என் மலர்tooltip icon

    உலகம்

    • வங்காளதேசத்தில் தீயணைப்பு படையில் முதல் முறையாக பெண்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    • இது பாலின பாகுபாட்டை நீக்கும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்று என உள்துறை மந்திரி கூறினார்.

    டாக்கா:

    உலக அளவில் ஆண்களுக்கு சமமாக பெண்களும் அனைத்துத் துறைகளிலும் தடம்பதித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அண்டை நாடான வங்காளதேசத்திலும் தீயணைப்புத் துறையில் பணிபுரிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    தலைநகர் டாக்கா அருகே உள்ள புர்பாச்சலில் 15 பெண்கள் தீயணைப்பு வீரர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதற்கு முன்னரும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் பெண்கள் பணிபுரிந்துள்ளனர். ஆனால் தீயணைப்பு வீரர்களாக பெண்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    இதுதொடர்பாக அந்த நாட்டின் உள்துறை மந்திரி அசாதுஸ்மான் கான் கமல் கூறுகையில், இது பாலின பாகுபாட்டை நீக்கும் முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்று என தெரிவித்தார்.

    • வலது கண்ணில் இருந்து 40க்கும் மேற்பட்ட புழுக்களையும் இடது கண்ணில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்கள் அகற்றம்.
    • ஈ கடித்தால் பரவும் ஃபிலாரியோடியா வகையைச் சேர்ந்த வட்டப்புழுக்கள்.

    சீனாவில் மிரர் என்ற பெண்ணின் கண்களில் இருந்து சுமார் 60 உயிருள்ள புழுக்களை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால், இது வினோதமான அறுவை சிகிச்சை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு, கூச்ச உணர்வைப் போக்க அவர் கண்களைத் தேய்த்தபோது கண்ணில் இருந்து ஒரு ஒட்டுண்ணிப் புழு வெளியே வந்து விழுந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சிடையந்த அந்த பெண் பயந்துபோய் உடனடியாக சீனாவின் குன்மிங்கில் உள்ள மருத்துவமனையை அணுகியுள்ளார்.

    ஆனால், அந்த பெண்ணை சோதனை செய்த மருத்துவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண்ணின் கண்களை சோதனை செய்தபோது, இரு கண்களிலும் கருவிழியில் உயிருள்ள புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், அவரது வலது கண்ணில் இருந்து 40க்கும் மேற்பட்ட புழுக்களையும் இடது கண்ணில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்களையும் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர். மொத்தத்தில், மருத்துவர்கள் அந்த பெண்ணின் கண்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகளை அகற்றியதாக பெண் மிரர் தெரிவித்துள்ளார்.

    பொதுவாக ஈ கடித்தால் பரவும் ஃபிலாரியோடியா வகையைச் சேர்ந்த வட்டப்புழுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

    இருப்பினும், நாய்கள் மற்றும் பூனைகளிடமிருந்து புழுக்களை தொற்றியிருக்க வாய்ப்புள்ளதாக அந்த பெண் கருதுகிறார். அவற்றின் உடலில் தொற்று லார்வாக்கள் இருக்க வாய்ப்புள்ளது. விலங்குகளைத் தொடுவதும், கண்களைத் தேய்ப்பதும் தொற்றுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று மிரர் கூறினார்.

    எஞ்சியிருக்கும் லார்வாக்களின் சாத்தியக்கூறுகளை கண்காணிக்க அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தும்படி மருத்துவர்கள் அந்தப் பெண்ணை வலியுறுத்தியுள்ளனர்.

    • பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது.
    • பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை தற்போது மீண்டு வருகிறது. அந்நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கியது. இதில் முதல் தவணை வழங்கப்பட்ட நிலையில் 2-வது தவணைக்காக இலங்கை காத்திருக்கிறது.

    இந்த நிலையில் இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவ அந்நாட்டுக்கு ரூ.1668 கோடி கடனுதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்தது.

    நாட்டின் வங்கி துறையில் ஸ்திரத்தன்மை, மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தவும், பெண்கள் தலைமையிலான சிறு, குறு, நிலையான நிதியை மேம்படுத்தவும் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    • சீனாவில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது.
    • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சிங்கப்பூர்:

    சீனாவில் 2019-ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலகம் முழுவதும் பரவியது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் பாதிப்பை சந்தித்தன. தற்போது பல நாடுகளில் இயல்பு நிலை திரும்பிய நிலையில் சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 32 ஆயிரத்து 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 10 ஆயிரம் அதிகம் ஆகும். இதனையடுத்து பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்கும்படி அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

    • கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளங்களில் தீ கொளுந்து விட்டு எரிந்தது.
    • மாணவர்கள், விடுதி ஊழியர்கள் வெளியே ஓடினர். ஆனால் பலர் கட்டிடத்துக்குள் சிக்கி கொண்டனர்.

    ஈராக்கின் வடக்கு பகுதியான எர்பில் உள்ள சோரன் பகுதியில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குள்ள விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி உள்ளனர். இந்த நிலையில் பல்கலைக்கழக விடுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள ஒரு அறையில் தீப்பிடித்து மற்ற அறைகளுகுகு வேகமாக பரவியது.

    கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளங்களில் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் மாணவர்கள், விடுதி ஊழியர்கள் வெளியே ஓடினர். ஆனால் பலர் கட்டிடத்துக்குள் சிக்கி கொண்டனர்.

    தீயணைப்பு வீரர்கள் வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயம் அடைந்தனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்துக்கு 13 நாடுகள் ஆதரவு அளித்தன.
    • இங்கிலாந்து பங்கேற்காத நிலையில், அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது.

    இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் காசாமுனை பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. காசா வடக்கு பகுதியைத் தொடர்ந்து தெற்கு பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

    இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட பலியானவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது. முதலில் வடக்கு காசாவில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் தற்போது தெற்கு காசாவிலும் தொடர்ந்து குண்டு வீசப்பட்டு வருகிறது. குறிப்பாக கான் யூனிஸ் நகரை குறிவைத்து தீவிர தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இதில் பலர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் 450-க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறும்போது, 24 மணி நேரத்தில் நிலம், கடல், வான்வழியாக காசாவில் 450-க்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கப்பட்டன என்று தெரிவித்தது.

    காசாவில் போரை நிறுத்தும்படி இஸ்ரேலை ஐ.நா. சபை மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை இஸ்ரேல் நிராகரித்தது. இந்த நிலையில் காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்துக்கு 13 நாடுகள் ஆதரவு அளித்தன. இங்கிலாந்து பங்கேற்கவில்லை. அமெரிக்கா எதிராக வாக்களித்தது. இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது.

    ஹமாஸ் அமைப்பிடம் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் ஹமாசின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என்று தெரிவித்த அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை நிராகரித்தது.

     

    ராபர்ட் வுட்

    இது தொடர்பாக ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வுட் கூறும்போது, "நீடித்த அமைதிக்கு இருநாடுகளின் தீர்வை காண ஹமாஸ் விரும்பவில்லை. இஸ்ரேலில் ஹமாசின் தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறி விட்டனர், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அங்கீகரிக்கிறோம். ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது ஹமாஸ் ஆட்சியை தொடர அனுமதிக்கும். இது அடுத்த போருக்கான விதைகளை மட்டுமே விதைக்கும்" எனத் தெரிவித்தார்.

    • ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
    • அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் 2036-ம் ஆண்டு வரை அதிபராகத் தொடர முடியும்.

    மாஸ்கோ:

    ரஷியாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17-ம் தேதி அதிபர் தேர்தல் நடத்த அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான அரசாணையை பாராளுமன்ற மேலவையான தேசிய கவுன்சில் ஒருமனதாக அங்கீகரித்தது.

    இந்நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிட தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் விருப்பம் தெரிவித்துள்ளார். கிரெம்ளின் மாளிகையில் ரஷிய ராணுவ அதிகாரிகளுக்கு நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் புதின், அவரது முடிவை ராணுவ அதிகாரியிடம் தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புதினால் வரும் 2036-ம் ஆண்டு வரை ரஷிய அதிபராகத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பப்புவா நியூ கினியா நாட்டில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
    • இதனால் அங்கிருந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    பப்புவா நியூ கினியாவில் உள்ள உலாவுன் மலையில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அந்தப் பகுதியில் கடும் பேரழிவு ஏற்பட்டது.

    இதற்கிடையே, பேரழிவால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகளுக்காக பப்புவா நியூ கினியா அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிக்க பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உடனடி நிவாரண உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.8 கோடி) இந்தியா அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இயற்கை பேரழிவால் ஏற்படும் நெருக்கடி, பேரழிவுகளின்போது இந்தியா பப்புவா நியூ கினியாவுடன் உறுதியாக நிற்கிறது. பப்புவா நியூ கினியாவுக்கு இந்தியா உடனடி நிவாரண உதவிகளை வழங்குகிறது. இரு நாடுகளின் நட்பு, மக்களிடையிலான ஒற்றுமையின் அடையாளமாக பப்புவா நியூ கினியாவில் புனரமைப்பு முயற்சிகளுக்கு உதவும் வகையில் இந்திய அரசு நிவாரண தொகையாக 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குகிறது என தெரிவித்துள்ளது.

    • அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்.
    • இந்த வழக்கு தொடர்பாக 9 குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பலமுனைப் போட்டிகளை எதிர்கொண்டுவருகிறார்.

    இந்நிலையில், அதிபர் ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்.

    இதுதொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 56 பக்க குற்றப் பத்திரிகையில், ஹண்டர் பைடன் 2016 முதல் 2020 வரை 7 மில்லியனுக்கும் அதிகமான டாலர் சம்பாதித்திருக்கிறார். இந்தப் பணத்தைப் எஸ்கார்ட், தோழிகள், சொகுசு ஹோட்டல்கள், கவர்ச்சியான கார்கள், ஆடைகள் என ஆடம்பரமாகச் செலவழித்திருக்கிறார். ஆனால், 2016 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் செலுத்தவேண்டிய குறைந்தபட்ச 1.4 மில்லியன் டாலர் வரியைச் செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக 9 குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.

    அதிபர் தேர்தலுக்காக தயாராகி வரும் நிலையில், ஹண்டரின் வரி ஏய்ப்பு தொடர்பான குற்றச்சாட்டு ஜோ பைடனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    ஏற்கனவே, 2018-ல் துப்பாக்கி வாங்கியது தொடர்பாக ஹண்டர் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
    • லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த வருகின்றனர்.

    இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் பிரகடன் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.

    யாரும் எதிர்பார்க்காத வகையில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவின் வடக்குப்பகுதி சீர்குலைந்துள்ளது. தற்போது தெற்கு பகுதியிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் பாலஸ்தீன மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தங்குவதற்கு இடமின்றி அல்லாடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியபோது, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டு முனைகளில் இருந்து வரும் தாக்குதலை எதிர்கொண்டு இஸ்ரேல் காசாவை துவம்சம் செய்தது.

    இதனால் ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் பிராந்திய போராக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் எகிப்து, ஈரான் மற்றும் அரபு நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை.

    இருந்த போதிலும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் ஹிஸ்புல்லாவிற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் "ஹிஸ்புல்லா முழு அளவில் போரை தொடங்க முடிவு செய்தால், அதன் சொந்த கைகளால் பெய்ரூட்டை காசாவாகவும், தெற்கு லெபனானை கான் யூனிஸ் நகராகவும் மாற்றும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் மோதலை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. நேற்று அதிபர் ஜோ பைடன் நேதன்யாகு மற்றும் ஜோர்டான் அதிபர் அப்துல்லா ஆகியோரிடம் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    நேதன்யாகுவிடம் ஜோ பைடன் பேசும்போது, காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் மற்றும் மேற்கு கரையில் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேதன்யாகு ஹிஸ்புல்லாவிற்கு எச்சரிக்கை விடுத்தது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

    காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.

    • இந்தியா- ரஷியா இடையிலான உறவு எல்லாவற்றிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது.
    • இதற்கு மோடியின் முக்கியமான உத்தரவாதம் மோடியின் கொள்கைதான்.

    ரஷிய அதிபர் புதின் இந்தியில் பேசுவது போன்று 45 நிமிட வீடியோ ஒன்று எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவிட்டுள்ள கருத்துகளும் இந்தியில் உள்ளது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதின் இந்தியில் பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வீடியோவில் ரஷியா அதிபர் புதின் கூறியிருப்பதாவது:-

    இந்தியா- ரஷியா இடையிலான உறவு அனைத்து துறைகளிலும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. இதற்கு மோடியின் முக்கியமான உத்தரவாதம் மோடியின் கொள்கைதான். இந்திய நாட்டின் பாதுகாப்பிற்காக மோடி எடுக்கும் கடினமான முடிவு என்னை அடிக்கடி ஆச்சர்யப்படுத்தும். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்திய நாட்டின் பாதுகாப்பு மற்றும் இந்திய மக்களின் நலன் ஆகியவற்றில் மோடி எடுக்கும் கடினமான முடிவு சில நேரங்களில் என்னை ஆச்சர்யப்பட வைத்தது.

    இந்திய பிரதமர் மோடியை, நாட்டின் பாதுகாப்பு, மக்கள் நலன் ஆகிவற்றிற்கு எதிராக ஒரு முடிவை கட்டாயப்படுத்தி, மிரட்டி அல்லது வலுக்கட்டாயமாக எடுக்க வைக்க முடியும் என்று என்னால் கற்பனை செய்த கூட பார்க்க முடியவில்லை. அதுபோன்ற நெருக்கடி மோடிக்கு இருக்கும் என்பது எனக்குத் தெரியும்.

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தபோது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு தடைகள் விதித்தன. ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கூடாது என வலியுறுத்தின. ஆனால், இந்தியா ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது.

    டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், டெல்லி பிரகடனம் தயாரிக்கப்பட்டபோது ரஷியா பெயரை குறிப்பிடாமல் பிரகடனம் தயாரிக்கப்பட்டு அனைத்து நாடுகளின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பிரதமர் மோடிக்கு புதின் நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காசா எல்லையில் நடைபெற்ற சண்டையில் மரணம் அடைந்தார்.
    • போரில் இஸ்ரேல் பல்வேறு ராணுவ வீரர்களை இழந்துள்ளது.

    இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தினந்தோரும் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வரிசையில், இந்திய வம்சாவழியை சேர்ந்த இஸ்ரேல் ராணுவ வீரர் காசா எல்லையில் நடைபெற்ற சண்டையில் மரணம் அடைந்துள்ளார்.

    ஆஷ்டோட்-ஐ சேர்ந்த 34 வயதான கில் டேனியல்ஸ் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற சண்டையில் உயிரிழந்தார். இவரின் இறுதி சடங்குகள் அவரின் சொந்த ஊரில் புதன் கிழமை நடைபெற்றது. காசா எல்லையில் நடைபெற்ற சண்டையின் போது கில் டேனியல்ஸ் உடன் மேலும் இருவர் உயிரிழந்தனர் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை தெரிவித்து இருக்கிறது.

     


    "ஒட்டுமொத்த இஸ்ரேலுக்காக களமிறங்கிய தீய மற்றும் கொடூரமான போரில் இஸ்ரேல் பல்வேறு ராணுவ வீரர்களை இழந்துள்ளது. அந்த வகையில் இன்று இஸ்ரேல் பாதுகாப்பு படையை சேர்ந்த ராணுவ வீரர் மாஸ்டர் கில் டேனியல்ஸ் (34) உயிரிழந்ததை எண்ணி வருந்துகிறோம்," என்று இந்திய யூத பாரம்பரிய மையம் தெரிவித்துள்ளது. 

    ×