிலாந்து மன்னருடனான சந்திப்பு குறித்து இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது:
மன்னர் சார்லசைச் சந்தித்தது வியப்பாக இருந்தது. எங்களிடம், 'கடைசி பேட்டரான சிராஜ் அவுட்டானது துரதிருஷ்டவசமானது. பந்து உருண்டு சென்று ஸ்டம்சை தகர்த்தது. உங்கள் உணர்வு எப்படி இருந்தது?' என கேட்டார்.
இதற்கு, 'லார்ட்ஸ் டெஸ்ட் முடிவு துரதிருஷ்டவசமானது. அடுத்த இரு போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறோம்' என தெரிவித்தோம்.
மற்றபடி லார்ட்ஸ் டெஸ்ட் கடைசி 3 நாளில் ரசிகர்கள் ஆதரவு எங்களுக்கு அதிகமாக இருந்தது. இதுபோன்ற ரசிகர்கள் கிடைத்துள்ளது உண்மையில் எங்களது அதிர்ஷ்டம் தான். போட்டி 5-வது நாள் கடைசி வரை சென்று 22 ரன்னில் தோற்றாலும், உண்மையில் இங்கு கிரிக்கெட் வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்தார்.
- இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட் வீழ்த்தினார்.
லண்டன்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
நேற்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய பவுலர்கள் எதிரணி வீரர்களை 12 முறை கிளீன் போல்டாக்கி (முதல் இன்னிங்சில் 5, இரண்டாவது இன்னிங்சில் 7) மிரள வைத்திருக்கிறார்கள்.
ஒரு டெஸ்டில் இந்திய பவுலர்கள் அதிக முறை போல்டு முறையில் விக்கெட் வீழ்த்திய டெஸ்டாக இது மாறியிருக்கிறது.
இதற்கு முன் அதிகபட்சமாக 10 முறை ஸ்டம்பை தகர்த்து இருந்தனர். இதேபோல், 1955-ம் ஆண்டுக்கு பிறகு அதிகம் பேரை போல்டாக்கிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.
- தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
- விமானம் விபத்தில் சிக்கியதை அடுத்து அந்த விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது.
லண்டன்:
இங்கிலாந்து நாட்டின் லண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) சிறிய ரக விமானம் நெதர்லாந்துக்கு புறப்பட்டது.
இந்நிலையில், விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் தரையில் விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் விமானம் தீப்பற்றி எரிந்து வெடித்துச் சிதறியது.
தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
விமானம் விபத்தில் சிக்கியதை அடுத்து அந்த விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது.






