என் மலர்tooltip icon

    வங்காளதேசம்

    • கிட்டத்தட்ட மனிதனின் குணாதிசயங்களை ஒத்து இருக்கும் விலங்கு என்றால் அது குரங்குதான்.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது.

    குரங்கில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தே மனித இனம் உருவானது என்பார்கள் உயிரிலாளர்கள். மொழி தவிர கிட்டத்தட்ட மனிதனின் குணாதிசயங்களை ஒத்து இருக்கும் விலங்கு என்றால் அது குரங்குதான். புத்திசாலி விலங்கு என குரங்கு கூறப்படுவதற்கு வங்காளதேசத்தில் நடந்த ஒரு நிகழ்வு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அங்குள்ள மெஹர்பூரில் குரங்குகள் அதிகளவில் நடமாட்டம் உள்ளது.

    இந்தநிலையில் குரங்கு ஒன்றுக்கு கையில் அடிபட்டது. அப்போது அந்த குரங்கு அங்குள்ள மருந்துக்கடைக்கு தானாக சென்றது. முதலில் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர், குரங்குக்கு காயம் ஏற்பட்டிருப்பதை பார்த்தார். அங்கு கடைக்கு வந்த வாடிக்கையாளர்களும் குரங்குக்கு உதவி செய்ய முற்பட்டனர். அப்போது அதன் கையில் ஏற்பட்ட காயத்துக்கு மருந்து தடவி முதலுதவி சிகிச்சை அளித்தனர். குரங்கும் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது.

    இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது.



    • ஷேக் ஹசீனா மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • நாடு கடத்த வேண்டும் என்று வங்காளதேசம் வலியுறுத்தி வருகிறது.

    வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

    இதற்கிடையே ஷேக் ஹசீனா மீது ஊழல், இனப்படுகொலை உள்ளிட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை நாடு கடத்த வேண்டும் என்று வங்காளதேசம் வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஷேக் ஹசீனா குடும்பத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஷேக் ஹசீனா மீதான ஊழல் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று டாக்கா கோர்ட்டு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    ஷேக் ஹசீனாவின் இல்லமான சுதாசதன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சில சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் ஷேக் ஹசீனாவின் குடும்பத்திற்குச் சொந்தமான 124 வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.

    • 1971 ஆம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சுதந்திர நாடாக மாறியது.
    • கராச்சியில் உள்ள காசிம் துறைமுகத்திலிருந்து வங்கதேச துறைமுகத்திற்குப் புறப்பட்டது

    1971 ஆம் ஆண்டு பிரிந்த பிறகு பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நேரடி வர்த்தகம் முதல் முறையாகத் தொடங்கியது.

    இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் வர்த்தகக் கழகம் (TCP) மூலம் 50,000 டன் பாகிஸ்தான் அரிசியை வாங்க வங்கதேசம் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதற்கட்டமாக 25,000 டன் அரிசியுடனான கப்பல் கடந்த சனிக்கிழமை கராச்சியில் உள்ள காசிம் துறைமுகத்திலிருந்து வங்கதேச துறைமுகத்திற்குப் புறப்பட்டது. 2 ஆம் கட்ட இறக்குமதி,  25,000 டன் அரிசியுடன் அடுத்த மாத துவக்கத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1971 ஆம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சுதந்திர நாடாக மாறியது. கடந்த ஆண்டு வங்கதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது.

    இது கலவரமாக மாறிய நிலையில் ஆகஸ்ட் மாதம் வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.

    அதன்பிறகு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவுகளை உருவாக்க தங்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்குப் பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதாக வங்கதேசம் கூறுகிறது. 

     

    • போலீஸ் அதிகாரிகளின் மரணங்களுக்குப் பழிவாங்குவேன்.
    • முகமது யூனுசுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் எந்த அனுபவமும் இல்லை.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என வங்காளதேச அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.

    இந்தநிலையில் அவாமி லீக் கட்சியின் (ஷேக் ஹசீனா கட்சி) ஐரோப்பா பிரிவு ஏற்பாடு செய்த காணொலி நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா பங்கேற்று பேசினார். இதில் வன்முறையில் கொல்லப்பட்ட போலீஸ்காரர்களின் குடும்பத்தினருடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் வங்காளதேசத்துக்கு நிச்சயம் திரும்பி வருவேன். நீங்கள் அனைவரும் பொறுமை காத்து ஒற்றுமையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். போலீஸ் அதிகாரிகளின் மரணங்களுக்குப் பழிவாங்குவேன். அவர்கள் அரசியல் வன்முறைக்கு பலியான தியாகிகள். நான் முன்பு செய்தது போல் நீதி வழங்குவேன்.

    என்னை கொலை செய்ய முயன்றனர். ஆனால் நான் உயிர் பிழைத்தேன். கடவுள் எனக்கு 2-வது வாழ்க்கையை அளித்துள்ளார். இது ஒரு காரணத்திற்காக நடந்தது என்று நான் நம்புகிறேன்.


    முகமது யூனுசுக்கு அரசாங்கத்தை நடத்துவதில் எந்த அனுபவமும் இல்லை. அவர் அனைத்து விசாரணை குழுக்களையும் கலைத்து, மக்களைக் கொல்ல பயங்கரவாதிகளை கட்டவிழ்த்து விட்டார். அவர்கள் வங்காளதேசத்தை அழிக்கிறார்கள். பயங்கர வாதிகளின் இந்த அரசாங்கத்தை அகற்றுவோம்.

    உயிரிழந்த அவாமி லீக் உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு உதவ ஒரு அறக்கட்டளையை அமைத்திருந்தேன். ஆனால் அதன் வங்கி கணக்குகள், அறக்கட்டளை மற்றும் எங்கள் சொத்துக்கள் அனைத்தும் இந்த அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதலில் ஆடிய சிட்டகாங் அணி 20 ஓவரில் 194 ரன்கள் குவித்தது.
    • பர்வேஸ் ஹொசைன், கவாஜா நபே அரை சதம் அடித்தனர்.

    டாக்கா:

    வங்கதேசத்தில் பங்களாதேஷ் பிரீமியர் லீக் (பிபிஎல்) தொடர் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் பார்ச்சுன் பாரிஷல், சிட்டகாங் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்ச்சுன் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சிட்டகாங் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் குவித்தது.

    பர்வேஸ் ஹொசைன் 78 ரன்னும், கவாஜா நபே 66 ரன்னும், கிரஹாம் கிளர்க் 44 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பார்ச்சுன் அணி களமிறங்கியது. கேப்டன் தமிம் இக்பால் அரை சதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். கைல் மேயர்ஸ் 46 ரன்னும், ஹ்ருடோய் 32 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், பார்ச்சுன் அணி 19.3 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 195 ரன்கள் எடுத்து வென்றது. இதன்மூலம் பார்ச்சுன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையைக் கைப்பற்றியது.

    ஆட்ட நாயகன் விருது தமிம் இக்பாலுக்கும், தொடர் நாயகன் விருது மெஹிதி ஹசன் மிராசுக்கு வழங்கப்பட்டது.

    • ஷேக் ஹசீனா நேரலையாக ஆன்லைனில் உரையாற்ற இருப்பதாக தகவல்.
    • போராட்டக்காரர்கள் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவப்படத்தை சேதப்படுத்தினர்.

    டாக்கா:

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிராக மிகப்பெரிய அளவில் மாணவர்கள் போராட்டம் நடந்தது. இதனால் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் மீது இனப்படுகொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.

    மேலும் கோர்ட்டும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காளதேச இடைக்கால அரசு வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவான சத்ரா லீக், ஷேக் ஹசீனா ஆன்லைன் வாயிலாக உரை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தது. தற்போது நடந்து வரும் ஆட்சிக்கு எதிராக ஷேக் ஹசீனா தனது கருத்தை பதிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

    ஷேக் ஹசீனா நேரலையாக ஆன்லைனில் உரையாற்ற இருப்பதாக தகவல் பரவிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவாமி லீக் கட்சியை தடை செய்யக் கோரி, திடீரென்று போராட்டம் வெடித்தது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தலைநகர் டாக்காவில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமரும், ஷேக் ஹசீனா தந்தையுமான ஷேக் முஜிபுர் ரகுமான் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். இந்த வீட்டை முஜிபுர் ரகுமான் நினைவு இல்ல அருங்காட்சியகமாக ஷேக் ஹசீனா மாற்றி இருந்தார்.


    அந்த வீட்டை சூறையாடிய போராட்டக்காரர்கள் 2-வது மாடியில் ஏறி கடப்பாரைகள், மரக்கட்டைகளால் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவப்படத்தை சேதப்படுத்தினர்.

    பின்னர் வீட்டின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராணுவம், போலீசார் அங்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தினர்.

    வங்காளதேசத்தில் பொதுத்தேர்தல் இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலோ நடைபெறலாம். இதில் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்பட மாட்டாது என்று இடைக்கால அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷேக் ஹசீனா ஆன்லைனில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது.
    • அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன.

    டாக்கா:

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நடந்த மாணவர் போராட்டத்தில் பெரிய வன்முறை வெடித்ததன் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அங்கு இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பு வகித்து வருகிறார்.

    வங்கதேசத்தில் நடைபெறவுள்ள பொதுத்தோ்தலில் போட்டியிட ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அனுமதிக்கப்பட மாட்டாது என இடைக்கால அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

    இதற்கிடையே, அவாமி லீக்கின் தற்போது கலைக்கப்பட்ட மாணவர் பிரிவான சத்ரா லீக், ஷேக் ஹசீனா ஆன்லைன் வாயிலாக உரை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி நேற்று இரவு ஷேக் ஹசீனா உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா நேரலையாக ஆன்லைனில் உரையாற்ற இருப்பதாக தகவல் பரவியது.

    இந்நிலையில், வங்கதேசத்தில் அவாமி லீக்கை தடை செய்யக் கோரி, டாக்காவில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடம் மற்றும் வீட்டை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி தீ வைத்தனர்.

    போராட்டக் குழு டாக்காவில் உள்ள அவரது வீட்டை சேதப்படுத்தி தீ வைத்தது. போராட்டக்காரர்கள் பலர் வீட்டின் இரண்டாவது மாடியில் ஏறி, கடப்பாரைகள் மற்றும் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவப்படத்தை சேதப்படுத்தினர்

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • வங்காளதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இரு நாடுகள் இடையேயான உறவில் சுமூக நிலை காணப்படுகிறது.
    • இரு நாடுகளுக்கும் இடையே நேரடி கப்பல் போக்குவரத்து சமீபத்தில் தொடங்கியது.

    டாக்கா:

    பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்காளதேசம் 1971-ல் தனிநாடாக சுதந்திரம் பெற்றது. இதனையடுத்து இரு நாடுகளும் மோதல் போக்கையே கடைபிடித்து வந்தன. ஆனால் வங்காளதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இரு நாடுகள் இடையேயான உறவில் சுமூக நிலை காணப்படுகிறது. அதன்படி இரு நாடுகளுக்கும் இடையே நேரடி கப்பல் போக்குவரத்து சமீபத்தில் தொடங்கியது.

    இந்தநிலையில் பாகிஸ்தானுக்கான வங்காளதேச உயர் ஆணையர் இக்பால் ஹுசைன் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதனையடுத்து தலைநகர் டாக்காவில் இருந்து கராச்சி வழியாக இங்கிலாந்துக்கு விமானத்தை இயக்க வங்காளதேச விமான நிறுவனமான பிமான் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இரு நாடுகள் இடையேயான உறவு மேலும் வலுப்படும் என இக்பால் தெரிவித்துள்ளார்.

    • வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார்.
    • வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் தற்போது வரை வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.

    கடந்தாண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தது அடுத்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

    மாணவர்கள் போராட்டத்திற்கு முன்பு வரை வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார். பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் தற்போது வரை வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.

    இதனிடையே கிட்டத்தட்ட ரூ.3 கோடி மதிப்பிலான செக் மோசடியில் ஈடுபட்டதாக வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன் உட்பட 4 பேர் மீது IFIC வங்கி புகார் அளித்திருந்தது.

    இதுதொடர்பான வழக்கில் ஷகிப் அல் ஹசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து டாகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

    முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு வங்கதேசம் திரும்பாத ஷகிப் அல் ஹசன், இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    • இந்த வழக்கில் கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்பட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
    • மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட் கலிதா ஜியாவுக்கான தண்டனையை இரட்டிப்பாக அதிகரித்தது.

    டாக்கா:

    வங்கதேசத்தில் 1991-1996 மற்றும் 2001-2006 காலகட்டத்தில் பிரதமராக பதவி வகித்தவர் கலிதா ஜியா (79).

    வங்கதேச பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக்காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக நடந்த விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இந்த வழக்கில் கலிதா ஜியா, அவரது மகன் தாரிக் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்தது.

    இதை எதிர்த்து கலிதா ஜியா உள்ளிட்ட 6 பேரும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட் கலிதா ஜியாவுக்கான தண்டனையை இரட்டிப்பாக அதிகரித்து உத்தரவிட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் கலிதா ஜியா அப்பீல் செய்தார்.

    இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் ஐகோர்ட்டின் முந்தைய உத்தரவான 10 ஆண்டு சிறைத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் ரத்துசெய்து உத்தரவிட்டது.

    அத்துடன், பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டது நிரூபணமாகியிருப்பதாக கூறி கலிதா ஜியா உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

    • வங்கதேச எல்லையில் முள்வேலி அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.
    • சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்தது.

    டாக்கா:

    இந்தியா-வங்கதேசம் நாடுகல் 4,096 கி.மீ. நீளம் உடைய எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இது உலக அளவில் 5-வது அதிக நீளமுள்ள எல்லையாகக் கருதப்படுகிறது.

    வங்கதேச எல்லை வழியாக நம் பகுதிக்குள் ஊடுருவல், கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதைக் கட்டுப்படுத்த முள்வேலி அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.

    அதுமட்டுமின்றி, வங்கதேசத்தில் சிறுபான்மையினர்களான இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

    இதற்கிடையே, இந்தியா-வங்கதேச எல்லையில் 5 இடங்களில் இந்தியா இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி வேலிகள் அமைக்க முயற்சிப்பதாக வங்கதேச அரசு குற்றம்சாட்டியது.

    இந்நிலையில், இதுதொடர்பாக நேரில் விளக்கம் தரக்கோரி அடுத்த சில மணி நேரத்திலேயே இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது.

    இதையடுத்து, டாக்காவில் வங்கதேசத்திற்கான இந்திய தூதர் பிரணய் வர்மா, வெளியுறவு செயலாளர் ஜாஷிம் உதீனைச் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

    இந்தச் சந்திப்பு குறித்து வங்கதேச இடைக்கால அரசு அறிக்கை எதுவும் வெளியிடவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1769 தாக்குதல் மற்றும் நாசவேலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.
    • 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 65 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மானவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிளான இடைக்கால அரசு பொறுப்பேற்றது.

    வங்கதேச மக்கள் தொகையில் 7.65 சதவீதம் உள்ள இந்து சிறுபான்மையினர் மீது தொடர் தாக்குதல்கள் நடைபெற தொடங்கியது.

     

    இந்துக்களின் கோவில்கள் தாக்கப்பட்டன. துர்கா பூஜையின்போது இந்த சம்பவங்கள் அதிகம் அரங்கேறின. இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்துக்கள் மீதான வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே இந்துக்களின் போராட்டத்தைத் தூண்டியதாக இஸ்கான் மத அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை, அரசியல் ரீதியானது என்றும் [மத] வகுப்புவாத ரீதியானது அல்ல என்று யூனுஸ் அரசு நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக காவல்துறை தரவுகள் அந்த அறிக்கையில் மேற்கோள் கட்டப்பட்டுள்ளது.

     

     

    இருப்பினும் இந்த தாக்குதல்களில் பல 'வகுப்புவாத ரீதியானவை' என்பதை அரசு ஒப்புக்கொண்டாலும் பெரும்பாலான தாக்குதல்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றே கூறப்பட்டுள்ளது.

    மொத்த வன்முறை சம்பவங்களில், 1769  தாக்குதல் மற்றும் நாசவேலை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அறிக்கை கூறுகிறது.

    கூற்றுக்களின் அடிப்படையில் இதுவரை 62 வழக்குகளில் காவல்துறையினர் விசாரணையின் அடிப்படையில் குறைந்தது 35 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

    எவ்வாறாயினும், இதில் 1,234 சம்பவங்கள் அரசியல் காரணங்களுக்காகவே நடந்துள்ளன வகுப்புவாத சம்பவங்கள் குறைவு என்றும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

    ஆகஸ்ட் 5 முதல் ஜனவரி 8, 2025 வரை 134 வகுப்புவாத வன்முறை சம்பவங்களை போலீசார் கண்டறிந்துள்ளனர். போலீஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 65 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    வகுப்புவாத வன்முறை தொடர்பான புகார்களை நேரடியாகப் பெறவும், சிறுபான்மை சமூகத்தினருடன் தொடர்பைப் பேணவும் காவல்துறை வாட்ஸ்அப் எண்ணையும் வெளியிட்டுள்ளது.

    வகுப்புவாத வன்முறைகளில் தொடா்புடைய குற்றவாளிகளை கைது செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது என்று அரசு கூறுகிறது. 

    ×